மட்டக்களப்பில் இருந்து யாழ் சென்ற மனிதநேயம் மிக்க மனிதன்!!

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் குழந்தைகளை சந்திப்பதற்காக வாழைச்சேனை, கோரளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் யாழ். சென்றுள்ளார். ஆனந்த சுதாகரனின் மனைவி யோகராணியின் 31ஆம் நாள் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட அவர், யோகராணியின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்துள்ளதுடன், இரு குழந்தைகளுடன் உரையாடி ஆறுதல் கூறியுள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த வாழைச்சேனை, கோரளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்,

நாட்டிற்கு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை கொண்டு வந்த தமிழ் மக்களுக்கு நன்றிக்கடனாக ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வார்கள் என்று பார்த்த மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளார்.

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை புதுவருடத்திற்கு முன்பாக பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதாகக் கூறிய ஜனாதிபதி, ஏன் இன்னும் மௌனம் கொண்டு விடுதலை செய்யாமல் உள்ளார்.

மனைவியின் மரணச்சடங்கிற்கு ஆனந்த சுதாகரன் சென்ற வேளை இரண்டு குழந்தைகள் கட்டி அனைத்து கதறியதையும், பெண் குழந்தை தகப்பனுடன் பஸ்ஸில் ஏறுவதையும் நாங்கள் பார்த்து மிகவும் வேதனையடைந்தோம்.

இதனை கருத்தில் கொண்டு அரசியல் கைதியான ஆனந்த சுதாகரன் விடுதலைக்காக சிறுபான்மை மக்கள் ஒன்றிணைந்து கையெழுத்து திரட்டி ஜனாதிபதிக்கு வழங்கினோம்.

இந்த இரண்டு குழந்தைகளும் தங்களது பாட்டியுடன் ஜனாதிபதியை சந்தித்த போது சித்திரை புதுவருடத்திற்கு முன்பாக அவரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதாகக் கூறிய ஜனாதிபதி தற்போது பச்சிளம் குழந்தைகளை ஏமாற்றியது மிகவும் வேதனையை தருகின்றது.

அத்துடன், இந்த விடயமானது ஒட்டுமொத்தமாக சிறுபான்மை சமூகத்தினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே ஜனாதிபதி இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி பிள்ளைகளின் நலனின் அக்கறை கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று அநேகமானோர் சித்திரை புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்ற இந்த சூழலில் தனது தந்தையின் விடுதலைக்காக காத்திருக்கும் குழந்தைகளை மனிதாபிமானத்துடன் அவர்களின் துயரத்தில் தானும் பங்கெடுக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை, கோரளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறு மனித நேயத்துடன் செயற்படும் மக்கள் பிரதிநிதிகள் எம் மத்தியிலும் இன்றும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் பெண்ணொருவர் பரிதாபமாக மரணம்!!

கொழும்பில் தீ பற்றிக் கொண்டமையால் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குப்பை எரித்து கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தாயின் ஆடையில் தீ பற்றியமையால் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராஜபக்ச பேடிகே சீதேவிகா ராஜபக்ச என்ற 38 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பான விசாரணையை கொழும்பு நகர மேலதிக திடீர் மரண ஆய்வாளர் மேற்கொண்டுள்ளார். மரணம் தொடர்பில் சாட்சி வழங்கிய கணவர், “உயிரிழந்திருப்பது எனது மனைவியாகும். எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இரண்டாவது பிள்ளை பிறந்த பின்னர் அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் காலை நேரங்களில் அவர் தாமதமாகவே எழும்புவார்.

சம்பவம் இடம்பெற்ற அன்று தான் மகளை ஞாயிறு பாடசாலையில் விட சென்றிருந்தேன். மனைவி, மகன் மற்றும் எனவும் அம்மாவும் வீட்டில் இருந்தார்கள். இதன் போது எனது அம்மா வீட்டை சுற்றியிருந்த குப்பைகளை சேகரித்து ஒரு இடத்தில் கொண்டு வந்து வைத்திருந்தார்.

இதன்போது காலையிலேயே குளிராக உணரவும் அந்த குப்பைக்கு மனைவி தீ வைத்துள்ளார். அது திடீரென அவரது ஆடையில் பட்டு உடல் முழுவதும் தீப்பற்ற ஆரம்பித்துள்ளது. தாய் தீயை கட்டுப்படுத்தி மனைவியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்” என குறிப்பிட்டார்.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகத்தில் சிக்கல்!!

இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு தயாரிக்கும் பணி சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலத்திரனியல் கடவுச்சீட்டு தயாரிக்கும் பொறுப்பு De La Rue Lanka Currency and Security Print Ltd நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடு தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு உச்ச நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கு சொந்தமான நிறுவனத்திடம் 1.2 பில்லியன் ரூபாவுக்கு கடவுச்சீட்டு அச்சிடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து PIC Lanka Pvt Ltd நிறுவனம் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் அந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

180 மில்லியன் செலவில் மிகவும் சிறந்த தரத்திலான இலத்திரனியல் கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு தாம் முன்வைத்த யோசனையை கருத்திற்கொள்ளாமல் குறித்த பிரித்தானியா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க அச்சிடல் திணைக்களம் இவ்வாறு கண்டுக்கொள்ளாமல் செயற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதுகுடியிருப்பில் யுவதி ஒருவருக்கும் இராணுவ வீரருக்குமிடையில் கருத்து மோதல்!!

 

இலங்கை வங்கியில் ஏ.டி.எம் இயந்திர சேவையை பெற்றுக்கொள்ள சென்ற யுவதி ஒருவருக்கும், இராணுவவீரர் ஒருவருக்குமிடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், ஏ.டி.எம் இயந்திர சேவையை பெற்றுக்கொள்வதற்காக யுவதிகள் சிலர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்களுக்கு பின்பு வந்த இராணுவ வீரர் ஒருவர் முந்திச் சென்று ஏ.டி.எம் அறைக்குள் நுழைந்து பணத்தை பெற்றுக்கொண்டு வெளியே வந்துள்ளார்.

இதன்போது, பின்வரிசையில் நின்ற யுவதி ஒருவர் குறித்த இராணுவ வீரரை அண்மித்து “நாங்களும் இதுக்குதான் நிற்கின்றோம்” என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த இராணுவீரர் எனக்காக கொமாண்டர் காத்திருக்கின்றார் என்று தமிழில் பதிலளித்துள்ளார். இதற்கு இந்த யுவதி மறுமொழியாக எனக்கும் எங்கள் கொமாண்டர் காத்திருக்கின்றார் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அந்த யுவதியின் பதிலைகேட்டு இராணுவ வீரர் குழம்பியுள்ளதுடன், இருவருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

-தமிழ்வின்-

வவுனியாவில் கூட்டமைப்பின் கையை மீறிப்போகும் நிலையில் தவிசாளர் பதவியை கைப்பற்றினோம்!!

வவுனியா நகரசபைக்கான தவிசாளர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கையை மீறிப் போகும் நிலை காணப்பட்டதாலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியானது தவிசாளர் பதவியை கைப்பற்றியது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா நகரசபையின் தவிசாளர் பதவியை கைப்பற்றியமை தொடர்பாக நேற்றுமுன்தினம் (16.04) செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வவுனியா நகரசபைக்கான தவிசாளர் தெரிவு தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக கட்சிகளின் நகர்வுகளை அவதானித்து ஒவ்வொரு கட்சிகளும் பெற்றிருக்க கூடிய ஆசனங்களை சரியான முறையில் கணிப்பீடு செய்து பார்த்ததில் நாங்கள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்டது.

ஆரம்பத்தில் எமது கட்சியானது நடுநிலை வகிப்பதாகவே முடிவு எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நாங்கள் நடுநிலை வகிப்பதன் ஊடாக தவிசாளர் தெரிவு என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கையை மீறிப் போகும் நிலைமை காணப்பட்டதால் நாங்கள் எமது கட்சி சார்பிலே இராசலிங்கம் கௌதமன் என்பவரை தவிசாளர் பதவிக்காக முன்னிலைப்படுத்தினோம்.

கட்சியின் தீர்மானத்தின்படி தமிழர் விடுதலைக் கூட்டணி நடுநிலை வகித்திருந்தால் வவுனியா நகரசபையின் தவிசாளர் பதவியானது வேறு ஒரு கட்சிக்கு சென்றிருக்கும்.

அத்துடன் நாங்கள் நடுநிலை வகித்த காரணத்தினால் தான் தவிசாளர் பதவியானது கிடைக்காமல் போனது என்ற குற்றச்சாட்டிற்கு நாங்கள் ஆளாக நேரிடும் எனவே மிகவும் அவதானமாக பலதரப்பட்டவர்களின் கருத்துக்களை நாங்கள் கேட்டறிந்ததன் அடிப்படையிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணி இந்த முடிவை எடுத்திருந்தது என தெரிவித்தார்.

கல்வீச்சுக்கு இலக்காகி ஒருவர் பலி : இருவர் படுகாயம்!!

 

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை தோட்டத்தில் நேற்று இரவு இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் ஒருவர் பலியானதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

பலியான நபர் கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் எனவும், அதே பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய கே.பொன்னுசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றநிலையில், அதனை விலக்கச் சென்ற குறித்த நபர் மோதலில் ஈடுபட்டவர்களின் கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்த நிலையில் அவர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தாக்குதலில் ஈடுபட்ட குழுவில் மேலும் இருவர் காயமுற்ற நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மோதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிக்கடை சிறைக்குள் சிக்கிய மர்மம் : அதிர்ச்சியில் சிறைச்சாலை அதிகாரிகள்!!

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் மாறுபட்ட வகையில் தயாரிக்கப்பட்ட தொலைபேசி ஒன்றை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கைதி ஒருவருக்காக கொண்டு வந்த உணவு பொதியில் மர்மமான முறையில் கையடக்க தொலைபேசி ஒளித்து கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கைக்கடிகார வடிவில் வடிவமைக்கப்பட்ட கையடக்க தொலைபேசியை சிறைச்சாலை அதிகாரி கண்டுபிடித்துள்ளார். இவ்வாறான தொலைபேசி ஒன்றை கண்டுபிடித்த முதல் சந்தர்ப்பம் இதுவென சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடு ஒன்றில் இந்த தொலைபேசி தயாரிக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இலங்கை ரூபாயில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாயை விடவும் அதிகம் என நம்பப்படுகின்றது.

வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபையில் தமிழ்ப் பெண் உறுப்பினருக்கு கிடைத்த அந்தஸ்து!!

வவுனியா – வெங்கள செட்டிக்குளம் பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த தமிழ்ப் பெண் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். செட்டிக்குளப் பிரதேச சபையில் நேற்று முன்தினம் தவிசாளர், பிரதித் தவிசாளர் தெரிவு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த ஆசீர்வாதம் அந்தோனிப்பிள்ளை 7 வாக்குகளைப் பெற்றுத் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன், பிரதித் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த நவரட்ணம் சிவாஜினி 7 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

இதேவேளை செட்டிக்குளம் பிரதேச சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், குறித்த தெரிவில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி தோல்விக் கண்டுள்ளது.

மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தமிழ்ப் பெண் உறுப்பினரை பிரதித் தவிசாளர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இரு வான்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : ஒருவர் பலி 16 பேர் படுகாயம்!!

 

வெலிமடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெப்பட்டிபொல பகுதியில் நேற்று மாலை 3.30 மணியளவில் இரு வான்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் படுகாயங்களுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் கதிர்காமம் பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கிச் சென்ற வான் ஒன்றும் நுவரெலியாவிலிருந்து கதிர்காமம் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றுமொரு வானும் கெப்பட்டிபொல சந்தியில் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் இரு வான்களிலும் பயணித்த 17 பேர் படுகாயங்களுக்குள்ளாகி வெலிமடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அதில் 10 பேர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சைக்குப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதிக வேகம் மற்றும் கட்டுப்பாடு இல்லாததன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்துடன் தொடர்புடைய இரு வான்களையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சாரதிகளையும் கைது செய்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.

அமெரிக்கா – ரஷ்யா மோதல் உக்கிரம் : ஆபத்தான கட்டத்தில் இலங்கை!!

சிரியா விவகாரம் தொடர்பில் ரஷ்யா – அமெரிக்கா நெருக்கடியில் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகின்றது. சிரியா நெருக்கடிக்கு மத்தியில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்குரிய நிலைமை போர் வரை அதிகரித்தால்,

இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகள் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகும் என அரசியல் விமர்சகருமான மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். சிரியாவை அடிப்படையாக கொண்டு ஏற்படுத்தி கொள்ளப்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதும் மொஹான் சமரநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்று பிரித்தானியா மீது மேற்கொள்ளப்பட்டுள்ள சைபர் தாக்குதலுக்கு பின்னால் இருப்பது ரஷ்யா என அவுஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவு அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவில் ஆயிரம் கணக்கான பாதுகாப்பற்ற ரவுட்டர்கள் ஹெக்கர்களினால் ஊடுருவப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கமைய 400 அவுஸ்திரேலிய நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எப்படியிருப்பினும் இந்த தாக்குதலில் அவுஸ்திரேலிய தகவல்கள் வெளியே செல்லவில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.வடமராட்சி மீனவருக்கு அடித்த அதிஷ்டம்!!

 

யாழ்.வடமராட்சி கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் வலையில் 10 ஆயிரம் கிலோவிற்கும் அதிமான மீன்கள் பிடிபட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கரைவலை தொழில் செய்யும் மீனவருக்கே இவ்வாறு மீன்கள் அகப்பட்டுள்ளது.

மீனவருடைய வலையில் சுமார் 20 ஆயிரம் கிலோ பாரை மீன் அகப்பட்டுள்ளது. இந்த மீனின் இன்றைய சந்தை பெறுமதி 1 1/2கோடி ரூபாய் எனவும் கூறப்படுகின்றது.
மேலும், இன்று குறித்த மீனவரிடம் இருந்து 30 இலட்சம் ரூபாய்க்கு மீன்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறான அதிஷ்டம் மீனவர்களுக்கு எப்போதாவது, கிடைப்பதாகவும் இவ்வாறாக மீன் பிடிபடுவது ஆச்சரியம் எனவும் மீனவர்கள் கூறியுள்ளனர்.

நீராடச் சென்ற நடிகை பரிதாபமாகப் பலி!!

 

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை யடிபேரிய பிரதேசத்தில் களனி கங்கையில் நீராட சென்ற யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான கண்டி புப்புரஸ்ஸ பகுதியை சேர்ந்த துஷானி த சில்வா தொலைக்காட்சி ஒன்றின் நாடக நடிகை என தெரியவந்துள்ளது.

கண்டியில் இருந்து தனது குடும்பத்துடன் கித்துல்கலவிற்கு சுற்றுலா சென்றிருந்த போது, நீராடச் சென்ற இவர் அந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார். இவர் நீரில் முழ்கி காணாமல் போயுள்ள நிலையில், குடும்ப உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடியுள்ளதை தொடர்ந்து இவரின் சடலம் நீரில் மூழ்கிய இடத்தில் இருந்து சிறு தூரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த யுவதியின் சடலம் கிதுல்கல வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புயலில் சிக்கிய விமானம் : சாகப் போவதாக குறுந்தகவல் அனுப்பிய பயணிகளின் திக் திக் நிமிடம்!!

சவுத்வெஸ்ட் ஏர்லைன் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புயலில் சிக்கியதால், விமானத்தில் இருந்த பயணிகள் தங்கள் குடும்பத்தினருக்கு விமானம் மோதப் போகிறது என்று தகவல் அனுப்பியதாக கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் Fort Lauderdale பகுதியிலிருந்து New Orleans-க்கு Southwest Airlines நிறுவனத்திற்கு சொந்தமான 3461 என்ற விமானம் பயணிகளுடன் கடந்த ஞாயிற்றுக் கிழமை புறப்பட்டுச் சென்றுள்ளது. அப்போது திடீரென்று மோசமான வானிலையுடன் கடுமையான புயலில் சிக்கியுள்ளது. இதனால் நிலைதடுமாறிய விமானம் ஒரு நேர்கோட்டில் செல்லாமல் அங்கும், இங்கும் அலைபாயந்த படி சென்றுள்ளது.

அதுமட்டுமின்றி விமானத்தில் ஒன்றுமே தெரியாத காரணத்தினால், பயணிகள் பீதியடைந்துள்ளனர். இதில் ஒரு சிலர் கண்ணீர் விட்டு அழுததுடன், வாந்தியும் எடுத்துள்ளனர்.

விமானம் எங்கோ சென்று மோதப் போகிறது, நாம் உயிர் பிழைப்பது கஷ்டம் என்று கூறி, தங்களுடைய உறவினர்களுக்கு குட் பை எங்கள் விமானம் மோதப் போகிறது என்று குறுந்தகவல் அனுப்பியுள்ளனர்.

இருப்பினும் விமானத்தை சாமர்த்தியமாக கையாண்ட விமானி எங்கும் மோதவிடாமல் Panama-வில் பத்திரமாக தரையிரக்கி அங்கு விமானத்திற்கு தேவையான பெட்ரோலை நிரப்பி விட்டு New Orleans-ல் நான்கு மணி நேரம் தாமதமாக தரையிரக்கியுள்ளார்.

விமானத்தில் இருந்து தரையிரங்கியவுடன் பயணிகள் கூறுகையில், இது ஒரு மறக்க முடியாத அனுபவம், விமானத்தில் இருந்த ஸ்பீக்கரில் பெல்ட்டுகளை இறுக்கி போடும் படி அறிவுறுத்தப்பட்டது, என்ன நடக்கிறது ஒன்றும் புரியாத காரணத்தினால் என் குடும்பத்தினருக்கு கடைசியாக goodbye என்ற தகவல் அனுப்பினேன், நாங்கள் உயிர் பிழைத்தது எல்லாம் அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும் என விளக்கியுள்ளார்.

இது குறித்து விமான நிறுவனம் கூறுகையில், New Orleans-ல் கடுமையான மழை மற்றும் மோசமான புயல் காரணமாக விமான ஓட்டுனருக்கு சரியான சிக்னல் கிடைக்கவில்லை.

அதுமட்டுமின்றி விமானம் புயலில் சிக்கியதால் சற்று நேரம் விமான ஓட்டுனர் கட்டுப்பாட்டாளர்களின் சிக்னல் கிடைக்கு வரை சாமர்த்தியமாக விமானத்தை கையாண்டார்.

புயல் காரணமாக விமானம் தொடர்ந்து வட்ட மடித்த படி இருந்ததால் Panama-ல் தரையிரக்கப்பட்டு அங்கு பெட்ரோலை நிரப்பிவிட்டு அதன் பின் நான்கு மணி நேரம் தாமதமாக New Orleans-ல் தரையிரக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. எங்களுக்கு பயணிகளின் பாதுகாப்புதான் முக்கியம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

நடுரோட்டில் காதலியின் கழுத்தை வெட்ட முயன்ற காதலன்!!

தமிழகத்தில் இரண்டுமாதமாக பேசாமல் இருந்த காதலியின் கழுத்தை காதலன் அறுக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ரேணுகா(17), இவர் தன்னுடைய பள்ளி காலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சாலமன் ராஜா (23) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

தொடர்ந்து இரண்டு வருடமாக காதலித்து வந்த நிலையில் சாலமன் ராஜாவின் நடத்தை சரியில்லாமல் போனதால், ரேணுகா அவரை திருத்த முயற்சித்துள்ளார்.
ஆனால் சாலமன் ராஜா அதை எல்லாம் காதில் வாங்காமல் தன்னுடைய போக்கிலே இருந்துள்ளார்.

பல முறை சுட்டிக் காட்டிய போதும் சாலமன் சொல் பேச்சு கேட்காத காரணத்தினால், அவரிடம் பேசுவதை ரேணுகா நிறுத்தியுள்ளார். இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த அவர் ரேணுகாவை பல முறை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரோ உன் நடத்தை சரியில்லை தயவு செய்து என் வாழ்க்கையில் குறுக்கிடாதே என்று கூறி மறுத்துள்ளார்.

பெரிதும் விரக்தியடைந்த அவர் இன்று ரேணுகா கல்லூரிக்கு புறப்பட்டு வந்த நேரத்தில் அவரை வழி மறித்து ஏன் என்னை வெறுக்கிறாய் என்று கேட்ட போது, உனக்கும் எனக்கும் செட்டாகாது டா என்று கூறியுள்ளார்.

உடனே சாலமன் எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று கையில் வைத்திருந்த பேப்பர் கட்டரால் ரேணுகாவின் கழுத்தை அறுக்க முயன்றுள்ளார்.

உடனடியாக ரேணுகா தன்னுடைய கையை வைத்து தடுத்தால், அவரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து ரேணுகா கூச்சலிட்டதால், அருகிலிருந்தவர்கள் வருவதைப் பார்த்து சாலமன் ஓடியுள்ளான்.

சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் மாணவியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாணவி அளித்த புகாரின் அடிப்பைடையில் தலைமறைவாக இருந்த சாலமனை பொலிசார் தேடி கண்டு பிடித்து கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் தான் அஸ்வினி என்ற பெண் காதலனால் கொல்லப்பட்டார். மீண்டும் அதுபோன்றதொரு சம்பவம் நடக்கவிருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக ரேணுகா தப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஷிபா மரணம் : நடிகர் விஜய் சேதுபதி ஆவேசம்!!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள கத்துவா பகுதியில் 8 வயது சிறுமியான ஆஷிபா மிகக் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, இறந்து கிடந்தது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் ஆஷிபா மரணத்திற்கு காரணமான குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

பொதுமக்கள் சிலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நரேந்திர மோடி சிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரத்தில் தொடர்புடையவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரபல திரைப்ப்ட நடிகரான விஜய் சேதுபதி கத்துவா சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களை பார்த்தால் ஆத்திரம் வருகிறது. மத பாகுபாடு பார்ப்பவர்களிடம் இருந்து நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

லண்டனில் வீட்டில் தனியாக இருந்த பெண் குத்திக்கொலை!!

லண்டனில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Brixton பகுதியில் இருக்கும் 1 மில்லியன் மதிப்புள்ள வீட்டில் 38 வயது மதிக்கத்தக்க Samantha Clarke என்ற பெண் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவிக்கையில், Samantha Clarke கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு Oxfordshire பகுதியின் Henley-on-Thames-ல் இருக்கும் ஹோட்டலில் மேனேஜராக சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய மகனின் 14-வது பிறந்த நாளை கடந்த 9-ஆம் திகதி உற்சாகமாக கொண்டாடியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களையும் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருந்தார்.

மகிழ்ச்சியாக காணப்பட்ட இவர் நேற்றிரவு தன்னுடைய வீட்டில் உள்ளூர் நேரப்படி 6.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலரால் கொடூரமான முறையில் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இது தொடர்பாக பொலிசார் 20 வயது மதிக்கத்தக்க நபரை கைது செய்துள்ளதாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவ தினத்தன்று மூன்று பேர் Samantha Clarke-ன் வீட்டில் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்து அவரை குத்தி கொலை செய்திருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும் தற்போது முதல் கட்ட விசாரணை தான் முடிந்துள்ளது, தொடர் விசாரணைக்கு பின்னரே உண்மை தெரியவரும் என்று கூறியுள்ளனர்.

கணவர் கூறுகையில், அன்பானவள், மகன் தான் அவளுக்கு எல்லாமே, ஆனால் இந்த சம்பவம் எதனால் நடந்தது எதற்கு நடந்தது என்பது குறித்து ஒன்றுமே புரியவில்லை என்று புலம்பியுள்ளார்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் சமீபகாலமாக கத்தி குத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவரைத் தொடர்ந்து இந்த ஆண்டில் தற்போது வரை மட்டும் 59 பேர் கத்தியால் தாக்கப்பட்டு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Brixton stabbing arrest. Credit Cristo Foufas