ஜெயலலிதா மரணத்தில் காலங் கடந்து வெடிக்கும் சர்ச்சைகள் : வெளிவருமா உண்மைகள்?

ஜெயலலிதாவுக்கு வைக்கப்பட்டிருந்த எக்மோ கருவியை அகற்ற சொன்னது யார் என்பது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்களிடம் விசாரணை கமிஷன் இன்று விசாரணை நடத்தவுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையம் சார்பில் ஜெயலலிதா, சசிகலா உறவினர்கள், அரசு டாக்டர்கள், அப்போலோ டாக்டர்கள், செவிலியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என இதுவரை 85 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

முழு உண்மையை வெளியே கொண்டு வரும் வகையில் முக்கிய நபர்களிடமும் ஆணையம் விசாரிக்க திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே எய்ம்ஸ் டாக்டர்கள் ஜி.சி. கில்னானி, அஞ்சன்டிரிகா, நிதிஷ் நாயக் ஆகிய மூன்று பேரும் ஆஜராக ஆணையம் சார்பில் கடந்த வாரம் சம்மன் அனுப்பப்பட்டது.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது, எய்ம்ஸ் டாக்டர்கள் வர வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறிந்து கொள்ள எய்ம்ஸ் டாக்டர்கள் வருகை தந்தனர்.

எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள் அளித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும்,தினமும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் மருத்துவ அறிக்கை குறித்து ஆய்வு செய்து வந்தனர்.

அப்போலோ டாக்டர்கள் உடன் எய்ம்ஸ் டாக்டர்கள் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து பல கட்டமாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. எய்ம்ஸ் டாக்டர்கள் கடந்த 2016 டிசம்பர் 3ம் தேதி டெல்லி புறப்பட்டு சென்றனர்.

அன்றைய தினத்தில் ஜெயலலிதாவுக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் நிலை தேறி வருவதாகவும் எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கை அளித்திருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், மறுநாள் அதாவது டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவுக்கு திடீரென கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மீண்டும் எய்ம்ஸ் டாக்டர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தனர்.

அவர்கள் தான் ஜெயலலிதாவுக்கு பல கட்ட சிகிச்சை அளித்த பிறகும், உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை எனக்கூறி எக்மோ கருவியை அகற்றுமாறு அப்போலோ டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

அதன்பிறகே ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி அகற்றப்பட்டதாக அப்போலோ டாக்டர்கள் ஏற்கனவே சாட்சியம் அளித்தனர்.

எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்த எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், எய்ம்ஸ் டாக்டர் நிதிஷ் நாயக் ஆஜராகியுள்ளார்.

எஞ்சிய 2 பேரும் இன்று நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் விசாரணை ஆணையத்தில் ஆஜராகின்றனர்.

அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என கூறப்படுகிறது. இந்த விசாரணைக்கு பிறகு நாளை காலை 9 மணியளவில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் எய்ம்ஸ் டாக்டர்களிடம் குறுக்கு விசாரணை செய்யவுள்ளார்

இலங்கையில் மோட்டார் வாகனங்கள் வாங்க காத்திருந்தோருக்கு அதிர்ச்சித் தகவல்!!

இலங்கையில் மோட்டார் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமகால அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, முன்னர் மோட்டார் வாகனகளுக்கு 4 வருடங்களாக செலுத்தப்பட்ட வரிப்பணம் தற்போது ஒரே நேரத்தில் செலுத்த நேரிட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய 1800ccக்கு அதிகமான பெற்ரோல் வாகனம், 2300ccக்கு அதிகமான டீசல் வாகனங்கள் மற்றும் 200 கிலோ வோட் மின்சார வாகனங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதுவரையில் இந்த மோட்டார் வாகனங்களுக்காக அறவிடப்படும் வரிப்பணம் முதல் வருடத்தில் 175,000 ரூபாயில் இருந்து ஆரம்பித்து வருடா வருடம் குறையும் வகையில் காணப்படும்.

புதிய சட்டத்திற்கமைய 7 வருடங்களுக்காக வரிப்பணம் ஒரே நேரத்தில் செலுத்த நேரிட்டமையினால் அந்த வரிப்பணத்தை வாகன விலையுடன் இணைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் இயந்திர திறன் குறைந்த வாகனங்களுக்கு அரசாங்கத்தினால் பெருமளவு வரிப்பணம் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா செட்டிக்குளத்தில் காதலன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு : காதலி வைத்தியசாலையில்!!

வவுனியா செட்டிக்குளத்தில் நேற்று (22.08.2018) மதியம் 1 மணியளவில் காதலன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டமையினையடுத்து காதலியும் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதியில் வசித்து வரும் 24 வயதுடைய இளைஞன் நேற்று மதியம் அவரது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

இவ் தகவலையறிந்த குறித்த இளைஞனின் காதலி நேற்று மாலை தற்கொலைக்கு முயன்ற சமயத்தில் அயலவர்களினால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிக்குளத்தில் மக்களுக்கு இடையூராக காணப்படும் கள்ளுத்தவறணை!!

வவுனியா செட்டிக்குளம், துட்டுவாகை பகுதியில் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூராக காணப்படும் கள்ளுத்தவறணையினை அகற்றுமாறு மதுவரித்திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்ட போதிலும் அதிகாரிகள் அசமந்த போக்காக செயற்படுவதாக செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர் யேசுதாசன் டெல்சன் விசனம் தெரிவித்துள்ளார்.

செட்டிக்குளம் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் மது, மற்றும் புகைத்தல் பாவனையினை தடை செய்யும் திட்டத்தினை செயற்படுத்தும் முதற் கட்டமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இடம் பெற்ற செட்டிக்குளம் பிரதேச ஒருங்கினைப்புக் குழு கூட்டத்தில் குறித்த இரு கள்ளுத்தவறணையிணை ஒரு மாத காலத்திற்குள் அகற்ற வேண்டுமேன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவ் விடத்திலிருந்து அகற்றி குடியிருப்புக்கள் பகுதியிலிருந்து 500மீற்றர் தொலைவாக அமைக்குமாறு மதுவரி திணைக்களத்திற்கு தகவல் வழங்கியுள்ள போதிலும் குறித்த கள்ளுத்தவறணையினை அகற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளாது மதுவரித்திணைக்கள அதிகாரிகள் அசமந்தபோக்காக செயற்படுவதாகவும் மேலும் தெரிவித்தார்.

யாழில் பல்வேறு இடங்களிலும் வாள்வெட்டு குழு அட்டகாசம் : வீட்டுக்குள் முடங்கிய மக்கள்!!

யாழில் பல்வேறு இடங்களில் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில், கொக்குவில், இணுவில் மற்றும் தாவடி ஆகிய இடங்களில் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவங்கள் நேற்று புதன்கிழமை மாலை 3.45 மணி தொடக்கம் 4.30 மணிக்குள் 45 நிமிடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இலக்கத்தகடுகள் அற்ற 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பலே இந்த அட்டூழியங்களில் ஈடுபட்டது.

யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி லேன் மற்றும் ரயில் நிலையத்தடியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த கும்பல், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளது.

உடமைகளைச் சேதப்படுத்திவிட்டு தப்பித்துள்ளது. அந்த இரண்டு வீடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள். அவர்களை அச்சுறுத்தும் வகையிலேயே இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், இணுவில் சந்திக்கு அண்மையாகவுள்ள தேனீர் கடை மற்றும் கராஜ் என்பன தாக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து தாவடி பாடசாலை லேனில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் கும்பல் செயற்பட்டது.

இணுவில் மற்றும் தாவடிப் பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் ஆவா குழுவைச் சேர்ந்தவர்களின் உறவினர்களுடைய உடமைகள் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த சம்பவங்களை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அச்சத்தில் வீட்டினுள்ளேயே முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுழிபுரம் மாணவி ரெஜினா படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!!

யாழ். சுழிபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ரெஜினாவின் படுகொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் நலன்சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவனேஸ்வரன் ரெஜினாவின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்ததாக நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியமளித்த சாட்சியாளர் ஒருவரின் மகளான சிறுமி ஒருவர் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார், இதன் காரணமாகவே வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த சிறுமியை நீதிமன்றில் முற்படுத்தி அவரிடம் சாட்சியம் பெறப்பட வேண்டும் எனவும், அதன் மூலமே இந்த வழக்கின் சரியான போக்கை உறுதிப்படுத்த முடியும், அத்துடன் குற்றவாளி எவராவது வெளியில் இருந்தால் அவரைக் கைது செய்ய முடியும் எனவும் சட்டத்தரணி சுகாஸ் நீதிமன்றில் எடுத்துரைத்துள்ளார்.

மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே சட்டத்தரணி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்டோர் சார்பான விண்ணப்பதை ஏற்ற மல்லாகம் நீதிவான் நீதிமன்று, சம்பந்தப்பட்ட சிறுமியையும் வழக்கின் மற்றொரு சாட்சியான சிறுவனையும் வரும் 4ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

அன்றைய தினம்வரை சந்தேகநபர்கள் 3 பேரினதும் விளக்கமறியலும் நீதிமன்றால் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் ரெஜினா அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து கடந்த ஜூன் 25ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

மேலும், சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவர், கடந்த 2 மாதங்களாக தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் இடியுடன் கூடிய மழை : பொது மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

வளிமண்டலவில் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஓரளவுக்கு மழை பெய்யக் கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தென் மாகாணத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகள் மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் இக் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த திறமையான மாணவி ஒருவர் மரணம்!!

திருகோணமலை, கந்தளாய் பிரதான வீதியில் தம்பலகாமம் பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட விபத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியில், தனது சகோதரியுடன் நடந்து சென்று கொண்டிருந்த மாணவி மீது கெப் வாகனம் ஒன்று மோதியதாலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

தம்பலகாமம், சுவாமிமலை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சுந்தரலிங்கம் பிரியங்கா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், அவர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், திருகோணமலையிலிருந்து கந்தளாய் பகுதியை நோக்கிச் சென்ற வெள்ளை நிற கெப் வாகனம் வீதியில் சென்ற யுவதி மீது மோதிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த யுவதியின் சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த மாணவி க.பொ.த சாதாரண தரத்தில் 8 ஏ மற்றும் 1 பீ சித்திகளைப் பெற்று அப்பகுதிக்கு பெருமை சேர்த்த திறமையான மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலி!!

கிண்ணியா – மஹமாரு பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கிண்ணியா மஹமாரு கிராமத்தை பிறப்பிடமாகவும், கிண்ணியா குட்டிக்கராச்சை வசிப்பிடமாகவும் கொண்ட அலிக்குட்டி என்பவரே இதில் கொல்லப்பட்டுள்ளார்.

மஹமாரு மையவாடிக்கருகாமையில் மது போதையில் ஏற்பட்ட கருத்து மோதல், பின்னர் கைகலப்பாக மாறி இந்த கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம், கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்காக, திருகோணமலை பிரேர பரிசோதனை அறைக்கு மாற்றப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் சாவகச்சேரியில் கோர ரயில் விபத்து : உடல் சிதறி இருவர் பலி!!

யாழ் சாவகச்சேரி சங்கத்தானையில் சற்று முன்னர் ஏற்பட்ட ரயில் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

சங்கத்தானை அரசடி ரயில் கடவையில் ஒளி சமிக்ஞையை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே விபத்திற்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இன்று (22.08) பிற்பகல் 7.15 மணியளவில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் மட்டுவில் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் 23 வயதுடையவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் உயிரிழந்தவர்களது விபரம் குறித்து இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை!!

வவுனியாவில் ஹஜ் பெருநாள் தொழுகை இன்று (22.08.2018) காலை 7.15 மணிக்கு வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இப் பெருநாள் தொழுகையினையும் யும்மா பிரசங்கத்தினையும் மௌலவி அமீர் கம்சா நடாத்தியிருந்தார்.

இனங்களுக்கிடையே நல்லினங்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் இந் நிகழ்வில் வவுனியா , மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரம அவர்களும் பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன், வவுனியா தலமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குமாரசிங்க உட்பட பிரதி பொலிஸ் மா அதிபரின் காரியாலய பொலிஸாரும் கலந்து கொண்டிருந்தனர்.

சகோதரனின் சடலத்தை வீட்டிற்குள் எடுத்துச் சென்ற மகிந்த!!

காலஞ்சென்ற சந்திரா டியூடர் ராஜபக்சவின் உடல் இன்று காலை தங்காலை ஜயசிறி மலர்சாலையில் இருந்து ராஜபக்சவினரின் குடும்ப இல்லமான மெதமுலன இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோர் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை வீட்டிற்குள் எடுத்துச் சென்றனர்.

சந்திரா ராஜபக்சவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அரசியல்வாதிகள் உட்பட பலர் மெதமுலன வீட்டுக்கு சென்றுள்ளனர்.

சந்திரா ராஜபக்சவின் இறுதிச்சடங்குகள் எதிர்வரும் 25ஆம் திகதி 2 மணிக்கு குடும்ப மயானத்தில் நடைபெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரான சந்திரா டியூடர் ராஜபக்ச நேற்று மதியம் தங்காலை வைத்தியசாலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

ஆபத்தான நிலையிலும் உயர்தர பரீட்சை எழுதிய மாணவன் : நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம்!!

களுத்துறையில் வாகன விபத்தில் படுகாயம் அடைந்த மாணவன், தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றியுள்ளார்.

மத்துகம ஒவிட்டிகல பிரதேசத்தை சேர்ந்த ஹவிது ஷாமிக மத்துகம என்ற மாணவன், ஆனந்த ஷாஸ்த்ரா தேசிய பாடசாலையில் கல்வி கற்று வருகிறார். குறித்த மாணவனே இவ்வாறான அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழழைமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த மாணவன், களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது தலை மற்றும் கைகளில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆபத்தான நிலையில் காணப்பட்டுள்ளார்.

எனினும் எப்படியான நிலைமையில் இருந்தாலும், பரீட்சை எழுத வேண்டும் எண்ணத்திலேயே அவர் காணப்பட்டுள்ளார்.

அதற்கமைய சனிக்கிழமை பரீட்சை இடம்பெற்ற மண்டபத்திற்கு வாகனத்தில் அழைத்து வரப்பட்ட மாணவன் வாகனத்தில் இருந்தவாறு பரீட்சை எழுதினார்.

வாகனத்தில் இருந்து பரீட்சை எழுத அனுமதிக்குமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். அதற்கமைய பரீட்சை மண்டபத்திற்கு அருகில் காரில் அமர்ந்து ஆசிரியர்களின் கண்கானிப்பில் மாணவன் பரீட்சை எழுதியுள்ளார்.

தனது நிலைமையை புரிந்து கொண்டு இவ்வாறு பரீட்சை எழுத அனுமதித்த அனைவருக்கும் நன்றி என குறித்த மாணவன் குறிப்பிட்டுள்ளார்.

வாகன விபத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த போதும், மனவலிமையில் பரீட்சை எழுதிய மாணவனை பெற்றோர்களும், ஆசிரியர்களும் பாராட்டியுள்ளனர்.

இவ்வாறான மன வலிமையுள்ள மாணவ சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

வெள்ளவத்தையில் ஏற்படவுள்ள மாற்றம் : மக்களுக்கு கிடைக்கவுள்ள நன்மை!!

கொழும்பில் பல பகுதிகளை இணைக்கும் வகையில் கால்வாய் போக்குவரத்தினை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள உள்ளக நீர் ஓடைகள் மற்றும் ஆற்றின் ஊடாக பயணிகளுக்கான போக்குவரத்து அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் பத்தரமுல்லையில் இருந்து வெள்ளவத்தை வரையான நீர் கால்வாய் ஊடாகவும் , கொழும்பு கோடையிலுள்ள பேர வாவி ஊடாக யூனியன் பிளேஸ் வரையும், களனி கங்கை ஊடாக மட்டக்குளியிலிருந்து ஹங்வெல்ல வரையும் இந்த போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து திட்டத்தின் மூலம் அதிகளவான சுற்றுலா பயணிகளை கவர முடிவதுடன், வீதி போக்குவரத்தையும் குறைக்க முடியும்.

காலி வீதியில் வெள்ளவத்தை முதல் தெஹிவளையில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில் கால்வாய் போக்குவரத்து சேவை பெரும் வரப்பிரசாதமாக அமையும் என வெள்ளவத்தை, தெஹிவளை பகுதி மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் புதிய வகை மோட்டார் வாகனம் அறிமுகம்!!

இலங்கையில் புதிய வகை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக டாட்டா மோட்டர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

SUV Nexon என்ற வாகனம் 6 வகையான கார்கள் இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

பெற்றோல் மற்றும் டீசலில் இயங்கும் இந்த மோட்டார் வாகனம் 1.99 முதல் 4.6 மில்லியன் வரையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

பெற்றோலினால் இயங்கும் வாகனம் 1.99 மில்லியன் ரூபாவில் விற்பனை செய்யப்படுகின்றது. டீசலில் இயங்கும் வாகனம் 4.6 மில்லியன் ரூபாவில் விற்பனை செய்யப்படுகின்றது.

கொழும்பிலுள்ள 15 காட்சிக் கூடங்களில் SUV Nexon ரக வாகனத்தின் பெற்றுக்கொள்ள முடியும் என்று மோட்டார் வாகன நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டில் திடீர் குழந்தை பிரசவம் : அவசர சேவையால் உயிர் தப்பிய தாய் மற்றும் சேய்!!

களுத்துறை, வெலிபென்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் பெண் ஒருவர் குழந்தை பிரசவித்துள்ளார்.

யாரும் உதவிக்கு இல்லாத நிலையில் குழந்தை பிரசவித்த பெண் வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையில் போராடியுள்ளார்.

எனினும் அயலவர் ஒருவர் 1990 என்ற அவசர அம்பியுலன்ஸ் சேவையின் உதவியை நாடியமையினால், தாயும் குழந்தையும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி இரவு 9.48 மணியளவில் தாய் ஒருவர் குழந்தை பிரசவித்துள்ளதாக, அயலவர் ஒருவர் 1990 என்ற அம்பியுலன்ஸ் சேவைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அழைப்பு கிடைத்த சில நொடிகளுக்குள் அவசர சேவைக்கான வைத்தியர்கள் இருவர் அங்கு சென்றள்ளனர்.

அந்த காலப்பகுதியில் தாய் குழந்தையை பிரசவித்து வீட்டிலுள்ள சுவரில் சாய்ந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அவருக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட்டு நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

31 வயதான இந்த தாய், தனது குழந்தையுடன் ஆரோக்கியமான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.