ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் நாட்டுக்கு ஏற்படவுள்ள ஆபத்து!!

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் வெளிநாட்டு படுகடன் தொகை பாரியளவில் உயர்வடைந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த வாரத்தில் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் மட்டும் வெளிநாட்டுக் கடன் தொகை 47 பில்லியன் ரூபாவினால் உயர்வடைந்துள்ளது.

கடந்த வாரம் அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி 157.46 ருபாவிலிருந்து 159.04 ரூபாவாக உயர்வடைந்துள்ளதனால் வெளிநாட்டுக் கடன் தொகை உயர்வடைந்துள்ளது.

கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு 48 பில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒருவார காலத்தில் இந்தளவு தொகை கடன் அதிகரித்துள்ளது என அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

விமான பயணிகளுக்கு எச்சரிக்கை : உங்களுக்கும் இந்தநிலை ஏற்படலாம்!!

பிரான்சிலிருந்து அமெரிக்கா சென்ற வானூர்தியில் சாப்பிடுவதற்குக் கொடுத்த அப்பிளை கைப்பையில் கொண்டு சென்ற பெண்ணுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்சிலிருந்து அமெரிக்காவுக்கு கிரிஸ்டன் டேட்லாக் என்பவர் எடெல்டா ஏர்லைன்ஸ் வானூர்தியில் பயணித்துள்ளார். வானூர்தி  தரையிறக்கப்பட்டது. இதையடுத்து வானூர்தியில் இருந்து வெளியேறிய பயணிகளிடம் பொலிஸார் சோதனை செய்யும் இடத்தில் சோதனை செய்தனர்.

குறித்த பெண் கொண்டு வந்த பைக்குள் அப்பிள் ஒன்று இருந்துள்ளது. ஆனால் அந்த அப்பிள் அவர் சாப்பிடுவதற்காக வானூர்தியில் வைத்து வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதனைச் சாப்பிடவில்லை.

சாப்பிடக் கொடுத்த அப்பிளை சாப்பிடாமல் கைப்பையில் கொண்டு சென்ற குற்றத்திற்காக அவருக்கு எதிராகப் பொலிஸார் நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யதனர். நீதிமன்று அவருக்கு தண்டம் விதித்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

பூநகரியில் கோர விபத்து : ஒருவர் பரிதாபமாகப் பலி!!

 

கிளிநொச்சி பூநகரி நல்லூர் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூநகரி நல்லூர் வீதியில் நேற்று மாலை 6 மணியளவில் மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர் மீது தென்னிலங்கையைச் சேர்ந்த அபிவிருத்தி லொத்தர் சபைக்குச் சொந்தமான கனரக வாகனம் ஒன்று மிகவேகமாக வந்து மோதியது.

அந்த வாகனத்தின் அடிப்பகுதியில் மோட்டார் சைக்கிளும் மோட்டார் சைக்கிளில் சென்றவரும் அகப்பட்டு கடுமையான காயங்களுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்றவர் யார் என இனங்காணப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

மேற்படி வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவரும் அபிவிருத்தி லொத்தர் சபைக்குச் சொந்தமான கனரக வாகனமும் மிகவேகமாகச் சென்றதாக அவதானித்தவர்களால் கூறப்படுகின்றது.

இதே வேளை வாகனம் செலுத்தியவர்கள் மதுபோதையில் இருந்திருக்கலாம் என்ற சந்தேசமும் வெளியிடப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலுள்ள வீதிகளில் வாகனங்களை சாரதிகள் வீதி விதிமுறைகளை மீறி அதிக வேகத்தில் செலுத்தி வருவதாகக் கூறிக்கவலை தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சுமந்திரனின் எச்சரிக்கை!!

அரசியல் தீர்வுக்கான முயற்சிகளில் அரசு தொடர்ந்தும் பாராமுகமாக இருக்குமாயின், வடக்குக் கிழக்கில் அரச நிர்வாகத்தை முடக்குவதற்கான போராட்டம் முன்னெடுக்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளமை அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள்மீது சிறிதும் அக்கறையில்லை, அரசுடன் ஒட்டியிருந்து கொண்டு சுகபோகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கூறியவர்கள், சுமந்திரனின் அறிவிப்பையடுத்து வாயடைத்துப்போய் நிற்கின்றனர். கூட்டமைப்பின் தற்போதைய மனநிலையையே சுமந்திரன் எடுத்துக் கூறியுள்ளார்.

ஈழத் தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டினால் அதில் ஏராளமான அத்தியாயங்கள் அவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களையும், அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அநியாயங்களையும் எடுத்துக் கூறுவனவாகவே அமைந்துள்ளன.

நாடு சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து இன்று வரையில் பிரச்சினைகளுக்கு மத்தியில் தான் தமிழ் மக்களது வாழ்க்கை கழிந்து வருகின்றது.

தந்தை செல்வா போன்ற மிதவாதத் தலைவர்கள் இனியும் பொறுமை காக்க முடியாது என உணர்ந்து கொண்டதால் தான் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டங்களை அகிம்சை முறையில் ஆரம்பித்தனர். ஆனால் இனவாதிகள் இரும்புக் கரங்கொண்டு அவற்றை அடக்குவதிலேயே குறியாகச் செயற்பட்டனர்.

தமது முயற்சிகளுக்கு ஏற்பட்ட தோல்விகளால் ஏமாற்றமுற்று உளரீதியாகப் பாதிக்கப்பட்ட தந்தை செல்வா, அந்த ஏக்கம் கலையாத நிலையில் இவ்வுலகை விட்டு நீங்கிச் சென்றார்.

அவருக்குப் பின்வந்த தலைவர்களாலும் எதையுமே சாதிக்க முடியவில்லை.இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களைக் கைகளில் ஏந்தினர்.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த ஆயுதப் போராட்டம் இந்த நாட்டின் அடித்தளத்தையே ஆட்டிப் பார்த்து விட்டது. பல ஆயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.

கணக்கிடமுடியாத அளவுக்கு பொருளாதார இழப்புக்கள் ஏற்பட்டன. மீள முடியாத கடன் சுமைக்குள் நாடு தள்ளப்பட்டமைக்கு இந்த நீண்ட போரே காரணமாகும்.

கடந்த 2009ஆம் ஆண்டு புலிகள் தோற்கடிக்கப்பட்டமை தமிழர்களின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக மாற்றி விட்டது. அது மட்டுமல்லாது, எதையும் கேட்டு வாங்கும் நிலைக்குள் அவர்களைத் தள்ளிவிட்டது.

தமிழ்த் தலைவர்கள் கேட்டுக் கொண்டதை நிறைவேற்றி வைக்கின்ற நிலையில் அரசு இல்லாததால், தமிழ் மக்கள் பொறுமையிழந்த நிலையில் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதைக் காண முடிகின்றது.

சுமந்திரனின் தற்போதைய அறிவிப்பு இனியும் பொறுமை காக்க முடியாது என்ற நிலையில் வௌிவந்த ஒன்று என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டின் இன்றைய சூழ்நிலையில் தமிழர்கள் மற்றுமொரு போராட்டத்தைக் கையில் எடுப்பது என்பது சாதாரண விடயமல்ல. அதுவும் ஆரம்பப் புள்ளியிலிருந்து ஆரம்பிப்பது என்பது மிகவும் சிரமானதொரு காரியமாகும்.

கூட்டமைப்பின் தலைவர்கள் தீர ஆலோசித்ததன் பின்னரே இத்தகையதொரு முடிவை எடுத்திருப்பார்களென நம்பலாம்.தமிழர்கள் மிக அதிகளவில் வாழ்கின்ற தமிழ் நாட்டிலும் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

மத்தியில் ஆளுகின்ற பா.ஜ. க அரசுக்கு எதிரான போராட்டங்களாகவே இவற்றைப் பார்க்க முடிகின்றது. இந்த நிலையில் ஈழத் தமிழர்களும் போராட்டத்தில் மீண்டும் குறிப்பது குறித்துச் சிந்திப்பது இந்திய, இலங்கை அரசுகளுக்கு உவப்பானதாக இருக்கப் போவதில்லை.

தந்தை செல்வாவின் தலைமையிலும் அரச நிர்வாகத்தை முடக்கும் பொருட்டு மாவட்டச் செயலகங்களுக்கு முன்பாக மறியல் போராட்டங்கள் இடம்பெற்றன. அவற்றில் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதையும் காணமுடிந்தது.

ஆனால் அப்போதைய அரசு, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கவில்லை. அந்த அகிம்சை வழிப் போராட்டங்களும் அடக்கி ஒடுக்கப்பட்டன.

போர் ஓய்ந்த பின்னரும் அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாமை தவறானதொரு முடிவாகும்.

பேரினவாதத் தரப்பினர் தமிழர்களைக் கிள்ளுக்கீரையாக மதிக்கின்ற மனப்பான்மையையே இது எடுத்துக் காட்டுகின்றது.

இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை பன்னாட்டுச் சமூகம் ஏற்றுக்கொள்ளவே செய்யும்.

ஏற்கனவே இலங்கை மீது அதிருப்தியில் உள்ளதால், ஆயுதம் ஏந்தாத அகிம்சைப் போராட்டம் பன்னாட்டுத் தரப்புகளால் ஏற்றுக் கொள்ளப்படத்தக்க சூழ்நிலை உருவாகவே செய்யும்.

தமிழ்த் தலைவர்கள் தரப்பினர் கட்சி பேதங்களை மறந்து கூட்டமைப்பின் தலைமையில் இடம்பெறுவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் போராட்டத்துக்கு ஆதரவை வழங்க வேண்டும்.

தமிழர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்று திரளும்போது அதற்குத் தனியானதொரு மதிப்பு ஏற்பட்டு விடும்.

இதனால் எமது தமிழ்த் தலைமைகள் பதவிகளுக்காகச் சண்டையிடுவதை விடுத்து உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டுத் தமிழர்களின் பலத்தை உலகறியச் செய்ய வேண்டும்.

இதேவேளை ஆளும் தரப்பினரும் இனவாதிகளும் இனியும் தமிழர்களைக் குறைவாக எடை போடுவார்களாயின் அதுவே அவர்களுக்கு வினையாக முடிந்து விடும்.

இந்த நாட்டின் அரசியல் தீர்வு நீண்ட காலமாகவே இழுபறியான நிலையில் காணப்படுகின்றது.இதன் காரணமாக பல அனர்த்தங்களையும் நாம் எதிர்கொண்டு விட்டோம். தமிழர்கள் இதற்காக மீண்டும் போராடியே ஆக வேண்டும் என்றால் அதில் நியாயம் இருப்பதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு பாரிய நெருக்கடி!!

டொலருக்கான இலங்கை ரூபாவின் விற்பனைப் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியை அடைந்தது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்திற்கு அமைய, ஒரு டொலருக்கான ரூபாவின் விற்பனை பெறுமதி 159 ரூபா 04 சதமாக இன்று பதிவாகியது.

நேற்றைய தினம் ஒரு டொலருக்கான ரூபாவின் விற்பனைப் பெறுமதி 158.69 ரூபாவாக பதிவாகி இருந்தது. இந்நிலையில், இன்று அது மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஏற்றுமதியில் வளர்ச்சியின்றி, இறக்குமதியில் தங்கியிருப்பதே இந்த வீழ்ச்சிக்கான காரணம் என்று கூறப்படுகிறது

இந்நிலையில், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகளில தாக்கம் ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்!!

பிரபல பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 87.

‘டவுன் பஸ்’ படத்தில் கலக்கிய இசைக்குயில் : ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்ன விட்டுப்பிரிந்தே போன கணவன் வீடு திரும்பலே’ என்ற பாடல் 1950 களில் மிகப்பிரபலம். ‘டவுன் பஸ்; என்ற படத்தில் அஞ்சலிதேவிக்காக பின்னணிக் குரல் கொடுத்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. அதே படத்தில் பொன்னான வாழ்வே என்ற பாடலும் எல்லோராலும் உச்சரிக்கப்பட்ட பாடல்.

கமல்ஹாசன் முதன்முதலில் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவில் கமலின் அறிமுகக் காட்சியில் பாடும் ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்ற பாடலை கேட்டு உருகாதோர் யாரும் இருக்க முடியாது.

கமலுக்கு முதல் பின்னணிக் குரல்

குழந்தை நட்சத்திரம் கமலே சொந்தக்குரலில் பாடினாரோ என்று எண்ணத்தோன்றும் அளவுக்கு தத்ரூபமாகப் பாடியவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி என்ற இளம்பெண் என்பதை கேட்ட ரசிகர்கள் ஆச்சர்யமடைந்தனர்.

குழந்தைகளுக்கான பாடலா கூப்பிடு எம்.எஸ்.ராஜேஸ்வரியை என்று அழைக்கும் அளவுக்கு குழந்தைகள் பாட்டுப்படி பிரபலமான ‘கைதி கண்ணாயிரம்’ படத்தில் வரும் சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம் பாடல், பூப்பூவாய் பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா என்ற பாடல், நான் ஏன் பிறந்தேன் படத்தில் ‘தம்பிக்கு ஒரு பாட்டு’ சோகப்பாடல் முதல் 1990 க்கு மேல் வந்த ’துர்கா’ படத்தில் பேபி ஷாம்லிக்காக பின்னணிக் குரல் கொடுத்தது வரை பெரிய சாதனைக்கு சொந்தக்காரர் எம்.எஸ்.ராஜேஸ்வரி.

கதாநாயகிகளுக்கும் காதல் பாட்டு

குழந்தைகளுக்காக மட்டும் தான் பாடியவர் என்று கூற முடியாத அளவுக்கு 1950-களில் பிரபல கதாநாயகிகள் பலருக்கும் பின்னணி பாடியவர். அதன் பின்னர் 1970-களின் இறுதிவரை புகழ்பெற்றிருந்த அவர் பின்னர் பட வாய்ப்புகளின்றி இருந்தார். 1989-ல் மணிரத்தினம் இயக்கிய ‘நாயகன்’ படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி, ஜமுனா ராணி இருவருக்கும் வாய்ப்புக்கொடுத்தார் இளையராஜா. அந்த படத்தில் அவர் பாடிய நான் சிரித்தால் தீபாவளி பாடல் அப்போது பிரபலமானது.

வயதானாலும் மாறாத குரல்

அதன் பின்னர் சங்கர் கணேஷ் இயக்கத்தில் பல பாடல்களை அவர் பாடினார். அவருக்கு வயதானபோதும் குரலுக்கு வயதாகவே இல்லை என்பதை குழந்தை குரலில் பாடி நிரூபித்தார்.

புகழ்பெற்ற பாடல்கள் சில…

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா(டவுன் பஸ்), அம்மாவும் நீயே அப்பாவும் நீயே( களத்தூர் கண்ணம்மா), காக்கா காக்கா மைகொண்டா( மகாதேவி) மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா (தை பிறந்தால் வழி பிறக்கும்), படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரம் உண்டு (படிக்காத மேதை ), சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் கல்யாணமாம் (கைதி கண்ணாயிரம்), மியாவ், மியாவ் பூனைக்குட்டி, வீட்டை சுத்தும் பூனைக்குட்டி (குமுதம்), பேசியது நானில்லை கண்கள்தானே, நினைப்பது நானில்லை நெஞ்சம்தானே ( செங்கமலத் தீவு), பூப் பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா (திக்குத் தெரியாத காட்டில்) ஆகிய பாடல்கள் பிரபலமானவை, இன்றும் ரசிக்கப்படுபவை.

வாழ்க்கைக்குறிப்பு

சிறுவயதில் இருந்தே பாடுவதில் ஆர்வமாயிருந்த எம்.எஸ்.ராஜேஸ்வரி, ஏவிஎம் நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் இணைந்தார். இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ’ராமராஜ்யா’ திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து ஏவிஎம் நிறுவனம் வெளியிட்டது. எம்.எஸ்.ராஜேஸ்வரி நான்கு பாடல்களைப் பாடினார்.

ஏவிஎம் காரைக்குடியில் இருந்து சென்னை இடம் மாறிய போது ராஜேஸ்வரியும் சென்னை வந்தார். நாம் இருவர் திரைப்படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய காந்தி மகான் மற்றும் இன்னொரு பாடலும் பாட, அந்த பாடல்களுக்காகவே இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

1931-ம் ஆண்டு பிறந்த எம்.எஸ்.ராஜேஸ்வரி தனது 87 வது வயதில் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

கொழும்பில் பெற்றொர் : யாழில் தூக்கில் தொங்கிய மகன் – கொலையா தற்கொலையா?

யாழ்ப்பாணத்தில் மாணவன் ஒருவரின் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

15 வயது மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர்.

நீர்வேலி தெற்கு நீர்வேலியைச் சேர்ந்த 15 வயதான பிராபாரகரன் துபாரகரன் என்ற மாணவனே நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். மாணவனின் மரணம் தொடர்பாக விசாரணையை யாழ்ப்பாணம் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

துபாரகரனின் பெற்றோர் கொழும்பில் வசித்து வருகின்றனர். துபாரகரன் உறவினர்களுடன் நீர்வேலியில் வசித்து வந்தார்.

துபாரகரன், நீர்வேலி சோமஸ்கந்தா பாடசாலையில் ஜி.சி.ஈ சாதாரண தரத்தில் கல்வி கற்கிறார். நேற்றுமுன்தினம் துவாரகனின் தாய் அவனுடன் தொடர்பு கொண்டுள்ளார்.

துபாரகரனை சாதாரண தரப் பரீட்சைக்குத் தயார்ப்படுத்த வேண்டும் என்றும் தான் யாழ்ப்பாணம் வருவுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் துபாரகரன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் எந்தவிதமான அழுத்தங்களும் இன்றி சந்தோஷமாக இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் மாணவனின் திடீர் மரணம் குறித்து உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதுவொரு கொலையா அல்லது தற்கொலையா என்ற ரீதியில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-தமிழ்வின்-

தமிழ் வேண்டாம் என கூறிய ரசிகருக்கு சென்னை அணி நிர்வாகம் பதிலடி!!

தமிழில் பதிவுகள் வேண்டாம் என கூறிய ரசிகர் ஒருவருக்கு சென்னை அணி நிர்வாகம் பதிலடி கொடுத்துள்ளது.

11 ஆவது ஐ.பி.எல் போட்டி கடந்த 7 ஆம் திகதி மும்பையில் ஆரம்பமாகியுள்ளது. மும்பையில் ஆரம்பமாகிய போட்டி எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நடைபெறும் போட்டியில் கடந்த 2 வருட தடைக்கு பின் பல ரசிகர்களை கொண்ட சென்னை அணி மீண்டும் களமிறங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னை அணிக்கு இந்தியாவில் மட்டுமல்லாது வேறு இடங்களிலும் ரசிகர்கள் உள்ளதால், தமிழில் மட்டும் பதிவிடாது, ஆங்கிலம் அல்லது ஹிந்தயிலும் பதிவிடுமாறு டுவிட்டரில் சென்னை அணி ரசிகர் ஒருவர் பதிவொன்றை இட்டுள்ளார்.

இதற்கு சென்னை அணி நிர்வாகம் ஆங்கிலம் சரி, ஆனால் ஹிந்தி கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும் என ஹிந்தியிலே பதிலடி கொடுத்துள்ளது.

யாழ். மாணவன் சாதனை : 32 வருட சாதனையும் முறியடிப்பு!!

கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்று வரும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் யாழ். மாணவன் சாதனை படைத்துள்ளார். யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரியை சேர்ந்த ஏ.பவித்ரன் என்ற மாணவன் கோலூன்றி பாய்தல் போட்டியில் 4.7 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனையை நிலைநாட்டினார்.

அத்துடன் நேற்று நடைபெற்ற போட்டியில் மேலும் பல மாணவ மாணவிகள் சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர். மேலும். 32 வருடங்களுக்கு முன் படைத்த சாதனையும் நேற்று முறியடிக்கப்பட்டுள்ளது.

இராஜகிரிய கேற்வே சர்வதேச பாடசாலையை சேர்ந்த சலின்டா யென்சனா இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். இவர் மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் 32 வருடங்களுக்குப் முன்னர் நிலைநாட்டப்பட்ட சாதனையை முறியடித்துள்ளார்.

இப்பாகமுவ மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த வீராங்கனை பி.பி.ஐ.என்.பல்லேகம 16 வயதுக்கு உட்பட்ட உயரம்பாய்தல் போட்டியில் சாதனை நிலைநாட்டியுள்ளார்.

ஜனாதிபதி பெண்கள் கல்லூரியை சேர்ந்த காவிந்தி சஞ்சனா எதிரிசிங்ஹ 16 வயதுக்கு உட்பட்ட 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் சாதனை நிலைநாட்டியுள்ளார்.

அக்குரம்பட வீரகெப்பெட்டிபொல கல்லூரியை சேர்ந்த அருண தர்ஷன 20 வயதுக்கு உட்பட்ட 200 மீற்றர் ஓட்டப் போட்டியிலும், சச்சின் நிலக்சா பெரேரா 23 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதேவேளை, போட்டிகளின் முதல் நாளன்று (23) நடைபெற்ற 23 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வடமாகாண மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துப்படுத்தி கலந்து கொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன் 3.55 மீற்றர் உயரத்தில் தாண்டி தேசிய சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை நெருங்கும் ஆபத்து : கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் கிராமம்!!

 

புத்தளம் பகுதியை அண்மித்த கிராமம் ஒன்று கடலுக்குள் முழுமையாக மூழ்கும் ஆபாயத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பு காரணமாக இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆராச்சிகட்டுவ – கருக்குப்பனை கிராமம் நாளுக்கு நாள் கடலுக்குள் மூழ்கி வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ஹெமில்டன் ஏரி மற்றும் கடலில் அருகில் உள்ள கருக்குப்பனை கிராமத்தில் வாழும் அனைவரும் மீனவ தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

கருக்குப்பனை கிராமத்தின் சில இடங்களில் கடல் அரிப்புக்குள்ளாக ஆரம்பித்துள்ளது. அதற்கு தீர்வாக கடலோர பாதுகாப்புத் திணைக்களம் பாரிய கருங்கற்களை கடற்கரையில் பயன்படுத்தியுள்ளனர்.

எனினும் கருங்கற்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களிலேயே கடல் அரிப்புகள் ஏற்படுகின்றமை பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

கருங்கற்கள் வைக்கபட்டுள்ள இடத்தில் பாதுகாப்பிற்காக ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் வெகு விரைவில் தமது கிராமம் கடல் நீருக்குள் மூழ்கும் என அந்தப் பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதுவரை சுமார் 10 – 15 அடி அளவு கடல் அரிப்புக்குள்ளாகியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பிரபல பாடசாலை மாணவனுக்கு ஏற்பட்ட நிலை!!

வலி நிவாரணி என்ற போர்வையில் 800 போதை மாத்திரைகளுடன் கைதாகிய ஓட்டமாவடியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வரும் மாணவன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரை மே மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.ரிஸ்வி நேற்று உத்தரவிட்டுள்ளார். மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதியையும், மற்றைய நபரையும் தேடி வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வலி நிவாரணி என்ற போர்வையில் மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்ய போதை மாத்திரைகளை முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லும் போது குறித்த மாணவன் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஓட்டமாவடியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞானபிரிவில் கல்வி பயிலும் மாணவனே கைது செய்யப்பட்டிருந்தார்.

இவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், இதனுடன் தொடர்புடைய எனைய சந்தேகநபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

வெளிநாடுகளில் சாதனைகளை குவிக்கும் ஈழத்தமிழர்கள் : சாதனை படைத்த தமிழச்சி!!

 

“போர் அவலம் நிறைந்ததொரு பின்னணியினை நாம் கொண்டிருக்கின்ற போது, அவ்வாறான நிலைமைகளில் வாழும் ஏனைய சமூகங்களுக்கு உதவக்கூடிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் நாம் இணைந்து செயற்பட வேண்டும்.”

இலங்கையில் இருந்து நோர்வே நாட்டிற்கு புகலிடம் கோரிச் சென்ற 23 வயதுடைய ஹம்சிகா பிரேம்குமார் என்ற யுவதியே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நோர்வேயில் நடைபெறும் “தமிழ்3 இன் தமிழர் விருது” அனைவராலும் அறியப்பட்ட விருது வழங்கும் வைபவமாக விளங்குகின்றது. அந்த வகையில் 2018 இற்கான “தமிழ்3 இன் தமிழர் மூவர் விருது” வழங்கும் வைபவம் ஒஸ்லோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதிலுமிருந்து பரிந்துரைகள் கோரப்பட்டு, சுயாதீனமான தெரிவுக்குழு அமைக்கப்பட்டு இந்த விருதுக்கான தெரிவு இடம்பெற்று வருகின்றது.

இம்முறை ஊடகவியலாளர் சரவணன் நடராசா தலைமையில் ஐவர் கொண்ட குழுவினர் இந்த ஆண்டுக்கான “இளைய ஆளுமையாளர்” மூவரைத் தெரிவு செய்துள்ளனர்.

இதில் ரீற்றா பரமலிங்கம், ஈழத்து பெண்ணான ஹம்சிகா பிரேம்குமார், திவ்யா கைலாசபிள்ளை மூவருக்கு “தமிழ்3 இன் தமிழர் விருது” வழங்கப்பட்டுள்ளது.

ரீற்றா பரமலிங்கம்..

பதின்ம வயதுச் சிறுமியொருவரின் சூழ்நிலைச் சிக்கல்களை எடுத்தியம்புகின்ற தனது முதலாவது நோர்வே மொழியலமைந்த நாவலைப் படைத்துள்ளார்.

“La meg bli med deg” – உன்னோடு வரவிடு, நோர்வே பத்திரிகைகளில் நல்ல விமர்சனத்தைப் பெற்றிருந்ததுடன், நோர்வேயில் அறியப்பட்ட ஆரம்ப எழுத்தாளர்களுக்கான பரிசுக்கும் இவர் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த ரீற்றா, “எமது கதைகளை நாங்கள்தான் கூறவேண்டும், இல்லாவிட்டால் மற்றையவர்கள் தான் எமது கதைகளைக் கூறுவார்கள்” என்றார்.

திவ்யா கைலாசபிள்ளை..

மாற்றுத்திறனாளியும் ஓவியருமாகிய திவ்யா கைலாசபிள்ளை வழமையிலும் விட இவ்வாண்டு மக்களின் கவனத்தினையும் கரவொலியினையும் பெற்றார்.

திவ்யா கைலாசபிள்ளையின் விடாமுயற்சியினை நடுவர்குழு முன்னிலைபடுத்தியிருந்தது.

இதன்போது கருத்து தெரிவித்த திவ்யா கைலாசபிள்ளை “தனக்கு ஊக்குவிப்புத் தருகின்ற பெற்றோருக்கும் நல்ல நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.”

ஈழத்து பெண்ணான ஹம்சிகா பிரேம்குமார்,

போர் அவலம் நிறைந்ததொரு பின்னணியினை நாம் கொண்டிருக்கின்ற போது, அவ்வாறான நிலைமகளில் வாழும் ஏனைய சமூகங்களிற்கும் உதவக்கூடியதான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் நாம் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

தமிழ் இளையோர் அமைப்பில் பணியாற்றிய அனுபவமுள்ள ஹம்சிகா மருத்துவ பீடத்தில் இரண்டாவது ஆண்டு மாணவியாக இருக்கின்றார். இவர் அபிவிருத்தி சார்ந்த மேற்படிப்பையும் தொடர்கின்றார்.

நோர்வே ஹோர்லான்டில் ஐ.நா மாணவர்களின் தலைவியாகவும் செயற்படுகின்றார்.

பெர்கன் செஞ்சிலுவை அமைப்பு, நோர்வே புற்றுநோய் சமுதாயம், மற்றும் SOS குழந்தைகளின் கிராமங்கள் போன்ற பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றார்.

பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக மட்டும் தமிழ் இளையோர்கள் தமது துறைகளைத் தெரிவுசெய்யக் கூடாது என்றார்.

தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்க உகந்த துறையினை அவர்களே தீர்மானிக்க வல்லவர்களாக வளர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹம்சிகா பிரேம்குமார் கடந்து வந்த பாதை…

இலங்கையில் இருந்து 2002ஆம் ஆண்டு ஒன்பது வயதில் நோர்வே நாட்டிற்கு புகலிடம் கோரிச் சென்ற யுவதியே ஹம்சிகா பிரேம்குமார். இலங்கையில் இடம்பெற்ற தனது தந்தையாரை இழந்த ஹம்சிகா தனது தாயாருடன் புலம்பெயர்ந்தவர்.

“இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தால் வாழ்வதற்கே பயமாக இருந்தது. மருத்துவமனையிலோ, பாடசாலைகளிலோ பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற அச்ச நிலை நிலவியது.

மேலும், ஒன்பது வயதை அடைந்த போது, குடும்பத்துடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைத்தேன்.” என ஈழத்தமிழச்சியான ஹம்சிகா அண்மையில் தமது கருத்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

6 வயதுச் சிறுவனுக்கு 40 வயது நபர் செய்த கொடுமை!!

ஆறு வயதான சிறுவனை கடுமையாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 40 வயதான நபரை தாம் கைது செய்துள்ளதாக புத்தளம், பள்ளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பள்ளம் -நாகவில்லு பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் திருமணமாகாத நபர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தினமும் சிறுவனை பாடசாலைக்கு அழைத்து சென்று அழைத்து வருபவர் எனவும் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் கடந்த 23 ஆம் திகதி மதியம் சிறுவனை பாடசாலையில் இருந்து அழைத்து வந்துள்ளார். அப்போது சிறுவனின் பெற்றோர் வீட்டில் இருக்கவில்லை.

இந்த நிலையிலேயே சந்தேக நபர் சிறுவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன், சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஆனமடுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகவும் பள்ளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் உயிரிழந்தது இலங்கைப் பெண்ணா? குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள அரசாங்கம்!!

கனடாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இந்த அனர்த்தம் காரணமாக எந்தவொரு இலங்கையர்களும் உயிரிழக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நேற்று முன்தினம் டொரான்டோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் எந்தவொரு இலங்கையரும் பாதிக்கப்படவில்லை.

பயங்கரவாத தாக்குதலில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்தி இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியிடப்படடுள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

டொரான்டோவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அந்நாட்டு பொலிஸ் மற்றும் தூதரக அதிகாரிகளும் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. எனினும் இதுவரை எந்தவொரு இலங்கையரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாக வில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு தொடர்ந்து விசாரணைகளில் ஈடுபடுவோம். உறுதி செய்யப்பட்ட தகவல்கள் கிடைத்தால் விரைவில் அறியத்தருவோம் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை இலங்கைப் பெண்ணான ரேனுகா விஜயசிங்க உயிரிழந்துள்ளார் என்பதை டொரான்டோ மஹா விஹார பௌத்த நிலையத்தின் பிரதான தேரர் அஹாங்கம ரத்னசிறி உறுதி செய்துள்ளார்.

அத்துடன் ரேனுகாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தங்கள் இரங்கல்களை முகப்புத்தகம் வாயிலாக வெளியிட்டுள்ளது.

உயிரிழந்தாக கூறப்படும் ரேனுகாவுக்கு கணவன் உயிரிழந்துள்ள நிலையில், 7 வயதில் ஒரு மகன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தாயை இழந்துள்ள மகனுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் அவர்களின் நண்பர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக gofundme எனும் இணையத்தளத்தின் ஊடாக நிதியுதவி கோரப்பட்டுள்ளது.

தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக தனியாக போராடும் ஆசிரியர்!!

 

மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளருக்கு எதிராக ஆசிரியர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். குறித்த போராட்டம் மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி பூங்காவில் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விபத்தினால் படுகாயமடைந்து நடப்பதற்கு முடியாத நிலையில் உள்ள தனக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறி க.கிருபாகரன் என்ற ஆசிரியர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். இது தொடர்பில் தெரியவருவதாவது,

கல்லடியை சேர்ந்த குறித்த ஆசிரியர், கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயத்தில் பத்து வருடமாக ஆசிரியராக கற்பித்தல் செயற்பாட்டினை மேற்கொண்டு வந்த நிலையில், 2015ஆம் ஆண்டு நடந்த விபத்தில் 10 மாதங்கள் நடக்கமுடியாத நிலையில் இருந்துள்ளார்.

அதன் பின்னர் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளரிடம் தனக்கு இடமாற்றம் வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் குறித்த ஆசிரியர் தெரிவித்தார்.

அதற்கு வலய கல்விப்பணிப்பாளர் நிரந்தர இடமாற்றம் வழங்கமுடியாது என தெரிவித்திருந்ததாகவும், தற்காலிகமாக இடமாற்றம் வழங்குவதாக தெரிவித்து கல்லடிக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கியதாகவும் தெரிவித்தார்.

இடமாற்றம் வழங்கப்பட்டு ஒரு வருடம் முடிந்த நிலையில் மீண்டும் தனக்கு இடமாற்றம் வழங்க வலயக் கல்விப் பணிப்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆளுநரிடம் சென்று தனது நிலமையினை தெரிவித்த போது அது தொடர்பில் ஆளுநர், கல்வி அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டுசென்றதாகவும், கல்வி அமைச்சின் செயலாளர் வலய கல்விப்பணிப்பாளிரின் கடிதம் ஒன்றை பெற்றுவருமாறு கூறியதாகவும் குறித்த ஆசிரியர் தெரிவித்தார்.

இதன்போது தனது கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் தனக்கான இடமாற்றத்தினை பெற்றுத்தரும் வரையில் உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்தப்போவதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரனிடம் கேட்டபோது,

கல்வி அமைச்சின் செயலாளர் 28.03.2018 அன்று தொடக்கம் எந்தவித இடமாற்றங்களையும் செய்யவேண்டாம் என அறிவுறுத்தியதன் காரணமாகவே அவருக்கு இடமாற்றம் வழங்கமுடியாமல் போனதாக தெரிவித்தார்.

அத்துடன் அவருக்கு இடமாற்றம் தேவையென்றால் அது தொடர்பாக எழுத்து மூலமாக தனக்கு அறிவிக்கப்படும்போது அது தொடர்பில் கல்வி அமைச்சின் அனுமதியை பெறமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

போலியான வகையில் குறித்த ஆசிரியர் இந்த போராட்டத்தினை மேற்கொண்டு வருவதாகவும் வலய கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்.

கனடாவில் பயங்கரவாத தாக்குதல் : இலங்கையைச் சேர்ந்த பெண் பலி!!

கனடாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் டொரண்டோவில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவரும் பலியாகி உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனார். இலங்கையை சேர்ந்த 48 வயதான ரேனுக அமரசிங்க என்ற பெண் உயிரிழந்துள்ளார். இவர் இலங்கையில் ஹொரண பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

மக்கள் மீது வேண்டும் என்றே வாகனத்தை செலுத்தி அனர்த்ததை ஏற்படுத்தியவர் அங்கிருந்து தப்பியோடி இருந்தார். எனினும் அவர் கனேடிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் ஹொரன பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் கடந்த இரண்டு வருடங்களாக டொரொன்டாவில் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.

அந்த சம்பவத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதனை டொரொன்டோ மாஹாவிஹார பௌத்த நிலையத்தின் பிரதான தேரர் அஹாங்கம ரத்னசிறி உறுதி செய்துள்ளார்.

இலங்கை பெண்ணுடன் ஜோர்தான் நட்டவர் ஒருவரும், தென்கொரிய நாட்டை சேர்ந்த இருவரும் கனடாவை சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் காயமடைந்தவர்கள் அனைவரும் தீவிரமான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.