ஏழைக் குடும்பத்தில் பிறந்த கவர்ச்சிக் கன்னியின் மறுபக்கம் : சர்ச்சையுடன் முடிந்த வாழ்க்கை!!

துணை நடிகையாக இருந்து சூப்பர்ஸ்டார் அந்தஸ்து பெற்ற ஒரு விண்மீன் என்று புகழப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதா. ஆந்திராவின் ஒரு கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த பெண். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என குறுகிய காலத்தில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.சில்க் ஸ்மிதாவின் முதல் படம் இணைய தேடி எனும் மலையாளப்படம் ஆகும். இதில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

பிறகு தமிழில் முதல் படமான வண்டிச்சக்கரம் எனும் படத்தில் பாரில் வேலை செய்யும் பெண்ணாக ஒரு கவர்ச்சி வேடத்தில் நடித்திருந்தார்.அந்த படத்தில் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயரே இவரது பெயராகவும், அடையாளமாகவும் மாறியது. இந்த கதாபாத்திரத்தின் மூலம் மிகவும் பிரபலமானார் சில்க் ஸ்மிதா. இதை தொடர்ந்து இவரை தேடி கவர்ச்சி வேடங்களே வந்தன.

எதிர்பாராத விதமாக 1996ம் ஆண்டு தனது சென்னை குடியிருப்பில் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துக் கொண்டார். இதற்கு தயாரிப்பில் ஏற்பட நஷ்டம், காதல் ஏமாற்றம், மது பழக்கம் மற்றும் மன அழுத்தம் என கூறப்பட்டது. விஷம் அருந்தி சில்க் ஸ்மிதா இறந்ததாக அறியப்படுகிறது.

2011ம் ஆண்டு சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு டர்டி பிச்க்ஷர் என்ற பெயரில் திரைப்படமாக உருவானது. இதில் சில்க் ஸ்மிதாவாக நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக வித்யா பாலன் தேசிய விருது வென்றார்.

சில்க் ஸ்மிதாவிற்குள்ளும் ஒரு நல்ல நடிகை இருந்தார். அதற்கு மூன்றாம் பிறை, அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்கள் சாட்சி. ஆனால், ஆரம்பத்தில் இவர் நடித்த ஒரு வேடமானது கடைசி வரை ரசிகர்கள் சில்க் ஸ்மிதாவை கவர்ச்சி கன்னியாகவே காண வைத்துவிட்டது.

சில்க் ஸ்மிதாவின் மாமா மற்றும் அவர்கள் மகன்கள் என சிலர் தெலுங்கு சினிமாவில் பணியாற்றி வந்துள்ளனர். ஆனால், அவர்கள் மூலமாகவோ, உதவியாலோ சில்க் திரை துறையில் கால் பதிக்கவில்லை.

சிறிய வயதில் இருந்தே சில்க் ஸ்மிதாவிற்கு சிறந்த நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அந்த ஆசையில் தான் சில்க் மெட்ராஸ் வந்துள்ளார். அப்போது தான் மலையாள படமான இணையை தேடி என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சில்க் ஸ்மிதாவின் குடும்பத்தினர் ஆரம்பத்தில் சில்க் சினிமாவில் நடிப்பதை எதிர்த்துள்ளனர். அவரை நடிகையாக வேண்டாம் என்றும் கூறியுள்ளானர். ஆனால், புகழும், பணமும் வந்த பிறகு தன் குடும்பத்தாருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் சில்க்.

சாவித்திரி, சுஜாதா, சரிதா போல நல்ல கதாபாத்திரம் ஏற்று நல்ல நடிகையாக பெயர் வாங்க வேண்டும் என்றே சில்க் விரும்பியுள்ளார். ஆனால், வண்டிச்சக்கரம் படத்தில் நடித்த கவர்ச்சி வேடமே அவரது அடையாளமாக மாறிப் போனது.

அதன் பிறகு தன்னை தொடர்ந்து அனைவரும் கவர்ச்சி வேடங்களுக்கே அழைத்ததால், நிறைய கிளாமர் தோற்றத்தில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களில் நடித்த பிறகும் கூட, எனக்கு யாரும் நடிக்கும் வாய்ப்பை அளிக்கவில்லை. கவர்ச்சி வேடங்களே தொடர்ந்து வந்தன என்று சில்க் கூறியுள்ளார்.

ஒரு சிறந்த நடிகையாக பெயர் வாங்க வேண்டும் என்பதே எனது கனவு, ஆசை எல்லாம். ஆனால், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை சார்ந்து இருப்பதால், எனது திறமையை நிரூபிக்கும் வகையிலான படங்கள், கதாபாத்திரங்கள் கிடைப்பதில்லை.

இயக்குனர்கள் தான் என்னை உருவாக்கினார்கள். ஆகையால், அவர்கள் நடிக்க கூறும் பாத்திரங்களில் நடிக்கிறேன், என்று தனது கனவுகள் மற்றும் ஆசை குறித்து சில்க் ஸ்மிதா கூறியுள்ளார்.

200க்கும் மேற்பட்ட படங்களில் பல இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்திருந்தாலும், பாரதி ராஜா, பாலு மகேந்திரா தனக்கு பிடித்தமான இயக்குனர்கள். இவர்கள் பர்பெக்ட் இயக்குனர்கள் என்று புகழ்ந்து பேசி இருக்கிறார் சில்க் ஸ்மிதா.

பாலு மகேந்திரா ஒரு நடிகர் / நடிகையிடம் இருந்து எவ்வளவு சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வர முடியுமோ, அதை செய்வார். அவர் ஒரு சிறந்த கலைஞர் என்று கூறியுள்ளார். மேலும், கமல் மற்றும் சிரஞ்சீவி சிறந்த நடிகர்கள் மற்றும் நன்கு நடனமும் ஆட தெரிந்தவர்கள் என சில்க் ஸ்மிதா குறிப்பிட்டுள்ளார்.

அந்த காலத்தில் சில்க் ஸ்மிதா திமிராக நடந்துக் கொள்கிறார், இயக்குனர், உடன் நடிக்கும் மூத்த நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு மரியாதை அளிப்பதில்லை என்றும் கூறி வந்தனர். ஆனால், அதற்கு சில்க் ஸ்மிதா தக்க பதில் அளித்துள்ளார்.

பத்திரிகையில் தன்னை பற்றி வரும் செய்திகள் யாவும் உண்மை அல்ல. எனக்கு சிறு வயதில் இருந்து கால் மீது கால் போட்டு அமரும் பழக்கம் இருக்கிறது. இதை அவமரியாதை என்று யாரும் என்னிடம் கூறவில்லை. ரிலாக்ஸாக இருக்கும் போது இப்படி அமர்வேன்.

இதை, நான் உடன் நடிப்பவர்களுக்கு, இயக்குனர்களுக்கு முன் திமிராக நடந்துக் கொள்கிறேன் என்று கூறுவதை என்னால் ஏற்க முடியவில்லை. ஊடகவியலாளர்கள் குறுகிய பார்வையுடன் என்னை குறித்து செய்திகள் வெளியிடுகிறார்கள் என்றும் சில்க் தனது கருத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

ஒருமுறை எம்ஜிஆர் பங்குபெறும் விழாவை சில்க் ஸ்மிதா தவிர்த்தார் என்றும் சில்க் மீது சர்ச்சை எழுந்தன. ஆனால், அந்த விழாவின் போது சிரஞ்சீவியுடன் தெலுங்கு படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருந்தேன்.

அதற்கு மறுநாளே சிரஞ்சீவி வெளிநாடு செல்லவிருந்த காரணத்தால், தவிர்க்க முடியாமல் ஷூட்டிங்கில் பங்கெடுத்துக் கொண்டேன்.

அடுத்தடுத்த நாட்கள் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வேண்டிய சூழல், எந்தவொரு தயாரிப்பாளரும் தேதிகளை மாற்றிக் கொள்ள ஒப்புதல் வழங்க மாட்டார்கள்.

இப்படியான காரணங்கள் இருக்கும் தமிழக முதல்வருக்கு அவமாரியதை அளிக்கும் வகையில் நடந்துக் கொண்டேன் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் சில்க் தன் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்துள்ளார்.

ஏடி.எம். இயந்திரத்தில் இருந்த 40 லட்சம் ரூபா கொள்ளை!!

நீர்கொழும்பில் தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்ததாக கூறப்படும் 40 லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை கொள்ளையிடப்பட்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய நீர்கொழும்பு பொலிஸார் விசாரரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வங்கியின் அதிகாரிகள் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணத்தை வைக்க சென்ற போது, இயந்திரத்தில் இருந்த பணம் குறைந்திருப்பதை கண்டு அது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த 30 ஆம் திகதி அதிகாலை 2.47 மணிக்கும் 3 மணிக்கும் இடையில் ஒரு நபரே அல்லது சிலரோ இணைந்து ஏ.டி.எம். இயந்திரத்தின் பாதுகாப்பு கதவை சூட்சுமான முறையில் திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 813 ஐந்தாயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் மற்றும் 712 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களை திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டப்பகலில் லண்டனை உலுக்கிய துப்பாக்கிச் சூடு!!

 

தெற்கு லண்டனில் அமைந்துள்ள கென்னிங்டன் நகரில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிசூடில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கென்னிங்டன் நகரில் உள்ள வார்ஹாம் தெருவில் குற்றுயிராக கிடந்த இளைஞரை மீட்ட மருத்துவக்குழு உயிரை காப்பாற்ற போராடியுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கொல்லப்பட்ட இளைஞரின் பெயர் Rhyhiem Ainsworth Barton(17) என கூறப்படுகிறது. கறுப்பின இளைஞரான பார்டன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதன் காரணம் குறித்து விசாரித்து வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

சம்பவம் அறிந்து கதறும் பார்டனின் தாயார் Pretana Morgan, இதுவல்ல வாழ்க்கை, எனது மகனை கொலைக்கு தரவா இத்தனை ஆண்டுகாலம் வளர்த்தேன் என கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூகத்தின் மீது பற்றுகொண்டுள்ள ஒரு மகனைப் பெற நான் புண்ணியம் செய்யாமல் போனேனே என கதறியது அப்பகுதி மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் லண்டன் மாநகரில் இதுவரை கத்தியால் தாக்கியும் துப்பாக்கியால் சுட்டும் மொத்தம் 62 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலானான வழக்குகள் இதுவரை எந்த முன்னேற்றமும் இன்றி பாதியில் நின்று போயுள்ளது. பார்டன் கொலை வழக்கு தொடர்பில் இதுவரை எந்த கைது நடவடிக்கையில் நடைபெறவில்லை என தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிய வரும் பொதுமக்கள் அல்லது சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் தகவல் தெரிவிக்க முன்வர வேண்டும் என பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கசந்து போன நடிகை கௌதமியின் வாழ்க்கை : கண்ணீருடன் தொடரும் சோகம்!!

 

நடிகை கௌதமி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.தற்போது பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகின்றார்.

அவர், இந்த இடத்தில் தனது பெயரை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு சோதனைகளை தாண்டி வந்துள்ளார்.கடந்த 1998ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்தார். பல்வேறு சர்ச்சைகளுடன் தொடர்ந்த இவரின் வாழ்விற்கு முடிவு கட்டுவதாக கூறி பிரபல தொழிலதிபரை விவாகரத்து செய்தார்.

இவருக்கு ஒரு மகளும் உள்ளனர். தனிமையில் இருந்த இவர் 2005 இல் இருந்து நடிகர் கமல்ஹாசனுடன் திருமணம் முடிக்காமல் வாழ்ந்து வந்தார்.கடந்த வருடம் நடிகர் கமல்ஹாசனை விட்டும் கௌதமி பிரிந்து சென்று விட்டார்.

தனது மகளுக்காகவே நடிகர் கமல்ஹாசனை விட்டு பிரிந்து சென்றதாக ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.அது மட்டும் இல்லை 31ஆவது வயதில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். இவ்வாறு பல தடைகளை தாண்டி தற்போதும் சாதித்துதான் வருகின்றார்.

தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்து வருகின்றார். இதேவேளை, அவர் தனிமையில் இருக்கும் சோகம் கண்ணில் தெரிந்தாலும் அதை ஒரு புறம் தள்ளி வைத்து விட்டு தற்போது மகளுக்காக வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இளைஞரை ஒருதலையாக காதலித்த பெண்ணுக்கு மோசமான தண்டனை : வீடியோ வெளியானது!!

 

இந்தியாவில் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை ஒரு தலையாக காதலித்த பெண்ணை மக்கள் கட்டி வைத்து அடிக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் பேட்டியா என்ற இடத்தில் தரூ என்ற மலைவாழ் இனத்தை சேர்ந்த பெண், ஒரு வீட்டின் முன்பு உள்ள தூணில் கட்டி வைக்கப்பட்டுள்ளார். அசைய முடியாத நிலையில் உள்ள அவரை, உள்ளூர் இளைஞர்கள் கடுமையாக அடித்து உதைக்கின்றனர்.

தாக்கப்பட்ட அந்த பெண் மற்றொரு இனத்தைச் சேர்ந்த இளைஞரை ஒரு தலையாக காதலித்து அவரது புகைப்படத்தை செல்போனில் வைத்திருந்துள்ளார். இதற்காக அப்பெண்ணை கட்டி வைத்து அடிக்குமாறு ஊர் பஞ்சாயத்தார் கூற தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தாக்குதல் காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் இது குறித்து விசாரித்த பொலிசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

கல்லூரியில் மர்மமாக இறந்து கிடந்த மாணவி : கதறும் பெற்றோர்!!

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் காயத்ரி என்ற மாணவி 3-ஆம் ஆண்டு கட்டுமான படிப்பு பயின்று வந்தார். விடுதியில் தங்கியிருந்த காயத்ரி காலை அதே வளாகத்தில் உள்ள நர்சிங் மாணவிகள் தங்கியுள்ள விடுதி கட்டிடத்தின் 3-வது மாடியிலிருந்து விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் காயத்ரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள். ஆனால், காயத்ரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ள பெற்றோர் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளனர்.

16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த நபர் : வெளியான பின்னணி!!

இந்தியாவில் மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த வழக்கில் வாலிபர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் சீனிவாசலு (26). இவர் கட்டாரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஈரோட்டை சேர்ந்த தனசேகரன் என்பவரின் மனைவி ரேகாபானு (34) பேஸ்புக் மூலம் அறிமுகமானார்.

பின்னர் ரேகாபானு தனக்கு தெரிந்த ஒரு 16 வயது மைனர் பெண்ணை சீனிவாசலுவுடன் பேச வைத்ததோடு, பெண்ணை திருமணம் செய்து அழைத்து செல்லும்படி சீனிவாசலுவிடம் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து கட்டாரிலிருந்து ஈரோட்டுக்கு கடந்த 28-ஆம் திகதி வந்த சீனிவாசலு மைனர் பெண்ணை கடத்திக்கொண்டு வேலூரில் திருமணம் செய்தார். இதைத்தொடர்ந்து அவரை சித்தூருக்கு அழைத்து சென்று வாழ்ந்து வந்துள்ளார்.

இதற்கிடையே மைனர் பெண்ணின் தாய் தனது மகளை காணவில்லை என்று பொலிசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பொலிசார் விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவல் தெரியவந்தது.

இதை தொடர்ந்து சித்தூருக்கு சென்ற பொலிசார் மைனர் பெண்ணை மீட்டதுடன், சீனிவாசலுவையும் கைது செய்து ஈரோட்டிற்கு கொண்டு வந்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த ரேகாபானுவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இறந்துபோன தம்பியின் உடலை தோளில் சுமந்து சென்ற அண்ணன்!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் இறந்துபோன தனது தம்பியின் உடலை அவரது அண்ணன் தோளில் சுமந்து சென்றுள்ளார். பழத் தோட்டத்தில் வேலை செய்யும் பங்கஜ் என்பவரின் தம்பி சோனு காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சோனுவுக்கு பல இடங்களில் சிகிச்சை செய்தும் குணமடையாததால், டேராடூன் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு, சிகிச்சை பலனின்றி, சோனு இறந்தார்.

அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல, அம்புலன்ஸ் சேவை வழங்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது. இதையடுத்து, தனியார் அம்புலன்சில் எடுத்து செல்வதற்கு தேவையான பணம் இல்லாததால் தம்பியின் உடலை பங்கஜ் தோளில் சுமந்து சென்றார்.

பங்கஜின் நிலையை பார்த்த, சிகிச்சைக்காக வந்த திருநங்கையர், மருத்துவமனை ஊழியர்களுடன் இணைந்து மக்களிடம் 3,000 ரூபாய் திரட்டினர். இதை வைத்து, சோனுவின் உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.

வட இந்திய மாநிலங்களில் இதுபோன்று நடப்பது முதல்முறை கிடையாது. அங்கிருக்கும் சில அரசு மருத்துவமனைகளில் இதுபோன்று அம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்ட, பலரும் தங்களது உறவினர்களை இப்படி சுமந்து சென்ற புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

கணவரும் மாமியாரும் சேர்ந்து செய்த மோசமான செயல் : உயிரை விட்ட புதுப்பெண்!!

இந்தியாவில் திருமணமான சில மாதங்களில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் குல்சன். இவருக்கும் கிரண் (20) என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்னர் கிரண் தனது வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பொலிசார் விசாரித்து வந்த நிலையில் கணவர் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது.

இது குறித்து கிரணின் தந்தை கைலாஷ், குல்சன் மற்றும் அவரின் பெற்றோர்களான பாபி, பண்ட்டி மற்றும் இன்னும் நான்கு பேர் மீது புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து 7 மீதும் வழக்குப்பதிவு செய்த பொலிசார் குல்சன் மற்றும் அவர் பெற்றோரை தற்போது கைது செய்துள்ளனர்.

ஒரு போட்டியோடு ஐபிஎல்லில் காணமல் போன இலங்கை வீரர் : கண்டு கொள்ளாமல் இருக்கும் மும்பை!!

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் துவங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு கடுமையாக விளையாடி வருகின்றன.

இதில் கடந்த முறை சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் தடுமாறி வருகிறது. 9 போட்டிகளில் விளையாடியுள்ள அந்தணி 3 வெற்றி 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

இந்த அணியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்செய 50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சுழற்பந்து வீச்சில் மிகவும் கை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 14ம் திகதி நடந்த டெல்லி அணிக்கெதிரான போட்டியின் போது 4 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 47 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார்.

அப்போட்டியில் மும்பை அணி தோல்வியை சந்தித்தது. குறித்த போட்டியின் போது அகில தனஞ்செய அந்த அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத காரணத்தினால், மும்பை அணி அவரை கண்டு கொள்ளாமல் உள்ளது.

மேலும் மும்பை அணிக்கு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தன உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைதானத்தை தாக்கிய மின்னல் : பரிதாபமாக பலியான வீரர்!!

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கியதில் வீரர் ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் வாஷுலு நடால் என்ற இடத்தில் உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது திடீரென கடுமையான மின்னல் தாக்கியது.

இதில் மாரிட்ஷ்பர்க் யுனைடெட் கால்பந்து கிளப் அணி வீரர்கள் 3 பேர் உடலில் தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டனர். இதனால் மயக்கமடைந்த அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் அணித்தலைவர் லுயாண்டோ நிஷான்கேஸ் ‘கோமா’ நிலைக்கு சென்றார். இந்நிலையில், தீவிர சிகிச்சையில் பிரிவில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த தகவலை அவர் விளையாடிய மாரிட்ஷ் பர்க் கிளப் அணி உறுதி செய்துள்ளது.

 

வவுனியா வியாபாரிகளுக்கு முன்னுரிமை வேண்டும் : சத்தியலிங்கம் வலியுறுத்தல்!!

வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் கடைகளை ஏற்கனவே வவுனியாவில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டுமென வட மாகாணசபை உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கடந்த வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. அதில் வவுனியா மதகு வைத்த குளத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பொருளாதார மத்திய நிலையத்தில் 50 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றை திறந்த கேள்விகோரல்மூலம் வழங்குவதற்கு கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அறியகிடைக்கின்றது.

கடந்த 40 வருடங்களாக வவுனியா நகரில் 35 கடைகளில் உள்ளூர் உற்பத்திபொருட்கள் விற்பனையாளர்கள் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்

திறந்த கேள்விகோரல் மேற்கொள்ளப்படால் வவுனியா வியாபாரிகள் தென்பகுதி வியாபாரிகளுடன் போட்டிபோட முடியாத நிலைமை ஏற்படலாம்.

இதனால் மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகளுக்கு கடைகள் கிடைக்காமல்போக வாய்ப்பு ஏற்படலாம். எனவே நீண்ட காலமாக வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகளை வழங்க வேண்டும்.

மிகுதியாவுள்ள 15 கடைகளையும் திறந்த கேள்வி கோரல் மூலம் ஏனையவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இவரது கோரிக்கையானது மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபரினால் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு கடிதமூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வாள்களுடன் வரும் இளைஞர்களை மடக்கிப் பிடியுங்கள் : சுமந்திரன் அறிவிப்பு!!

யாழ்ப்பாணத்தில் எந்தவொரு வாள்வெட்டுச் சம்பவங்களும் நடைபெறாதவாறு, கிராம மட்டங்களில் விழிப்புக்குழுக்களை அமைத்து வாள்வெட்டுக் குழுக்களை மடக்கிப் பிடித்து வன்முறைகளைக் கட்டுப்படுத்துமாறு இளைஞர்களிடம் எம்.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வன்முறை தவிர்ப்போம், போதையை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளிலான சமூக மட்ட நிகழ்ச்சித் திட்ட ஆரம்ப நிகழ்வு இன்று யாழ்.பஸ் நிலையத்தின் முன்பாக உள்ள வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு வலியுறுத்தினார். மேலும் குறிப்பிடுகையில், தமிழ் இனத்தினை பாதுகாக்க போதை பாவனையை முற்றாக ஒழிக்க வேண்டுமென்று இன்று உறுதிபூண வேண்டும்.

போதைப்பொருள்கள் ஒழிக்கப்பட வேண்டுமென்பது எமது கொள்கையாக இருக்க வேண்டும். அரைகுறையாக சிலவற்றினை நடத்துவோம், சிலவற்றினை ஒழிப்போம் என இருந்தால், போதை ஒழியாது. குடும்ப வன்முறைக்கு மதுபான பாவனை கூடுதலான காரணமாக இருக்கின்றது. இவை அனைவருக்கும் தெரிந்த விடயம்.

எமது இனத்திற்கு எதிரான வன்முறையை தடுப்பதற்கு பலர் முன்வந்தார்கள். அவர்கள் தமது உயிர்களையும் மாய்த்துப் போனார்கள். வெளியில் இருந்து எமக்கு ஆபத்து வருகின்ற வேளைகளில் எமது இளைஞர்கள் அனைத்து உதவிகளும் செய்தார்கள்.

போர் நிறைவடைந்த பின்னர் கிறிஸ் பூதம் வந்த போது, யாரால் செய்யப்படுகின்றது என தெரிந்தும் கூட எமது இளைஞர்கள் அவர்களை எதிர்த்து நிற்கவும், போராடவும் பயப்படவில்லை.

நாவாந்துறைப் பகுதியில் 100 ற்கும் மேற்பட்டவர்கள் காயப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் 52 பேரின் வழக்குகள் உயர் நீதிமன்றில் இன்றும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

வெளியில் இருந்து ஆபத்துக்களும், சவால்களும் வருகின்ற போது நாங்கள் கொதித்தெழுகின்றோம். ஆனால், இன்று நடக்கின்ற வன்முறைகளைச் செய்கின்றவர்கள் யார்?

இந்த வன்முறைகளைச் செய்பவர்கள் தமிழ் இளைஞர்கள். வாள்களுடன் வீதிகளில் சுற்றித் திரிபவர்களும், வீட்டிற்குள் சென்று பெண்களை வெட்டுகின்றவர்களும் யார்?

வெளியில் இருந்து வருபவர்கள் அல்ல. வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல. யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற தமிழ் மகன் தான் இந்த வன்முறைகளைச் செய்கின்றான். உள்ளே இருக்கின்ற சவால்களையும், உள்ளே இருக்கின்ற ஆபத்துக்களையும் நாங்கள் கண்டுகொள்ளாவிடின், உள்ளே இருந்தே சீரழிந்துவிடுவோம்.

ஆகையினால், இந்த வன்முறைக்கு எதிரான தொனிப்பொருளுடன் நிகழ்ச்சித்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல விடயம். அரசியல்வாதிகளாக இருக்கும் நாங்கள் எம்மால் இயன்றவற்றினைச் செய்வோம்.

எந்த இடத்திலாவது போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகின்றதென்ற தகவல் தெரிந்தால், பொலிஸாரிடம் தெரிவிக்க அச்சம் காணப்பட்டால், அமைப்புச் சார்ந்தவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். அந்த அமைப்பினர் எம்முடன் தொடர்பு கொள்வார்கள். உரிய நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

ஏனெனில், போதைப்பொருள்களுடன் பொலிஸாரும் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது எமக்குத் தெரிந்த விடயம். அவைகளை முறியடிப்பதற்கு முயற்சி எடுக்கின்றோம்.

வாள்வெட்டுக் குழுவினர் மோட்டார் சைக்கிளில் வருகின்றார்கள் எனின் அவர்களைத் துரத்திப் பிடியுங்கள். வீரம் செறிந்த மண், வாள் வெட்டுக்காரர்களைத் துரத்திப் பிடியுங்கள். அங்கு வன்முறைகளைப் பாவிக்க வேண்டாம். ஆயுதங்களை முற்றாக தவிர்த்துக்கொள்ளுங்கள்.

10 பேர் இணைந்தால், இருவர் தப்பி ஓடி ஒன்றும் செய்ய முடியாது. எமது வீரம் எமது மக்களைப் பாதுகாக்கின்ற வீரம். எமது மக்களைப் பாதுகாக்கின்ற வீரம் எமது முன் எண்ணங்களில் இருந்தே வர வேண்டும். எமது மக்களைப் பாதுகாக்கின்ற தருணம் இது. அந்த தருணம் துரதிஸ்டவசமாக தற்போது வந்துள்ளது. ஆனால், அவற்றினை நாம் செய்தாக வேண்டும்.

கிராம மட்டங்களில் சில இளைஞர்களை ஒன்று சேர்த்து விழுப்புக் குழுவாக தயாராகுங்கள். அந்தக் கிராமங்களில் உள்ள மூத்தவர்களுக்கு உங்கள் தொலைபேசி இலக்கங்களை சொல்லி  வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பொறிமுறையினை ஏற்படுத்துங்கள்.

யாராவது இளைஞர்கள் வாள்களுடன் வந்தால், உடனடியாக 10 இளைஞர்களை ஒன்று திரட்டுவதற்கான பொறிமுறையினை ஏற்படுத்துங்கள். தேவையான உதவிகளை நாங்கள் செய்கின்றோம்.

இன்றிலிருந்து யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு நடந்ததாக சம்பவங்கள் இருக்கக்கூடாது. அவ்வாறான ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துங்கள். ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியைத் தாக்கியதாக செய்தி வரக்கூடாது. அயலவர்கள் சென்று அந்தக் குடும்பத்தினை இழுத்து வீதியில் நிறுத்துங்கள். அவரை வெட்கமடையச் செய்யுங்கள். ஒரு வீட்டில் குலறல் சத்தம் கேட்டால், அது உள்வீட்டுப் பிரச்சினை என இருக்க வேண்டாம்.

தாக்கப்படுவது எமது சகோதரி, அது கணவராக இருந்தாலும், பரவாயில்லை. தலையிடுங்கள், வன்முறைகளை நிறுத்துங்கள். வன்முறைகளுக்கு போதை உடந்தை. வன்முறையையை முற்றாக ஒழிக்கின்ற சேவையில் உணர்வு பூர்வமாகவும், வீரத்துடனும் இறங்குவோம் என இன்று சபதம் எடுப்போம் என்றும் வலியுறுத்தினார்.

-தமிழ்வின்-

வாய் பேச முடியாத, காது கேளாத இளைஞனுக்கு எமனாக வந்த புகையிரதம்!!

மட்டக்களப்பு – கூழாவடி பகுதியில் ரயிலில் மோதுண்டு வாய்பேசமுடியாத இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதில், இருதயபுரத்தினை சேர்ந்த 27 வயதுடைய உதயன் ஜீவேந்திரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞருக்கு வாய் பேச முடியாத, காது கேளாத நிலையில் தண்டவாளத்தினூடாக நடந்து சென்ற போதே ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

17 வயது பௌத்த பிக்கு கைது : கடும் எச்சரிக்கை விடுத்த பொலிஸார்!!

திருகோணமலை பகுதியில் முச்சக்கர வண்டியில் கஞ்சா கொண்டு சென்ற 17 வயதுடைய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டு கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஹொரவபொத்தானை முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான முச்சக்கர வண்டியில் கேரள கஞ்சா கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த மொரவெவ பொலிஸார் குறித்த முச்சக்கர வண்டியில் 17 வயதுடைய பிக்குவிடம் இருந்து கஞ்சாவை மீட்டுள்ளதுடன், அவரை கைது செய்திருந்தனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் பௌத்த பிக்குவை மொறவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததுடன், பெரிய பௌத்த பிக்குவை வரவழைத்து கைது செய்யப்பட்ட பிக்குவை எச்சரித்து விடுவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுட்டால் எவ்வித உதவிகளும் செய்ய முடியாத நிலை ஏற்படும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை செய்து குறித்த பிக்குவை விடுவித்துள்ளனர்.

இன்று பூமியை தாக்க வரும் சூரியப் புயல் : தொழில்நுட்ப சேவைகள் பாதிக்க வாய்ப்பு!!

தேசிய ஓஷியானிக் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாக அமைப்பான (என்ஓஏஏ) இன்று பூமியை சூரியப் புயல் தாக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சூரியனின் மேற்புறத்தில் பல்வேறு வேதியியல் மாற்றங்களால், கதிர்கள் பெருமளவில் கொந்தளித்து, அலைகளை வீசுவது, சூரிய அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல் எனப்படுகிறது.

இந்த நிலையில் இன்று (மே 6) சூரியப் புயல், பூமியைத் தாக்க வாய்ப்புள்ளது என்று தேசிய ஓஷியானிக் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாக (என்ஓஏஏ) அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சூரியப் புயல் தாக்குவதால் காஸ்மிக் பகுதிகளின் துகள்கள் ஒன்று சேர்ந்து பூமியை நோக்கி வரும். பூமியை இன்று தாக்கவுள்ள சூரியப் புயலானது சிறிய அளவிலானது என்று என்ஓஏஏ அமைப்பானது தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சூரியப் புயலால் செயற்கைக்கோள் தொழில் நுட்பங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் இதனால் பூமியின் பல்வேறு பகுதிகளில் தொழில்நுட்பச் சேவைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

குறிப்பாக புவிவட்டப் பாதையில் சுற்றிவரும் செயற்கைக் கோள்களுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என்றும், ஜிபிஎஸ் சேவை, செல்போன் சிக்னல்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.