சிவகங்கை மாவட்டத்தில் தாலிகட்டும் நேரத்தில் மாப்பிள்ளையை தனக்கு பிடிக்கவில்லை என்று கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேவகோட்டை பூர்வீகமாக கொண்ட சென்னை தி.நகர் பகுதியில் வசிக்கும் 21 வயது பெண்ணுக்கும், வேந்தன்பட்டியை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நடக்க இருந்தது
இதற்காக இருவீட்டாரும், 3 மாதங்களுக்கு முன்பே திருமண அழைப்பிதழ்களை அச்சடித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்தனர்.
திருமணத்துக்கு 5 நாட்களுக்கு முன்னரே தடபுடலாக விருந்தும், சடங்குகளும் நடந்து வந்தது. திருமண நாளான நேற்று காலை முகூர்த்த நேரமான 10.30 மணிக்கு சடங்குகள் நடந்து கொண்டிருந்தன.
திடீரென தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண், மாப்பிள்ளை பிடிக்கவில்லை எனக்கூறி திருமணம் செய்து கொள்ள மறுத்து எழுந்து சென்றுவிட்டார். இதனால் மண்டபத்தில் இருந்த இருவீட்டாரும் திகைத்து நின்றனர்.
கலகலப்பாக இருந்த மண்டபம் மயான அமைதியானது. சிறிது நேரத்தில் மண்டபத்தை விட்டு அனைவரும் வெளியேறினர்.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவியை எரித்துக் கொன்ற கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாகுல் அமீது (39). கூலித்தொழிலாளியான இவருக்கு பாத்திமா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2011 ஆம் அண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட தகராறில் ஷாகுல் அமீது அவரது மனைவி பாத்திமா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொளுத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த பாத்திமாவை அப்பகுதி மக்கள் மீட்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி பாத்திமா மரணமடைந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் தக்கலை பொலிசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கு நாகர்கோவில் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி மனைவியை கொலைசெய்த ஷாகுல் அமீதுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேற்கு வங்காளம் ஜல்பாய்குரி எனும் பகுதியில் மக்கள் குடியிருக்கும் இடத்தில மலைப்பாம்பு ஒன்று உள்ளே நுழைந்து விட்டது.
அதனை பிடிக்க வனத்துறையினர் வந்து அந்த மலைப்பாம்பை பிடித்தனர். அதன் நீளம் 18 அடி நீளம் கொண்டதாகவும் 40 கிலோ எடையோடும் இருந்தது.
அதனை பிடித்த வனத்துறை அதிகாரி அதனை பந்தாவாக எடுத்து தனது கழுத்தில் போட்டு கொண்டார். அதன்பின் அதோடு செல்பியும் எடுத்தார். அதுமட்டும் இல்லாமல் அந்த ஊர் மக்கள் சிலர் அவரோடு செல்பி எடுத்தனர்.
இதற்குள் கழுத்தில் இருந்த மலைப்பாம்பு மெல்ல அவர் கழுத்தை இறுக்க ஆரம்பித்தது. உடனே கிராமத்து மக்கள் அனைவரும் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர்.
நல்லவேளையாக இன்னொரு வனத்துறை அதிகாரி லாவகமாக மலைப்பாம்பின் பிடியிலிருந்து அந்த அதிகாரியை விடுவித்தார். பின்னர் அந்த மலைப்பாம்பை அருகில் இருந்த வனத்தில் விட்டனர்.
சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஒரு நபர் இந்தியாவின் கர்நாடகத்திலுள்ள Gokak நீர்வீழ்ச்சியின் உச்சியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காட்சி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Ramjan Usman Kagji (35) என்னும் அந்த நபர் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக நீர் வீழ்ச்சியின் உச்சிக்கு செல்கிறார்.
அவரது நண்பர்கள் நல்ல ஒரு இடத்தில் நிற்கும்படி அவரிடம் கூற, அவர் சற்று நகர்ந்து இன்னொரு இடத்தில் நின்று போஸ் கொடுக்க முயல்கிறார்.
எதிர்பாராத விதமாக கால் சறுக்க அவர் மக்கள் கண் முன்பாகவே 170 அடி உயரத்திலிருந்து கீழே விழுகிறார்.
அவரும் அவரது நண்பர்களும் மது அருந்தியிருந்ததாக கூறப்படும் நிலையில் மற்றவர்கள் எச்சரித்தும் உயரமான அந்த இடத்திற்கு சென்று ஆபத்தான முறையில் படம் எடுக்க முயற்சித்துள்ளார்கள்.
இதில் மோசமான விடயம் என்னவென்றால் இதுவரை Ramjan Usmanஇன் உடல் கிடைக்கவில்லை என்பதுதான்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பொலிசார் அப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லாத வகையில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.
பரகுவேவில் Amambay பகுதியில் அமைந்திருக்கும் Santa Teresa என்ற கிராமத்தில் Juan Ramon Alfonso Penayo என்ற 20 வயது இளைஞர் இறந்துவிட்டதால், அவருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.
அப்போது இறந்ததாக கூறப்பட்ட அந்த இளைஞர் இறுதிச் சடங்கின் போது எதிரே வந்து நின்றதால், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து குடும்பத்தினர் அவரை அணைத்து கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.
இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், கடந்த வாரம் வியாழக்கிழமை Juan Ramon Alfonso Penayo என்ற இளைஞன் வீட்டை விட்டு வெளியேறி, அதன் பின் வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் உடனடியாக பொலிசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அப்போது தீயில் கருகிய நிலையில் உடல் ஒன்று அடையாளம் தெரியாத நிலையில் கிடந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த பொலிசார் இது Juan Ramon Alfonso Penayo ஆகத் தான் இருக்கும், ஏனெனில் இந்த பகுதியில் போதை பொருள் கடத்தும் கும்பல் அதிகம் உள்ளதால், அவர்கள் இது போன்ற சம்பவங்களை சாதரணமாக செய்துவிட்டு சென்றுவிடுவார்கள் என்று கூறி, இளைஞரின் குடும்பத்தாரிடம் அந்த உடலை ஒப்படைத்துள்ளனர்.
இதனால் அவரின் பெற்றோர் உட்பட பலரும் வேதனையில் இறுதிச் சடங்கு செய்து கொண்டிருந்த போது, அவர் சர்வசாதரணமாக வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். இதையடுத்து இறந்த நபர் யார் என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் பிரபல இளம் ராப் பாடகர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள deerfield பகுதியில் நேற்று தனது பிஎம்டபிள்யூ காரில் பிரபல இளம் பாடகரான XXXTentacion என்பவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் இவரது காரை நெருங்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி விட்டனர்.
அவர்களில் ஒருவன் சிவப்பு நிற முகமூடி அணிந்திருந்ததாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் கூறினர்.
இந்த சம்பவம் முடிந்த உடன் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தனது ஸ்டியரிங் வீலில் விழுந்தபடி அந்த பாப் பாடகர் இருப்பது போன்ற புகைப்படமும் மற்றும் அவரது நாடி பிடித்து அவர் உயிருடன் இருக்கிறாரா என்பதை பரிசோதித்த புகைப்படம் ஒன்றும் தற்போது பரவலாக பரவி வருகிறது.
தனது இளம் வயதினிலே மிக உத்வேகமான எழுச்சியான பாடல்களை பாடியவர் இந்த 20 வயதேயான XXXTentacion. இவரது பாடல்கள் அங்குள்ள அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு உத்வேகத்தை கொடுப்பதாக இருந்திருக்கிறது. பிரபல பாடகர்கள் மற்றும் பாடகிகளும் இந்த இளம் கலைஞருக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.
இந்த செய்தி கேள்விப்பட்டதும் XXXTentacion மீதான இரங்கல் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
சம்பவம் நடந்த போது பல முறை சுடப்பட்ட சத்தம் கேட்டதாக சாட்சிகள் கூறினர். மேலும் பாடகரை சுட்டுவிட்டு அவரது விலையுயர்ந்த காரிலிருந்து ஒரு பை ஒன்றை குற்றவாளிகள் எடுத்து போனதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
காவல்துறை இப்போது இந்த கொலைக்கு காரணம் அவரிடம் உள்ள பொருளை கொள்ளையடிக்கும் நோக்கத்திற்காக செய்யப்பட்டிருக்கிலாம் என்று கூறி வருகிறது.
இருப்பினும் விசாரணை தொடர்கிறது. மேலும் குற்றவாளிகள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு 3000 டாலர்கள் பரிசு என்றும் அறிவித்திருக்கிறது. வளர்ந்து வரும் இளம் பாடகரை இழந்த இசை உலக ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
மலேசியாவில் ஒரு வயது குழந்தையை தாயே கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவின் பெல்டா ஜெங்காவில், கடந்த 17-ஆம் திகதி இரவு உள்ளூர் நேரப்படி 8.40 மணிக்கு 31 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் ஒரு வயது குழந்தையுடன் இருந்துள்ளார்.
அப்போது திடீரென்று தான் வைத்திருந்த குழந்தையின் கழுத்தை அந்த பெண் கத்தியால் அறுத்துள்ளார்.
இதைக் கண்ட குழந்தையின் தந்தை அதிர்ச்சியடைந்து, அவரை உடனடியாக தள்ளிவிட்டு ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரணதண்டனை கூட கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தனது திருமண நிகழ்வினை மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்தும் நோக்கில் நபரொருவர் ஏ.ரீ.எம் இயந்திரத்தை உடைத்து 47 இலட்சம் ரூபா பணத்தை திருடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது நண்பரை எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் கே.ஜீ.குணதாச உத்தரவிட்டுள்ளார்.
நீர்கொழும்பில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி கட்டடத் தொகுதியில் காணப்பட்ட ஏ.ரீ.எம் இயந்திரமொன்றே உடைக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளதுடன், சந்தேகநபர்களிடமிருந்து 28 இலட்சம் ரூபா பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நபர் ஏற்கனவே ஜாஎல பிரதேசத்திலும் பெருந்தொகை பணத்தை ஏ.ரீ.எம் இயந்திரங்களை உடைத்து களவாடியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பிரதான சந்தேகநபர் தனது திருமணத்திற்கான தங்க ஆபரணங்கள், ஆடைகள் என்பனவற்றுக்கு இந்த பணத்தை கொண்டு கொடுப்பனவுகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் சாந்தனுடைய தாயார் மகேஸ்வரி, மகனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
சாந்தன் உள்ளிட்டவர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பை கேள்வியுற்று தாம் மயங்கி விழுந்ததாகவும், இனிமேல் தன்னால் இப்படியான அதிர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாது எனவும் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இனிமேலும் இப்படியான அதிர்ச்சியான செய்தியை கேள்வியுற்றால் அதை தாங்க முடியாது.
ஆகவே பிள்ளைகளுக்கு தெரியாமல் எனக்கான ஒரு முடிவை நான் எடுத்து வைத்துள்ளேன் என இலங்கையிலிருந்து சாந்தனுடைய தாயார் மகேஸ்வரி கவலையுடனும், கண்ணீருடனும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கடவத்தை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் நடந்த விபத்து தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.
வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் மோட்டார் வாகனத்துடன், முச்சக்கர வண்டி மோதுண்டமையினால் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி மோட்டார் வாகனத்துடன் மோதும் காட்சி கமரா ஒன்றில் பதிவாகியிருந்தது.
சம்பவத்தில் விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியில் இளைஞன் ஒருவரும் யுவதி ஒருவருமே பயணித்துள்ளனர். படுகாயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான சிரான் இசுரு என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த இளைஞனின் காதலி மற்றும் சகோதரன் படுகாயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையரான தனது கணவர் கொலை செய்யப்பட்டதன் பின்னர் தான் இலங்கையில் சிறைபட்டுள்ளதாக பிரித்தானிய பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
26 வயதுடைய இலங்கை இளைஞனான பிரியன்ஜனத டி சொய்ஸாவை திருமணம் செய்த 60 வயதான பிரித்தானிய நாட்டு பெண் டியென் டி சொய்ஸா என்பவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தான் இலங்கையில் கடன்காரி ஆகியுள்ளதாகவும், பிரியன்ஜனவுக்கு ஒரு லட்சம் பவுண்ட் பணம் வழங்கியதாக அவர் பிரித்தானிய ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
பிரித்தனியாவின் எடின்பரோ பிரதேசத்தில் வாழ்ந்த அவர் தற்போது இலங்கையில் சிறைக்கைதி போன்று உள்ளதாக தெரிவித்துள்ளார். தன்னால் மீண்டும் பிரித்தானியா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்கொட்லாந்தில் இருந்த தனது வீட்டை விற்பனை செய்த பின்னர் இலங்கைக்கு வந்தவர் பிரியன்ஜனவுடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். அவர்கள் இருவரும் 2011ஆம் ஆண்டு சந்தித்து கொண்டுள்ளனர்.
2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். 2015ஆம் ஆண்டு பிரித்தானியா சென்றவர் ஸ்கொட்லாந்தில் இருந்த வீட்டை விற்பனை செய்து விட்டு இலங்கைக்கு வந்துள்ளார். இதன்போது பிரியன்ஜன ஹோட்டல் ஊழியராக சேவை செய்துள்ளார்.
தற்போது தான் இலங்கையில் இருந்து பிரித்தானியா செல்வதற்கு தேவையான பணம் இல்லை. கடந்த வருடம் முதல் தன்னிடம் ஒன்றுமே இல்லை. கடன்காரியாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது கணவரை டெக்ஸி சாரதியாக்குவதற்கு 31000 ஆயிரம் பவுண்ட் செலவிட்டு ஹயுன்டாய் மினிபஸ் வண்டி ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பணம் பறிக்கும் நோக்கில் கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது கணவர் வசதியானவர் என்பதனால் பலருக்கு பொறாமை என நண்பர்கள் என்னிடம் கூறினார்கள். அவருக்கு அழகான சிறிய வீடு, வாகனம் ஒன்று, முச்சக்கர வண்டி ஒன்று இருந்தமையினால் பொறாமைப்பட்டார்கள்.
எனது கணவர் அவர்களுக்கு பணம் வழங்கினார். எனினும் அவர்களுக்கு அது போதவில்லை. மேலும் பணம் வழங்காமையினால் அவரை கொலை செய்து விட்டார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் புதிய எரிபொருள் வகை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிதாக 13 பொறியியலாளர்களை உத்தியோகப்பூர்வமாக இணைத்து கொள்ளும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கூறுகையில்,
கடந்த காலத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய தேவையிருந்தது. நாம் அதை விரும்பி செய்யவில்லை. ஆனால் சில நெருக்கடி நிலையை தவிர்ப்பதற்காகவே எமது விருப்பத்திற்கு மாறாக செயற்பட வேண்டியிருந்தது.
இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரிய நிலை தொடர்பாகவும் நாம் அறிந்திருந்தோம். தற்போது நாம் பொதுமக்களுக்கு எவ்வாறு வேறு வழிகளில் நிவாரணங்களை வழங்கலாம் என ஆலோசித்து வருகின்றோம்.
அதற்கமைய பொருளாதார ரீதியாக நிவாரணம் வழங்கும் முகமாக முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்காக எரிபொருள் சந்தையில் புதிய பெற்றோல் வகையை அறிமுகப்படுத்தவுள்ளோம்.
இது தொடர்பாக பல பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். இந்த முயற்சி வெற்றியளிக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம் என கூறியுள்ளார்.
வவுனியா நகர் பகுதியான கற்குழி, தேக்கவத்தை, வெளிவட்டவீதியில் கடந்த வாரம் 5 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்த வவுனியா பொது மேற்பார்வைப் பரிசோதகர் நேற்று மேலும் மூவர் அப்பகுதியில் டெங்கு தொற்றுக்குள்ளாகிய நிலையில் தற்போது 8 பேருக்கு அப்பகுதியில் டெங்கு நோய் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாகவும்,
அப்பகுதியில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துச் செல்வதால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு பொது மேற்பார்வை சுகாதாரப்பரிசோதகர் தெரிவித்தார்.
மேலும் இப்பகுதியில் டெங்கு தொற்று அதிகரித்து அதிகரித்துச் செல்கின்றது. வெளிவட்ட வீதி, கற்குழி, தேக்கவத்தை போன்ற பகுதிகளில் டெங்கு நுளம்புக்குடம்பிகளை அழித்தொழிக்க பொதுமக்கள் முன்வரவேண்டும்.
தங்களது இருப்பிடங்களை துப்பரவுப்பணி மேற்கொள்ளுமாறும் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் இனங்கண்டால் அவ்வீட்டின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மேலும் தெரிவித்தார்.
மல்லாகத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான இளைஞனின் மரணத்திற்கான காரணமும், மேலும் பல அதிர்ச்சியான விடயங்களும் பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞனின் உடலில் இருந்து அதிகளவான குருதி வெளியேறியமையே உயிரிழப்புக்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடைபெற்று 15 நிமிடங்களுக்குள் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தால் குறித்த இளைஞரை காப்பாற்றியிருக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் போது தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனையை யாழ். போதனா வைத்திய சாலையில் சட்டவைத்திய அதிகாரி எஸ்.மயூரதன் மேற்கொண்டார். இவருடைய அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “இளைஞனின் முதுகு பக்கத்தால் சென்ற துப்பாக்கி குண்டானது அவரது இடது பக்க நெஞ்சு பகுதியால் வெளியேறியுள்ளது.
இன்னுமொரு துப்பாக்கி குண்டு தோள் மூட்டு பகுதியால் சென்றுள்ளது. எனினும் இருதயத்தில் எந்தவொரு பாதிப்பும் இல்லை. நுரையீரல் பகுதியில் இருந்து அதிகளவான குருதி வெளியேறியமையால் மரணம் சம்பவித்துள்ளது.
ஆனால் சம்பவம் நடைபெற்று 15 நிமிடங்களுக்குள் அவரை வைத்திய சாலையில் அனுமதித்திருந்தால் காப்பற்றியிருக்க முடியும். அத்துடன் இளைஞனின் முகத்தில் இரண்டு இடங்களில் தாக்கப்பட்டமைக்கான காயங்கள் உள்ளன. மற்றும் அவரது உடைகளும் கிழிந்திருந்ததாக” விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பாப்படுத்தபடும். எனவும் தெரிவிக்கப்பட்டது.
மல்லாகம் சகாய மாதா தேவாலயம் முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த 34 வயதான மேசன் தொழிலாளியான பாக்கியராஜா சுதர்சன் என்பவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ். மல்லாகம் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞரின் சடலம் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
யாழ். மல்லாகம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜுட்சன் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாலை சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதன் போது மல்லாகம் நீதிமன்ற வளாகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், இறுதி கிரியைகளின் போது எவ்வித்அசம்பாவிதமும் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இறுதி கிரியைகளின் போது பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.