வவுனியா புகையிரத நிலைய வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தை உடைத்து திருட்டு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா புகையிரத நிலைய வீதியிலுள்ள புகையிரதக்கடவைக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையத்தில் நேற்று (21.05) இரவு திருட்டுப்போயுள்ளதாக இன்று காலை வர்த்தக நிலைய உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
வர்த்தக நிலையத்தினை திறப்பதற்குச் சென்றபோதே திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் குறித்த வர்த்தக நிலையத்தில் சிகரெட்டுகள், மீள் நிரப்பு அட்டைகள், சிறுதொகைப்பணம் என்பன திருடப்பட்டிருக்கலாம் என்றும் தெரியவருகின்றது.
வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறபைபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா உக்குளாங்குளத்தில் வசித்து வந்த 14 வயது பாடசாலை மாணவியான கங்காதரன் ஹரிஸ்ணவி கடந்த 16.02.2016 அன்று வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் வண்புனர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரது வழக்கு விசாரணைகள் நேற்று வவுனியா நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோதிலும் 20.08.2018 அன்றைய திகதிக்கு தவணை திகதியிடப்பட்டுள்ளது.
தெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி வடக்கில் கிடைக்கவில்லை என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஒவ்வொரு வழக்குத் தவணைகளிலும் ஒவ்வொரு காரணங்களைக்கூறி திகதியிடப்பட்டுக் கொண்டு செல்லப்படுகின்றதே தவிர ஒரு தீர்வு கிடைக்கவில்லை. என்ன காரணத்திற்காக நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு இரண்டு வருடங்கள் காத்திருக்கவேண்டியுள்ளது பல பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் தெற்குப்பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளது.
அங்கு காட்டப்படும் கரிசனைகள் இங்கு எமக்குக்கிடைக்கவில்லை. ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று தீர்ப்பில் குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். சட்டத்திலிருந்து குற்றவாளி தப்பிவிடக்கூடாது என்பதற்காகவே இன்று வரை நீதிமன்றத்தை நம்பியுள்ளோம். என்று மேலும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
ஹரிஸ்ணவியின் வழக்கில் சட்டத்தரணிகளை மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமாறு நிலையத்தின் ஏற்பாட்டில் மேற்கொண்டு வழிநடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
தேசிய உடற்பயிற்சி வாரத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகத்திலுள்ள உத்தியோகத்தர்களுக்கு உடற்பயிற்சி நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன தலைமையில் நேற்று (21.05) முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன், ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக நாடுபூராவும் நடைபெற்றுவரும் தேசிய உடற்பயிற்சி வாரத்தை முன்னிட்டு 21 ஆம் திகதியிலிருந்து 25 ஆம் திகதிவரை இந்நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன் வவுனியா பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேசசபை ஊழியர்களுக்கிடையில் கரப்பந்தாட்ட நிகழ்வுகளும், பெண்களுக்கான வலைப்பந்தாட்ட நிகழ்வுகளும் வவுனியா மாவட்ட செயலகத்தின் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘ஊருக்காக காவல்துறை’ எனும் என்னும் தொனிப்பொருளில் பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின் செயற்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட சமுதாய பொலிஸ் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பொலிஸ் நடமாடும் சேவை நிலையம் நேற்று (21.05) மகாறம்பைக்குளத்தில் திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வ ஆராட்சி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னிப்பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கலந்து கொண்டு, நடமாடும் சேவை நிலையத்தை ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் விசேட விருந்தினராக ஐக்கிய அபிவிருத்தி நிதியத்தின் வடமாகாண இணைப்பாளர் ஏபிரகாம் ராகுலன் கலந்துகொண்டிருந்தார்.
ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள மக்களிற்கான பல சேவைகள் ஊருக்காக பொலிஸ் செயற்திட்டத்தின் மூலம் வழங்கப்பட இருக்கின்றன.
அந்தவகையில் இப்பிரதேச மக்களுடைய முறைப்பாடுகள் பெற்றுக்கொள்ளல், கல்வி வளர்ச்சி, கலாசாரம், கிராமத்தின் குறைகள் போன்றவற்றை நிவர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டே குறித்த செயற்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
தொடர்ந்து ஒருமாதம் குறித்த நடமாடும் சேவை நடைபெற உள்ளதுடன் பொலிஸாரின் வேண்டுகோளிற்கு இணங்க பிரதேச செயலகத்தின் அனுசரணையில் கணவனை பிரிந்த நிலையில் பொருளாதார கஸ்டத்திற்கு மத்தியில் வாழும் 3 பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு வீடு ஒன்றை அமைத்து கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக, பிரதேச செயலாளர் க.உதயராசா, நகரசபை உறுப்பினர்களான க.சுமந்திரன், பா.பிரசன்னா, வவுனியா பொலிஸ் பொறுப்பதிகாரி மகிந்த வில்வ ஆராட்சி, மதகுருமார்கள், சமுதாய பொலிஸ் குழுவினர், கிராம சேவகர்கள், பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வவுனியா சேக்கிழார் மன்றத்தின் 10 ம் வருட நிறைவு விழாவை முன்னிட்டு மாணவர்களிற்கான ஆக்கத்திறன் போட்டிகள் 20.05.2018 அன்று வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் சேக்கிழார் மன்றத்தின் தலைவர் ஜ.ஜயம்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.
சைவ சமயத்திற்கு புதிய பரிணாமத்தை தேடி தந்த, பக்தி நெறியின் மேன்மையை பாரறியச்செய்த சேக்கிழார் பெருமானது வரலாற்றயும், பெருமைகளையும் எதிர்கால சமுதாய சிற்பிகளான இளம் சந்ததியினரின் உள்ளத்தில் பதிய வைக்கும் நோக்குடன் பாடசாலைகளிலும், அறநெறி பாடசாலைகளிலும் கற்கும் மாணவர்கள் மத்தியிலும் குறித்த போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டிநிகழ்வுகளாக பேச்சு, கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டி, திருமுறை மனனப் போட்டி, வில்லிசைப்போட்டி போன்ற பிரிவுகளில் நிகழ்வுகள் நடைபெற்றன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடல் கன்னி வடிவில் குழந்தை ஒன்று பிறந்தது. ஆனால், இக்குழந்தை பிறந்து 15 நிமிடங்களுக்குள் உயிரிழந்தது.
திக்ஷா கம்பல் எனும் பெண்ணுக்கு 1.8 கிலோ எடையுடன் பிறந்த அந்த குழந்தையின் கால்கள் இரண்டும் ஒட்டியவாறும், கைகள் மீனின் துடுப்புக்களை போல் உடலில் ஒட்டியவாறும் இருந்தது.
இதற்கான காரணம் குறித்து மருத்துவர் கூறியதாவது, சிரேனோமெலியா(Sirenomelia) என்பது ஒரு அரிதான உடல் வளர்ச்சி குறைபாடு ஆகும்.
முதுகுதண்டின் கீழ் பகுதி மற்றும் கால் மூட்டுகளில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக இவ்வகை நோய் ஏற்படுகிறது.
இந்த அரிய நோய் தாக்கப்பட்ட குழந்தைகளின் உருவ அமைப்பு மீனின் உருவ அமைப்பை ஒத்தவாறு காணப்படும்.
சிரேனோமெலியா நோய் தாக்கப்பட்டு பிறந்த அந்த குழந்தையின் கைகள் துடுப்புக்ளை போல இருந்தது. உடலின் மேல் பாதி மனிதர்களை போலவும், கீழ் பாதி வித்தியாசமாக பார்க்க மீனின் உடலமைப்புடன் காணப்பட்டது.
அந்த குழந்தையின் கால்பகுதிகள் இணைந்து பாலுறுப்பு மூடியவாறு இருந்த காரணத்தினால் குழந்தையின் பாலினத்தை சரியாக அறியமுடியவில்லை.
குழந்தையின் தாய் நலமுடன் உள்ளார் என பிரசவம் பார்த்த மருத்துவரான சஞ்சய் பன்சோட் தெரிவித்துள்ளார்.
விசுவமடு பகுதியில் படையினரின் மின்சார வேலியில் சிக்கிய யானை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. குறித்த பகுதியில் 68ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர் விவசாய பண்ணை ஒன்றை அமைத்துள்ளனர்.
அதற்கு பாதுகாப்பாக மின்சார இணைப்பு வேலி ஒன்றை நிர்மாணித்திருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை குறித்த மின்சார வேலியில் சிக்கிய யானை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
சம்பவம் குறித்து வடபிராந்திய வனவள ஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்தியர் பா.கிரிதரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உயிரிழந்த யானையின் இறப்பு தொடர்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரின் தங்க சங்கலியை திருடர்கள் அதிரடியாக அபகரித்துச் சென்றுள்ளனர். மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த குடும்பப் பெண்ணை இடைமறித்த திருடர்கள் வாள்களைக் காட்டி அச்சுறுத்தி அவர் அணிந்திருந்த சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.
நல்லூர் முடமாவடி வீதியால் நேற்று பயணித்த குறித்த குடும்பப் பெண்ணை மோட்டார்ச் சைக்கிள் ஒன்றில் வருகை இருவர் இடைமறித்துள்ளனர்.
வாள்களைக் காட்டிக் குறித்த பெண்ணை அச்சுறுத்திய திருடர்கள் அவரை கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுண் தங்கச் சங்கிலியை பறித்துள்ளனர். குறித்த பெண்ணின் மோட்டார்ச் சைக்கிளை நிலத்தில் தள்ளி விழுத்தியும் அட்டகாசம் செய்துள்ளனர்.
பட்டப்பகலில் வாள்களைக் காட்டித் திருடர்கள் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்றமை யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிட்டப்பார்வை, தூரப்பார்வை சரி செய்ய நமது உடலுக்கே தெரியும் அதற்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போய் உள்ளன, இது முதல் காரணம். இரண்டாவது கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் இல்லை.
மூன்று இரத்தத்தின் அளவு குறைவாக உள்ளது. இதனாலேயே கண்ணாடி போட அவசியமாகின்றது.
இதற்கான சில எளிய வீட்டு வைத்தியங்களை பார்ப்போம்.
முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும். கண் பார்வை குறைபாடு நீங்கும்.
கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும்.
முருங்கை பூவை பாலில் வேகவைத்து பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவைகளை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாக தேய்த்து சந்திர தரிசனம் செய்தல் மிகவும் நல்லது.
வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும்.
மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இரவில் பால் சாதம் சாப்பிடுவது நல்லது. இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது.
நான்கு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து , மாதம் ஒருமுறை நசிய மருந்து பயன்படுத்தினால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி – அனுஷ்கா சர்மாவுக்கு திருமணம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.
இந்நிலையில், திருமணத்திற்கு பின்னர் தனது மனைவி குறித்து கோஹ்லி பகிர்ந்துகொண்டதாவது, கிரிக்கெட் குறித்து அனைத்தையும் அனுஷ்கா புரிந்துகொள்வார், எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கும் உறுதுணையாக இருக்கிறார்.
எனது வாழ்க்கையின் பலமே அனுஷ்கா தான். நான் கிரிக்கெட் அணியின் தலைவராக இருப்பதற்கு அவர் உறுதுணையாக இருக்கிறார். அவர் எனக்கு வாழ்க்கை துணையாக கிடைத்ததில் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டியின் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியுடன் விளையாடிய கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி தோல்வியுற்று பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
ஈரானில் காளான் உணவு சாப்பிட்ட 800 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காளான் உணவு சாப்பிட்ட 11 பேர் உடல் நலக்குறைவால் இறந்து போயுள்ளனர்.
ஈரானின் 10 மாகாணங்களில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. ஆனால் குறித்த விஷத்தன்மைக்கு உரிய சிகிச்சை ஈரானில் இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மட்டுமின்றி காளான் உணவு சாப்பிட்ட இருவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மேலும் குறித்த காளானை பொதுமக்கள் வாங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈரானில் உள்ள மலைப் பிரதேசங்களில் வளரும் ஒருவகை காளானே விஷத்தன்மை கொண்டதாக உள்ளது. திடீரென்று பெய்த மழை காரணமாக குறித்த விஷத்தன்மை மிகுந்த காளான் தோன்றியுள்ளதாகவும், இதை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பூவரசன்குளம் ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் கொடியேற்ற மகோற்சவ திருவிழா 19.05.2018 அன்று ஆரம்பித்து தொடர்ச்சியாக பத்து தினங்கள் நடைபெற்று பதினொறாவது நாளான 29.05. 2018 அன்று பூங்காவன திருவிழாவுடன் நிறைவடையவுள்ளது.
தினமும் நடைபெறும் மகோற்சவ திருவிழாவில் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அருளைப்பெற்றுக்கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
கடை திறப்பு மற்றும் விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்தும் நடிகைகள் போராட்டங்களில் கவனம் செலுத்துவது இல்லை என விமர்ச்சனங்கள் எழுந்துள்ளன.
திரைப்பட நடிகைகளான தன்ஷிகா, ரித்விகா, கஸ்தூரி, ஸ்ரீப்பிரியா மற்றும் ரேகா போன்ற நடிகைகள் மட்டும் போராட்டங்களில் கலந்து கொள்வதாகவும், மற்ற தமிழ் சினிமா நடிகைகள் கடைத்திறப்பு, விளம்பரம், திரைப்படங்களில் நடிப்பது தவிர மற்றவற்றில் கவனம் செலுத்தும் தமிழர் சார்ந்த போராட்டங்களுக்கு குரல் கொடுப்பது இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் அவர்களை சுற்றி நடக்கும் பிரச்சனையை கவனிக்காமல் இருப்பது மிக தவறான செயல் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
சென்னை மெரினாவில் ஈழத்தமிழர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கை போரில் உயிரிழந்த ஈழத்தமிழர்களுக்காக ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மெரினாவில் நினைவேந்தல் என்ற பெயரிலோ அல்லது போராட்டம் நடத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து சென்னை மெரினா, சேப்பாக்கம் பகுதிகளில் 1,000 பொலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மெரினாவில் நடக்கும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பெண்கள், இளைஞர்கள் என பெருமளவில் கூடினர். மேலும் வைகோ, திருமுருகன் காந்தி, தெகலான் பாகவி உள்ளிட்டோர் நினைவேந்தல் பேரணியில் பங்கேற்றனர்.
இதையடுத்து காவல்துறை அறிவுறுத்தலை மீறி நினைவேந்தல் பேரணியில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை ராஜரத்தினம் மைதானத்தில் தங்கவைக்க காவல்துறையினர் ஏற்பாடு செய்தார்கள்.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் 16 வயது சிறுவன் தனதுதாயை தவறுதலாக துப்பாக்கியதால் சுட்டதில் அவர் உயிரிழந்துள்ளார்.
ஷாஜி என்ற 36 வயது பெண்மணி தனது கணவர் மற்றும் 3 குழந்கைதளுடன் வசித்து வருகிறார். இவர்களின் வீடு காடுகள் சூழ்ந்த பகுதியில் இருக்கிறது. இந்நிலையில், ஷாஜி ஐ அவரது 16 வயது மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளான்.
இ்ந்த சம்பவம் தொடர்பில் 16 வயது மகனை பொலிசார் கைது செய்துள்ளனர். தவறுதலாக சுடப்பட்டதாக அவரது குடும்பத்தார் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இருப்பினும், சம்பவத்தின் பின்னணி என்ன? இவர்களிடம் துப்பாக்கி எவ்வாறு வந்தது? என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்