தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றதோடு டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது தென் ஆப்பிரிக்கா அணி. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.
இந்நிலையில் கொழும்பில் நடந்து வந்த இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இலங்கை 338 ஓட்டங்களும், தென் ஆப்பிரிக்க 124 ஓட்டங்களும் எடுத்தன.
214 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 275 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
அந்த அணியின் கருணரத்னே 85 ஓட்டங்களும், மத்யூஸ் 71 ஓட்டங்களும், குணத்திலக 61 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதையடுத்து 490 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா இலங்கை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 290 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இலங்கை அணி சார்பில் ரங்கனா ஹெரத் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதன் மூலம் இலங்கை அணி 199 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
வடமாகாண சபையிலிருந்தோ அல்லது வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சின் அலுவலகத்திலிருந்தோ எமது நிரந்தர நியமனம் தொடர்பாக எழுத்து மூலமான அறிவிப்புக்கள் எதுவும் நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படவில்லை என சுகாதாரத் தொண்டர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளனர். தொடர்ந்தும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத்தில் எமது நிரந்தர நியமனம் குறித்து எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்வதற்கு வட பகுதியிலிருந்து 50 பேர் கடந்த 18, 19ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்தோம்.
எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து கலந்துரையாட முடியவில்லை. அதற்கு பதிலாக 19ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளருடனும், பிரதி செயலாளருடனும் எமது நியமனம் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தோம்.
அந்த கலந்துரையாடலின்போது எம்மால் நடத்தப்பட்ட போராட்டங்கள் மற்றும் சந்திப்புக்கள் தொடர்பாக வட மாகாண சபையிலிருந்தோ அல்லது வட மாகாணத்திற்கு பொறுப்பான சுகாதார அமைச்சிலிருந்தோ எழுத்து மூலமாக அறிக்கை எதுவும் அனுப்பிவைக்கப்படவில்லை என்பதை எம்மை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளரும், பிரதி செயலாளரும் தெரிவித்தனர்.
அங்கிருந்து உடனடியாக எதிர்கட்சித் தலைவரின் செயலாளர், வடமாகாண சுகாதார அமைச்சருடன் எமக்கு முன் நிலையிலேயே தொலைபேசியில் உரையாடினார்.
இதன்படி, கடந்த காலங்களில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது எந்த கல்வித்தகமை அடிப்படையில் எங்களை உள்ளீர்ப்பு செய்யப்பட்டதோ அதற்கு அமைவான ஒரு வேண்டுகோளினையும் சேவைக்கால அடிப்படைக்கான வேண்டுகோளினையும் இதுவரையிலும் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு அனுப்பிவைக்கப்படவில்லை என்ற நிலைமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.
எமது கோரிக்கை தொடர்பில் வட மாகாணசபையிலிருந்து அல்லது வட மாகாண சுகாதார அமைச்சினூடாக நாடாளுமன்றத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டால் அமைச்சரவை கூட்டத்தில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான சம்மதம் தெரிவிக்கப்படும் என எமக்கு கூறப்பட்டது.
ஆனால் இன்று வரையிலும் வடக்கிலிருந்து எமது நிரந்தர நியமனம் தொடர்பாக எழுத்து மூலமாக ஆவணங்கள் எவையும் நாடாளுமன்றத்திற்கு செல்லவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் இலங்கையர்கள் பெரும் அவமானங்களுக்கு உள்ளாவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கைக்கு அதிகளவான அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் நபர்களாக வெளிநாடுகளில் பணியாற்றும் பெண்களே உள்ளனர்.
இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய சேவைகளை வழங்கும் வெளிநாட்டு பணி பெண்களுக்கு இலங்கையில் கௌரவம் கிடைப்பதில்லை.
இவ்வாறான நிலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் செல்லும் பெண்களுக்கு வேறு ஆடை ஒன்று வழங்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.
டுபாய் ஹீ அல் டூரா என்ற தொழில் நிறுவனம் ஒன்று இலங்கை பணியாளர்களுக்கு இவ்வாறு புதிய ஆடை ஒன்றை வழங்கியுள்ளது. இந்த பெண்கள் பணிப்பெண் என அடையாளப்படுத்துவதற்காக இவ்வாறு புதிய ஆடை வழங்கப்பட்டுள்ளது.
மஞ்சள் மற்றும் கறுப்பு நிறத்திலான ஆடைகள் குறித்த இலங்கை பணிப்பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள், பணிப்பெண்களாக செல்வோரை அவமானப்படுத்தும் நடவடிக்கையாக உள்ளதென சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
வவுனியா – பூம்புகார் பிரதான வீதியில் அடையாளம் தெரியாத நபர்களால் எழுதப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் பாடல் வரிகளால் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பூம்புகார் பிரதான வீதியில் வர்ணப்பூச்சு கொண்டு விடுதலைப் புலிகளின் பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளன.
அடையாளம் தெரியாத நபர்களின் இந்த செயற்பாட்டால் நேற்று அந்த இடத்தை சுற்றிவளைத்த பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை தற்போது குறித்த பகுதியில் புலனாய்வுப் பிரிவினர் பூரண கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் குறித்த பாடல் வரிகள் யாரால் எழுதப்பட்டுள்ளது? எதற்காக எழுதப்பட்டுள்ளது? போன்ற விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
பனிரென்தாவ பொது மயானத்தில் 70 வயதான பெண் ஒருவரை உறவினர்கள் தனித்து விட்டு சென்றுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளார். பிரதேச மக்கள் இணைந்து அந்த வயோதிப பெண்ணை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் மயானத்தில் உள்ள பாழடைந்த கட்டடத்திற்கு பெண் ஒருவர் உள்ளதாக, பொதுமக்கள் பொலிஸாரிடம் அறித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபரால் அவர் இவ்வாறு விட்டுச் செல்லப்பட்டுள்ளதாக விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு விட்டு செல்லப்பட்டவரின் அடையாளம் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. பிரதேச மக்கள் அந்த பெண்ணுக்கு ஆடை மற்றும் தேவையான பொருட்களை வழங்கியுள்ளனர்.
மாதம்பே பொலிஸ் அதிகாரிகளினால் குறித்த பெண்ணுக்கு சிகிச்சை வழங்குவதற்காக கல்முருவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பெண் யார் எனவும், மயானத்தில் விட்டு சென்றது யார் என்பது தொடர்பிலும் மாதம்பே பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் வெவ் வேறு சம்பவங்களில் திடீரென மயங்கிய மூவர் உயிரிழந்துள்ளனர். கொக்குவில், பலாலி, சங்கானையைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 60 வயதான கார்த்திகேசு கதிர்காமலிங்கம் என்ற ஆறு பிள்ளைகளின் தந்தை, வீட்டில் பாக்கு இடித்துக் கொண்டிருந்துள்ளார். திடீரென அவர் மயங்கிச் சரிந்துள்ளார். மயங்கியவரை உறவினர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பலாலியை சேர்ந்த 30 வயதான குணசீலன் குயின்சன்என்ற இளைஞன் நேற்றுக் காலை தனது வீட்டில் காலை உணவாக பிட்டுச் சாப்பிட்டுள்ளார். பின்னர் அவருக்கு வாந்தி ஏற்பட்டதுடன் மயக்கமடைந்து வீழ்ந்துள்ளார். மயக்கமடைந்தவரை உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டதுடன் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பெரிய தம்பம் பகுதியைச் சேர்ந்த ராமன் இராசதுரை (வயது-60) என்ற முதியவர் யாழ்ப்பாணம் சங்கானை தொட்டிலடிப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு 20ஆம் திகதி வந்துள்ளார். தொட்டிலடிச் சந்தியில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்துள்ளார். திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார். அவ்விடத்தில் நின்றவர்கள் உடனடியாக சங்கானை வைத்தியசாலையில் சேர்பித்துள்ளனர்.
எனினும் அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டதுடன் உடல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திடீர் இறப்ப விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார்.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், மாங்குளம் வீதியில் யானைகளின் அட்டகாசத்தால் பகல் நேரங்களில் கூட அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,
ஒட்டுசுட்டான், மாங்குளம் வீதியில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனால் குறித்த விதியூடாக பயணிக்கும் மக்கள் பெரும் அச்சத்துடன் பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இது போன்று பெருமளவான யானைகள் இதற்கு முன் இங்கு இருக்கவில்லை. இந்த யானைகள் இலங்கையின் தென்பகுதியில் இருந்து கொண்டு வந்து விடப்பட்டுள்ளன.
யானைகள் கொண்டுவந்து விடப்பட்டமை தொடர்பில் அண்மையில் வட மாகாண முதலமைச்சரிடமும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் விரைவில் கவனமெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக சந்தையில் எரிபொருளின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக துறைசார் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் சவூதி அரேபியாவில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி போன்ற காரணத்தினால் எரிபொருள் விலை அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வார இறுதியில் அமெரிக்க WTI கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 71 அமெரிக்க டொலர் விலையை நெருங்கியுள்ளது.
உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் ப்ரென்ட் ரக கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 73.11 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இளைஞன் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுதுமலை தெற்கு மானிப்பாய் சேர்ந்த 38 வயதான ஜோசெப் அருள்தாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று தேனீர் குடித்துக் கொண்டிருந்த குறித்த இளைஞன், திடீரென மயக்கமடைந்து வீழ்ந்துள்ளார். அவரை உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பியவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள தனது தாயாரின் வீட்டில் தங்கியிருந்த வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இறப்பு தொடர்பான விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார்.
வெளிநாட்டிலிருந்து வந்த மகன் திடீரென மரணம் அடைந்தமை, தாயாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைய முயற்சித்த குற்றச்சாட்டில் சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான்கு வயது சிறுவன் மற்றும் 28 வயதான நபர் ஒருவரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தலைமன்னார் பகுதியில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் கிளிநொச்சியில் வாழ்ந்த நிலையில், போர் அனர்த்தம் காரணமாக இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களை இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைத்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதற்கு முன்னர் தலைமன்னாரில் உள்ள இராணுவ தளத்திற்கு இருவரும் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
சினிமாவில் வெற்றிகரமாக பல முன்னணி நடிகர்களின் நிலையே சில காலங்களில் தலைகீழாக மாறியிருக்கிறது. அந்தவகையில் 80, 90 களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷர்மிலி. இவர் பல படங்களில் கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
13 வயசுலேயே குரூப் டான்சராக அறிமுகமான பின்னர் நடிகையாக பிசியாக இருந்துள்ளார். கவுண்டமணி, வடிவேலு, விவேக் என பலருடன் ஜோடியாக நடித்தவருக்கு 35 பிளஸ் வயதுதானாம். ஆனால் பலரும் இவரை வயதானவர் என சினிமாவில் ஒதுக்குகிறார்களாம். அம்மா, வில்லி கதாபாத்திரங்களில் நடிக்க எதிர்பார்பார்க்கிறாராம்.
தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கூறுகையில், ரொம்பவே எதிர்பார்ப்புடன் என் கல்யாணம் நடந்துச்சு. வெளிநாட்டில் சில வருஷம் வசிச்சேன். அப்போ, நல்ல கேரக்டர்கள் பல வந்தும், நடிக்க முடியலை. அப்புறம், என் கல்யாண வாழ்க்கை நெகட்டிவ் ஆகிடுச்சு. நான் முட்டாள்தனம் பண்ணிட்டதா நினைக்கிறேன்.
அந்தக் கவலையாலும், உடல் எடை பிரச்னையாலும் துவண்டுபோனப்போ, என் குடும்பத்தினர்தாம் பக்கபலமா இருந்தாங்க. இப்போ, ஈவன்ட் பிளானர் வொர்க் பண்ணிட்டிருக்கேன். அதில்தான் ஓரளவுக்கு வருமானம் கிடைக்குது என்று கூறியுள்ளார்.
கேரளாவில் திருமணம் முடிந்த சில நாட்களிலே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி தங்களை கொலை செய்துவிடாதீர்கள் என்று உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த அட்டிங்கல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஹாரிஸன் ஹாரிஸ்(20). கிறிஸ்தவரான இவரும் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஹானா (19) என்ற முஸ்லிம் பெண்ணும் காதலித்து சில தினங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் திருமணத்திற்கு மணமகன் ஹாரிஸ் வீட்டில் சம்மதம் தெரிவித்தபோதிலும், பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அவர்கள் எங்கள் மகள் சஹானாவை ஹாரிஸன் கடத்திச் சென்றுவிட்டார் என்று பொலிசில் புகாரும் அளித்துள்ளனர்.
இந்நிலையில் காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி நேற்று முன் தினம் சமூக வலைத்தளமான பேஸ்புக் நேரலையில் பேசியுள்ளனர்.
அப்போது,நாங்கள் இருவரும் மதம் மாறி திருமணம் செய்து கொண்டதால், எங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினரிடமிருந்து கொலை மிரட்டல் வருகிறது.
நாங்கள் மகிழ்ச்சியுடன் வாழ விரும்புகிறோம். எங்களைக் கொலை செய்துவிட வேண்டாம் என்று அவர்கள் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இவர்கள் அட்டிங்கல் பொலிசில் பாதுகாப்பு கேட்டு தஞ்மடைந்துள்ளனர். பொலிசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
சமீபகாலமாக கேரளாவில் கவுரவக் கொலைகள் நடப்பது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், கோட்டயம் மாவட்டத்தில் சாதி மாறி திருமணம் செய்த கெவின் என்ற இளைஞர், அவரது மனைவியின் குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசத்தில் சாதி மாறி திருமணம் செய்ய முயன்ற மகளை பெற்ற தந்தையே நடுரோட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தல் உள்ள சைன்புர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் லால். 52 வயதான இவருக்கு லக்ஷ்மி என்ற 19 வயது மகள் ஒருவர் உள்ளார்.
இந்நிலையில் லக்ஷ்மி பக்கத்து கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். ராஜ்குமார் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் லக்ஷ்மியின் பெற்றோர் அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் தங்களின் காதலை கைவிட மறுத்த லக்ஷ்மியும் ராஜ்குமாரும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் ரிஜிஸ்டர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
இதற்காக வீட்டில் இருந்த தனது சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார் லக்ஷ்மி. இதனையறிந்த அவரது தந்தை லக்ஷ்மியை விரட்டிச் சென்றார்.
எவ்வளவோ பேசி மகளை வீட்டிற்கு அழைத்து வர முயன்றார் சுந்தர்லால். ஆனால் தனது காதலில் உறுதியாக இருந்த லக்ஷ்மி தந்தையுடன் செல்ல மறுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பா அருகில் இருந்த வீட்டிற்குள் சென்று மண்ணெண்ணெய் கேனுடன் வெளியே வந்தார். இதனைக் கண்ட லக்ஷ்மி விபரீதமாக ஏதோ நடக்கப்போகிறது என்பதை அறிந்து உயிர்பிழைக்க ஓட்டம் பிடித்தார்.
விடாமல் துரத்தி சென்ற தந்தை சுந்தர்லால் அவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி உயிருடன் தீ வைத்தார். உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் அலறி துடித்த லக்ஷ்மி தரையில் உருண்டு உயிர் பிழைக்க போராடினார்.
ஆனாலும் சற்று நேரத்தில் உடல் முழுவதும் கருகி பரிதாபமாக உயிரிழந்தார் லக்ஷ்மி. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சுந்தர் லால் மற்றும் அவரது சகோதரரை கைது செய்தனர்.
நடு ரோட்டில் இந்த சம்பவம் நடந்த போதும் யாரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லை. மாறாக சுற்றி நின்று வேடிக்கைதான் பார்த்தனர்.
காதலனுடன் வாழ ஆசைப்பட்ட மகளை சாதி வெறியால் தந்தையே உயிருடன் எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், மனைவியை ஹெல்மெட்டால் அடித்து கொலை செய்துவிட்டு, கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளான். விவாகரத்துக்கு விண்ணப்பித்து, ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்துவந்த தம்பதியின் வாழ்க்கை சோகத்தில் முடிந்துள்ளது.
கும்மிடிப்பூண்டி அருகே ஈகுவார்பாளையத்தை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் சுதாகர், ஆந்திராவை சேர்ந்த விமலா என்பவரை 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். சுதாகரின் மதுப்பழக்கத்தால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
குழந்தையின்மையை மருத்துவ ரீதியில் எவ்வாறு அணுகவது என்பதை யோசிக்காமல், இவர்களது கருத்து வேறுபாடு விவாகரத்து முடிவுக்கு கொண்டு சென்றது. நீதிமன்றத்தில் விண்ணப்பித்து விட்டு இருவரும் ஒரே வீட்டில் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.
இதனிடையே, விவாகரத்து கிடைக்கும் வரை, விமலாவுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாயை ஜீவனாம்சம் போன்று தறுமாறு சுதாகருக்கு பாதிரிவேடு காவல்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.
4 மாதங்களாக பணம் கொடுத்து வந்த சுதாகர் கடைசி 2 மாதமாக பணம் தரவில்லை. இதனால், இருவருக்குமிடையே மீண்டும் பிரச்சனை உருவாகி கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த சுதாகர் ஆக்சாபிளேடால் விமலாவின் கழுத்தை அறுத்தும், ஹெல்மெட்டால் தலையில் கண்மூடித்தனமாக தாக்கியும் உள்ளார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த விமலா அங்கேயே உயிரையும் விட்டார். உச்சக்கட்ட கோபத்தில் இருந்து வெளிவந்த பின்னர் தான், தாம் செய்த கொடூர செயலை உணர்ந்த சுதாகர் வேறுவழியின்றி காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.
அதிக மதுப்பழக்கம், சந்தேக குணம், கட்டுக்கடங்கா கோபம் ஆகியவற்றால் இருவரின் வாழ்க்கை வீணானதை விட வேறு என்ன பயன் என்பதையே இந்த சம்பவம் பிரதிபலிப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்