தெற்கிலிருந்து வடக்கிற்கு சென்ற சிங்கள இளைஞர்கள் விரட்டியடிப்பு : தமிழ் மக்கள் கவலை!!

 

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் நில விடுவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்கச் சென்ற தென்பகுதி இளைஞர்களை படையினர் விரட்டியடித்துள்ளனர்.

தென்பகுதியில் இருந்து, கிறிஸ்தவ மதகுரு ஒருவரின் தலைமையில் இரு பஸ் வண்டிகளில் சிங்கள மக்கள் கேப்பாப்புலவில் போராடும் மக்களை சந்திக்கச் சென்றுள்ளனர்.

எனினும் இதற்கு படையினர் அனுமதி வழங்காததுடன், அவர்களை விரட்டியடித்துள்ளனர் என கேப்பாப்புலவு போராட்டத்திற்கு தலைமை தாங்கும் ஆறுமுகம் வேலாயுத பிள்ளை தெரிவித்துள்ளார்.

தமது போராட்டத்தின் நியாயத்தை அறிந்து கொண்டு எமக்கு ஆதரவாக செயற்படவும், எமது துயரங்களை அறிந்து கொள்ளவும் வந்த சிங்கள இளைஞர்களை படையினர் விரட்டியடித்ததால் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கவலையடைந்துள்ளதுடன், விசனம் வெளியிட்டுள்ளனர்.

மன்னாரில் காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தை : சடலமாக மீட்பு!!

 

மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தை நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் காணாமல் போன 71 வயதாகிய மனுவேல் பிள்ளை (அல்பேட்) நேற்று மாலை மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய், உவரி காட்டுப்பகுதியில் இருந்து சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த காட்டுப்பகுதியில் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போதே சடலம் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் இருந்து காணாமல் போன மனுவேல் பிள்ளை (அல்பேட்) என்பவருடையது என தெரிய வந்துள்ளது.

விடத்தல் தீவை பிறப்பிடமாகவும், மன்னாரை வதிவிடமாகவும் கொண்ட 8 பிள்ளைகளின் தந்தையான மனுவேல் பிள்ளை (அல்பேட்) கடந்த மாதம் 26ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

கடந்த 26ஆம் திகதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அவரை தேடிய போதும் எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை என மனைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய குடும்பம் : ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள்!!

 

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய குடும்பத்தை சேர்ந்த 12 வயது சிறுவனின் உடல், கலிபோர்னியாவில் உள்ள ஆறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்டா கிளாரிடாவில் சந்தீப் தொட்டப்பிள்ளி(41), அவரின் மனைவி சவுமியா(38), மகள் சாச்சி(9), மகன் சித்தாந்த்(12) ஆகியோர் வசித்து வந்த நிலையில், அண்மையில் காணாமல் போயிருந்தனர்.

இது குறித்த அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், தற்போது சிறுவனது சடலம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏனைய மூவரினம் உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது சிறுவனது உடலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்ட்லேண்ட், ஓரிகன் ஆகிய இடங்களுக்கு காரில் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது இவர்கள் காணாமல் போயிருந்தனர்.

சடலங்கள், பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பிரித்தானிய பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் : நெருக்கடியில் இலங்கை!!

நெதர்லாந்து மற்றும் பிரித்தானிய நாட்டவர்களை துன்புறுத்தியதாக கூறுப்படும் மிரிஸ்ஸ பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு தற்காலிகமாக தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக சபையின் இயக்குனர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அந்த ஹோட்டல் தொடர்பில் இலங்கை சுற்றுலா அதிகார சபை தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விசாரணைகள் நிறைவடையும் வரை ஹோட்டலை மூடுவதற்கு சபை தீர்மானித்துள்ளதாகவும், அந்த உத்தரவினை குறித்த ஹோட்டலின் உரிமையாளரிடம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மிரிஸ்ஸ பிரதேசத்தில் இயங்கும் இந்த ஹோட்டல் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ளாமல் நடத்தி சென்றுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த ஹோட்டலில் இரு பிரித்தானிய பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்கள் இடம்பெற்றதுடன், நெதர்லாந்தை சேர்ந்த இளைஞன் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சம்பவம் கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், சர்வதேச ரீதியாக பல்வேறு அழுத்தங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ராஜதந்திர நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் இலங்கை அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு சென்று ஆபத்தான நிலையில் இலங்கை திரும்பிய பெண்!!

மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு பணிக்காக சென்ற இலங்கை பெண் ஒருவர் கண்களை இழந்த நிலையில் நாடு திரும்பியுள்ளார். குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த ஞானவத்தி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவரே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளார்.

குடும்ப வறுமை காரணமாக 2000ஆம் ஆண்டு குருணாகலிலுள்ள வெளிநாட்டு முகவர் உதவியுடன் அவர் சவுதிக்கு சென்றுள்ளார். கடந்த 18 வருடங்கள் வெளிநாட்டில் பணி செய்தவர் வெறுமையாகவே நாடு திரும்பியுள்ளார். இரண்டு மூன்று வீடுகளில் பணி செய்தும் பணம் இன்றி அவர் இலங்கை திரும்பியுள்ளார்.

குறித்த பெண் பணி செய்த வீட்டில் அவரை கடுமையாக தாக்கிய காரணத்தினால் அவரால் எழுந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் சவுதியில் உள்ளவர்கள் முகத்திலேயே தாக்குதல் மேற்கொள்வதனால் அவரது பார்வையும் பறிபோயுள்ளது.

ஒன்றரை வருடங்களாக தங்கள் தாய் தொடர்பில் தகவல் கிடைக்காமையினால் பிள்ளைகள் தேட ஆரம்பித்துள்ளனர். இறுதியில் தாய் கிடைத்த போதிலும், அவரால் எழுந்து நடக்கவும் முடியாதும், கண்களும் தெரியாதென தெரியவந்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சுகாதாரப் பிரிவினர்!!

 

வவுனியா குருமன்காட்டுச் சந்தியில் அமைந்துள்ள சிற்றுண்டி விற்பனை நிலையத்தினை நேற்று (18.04.2018) மாலை 5.30 மணியளவில் வவுனியா சுகாதார பிரிவினர் சுற்றுவளைத்து முற்றுகையிட்டனர்.

வவுனியா குருமன்காட்டு சந்திக்கு அருகே காணப்படும் நடமாடும் விற்பனை நிலையத்தில் உணவுகள் சீர்கேடான முறையில் விற்பனை செய்வதாக வவுனியா சுகாதார பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு இனங்க நேற்று (18.04.2018) மாலை திடீர் சோதனையின் சுகாதாரப் பிரிவினர் ஈடுபட்டனர்.

இதன் போது நடமாடும் விற்பனை நிலையத்தில் சுகாதார சீர்கேடான முறையில் வடை, ரோல் என்பன காணப்பட்டதுடன் குறித்த விற்பனை நிலையத்தின் பணியாளருக்கு மருத்துவ சான்றிதழ் காணப்படவில்லையெனவும் பொது இடத்தில் வைத்து உணவு தயார் செய்தல் போன்ற பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து குறித்த நிலையத்தின் உணவு பொருட்கள் , பொருட்கள் என்பவற்றை சுகாதார பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யவுள்ளாகவும் மேலும் வவுனியா நகரில் உள்ள வியாபார நிலையங்களில் இவ்வாறான திடீர் சோதனை நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

சவுதி அரேபியாவின் திடீர் முடிவு : வெளிநாட்டவர்களுக்கு பேரதிர்ச்சி!!

சவுதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் அலி அல் கபீஸ் தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டுக்குள் சவுதி மக்களுக்கு வேலைவாய்பின்மையை குறைக்கும் வகையில் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகவே இந்த புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சவுதி அரேபியாவின் இந்த முடிவு அங்கு வேலை செய்யும் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. வெளிநாட்டவருக்குத் தடை செய்யப்பட்ட 12 வேலைகள் பின்வருமாறு.

கடிகாரக் கடைகள், கண்ணாடிக் கடைகள், மருத்துவ உபகரணக் கடைகள், மின்னணு மற்றும் மின்னியல் சாதன கடைகள், கார் உதிரிப்பாகங்கள் விற்கும் கடைகள், கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள், தரைவிரிப்பான்கள் விற்கும் கடைகள், ஆட்டோமொபைல் மற்றும் மொபைல் கடைகள் வீடு மற்றும் அலுவலக உபயோகப்பொருட்களின் கடைகள்,

ரெடிமேட் ஆடையகங்கள், குழந்தைகள் மற்றும் ஆடவர் துணிக்கடைகள், வீட்டு பாத்திரக்கடைகள் மற்றும் பேக்கரிகள், குறித்த துறைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

2018.09.11 : கார் மற்றும் இருசக்கர வாகன காட்சியகங்கள், ரெடிமேட் ஆடையகங்கள், வீடு மற்றும் அலுவலக உபயோகப்பொருட்களின் கடைகள்,  சமையலறை மற்றும் வீட்டு உபகரணக் கடைகள் என்பவற்றுக்கு 2018.09.11ஆம் திகதியிலிருந்து பணிக்கு எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.

2018.11.09 : மின்னணு சாதன கடைகள், கடிகாரக் கடைகள், கண்ணாடிக் கடைகள் என்பவற்றுக்கு 2018.11.09ம் திகதியிலிருந்து பணிக்கு எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.

2019.01.07 : மருத்துவ உபகரணங்கள் விற்கும் கடைகள்,  கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்
தரைவிரிப்பான்கள் விற்கும் கடைகள்,  வாகன உதிரிப்பாகங்கள் விற்கும் கடைகள்
இனிப்புக் கடைகள் என்பவற்றுக்கு 2019.01.07ஆம் திகதியிலிருந்து பணிக்கு எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.

சவுதியின் இந்த திடீர் முடிவால் சவுதிக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்று செல்ல எண்ணும் தொழிலாளர்களுக்கும், அங்கு வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பேரிடியாகவும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

வவுனியா நகரசபையை கூட்டணி கைப்பற்ற றிசாட் பதியுதீனின் மக்கள் காங்கிரஸ் முழு ஆதரவு!!

வன்னி மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரங்களைப் பெறுவதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பை நல்கியதாக மக்கள் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வவுனியா நகரசபையில், தமிழர் விடுதலைக்கூட்டணி தவிசாளர் பதவியைப் பெறுவதற்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதித் தவிசாளர் பதவியைப் பெறுவதற்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதனால், தவிசாளர் பதவியைப் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியும், பிரதித் தவிசாளர் பதவியைப் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட ஒரு வாக்கு வித்தியாசத்தினால் வெற்றி பெற முடிந்தது.

செட்டிகுளம் பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 02 உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளித்ததால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தவிசாளர் பதவியைப் பெற முடிந்தது.

அதேபோன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உதவியுடன் பிரதித் தவிசாளர் பதவியைப் பெற்றுக்கொண்டது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவளித்த போதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 05 உறுப்பினர்களில் 02பேர் நடுநிலை வகித்ததன் காரணமாக, தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.

எனினும், அதே பிரதேசசபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிரதித் தவிசாளராகப் போட்டியிட்ட மகேந்திரனுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவு வழங்கியதனால் அவர் வெற்றிபெற்றார்.

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட தௌபீக் பிரதித் தவிசாளரானார்.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதித் தவிசாளர் பதவியை பெற்றுக்கொண்டது.

-தமிழ்வின்-

பூமியில் விழுந்த எரிநட்சத்திரம் : முழுக்க முழுக்க வைரமாக மாறிய அதிசயம்!!

 

சூடான் நாட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு விழுந்த எரிநட்சத்திரம் ஒன்றில், முழுக்க முழுக்க வைரம் இருந்துள்ளது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

சூடானில் உள்ள நுபியன் பாலைவனத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு எரிநட்சத்திரம் ஒன்று விழுந்தது.
ஆல்மஹாட்ட சிட்டா என்று பெயர் வைக்கப்பட்ட இந்த எரிநட்சத்திரம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சூடானின் ‘கார்ட்டோம்’ பல்கலைக்கழக மாணவர்களால் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த எரிநட்சத்திரத்தின் உடற்பகுதி முழுவதும் வைரம் நிரம்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரகற்கள், எரிநட்சத்திரம் வெடித்த போது உருவாகி இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே ஆல்மஹாட்ட சிட்டவில் வைரம் இருந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள வைரம் மிகவும் தூய்மையானது என்றும், எந்தவிதமான அசுத்தமும் இதனுடன் கலக்கவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து கூறுகையில், இந்த வைரம் பூமி உருவாவதற்கு முன்பு தோன்றியிருக்கலாம்.

அதன்படி, நட்சத்திரங்கள் மோதி சூரிய குடும்பம் உருவான அதே வேளையில், ஆல்மஹாட்டா சிட்டா எரிநட்சத்திரமும் உருவாகி இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

உலகிலேயே மூன்று முகங்களை பெற்ற நபர் : 20 வயது குறைந்துள்ளதாக உற்சாகம்!!

 

பாரீஸில் முகம் முழுவதும் சிதைவடைந்த கட்டிகளால் பாதிக்கப்பட்டு கோரமாக இருந்த நபருக்கு இருமுறை முக மாற்று அறுவை சிகிச்சை நடந்த நிலையில் தான் 20 வயது குறைந்துள்ளதாக உற்சாகமடைந்துள்ளார்.

ஜெரோம் ஹமொன் (43) என்பவருக்கு கடந்த 2010 யூலை மாதம் முதல் முறையாக முக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுதான் உலகளவில் முதல்முறையாக முகம் முழுவதும் செய்யப்பட்ட முக மாற்று அறுவை சிகிச்சையாகும்.

இந்நிலையில் ஜலதோஷத்துக்காக சில ஆண்டிபயாடிக் மருந்துகளை ஜெரோம் சாப்பிட்ட நிலையில் அது அவருக்கு ஒத்து கொள்ளவில்லை. இதையடுத்து சத்திர சிகிச்சை செய்யப்பட்ட அவரின் புதிய முகம் கடந்தாண்டு நவம்பரில் நீக்கப்பட்டது.

முகம் இல்லாமல் ஜெரோம் மருத்துவமனையில் இரண்டு மாதங்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், தோல்கள் தானமாக கிடைப்பதற்காக காத்திருந்தார்.

இந்நிலையில் ஜனவரியில் 22 வயதான இளைஞர் உயிரிழந்த நிலையில் அவரின் தோல்கள் ஜெரோமுக்கு பொருத்தப்பட்டு மீண்டும் முக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதையடுத்து அவருக்கு புதிய முகம் கிடைத்துள்ளது. ஆனாலும் மண்டை ஓடு, தோல் மற்றும் அது தொடர்புடைய அம்சங்கள் இன்னும் முழுமையாக ஜெரோமுக்கு சீரமைக்கப்பட வேண்டும்.

ஜெரோம் கூறுகையில், எனக்கு நானே தற்போது நன்றாக உணர்கிறேன், 22 வயதுடைய நபரின் தோல்கள் வைக்கப்பட்டுள்ளதால் எனக்கு 20 வயது குறைந்தது போல உள்ளது என ஜாலியாக தெரிவித்துள்ளார்.

தற்போது மருத்துவமனையிலேயே தங்கியிருக்கும் ஜெரோம் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

கழுத்தில் தங்கமா? தங்கத்தில் கழுத்தா? தங்கத்தை மாலையாக அணிந்த பெண்!!

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தங்கம் வாங்கினால் செல்வம் சேரும் என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது. இதனால் இன்று நகைகடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கோவை நகைக்கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் கழுத்து நிறைய அணிந்திருந்த நகைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தங்கத்தை அவர் மாலைபோல் கோர்த்து மாட்டியிருந்தார், அந்தத் தங்கம் போதாது என்று அவர் மீண்டும் தங்க வாங்க வந்தது ஆச்சரியத்தை கிளப்பியது.

அட்சய திருதியை நாளில் நகைகள் வாங்கினால் செல்வம் சேரும் என்பதால் இந்தநாளில் நகை வாங்க வந்ததாக கூறியுள்ளார்.

மனைவியின் தோழியை கொன்றுவிட்டு ஊர்சுற்றிய நபர் : பரபரப்பு வாக்குமூலம்!!

 

தமிழ்நாட்டில் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் உடலை சாக்கு மூட்டையில் கட்டி மறைத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சூளைமேட்டில் வசித்தவர் வேல்விழி (19). விருதாச்சலத்தை சேர்ந்த இவர் நர்சிங் டிப்ளமோ படிப்பு படிப்பதற்காக சென்னையில் தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 6ம் திகதி தனது தந்தையுடன் கடைசியாக பேசிய வேல்விழி பின்னர் அவரை தொடர்பு கொள்ளவில்லை.

தந்தை போன் செய்தபோது வேல்விழி போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் பதற்றமடைந்தவர், சென்னை வந்து வேல்விழி தங்கியிருந்த இடத்தில் விசாரித்த போது அவரை பார்க்கவில்லை என அனைவரும் கூறினர்.

இதையடுத்து அவர் பொலிசில் புகார் அளித்தார். பொலிசார் விசாரணையை தொடங்கிய நிலையில் வேல்விழியுடன் நர்சாக பணியாற்றும் மகாலட்சுமி என்பவரின் கணவர் அஜித்குமார் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அஜித்குமாரிடம் பொலிசார் விசாரணை நடத்திய நிலையில் வேல்விழியை தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அஜித்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில், வேல்விழியை கொன்று அவர் உடலை சாக்குமூட்டையில் வைத்து வாடகை ஆட்டோ பிடித்து கோயம்பேடு கொண்டுச் சென்றேன்.

அங்கு மின்சார கேபிள்களை சுற்றும் பெரிய உருளை இருந்தது, அதன் இடையில் உள்ள இடைவெளியில் மூட்டையை திணித்துவிட்டு வந்து விட்டேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து வேல்விழியின் சடலத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

வேல்விழியை கொன்றதற்கான காரணம் குறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கேரளாவை சேர்ந்த அஜித்குமார் தனது மனைவி மகாலட்சுமியுடன் மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் சென்னை வந்துள்ளார்.

மகாலட்சுமி நர்சாக பணிபுரியும் இடத்தில் அவருடன் வேல்விழியும் பயிற்சி நர்சாக பணியாற்றி வந்தார். அங்கு பணியாற்றிய அனைவரும் சூளைமேட்டில் ஒரே குடியிருப்பில் தங்கியுள்ளனர்.

சோம்பேறியான அஜித்குமார் வேலைக்கு போகாமல் ஊர்சுற்றி வந்த நிலையில், இரண்டு மாதம் அங்கே இங்கே கடன் வாங்கி மனைவியிடம் சம்பளம் என்று கொடுத்துள்ளார்.

மூன்றாம் மாதம் சம்பளமாக கொடுக்க ரூமில் தனியாக இருந்த வேல்விழியிடம் பணம் கடன் கேட்டபோது, அவர் தரவில்லை. கழுத்தில் உள்ள செயின் அல்லது செல்போனை கொடு என்று கேட்டபோது தரமறுத்த வேல்விழி, அஜித்குமாரை திட்டி வெளியே போகச்சொல்லி இருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி வேல்விழியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. வேல்விழியை கொன்றபின்னர் அவர் கழுத்தில் இருந்த செயினை திருடி நகைக்கடையில் விற்று சம்பளம் என மனைவியிடம் கொடுத்துள்ளார். மீதிப்பணத்தை அஜித்குமார் ஜாலியாக செலவு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

அக்ஷய திருதியை ஏன் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது என்று தெரியுமா?

அக்ஷய திருதியை என்பதை மிகவும் மங்களகரமான ஒன்று நாளாக இந்துக்கள் பார்க்கின்றனர். புதிய தொழில் தொடுங்குவது, புதிய வீட்டிற்கு குடி போவது, அல்லது இந்த திருநாளில் திருமணம் செய்து கொள்வது என எந்த ஒரு நல்ல காரியத்தையும் இந்த நாளன்று நீங்கள் செய்யலாம்.

அனைத்து வித பண்டிகைகளுமே மங்களகரமானவைகள் தான். ஆனாலும் அக்ஷய திருதியை என்றால் கூடுதல் சிறப்பு அடங்கியுள்ளது. புதிய தொடக்கங்கள் அனைத்திற்கும் இந்த நாள் மிக உகந்ததாக பார்க்கப்படுகிறது. புனித நாட்களுக்கெல்லாம் புனிதமான ஒன்றாக இந்த இந்து பண்டிகை ஏன் பார்க்கப்படுகிறது? அதைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா?

திரேதா யுகத்தின் தொடக்கம் : திருதியை என்ற வார்த்தையை இரண்டு விதமாக விளக்கலாம். முதலில், இந்த இந்து பண்டிகை எப்போதுமே விசாக மாதத்தின் மூன்றாம் நாள் வரும். இரண்டாவதாக, திரேதா யுகம் தொடங்கியது இந்த தினத்தில் தான் என கருதப்படுகிறது. 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ள காலத்தின் மீது இந்தியர்களுக்கு நம்பிக்கை உண்டு. அவை, சத்ய யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம்.

கங்கை நதியின் வருகை : இந்த நாளில் தான் கங்கை நதி பூமி மீது ஓடத்தொடங்கியது என நம்பப்படுகிறது. மானிடர்களின் பாவங்களை போக்க இந்த நாளன்று பூமியில் ஓடத்தொடங்கிய நதி தான் கங்கை என நம்பப்படுகிறது. இந்து மதத்தின் படி கங்கை என்பது மிகவும் புனிதமான நதியாக பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் விண்ணுலகத்தில் வாழும் ஒரு தெய்வமாக கங்கை நதியை போற்றுகின்றனர்.

கோடாலியை வைத்திருக்கும் பரசுராமன் : பரசுராமனுக்கு நம் இந்து புராணத்தில் ஒரு தனித்துவமான இடம் உள்ளது. அவரை பற்றி, அவரின் வீர தீரமிக்க செயல்களை பற்றி, அவரின் கடுங்கோபத்தை பற்றி பல கதைகள் உள்ளது. விஷ்ணு பகவானின் 6 ஆவது அவதாரமாக கருதப்படும் பரசுராமன் இந்த நாளில் அவதரித்ததாக கருதப்படுகிறது.
செல்வங்களின் கடவுளான குபேரன்

செல்வங்களின் கடவுளான குபேரன் : இந்த பண்டிகையின் போது ஏன் தங்கத்தை வாங்குகிறோம் என என்றாவது யோசித்திருக்கிறீர்களா? ஒருவரின் செல்வம் பல மடங்காக பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த நாளன்று அனைவரும் தங்கம், வெள்ளி மற்றும் இதர விலை உயர்ந்த செல்வங்களை வாங்கி வருகின்றனர்.

ஆனால் இந்த இந்து மத சடங்கின் பின்னணியில் உள்ள நம்பிக்கையை பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த நாளன்று செல்வங்களின் கடவுளான லக்ஷ்மி தேவியை குபேரன் வழிபடுவாராம்.

தீர்த்தங்கரா தன் விரதத்தை உடைத்த தினம் : அக்ஷய திருதியை என்பது மிக முக்கியமான ஜெயின் மத பண்டிகையுமாகும். அவர்கள் கூறும் கதைப்படி, வளமிக்க அயோத்யா அரசாட்சியை ஆண்டு வந்தார் ஆதிநாத் என்ற மன்னன். தனக்கு ஆன்மீக அழைப்பு வந்த போது, தன் ராஜ வாழ்க்கையை உதறி தள்ளி விட்டு, தான் ஒரு துறவியாக மாறினார்.

ஆனால் ஜெயின் மதம் என்பது புதிது என்பதால் துறவியாக மாறிய இந்த மன்னருக்கு என்ன படைப்பது என மக்களுக்கு தெரியவில்லை. அதனால் பல நாட்களாக ஆதிநாத் விரதம் இருந்து வந்தார். பின் தன் பேரனே அவருக்கு கரும்புச்சாறை வழங்கினான்.

அந்த நாள் முதல் ஜெயின் மதத்தினருக்கு அவர் முதல் தீர்த்தங்கராவாக மாறினார். அதனால் ஜெயின் மதத்தினர் இந்த நாளை கொண்டாட தங்கம் அல்லது வெள்ளியை வாங்குவார்கள்.

அதிகரிக்கின்றது தங்கத்தின் விலை : இலங்கையில் தங்கத்திற்கு தீர்வை வரி அதிகரிப்பு!!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தங்கம் மீது 15% தீர்வை வரியை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நிதியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. நேற்று இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரியை அறவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

“தீர்வை வரி” என்பது, நாடொன்றினால் வருமானம் ஈட்டுவதற்காக ஒரு பொருள் மீது விதிக்கப்படுகின்ற ஒரு வகை வரி ஆகும். பொதுவாக ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது இந்த வரி விதிக்கப்படுகின்றது.

இத் தீர்வை வரியால் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. எனினும் தங்கத்தின் விலையில் எவ்வளவு அதிகரிப்பு ஏற்படும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

கிழக்கு மண்ணின் இளம் விஞ்ஞானிக்கு தேசிய விருது!!

 

கல்முனை, பாண்டிருப்பைச் சேர்ந்த, இலங்கை சட்டக்கல்லூரி மாணவனான தெய்வநாயகம் மதிவதன் என்ற இளம் விஞ்ஞானிக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. ஆயிரம் படைப்புக்கள் என்ற புத்தாக்க போட்டியில், மாவட்ட மட்டம், மாகாண மட்டம், தேசிய மட்டம் வரையிலும் அவரது கண்டுபிடிப்புக்கள் தெரிவாகியுள்ளதோடு, அவருக்கு தேசிய விருதும் கிடைக்கப்பெற்றுள்ளது.

Hybrid Power system என்ற மின்னேற்றக்கூடிய வகையில் குறித்த கண்டுபிடிப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது ஒரு மடிக்கணணி மின்கலத்தினை எடுத்து அதில் உள்ள மின்சாரம், மின்னழுத்தம் என்பவற்றினை 3V ,6v ,9v 12v என்ற அடிப்படையில் மின்சாரத்தினை பிரித்து,

அதன் மூலம் எமக்கு தேவையான மின்சாரத்தின் அளவினை பயன்படுத்தி Camera , Sumart Phone, Portable Fan, Charger, Light, Searching Light, Warning tune போன்றவற்றினை மின்னேற்ற கூடிய வகையிலும், வீட்டு மின்சாரம் தடைபடும சந்தர்ப்பத்திலும், சுற்றுலா பிரயாணங்களின் போதும் தங்களது மின் சாதனங்களை மின்னேற்றி பாவிக்க கூடிய வகையில் அதி உயர் அழுத்தம் கொண்ட (220v ,50hz) மின்சாரத்தினை பாவிக்க கூடிய வகையில் இதை உருவாக்கியுள்ளார்.

அத்துடன். இவரது அடுத்த கண்டுபிடிப்பாக கை ஊனமுற்றோர் Computer இயக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலினை பயன்படுத்தி Computer இயக்குவதாகும். (Hand Disable Peoples Using Computer)

அத்துடன், ஒளிரும் பற்தூரிகை மற்றும் (Lighting tooth brush) , Multi switching sestem போன்ற விடையங்களை இவர் கண்டு பிடித்துள்ளார் அது மட்டும் அல்லாது இலங்கை அடிப்படை சட்டங்களை வாசிக்கும் ரோபோ (robot) தயாரிக்கும் முயற்சிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.

இவருடைய தந்தை தெய்வநாயகம் (ஒய்வு நிலை கிராம உத்தியோகத்தர்) அவரது கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி என்பவற்றிக்கு ஊக்குவிப்பது, அதற்கான நிதி உதவிகளை கொடுத்து உதவுவதும் அவரது தந்தையே.

கனடாவில் மகன் படுகொலை : யாழில் கதறும் தாய் : பல வருடங்களாக மறைக்கப்பட்ட உண்மை!!

 

கனடாவை அச்சுறுத்திய மர்ம கொலைகள் தொடர்பில் பல்வேறு தகவல்களை அந்நாட்டு பொலிஸார் வெளியிட்டு வருகின்றனர். கனடாவில் தொடர் கொலையாளியான ப்ரூஸ் மெக்ஆர்தர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மறைக்கப்பட்ட பல்வேறு கொலை விவகாரங்கள் வெளிவந்துள்ளன.

தொடர் கொலையாளியால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் கோரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமது பிள்ளை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை காலமும் தகவல்கள் வெளியிடாமை குறித்து யாழ்ப்பாணத்திலுள்ள உறவினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சன்சீ கப்பல் மூலம் கனடாவுக்கு சென்ற 37 வயதான கிரிஷ்ணகுமார் கனகரட்ணம் கொலை செய்யப்பட்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அவர் கடந்த சில வருடங்களாக காணாமல் போயிருந்தார் என தெரிவிக்கப்படாத நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கனேடிய பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ப்ரூஸ் மெக்ஆர்தரினால் கொலை செய்யப்பட்ட யாழ். இளைஞனின் குடும்பத்தினர் இதுவரை அவர் காணாமல் போனதை தெரியப்படுத்தாமைக்கான காரணத்தை வெளியிட்டுள்ளனர்.

கனேடிய அரசாங்கம் அவரது அகதி விண்ணப்பத்தை நிராகரித்த பின்னர் அவர் மறைந்திருப்பதாக நினைத்ததால் அவரை காணவில்லை என முறைப்பாடு செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட கிரிஷ்ணகுமார் கணகரட்னம் 2010ஆம் ஆண்டு MV சன்சீ கப்பல் மூலம் 492 இலங்கை புகலிட கோரிக்கையாளர்களுடன் கனடாவுக்கு சென்றுள்ளார்.

கனடாவின் டொரொன்டோவைச் சேர்ந்த மெக்ஆர்த்தரினால் கிரிஷ்ன குமார் கணகரட்னம் கொலை செய்யப்பட்ட விடயம் இலங்கையில் உள்ள அவரது குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கணகரட்னத்தின் தாயார் மற்றும் மைத்துனர் கனடா ஊடகமொன்றுக்கு கண்ணீருடன் செவ்வி ஒன்றை வழங்கியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மகன் உயிரிழந்த விடயம் தொலைபேசி அழைப்பு மூலம் அறிந்து கொண்டோம் என தாயார் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக அவருக்காக நாம் காத்திருந்தோம் என கனகரட்ணத்தின் மைத்துனர் சுதாகரன் தனிகாசலம் தெரிவித்துள்ளார்.

“அவருக்கு என்ன நடந்ததென நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் அவர் கொலை செய்யப்பட்டார்? எப்போது அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது தொடர்பான தகவல்கள் எங்களுக்கு வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் வசிக்கும் மகன் கனகரட்ணத்திற்காக காத்திருப்பதாக குடும்பத்தினர் கடந்த டிசம்பர் மாதம் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவினை தாம் பார்த்ததாக பொலிஸார் உறுதி செய்தனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியாக அவர் டொரொன்டோவில் இருந்து பேசினார் என தாயார் குறிப்பிட்டுள்ளார்.

தினமும் தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும் கனகரட்ணம், அழைப்பேற்படுத்துவதனை நிறுத்திய பின்னர் அவரது தொலைபேசி இயங்காமல் போனதாக தாயார் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் நாம் மிகவும் வருத்தம் அடைந்தோம். தெரிந்த அனைவர் ஊடாகவும் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். எனினும் முடியவில்லை. என்ன செய்வதென்றே எங்களுக்கு தெரியாமல் போனது.. என மைத்துனர் குறிப்பிட்டுள்ளார்.

கனகரட்ணம் உயிரிழந்ததனை உறுதி செய்த பொலிஸார், அவர் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் டிசம்பருக்கு இடைப்பட்ட காலத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

அவர் கொலையாளியின் தோட்டத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனகரட்ணம் காணாமல் போனமை தொடர்பில் தமது குடும்பம் முறையிட முயற்சிக்கவில்லை. கனடா அரசாங்கத்திடம் சிக்கி மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார் என எண்ணினோம் அதனாலேயே முறைப்பாடு செய்யவில்லை என மைத்துனர் குறிப்பிட்டுள்ளார்.

கனகரட்ணத்தின் சகோதரனும் இலங்கையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அதனாலேயே அவர் கனடாவுக்கு சென்றுள்ளார். தன் தாயை பாதுகாக்கும் பொறுப்பை எடுத்து கொண்டே கனடா சென்றுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆறு பிள்ளைகளில் கனகரட்ணம் நான்காவது பிள்ளையாவார். அவரது மூத்த சகோதரன் 2007ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போரில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

“தனக்கு கனடாவில் நண்பர்கள் இருப்பதாக மகன் ஒரு போதும் என்னிடம் கூறியதில்லை. கொலையாளியுடன் எப்படி அவர் அறிமுகமானார் என்று எனக்கு தெரியவில்லை. மகனுக்கு எவ்விதமான கெட்ட பழக்கங்களும் இல்லை. கனடாவில் சேகரிக்கும் பணத்தை எனக்கு அனுப்புவர். ஒரு சந்தர்ப்பத்தில் அவர் தனது தொழிலை இழந்தார். அதன் பின்னர் நகரும் நாற்காலி தயாரிக்கும் பணியில் அவர் இணைந்தார்” என தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

கனகரட்ணம் தொடர்பில் தகவல் கிடைத்ததில் இருந்து குடும்பம் மிகவும் வேதனையில் உள்ளதாகவும், அவரது தாயாருக்கு சிறிய தெருக்கடை ஒன்று மாத்திரமே உள்ளதாகவும், கடந்த இரண்டு வருடங்களாக அதன் ஊடாகவே வாழ்வதாகவும் மைத்துனர் குறிப்பிட்டுள்ளார்.