பெருந்திரளான மக்களின் கண்ணீருடன் யாழில் கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் நல்லடக்கம்!!

யாழ். மல்லாகம் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞரின் சடலம் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

யாழ். மல்லாகம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜுட்சன் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாலை சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதன் போது மல்லாகம் நீதிமன்ற வளாகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், இறுதி கிரியைகளின் போது எவ்வித்அசம்பாவிதமும் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இறுதி கிரியைகளின் போது பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஆசிரியர் தாக்கியதில் மாணவன் காயம் : பொலிஸார் தீவிர விசாரணை!!

வவுனியாவில் மாகாணசபை உறுப்பினரின் மகன் மீது ஆசிரியர் கண்மூடிதனமாக தாக்குதல் மேற்கொண்டதில் மாணவன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சமப்வம் குறித்து மேலும் அறியவருவதாவது..

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் 10ல் கல்வி பயிலும் வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா அவர்களின் மகனான தி.கிருஜன்(வயது 15) என்ற மாணவன் பாடசாலையின் 8ம் பாடநேர இறுதி வேளையில் தன் சக மாணவர்களோடு உரையாடிகொண்டு இருந்த வேளையில் ஆசிரியர் ஒருவர் குறித்த மாணவர்களை தாக்கியுள்ளார்.

இதில் கிருஜன் எனும் மாணவனை தாக்கியதில் குறித்த மாணவனின் தலை அருகிலிருந்த சுவரில் மோதி தலையில் பெருங்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்புக்குள்ளான மாணவன் வவுனியா பொதுவைத்தியாசலையில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை வைத்தியசாலை பொலிஸாரிடம் இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியாவில் பாலியல் தொந்தரவு செய்த வைத்தியரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை!!

வவுனியா நெளுக்குளம் இராசேந்திரகுளம் பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் தனக்கு பாலியல் தொந்தரவு இடம்பெற்றதாக நேற்று (18.06.2018) இரவு வவுனியா பொலிஸ் நிலையத்தில் பெண் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து அவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்

வவுனியா நகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஒருவர் குறித்த தனியார் மருத்துவமனைக்கு தினசரி நோயாளிகள் மருத்துவ அறிக்கைகளை கொண்டு சென்று வழங்குவது வழக்கம்.

அதே போன்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை மருத்துவ அறிக்கைகளை எடுத்து சென்ற குறித்த பெண்ணை அந்த மருத்துவமனையின் வைத்தியர் கட்டிப்பிடித்து பாலியல் ரீதியான தொந்தரவு செய்துள்ளார் என குறித்த பெண் பொலிசில் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து குறித்த பெண் அங்கிருத்து தப்பித்து வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனாலும் பயத்தில் இவ்விடயத்தினை வீட்டாருக்கு தெரிவிக்கவில்லை . பின்னர் குறித்த தனியார் மருத்துவமனையின் வைத்தியர் அப் பெண்ணிற்கு குறுந்தகவல் மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும்,

அதையடுத்து நேற்று குறித்த பெண் சம்பவத்தினை பெற்றோருக்கு தெரியப்படுத்தியமையடுத்து இரவு 10 மணியளவில் பெற்றோர் அப்பெண்ணை அழைத்துச் சென்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாலியல் தொந்தரவுக்குள்ளாகிய பெண் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வைத்தியரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

  

2 வயது குழந்தையை தூக்கி தரையில் வீசிய கொடூர தந்தை : அதிர்ச்சியடைந்த தாய்!!

தமிழகத்தில் இரண்டு வயது குழந்தையை தூக்கி வீசி கொலை செய்ய முயற்சித்த தந்தையை பொலிசார் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வேங்கைபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு அமுதா என்ற மனைவியும், அவந்திகா என்ற 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

வேல்முருகனுக்கு குடிக்கும் பழக்கம் உள்ளதால், நேற்றும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டிற்கு சென்ற அவர் மனைவியான அமுதாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இவர்களின் வாக்குவாதம் முற்றியுள்ளதால், ஆத்திரமடைந்த வேல்முருகன் அவந்திகாவை தூக்கி தரையில் வீசிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அமுதா உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இது குறித்து பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டதால், பொலிசார் தலைமறைவாக உள்ள வேல்முருகனை தேடி வருகின்றனர்.

ஆவியாக வந்த வளர்ப்பு நாய் : பெண்ணின் சிலிர்ப்பான அனுபவம்!!

 

வளர்ப்பு நாய் ஒன்று ஆவியாக வந்து அதனை வளர்த்த பெண்மணிக்கு ஆறுதல் சொன்ன அனுபவம் நடந்திருக்கிறது.

கனடாவின் மனிடோபா பகுதியை சேர்ந்தவர் Michelle Creighton (44), இவரது வளர்ப்பு நாய் Oakley கிரேட் டென் வகையை சேர்ந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் எட்டு வயதான Oakley இறந்துவிட்டது, அதனை தொடர்ந்து அந்த துக்கம் தாளாமல் மிச்செல் அழுதபடியே பல வாரங்களாக Oakleyயை நினைத்து ஏங்கியிருக்கிறார். எங்கு திரும்பினாலும் வளர்ப்பு நாய் Oakleyயின் ஞாபகங்கள் அவரது மனதை உடைய செய்திருக்கின்றன.

இந்நிலையில் திடீரென ஒருநாள் இரவு அவர் படுத்திருக்கும் லிவிங் அறையின் திரைசீலையில் Oakley போன்ற ஒரு உருவம் தென்பட்டிருக்கிறது.

தனது கண்களை நம்ப முடியாத மிச்செல் சிறிது நேரம் அந்த நிழலையே உற்று பார்த்திருக்கிறார். அது அப்படியே Oakleyயின் உருவத்தின் பிரதிபலிப்பாக இருந்திருக்கிறது. அதனால் மிகவும் சந்தோஷமடைந்த மிச்செல் இந்த விடயத்தை உடனடியாக புகைப்படம் எடுத்திருக்கிறார். காரணம் தான் சொல்வதை மற்றவர்கள் நம்ப மாட்டார்கள் என்பதால்தான்.

அதன் பின் அந்த திரைசீலையை விலக்கி Oakleyயை தேடி இருக்கிறார். ஆனால் அதன்பின் அது கண்களுக்கு தட்டுப்படவில்லை.

இருப்பினும் இப்போது தான் மிகவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருப்பதாக மிச்செல் கூறினார். எனது நாய் எங்கிருக்க வேண்டுமோ அங்குதான் இருக்கிறது. என் வீட்டில். என்னோடு, என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார்.

Oakley இறந்தபின் அவர்கள் வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில்தான் புதைக்கப்பட்டது. இப்போது நிம்மதியாக இருக்கிறது இறந்தாலும் எங்கள் Oakley எங்களை விட்டு பிரியவில்லை. எங்களோடுதான் இருக்கிறது. அதுவே எங்களுக்கு போதும் என்று சந்தோஷிக்கிறார் மிச்செல்.

அலட்சியங்களால் பலியான இரண்டு சிறு உயிர்கள்!!

மயிலாடுதுறை அருகே மண் சரிவில் சிக்கிய இரு சிறுமிகள் தேவையான நேரத்தில் மருத்துவ உதவிகள் கிடைக்காத காரணத்தால் பரிதாபமாக உயிர் இழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.

நாகை மாவட்டம் குத்தாலம் பக்கத்தில் உள்ள ராஜகோபாலபுரம் ராஜா காலனியை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராமமூர்த்தி. இவர் வீட்டிற்கு உறவினர்களின் மகள்கள் இருவர் வருகை தந்துள்ளனர்.

கும்பகோணத்தை சேர்ந்த சியாமளா மற்றும் வர்ஷினி ஆகிய இரு சிறுமிகளான இவர்கள் விளையாடுவதற்காக வெளியே சென்றிருக்கின்றனர்.

அருகே உள்ள கொம்புக்காரன் குட்டையில் இவர்கள் விளையாடி கொண்டிருக்கும்போது திடீரென மண் சரிய ஆரம்பித்திருக்கிறது.

குழந்தைகள் இருவரும் அலறிய சத்தத்தில் ஓடி வந்த ஊர்க்காரர்கள் சிறுமிகளை மீட்டனர். ஆம்புலன்சிற்கு அழைக்க அது வராத காரணத்தால் இரு சக்கர வாகனத்தில் குழந்தைகளை தூக்கி கொண்டு குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்கின்றனர். அங்கும் மருத்துவர் இல்லை.

மீண்டும் அங்கிருந்து மயிலாடுதுறை மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் போது வழியிலேயே அந்த இரு சிறுமிகளும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

10 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட மண்ணை நீக்காமல் வைத்திருந்தாலும் ஆம்புலன்ஸ் குறித்த நேரத்தில் வராமல் இருந்ததாலும் மருத்துவர் இல்லாமல் போனதாலும் இரண்டு பிஞ்சு உயிர்கள் அநியாயமாக பலியாகி இருப்பதால் அந்த ஊர் மக்கள் கொதிப்படைந்து போராட்டம் நடத்தினர்.

அடுத்தடுத்த அலட்சியங்களால் வீணாக போனது இரண்டு சிறுமிகளின் உயிர்கள் என்பது வேதனைப்பட வேண்டிய செய்தி மட்டுமல்ல நாட்டின் நிலை பற்றி வெட்கப்பட வேண்டிய செய்தியும் கூட.

சீரழித்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும்வரை நாட்டை விட்டு நகர மறுத்த பிரித்தானிய பெண்!!

தன்னை சீரழித்தவர்களுக்கு தண்டனை கிடைப்பதைக் காணும் வரை பொலிவியாவை விட்டு வெளியேற மாட்டேன் என உறுதியாக இருந்துள்ளார் ஒரு பிரித்தானியக் குடியுரிமை பெற்ற பெண்.

பிரித்தானியக் குடியுரிமை பெற்ற ரஷ்யப் பெண்ணான Vasilisa Komarova (37), சிலியிலிருந்து அலாஸ்காவிற்கு தனது மோட்டார் சைக்கிளில் பயணம் தொடங்கினார்.

6000 மைல்கள் கடந்து பொலிவியாவுக்கு வந்த அவர் Rurrenabaque என்னுமிடத்தில் கூடாரம் ஒன்றில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பட்டாக் கத்திகளுடன் வந்த மூவர், கத்தி முனையில் அவளை பலாத்காரம் செய்ததோடு குற்றுயிரும் குலையுயிருமாக அவளை விட்டு விட்டு அவளது உடைமைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

தன்னைச் சீரழித்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த போராடிய Vasilisa, அவர்கள் தண்டிக்கப்படுவதைக் காணும் முன் பொலிவியாவை விட்டு நகர மறுத்தார்.

பொலிவிய அரசு அவருக்கு உதவ மறுத்தாலும், பிரித்தானியா பெரிய அளவில் அவருக்கு உதவியது.

இறுதியாக நியாயம் வென்றது, அவரை சீரழித்தவர்கள் மூவருக்கும் மொத்தமாக 42 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நாங்கள் தான் குத்திக் கொன்றோம் : சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்!!

தமிழகத்தில் காணாமல் போன 15 வயது சிறுவனை நாங்கள் தான் கொலை செய்தோம் என்று 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பொலிசாரிடம் சரணடைந்துள்ளனர்.

சென்னை சூளைமேடு நெடுஞ்சாலையில் உள்ள சித்ரா அப்பார்ட்மெண்ட் அருகே நடைபாதையில் வசிப்பவர் பெருமாள். பழைய புத்தகங்களை விற்கும் கடை ஒன்றை நடத்தி வரும் இவருக்கு ராஜேஷ் என்ற 15 வயது மகன் இருந்தார்.

ராஜேஷ் கடந்த ஜனவரி மாதம் 14-ஆம் திகதி பொங்கல் பண்டிகையன்று திடீரென்று காணமல் போனார்.

இதனால் அவனை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், ராஜேசின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று இரவு சென்னை நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி முன்னிலையில் அவரின் அலுவலகத்தில் பரத்குமார்(19) உட்பட 3 சிறுவர்கள் தங்களின் வழக்கறிஞருடன் சரணடைந்தனர்.

அப்போது அவர்கள், 5 மாதத்துக்கு முன் சூளைமேட்டில் காணமல் போன ராஜேசை நாங்கள் தான் கொலை செய்தோம்.

சம்பவ தினத்தன்று நாங்கள் அனைவரும் ஒன்றாக சுடுகாட்டில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று ராஜேஷ் எங்களிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினான்.

நாங்கள் முடியாது என்று கூறியதால், உடனடியாக எங்களுடன் இருந்த செல்வத்தின் கழுத்தில் ராஜேஷ் கத்தியால் கீறினான். இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் ராஜேசை சுற்றி வளைத்து அடித்து உதைத்து, அதன் பின் அவன் வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவனையே சரமாரியாக குத்தி கொலை செய்தோம்.

அதன் பின் அந்த சுடுகாட்டிலே பள்ளம் தோண்டி புதைத்துவிட்டோம் என்று கூறியுள்ளனர். அதன் பின் அங்கு சென்ற பொலிசார் ராஜேசின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது தொடர்பான சரணடைந்த 3 சிறுவர்களையும் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதையை விட்டு விலகி விபத்திற்குள்ளான வான் : ஒருவர் படுகாயம்!!

ஹட்டன் – கொழும்பு வீதியின், குயில்வத்தை பகுதியில் வானொன்று பாதையை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று காலை ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற வானே விபத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீரற்ற காலநிலையினால் பாதையில் காணப்பட்ட தன்மை காரணமாகவே விபத்து நேர்ந்துள்ளது.

வானின் சாரதியே காயமடைந்து வட்டவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் பயணித்த ஏனையவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாவியில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!!

கோட்டைக்கலாறு வாவிப் பகுதியில் திடீரென ஏற்பட்ட சீரற்ற காலநிலையில் சுழலில் சிக்கி மாயமான மீனவர் சடலமாக மீட்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கோட்டைக்கல்லாறு, எழுத்துக்காரன்துறை கண்ணகையம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த பிள்ளைகளின் தந்தையான ஆர். இராஜகுமார் (வயது 39) என்பவரின் சடலமே மீட்கப்பட்டது.

இவர் ஞாயிற்றுக்கிழமை (17.06) மாலை களுவாஞ்சிக்குடி ஓடக்கரை வாவிப் பகுதியில் கரையருகே நின்று வலைவீசிக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட சூறைக்காற்று, மழை, இடி மின்னல் காலநிலையில் காணாமல் போயிருந்தார்.

காணாமல்போனவரைத் தேடும் பணிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலையிலிருந்து மீனவர்கள், ஊர்மக்கள், கடற்படையினர் ஆகியோர் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இடம்பெற்ற தேடுதலின் பயனாக திங்கட்கிழமை காலை இவர் காணாமல்போன ஓடக்கரை சுழியிலிருந்து சடலம் மீட்கப்பட்டது.

காணாமல் போனவரை வாவி முதலைகள் கௌவிச் சென்றிருக்கலாம் என முன்னதாக ஊகிக்கப்பட்டபோதும் அவர் அந்த இடத்திலுள்ள நீர்ச்சுழியிலேயே அகப்பட்டு உயிரிழந்துள்ளார் என்று ஊர்வாசிகளும் மீனவர்களும் தெரிவித்தனர்.

சடலம் உடற்கூறாய்வுக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம்பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் காட்டு யானைகளிடமிருந்து காப்பாற்றக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!!

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நீலியாமோட்டை பிரதேசத்தில் காட்டு யானைகளினால் அச்சுறுத்தல் மற்றும் பயன்தரும் மரங்கள் அழிக்கப்படுதலில் இருந்து தமக்கான தீர்வினை பெற்றுக்கொள்ளும் முகமாக அப்பகுதி மக்கள் நீலியாமோட்டை வீதியினை தடை செய்து இன்று (18.06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்களால் மின்சார வேலி போடு, மிகுதி வாழ்வாதாரங்களை காப்பாற்ற உதவு, அழிந்தவை எல்லாம் அடகு வைத்தவையல்ல மீட்பதற்கு, கண்களை திறந்து பார், எங்கள் காணிகளை வந்து பார் போன்ற பல்வேறு சுலோகங்கள் எழுதப்பட்ட பததாதைகளை கைகளில் ஏந்தியவாறு வீதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

சுமார் ஒரு மணித்தியாலயமாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற நிலையில் அவ்விடத்திற்கு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் செட்டிக்குளம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடியதுடன்,

இதற்கான தீர்வினை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்ததன் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்களால் செட்டிக்குளம் உதவி பிரதேச செயலாரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனக்கு தானே நெருப்பு மூட்டிக் கொண்ட நபர் : யாழில் சம்பவம்!!

 

யாழ். ஐந்து சந்தி பகுதியில் நபரொருவர் தனக்கு தானே நெருப்பு மூட்டிக் கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், 55 வயதான நபரொருவரே வீட்டில் வைத்து நெருப்பு மூட்டிக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தையடுத்து குறித்த நபரை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சவுதியில் நடந்த பெரும் துயர் : இலங்கையில் கிடைத்த அதிஷ்டம்!!

சவுதி அரேபியாவில் 8 வருடங்கள் பணி செய்த இலங்கை பெண்ணுக்கு 26 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைத்துள்ளது. குறித்த பெண் கடந்த 2009ஆம் ஆண்டு பணிப்பெண்ணாக சவுதி சென்றுள்ள நிலையில், அவர் பணி செய்த வீட்டின் உரிமையாளர் சம்பளம் வழங்கவில்லை.

இது தொடர்பில் குறித்த பெண்ணின் உறவினர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் முறைப்பாடு செய்தனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சவுதி தூதரகம் ஊடாக ஆராய்ந்த போது இந்த முறைப்பாடு உறுதியாகியுள்ளது.

அதற்கமைய அந்த பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய சம்பளத்திற்காக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனடிப்படையில் 64000 சவுதி ரியால் சம்பள பணமாக அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணாயக்காரவினால் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸாரினால் கொடூரமாக கொல்லப்பட்ட சகோதரன் : யாழில் தவிக்கும் இரு சகோதரிகள்!!

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த இளைஞன் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த 34 வயதான மேசன் தொழிலாளியான பாக்கியராஜா சுதர்சன் என்பவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவராவார்.

இரு சகோதரிகளுடனும், நோய்வாய்ப்பட்டுள்ள தந்தையுடனுமே இவர் வசித்து வருவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த சுதர்சனின் முன்பக்க வலது இடுப்பினூடாக உள்நுழைந்த துப்பாக்கி ரவை, அவரது நுரையீரலில் அடிப் பகுதியைத் தாக்கியவாறு வெளியேறியுள்ளது.

அவரின் சடலம் உடல் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மல்லாகம் சகாயமாதா ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற இளைஞர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆலயத்தின் திருவிழா நேற்று மாலை இடம்பெற்றது. மாலை 6.45 மணியளவில், சுன்னாகத்திலிருந்து சுமார் 6 தொடக்கம் 8 உந்துருளிகளில் வாள்களுடன் இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள் ஒருவரைத் துரத்தி வந்துள்ளனர். வாள்களுடன் இளைஞர்களால் துரத்தப்பட்டவர், ஆலயத் திருவிழாக் கூட்டத்தினுள் புகுந்துள்ளார்.

வாள்களுடன் உந்துருளியில் வந்த இளைஞர்கள் ஆலயத்தின் முன்பாக நின்றிருந்தனர். ஆலயத் திருவிழாவில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் வீதிக்கு வந்துள்ளார். வீதியில் வாள்களுடன் நின்றிருந்த இளைஞர்கள், அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது, ஆலயத் திருவிழாவுக்கு வந்திருந்த, பாக்கியராஜா சுதர்சன், வாள்களுடன் நின்றிருந்த இளைஞர்களின் தாக்குதலிருந்து தனது உறவுமுறை இளைஞனைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார்.

அந்த நேரத்தில், முச்சக்கர வண்டியில் சுன்னாகம் பொலிஸார் பயணித்துள்ளனர். அவர்கள் ஏழாலையில் நடந்த திடீர் உயிரிழப்பு தொடர்பாக விசாரிக்கவே அந்தப் பகுதிக்கு வந்திருந்தனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து, முச்சக்கரவண்டியிலிருந்து இறங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள், அடி வாங்கிக் கொண்டிருந்த இளைஞனை நோக்கி துப்பாகியால் சுடமுற்பட்டுள்ளார். பாக்கியராஜா சுதர்சன் அடிவாங்கிக் கொண்டிருந்த இளைஞனை காப்பாற்ற முயற்சித்துள்ளார். இதன்போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சுதர்சன் சம்பவ இடத்தில் அவலக் குரல் எழுப்பியவாறு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து வாள்களுடன் வந்த இளைஞர் கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. முச்சக்கரவண்டியில் வந்த மற்றைய பொலிஸாரும் அங்கிருந்து சென்றுள்ளார். துப்பாக்கியால் சூடு நடத்திய பொலிஸாரை சிறிது நேரத்தில் அங்கு சிவில் உடையில் வந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளார்.

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டையடுத்து கொதித்தெழுந்த இளைஞர்கள் காங்கேசன்துறை வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

உயிரிழந்த இளைஞனின் சடலம், தெல்லிப்பழை வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மல்லாகம் மாவட்ட நீதிபதி அ.ஜூட்சன், சம்பவ இடத்தைச் சென்று பார்வையிட்டதுடன், வைத்தியசாலைக்குச் சென்று சடலத்தையும் பார்வையிட்டார்.

நிறுத்தப்பட்டிருந்த கப்பலுக்கு தீ வைப்பு : காங்கேசன்துறையில் பதற்றம்!!

காங்கேசன்துறை, மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் இனந்தெரியாத விஷமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இந்த தீ வைப்புச் சம்பவம் இன்று(18.06) காலை இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது.

தீயை கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய இணைப்பு

மயிலிட்டி துறைமுகத்துக்கு ண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றிக் கொண்டுள்ளது. அந்தக் கப்பல் தொடர்ந்தும் எரிந்து கொண்டிருக்கிறது. வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் கப்பல் தீப்பற்றியது என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து கடற்படை தீ அணைக்கும் பிரிவினர் தீயை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்ற போதும், கப்பலின் இயந்திரப் பகுதி கடுமையாக தீ பற்றியதால் அங்குள்ள டீசல் தாங்கி என்பன உள்ளதால் தீ தொடர்ந்து எரிகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் கப்பல் வெடிக்கும் அபாயம் உள்ளது.

திருத்த வேலை காரணமாக கடந்த ஒரு வருடமாக குறித்த கப்பல் அந்தப் பகுதியில் நங்கூரம் இடப்பட்டிருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் 21 வயது இளைஞனைக் காணவில்லை!!

வவுனியா நெடுங்கேணி, சேனைப்புலவு பகுதியில் 21 வயது இளைஞன் ஒருவரைக் காணவில்லை என்று நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 17.05.2018 அன்று காலை 10.30 மணியளவில் நெடுங்கேணி சேனைப்புலவு பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிலில் கடைக்குச் சென்று வருவதாக தெரிவித்து விட்டுச் சென்ற 21வயதுடைய இராஜகோபால் கஜமுகன் என்ற இளைஞன் வீடு திரும்பாததையடுத்து இளைஞனின் தாயாரினால் நெடுங்கேணிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் கடந்த மாதம் 23 ஆம் திகதி இளைஞனின் மோட்டார் சைக்கிள் வீட்டிற்கு சற்றுத்தொலைவிலிருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் அதைப் பொலிசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இன்று வரையில் குறித்த இளைஞன் தொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்து குறித்த இளைஞனின் தாயார் வன்னிப்பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்குக் இன்று கொண்டுவரப்பட்டுள்ளதாக இளைஞனின் தாயார் தெரிவித்துள்ளார்.

இளைஞன் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 0772143891 அல்லது 0772054106 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கவும்.