மது போதையில் தகராறு : இருவர் வெட்டிக் கொலை!!

தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை பகுதியில் மது போதையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாலாந்தரவை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு பிறகு அந்த ஊரை சேர்ந்தவர்கள் மது அருந்தியுள்ளனர். இதில் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி இரு தரப்பினரும் கத்தி அருவாள் போன்ற ஆயுதங்களுடன் சண்டையிட்டு கொண்டனர். இந்த தகராறில் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்டும், ஒருவர் படு காயங்களுடன் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் டிஐஜி காமினி தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் மின்சார பாவனையாளர்களுக்கு அவசர அறிவிப்பு!!

தற்போது மழையுடன் கூடிய காலநிலை காரணாக நாடு முழுவதும் மின்சாரம் தடைப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார பொறியலாளர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த மின்சார தடை, பொது மக்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என்று மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.

தமது தொழிற்சங்க நடவடிக்கைகள் தற்போது 10 நாள்கள் கடந்துள்ள போதிலும், பொறுப்பு கூற வேண்டியவர்கள் இன்னமும் உரிய பதில் வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா குளக்கட்டு பகுதியில் வீசப்பட்டுள்ள கோழி இறைச்சியின் எச்சங்கள் : மக்கள் விசனம்!!

வவுனியா – வைரவப்புளியங்குளத்தின், குளக்கட்டு பகுதியில் கோழி இறைச்சியின் எச்சங்கள் ஒரு பையினுள் போடப்பட்டு வீசப்பட்டுள்ளதால் அந்த பகுதியினூடாக பயணம் செய்பவர்கள் அசௌகரியத்திற்கு உள்ளாவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

வைரவப்புளியங்குளம் பகுதியில் கோழி இறைச்சி வியாபார நிலையம் வைத்திருக்கும் ஒருவரே தனது வியாபார நிலையத்தில் இறைச்சிக்கு வெட்டப்படும் கோழியின் எச்சங்களை அங்கு வீசிவிட்டுச் செல்வதாக தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில் குளக்கட்டு பகுதிகளில் பொதுமக்கள் தங்களது வீட்டுக்கழிவுகளையும், குப்பைகளையும் வீசி வந்துள்ளனர்.

எனினும், இந்த செயற்பாடுகள் தற்போது கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் கோழி இறைச்சி வியாபார நிலையத்திலிருந்து நேற்று பெருமளவான கோழி இறைச்சியின் எச்சங்கள் பொதி செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து, அங்கு செயற்பட்டு வரும் இளைஞர்கள் விழிப்புணர்வு குழுவினர் வைரவப்புளியங்குளம் பகுதியிலுள்ள குறித்த கோழி இறைச்சி வியாபார நிலையத்திற்கு சென்று குளக்கட்டு பகுதியில் வீசப்பட்ட கோழியின் எச்சங்கள் தொடர்பாக வினவியபோது, தமது வியாபார நிலையத்திலிருந்தே கழிவுகள் வீசப்பட்டுள்ளதாகவும், தாம் அதனை அப்புறப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், இன்று காலை வரையில் கழிவுகள் குளத்திலிருந்து அப்புறப்படுத்தபடாத நிலையில் விடயம் தொடர்பில் நகரசபையினருக்கு முறையிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை, 6 பேர் பலி, வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை!!

நாட்டின் மேல், தெற்கு சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் இன்றைய தினமும் அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடைக்கிடையே இந்த பகுதிகளில் 40 தொடக்கம் 45 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று இரவு 9.30 மணி வரை அதிக மழை இரத்தினபுரியில் பெய்துள்ள நிலையில், அது 222.5 மில்லிமீற்றராக பதிவாகியுள்ளது.

201.1 மில்லி மீற்றர் மழை எஹெலியகொடவிலும் 153.8 மில்லி மீற்றர் மழை தெஹிஓவிட்டவிலும் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக குறித்த 3 பிரதேசங்களிலும் உள்ள வலய கல்வி பாடசலைகள் மூடப்பட்டுள்ளன.

மழை மேலும் அதிகரித்தால், நில்வள கங்கை, கிங் கங்கை களு கங்கை, களனி கங்கை மற்றும் வென்தர கங்கை உட்பட பல கங்கைகள் பெருக்கெடுக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த கங்கைகளுக்கு அருகில் உள்ள மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தங்கள், காற்று மற்றும் மின்னல் காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 5 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண் சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இரத்தினபுரி, களுத்துறை, காலி, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டும், தெதுரு ஓய மற்றும் உடவல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டும் திறக்கப்பட்டுள்ளன.

தற்போது நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை அடுத்து வரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அடைமழை பெய்யும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க முப்படையினர் தயாராக உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கை வாழ் மக்கள் அறிய வேண்டிய முக்கிய விடயம் : தவறாமல் படித்துவிட்டு பகிரவும்!!

 

இலங்கையில் தொடர்ந்து வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை வரையில் 2,194 குடும்பங்களை சேர்ந்த 8,690 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களை விட்டு தற்காலிகமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, நாட்டில் எவ்வகையான அனர்த்தம் ஏற்பட்டாலும் எதிர்கொள்ளும் வகையில் முப்படையினரும், பொலிஸாரும், இடர்முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளும் தயாராக உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அனர்த்தத்திற்கு முன்பு, பின்பு எவ்வாறான நடவடிக்கைகளை மக்கள் கையாள வேண்டும் என்பது தொடர்பான கையேடொன்றை வெளியிட்டுள்ளது.

12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணியை பலியெடுத்த மர்ம நோய் : இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

தென் மாகாணத்தில் பரவி வரும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் காரணமாக, 12 சிறுவர்களும் ஒரு கர்ப்பிணித்தாயுமாக மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்புளுவென்ஸா வைரஸ், எடினோ வைரஸ், நியூமோகொக்கல் பக்டீறியா போன்ற வைரஸால் இந்த நோய்த் தொற்று ஏற்படுகின்றது. மேலும், குறித்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளான மேலும் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காலி கராபிட்டிய வைத்தியசாலை, மாத்தறை பொது வைத்தியசாலை, எல்பிட்டிய, கம்புறுப்பிட்டிய, தங்காலை, வலஸ்முல்லை ஆகிய ஆரம்ப வைத்தியசாலைகளில் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுவதாக அறியமுடிகின்றது.

இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகள், முன் பள்ளி சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார், சுவாசக்கோளாறு உள்ளோர் மற்றும் வயோதிபர்கள் இந்த வைரஸ் தொற்று காரணாமாக இலகுவில் பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளனர்.

இவர்களுக்கு தனிநபர் பாதுகாப்பு முறைமைகளை கையாள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

குறிப்பாக பொது இடங்களில், மூக்கு, வாய் என்பவற்ரை மூடும் வகையிலான பாதுகாப்பு மூடிகளை அணிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

காய்ச்சல், தலைவலி, மூச்சுத் திணறல், சளி உள்ளிட்ட நோய் அறிகுறிகளைக் கொண்டுள்ள இந்த வைரஸ் தொற்று தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும், பிள்ளைகளை முன்பள்ளி உள்ளிட்ட தனியார் வகுப்புகளுக்கோ அனுப்ப வேண்டாம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க பெற்றோரிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில் தடிமன், காய்ச்சல், இருமலுடன் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குளிக்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

மட்டக்களப்பு – வெல்லாவெளியிலுள்ள மண்டூர் மூங்கிலாற்றின் மூங்கில்களுக்கிடையில் சிக்குண்டிருந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதுடன், மண்டூர், கணேசபுரத்தை சேர்ந்த உமாபதி கிஷான் எனும் 15 வயது சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்று நண்பகலளவில் தனது நண்பர்கள் சிலருடன் மூங்கிலாற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து அவருடன் நீராடிக் கொண்டிருந்த ஏனைய சிறுவர்கள் இந்த விபரத்தை அக்கம் பக்கத்திலிருந்தவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

உடனடியாக கிராம மக்கள் ஆற்றுப் பகுதியெங்கும் தேடுதலை மேற்கொண்டபோது காணாமல்போன சிறுவனின் சடலம் ஆற்றுக் கரைகளில் வளர்ந்திருக்கும் மூங்கில்களுக்கிடையில் சிக்குண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு உடற் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பொலிஸார் சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் அதிசய தாவரம்!!

இலங்கையில் அதிசய தாவரம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அஹங்கம, இப்பாவல பிரதேசத்தில் இதுவரை இனங்காணப்படாத மிளகு செடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மிளகு அசாதாரண தோற்றத்தினை கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பனியூர் என்ற மிளகு வகைகளுக்கு சொந்தமாக இந்த மிளகு 298 பச்சை மிளகு விதைகள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் சாதாரண மிளகில் கிட்டத்தட்ட 90 விதைகள் மாத்திரமே காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாங்குளத்தில் அதிகாலை நடந்த திகில் சம்பவம் : அதிர்ச்சியடைந்த ஊழியர்!!

மாங்குளம், ஒட்டுருத்தகுளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில்இன்று அதிகாலை கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வான் ஒன்றில் வருகை தந்த இருவர், எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்த ஊழியரை கூரிய ஆயுதம் ஒன்றை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளயடித்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் ஒரு இலட்சத்து 86 ஆயிரம் ரூபா பணம் இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!!

எரிபொருட்களின் விலையேற்றம், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக எதிர்வரும் 23ஆம் திகதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரால் மேற்கொள்ளப்படவுள்ள இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், மக்களைப் பசியில் தள்ளும் அரசுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவும், மக்கள் அதிகாரங்களை நிலை நிறுத்த அனைத்து மக்களையும் இனமதபேதமின்றி இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிணையுமாறு சமூக வழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

வவுனியாவில் மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் 2ஐச் சேர்ந்த 64 வயதுடைய நாகன் கோணாமலை என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம்(20.05.2018) மாலை 4.30 மணியளவில் கற்குளத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து மாடு மேய்ப்பதற்காக வெளியில் சென்றுள்ளார்.

எனினும் நீண்ட நேரமாகியும் இவர் வீடு திரும்பாததையடுத்து வீட்டார் அருகிலிருந்தவர்களின் உதவியுடன் தேடிச் சென்றுள்ளனர். இதன் போது இரவு 8.மணியளவில் குறித்த பகுதியில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்

சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் திடீர் மாரடைப்பே மரணத்திற்கு காரணமாக இருக்கும் என சந்தேகப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தூக்கில் சடலமாக தொங்கிய 17 வயது சிறுமி : உருக்கமான கடிதம் சிக்கியது!!

இந்தியாவில் 17 வயதான சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் பரீட்சையில் தோல்வியடைந்ததால் அவர் இம்முடிவை எடுத்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் பாபு படேல். இவர் மகள் நீட்டா (17). நீட்டா பனிரெண்டாம் வகுப்பு தெரிவை எழுதியிருந்த நிலையில் சமீபத்தில் முடிவுகள் வந்தது.

இதில் அவர் தேர்ச்சி பெறவில்லை, இதனால் மனவருத்தத்துடன் நீட்டா இருந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் நீட்டாவின் சடலத்தை கைப்பற்றியதோடு, அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

அதில், நான் சோர்வாக இருக்கிறேன், தற்கொலை செய்ய விரும்புகிறேன். என் சகோதரிகளின் எதிர்காலம் நன்றாக அமையவேண்டும் என எழுதப்பட்டிருந்தது.

இதை வைத்து தேர்வில் தோல்வியடைந்ததால் அவர் இம்முடிவை எடுத்திருக்கலாம் என பொலிசார் கருதும் நிலையில் அவர் குடும்பத்தாரிடம் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

23ம் திகதி தொடக்கம் புகையிரத ஊழியர்கள் பணிநிறுத்தம்!!

இலங்கை புகையிரத திணைக்களத்தின் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் எதிர்வரும் 23ம் திகதி தொடக்கம் வேலைநிறுத்தம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

சம்பள முரண்பாடு மற்றும் வெற்றிடங்கள் காணப்படும் பதவிகளுக்கு புதியவர்களை சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படாமை போன்ற விடயங்களை முன்வைத்து இவர்கள் தங்களின் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பயணிகளுக்கான பயணச் சீட்டு வழங்குனர், பொதிகள் பரிசோதகர், புகையிரத நிலைய சமிக்ஞை பணியாளர்கள் ஆகியோர் குறித்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள நிலையில் புகையிரத சேவைகள் முற்றாக பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இன்னும் சில தினங்களில் பௌத்தர்களின் பொசொன் தின கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில் புகையிரத பணியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக அநுராதபுரத்துக்கான விசேட ரயில் சேவைகளும் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சீரற்ற காலநிலை காரணமாக ஏழு பேர் பலி : 2194 குடும்பங்கள் வெளியேற்றம்!!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மின்னல் தாக்கி ஏழு பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2194 குடும்பங்களைச் சேர்ந்த 8690 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களை விட்டு தற்காலிகமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை, பொலன்னறுவை, பதுளை மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளிலேயே மின்னல் தாக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

பூச்சி மருந்து வில்லை தொண்டையில் சிக்கி சிறுமி பரிதாபமாக பலி!!

பாதுக்க கொரலஹிம அலுத்வத்த என்னும் இடத்தைச் சேர்ந்த சிறுமியொருவர் பூச்சி ம ருந்து வில்லை தொண்டடையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நான்கு வயதான தினுர திமான் தெவ்மிகா என்ற சிறுமியே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான மரண விசாரணையின் போது குறித்த சிறுமியின் தாய் சாட்சியமளித்துள்ளார். அவரது சாட்சியத்தில்,

“உயிரிழந்திருப்பது எனது மகளாவார், மகளை சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருந்தேன். அதன் போது விட்டமின் மற்றும் பூச்சி மருந்து என்பன வழங்கப்பட்டன.

எடை குறைந்த காரணத்தினால் மருந்து வழங்கப்பட்டிருந்தது. மகள் மருந்து குடிப்பதற்கு விரும்ப மாட்டார். அதனால் பணிக்கு செல்வதற்கு முன்னதாக அவரது தந்தை பூச்சி வில்லையை இரண்டாக உடைத்து ஒரு பாதியை தண்ணீருடன் கொடுத்தார்.

பின்னர் மறு பாதியையும் தொண்டையில் இட்டு தண்ணீர் கொடுத்தார் அப்போது மக்கள் “அப்பா” என சத்திமிட்டார். அதன் பின்னர் மகளின் முதுகில் பலமாக தட்டினோம், தலை கீழாக தொங்கவிட்டு தட்டினோம், பின்னர் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றோம்.

அங்கிருந்து சிறுவர் நல வைத்தியசாலைக்கு மகள் மாற்றப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி மகள் உயிரிழந்தார்” என சிறுமியின் தாய் சாட்சியமளித்துள்ளார்.

இந்த விசாரணைகளின் அடிப்படையில் சிறுமி பூச்சி மாத்திரை தொண்டையில் இறுகி உயிரிழந்துள்ளார் என கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ராஹுல் அக் அறிவித்துள்ளார்.

15 வயது சிறுமியைக் கொன்று உடலை 12 துண்டாக வெட்டிய கொடூரன் : அதிர்ச்சிக் காரணம்!!

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள கழிவு நீர் ஓடையில் இருந்து வெட்டி துண்டாக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிறுமி சோனி குமாரி என்பவரது என்பதும்,

மாத ஊதியத்தை வலுயுறுத்தி கேட்டதால் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் தொடர்பில் Manjeet Karketa என்ற இளைஞரை கைது செய்துள்ள பொலிசார்,

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி பகுதியை சேர்ந்தவர் 15 வயதேயான சிறுமி சோனி குமாரி. ஏழ்மையில் இருந்த இவரது குடும்பத்தினரிடம் பேசி மாதம் 6,500 ஊதியம் பெற்றுத்தருவதாக கூறி டெல்லிக்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர் டெல்லியில் உள்ள தொழிலதிபர் ஒருவரது குடியிருப்பில் பணிக்கு சேர்த்துள்ளார். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக குறித்த சிறுமிக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை அவருக்கு தராமல் Manjeet Karketa கைப்பற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் தமது ஊதியத்தை திருப்பித் தருமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்த சோனியை 3 பேர் கொண்ட கும்பலுடன் இணைந்து Manjeet Karketa கொலை செய்துள்ளார்.

பின்னர் உடலை 12 துண்டுகளாக வெட்டி கழிவு நீர் ஓடையில் வீசியுள்ளார். அடுத்த நாள் அந்த பகுதியில் சென்ற நபர் ஒருவர் கண்ணில் இந்த உடல் பாகங்கள் சிக்கியுள்ளது.

அவர் அளித்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராக்களை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

அதில் இருவர் பைகளில் ஏதோ பொருட்களை எடுத்துச் சென்று ஓடையில் வீசுவது பதிவாகியிருந்தது. இதனையடுத்து சிறுமியின் முகத்தை புகைப்படம் எடுத்து விசாரணையை முடுக்கிவிட்ட பொலிசார் Manjeet Karketa என்பவரை கைது செய்துள்ளனர்.