வவுனியா நகரசபையின் கன்னி அமர்வு நகரசபை தவிசாளர் கௌதமன் தலைமையில் ஆரம்பம்!!

 

வவுனியா நகரசபையின் முதலாவது அமர்வு இன்று (25.04.2018) காலை 11.30 மணியளவில் நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

இக் கன்னியமர்வில் வவுனியா நகரசபைக்கு தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் இ.கெளதமன், உபதவிசாளர் உள்ளிட்ட 21 உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

முதல் அமர்வில் உப தவிசாளர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் நகரசபையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் வவுனியாவை எவ்வாறு முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வது , சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு என பல்வேறு விடயங்கள் தொடர்பாக உரையாற்றினார். இச் சபை சிங்கள மொழி மூல மொழிப்பெயர்ப்பில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரினை அழகிய நகரமாக மாற்றி மக்களிடம் கையளித்துவிட்டு செல்ல வேண்டும்!!

 

வவுனியா நகரசபையின் முதலாவது அமர்வு நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று (25.04.2018) காலை 11.30 மணியளவில் இடம்பெற்றபோது நகரசபை உறுப்பினர் லக்ஸ்சனா நாகராஜன் தனது உரையில் வவுனியா நகரினை அழகிய நகரமாக மாற்றி மாநகரசபையாக நாம் மக்களிடம் கையளித்துவிட்டு செல்ல வேண்டும் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இச்சபைக்கு ஆகக் கூடுதலான வாக்குகள் மூலம் ஆகக் கூடிய உறுப்பினர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக தெரிவு செய்த மக்களுக்கு முதலில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் எமது கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு விகிதாசார ஆசனத்தை என் மீது முழுமையான நம்பிக்கை வைத்து என்னை நியமித்த கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன்று இச்சபையிலே தனிப்பெரும் கட்சியாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு விளங்குகின்றது. இந்த சபைக்கு தலைமை தாங்கும் பொறுப்பை, உரிமையை மக்கள் கூட்டமைப்புக்கே வழங்கியிருந்தனர். பெரும்பான்மை நகர மக்களின் தீர்ப்பு இன்று சவால்களுக்கு உட்படுத்தப்பட்டு ஜனநாயகத்தை மதிப்பவர்களுக்கும், நேசிப்பவர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கின்றது.

எல்லை மீறிய கட்சி நலன்களும் பழிவாங்கல்களும் மக்களின் உணர்வுகளை உதாசீனம் செய்து வரலாற்றுக்களைகளை இச்சபைக்கு விட்டுச் சென்றிருக்கின்றமை வேதனைக்குரியவையே.

மக்கள் தீர்ப்புக்கு அப்பால் இச் சபையின் தலைமைக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்துக்கு மதிப்பளிப்பதும் செவிசாய்ப்பதும் ஜனநாயகத்தை மதிக்கின்ற எங்கள் ஒவ்வொருவரினதும் கடமையென்பதை நாம் மறந்துவிட முடியாது.

மக்கள் பிரதிநிதிகளால் மக்களுக்காக மக்களின் அபிலாசைகளையும், தேவைகளையும் நன்கறிந்து இனங்கண்டு இந்த நகரினை அழகுபடுத்தவும், தூய்மைப்படுத்தவும் நாம் ஒன்றினைவோம் என அனைவரையும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

இன, மத, கட்சி, சமூக வேறுபாடின்றி, வட்டார பாகுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். நகரசபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்களுடன் நாம் நல்லுறவை பேணிக்கொள்ள வேண்டும்.

எங்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது அவர்களின் கரங்களிலேயே இருக்கின்றது. குறிப்பாக சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் என சுகாதாரதுறை சார்ந்தவர்களுடன் கடந்த காலங்களில் இச் சபையானது சீரான உறவை பேணவில்லை என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டிருந்ததை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

கலாச்சாரம், பண்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மதங்களின், இனங்களின் கலாச்சாரம் சீரழிக்காமல் மூவினத்தவரின் முத்தான நகராக பேண ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

குறிப்பாக போதைப்பொருட் பாவனை, விற்பனை முற்றாக தடைசெய்யப்பட்ட நகராக மாற்றியமைக்கப்பட வேண்டும். நவீன வசதிகளுடனான பெண்களுக்கான விசேட தனியான மலசலகூட வசதிகள் நகரில் ஏற்படுத்திக் கொடுக்கப்படல் வேண்டும்.

எதிர்வரும் நான்காண்டு காலப்பகுதியில் எமது செயற்பாடும், நகரின் மாற்றமும் மாநகரசபையாக நாம் மக்களிடம் கையளித்துவிட்டு செல்ல வழிசமைக்க வேண்டும்.

இறுதியாக தலைவரினாலும், சபையினாலும் முன்னெடுத்துச் செல்லப்படும் திட்டங்கள், அபிவிருத்திப்பணிகள் மக்கள் நலனை மையமாகக் கொண்ட திட்டங்களாயின் எங்கள் ஒவ்வொருவரினதும் ஆதரவும் நிச்சயம் இருக்கும்.

அரசியல் நலன்களுக்காக, கட்சி நலன்களுக்காக, தனிப்பட்டவர்களின் சுய தேவைக்கான திட்டங்களெனில் முற்றாக எதிர்த்து நிற்க தயங்க மாட்டோம் என்பதனை சொல்லிவைக்க விரும்புகின்றோம் என மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற நகராட்சிமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு!!

 

2018ம் ஆம் ஆண்டு வவுனியா நகரசபைக்கு தெரிவு செய்யப்பட்ட புதிய மக்கள் பிரதிநிதிகளை வரவேற்கும் நிகழ்வு நகரசபை நகரமண்டபத்தில் இன்று (25.04.2018) காலை 9.15 மணியளவில் வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நகரசபை உறுப்பினர்கள் மாலை அணிவித்து மங்கள வாத்தியங்களுடன் வரவேற்க்கப்பட்டனர். இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி மகிந்த,

வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வர்த்தக சங்க பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், நகரசபை ஊழியர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், நகராட்சிமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

விமானத்தில் கொடுத்த அப்பிளை சாப்பிடாமல் வைத்திருந்த பயணிக்கு 30000 அபதாரம்!!

பெண் பயணி ஒருவர் விமானத்தில் கொடுத்த அப்பிளை சாப்பிடாமல் பையில் வைத்திருந்ததால், அதிகாரிகள் அவருக்கு 30,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். Crystal Tadlock என்ற பெண் பிரான்சின் பாரிசிலிருந்து அமெரிக்காவிற்கு Delta Air Lines விமானநிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் சென்றுள்ளார்.

விமானம் அமெரிக்காவின் Minneapolis பகுதியில் தரையிரக்கப்பட்ட பின் கஸ்டம்ஸ் அதிகாரிகள் அவரை சோதனை செய்துள்ளனர். அப்போது அவரது கைப்பையில் அப்பிள் ஒன்று இருந்துள்ளது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் விமானத்தில் கொடுத்த அப்பிளை எடுத்து வந்ததற்காக 33000 அபராதம் செலுத்தும்படி கூறியுள்ளனர்.

இதைக் கேட்டவுடன் அதிர்ச்சியடைந்த அவர், இது தனக்கு சாப்பிட கொடுத்ததாகவும் மெதுவாக சாப்பிட்டுக் கொள்ளலாம் எனபதன் காரணமாகவே பையில் வைத்திருந்ததாக அதிகாரிகளிடம் கெஞ்சியுள்ளார்.

அதுமட்டுமின்றி நான் இதனை இப்பாதே சாப்பிட்டு விடுகிறேன் இல்லையென்றால் தூக்கி எறிந்து விடுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் அதிகாரிகள் அபராதத்தை செலுத்த வேண்டும் என்று உறுதியாக கூறியதால், வேறு வழியின்றி அவர் அபராதம் கட்டிய பின் அங்கிருந்து சென்றுள்ளார்.
இது தொடர்பாக வழக்கு தொடர உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனமோ, அமெரிக்க கஸ்டம்ஸ் மற்றும் எல்லை பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றும்படி எங்களது வாடிக்கையாளர்களிடம் தெரிவித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

டொலருக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியை கண்ட ரூபாவின் பெறுமதி!!

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்க டொலருக்குகான இலங்கை ரூபாயின் விற்பனை பெறுமதி அதிக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி, நேற்றைய தினம் அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி 158 ரூபா 69 சதமாக பதிவாகியுள்ளது. ஏற்றுமதியில் வளர்ச்சியின்றி இறக்குமதியில் தங்கியிருப்பதே ரூபாவின் வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

2010ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 114 ரூபாவாக காணப்பட்டது. எனினும், இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 158 ரூபா 69 சதமாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, நாட்டின் பணவீக்க வீதத்தினை 4 முதல் 5 வீதமாக பேணுகின்ற போது நாணய பெறுமதி இறக்கத்தினை 2 முதல் 3 வீதமாக பேண முடியும் என மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழரான சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனம் கொடுத்த வெகுமதி!!

அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயற்பட்டு வரும் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றும் சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பங்குளின் இந்திய பெறுமதி 2,508 கோடி ரூபாவாகும்.

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கடமையாற்றி வரும் சுந்தர் பிச்சை ஒரு தமிழர் ஆவார். இவர் தலைமை செயல் அதிகாரியாக பதவி உயர்வு பெறுவதற்கு முன்னர் இவருக்கு 2014ம் ஆண்டு ஏராளமான பங்குகளை கூகுள் நிறுவனம் வழங்கியது.

கூகுள் நிறுவன விதிமுறைப்படி அதன் அதிகாரிக்கு வழங்கப்படும் பங்குகளை 3 ஆண்டுகளுக்கு விற்பனை செய்ய முடியாது. சுந்தர் பிச்சைக்கு பங்குகள் வழங்கப்பட்டு நாளை 25ம் திகதியுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகின்றது. அந்த பங்குகள் மீதான முழு உரிமையும் சுந்தர் பிச்சை பெற்றுக்கொள்வதனால் இனி அவர் அந்த பங்குகளை விற்க முடியும்.

2014ம் ஆண்டு வழங்கப்பட்ட பங்குகளின் தற்போதைய இந்திய பெறுமதி 2,508 கோடி ரூபா ஆகும். சமீப காலங்களில் ஒரு பொதுத்துறை நிறுவனம் தனது ஊழியருக்கு வழங்கும் அதிகபட்ச தொகையாக இது கருதப்படுகின்றது.

2015 மற்றும் 2016ம் ஆண்டிலும் சுந்தர் பிச்சைக்கு பல பங்குகளை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது. 2017ம் ஆண்டிற்கான பங்கு மதிப்புகளை கூகுள் நிறுவனம் இதுவரை குறிப்பிடவில்லை.

முல்லைத்தீவில் 15 வயதுடைய சிறுவனை காணவில்லை : பொலிஸில் முறைப்பாடு!!

முல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவரை காணவில்லை என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சிறுவனின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த சிறுவன் கடந்த 22ஆம் திகதி உடையார்கட்டு பகுதியில் உள்ள கணனி கற்கை நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள சிறிய தந்தையின் வீட்டில் உணவருந்தி விட்டு 2 மணியவில் தனது வீட்டிற்கு செல்வதாக தெரிவித்து, புறப்பட்டுள்ளார்.

ஆனால் சிறிய தந்தையின் வீட்டில் இருந்து புறப்பட்ட சிறுவன் சுதந்திரபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வரவில்லை என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

சுதந்திரபுரம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சத்தியசீலன் கிருஜன் என்பவரே காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்க எளிமையான யோசனைகள்!!

புன்னகைதான் அனைத்து அணிகலன்களை விடவும் அழகானது, ஆனாலும் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளால் இந்த தன்னம்பிக்கை புன்னகையை சிலர் இழந்திருக்கக் கூடும். அவர்களுக்காகவே வெகு எளிமையான வழிகளில் பற்களில் உள்ள மஞ்சள் கறையை போக்குவது பற்றி பார்க்கலாம்.

அடிக்கடி கோப்பி மற்றும் தேநீர் அருந்துவது மற்றும் சில பாரம்பரிய காரணங்களால் பற்களில் மஞ்சள் கறை படிக்கிறது. இதனை பல் மருத்துவரிடம் சென்று சரி செய்து கொள்ளலாம் என்ற போதிலும் இயற்கை வழிமுறைகள் இருக்கையில், செலவு செய்து செயற்கை முறையில் இதனை செய்ய வேண்டியதில்லை.

கறை போக்கும் குறிப்புகள் : எலுமிச்சை சாறு மற்றும் உப்பு இரண்டையும் கலந்து விரல்களால் பற்களை தேய்த்து பின் குளிர்ந்த நீரில் கொப்பளித்து வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் மாறிவிடும்.

சாம்பல் கொண்டு பல் துலக்குவதால் பற்களின் நிறம் வெண்மையாகும். இதில் உப்பு சேர்க்க கூடாது.
இரவு நேரத்தில் ஆரஞ்சு பழத் தோலைக் கொண்டு பற்கள் தேய்த்து வந்தால் பற்களின் மஞ்சள் நிறம் மாறி வெண்மையாகும்.

நமது பற்பசையில் ரெண்டு சிட்டிகை உப்பு ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா மற்றும் சில சொட்டுக்கள் எலுமிச்சை சாறு கலந்து வழக்கம்போல் பிரஷ் உபயோகித்து பல் தேய்த்து வர மஞ்சள் கறை காணாமல் போய்விடும்.

1/2 பேக்கிங் சோடாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து பேபி டூத் பிரஷால் பல் விளக்கி வர பலன் கண்கூடாக தெரியும். வாரம் ஒருமுறை செய்தால் போதுமானது.

கரிப்பொடியோடு சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து பசையாக்கி அதனைக் கொண்டு பல் துலக்கி வர பற்கள் வெண்மையாகும்.

2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா , அரை மூடி எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் வினிகர், ஒரு டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கலந்து பற்களின் மேல் தடவி ஒரு சில்வர் பாயில் கவர் கொண்டு மூடவும். பத்து நிமிடம் கழித்து பற்களை விரல்களால் துலக்கவும். பற்கறை மற்றும் மஞ்சள் கறைகள் இதன்மூலம் இல்லாமல் போய்விடும் என்பதில் சந்தேகமில்லை

விசா நடைமுறையில் மாற்றம் : இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப்!!

H1B விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவி வேலை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு தீர்மானித்துள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் இந்த முடிவால் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்காணவர்கள் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

H1B விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு சிறப்பு சலுகையாக H4 என்ற விசா வழங்கப்படுகின்றது. இதன் மூலம் அவர்களும் அமெரிக்காவில் பணியாற்ற முடியும்.

முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தலைமையிலான அரசாங்கத்தினால் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தினால் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பலரும் பயனடைந்து வந்தனர்.

இந்நிலையில், அமெரிக்க நாட்டவர்களுக்கு முன்னுரிமை என்ற ரீதியில் செயற்பட்டு வரும் ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம் H1B விசா நடைமுறையில் மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில், H4 விசா வைத்திருப்பவர்கள் பணி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்தின் முதல் காதலி : ஷாலினியின் பகையாளி யார் தெரியுமா?

கோலிவுட் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் அஜித்-ஷாலினி தம்பதியினர் தங்களது 17 வது திருமணநாளை கொண்டாடுகின்றனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பெண்களின் மீது அதிக மரியாதை வைத்திருக்கும் அஜித், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் செய்யும் வேலைகள் மீது நாம் காட்ட வேண்டிய அக்கறை குறித்து அவ்வப்போது பகிர்ந்துகொள்வார்.

இந்த அன்புதான் அஜித்தை ஷாலினி காதலிக்க அச்சாணியாக இருந்துள்ளது. அஜித்தின் முதல் காதலி பைக். இரண்டாவது காதலி ஷாலினி. இதனை அவரே பலமுறை கூறியிருக்கிறார். திருமணத்திற்கு முன்னர் அதிகமாக புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர் அஜித், ஆனால் அந்த புகை தனக்கு பகையாக இருக்கிறது என ஷாலினி கூறியதையடுத்து அதனை கைவிட்டார் இன்றுவரை அதனை தொடவில்லை.

அமர்க்களம் திரைப்படத்தின் போது ஒன்றாக நடித்த இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. அத்திரைப்படத்தின் ஒரு காட்சியில், ஷாலியின் கையில் அஜித் கத்தியால் கிழித்துள்ளார். தன்னால் இப்படி ஷாலினுக்கு நடந்துவிட்டதே என்று அஜித் பரபரப்பாக இருக்க, எவ்வித அலட்டலும் இல்லாமல், பரவாயில்லை என்று கூறி நிதானமாக இருந்துள்ளார் ஷாலினி.

ஷாலினியின் அந்த நிதானம் அஜித்திற்கு பிடித்துவிட, அப்போதே அவரது இதயத்திற்குள் ஷாலினி குடிகொள்ள ஆரம்பித்துள்ளார். இந்த திரைப்படத்தின் போதே இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர்.

இதுவரை சந்தித்த பெண்களிடம் காண முடியாத தீர்க்கம் ஷாலினின் கண்ணுக்குள்ளும், செயலுக்குள்ளும் ஒளிந்திருப்பதை உணர்ந்த அஜித், எனக்கான தேடல் இவள்தான் என்பதை அறிந்து, நேராக ஷாலினியிடம் சென்று உன்னை கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதே ஆசை, ஷாலினியின் மனதுக்குள்ளும் இருந்ததால், காதலுக்கு பச்சைகொடி காட்டியதால் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.ஷாலினி கிறிஸ்துவர், அஜித் பிராமின், இது அவர்களது காதலுக்கும், வாழ்வியலுக்கும் ஓர் தடையாக இருந்திடவில்லை.

காரணம் யாரும், மற்றொருவருக்காக மதம் மாறவில்லை. மதம் என்பது உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் வளர்வதற்காக தானே தவிர, காதலுக்கு தடையாய் அமைவதற்கு அல்ல.கணவன்- மனைவி ஆகிய இருவரும், ஒருவருக்கொருவர் மரியாதை அளித்து, தங்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்துகொண்டாலே இல்லறம் இனிக்கும் என்கிறார் அஜித்

படப்பிடிப்பின்போது வெளியூர்களுக்கு சென்றால் தனது மனைவியை தொலைபேசியில் தொடர்புகொண்டு எப்போதும் i Love You என சொல்லிக்கொண்டே இருப்பார். தனது வாழ்க்கையின் தடைகளை உடைத்து தான் இந்த அளவுக்கு உயர்ந்து நிற்பதற்கு ஷாலினிதான் பக்கம்பலமாக இருந்துள்ளார் என பெருமையாக கூறியுள்ளார் ’தல அஜித்’.

பாடசாலை வளாகத்தில் கொடூரமான நிலையில் 6 வயது சிறுமி : உயிருக்குப் போராடும் அவலம்!!

பள்ளி வளாகத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஆடைகளின்றி பலத்த காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தில் ஜகன்னாத்பூர் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 6 வயது சிறுமி ஒருவர் தின்பண்டம் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

ஒரு மணி நேரம் ஆகியும் கடைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாததால் அச்சமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை அந்த பகுதி முழுவதும் தேடி அலைந்துள்ளனர்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுமியை ஏமாற்றி பள்ளி வளாகத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அந்த நபர், சிறுமியை தாக்கி கொல்ல முயன்றுள்ளார். சிறுமி சுயநினைவிழந்த நிலையில் இறந்துவிட்டதாக நினைத்து அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்..

இந்நிலையில், அவரது குடும்பத்தினர் பல இடங்களில் சிறுமிய தேடியும் கிடைக்காததால், கடைசியாக பள்ளி வளாகத்திற்குள் ஆடைகளின்றி, பலத்த காயங்களுடன் சுயநினைவில்லாமல் சிறுமி கிடப்பதை அவதானித்துள்ளனர்.

தலை, முகத்தில் காயங்களோடு சிறுமி கிடந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளதாகவும், தலை, முகம், கழுத்தில் காயங்கள் அதிகமாக உள்ளதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக அந்த ஊரை சேர்ந்த நபரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல தொலைக்காட்சி நடிகை தீக்குளித்து தற்கொலை!!

கேரளாவில் தொலைக்காட்சி நடிகை ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் கவிதா(35), மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவருக்கு திருமணமாகி, 4 வயதில் மகள் உள்ளார்.

தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்துள்ளார் கவிதா. மலப்புரம் மாவட்டம் நீலாம்பூரில் வசித்து வந்த கவிதா, பள்ளி விடுமுறை என்பதால் தனது மகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த கவிதா கடந்த ஞாயிறன்று, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பெங்களூரில் அழகு நிலையம் துவங்க வேண்டும் என்று நினைத்த கவிதா, அதற்காக பணம் சேர்த்து வந்துள்ளார், போதிய பணம் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கவிதாவின் உடலைக் கைப்பற்றிய பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்கும் : எச்சரிக்கும் ஈரான் ஜனாதிபதி!!

அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருங்கள், இல்லையேல் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் ஜனாதிபதியான ஹசன் ரூஹானி சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளிக்கையில், கடந்த 2015-ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான பராக் ஒபாமா ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அதில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் நாங்கள் தெரிவித்திருந்தோம். இதன் காரணமாக எங்கள் நாட்டின் மீது இருந்த பொருளாதார தடைகள் நீக்கப்பட்டன.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்று கூறி வருகிறார்.

ஈரான் அணு ஆயுத சோதனைகள் மேற்கொள்வதைத் தடுப்பதற்காக ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளையும் டிரம்ப் விதித்துள்ளதை குறிப்பிட்டுள்ள அவர், அமெரிக்கா அதன் அணுஆயுத ஒப்பந்ததங்களில் உறுதியாக இல்லாவிட்டால் அந்நாடு கடுமையான விளைவுகளை சந்திக்கும் என ஹசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இளைஞரை நிர்வாணமாக்கி பொலிஸ் அதிகாரிகள் செய்த செயல் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். பி.டெக் பட்டதாரியான இவருக்கு சொந்தமாக இரு டிராக்டர்கள் உள்ளது. இவர் அந்த இரு டிராக்டர்கள் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் சென்று பிழைப்பு நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு காலை கரும்பு ஏற்ற காத்திருந்த மணிகண்டனை, சிவகங்கை காவல் நிலைய உதவி ஆய்வாளர் வடிவேல் முருகன், எந்த தகவலும் கூறாமல் காவல்நிலையத்திர்கு அழைத்துச் சென்றுள்ளார்.

காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை நிர்வாணமாக்கி, பொலிசார் தாக்கி துன்புறுத்தியுள்ளனர். ஐந்து நாட்கள் மணிகண்டனை சட்டவிரோதமாக சிறை வைத்து அடித்து துன்புறுத்திவிட்டு, அதன் பின் லாரி திருடிய குற்றத்திற்காக கைது செய்ததாகவும், பின் உண்மையான திருடனைக் கண்டுபிடித்து விட்டதாகவும் கூறி பொலிசார் விடுவித்துள்ளனர்.

இதனால் மணிகண்டன் தனக்கு நீதி வேண்டும் என்று கூறி தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரை விசாரித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட மணிகண்டனை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், சட்டவிரோதமாக சிறை பிடித்து, சித்ரவதை செய்த ஆய்வாளர் நந்தகுமார், உதவி ஆய்வாளர் வடிவேல் முருகன் ஆகியோருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்தத் தொகையை, பாதிக்கப்பட்ட மணிகண்டனுக்கு இழப்பீடாக வழங்கவும், மனிதத் தன்மையில்லாமல் சட்டவிரோதமாக நடந்துகொண்ட இரண்டு காவல் துறை அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி பரிந்துரைத்து உத்தரவிட்டார்.

இன்று தொடக்கம் மீண்டும் மழை ஆரம்பம் : வானிலை அவதானநிலையம் எச்சரிக்கை!!

இன்று புதன்கிழமை தொடக்கம் நாட்டில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கும் என்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக தினந்தோறும் கடுமையாக பெய்து வந்த மழை தற்போதைக்கு ஓரிரு நாட்களாக தணிந்துள்ளது.

இந்நிலையில் இன்று 25ம் திகதி புதன்கிழமை தொடக்கம் நாட்டின் பல பிரதேசங்களில் மீண்டும் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

மேல் மாகாணம், மத்திய மாகாணம், சப்பிரகமுவா, ஊவா, தென் மாகாணம், வடமேல் மாகாணம், வடமத்திய மாகாணம் மற்றும் வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இவ்வாறு கடுமையான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அதே நேரம் பிற்பகலில் பெரும்பாலும் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதால் அவ்வாறான நேரங்களில் செல்லிடப் ​பேசிகளை உபயோகித்தல், திறந்த வௌிகள் ஊடாக பயணித்தல் போன்ற செயற்பாடுகளை தவிர்ந்து கொள்ளுமாறு பொதுமக்கள் வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மாமியாரை கொலை செய்து தானும் தற்கொலை செய்த மருமகன்!!

மாமியாரைக் கொலை செய்துவிட்டு மருகன் தற்கொலை செய்துள்ள சம்பவமொன்று காலி- எல்பிட்டிய பிரசேத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் 2.10 மணியளவில் எல்பிட்டிய, பிட்டுவல வீதியின் விஜய மாவத்தையில் உள்ள வீடொன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

85 வயதுடைய லியனகே லீலாவதி என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 45 வயதுடைய ஜகன் கீர்த்தி அபேசேகர என்ற நபரே கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார்.

குடும்பப் பிரச்சினையால் மருமகன் அவரைக் காலால் உதைத்த காரணத்தினாலேயே குறித்த பெண் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மாமியாரைக் கொலை செய்த பிறகு சந்தேகநபரான எனு வீட்டில் உள்ள அறையொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் அவசர இலக்கமான 119 இற்கு கிடைத்த தகவலை தொடர்ந்து பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தியதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.