பிரித்தானியா ரயிலில் பயணம் செய்த பெண், தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் மீது இனவெறி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை பொலிசார் தேடி வருகிறார்கள்.
லண்டனில் உள்ள Central line Tube ரயில் பாதையில் பயணிக்கும் ரயிலில் இச்சம்பவம் கடந்த மாதம் 28ஆம் திகதி நடந்துள்ளது. இது குறித்து போக்குவரத்து பொலிசார் தெரிவிக்கையில்..
இளம் தாய் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது எதிரில் உட்கார்ந்திருந்த பெண் அவர்களிடம் இனவெறியை தூண்டும் விதத்தில் கோபமாக கத்தியபடி பேசியுள்ளார்.
இதோடு குழந்தைகளின் தாயின் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். துஷ்பிரயோக வார்த்தைகளை பெண் 20 நிமிடங்கள் வரை உபயோகித்துள்ளார் என கூறியுள்ளனர்.
இந்நிலையில் இனவெறி தாக்குதல் நடத்திய பெண்ணின் புகைப்படத்தை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
பெண் குறித்த தகவலை பொதுமக்கள் தங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரி ஆலோம் உடின் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குழந்தைகளுக்கு இது முற்றிலும் மோசமான அனுபவமாக இருந்துள்ளது. பெண்ணின் அவமானகரமான செயல்களால் அவர்கள் பயந்துள்ளனர்.
இது போன்ற வெறுப்புணர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாது, சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணின் அடையாளத்தை கண்டுப்பிடிக்க கடுமையாக முயன்று வருகிறோம் என கூறியுள்ளார்.
239 பேருடன் காணாமல் போனதாக கூறப்படும் MH370 என்ற மலேசிய விமானத்தை தேடும் இறுதி முயற்சியாக அமெரிக்க நிறுவனம் ஒன்று நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு பயணித்த MH370 என்ற பயணிகள் விமானம் காணாமல் போனது. குறித்த விமானமானது இந்திய பெருங்கடலுக்குள் (தெற்கு பகுதியில்) வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து விமானத்தை தேடும் பணியில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.
1046 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த விமானம் தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
குறித்த விமானம் காணாமல் போனதை தொடர்ந்து பல்வேறு வதந்திகள் வெளிவரத்தொடங்கின. விமானி தற்கொலை செய்துகொள்வதற்காக விமானத்தை கடத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வேற்று கிரகவாசிகள் MH370 விமானத்தை கடத்தி சென்று விட்டதாகவும் வதந்திகள் வெளியிடப்பட்டன.
எனினும், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக 2015ஆம் ஆண்டு ரீயூனியன் என்ற தீவின் கடற்கரையில் விமானத்தின் பாகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் குறித்த பாகம் MH370 விமானத்தினுடையது என உறுதிசெய்யப்பட்டது. இதன் பின்னர் விமானம் தொடர்பில் எந்த ஒரு ஆதாரங்களும் கிடைக்காத நிலையில் கடந்த ஆண்டு தேடுதல் நடவடிக்கை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் குறித்த விமானத்தை தேடும் இறுதி நடவடிக்கையை மலேசிய அரசு முன்னெடுத்துள்ளது. இதற்கான “ஒசேன் இன்ஃபினிட்டி” என்ற அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளது.
இந்த உடன்படிக்கைக்கு மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் கடந்த 6ஆம் திகதி அனுமதி வழங்கியுள்ளார். இதன்படி, அவுஸ்திரேலிய கடல் எல்லைக்கு உட்பட்ட கடல்பகுதியில் சுமார் 25 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் தேடுதல் நடத்தப்படவுள்ளது.
குறித்த உடன்படிக்கையின் பிரகாரம் “90 நாள்களுக்குள் தேடுதலை நடத்தி முடிக்கப்பட வேண்டும். இதற்காக 70 மில்லியன் டொலர் வழங்குவதற்கு இணங்கப்பட்டுள்ளது.
இந்த தேடுதல் நடவடிக்கையின் போது எதுவும் கண்டறியப்படாவிட்டால் பணம் எதுவும் வழங்கப்பட மாட்டாது என அந்த உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன.
பெரிய மலைப்பாம்பு ஒன்று மானை வேட்டையாடும் அரிய காட்சி புந்தல தேசிய வனப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதனை ஒருவர் தனது கமராவில் பதிவு செய்துள்ளார்.
சுமார் 10 அடி நீளமான மலைப்பாம்பு புள்ளி மான் ஒன்றை இரையாக்கி கொண்டுள்ளது. இதேவேளை, குறித்த வனப்பகுதியில், அண்மையில் மலைப்பாம்பு ஒன்று மான் ஒன்றை விழுங்கிய நிலையில் காயமடைந்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் மீட்கப்பட்டதுடன், சிகிச்சையளிக்கப்பட்டு காட்டில் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா – பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா – பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்த முதலாம் ஆண்டு பிரயோக விஞ்ஞான பீட தமிழ் மாணவன் மீது நேற்று இரவு 9.00 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
விடுதிக்கு வந்த இரண்டாம் ஆண்டு பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் (பெருன்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள்) இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது காயமடைந்த மாணவனை சக மாணவர்கள் இணைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்டனர். எனினும், “நீங்கள் விடுதலைப் புலிகள். ஆகையால் இராணுவத்தினரின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பணித்துள்ளனர்.
இதன் போது பெருன்பான்மை இன மாணவர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விடுதி காப்பாளர் சென்றவுடன் மாணவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.
அதன் பின்னர் அவரை அவரது நண்பர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அனுமதித்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான மாணவனுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து வவுனியா வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சற்றுமுன் வவுனியா விநாயகபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது
இன்று இரவு (25.01.2018) மேசன் வேலைக்கு சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அரபா நகர் பகுதியை சேர்ந்த சஜா என்கின்ற 28 வயதுடைய இளைஞன் வேகக் கட்டுப்பபாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டில் தம்பதியினரின் வீட்டிற்குள் நுழைந்த திருட்டு கும்பல், அவர்களை கொலை செய்து உடல் உறுப்புகளை சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Camaçari நகரில் வெளிப்புறமான இடத்தில் Cristina Amaral தனது கணவர் Juvenal- உடன் வசித்து வந்துள்ளார். இவர்கள், இருவரும் வீட்டிற்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, உள்ளே நுழைந்த திருட்டு கும்பல், ஏதேனும் பணம் கிடைக்குமா என்று தேடியுள்ளது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி வீட்டிற்குள் பணம் இல்லாத காரணத்தால், தம்பதியினரை குறிவைத்துள்ளனர்.
இதில், கிறிஸ்டினாவை கணவன் கண்ணெதிரிலேயே பலாத்காரம் செய்த இவர்கள், கணவர் Juvenal- யும் கொலை செய்துள்ளனர். அதன்பின்னர், கிறிஸ்டினா உயிரோடு இருக்கும்போதே உடலில் இருந்த சில உறுப்புகளை சாப்பிட்டு கொலை செய்து அவரை குழிதோண்டி புதைத்துள்ளனர்.
கணவரின் உடலை புதைக்காமல் அவருக்கு அருகிலேயே போட்டுவிட்டு சென்றுவிட்டனர். ஆரம்பத்தில் கணவர் மட்டுமே கொலை செய்யப்பட்டுள்ளார் என எண்ணிய பொலிசார், வீடு முழுவதும் சோதனை நடத்தினர். அதன்பின்னர், கணவர் இறந்துகிடந்த இடத்திற்கு அருகில், பள்ளம் தோண்டப்பட்டிருப்பதை அறிந்த அவர்கள், அதற்குள் இருந்து கிறிஸ்டினாவின் சடலத்தை கைப்பற்றினர்.
இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். கொள்ளையடிப்பது, கொலை செய்வது, பெண்களை பலாத்காரம் செய்வது போன்றவற்றையே இவர்கள் தொழிலாக செய்துவந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள், 5 பேர் மீது கொலை கொள்ளை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்தியபிரதேசத்தில் 60 வயது மூதாட்டியை 3 நபர்கள் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது..
60 வயது மூதாட்டி தனது வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள கட்டிலில் மற்றொரு பாட்டியுடன்சேர்ந்து அமர்ந்திருக்கிறார். அப்போது, முகத்தில் துணியை மூடிக்கொண்டு அங்கே வந்த நபர்கள், அந்த மூதாட்டிக்கு அருகில் இருந்தவரை விரட்டிவிட்டு துப்பாக்கியால், மூதாட்டியின் முகத்தில் 10 முறை சுட்டுள்ளனர்.
மேலும் உடல் முழுவதும் சுமார்10 புல்லட்டுகளால் துளைத்ததில், சம்பவ இடத்திலேயே அந்த மூதாட்டி உயிரிழந்தார், இவரின் மகனும் அதே கிராமத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த மூதாட்டியின் கணவரை கொலை செய்த வழக்கில், அதே கிராமத்தை சேர்ந்த5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவேண்டும் என்பதில், தாயும் அவரது மகனும் உறுதுணையாக இருந்தனர். இதனால், இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
3 பேரில் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார், விரைவில் எஞ்சியுள்ள குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று ஆனந்தகுமார் என்ற பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பீகாரில் காதலித்து திருமணம் செய்ததால் தங்கையின் கணவரை அவரது சகோதரர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் Dhanbad ஐ சேர்ந்தவர் வித்யாசாகர் ராஜ்வன்ஷி, இவர் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்ற போது, ரீனா குமாரி என்ற பெண்ணைச் சந்தித்தார். நட்பாக பழகிய இவர்கள், பின்னர் காதலர்களாகினர். இவர்களின் காதலுக்கு ரீனா குமாரியின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், வித்யாசாகரின் வீட்டார் எந்த பிரச்சனையும் செய்யவில்லை.
இதனைத் தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர், ஜார்கண்ட்டில் உள்ள Dhanbad நகரில் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் வித்யாசாகர் தனது காதல் மனைவியுடன், தனது சகோதரியைப் பார்க்க பீகாரில் உள்ள ஹர்டியாவுக்கு, ஜனவரி 18ஆம் திகதி வந்துள்ளார். இதனை அறிந்த மீனா குமாரியின் சகோதரர்கள், இரண்டு நண்பர்களுடன் வந்து வித்யாசாகரை உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தனது கணவரை காப்பாற்றுமாறு மீனா குமாரி கதறியுள்ளார். ஆனால், ஒருவரும் வித்யாசாகரைக் காப்பாற்ற முன்வரவில்லை. இதனைத் தொடர்ந்து, தனது மாமியாரை அழைத்து வர வீட்டிற்கு ஓடியுள்ளார் மீனாகுமாரி. அவர் திரும்பி வந்து பார்த்த போது, படுகாயமடைந்த வித்யாசாகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தார்.
இதனைத் தொடர்ந்து தனது சகோதரர்களின் மீது ராஜோளி காவல்நிலையத்தில் மீனா குமாரி புகார் அளித்த நிலையில், விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் ரயில் முன் செல்பி எடுக்க முயன்ற போது ரயில் மோதி படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கோவை உடையாம்பாலையத்தை சேர்ந்த சுஜிஷ், தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். சுஜிஷ் உடன் படிக்கும் கல்லூரி நண்பரான சதீஷ்குமார் ஆகிய இருவரும் சூலூர் அருகே தண்டவாளத்தின் பக்கத்தில் நின்று செல்ஃபி எடுத்துள்ளனர்.
அவ்வேளையில் ஈரோட்டிலிருந்து கேரளா சென்ற சரக்கு ரயிலின் இன்சின் மோதி நண்பர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக படுகாயம் அடைந்த அவர்கள் இருவரையும், அருகிலிருந்தவர்கள் சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதன்பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமணைக்குக் கொண்டுவரப்பட்டும் சுஜீஸ் உயிரிழந்தார், அவரின் நண்பர் சதீஷ் குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
சதீஷ் குமாரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், செல்பி எடுத்து பேஸ்புக்கில் பதிவிட நினைத்தோம், அந்நேரத்தில் கவனக்குறைவாக இருந்ததால் விபத்து நடந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு இலங்கையர் ஒருவருக்கு கிடைத்துள்ளது.
அண்மையில் நடைபெற்று முடிந்த 19 வயதுக்கு உட்பட்ட உலக கிண்ண போட்டியில் இங்கிலாந்து அணியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இலங்கையர் விளையாடியுள்ளார்.
19 வயதிற்குட்பட்ட இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரராக களமிறங்கும் சவின் பெரேரா இலங்கையை சேர்ந்தவர் ஆவார். கொழும்பில் பிறந்த சவின் பெரேரா 13 வயதில் பிரித்தானியாவில் குடியேறினார். அங்கு அவர் கிரிக்கெட்டில் வெளிப்படுத்திய திறமை காரணமாக 19 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு தெரிவாகியுள்ளார்.
கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் சவின் பெரேரா பிரித்தானியாவுக்கு குடியெர்ந்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்காலத்தில் இலங்கை அணிக்கு எதிராக இங்கிலாந்து அணியில் விளையாடும் போது, தனக்கு சிங்கள மொழி அறிவு உள்ளமையினால் இலங்கை வீரர்கள் கூறுவதனை அறிந்து கொண்டு விளையாட முடியும் என சவின் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பிறந்த ஒருவர் இங்கிலாந்து அணியில் விளையாடும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
வெளிநாடு ஒன்றில் நபர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு இலங்கையர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டுபாய் Al Badda பகுதியில் அறை ஒன்றில் தங்கியிருந்த இலங்கையர்கள் மீதே கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
தனது அறையில் தங்கிருந்த நபரை கொலை செய்து விட்டு குறித்த இலங்கையர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு டுபாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Al Badda பகுதியில் இருந்து டுபாய் பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பொன்று கிடைத்துள்ளது. தாம் தங்கியுள்ள குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர். இதன் போது, அந்த அறை மூவரால் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தொலைபேசி அழைப்பு மேற்கொண்டவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
தான் தொழிலுக்கு சென்று வீடு திரும்பும் போது இந்த துர்நாற்றம் வீசியதாக குறித்த நபர் குறிப்பிட்டவுடன், பொலிஸார் அந்த அறையை திறந்து பார்த்துள்ளனர். அங்கு சுமார் 50 வயதுடைய நபரின் சடலம் இரத்தம் காய்ந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அவரின் வயிறு மற்றும் நெஞ்சுப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டுள்ளதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளில் அந்த கொலை சம்பவம் இடம்பெற்று 9 நாட்கள் கடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த நபருடன் இரண்டு இலங்கையர்கள் அறையை பகிர்ந்து கொண்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
தற்காலிக விசாவில் குறித்த இலங்கையர்கள் டுபாய் சென்று பணியாற்றியுள்ளனர். இதன் போது அவர்களின் விசா காலாவதியாகியுள்ள நிலையில், மூவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் கொலை வரை சென்றிருக்கலாம் என அந்த குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் உயிரிழந்த நபரின் தங்க ஆபரணங்கள் மற்றும் பொருட்களை குறித்த இலங்கையர்கள் திருடியதுடன் நாட்டை விட்டு தப்பி சென்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த இலங்கையர்களை கைது செய்வதற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அனைத்து அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இந்த மாதம் முதலாம் திகதியில் இருந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கு 22 வீதம் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் கீழ் 2006ஆம் ஆண்டில் இருந்து 10 வருடங்களுக்குள் எவ்வித சம்பள அதிகரிப்பும் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் சமகால அரசாங்கத்தின் கீழ் 2015ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் தொழிலாளர் சேவை 7512 ரூபாயிலும், அமைச்சின் செயலாளருக்கு 30684 ரூபாயிலும் சம்பளம் அதிகரிப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமது தொழிற்சங்க முன்னணியின் கோரிக்கைக்கமைய 2015 ஆம் ஆண்டு சம்பளத்துடன் இணைப்பட்ட 10000 ரூபாய் கொடுப்பனவு மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளத்தில் 20 வீத கொடுப்பனவும் அடிப்படை சம்பளத்துடன் இணைக்க சமகால அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய செயற்படுவதாகவும் தொழிற்சங்க முன்னணியின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டமையினால் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற மேலதிக கொடுப்பனவுகள், வாராந்த ஓய்வு கொடுப்பனவு மற்றும் அரச விடுமுறை கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் வங்கி அல்லது வேறு நிறுவனங்களில் கடன் பெற்றுக் கொள்ளும் போது, கடன் தொகை அதிகரிக்கப்படும் என சமன் ரத்னபிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ் தென்மராட்சி தெற்கு மறவன்புலவு பகுதியில் பதுங்கு குழியினுள் மறைந்திருந்த கொள்ளைக் கும்பல் ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பதுங்கு குழியினுள் மறைந்திருந்த குறித்த இளைஞர்களை கைது செய்த பொலிஸார் நேற்று சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட நபர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் மூவர் தப்பியோடி விட்டதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து, 3 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பணம் மற்றும் இரண்டரை பவுண் நகை என்பன மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கேரதீவு முதன்மை வீதியிலிருந்து ஒருவர் சென்றதனை சிவில் உடையில் நின்ற பொலிஸ் அலுவலர் கண்டு, அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது குறித்த நபர் பதுங்கு குழி ஒன்றிற்கு செல்வதையும், அங்கு மேலும் பலர் இருப்பதையும் கண்டுள்ளார்.
இதையடுத்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு தகவல்வழங்கப்பட்டுள்ளது. குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸாரைக் கண்டதும் குழியில் இருந்த 5 பேரும் தப்பி ஓடியுள்ளனர்.
இவர்களை துரத்திச்சென்றபோது இருவர் கைது செய்யப்பட்டதுடன், மூவர் தப்பி ஓடியுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நாவற்குளி மற்றும் அளவெட்டியைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அண்மைக்காலமாக வடக்கில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் இவர்கள் தொடர்பு பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கிரீஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் முகத்தை விஞ்ஞானிகள் சீரமைத்து அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர்.
கிரீஸின் தலைநகரான ஏதென்ஸில் உள்ள அக்ரோபோலிஸ் அருங்காட்சியகத்தில் அந்த உருவம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த பெண்ணின் எலும்புகள் 1993 ஆம் ஆண்டு ஒரு குகையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. எலும்புகளை ஆராய்ந்து பார்க்கும் போது கற்காலத்தில் வாழ்ந்த 15-லிருந்து 18 வரை வயதுடைய இளம்பெண் என்பது தெரிய வந்துள்ளது.
தற்போது அந்த இளம்பெண்ணின் முகத்தை விஞ்ஞானிகள் சீரமைத்து காட்சிக்கு வைத்துள்ளனர்.
குறித்த பெண் ஸ்கர்வி நோயால் இறந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.
கவிஞர் அறிவுமதியின் பாடல் வரிகளை இளையராஜாவின் குரலில் கேட்கும் போது ஒருவிதமான ஏக்க உணர்வு எதுவும் புரியாமல் இதயத்தில் வந்துபோகும். இப்போது ரஜினியும், கமலும் சொல்லும் அரசியல் பாதையும் அப்படிப்பட்ட ஒரு உணர்வைத்தான் தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடமும் அதனால் பலர் கட்டி வைத்துள்ள கற்பனை கோட்டையும், ஆச்சரியத்தையும், எதிர்பார்ப்பையும் ஒரு சேர ஏற்படுத்தி இருக்கிறது.
ரஜினியும், கமலும் திரை உலகில் கொடிகட்டிப் பறப்பவர்கள். இருவரும் நண்பர்கள். என்றாலும் தொழில் ரீதியில் இரு துருவங்கள். இன்று வரை இவர்களுடைய ரசிகர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். நடிப்பு, நம்பிக்கை, கொள்கை மூன்றிலும் மாறுபட்டவர்கள்.
அரசியல் தளமும் இருவருக்கும் புதிது. சினிமாவில் நடித்தால் போதும். அரசியலுக்கு இந்த புகழ் மட்டுமே கைகொடுக்காது என்பது இவர்களுக்கு தெரியாததல்ல.
இருவரும் அவரவர் பாணியில் அரசியல் பந்தை கச்சிதமாக நகர்த்தி வருகிறார்கள். இவர்களில் யார் கோல் அடிப்பார்கள் என்பது தான் எதிர்பார்ப்பாக இருந்தது.
ரஜினி ஆன்மீக அரசியல் என்றதும் புதிதாக தெரிந்தது இன்னும் பலரால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. அது விமர்சனங்களையும் தாண்டி ரஜினி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.
இணைய தளத்தில் நின்று அதிரடிகளை நிகழ்த்திய கமலின் விசுவரூபம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அவரும் இதோ அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று அறிவித்தார்.
ஏதாவது செய்யாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் இந்த சமூகம் மன்னிக்காது என்ற கரிசனத்தோடுதான் இருவருமே அரசியலுக்கு வருவதாக முன்னறிவிப்பு செய்திருக்கிறார்கள். கேட்டதும் பரவாயில்லையே என்று தோன்றினாலும் இது காலத்தே எடுத்த முடிவா? காலம் அறிந்து எடுத்த முடிவா? என்பதற்கு அவர்கள் அக்கறை காட்டுவதாக சொல்லும் சமூகம் தான் விடை சொல்லும்.
இருவரது அரசியல் பயணமும் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருந்தாலும், இருவர் செல்லும் பாதையும் எங்கெங்கே செல்லும்? என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.
ஆண்ட கட்சி, ஆளும் கட்சிகளை மக்கள் பார்த்துவிட்டதால் அதுவும் இல்லாமல் இதுவும் இல்லாமல் புதுமையாய் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இப்படி மாறுபட்ட பாதையை இவர்கள் தேர்வு செய்கிறார்கள் என்று நினைக்க தோன்றுகிறது.
இவர்கள் மனதில் தங்களது திட்டத்துக்கு ஒரு கற்பனை வடிவம் கொடுத்து அதையே வெற்றிக்கான இலக்காக கருதலாம். ஆனால் அந்த கற்பனை வடிவம் எப்படி இருக்கும் என்பது மக்களுக்கு தெரிந்தால் தான் அதன் மீது அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும் என்பதை உணரவேண்டும்.
கமல் நேரடியாக களத்துக்கு வருவார் என்ற நம்பிக்கையை அவரது சுற்றுப்பயணம் கொடுக்கலாம். ஆனால் ‘திராவிடம்’ என்பதோடு நின்று கொண்டிருந்த கமல் இந்தியாவை தனது ஆயுளுக்குள் பெருமை அடைய செய்வேன் என்று சொல்லி இருப்பது ஆசையின் விளைவா? அது தான் கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கையா?
தேசிய கட்சிகள் இரண்டும் எழுந்து நடமாட முடியாத நிலையில் இருப்பதால் அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு தேசியம் என்ற சொல் பயன்படும் என்பதற்காக ஒருவேளை விதைத்து போட்டிருக்கலாம்.
கல்வி, சுகாதாரம், மருத்துவம் எதுவும் சரியில்லை. நகரத்தில் கிடைக்கும் வசதிகள் கிராமத்தில் கிடைக்கவில்லை. போக்குவரத்து நெரிசல் தீர்ந்தபாடில்லை என்பது சுதந்திரம் பெற்ற பிறகு தேர்தலுக்கு தேர்தல் சொல்லி வருவது தான். ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு உரித்தான பாணியில் வார்த்தை ஜாலத்தோடு அறிவித்து வாக்குகளை அள்ளி விடுகின்றன.
ஆனால் குறைகள் மட்டும் குறைகளாகவே இருப்பது தெரிந்தது தான். இந்த சூழ்நிலையில் ஆறிப்போன உணவை சூடாக்கி சில துளி நெய்விட்டு மணக்க மணக்க முன்னே கொண்டு வைத்துள்ளார்கள் என்று தான் நினைக்க தோன்றுகிறது.
இந்த நினைப்புக்கு காரணம், தமிழகத்தின் நிலைமை தான். வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வழியில்லை. பெரும்பாலான துறைகள் நஷ்ட கணக்கில் தான் இருக்கின்றன. வரவுக்கு மிஞ்சிய செலவால் ‘‘துந்தணா..துந்தணா…’ என்ற நிலையில் சென்று கொண்டிருக்கிறது.
இதற்கான தீர்வு என்ன என்பதை தெரிந்தால் மட்டுமே இவர்கள் சொல்லும் லட்சிய பாதையில் பயணம் சாத்தியப்படும்.
பாதை கரடுமுரடாக இருக்கலாம். கண்ணுக்கு வெளிச்சம் தெரிந்தால் போதும். அந்த பாதையில் மக்களும் நடப்பார்கள்.
மாற்றம் என்று சொல்வது எளிது! அது எப்படி? என்பதற்கான விளக்கம் தெளிவாக தெரிந்தால் மட்டுமே மக்களுக்கு தெளிவு பிறக்கும்- நம்பிக்கை வரும்.
இருவரில் இதை தெளிவுபடுத்துவது யாரோ அவரே அரசியலிலும் நாயகனாக உருவெடுக்க முடியும்.