சடலமாக தூக்கில் தொங்கிய இளம்பெண் : இரவு பணியால் நடந்த விபரீதம்!!

தமிழ்நாட்டில் தொடர்ந்து இரவு பணி வழங்கியதால் மனஉளைச்சலில் செவிலியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த ஜெனிபர் (23) தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்தார். இந்நிலையில் நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ஜெனிபர் வீட்டில் தூக்கிட்டு கொண்டார்.

இதை பார்த்த குடும்பத்தார் ஜெனிபரை மீட்டு அவர் வேலை செய்யும் மருத்துவமனைக்கே தூக்கி சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

அதைத் தொடர்ந்து ஜெனிபரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை அருகே உள்ள வேலூர்-காட்பாடி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது குறித்து ஜெனிபர் குடும்பத்தார் கூறுகையில், ஜெனிபர் 2 ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றினார்.

இவருக்கு கடந்த 1 மாதமாக தொடர்ந்து இரவு பணி வழங்கப்பட்டது. இதனால் அவர் மன உளைச்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தனர்.

செஸ் விளையாட்டில் தேசிய அளவில் சாதித்த 4 வயது சிறுமி!!

சண்டிகரைச் சேர்ந்த சான்வி அகர்வால் என்ற நான்கு வயது சிறுமி பெண் குழந்தைகளுக்கான தேசிய செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

செஸ் விளையாட்டில் ஐந்து வயதுக்கு உட்பட்டவர் பிரிவில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

இது, இவர் பங்கேற்ற முதல் தேசிய செஸ் போட்டியாகும். அதுமட்டுமின்றி முதல் முயற்சியிலேயே இரண்டாம் இடத்தைத் தட்டி சான்வி சாதனைப் படைத்துள்ளார்.

இதற்கு முன்பும் சான்வி, 7 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சண்டிகர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி வாகை சூடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் சார்பில், கர்நாடகா சதுரங்க சங்கம், 7 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கான 32-வது தேசிய ஓப்பன் செஸ் போட்டியை எடுத்து நடத்தியது.

கர்நாடக மாநிலம் தும்கூரில், கடந்த 16-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி, 9 நாள்கள் நடைபெற்றது.

இதில், பல மாநிலங்களிலிருந்து வந்த குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியில், 5 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில், சண்டிகரைச் சேர்ந்த சான்வி அகர்வால் என்ற சிறுமி கலந்துகொண்டார்.

இந்தத் தொடரில், தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய சான்வி, இரண்டாம் இடம் பிடித்து தேசிய அளவில் தனது திறமையை வெளிகாட்டி சாதனையை படைத்துள்ளார்.

இந்நிலையில், தேசியப் போட்டியில் வெற்றிபெற்றதால், 2019-ம் ஆண்டில் நடக்க உள்ள ஏசியன் யூத் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார்.

இதுகுறித்து சான்வி கூறுகையில், “என் பெற்றோர்கள் செஸ் எப்படி விளையாட வேண்டும் என்று கற்றுக்கொடுத்தனர். கம்ப்யூட்டர் மூலம் விளையாட பயிற்சியும் அளித்தனர். பயிற்சியை அடுத்து செஸ் விளையாட நன்கு கற்றுக்கொண்டேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அக்காவை கல்லால் அடித்து கொடூரமாக கொன்ற தம்பி : வெளியான திடுக்கிடும் காரணம்!!

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் பண நெருக்கடியால் சொந்த அக்காவையே தம்பி ஒருவர் கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை நெசவாளர் காலனியை சேர்ந்தவர் 24 வயதான தனசேகரன். இவரது அக்கா முறை உறவினர் சிந்து.

இந்த நிலையில் சிந்துவின் கணவர் ஆறுமுகம் தனசேகரிடம் குடும்ப செலவிற்கு ஐந்தாயிரம் பணம் கேட்டுள்ளார். பணம் தருவதாக கூறிய தனசேகர், யாரேனும் ஒருவர் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளார்.

ஆறுமுகம் வேலையில் இருப்பதால் தனது மனைவி சிந்துவை அழைத்துச் செல்லுமாறு தனசேகரிடம் கூறியுள்ளார்.

மாலை சுமார் 3 மணிக்கு ஆறுமுகத்தை சந்தித்த தனசேகரன் பணம் ஐந்தாயிரத்தை கொடுத்து விட்டு அக்காவை பனியம்பள்ளி என்ற இடத்தில் பேருந்தில் ஏற்றி விட்டேன் என சொல்லியிருக்கிறார்.

ஆனால் தனது மனைவி சிந்துவின் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததோடு அவர் வீட்டுக்கும் வரவில்லை.

இரவாகியும் வீடு வந்து சேராததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தனசேகரனை விசாரித்துள்ளனர். அவர் குடிபோதையில் இருந்ததோடு முன்னுக்கு பின் முரணாக பேச சந்தேகமடைந்த அவர்கள் தனசேகரனை சென்னிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பொலிசார் விசாரித்த போது, ஐந்து பவுன் நகைக்காக சிந்துவை கொன்று ஊத்துக்குளி அருகே உள்ள வனப்பகுதியில் பிணத்தை மறைத்து வைத்துள்ளதாக கூறியிருக்கிறார்.

மேலும் தனசேகரனை விசாரித்தபோது, எனக்கு சரியான வேலை இல்லாததால் பண நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் ஆறுமுகம் பணம் கேட்டார்.

அதனால் ஒருவர் வட்டிக்கு பணம் கொடுப்பதாக அவளை பைக்கில் அழைத்து சென்றேன். அவள் கழுத்தில் இருந்த நகையை பார்த்ததும் என் மனது மாறியது.

விஜயமங்கலம் ரயில் நிலையம் அருகே சென்ற போது அங்கிருந்த வனப்பகுதியில் சென்றேன். அப்போது பைக்கில் இருந்து இறங்கிய சிந்து இங்கே எதற்காக என்னை அழைத்து வந்தாய் என தகராறு செய்தாள்.

அப்போது அங்கே கிடந்த கல்லை எடுத்து சிந்துவின் மண்டையில் அடித்தேன். அவள் மயங்கினாள் அப்போதும் அவள் உயிர் போகாததால், சிந்துவின் முந்தானையை எடுத்து கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் அவள் கழுத்தில் இருந்த ஐந்து பவுன் தாலிக்கொடியை கழட்டி வந்து எனது உறவினர் பெயரில் தனியார் வங்கியில் 60 ஆயிரத்திற்கு அடமானம் வைத்தேன்.

பின்னர் அதே பணத்தில் ஐந்தாயிரத்தை சிந்துவின் கணவரிடம் கொடுத்தேன். பின்னர் எனக்கிருந்த கடன்களை முழுவதும் அடைத்தேன். சிந்துவின் கணவரிடம், சிந்து பஸ் ஏறி வீட்டிற்கு போய்விட்டதாக பொய் சொன்னேன்.

எனக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் தான் கொலை செய்தேன் என விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளான்.

வவுனியாவில் தண்ணீரில் விசம் கலந்து மாடுகள் கொலை : சந்தேகத்தில் பெண் ஒருவர் கைது!!

வவுனியா தட்டான்குளத்தில் விசத்தண்ணீரை அருந்தியதன் காரணமாக நான்கு மாடுகள் இறந்த நிலையில் இன்று (30.07) மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் உயிருக்குப் போராடிய இரண்டு மாடுகள் கிராம மக்களின் முயற்சியால் காப்பற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு வருகைதந்த செட்டிக்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு மாடுகளுக்கு விசம் கலந்த தண்ணீரை கொடுத்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இறந்த மாடுகளை பரிசோதனை செய்த செட்டிக்குளம் அரச கால்நடை வைத்திய அதிகாரி மாடுகளுக்கு விசம் கலந்த நீர் கொடுக்கப்பட்டதை உறுதி செய்துள்ளதுடன், உயிருக்கு போராடிய இரண்டு மாடுகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்த கிராம மக்கள், நாங்கள் தட்டாங்குளத்தில் குடியேறி 11 வருடங்களாக வாழ்ந்து வருகிறோம். நாங்கள் விவசாயம் செய்வதற்கு நிலங்கள் இல்லாத காரணத்தால் மாடுகளை வளர்த்து அதன் வருமானத்திலேயே எங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம்.

எமது பிள்ளைகளை போல் வளர்த்த எங்கள் மாடுகள் விசம் வைத்து கொல்லப்பட்டுள்ளது. இப் பசுக்களை நம்பியே எமது வாழ்வாதாரமும் அமைந்துள்ளது. கடும் வறட்சியின் காரணமாக தண்ணீர் குடிக்கச் சென்ற குட்டி போடவிருந்த மாடுகளுக்கும் விச நீர் கொடுத்து கொன்றுள்ளனர் இறந்த மாடுகளின் பெறுமதி ஐந்து லட்சம் என தெரிவித்தனர்.

 

தன் அக்கா தன் உடன் பிறந்தவள் அல்ல என்று தெரிய வந்ததும் தம்பி செய்த காரியம்!!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பி தன் அக்கா தன் உடன் பிறந்தவள் அல்ல என்று தெரியவந்ததும் அவளுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அந்தக் கடிதத்தைப் பார்த்து பிரபல மொடல் நவோமி கேம்பல் உட்பட பல நெட்டிசன்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

Houstonஐச் சேர்ந்தவர் Pamela Lara (18), அவரது தம்பி Jared (17). ஒரு நாள் தனது அக்காவான Pamela தனது உடன் பிறந்த சகோதரி அல்ல என்பது Jaredக்கு தெரியவந்தது.

கடைக்குச் சென்று தன் அக்காவுக்குப் பிடித்த ஸ்னாக்ஸ்களை வாங்கி வந்த Jared, தனது அக்காவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

உன் மீது எனக்கு எவ்வளவு அன்பு என்பதைத் தெரியப்படுத்தவே இந்த கடிதத்தை எழுதுகிறேன். மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. என்னைப் பொருத்தவரை நீதான் எப்போதும் என் அக்கா, என் சொந்த அக்கா. உலகத்திலேயே எனக்குக் கிடைத்த பொக்கிஷம் நீதான்.

எனக்கு ஏதாவது பிரச்சினை என்றால் நீ எனக்காக ஓடி வருவது போலவே நானும் உனக்காக எப்போதும் ஓடி வருவேன். உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எப்போதும் தொல்லை கொடுக்கும் உன் தம்பி என்று அவர் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அந்த கடிதத்தைக் கண்டு பலரும் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு தங்கள் உணர்வுகளை கண்ணீரோடு வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அக்காவின் உடலில் ஒட்டி வளர்ந்து வரும் தங்கை : 14 வயது சிறுமி அனுபவிக்கும் துன்பம்!!

பிலிப்பைன்சில் 14 வயது சிறுமி ஒருவரின் வயிற்றில் இரண்டு கைகள் தொடர்ந்து வளர்ந்து வந்த நிலையில், தற்போது அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்கு தாய்லாந்து செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

பிலிப்பைன்சின் Iligan பகுதியைச் சேர்ந்தவர் Veronica Cominguez. 14 வயது சிறுமியான இவருக்கு பிறக்கும் போதே மார்பகம் இருக்கும் பகுதிக்கு அருகே இரண்டு கைகள் வளர்ந்த நிலையில், வயிற்றுப்பகுதியில் ஒரு நீள்வட்ட வடிவில் உறுப்பு ஒன்று வளர்ந்த நிலையில் இருந்துள்ளது.

இதனால் கடும் அவதிப்பட்டு வந்த அவர், தற்போது உள்ளூர் மக்களின் உதவியோடு தாய்லாந்திற்கு அறுவை சிகிச்சைக்காக பறக்கவுள்ளார்.

இது குறித்து Veronica Cominguez கூறுகையில், நான் சிறு வயதில் இருக்கும் போது ஒரு சிறிய அளவு கால்போன்று தெரிந்தது.

அதன் பின் நான் வளர வளர, அதுவும் வளர ஆரம்பித்தது. அது இரண்டும் மிகவும் எடை கொண்டதாக இருக்கும். இதனால் நான் கடும் அவதிக்குள்ளாவேன், வளர்ந்த நெகங்களையும் வெட்டுவேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் Veronica Cominguez தயார் Flora Cominguez கூறுகையில், நான் கர்ப்பமாக இருக்கும் போது மருத்துவர்களை சரியாக சென்று பார்க்கவில்லை, நான் இரட்டை குழந்தை பிறக்கப்போகிறது என்று தான் நினைத்தேன்.

ஆனால் எதிர்பாரதவிதமாக அது இரட்டை குழந்தை இல்லை. Veronica Cominguez தான் பிறந்தாள். அப்போது இரட்டை குழந்தை என நினைத்த அந்த குழந்தையின் வளர்ச்சி சரியில்லாத காரணத்தினால், அந்த குழந்தையின் உடல் பாகங்கள் அப்படியே Veronica Cominguez-யிடம் ஓட்டிவளர்ந்துள்ளது.

இதன் காரணமாக அவ்வப்போது அவள் மிகவும் கஷ்டப்பட்டுள்ளாள். சில நேரம் அதில் இரத்தம் எல்லாம் வந்துள்ளது.

நாங்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் இதை சுலபமாக நீக்கிவிடலாம் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி உள்ளூர் மக்கள் தங்களுக்கு உதவியுள்ளதால், தற்போது தன் மகள் அறுவை சிகிச்சைக்காக தாய்லாந்து செல்லவுள்ளதாகவும், விரைவில் அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இரட்டை குழந்தையாக பிறக்க வேண்டிய காரணத்தினால், Veronica Cominguez பிறந்துள்ளதால், அவளுடன் சேர்ந்து பிறக்க வேண்டிய தங்கை அவளை விட்டு பிரியமுடியாமல் அவளுடனே ஒட்டி வளர்ந்து வருகிறாள் என்று அப்பகுதி மக்கள் சிலர் கூறி வருகின்றனர்.

ரத்தம் வழிய மரணத்தின் இறுதி நொடிகளில் துடித்த நண்பன் : தோழியின் அதிர்ச்சி செயல்!!

லண்டனில் தனது நண்பன் துடிதுடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கையில் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்த பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது.

2016 டிசம்பர் மாதம் 1 ஆம் திகதியன்று லண்டனின் நார்த் ஏக்டன் பகுதியில், பாத்திமாவின் ஆண் நண்பர் காலீத் சபியை, மற்றொரு ஆண் நண்பர் ரஜா கான் கத்தியால் தாக்கியுள்ளார்.

காலீத்தின் தலையில் பலமுறை தாக்கிய பிறகு, கத்தியால் மார்பில் குத்தியதும் அவர் கீழே விழுந்து இறந்துள்ளார்.

ரத்தம் வெளியேற, கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டுக் கொண்டிருந்த காலீத்துக்கு உதவி செய்யாமல், அவரது நிலையை வீடியோ படமெடுத்தார் பாத்திமா. பிறகு அதை ஸ்னாப் சாட் (Snapchat) என்ற சமூக ஊடகத்தில் பதிவேற்றினார் பாத்திமா.

காலீத் இறந்த சில மணி நேரத்தில் ஸ்னாப் சாட்டில் வீடியோவை பதிவேற்றிய பாத்திமா, ‘என்னுடன் மோதினால் இப்படித்தான் நடக்கும்’ என்று எழுதியிருந்தார்.

இதுகுறித்து பாத்திமா மற்றும் குத்திகொலை செய்த பாத்திமாவின் நண்பன் ரஜா கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காலீத்க்கு உதவி செய்ய தாங்கள் முயன்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் சிலர் தெரிவித்தனர்.

மேலும், இந்த வீடியோ காட்சியை பதிவிட்ட ஒரு மணிநேரத்தில் பாத்திமா நீக்கியதும் சாட்சியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

காலீத்துக்கு முன்பே பாத்திமாவின் ஆண் நண்பராக இருந்தவர் ரஜா கான். அவர் ஸ்னாப்சாட்டில் பாத்திமாவை பின் தொடர்ந்தார். காலீத்தும், ரஜா கானும், பாத்திமாவுடன் பழகுவது தொடர்பாக சண்டையிட்டுக் கொண்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

காலீத் ச பியின் கொலைக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாத்திமா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார், காலீத் இறக்கும்போது அதை காணொளியாகப் பதிவு செய்ததற்காக வெட்கப்படுவதாக அவர் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.

பாத்திமாவின் தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், அவரது செயல் கொலையாளியின் செயலுக்கு சற்றும் குறைந்ததல்ல என்று தெரிவித்துள்ளது

மனிதநேயம் செத்து விட்டதா? அகதி குடும்பத்துக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

2015 அகதிகள் பிரச்சினையின்போது அகதிகளை கரம் நீட்டி வரவேற்ற ஜேர்மனியில் இன்று மனிதாபிமானம் செத்து விட்டது என்றே தோன்றுகிறது அகதி ஒருவரின் கதையைக் கேட்கும்போது.

Merita Sali, Kosovo நாட்டைச் சேர்ந்த ஒரு அகதி. அவரும் அவருடைய கணவர் Hysret Sali மற்றும் அவர்களது நான்கு பிள்ளைகளும் 2014இலிருந்து ஜேர்மனியில் வசித்து வந்த நிலையில், மன அழுத்தம் காரணமாக Merita தற்கொலைக்கு முயன்றார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாற்போல் அவரது கணவரும் குழந்தைகளும் Kosovo நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டார்கள்.

இதற்கிடையில் Merita Sali உடல் நலம் தேறியதும் அவரும் நாடு கடத்தப்பட உள்ளார். ஏற்கனவே Hysret சித்திரவதை அனுபவித்த Kosovo நாட்டில் பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட வழங்கப்படுவதில்லை.

ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகள் போதாதென்று Meritaவின் 3 வயது மகள் Jehonaவுக்கு இதய நோய் வேறு இருக்கிறது.

அகதியாக வந்தவரான Aleksandar Ceh, தன் போன்ற அகதிகளுக்கு தன்னாலான உதவிகளைச் செய்யும் ஒருவர்.

அவர் பல மருத்துவர்கள், மன நல நிபுணர்களிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றும், மனிதநேய அடிப்படையில் நாடு கடத்தல்களை ரத்து செய்யும் அதிகாரம் கொண்ட அமைப்பு ஒன்றிடம் தகவலளித்தும் வழக்கறிஞர்கள் உதவியால் முயற்சித்தும் இந்த நாடு கடத்தலை தடுக்க அவரால் இயலவில்லை.

அகதிகளுக்கு 16 ஆண்டுகளாக உதவி வருகிறேன், இது போன்ற ஒரு மனிதாபிமானமற்ற செயலை நான் இதுவரை பார்த்ததில்லை என்கிறார் அவர்.

மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படும் நாளை குழப்பமான மன நிலைமையுடன் எதிர் நோக்கி இருக்கிறார் எதிர்காலம் என்னவாகுமோ என்று தெரியாத அகதி ஒருவர்.

கருணாநிதி உயிரோடு இருக்கும் போதே இதய அஞ்சலி பதாகை தயார் : மக்கள் அதிர்ச்சி!!

திமுக தலைவர் கருணாநிதிக்கு இதய அஞ்சலி என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும் பதாகை புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 27ம் திகதி இரவு கருணாநிதியின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு கருணாநிதிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரின் உடல் நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கருணாநிதி புகைப்படத்தை போட்டு இதய அஞ்சலி என்ற வாசகத்துடன் இருக்கும் பேனர் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

என் கணவரை விட கருணாநிதி அய்யாதான் முக்கியம் : சாப்பிடாமல் கண்ணீர் சிந்தும் பெண்!!

திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், மருத்துவமனை வளாகம் இன்னும் பரபரப்பு குறையாமல் இருக்கிறது.

அங்கு குவிந்திருக்கும் தொண்டர்கள் தங்கள் தலைவரின் உடல்நிலை குறித்து தெளிவாக அறிந்துகொள்ளும் வரை அங்கிருந்து செல்லப்போவதில்லை என கூறிவருகின்றனர். நேற்று தொண்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக பொலிசார் தடியடி நடத்தினர்.

காவேரி மருத்துவமனை வளாகம் முன்பாக குவிந்திருக்கும் தொண்டர்களில் அதிக கவனம் ஈர்த்தவர் ஜெயலட்சுமி. இவர் இரண்டு நாட்களாக கண்ணில் தூக்கமின்றி, மருத்துவமனையில் வளாகத்திலேயே சோர்வாக இருக்கிறார்.

திருவாதூரில் இருந்து வந்திருக்கும் இவர், கருணாநிதிக்காக என் உயிரையே கொடுப்பேன், இந்த தூக்கத்தை விட்டுக்கொடுக்கமாட்டேனா என்கிறார்.

எனக்கு விவரம் தெரிந்த வயதில் இருந்து கருணாநிதி அய்யாவும் என் உயிராக வாழ்ந்துக்கிட்ருக்கேன். குடிசையில் இருந்தவளுக்கு வீடு கட்டிக்கொடுத்து, மகன்களோட படிப்புக்கு உதவி செய்தவர். அவர் இன்னைக்கு படுத்த படுக்கயில் கிடக்கிறதை காது கொடுத்து கேட்க முடியவில்லை.

என் புருஷன் பிள்ளைகளைவிட கலைஞர் அய்யாதான் முக்கியம். அவர் குணமாகி கோபாலபுரம் இல்லத்திற்கு செல்லும்வரை, நான் மூணு வேளையும் சாப்பிடவோ, தூங்கவோ. என் ஊருக்கு புறப்பட்டு செல்லவோ மாட்டேன் என்கிறார்.

டோனி மட்டும் இல்லை என்றால் அந்தப் பெண்ணிடம் சிக்கி சின்னா பின்னாமாகியிருப்பேன் : ஷ்ரேயாஸ் ஐயர்!!

டோனி வழங்கிய அறிவுரையால் தான் பல சிக்கல்களிலிருந்து தப்பியதாக இந்திய அணியின் இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை கொடுத்ததால், அவர் தற்போது தென் ஆப்ரிக்கா ஏ அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் இந்திய ஏ அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர், கடந்த 2017-ஆம் ஆண்டு இந்தியாவின் சீனியர் அணியில் தெரிவு செய்யப்பட்ட போது, டோனி தன்னிடம் வந்து பத்திரிக்கைகள், சமூக வலைதளங்களில் இருந்து முடிந்த அளவு விலகியிருக்கும் படி கூறினார்.

ஆனால் சமூக வலைதளத்தில் வரும் சர்ச்சைகள் தான் என்னை முன்நோக்கி கொண்டு செல்ல உதவியதால் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

அதே சமயம் ஐபிஎல் தொடரின் ஏலத்துக்கான செய்தி வெளியானது. அப்போது எனக்கு தெரிந்த பெண் ஒருவர் தனிப்பட்ட முறையில் சட்டிங் செய்தார்.

நானும் அவரிடம் தொடர்ந்து சட்டிங் செய்த போது தான் தெரிந்தது. அவருக்கு என்னை விட என் பணத்தின் மீது தான் குறி அதிகம்.
இதனால் நான் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன். இதற்கு டோனி அன்று கூறிய அறிவுரை தான் என்று தெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதைகுழி விவகாரம் : தாய்க்கு பக்கத்தில் பிள்ளை : பதற வைக்கும் காட்சி!!

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இன்றையை மனித புதைகுழி அகழ்வின் போது, மனதை கனப்படுத்தும் விதமாக தாய் ஒருவரும் அவர் அருகே பச்சிளம் குழந்தை ஒன்றின் மனித எச்சமும் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று காலை 43 வது தடவையாக ஆரம்பிக்கப்பட்டது.

மனித புதைகுழி அகழ்வின் போது சந்தேகத்திற்கு இடமான ஒரு முதிர்ந்த மனித எச்சமும் அதன் அருகே சிறிய எழும்புகளை கொண்ட மனித எச்சமும் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த இரு மனித எச்சங்களையும் சூழ்ந்திருந்த களிமண்ணை அகற்றிய சந்தர்ப்பத்தில் அருகருகே புதைக்கப்பட்டிருக்கும் தாயும் பிள்ளையும் என சந்தேகிக்கப்படுகின்ற வகையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட இரு மனித எலும்புக்கூடுகள் தொடர்பாக எந்த வித துல்லியமான கருத்துக்கள் தங்களால் கூற முடியாது எனவும் முழுமையான பரிசோதனைகளின் பின்னரே கருத்துக்கள் தெரிவிக்க முடியும் எனவும் மேற்படி அகழ்வு பணிகளில் ஈடுபட்டு வரும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுவரை மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்களை உடற்கூற்று பரிசோதனைக்காக அமெரிக்காவில் உள்ள புளோரிடாவுக்கு அனுப்பி வைப்பதற்கான பரிந்துரையை நீதிமன்றத்திற்கு தாங்கள் முன்வைத்துள்ளதாகவும், இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

தற்போது வரை மன்னார் மனித புதை குழியிலிருந்து 60 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சைக்கிளில் பாடசாலைக்கு சென்றபோது விபத்தில் சிக்கிய சிறுவன் மரணம்!!

சைக்கிளில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றின் கதவைத் திறந்தபோது சைக்கிளில் சென்று கொண்டிருந்த சிறுவன் கதவில் மோதி வீதியில் விழுந்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் வேகமாக வந்த முச்சக்கரவண்டியொன்று குறித்த மாணவன் மீது ஏறிச் சென்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த மாணவன் அங்கிருந்தவர்களால் காத்தான்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றபப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில் படுகாயமடைந்து நேற்று உயிரிழந்தவர் காத்தான்குடி-1 ஐ சேர்ந்த எம்.பி.எம்.இன்ஷாப் என தெரியவந்துள்ளது.

மேலும் அவர் காத்தான்குடி மத்திய கல்லூரில் தரம் 9இல் கல்வி கற்று வந்துள்ளார்.

மன்னாரில் இரண்டு வயது மகனுடன் ஆலயத்திற்கு சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

மன்னாரில் பெற்றோருடன் ஆலயத்திற்கு சென்ற இரண்டு வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் பொலிஸார் விரைந்து செயற்பட்டதால் இறுதியில் தமது மகன் கிடைத்து விட்டதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

குறித்த கடத்தல் சம்பவம் மன்னார் முருங்கன் ஆலயத்தில் நேற்று இடம்பெற்றுள்ள நிலையில் சிறுவன் கடத்தப்பட்டு 4 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆலய பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிறுவன், பெற்றோருடன் நேற்று பிற்பகல் ஆலயத்திற்கு சென்றுள்ளான். சிறிது நேரத்தின் பின் சிறுவனை காணாது பெற்றோர் தேடியுள்ளனர்.

எனினும் சிறுவன் குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்காத நிலையில் உடனடியாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் அடிப்படையில் துரிதமாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஆலயத்துக்கு வந்த திருக்கோவில் பகுதியை சேர்ந்த கிருஸ்ணமூர்த்தி நிசாந்தன் என்பவர் பூஜைகள் முடியும் முன்னரே அங்கிருந்து வெளியேறியதை கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் குறித்து திருக்கோவில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் ஏனைய பொலிஸ் பிரிவுகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கோவிலை சேர்ந்த சந்தேகநபரின் வீட்டைப் பொலிஸார் இனம்கண்டு அங்கு சோதனை நடத்திய போது அவர் அங்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் வவுனியா பேருந்து நிலையத்திலிருந்து மன்னார் நோக்கி செல்லும் பேருந்தில் சந்தேகநபர் சிறுவனுடன் ஏறியதை வவுனியா பொலிஸார் அவதானித்து நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

பொலிஸாரின் துரித செயற்பாடு காரணமாக மாலை 5 மணியளவில் சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். எனினும் சிறுவனை சந்தேகநபர் கடத்தியமைக்கான காரணம் தெரியவரவில்லை என கூறப்படுகிறது.

அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் மன்னார் மாவட்ட பொலிஸ் அதிகாரிக்கு விடுத்த முக்கிய கோரிக்கைக்கு அமைய கடத்தப்பட்ட குழந்தையை துரிதமாக பொலிஸார் மீட்டுள்ளதாக குறித்த சிறுவனின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

யாழில் பட்டப்பகலில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம் : அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்!!

யாழ். கொக்குவிலில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹயஸ் வான் ஒன்றுக்கு தீவைத்ததுடன், வீட்டிலுள்ள பொருள்களையும் அடித்துச் சேதப்படுத்தித் தப்பிச் சென்றுள்ளது.

கொக்குவில், ஞானபண்டிதா பாடசாலைக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாள்களுடன் வந்த எட்டு பேர் கொண்ட குழு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வாள்களுடன் புகுந்த கும்பல், வீட்டின் முன் தரித்து நின்ற ஹயஸ் வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தியதுடன், அதன் முன் பக்கத்தில் தீவைத்துள்ளது.

அத்துடன், வீட்டுக்குள் இருந்த பெறுமதியான பொருள்களையும் அந்தக் குழுவினர் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்துக்குள் 8 பேர் கொண்ட ஒரே கும்பலால் கொக்குவில், ஆனைக்கோட்டை மற்றும் வண்ணார்பண்ணை ஆகிய இடங்களில் 5 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

திறமையான மாணவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை : பெரும் சோகத்தில் குடும்பம்!!

அம்பலாந்தோட்டையில் கல்வியில் திறமையான மாணவி ஒருவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டமையினால் முழு குடும்பமும் துன்பத்தில் வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

சியம்பலா கஸ்சிவ வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் சசிந்தா பிரபோதி என்ற மாணவியே புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் 6ஆம் வகுப்பில் ஆங்கில பிரிவில் கல்வி கற்று வருகிறார்.

4 பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான சசிந்தாவுக்கு இந்த நோய் இருப்பது 2008ஆம் மே மாதம் தெரியவந்துள்ளது. பின்னர் அவருக்கு மஹரகம வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவருக்கு பல்வேறு நோய் தாங்கள் ஏற்பட ஆரம்பித்ததாக சசிந்தாவின் தாயார் ஷரானி டி சில்வா தெரிவித்துள்ளார்.

“காய்ச்சல் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் மகளுக்கு புற்றுநோய் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்வதற்காக மஹரகம வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து மகளுக்கு பலவிதமான நோய்கள் ஏற்பட ஆரம்பித்தது. தற்போதும் நாம் தொடர்ந்தும் மஹரகம வைத்தியசாலைக்கு செல்ல நேரிட்டுள்ளது. இந்த நிலையில் மகளுக்கு கல்லீரலில் புற்நோய் அறிகுறிகள் காணப்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தினர். எங்கள் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை மேற்கொள்ள மாத்திரமில்ல, தற்போது சாப்பிடுவதற்கேனும் வசதியின்றி வாழ்கின்றோம். அயலவர்களே எங்களுக்கு உணவு வழங்குகின்றார்கள். அந்த அளவிற்கு பொருளாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

நாங்கள் வாழ்வதற்கும், எங்கள் பிள்ளைகளை காப்பாற்றுவதற்கு யாராவது உதவினால் புண்ணியம் கிடைக்கும். எங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாத நிலையில் நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். முடியும் என்றால் யாராவது உதவுங்கள் என கேட்டுக்கொள்கின்றோம்.

பிள்ளைகளின் தந்தைக்கு நிரந்தர தொழில் இல்லாத நிலையில் பிள்ளைகள் படித்து வருகின்றார்கள்.” என தாயார் குறிப்பிட்டுள்ளார்.

திறமையான மகள் கற்பதற்கும், அவரது நோயை குணப்படுத்துவதற்கும், தேவையான உதவிகளை வழங்க விரும்பினால் 0714878164 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்குமாறு அவரது தந்தை பிரசத் குமார தெரிவித்துள்ளார்.