வவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் இளைஞன் பலி!!

வவுனியா புளியங்குளத்தில் பன்றிக்கு வைத்த வெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர். நேற்று (09.03.2018) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இரவு 8 மணியளவில் புளியங்குளம் பகுதியில் வயல் ஒன்றிற்குள் பன்றியை வேட்டையாடுவதற்காகச் சென்ற ஒருவர் பன்றிக்கு வைத்த வெடி வெடித்ததில் அதை இயக்கிய நபரான நெடுங்கேணியைச் சேர்ந்த சிதம்பரம் விஜய் என்ற 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இரண்டு கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இரண்டு கிலோ 800கிராம் கேரள கஞ்சாவுடன் இன்று அதிகாலை ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு கிலோ 800கிராம் கேரளா கஞ்சாவுடன் புல்மோட்டைப் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த நுவான் தர்சன என்ற 38 வயதுடைய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவரை இன்று மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியா வைத்தியசாலையிலிருந்து திருடிச்செல்லப்பட்ட குழந்தை : நடந்தது என்ன?

வவுனியா பொது வைத்தியசாலையில் பிறந்த குழந்தை ஒன்றை நேற்று (09.03) காலை 11 மணியளவில் மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

நேற்று முற்பகல் 11 மணியளவில் 5ஆம் இலக்க விடுதில் கடந்த 7ஆம் திகதி இரவு பிறந்த ஆண் குழந்தை ஒன்றினை வைத்தியசாலை விடுதியில் தனக்குப் பக்கத்தில் நின்றிருந்த இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரிடம் கொடுத்துவிட்டு குழந்தையின் தாயார் குளியலறைக்குச் சென்றுள்ளார்.

சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை வழங்கிய நபரையும் தனது குழந்தையையும் காணவில்லை என்று வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் தாயாரால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் தாயார் பொகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என்பதுடன் திருடப்பட்ட குழந்தை அவரின் 4வது ஆண் குழந்தை என்பதும் நேற்று அவரை வீடு செல்வதற்கு வைத்தியர் விடுவித்துள்ளார்.

இதன்போதே குழந்தையை திருடிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இதையடுத்து வைத்தியசாலையில் பொருத்தப்பட்ட சிசிரிவி கமராவின் உதவியுடன் குழந்தையை திருடியவரை தேடும் நடவடிக்கை நடைபெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தனிப்பட்ட நபரின் கடத்தலா? அல்லது வேறு தேவைகளுக்காக குழந்தை கடத்தப்பட்டதா? போன்ற விசாரணைகளை வைத்தியசாலைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா செட்டிகுளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

வவுனியா செட்டிகுளம் பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நேற்று இரவு 8 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை 4 மணியளவில் மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற ஹயஸ் வானும் மெனிக்பாம் பகுதியிலிருந்து செட்டிகுளம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேராக செட்டிகுளம் கல்லாற்றுப்பாலத்தில் விபத்துக்குள்ளாகியதில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையிலிருந்து காவு வண்டிகள் சென்று அவர்களை ஏற்றிச் சென்றுள்ளது.

இவ்விபத்தில் கல்லாறு வேப்பங்குளம் செட்டிகுளத்தைச் சேர்ந்த செல்வராசா நாகராசா வயது 33 என்பவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 8 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்த ஏனையவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவ்விபத்து தொடர்பாக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மகனை அடித்து கொலை செய்த தந்தை மற்றும் மருமகன்!!

 
பொகவந்தலாவ – பொகவனை தோட்டபகுதியில் தடியால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும், மகனுக்கும் மதுபோதையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் மோதலாக மாறி தந்தையும், மருமகனும் இணைந்து தலைப்பகுதியில் கடுமையாக தடியால் தாக்கியதன் காரணமாக மகன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விராணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் 37வயதுடைய ஆறுமுகம் சிவசூரியன் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் இருவரும் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பொகவந்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு மரண விசாரணையின் பின் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் ஹட்டன் நீதவான் முன்னிலையில் நாளை ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தையும், தாத்தாவும் 7 வயது சிறுமிக்கு செய்த மோசமான செயல்!!

7 வயதான சிறுமி ஒருவரை கடுமையான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை மற்றும் சிறுமியின் தாத்தா ஆகியோரை மீட்டியாகொட பொலிஸார் கைது செய்துள்னளர்.

கைது செய்யப்பட்ட நபர்களை எதிர்வரும் 15ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு பலப்பிட்டி நீதவான் சம்பத் கமகே உத்தரவிட்டுள்ளார்.

கொடகம தெல்வத்த என்னும் முகவரியில் வதியும் 36 வயதான சிறுமியின் தந்தையும், 67 வயதான சிறுமியின் தாத்தாவுமே விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமி தொடர்பில் மருத்துவ அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சிறுமி பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் தாய், மீடியாகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். இதன் அடிப்படையில் பொலிஸார் சிறுமியின் தந்தையையும், தாத்தாவையும் கைது செய்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னதாக கணவருடன் முறுகலை ஏற்படுத்திக் கொண்டு தான் தாய் வீட்டு சென்றதாகவும் அங்கு வைத்து மகள் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கூறியதாகவும் குறித்த பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது பிள்ளையின் மகப்பேற்றுக்காக தாம், 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது மூத்த மகள் இவ்வாறு கடுமையான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மீடியாகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காலநிலை தொடர்பில் விசேட எச்சரிக்கை!!

இன்று தொடக்கம் அடுத்துவரும் சில நாட்களில் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழ்கடல் பிரதேசங்களில் கடும் மழை பெய்ய கூடும்.

அந்த பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு தீவு கடல் பகுதிகள் காணப்படும் முகில் கட்டமைப்பு காரணமாக இந்த நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது காற்றின் வேகம் மணிக்கும் 70 – 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று இரவு முதல் இந்த காலநிலை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, மத்திய மாகாணங்களின் சில இடங்களிலும், களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்.

காலை நேரங்களில் அம்பாறை. மட்டக்களப்பு மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்களில் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. ஏனைய பாகங்களில் சீரான காலநிலை நிலவும். விடியல் நேரங்களில் சில இடங்களில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவும் என திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் பேஸ்புக் முடக்கம் : மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகள்!!

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமையினால் இளைஞர், யுவதிகள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமையினால் அதன் மீது நாட்டம் கொண்டவர்கள் இலகுவாக மனரீதியாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இளைஞர், யுவதிகளின் மனங்களில் பதற்றமான மற்றும் குழப்பமான நிலை இலகுவில் ஏற்படும் என காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் விசேட உளவியல் வைத்தியர் ரூபன் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் இன்மையால் இதற்கு முன்னர் காணப்பட்ட மகிழ்ச்சி மற்றும் அவர்களின் சுய செயற்பாட்டு திறன் இழக்கப்படும். ஆளுமை, குடும்பம், சமூகம் மற்றும் சமூக உறவுகளில் சில முறிவுகளை ஏற்படுத்துவதனை காண முடியும் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பெற்றோர் மற்றும் பெரியவர்கள் அவதானத்துடன் அவர்களை பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக்கிற்கு அடிமை ஆவதென்பது மனிதர்கள் அடிமையாகும் விடயங்களில் இணைந்த புதியதொன்றாகும். அவ்வாறு அடிமையாகுவது மனிதர்களின் சுகாதாரம் தொடர்பில் சிறப்பானது அல்ல.

இதனால் அந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுவிப்பதற்கு பல்வேறு மகிழ்ச்சியான விடயங்களுக்குள் பிள்ளைகளை பழக்கப்படுத்த வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அடிமைத்தனம் மனநோய் வரை கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் வர்த்தக நிலையங்களை பூட்டி கதவடைப்பு போராட்டம்!!

 
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையும், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களையும் கண்டித்து வவுனியாவில் முஸ்லிம் வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை பூட்டி முழு கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக நகர பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலைய பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் இரவு முதல் இரணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வவுனியாவில் ஏனைய வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு இயல்பு நிலையில் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் பிறந்த குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்த பெண் உட்பட இருவர் கைது!!

பிறநத பச்சிளம் குழந்தையை பணத்தக்காக விற்பனை செய்த பெண் ஒருவரையும், அவருக்கு உடந்தையாக செயற்பட்ட பெண் ஒருவரையும் வவுனியா பொலிசார் நேற்று (08.03) கைது செய்துள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றை யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சம் ரூபா பணத்திற்கு விற்னை செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குழந்தையை பிரசவித்த பெண்ணையும் குழந்தையை விற்பனை செய்வதற்கு இடைத்தரகராக செயற்பட்ட வவுனியா தேக்கவத்தையை சேர்ந்த நடுத்தர வயதுடைய பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில்..

விற்பனை செய்யப்பட்ட குழந்தையை மீட்டுள்ளோம். குழந்தையை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்த பெண் ஆயிரம் ரூபாவிற்கே குழந்தையை வாங்கி ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருநது தெரிய வந்துள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக குழந்தை தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியா புகையிரத நிலைய வீதியில் 10 நிமிட இடைவெளியில் இரு விபத்துக்கள்!!

இன்று காலை வவுனியா புகையிரத நிலைய வீதியில் 10நிமிட இடவெளியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இரு ஆசிரியர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்துச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்று காலை 7.20 மணியிலிருந்து 7.30 மணிவரை புகையிரத நிலைய வீதியில் இலங்கை வங்கிக்கு அருகில் மோட்டார் சைக்கிலில் சென்ற ஆசிரியை மீது பின்னால் வந்த முச்சக்கரவண்டி மோதியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிலில் சென்ற சுந்தர்ராஜ் வைஜெயந்திமாலா என்ற 55 வயது ஆசிரியர் மீது முச்சக்கரவண்டி மோதியதுடன் அவ்விடத்திலிருந்து முச்சக்கரவண்டி தப்பிச் சென்றுள்ளது.

அப்பகுதியிலிருந்தவர்களின் உதவியுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் விபத்துக்குள்ளான ஆசிரியை உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அடுத்த 10 நிமிடங்களில் புகையிரத நிலைய வீதியிலுள்ள பண்டாரிக்குளம் செல்லும் பிரதான சந்தியில் துவிச்சக்கரவண்டியில் சென்ற ஆசிரியை மீது ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியரின் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது துவிச்சக்கரவண்டியில் சென்ற சந்திரன் வசந்தி என்ற 42 வயது ஆசிரியர் படுகாயடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரு ஆசிரியர்களும் விபத்துப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இடம்பெற்ற விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இலங்கை சர்வதேச மனித உரிமைகள் பெண்கள் தினம்!!

 
வவுனியாவில் இன்று காலை 9.30 மணியளவில் இலங்கை சர்வதேச மனித உரிமைகள் பெண்கள் தினம் சுற்றுவட்ட வீதியிலுள்ள கிராமிய அபிவிருத்தி திணைக்கள மண்டபத்தில் வவுனியா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமான ஆர்.எல்.வசந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி.சாமுவேல் ஜானகி (யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக நிதி மற்றும் முகாமைத்துவத் தலைவர்) மற்றும் ஜான்சிலா மஜித் (முல்லைத்தீவு பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர்) ஆகியோர் கலந்துகொண்டதுடன்,

வவுனியா பொலிஸ் திணைக்கள சிறுவர் பெண்கள் பிரிவு அதிகாரிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரச திணைக்களப்பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பினர், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மகளிர் தினத்தன்று அவுஸ்திரேலியாவின் புகழ் பெற்ற சிட்னி டவரிலிருந்து குதித்து பெண் தற்கொலை!!

 
உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படும் நேற்று பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவின் புகழ் பெற்ற சிட்னி டவரிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று மதியம் 2.40 மணியளவில் சிட்னி டவரின் 309 மீற்றர் உயரத்திலிருந்து அந்தப் பெண் குதித்துள்ளார்.

சிட்னி டவரைப் பார்வையிடுபவர்களின் பாதுகாப்புக்காக பார்வையாளர்கள் பாதுகாப்புக் கவசம் ஒன்றை அணிந்திருப்பார்கள். அதைக் கழற்றி வீசிவிட்டு இந்தப் பெண் குதித்துள்ளார். அவர் யார், எதற்காக குதித்தார் என்ற விவரங்கள் இது வரைக்கும் கிடைக்க வில்லை.

இந்த சம்பவத்தினால் சிட்னி டவர் கால வரையற்று மூடப்பட்டுள்ளது. அவர் குதிக்கும்போது அவர் அருகே ஒரு சிறுமியும் இரண்டு முதியவர்களும் இருந்துள்ளனர்.

பெற்ற மகனை துடிதுடிக்க கொன்றது ஏன் : தாயின் வாக்குமூலம்!!

தமிழகத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் மகனை கிணற்றில் தள்ளி விட்டு கொன்றதாக தாய் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் ஆட்டையாம்பட்டி அருகே, எஸ்.பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30), இவரது மனைவி மைனாவதி(24). இவர்களுக்கு சசிகுமார் (7), அகிலன் (5) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 5ம் திகதி வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சசிகுமார் காணாமல் போய்விட்டதாக மைனாவதி பொலிசிடம் புகார் அளித்தார்.

இதனைதொடர்ந்து பொலிசார் விசாரணை நடத்தியதில், மைனாவதி மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் உண்மையை ஒப்புக்கொண்டவர், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற பிள்ளையை கிணற்றில் தள்ளிவிட்டு கொன்றதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் (28) என்பவருக்கும், எனக்கும் ஆறு ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்தது.

நான் அவரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினேன். அதற்கு அவர், கணவரிடம் விவாகரத்து பெற்று, குழந்தைகளை கொன்று விட்டு வந்தால் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினார்.

இளைய மகன் அகிலன், என் தாயிடம் வளர்கிறான், ஆனால் மூத்த மகன் சசிகுமார் மட்டும் எங்களுடன் இருக்கிறான். அவனை 5-ம் திகதி காலையில் கிணற்றில் தள்ளி கொன்றேன் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கில் பொலிஸார்கள் தீயணைப்பு வீரர்கள் மூலம் சசிகுமாரின் சடலத்தை மீட்டு, தலைமறைவான தேவராஜை தேடி வருகின்றனர்.

ரஜினி, கமலால் வெற்றிடத்தை நிரப்ப முடியாது : நடிகை கௌதமி!!

தமிழக அரசியலில் ஜெயலலிதாவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நடிகர்கள் கமல் மற்றும் ரஜினியால் நிரப்ப முடியாது என நடிகை கௌதமி தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது, இதனையொட்டி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற நடிகை கௌதமி அஞ்சலி செலுத்தினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது உண்மைதான், அந்த வெற்றிடத்தை கமல் மற்றும் ரஜினியால் நிரப்புவது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை, ஒரே நாளில் இதை செய்திட முடியாது என பேசியுள்ளார்.

இதற்கு முன்பாக திருச்சியில் கர்ப்பிணி பெண் மரணமடைந்தது தன்னை வெகுவாக பாதித்து இருப்பதாகவும், இனியும் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் டுவிட்டரில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குளியலறையில் நிர்வாண நிலையில் இறந்து கிடந்த இளம் தம்பதி : நடந்தது என்ன?

இந்தியாவில் வீட்டு குளியலறையில் நிர்வாண நிலையில் தம்பதிகள் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் இந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் நீரஜ் சிங்கானியா. இவர் மனைவி ருச்சி.தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஹோலி பண்டிகையை தங்களது அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் நீரஜும், ரிச்சியும் கொண்டாடிய நிலையில் மாலை 5.30 மணிக்கு வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

பின்னர் தங்கள் அறைக்குள் சென்றுள்ளனர். நீரஜ்ஜின் தந்தை பிரேம் பிரகாஷ் வெகுநேரமாக அந்த அறையின் கதவை தட்டியும் அவர்கள் திறக்காததோடு, எந்த பதிலும் வரவில்லை.

பின்னர் குடும்பத்தார் கதவை உடைத்து சென்று பார்த்த போது உள்ளே இருந்த பாத்ரூமில் நீரஜும், ருச்சியும் நிர்வாண நிலையில் இறந்து கிடந்தனர்.

சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் இரண்டு சடலங்களையும் அவர்கள் கைப்பற்றினார்கள்.
குறித்த பாத்ரூமில் எரிவாயு ஹீட்டர் இருப்பது தெரியவந்தது.

ஆனால் அதை அவர்கள் பயன்படுத்தவில்லை எனவும் தெரியவந்துள்ளது. இதனால் தம்பதியின் இறப்பு எப்படி ஏற்பட்டது என பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.