மஸ்கெலியா – நோட்டன் பிரதான வீதியில் சிவனொளிபாத மலைக்கு யாத்திரிகள் சென்ற பஸ்ஸின் சில்லில் சிக்குண்ட ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நோட்டன் பிரிட்ஜ் டெப்லோ பகுதியிலே நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காலியிலிருந்து சிவனொளிபதமலை சென்ற யாத்திரிகள் பஸ்ஸில் டெப்லோ பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஏற முற்பட்டுள்ளார். இதன்போது தவறி வீழ்ந்து பஸ்ஸின் சில்லில் சிக்குண்டு படுகாயமடைந்துள்ளதாகவும் இவர் தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் மது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பஸ்ஸின் சாரதியை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தமிழகத்தில் கடன் தொகையை தராததால், வயதான தம்பதியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொட்டிவாக்கம், ராமலிங்கபுரத்தை சேர்ந்த தம்பதி மாயாண்டி, வள்ளிநாயகி. இவர்களது மகன்கள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால், இவர்கள் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு இவர்கள் இருவரும் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த துரைப்பாக்கம் பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து தம்பதியரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கமிராவை பொலிசார் ஆய்வு செய்த போது, சந்தேகத்திற்கிடமாக நபர் ஒருவர் அப்பகுதியில் சென்றது தெரியவந்தது.
அதன் பின்னர், அந்நபரைப் பிடித்து பொலிசார் விசாரித்ததில், வயதான தம்பதியை தாம் தான் கொலை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டார். மேலும், பொலிசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறுகையில்,
ஆலன் எனும் வடமாநிலத்தைச் சேர்ந்த அவர், மாயாண்டி வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணியை செய்துள்ளார். அதற்கு முன்பணமாக மாயாண்டி சிறு தொகையை ஆலனுக்கு கொடுத்துள்ளார். பணி நிறைவடைந்ததும் பாக்கி தொகையை தருவதாக மாயாண்டி தெரிவித்துள்ளார்.
ஆனால், அவர் கூறியபடி பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆலன், நேற்று இரவு மாயாண்டி வீட்டிற்கு சென்று பணத்தைக் கேட்டுள்ளார்.
பணம் கிடைக்காததால் ஆத்திரமடைந்த அவர், மாயாண்டி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் அடித்துக் கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த 13 சவரன் நகையை எடுத்துச் சென்றுவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மாத்திரை விளம்பரத்தை நிறுத்த வேண்டும் என தொகுப்பாளினி திவ்யா, ஆணையரிடம் மனு கொடுத்துள்ளார்.
தொகுப்பாளினி திவ்யா, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சமையல் மந்திரம் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தபோது, மாத்திரை விளம்பரத்தில் நடித்துள்ளார். விளம்பரத்தை, 3 மாதம் மட்டுமே ஒளிபரப்பப்படும் என கூறி விட்டு, 2 ஆண்டுகளாக நிறுவனம் ஒளிபரப்புகிறார்கள், எனவே அதனை நிறுத்த வேண்டும் என திவ்யா காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும் விளம்பரத்தை தடை செய்யக்கோரி, உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், அதன்படி, நீதிமன்றமும் விளம்பரத்தை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்ததாக திவ்யா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இளம்பெண் இறப்புக்குக் காரணமான கணவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்கமாட்டோம் எனக் கோரி உறவினர்கள் பொலிசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
கேரளாவை சேர்ந்தவர் வனிதா (28). இவருக்கும் ஈரோட்டை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த 2010ல் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. சரவணனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட, அப்போதிலிருந்தே வனிதாவை கொடுமைப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்.
இந்நிலையில், ஏப்ரல் 16ம் திகதி உடல்நிலை சரியில்லாமல் வனிதா இறந்துபோனதாக அவர்களுடைய சொந்தக்காரர்களுக்கு சரவணன் தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து வந்த வனிதாவின் உறவினர்கள், அவர் இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறியதோடு, சரவணனை கைதுசெய்து விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர்.
உறவினர்கள் கூறுகையில், உணவு ஒவ்வாமை காரணமாக வனிதா இறந்ததாகச் சொல்கிறார்கள். அவள் உயிருக்குப் போராடிய நிலையில், ஆம்புலன்ஸுக்குப் போன் செய்யாமல் ஆட்டோவிலேயே அலட்சியமாக மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே வனிதாவின் உயிர் பிரிந்திருக்கிறது.
எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் என்னுடைய கணவனை விட்டு வர மாட்டேன் என்று சொன்னவளை, திட்டமிட்டே கொன்றிருக்கிறார்கள் என குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியதற்காக ஆளுநர் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். நிர்மலா தேவி விவகாரம் தொடர்பில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஆளுநர், பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆளுநரின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன, உடனடியாக மன்னிப்பு கோர வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் தெரிவித்திருந்தனர்.
பாதிக்கப்பட்ட அப்பெண்ணும் டுவிட்டர் பக்கத்தில், என்னுடைய அனுமதி இல்லாமல் ஆளுநர் என் கன்னத்தை தட்டியது கோபத்தை ஏற்படுத்தியதாகவும், பலமுறை தன் கன்னத்தை கழுவியதாகவும் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று பெண் பத்திரிக்கையாளரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் ஆளுநர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னுடைய பேத்தி என நினைத்து கன்னத்தில் தட்டினேன்,
அவர் கேட்ட கேள்வி நல்ல கேள்வியாக இருந்ததால் பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன். 40 ஆண்டுகளாக நானும் பத்திரிக்கையாளன் தான், அவரது மனது புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். சினிமா வாய்ப்பு தருவதாக ஏமாற்றி பிரபலங்கள் பலர் தன்னிடம் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாகவும் அவர்கள் பெயர்களை ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் தொடர்ந்து வெளியிடுவேன் என்றும் அறிவித்துள்ளார்.
சில நடிகர்களும் தயாரிப்பாளர்களும் ஐதராபாத்தில் உள்ள ஸ்டுடியோக்களை சிவப்பு விளக்கு பகுதியாக பயன்படுத்தி அங்கு பெண்களிடம் பாலியல்
உறவு வைத்துக்கொள்வதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். தற்போது பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் வெங்கட அப்பாராவ் மீதும் ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறியுள்ளார்.
“தயாரிப்பாளர் வெங்கட அப்பா ராவ் 100 பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி இருக்கிறார். அவர்களில் 16 வயது சிறுமிகளும் உண்டு” என்று சமூக வலைத்தளத்தில் புதிய புகாரை வெளியிட்டு இருக்கிறார்.
ஸ்ரீரெட்டி சொல்வது உண்மைதான். எங்களுக்கும் அப்பாராவ் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பல பெண்கள் ஐதராபாத்தில் உள்ள தொலைக்காட்சி சனலுக்கு போன் செய்து புகார் கூறினார்கள். ஸ்ரீரெட்டி கூறியதில் உண்மையில்லை என்று தயாரிப்பாளர் வெங்கட அப்பாராவ் மறுத்துள்ளார்.
நடிகர் வடிவேலு இம்சை அரசன் படத்தில் நடிக்க மறுத்ததற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்படலாம் என்றும் தயாரிப்பாளர்கள் சங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்சை அரசன் 24ம் புலிகேசி-2 படத்தில் நடிக்க நடிகர் வடிவேலு மறுத்ததால், அந்த படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் சங்கம் சார்பில் வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு 2 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இம்சை அரசன் படத்தில் நடித்துக்கொடுக்கும்படி நடிகர் சங்க பிரதிநிதிகள் அவரிடம் வற்புறுத்தி வந்தனர். ஆனாலும், வடிவேல் அதை ஏற்கவில்லை. திட்டமிட்டபடி படப்பிடிப்பை தொடங்காததால் தனக்கு பொருளாதார இழப்பும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது என்றும், தற்போது வேறு படங்களுக்கு திகதி ஒதுக்கி நடித்து வருவதால், இம்சை அரசன் 24ம் புலிகேசி-2 படத்தில் நடிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தி நடிகர் சங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதைத்தொடர்ந்து வடிவேலு மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. படங்களில் நடிப்பதற்கு அவருக்கு தடை விதிக்கப்படலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தடை விதித்தால் அதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்வது குறித்து சட்டத்தரணிகளுடன் வடிவேல் ஆலோசிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியா – தமிழ்நாடு, தஞ்சையில் கணவன் வரதட்சணை கேட்டு கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மானம்புசாவடி பகுதியை சேர்ந்தவர் 30 வயதான சுந்தரத்தின் மனைவி காயத்திரி கர்ப்பமாக இருந்த போது சுந்தரம் காயத்ரி வீட்டாரிடம் இருசக்கர வாகனம் வாங்கித் தரக் கோரியும், புதிதாக வீடு கட்ட பணம் வாங்கி வரும்படியும் காயத்ரியிடம் கேட்டு கொடுமை படுத்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு சுந்தரத்துக்கும் – காயத்திரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுந்தரம் காயத்ரியை தாக்கியுள்ளார். படுகாயமடைந்த காயத்ரி தஞ்சை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சுந்தரத்தை கைது செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெலிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மிரிஸ்ஸ பகுதியில் வெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திவிட்டு அங்கிருந்த ஒல்லாந்து பிரஜை ஒருவரை தாக்கியதாக கூறப்படும் ‘பீச் போய்ஸ்’ ஆறு பேரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தை நேரில் கண்ட ஒருவரின் சாட்சியத்தின் படி இந்த ஆறு பேரையும் கைது செய்த பொலிஸார் அவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதனிடையே வெலிகம – மிதிகம கடலில் கடல் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த நான்கு இஸ்ரேல் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை கைது செய்ய தேடி வருவதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார். இந்த சம்பவங்கள் குறித்து மேலும் அறிய வருவதாவது,
கடந்த வாரம் மிரிஸ்ஸ பகுதியில் 6 வெளிநாட்டுப் பெண்கள் கூட்டாக இருந்துள்ளனர். அவர்களுடன் ஒல்லாந்தில் இருந்து வந்த பிரஜை ஒருவரும் நட்புடன் இருந்து வந்துள்ளார்.
இவர்கள் மிரிஸ்ஸ பகுதியில் இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றுக்கு முன்பாக கடற்கரை பகுதியில் இருந்த போது, அப்பகுதியில் இருந்த பீச் போய்ஸ் சிலர் அவர்களில் இருந்த ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்துள்ளனர்.இதன்போது ஒல்லாந்து பிரஜை மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனைவிட மிதிகம கடலில் கடல் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது இஸ்ரேல் பிரஜை ஒருவருக்கும் அங்கிருந்த உள்நாட்டவர்கள் சிலருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது அங்கிருந்த இஸ்ரேல் பிரஜைகள் நால்வர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்தும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சந்தேக நபர்களைத் தேடி விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
பறந்துகொண்டிருந்த விமானமொன்றின் இயந்திரப்பகுதியில் திடீரென தீ பிடித்ததில் அதில் பயணம் செய்த நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தையடுத்து குறித்த விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இவ்வனர்த்தம் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் இடம்பெற்றுள்ளது. அனர்த்தம் ஏற்பட்டுள்ளபோது விமானத்தில் 1380 பேர் பயணித்துள்ளனர் . இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ள நிலையில் ஒருவர் கவலைக்கிடமாகவுள்ளார்.
பிலடெல்பியாவின் வடமேற்கில் இருந்து சுமார் 70 மைல் தூரத்தில் குறித்த விமானம் தரையிறக்கப்பட்டது. அதில் பயணம் செய்த நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை நாளை குறைவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நண்பகல் 12.00 மணிக்கு திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது இந்த பகுதிகளில் தற்காலிகமாக கடும்காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு தகுதியற்ற இதய சத்திர சிகிச்சை வைத்தியர் ஒருவர் வந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கராப்பிட்டிய வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காக குறித்த தகுதியற்ற வைத்தியர் ஒருவர் வந்துள்ளார்.
இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் தகுதியை முழுமையாக பூர்த்தி செய்யாத வெளிநாட்டு வைத்தியர் தொடர்பில், சுகாதார அமைச்சிற்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் குறித்த பிரித்தானிய வைத்தியரிடம் இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கராப்பிட்டிய வைத்தியசாலையில் இதய சத்திரசிகிச்சைக்காக வருகைத்தந்துள்ள வைத்தியர் ஆர்.கே.பர்மின் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த வைத்தியருக்கு பிரித்தானிய வைத்தியசபையினால் வழங்கப்படும் அனுமதிபத்திரம் (license to practice) இல்லை என அந்த சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவருக்கு 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் அந்த அனுமதி பத்திரம் கிடைக்கவில்லை எனவும், தற்போது அவருக்கு 67 வயதான நிலையில் ஓய்வு பெற்றவர் எனவும் வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அபூர்வமான உயிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒட்டிப் பிறந்த கடலாமை குட்டிகள் இரண்டு மாத்தறை மிரிஸ்ஸ கடற்கரையில் கடல் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு கடலாமை குட்டிகளும் நேற்றைய தினம் கண்டுபிடிக்க முடிந்துள்ளது. வனவிலங்கு வரலாற்றில் இதுவரை ஒட்டிப் பிறந்த ஆமைகள் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கண்டுபிடிக்கப்பட்ட கடலாமைகள் மிரிஸ்ஸ கடல் பாதுகாப்பு திணைக்களத்தினால் முன்னெடுக்கும் கடலாமைகள் பாதுகாப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இரண்டு கடலாமைகளும் சிறப்பான உடல் நிலையில் உள்ளதாக மிரிஸ்ஸ வனவிலங்கு அதிகாரிகளினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை தெற்கு கடல் எல்லையில் அதிகளவில் கடலாமைகள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய விமானம் திடீரென இலங்கையின் விமான நிலையம் ஒன்றில் தரையிறக்கப்பட்டுள்ளது. Antanov An – 225 Mriya என்ற இராட்சத விமானம் மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியுள்ளது.
எரிபொருள் நிரம்புவதற்காக பாரிய விமானம் திடீரென தரையிறக்கப்பட்டதாக மத்தள விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் தரையிறங்குவது தொடர்பில் முன்னேற்றபாடு செய்யத போதும், திடீரென எடுக்கப்பட்ட முடிவின் காரணமாகவே விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய விமானம் திடீரென இலங்கையின் விமான நிலையம் ஒன்றில் தரையிறக்கப்பட்டுள்ளது. Antanov An – 225 Mriya என்ற இராட்சத விமானம் மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியுள்ளது.
ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்படும் இந்த உலகில் தமிழர்கள் படைக்கும் சாதனைகள் எண்ணற்றவை. எல்லா துறைகளிலும் தமது காலடிகளை பதித்து வருகின்றார்கள் தமிழர்கள். அந்த வகையில் கிரிக்கெட் உலகின் நாயகனாக கொண்டாடப்படுபவர் தமிழரான முத்தையா முரளிதரன்.
உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமை கொண்ட முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட் அணியின் வலதுகை சூழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர்.
1972ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி பிறந்த முரளிதரன் நேற்றைய தினம் 46ஆவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். இவரது பிறந்தாளை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடியிருந்ததுடன், இது தொடர்பான பல பதிவுகளையும் சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக இருந்தது.
இலங்கை கிரிக்கெட் அணி 90களின் காலகட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி கொண்டிருந்த நேரத்தில் தான் முத்தையா முரளிதரன் இலங்கை அணியில் களமிறங்கியிருந்தார்.
தனது ஆரம்ப காலத்தில் சிறப்பாகவே செயல்பட்ட முரளிதரன் தனது கிரிக்கெட் வாழ்க்கை பயணத்தின் முதல் மூன்று ஆண்டுகளில் விளையாடிய 23 டெஸ்ட் போட்டிகளில் 81 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இவ்வாறு தொடர் சாதனைகளுக்கு சொந்தக்காரரான அவர், தனது 18 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் பல சோதனைகளையும் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பலமுறை இவரது பந்து வீச்சானது ஐசிசியால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதும் தன்னுடைய திறமைக்கான அங்கீகாரத்தை உலகம் வழங்கும்படி செய்தார்.
அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் என்ற மிகப்பெரும் சாதனையை அடைந்து உலகிலுள்ள அனைவரது பார்வையையும் தன் பக்கம் திருப்பிக் கொண்டார். அத்துடன் அவர் கிரிக்கெட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 1,300 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் தங்க புதையலாக விளங்கிய முரளிதரன் ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 முதல் 2010ஆம் ஆண்டு வரை விளையாடி உள்ளார்.
இவ்வளவு சாதனைகளையும் படைத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கட்டுக்களை கைப்பற்றி உலக சாதனை படைத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார்.
இதன் பின்பு 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி அனைத்து விளையாட்டுக்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர் தற்போது தமிழர்களுக்கான அடையாளமாக மாறியுள்ளார்.
கேரளத்து பெண்கள் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது, நீளமான கருமையான கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம் தான். அதுமட்டுமின்றி, அவர்களின் கன்னங்கள் நன்கு கொழுகொழுவென்று இருக்கும். இதற்கு அவர்களின் அழகு பராமரிப்பு தான் காரணம்.
மேலும் இவர்கள் எக்காரணம் கொண்டும் கண்ட கண்ட க்ரீம்களைப் பயன்படுத்தமாட்டார்கள். எதற்கும் இயற்கைப் பொருட்களையே நாடுவார்கள். அதனால் தான் அவர்களின் முகத்தில் எந்த ஒரு பருக்களும் இல்லாமல் பளிச்சென்று உள்ளது. சரி, அவர்கள் அப்படி என்ன பராமரிப்புக்களை மேற்கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
தேங்காய் எண்ணெய் : கேரளத்து பெண்கள் தினமும் தங்கள் தலைக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவார்கள். அதிலும் தினமும் தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு போடாமல் வெறும் தலைக்கு குளிப்பார்கள். இதனால் அவர்களின் முடி பட்டுப்போன்று பொலிவாக இருக்கிறது.
மஞ்சள் : கேரளத்து பெண்களின் சரும மென்மையாக இருப்பதற்கு, அவர்கள் மஞ்சள் பயன்படுத்துவது தான். தினமும் குளிக்கும் போது மஞ்சளை உடல் முழுவதும் பூசிக் குளிப்பார்கள்.
கற்றாழை : முக்கியமாக தினமும் குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைப்பார்கள். இதனால் தான் அவர்களின் முகத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுத்தமாக உள்ளது.
காஜல் : கேரளத்து பெண்களின் கண்கள் பளிச்சென்று அழகாக காணப்படுவதற்கு காரணம், அவர்கள் தங்களின் கண்களுக்கு காஜலை அதிகம் பயன்படுத்துவார்கள். அதிலும் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த காஜலை அல்ல, வீட்டிலேயே காஜல் செய்து அதனைப் பயன்படுத்துவார்கள்.
கடலை மாவு : மலையாள பெண்கள் கடலை மாவு கொண்டு வாரம் ஒருமுறையாவது ஃபேஸ் பேக் போடுவார்கள். அதுவும் கடலை மாவை ரோஸ் வாட்டர் பயன்படுத்தி பேஸ்ட் செய்து பயன்படுத்துவார்கள். இதுவும் அவர்களின் சருமம் பிரச்சனையின்றி இருப்பதற்கு காரணம்.
செம்பருத்தி : கேரளத்து பெண்களின் நீளமான கூந்தலின் முக்கியமான ரகசியம் இது தான். அது என்னவெனில் இவர்கள் தங்களின் கூந்தலுக்கு ஷாம்புவிற்கு பதிலாக, செம்பருத்திப் பூ மற்றும் அதன் இலையை அரைத்து, அவற்றைக் கொண்டு கூந்தலை அலசுவார்கள்.
கறிவேப்பிலை : கேரளத்து பெண்கள் பொடுகு வராமல் இருப்பதற்கு, இரவில் படுக்கும் போது ஒரு கையளவு கறிவேப்பிலையை நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் கொண்டு மறுநாள் காலையில் தங்களின் தலையை அலசுவார்கள்.
சிவப்பு சந்தனம் : இது தான் இருப்பதிலேயே முக்கியமானது. கேரளத்து பெண்கள் தினமும் இரவில் படுக்கும் போது, சிவப்பு சந்தனக்கட்டையை நீர் பயன்படுத்தி தேய்த்து, முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுவார்கள். இதனால் தான் அவர்களின் முகம் கொழுகொழுவென்று அழகாக உள்ளது.
சீகைக்காய் : மலையாள பெண்கள் ஷாம்புவிற்கு பதிலாக செம்பருத்தியைப் போல், சீகைக்காயை அரைத்து, அவற்றையும் பயன்படுத்துவார்கள்.
இவற்றை நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள் உங்களுக்கும் வித்தியாசம் தெரியும்.