வவுனியாவில் மாணவர்கள் மற்றும் சிறுவர்களை இலக்கு வைக்கும் கம்பனிகள்!!

வவுனியாவில் பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்களை இலக்கு வைக்கும் மது, சிகரட் கம்பனிகளின் தந்திரோபாயங்கள் தொடர்பான கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையில் நேற்றைய தினம் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது.

சிறுவர்களை இலக்கு வைக்கும் மது, சிகரட் கம்பனிகளின் தந்திரோபாயங்களும், மாணவர்கள் மத்தியில் சிகரட் பாவனை என்பது முட்டாள் தனத்தின் அடையாளம் என்ற விடயமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன் வளவாளராக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர் அருளானந் இணைந்திருந்ததோடு சிகரட் பாவனையால் உதடு கறுத்தல், வாயிலிருந்து துர்நாற்றம் வீசுதல், பாலியல் பலவீனமடைதல், அசிங்கமான முகத்தோற்றம் ஏற்படல் போன்ற தகவல்கள் மாணவர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.

வவுனியாவில் பாதசாரிக்கடவையில் சென்றவரை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி!!

 

வவுனியா கண்டி வீதியில் பாதசாரிக் கடவையைக் கடக்க முற்பட்ட ஒருவர் மீது முச்சக்கரவண்டி மோதியதால் அவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை 9.30மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த நபர் வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முச்சக்கரவண்டியின் சாரதியும் அவரின் மனைவி மற்றும் ஒரு வயதுடைய மகள் ஆகியோர் பயணித்துள்ளனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

வெளிநாட்டில் பணிக்காக சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். A9 வீதியின் கைலபத்தான சந்தியில் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான எம்.ஜீ.தம்மிக்கா குணதிலக்க என்ற 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப பிரச்சினை காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவி வெளிநாட்டில் இருந்த போது அசிட் தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்வதாக கணவர் தொலைபேசியில் அச்சுறுத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது.

கணவர் தொடர்ந்து இவ்வாறு அச்சறுத்தும் நிலையில், பயத்துடன் இலங்கை வந்த பெண் கடந்த 8ஆம் திகதி கெக்கராவ, சுதர்ஷகமவில் உள்ள சகோதரனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று சகோதரனின் பிள்ளைக்கு சிகிச்சை பெறுவதற்காக கெக்கிராவ வைத்தியசாலைக்கு பேருந்தில் சென்று கைலபத்தான சந்தியில் முச்சக்கரவண்டியில் ஏற முயற்சித்த பெண்ணை கீழே தள்ளிய கணவன் கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் படுகொலை காரணமாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

வவுனியாவில் சூரியகலத்தினால் வரும் வெப்பத்தினால் பாதிப்புறும் மக்கள்!!

வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்சாரம் பெறுவதற்காக பொருத்தப்பட்டுள்ள சூரியகலத்தினால் அப்பகுதியில் அதிகளவு வெப்ப நிலை காணப்படுவதாகவும் இதன் காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் நோய்வாய்ப்புக்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும்,

எனவே இதிலிருந்து தமது கிராமத்தை மீட்டுத்தருமாறும் உடனடியாக காத்தார்சின்னக்குளம் பகுதியிலிருந்து குறித்த நிறுவனத்தை நிறுவனத்தை அகற்றுமாறும் அப்பகுதி கிராம மக்கள் கோரியுள்ளார்கள். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சூரியகலம் (சோளர்) மூலம் இலங்கை மின்சார சபையினருக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.

இதன்காரணமாக தமது இருப்பிடங்களுக்கு குறிப்பாக அப்பகுதி கிராமத்திலுள்ளவர்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் சூரியக்கலம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுவதாகவும் சூழல் பிரச்சினைகள், சுகாதாரப் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாகவும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையும் நோய்த்தாக்கங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும்,

வெப்பம் அதிகரித்து அப்பகுதி முழுவதும் வெப்பநிலை காணப்படுவதாகவும், இதனால் அப்பகுதியிலுள்ள வீடுகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனைத்தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இன்று காலை அப்பகுதியில் ஒன்றிணைந்த கிராம மக்கள் கோரியுள்ளார்கள்.

குறித்த சூரியக்கலம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பாதுகாப்பு காவலாளி தமது கடமைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்து எமது வீடுகளில் நடைபெறும் அன்றாட செயற்பாடுகள், நடவடிக்கைகளை அவதானித்துவருவதாகவும் இந்நடவடிக்கையினை தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் இது குறித்த முறைப்பாடு ஒன்றினை வவுனியா பிரதேச செயலாளரிடமும் அரசாங்க அதிபரிடமும் முறையிடவுள்ளதாக காத்தார்சின்னக்குளம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்பு!!

 

வவுனியா இரட்டை பெரியகுளம் அலகல்ல பகுதியிலுள்ள தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா இரட்டை பெரியகுளம் அலகல்ல பகுதியிலுள்ள தனியார் காணியினை இன்றைய தினம் (11.07) காலை தொடக்கம் நிலத்தை பண்படுத்தும் போது அப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு இருப்பதனை அவதானித்த காணியின் உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பொலிசாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் அப்பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதாக தேடுதல் மேற்கொண்டபோது ஒரு வெடிகுண்டு மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இதனை அண்டிய பகுதிகளில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா குருமன்காட்டில் மூன்று வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு திருட்டு!!

வவுனியா குருமன்காடு சந்தி தனியார் வங்கிக்கு அருகேயுள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் இன்று (11.07.2018) அதிகாலை திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா குருமன்காட்டுச் சந்தியில் தனியார் வங்கிக்கு அருகேயுள்ள மூன்று வர்த்தக நிலையங்கள் (பலசரக்கு பொருட்கள் விற்பனை நிலையம், அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையம், தொலைத்தொடர்பகம்) இன்று காலை வர்த்தக நடவடிக்கைக்காக திறக்கப்பட்ட சமயத்தில் வர்த்தக நிலையத்தின் மேற்பகுதி (சீட்) கழற்றப்பட்டு கழவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா புளியங்குளம் ஏ9 வீதியில் கோரவிபத்து : ஒருவர் பலி, ஐவர் படுகாயம்!!

 

வவுனியா, புளியங்குளம் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் ஐவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று(11.07) அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, புளியங்குளம், இராமனூர் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற ஹென்ரேனர் ரக வாகனமும், கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த ரோசா வானும் ஏ9 வீதி, புளியங்குளம், இராமனூர் பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.

இவ் விபத்து காரணமாக இரு வாகனங்களின் சாரதிகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

முல்லைத்தீவில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு!!

முல்லைத்தீவு – கோயிற்குடியிருப்பு, செல்வபுரம் பகுதிகளில் புதியவகை மலேரியா நோய்காவி (டிபன்சி) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுகாதார திணைக்களத்தினால், இந்த புதிய மலேரியா நோய்க்காவி பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றை அழிக்கும் நடவடிக்கையில் மலேரிய தடுப்பு இயக்கம் செயற்படவுள்ளது என மலேரியா தடுப்பு பூச்சியியல் ஆய்வு பிரிவு அதிகரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மலேரியா தடுப்பு இயக்கம் தெரிவிக்கையில்,

கோயிற்குடியிருப்பு, செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட கிணறுகளில் கப்பீஸ் இன மீன்களை விட்டு டிபன்சி வைரசை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கப்பீஸ் இன மீன்களை கிணறுகளில் விடுவதன் மூலம் அவை நோய் காவிகளை இரையாக்கி நோய்க் காவிகளை அழிக்கும்.

இதன்படி இன்று கோயிற்குடியிருப்பு, செல்வபுரம் பகுதிகளில் பொதுமக்களின் கிணறுகளில் மலேரிய தடுப்பு இயக்கப் பணியாளர்கள் மீன்களை விடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

1976ம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையில் தூக்கு தண்டனைக்கு அனுமதி!!

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக பௌத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 1976ம் ஆண்டு ஜூலை 23ம் திகதி கடைசியாக ஒருவருக்கு மரண தண்டனையாக தூக்கில் போட்டது. அன்று முதல் கடந்த 42 வருடங்களாக தூக்குத் தண்டனை நாட்டில் அமுலில் இருக்க வில்லை.

இந்நிலையில், 42 ஆண்டுகளுக்கு பின்னர் மரண தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மை காலமாக இடம்பெற்றுள்ள கொலைகள் மற்றும் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் சிறையிலிருந்தபடியே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது என்பது அதிகரித்துள்ளது.

இதனை கருத்திற்கொண்டு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளதாகவும், அமைச்சர்கள் இதனை வரவேற்றுள்ளதாகவும் காமினி ஜயவிக்ரம பெரேரா கூறியுள்ளார்.

இந்நிலையில், மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி நீதியமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளதாக அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா சென்ற இரு இலங்கைத் தமிழர்களுக்கு சிறைத்தண்டனை!!

போலி கடவுச்சீட்டு மூலம் சிங்கப்பூருக்குள் நுழைந்த இலங்கையர்கள் இருவருக்கு 8 மாத சிறைத்தண்டனை வழங்க அந்த நாட்டு நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

45 வயதான என்.கனகரத்னம் மற்றும் 27 வயதான கந்தசாமி நித்தியானந்தம் ஆகியோருக்கே சிங்கப்பூரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் அவர்கள் இருவரும் சிங்கப்பூர் சன்கி விமான நிலையத்தில் அந்த நாட்டு குடிவரவு, குடியகல்வு அதிகாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு வேலைக்காக இன்னுமொரு இலங்கையரின் உதவியுடன் குறித்த இருவரும் போலி கடவுச்சீட்டில் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.

பிரித்தானியாவின் லண்டன் நகரத்திற்கு செல்வதற்காக அவர்கள் சிங்கப்பூர் ஊடாக பயணித்துள்ளனர். சிங்கப்பூர் செல்வதற்காக 33000 மற்றும் ஒரு லட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டில் உள்ள புகைப்படம் உண்மையான நபர்கள் புகைப்படம் இல்லாமையினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறுவோருக்கு 10 வருட சிறைத்தண்டனை அல்லது 10000 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 50க்கும் மேற்பட்டவர்கள் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு : காரணம் என்ன?

வவுனியா பொலிஸ் நிலையத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கி இ.போ.ச பேரூந்தில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பொதுமக்களை சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக தடுத்து வைத்த சம்பவம் நேற்று (10.07.2018) இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்தினை வவுனியா நொச்சிமோட்டை பாலத்தடியில் பொலிஸார் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இதன் போது பேரூந்திலிருந்து 1கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதனையடுத்து நொச்சிமோட்டையிலிருந்து பேரூந்தில் எவ்வித பயணிகளையும் ஏற்றாமலும் இறக்காமலும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு பேரூந்தினை எடுத்து சென்று பொலிஸ் நிலையத்தின் வாயிலை மூடி பேரூந்தில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உட்பட அனைவரையும் சோதனைக்குபடுத்தியுள்ளனர்.

இரவு 9 மணியளவில் பேரூந்தினை பொலிஸ் நிலையத்தினுள் எடுத்து சென்றதுடன் இரவு 10 வரை சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக பயணிகள் எவரையும் வெளிச்செல்லவும் அனுமதிக்கவில்லை. இதனால் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பயணிகள் உறவினர்கள் ஒன்றுகூடியதினால் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சற்று பதற்றநிலை காணப்பட்டது.

இரவு உணவின்றி மாணவர்கள் தவித்துடன் அவர்களை சந்திப்பதற்கு உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இவ்வாறான பொலிஸாரின் செயற்பாட்டினால் நொச்சிமோட்டையிலிருந்து வவுனியா வரை உள்ள பகுதிகளில் இறக்க வேண்டிய பயணிகள் வீடு செல்ல பேரூந்து இல்லாமல் சிரமப்பட்டனர்.

இதனை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு வாயில் காவலில் நின்ற பொலிஸாரினால் பொலிஸ் நிலையத்தினுள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதுடன் வெளியில் நின்று புகைப்படம் எடுத்த சமயத்தில் பொலிஸாரினால் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது.

வவுனியாவில் பிரபல ஹெரோயின் வியாபாரி 970 கிராம் ஹெரோயினுடன் கைது!!

வவுனியாவில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் புலனாய்வுத்துறையினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று மாலை சென்ற புலனாய்வுத்துறையினர் வவுனியாவில் பிரபல கஞ்சா மற்றும் ஹெரோயின் வியாபாரியை ஹெரோயினுடன் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா நெளுக்குளம் பகுதியில் ஹெரோயின் கஞ்சா வியாபாரி நடவடிக்கைகள் அதிகளவில் காணப்படுவதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் கீழ் செயற்படும் புலனாய்வுத்துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவல் அடிப்படையில் அப்பகுதியைச் சுற்றி வளைத்து விசாரணைகளை மேற்கொண்டபோது பிரபல கஞ்சா மற்றும் ஹெரோயின் வியாபாரி ஒருவர் இந் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக புலனாய்வுத்துறையினருக்குத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து திடீரென்று மேற்கொண்ட நடவடிக்கையின்போது பிற்பகல் 4 மணியளவில் 34 வயதுடையபிரபல கஞ்சா மற்றும் ஹெரோயின் வியாபாரியை 970கிராம் ஹெரோயினுடன் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் அரச பணியாளர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

இலங்கையில் அரச பணியில் இணைக்கப்பட்டுள்ளவர்களில் 17 வீதமானவர்கள் சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதன்படி, அரச பணியாளர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள ஆண்களில் 27.2 வீதமானவர்களும், பெண்களில் 4.8 வீதமானவர்களும் க.பொ.த.சாதாரண பரீட்சையில் சித்தியடையவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு நவம்பர் 17ஆம் திகதி நிலவரப்படி, மேற்படி அரச துறைகளில் 1,109,475 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 55.1 வீதமானவர்கள் ஆண்கள். 44.9 வீதமானவர்கள் பெண்கள்.

இந்த ஆய்வுகளின்படி, 35 வீதமானவர்கள் உயர்தரத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 26.1 வீதமானவர்கள் பட்டம் பெற்றவர்களாக அல்லது உயர் கல்வி பெற்றவர்களாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அரச பணியில் இணைக்கப்பட்டுள்ளவர்களில் 17 வீதமானவர்கள் சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் 6 முச்சக்கரவண்டிகளில் திருட முயன்ற நபர் கைது!!

வவுனியா பொது வைத்திசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 முச்சக்கரவண்டிகளில் திருடுவதற்கு முயன்ற நபர் ஒருவரை பொலிசார் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி முன்பக்கத்திலுள்ள ஆவணங்கள் வைக்கும் பகுதியைத் திறந்து அதற்குள் இருந்த பொருட்களைத் திருடுவதற்கு முயன்ற 29 வயதுடைய சிலாவத்துறையைச் சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வேறு பகுதிகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் சந்தேகநபர் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் மாணவர்களுக்கிடையே மோதல் : பொலிஸார் அசமந்தப்போக்கு?

வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக இன்று (10.07.2018) மாலை 5.30 மணியளவில் இரு மாணவ குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மாலை நேர வகுப்புக்கள் நிறைவடைந்த பின்னர் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே ஒன்று கூடிய இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியது.

இதனையடுத்து அவசர இலக்கமான119 என்ற இலக்கத்திற்கு பொதுமக்கள் தகவல் வழங்கிய போதிலும் பொலிஸார் நீண்ட நேரத்திற்கு பின்னரே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்கு முன்னரே மாணவர்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர்.

வைரப்புளியங்குளம் வீதியில் தினசரி மாலை வேலையில் தனியார் வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்கள், இளைஞர்கள் வீதியின் அருகே நின்று சண்டையிடுவதும் பெண்களை கிண்டல் செய்வது , புகைத்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இவ் வீதியில் பொலிஸ் காவல் ஆரண் ஒன்றினை அமைக்குமாறு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் என்பவற்றில் பல தீர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் இதுவரையில் இவ் விடயத்தினை பொலிஸார் அசமந்த போக்கவே செயற்பட்டு வருகின்றனர்.

எனவே அரசியல்வாதிகள், நகரசபை உறுப்பினர்கள் ,சழூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் இவ்விடயத்தில் தலையிட்டு தனியார் வகுப்பிற்கு செல்லும் மாணவிகள் சுதந்திரமாக செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் பேரூந்தில் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இராணுவ வீரர் மடக்கிப் பிடிப்பு!!

வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் ஊடக செட்டிக்குளம் நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்தில் இன்று (10.07.2018) மதியம் 3.30 மணியளவில் பாடசாலை மாணவிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த இராணுவ வீரரை பேரூந்தின் சாரதி மற்றும் பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து செட்டிக்குளம் நோக்கி பயணத்தினை ஆரம்பித்த இ.போ.ச பேரூந்தில் பாடசாலை மாணவி ஓருவர் (பாடசாலை சீருடையுடன்) பயணித்துள்ளார். இதன் போது பேரூந்தில் இருந்த இரானுவ வீரர் ஒருவர் குறித்த பாடசாலை மாணவி மீது பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததுடன் தொலைபேசி இலக்கத்தினையும் தருமாறு கோரியுள்ளார்.

இதனையடுத்து பாடசாலை மாணவி அழுதவாறு பேரூந்தின் நடத்துனரிடம் மேற்குறிப்பிட்ட சம்பவத்தினை தெரிவித்துள்ளார். அதனையடுத்து குறித்த இராணுவவீரரை தேடிய போது அவர் பேரூந்திலிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.

அதனையடுத்து சாரதி மற்றும் பொதுமக்கள் இராணுவ வீரரை மடக்கிப்பிடித்து குருமன்காடு சந்தியடியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரணில் ஒப்படைத்தனர்.

பின்னர் அவ்விடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் இராணுவ வீரரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதன் போது அவ்விடத்தில் ஒன்று கூடிய பொதுமக்களும் , பேரூந்தில் பயணத்தினை மேற்கொண்ட பயணிகளும் பொலிஸார் பக்கச்சார்பாக செயற்படுவதாக தெரிவித்து குருமன்காடு பொலிஸ் காவல் அரணை முற்றுகையிட்டனர். இதனால் வவுனியா – மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் போக்குவரத்தினை சீர் செய்ததுடன் சம்பவம் இடம்பெற்ற இ.போ.ச பேரூந்தினையும் (பயணிகளுடன்) வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய பொதுமக்கள், இளைஞர்கள் குறித்த சிப்பாயை கைது செய்ய வேண்டுமென தெரிவித்து பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடினார்கள். இதனால் அவ்விடத்தில் சற்று பரபரப்பான நிலை காணப்பட்டது.

இதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் வினவிய போது,

இராணுவ வீரரை கைது செய்துள்ளோம். தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. விசாரணைகளின் பின்னர் இராணுவ வீரரை கைது செய்து வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்தார்.