தங்க கழிப்பறை வேண்டுமா : அவமானப்படுத்தப்பட்ட டிரம்ப் குடும்பம்!!

அமெரிக்காவில் உள்ள உலக புகழ்பெற்ற Guggenheim அருங்காட்சியகம் ஜனாதிபதி டிரம்ப் குடும்பத்துக்கு தங்கத்தால் செய்யப்பட்ட கழிப்பறையை கொடுக்க விரும்புவதாக கூறி அவமானப்படுத்தியுள்ளது.

நியூயோர்க்கில் அமைந்துள்ளது Guggenheim அருங்காட்சியகம். இங்கு பிரபல ஓவியர் Vincent Van Gogh 1888-ல் வரைந்த Landscape With Snow என்ற ஓவியம் இருந்த நிலையில் அது தங்களுக்கு வேண்டும் என வெள்ளை மாளிகை சார்பில் கோரப்பட்டிருந்தது.

ஆனால் அதற்கு பதிலாக 18 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட தங்க கழிப்பறையை டிரம்ப் குடும்பம் வசிக்கும் வெள்ளை மாளிக்கைக்கு தர விரும்புவதாக அருங்காட்சியகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து Guggenheim அருங்காட்சியகம் சார்பில் அதன் பொறுப்பாளர் நேன்சி வெள்ளை மாளிகைக்கு மின்னஞ்சல்  அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதில் எங்களிடம் கழிப்பறை உள்ளது. ஜனாதிபதி டிரம்பும், முதல் பெண் மெலானியாவும் வெள்ளை மாளிகையில் அதை பொருத்த விரும்புகிறார்களா என எழுதப்பட்டுள்ளது.

மேலும் கழிப்பறை நல்ல மதிப்புமிக்க பொருள் எனவும் அதன் பராமரிப்புக்கான வழிமுறைகளை நாங்கள் சொல்லி கொடுப்போம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எழுதிய நேன்சி ஆரம்பம் முதலே டிரம்பை எதிரியாக பார்த்து வந்துள்ளார். ஏற்கனவே தனது வலைப்பக்கத்தில், அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் மீது டிரம்பின் ஆட்சி தாக்குதல் நடத்துகிறது என விமர்சித்திருந்தார்.

இதோடு டிரம்பின் பயண தடை உத்தரவையும் விமர்சித்திருந்த நேன்சி, ஓவிய சமூகத்திலிருந்து இதற்கு நாம் பதிலடி தரவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

டிரம்ப் நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதிலிருந்தே பல்வேறு சமயங்களில் நேன்சி அவரை விமர்சித்து வருகிறார். குறித்த தங்க கழிப்பறைக்கு அமெரிக்கா என பெயர் வைக்கப்பட்ட நிலையில் Guggenheim அருங்காட்சியகத்தில் பொது கழிப்பிடத்தில் கடந்தாண்டு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பாலியல் அடிமைகளாக விற்கப்படும் அகதிப் பெண்கள் : அதிர்ச்சித் தகவல்!!

மியன்மாரைச் சேர்ந்த 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்திருக்கிற சூழலில், ரோஹிங்கியா பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து ஆட்கடத்தல்கள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில, ரோஹிங்கியா அகதிப் பெண்கள் பலர் பாலியல் அடிமைகளாக இந்தியாவில் விற்கப்பட்டுள்ள சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

அப்படி விற்கப்பட்டவர்களில் ஒருவர் தான் ரஹிமா. தன்னுடைய 15 வயதில் தாய் நிலமான ரக்ஹைனை(மியன்மார்) விட்டு வெளியேறியுள்ளார் ரஹிமா. பின்னர் இரண்டு சர்வதேச எல்லைகளைத் தாண்டி இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்ட அவர், தன் தந்தை வயதைக் கொண்டு ஒரு நபருக்கு விற்கப்பட்டுள்ளார்.

“எனக்கு ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டதா? என அந்த நபர் ஏஜெண்டிடம் கேட்டார். எனக்கு திருமணமாகவில்லை என்பதால் 20,000 ரூபாய்க்கு என்னை அவர் வாங்கிக் கொண்டார். திருமணமாகியிருந்தால் 15,000 ரூபாய்க்கு நான் விற்கப்பட்டிருப்பேன்” என ரஹிமா ரொய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார்.

“என் தந்தையை விட அவருக்கு ஒருசில வயது தான் குறைவாக இருக்கும். என்னை எங்கும் போக விடமாட்டார், மின்கம்பிகளால் தாக்கினார். ஐந்து வருடங்களுக்கு பிறகு என்னை வெளியேற அனுமதித்தார்” என்றார் ரஹிமா.

இவர் இப்போது வட இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா முகாமில் வசித்து வருகின்றார். அந்த நபரால் பாலியல் வன்முறைகளை எதிர்கொண்ட ரஹிமா, இப்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். இவரைப் போன்று பல நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா பெண்கள் இந்தியாவில் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த ஆறு மாதங்களாக வங்கதேசத்தில் தஞ்சமடைந்து வரும் பெருமளவிலான ரோஹிங்கியா முஸ்லிம்களை குறிவைத்து ஆட்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக ஐ.ஓ.எம் சுட்டிக்காட்டியுள்ளது.

வங்கதேசத்தில் செயல்படும் தொண்டு நிறுவன ஊழியரான இப்த் நவாஸ், ரோஹிங்கியா முகாம்களில் பல பெண்கள் காணாமல் போகியுள்ளதாகவும் அதில் பலர் இந்தியா மற்றும் நேபாலுக்கு கடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இப்பிரச்னையின் மீது ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மட்டுமின்றி சர்வதேச நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

பசியின் கொடுமையினால் பறிபோன உயிர்!!

இலங்கையில் பசியின் காரணமாக அனுமதியின்றி 5 தேங்காய்களை பறித்த நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தேங்காயை பறித்த நபரை தோட்டத்தின் பொறுப்பாளர் கடுமையான எச்சரித்தமையினால் குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

5 பிள்ளைகளின் தந்தையான கட்டான பிரதேசத்தை சேர்ந்த சந்திரவீர அமரசேன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மனைவி மற்றும் 5 பிள்ளைகளுடன் கட்டான பிரதேச தோட்டம் ஒன்றில் வாழ்ந்து வந்த நிலையில், அந்த தோட்டத்தின் காவலாளியாக செயற்பட்டுள்ளார்.

தோட்டத்தின் உரிமையாளர் இந்தியாவில் வாழ்ந்து வருகின்ற நிலையில், அதே பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தோட்டத்தின் பொறுப்பாளராக செயற்பட்டுள்ளார்.

எனினும் காவலாளியாக பணி செய்வதற்காக நிரந்தர சம்பளம் வழங்கப்படாமையினால் சந்திரசேன கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் உணவு சமைப்பதற்காக வழியின்றி அதே தோட்டத்தில் 5 தேங்காய்களை பறித்துள்ளார். இதனை அறிந்த பொறுப்பாளர் அவரை கடுமையாக எச்சரித்ததுடன் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

எனினும் தன்னை மன்னிக்குமாறு காலில் விழுந்த போதிலும் பொறுப்பாளர் இரக்கம் காட்டாமையினால் வேறு வழியின்றி அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பசியின் காரணமாக ஒருவரின் உயிர் பறிக்கப்பட்ட துயரச் சம்பவம் ஒட்டுமொத்த இலங்கையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Doomsday Clock இல் 2 நிமிடங்களே எஞ்சியுள்ளன : உலகம் அழிவை நோக்கிப் பயணிப்பதாக எச்சரிக்கை!!

உலகத் தலைவர்களின் பொறுப்பின்மையால் அணு ஆயுதப்போர்கள் ஏற்பட்டு, உலகம் அழிவை நோக்கிப் பயணிப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மனித நடவடிக்கைகளால் உலகம் அழியும் நாளைக் குறிப்பிடும் ஊழிநாள் கடிகாரம் என்று அழைக்கப்படும் Doomsday Clock அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

1947 ஆம் ஆண்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்ட போது ஊழிக்காலத்திற்கு 7 நிமிடங்கள் இருப்பதாகக் கணிக்கப்பட்டது. தற்போது 2 நிமிடங்கள் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Doomsday Clock இல் தென் சீனக் கடல் பற்றிய பதற்றங்கள், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல், காலநிலை மாற்றங்கள் ஆகியவை அடங்கும்.

தற்போது நிலவும் அணு ஆயுத ஏவுகணை சோதனைகளால் வட கொரியா அமெரிக்காவிற்கு ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் உலகம் அணு ஆயுதப் போரால் அழிவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகச்சூழலைப் பொறுத்து இந்தக் கடிகாரத்தின் நேரத்தை விஞ்ஞானிகள் மாற்றியமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்கொலைக் குண்டுத் தாக்குதல் : 95 பேர் பலி, 158 பேருக்கு காயம்!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மையப்பகுதியில் வெடிகுண்டு நிரப்பிய அம்புலன்ஸை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 95 பேர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது 158 பேர் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள, பொலிஸ் சோதனை சாவடி அமைந்துள்ள வீதி ஒன்றில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட அம்புலன்ஸ் ஒன்றை ஓட்டிச் சென்று இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஒரு வாரத்துக்கு முன்பு காபுல் நகரில் உள்ள ஆடம்பர விடுதி ஒன்றில் தாக்குதல் நடத்தி 22 பேரை கொன்ற தாலிபன் அமைப்பு இந்தத் தாக்குதலுக்கும் பொறுப்பேற்றுள்ளது.

வெளிநாட்டுத் தூதரகங்களும் காபுல் நகர காவல் தலைமை அலுவலகமும் அமைந்துள்ள அப்பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்று சனிக்கிழமை மதியம் 12.15 மணிக்கு தாக்குதல் நடத்தப்பட்டபோது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

அந்நாட்டு உள்துறை அமைச்சகம் இதற்கு முன்பு இயங்கி வந்த கட்டமும், ஆப்கானிஸ்தானுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் மற்றும் ஆஃப்கன் ஹை பீஸ் கவுன்சில் (Afghan High Peace Council) எனும் தாலிபன்களுடனான பேச்சுவார்த்தைக்கான அமைப்பின் அலுவலகம் ஆகியவை சம்பவ இடத்துக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளன.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். தாக்குதல் நடந்த இடத்தில் உண்டான புகை மூட்டத்தை நகரம் முழுவதும் இருந்து காண முடிந்தது.

அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பின்போது, 2001இல் தாலிபன் அமைப்பு ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டாலும், ஆஃப்கனின் கணிசமான பகுதிகள் இன்னும் தாலிபன் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தாலிபன் அமைப்பின் நடவடிக்கைகள் அதிகரித்ததால் 2016 இல் உயிரிழப்புகள் அதிகரித்ததாக ஐக்கிய நாடுகள் சபை கூறியது. 2017ஆம் ஆண்டிலும் தாக்குதல் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 176 கொல்லப்பட்டனர்.

அதற்கு முன்பு மே மாதம், காபுலில் நடந்த ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதலில் 150 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்று தாலிபன் அமைப்பு கூறினாலும், பாகிஸ்தான் உதவியுடன் அதன் கிளை அமைப்பான ஹக்கானி குழு நடத்தியது என்று ஆஃப்கன் அரசு கூறியது.

எனினும் ஆஃப்கனில் எந்த தீவிரவாத அமைப்புக்கும் தங்கள் உதவவில்லை என்று பாகிஸ்தான் அரசு மறுத்தது.

இத்தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், பல அப்பாவி குடிமக்கள் இறக்கவும், பல நூறு பேர் காயமடையவும் காரணமான இந்த வெறுக்கத்தக்க காபூல் குண்டுவெடிப்பை கண்டிப்பதாக கூறி உள்ளார்.

விக்கி என்கவுண்டரில் சுட்டுக்கொலை : யார் இந்த பயங்கர ரெளடி?

பஞ்சாப் மாநிலத்தில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி விக்கி கௌண்டர் மற்றும் அவரது கூட்டாளியான பிரேமா லஹோரியா ஆகியோர் பஞ்சாப் – ராஜஸ்தான் எல்லைப்பகுதியில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹர்ஜிந்தர் சிங் புல்லார் என்பதை இயற்பெயராக கொண்ட விக்கி கௌண்டர் மீது கொலை, கொள்ளை மற்றும் ஆள்கடத்தல் உள்ளிட்ட பலவிதமான வழக்குகள் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளன.

குறிப்பாக கடந்த 2016ம் ஆண்டில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு பஞ்சாபில் உள்ள நபா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த விக்கி மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சக கைதிகள் சிலர் அங்கிருந்த பலத்த பாதுகாப்பையும் மீறி சிறையிலிருந்து தப்பிச் சென்றது அம்மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது.

இந்த சம்பவம் குறித்து அப்போது உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டிருந்ததுடன், பல பொலிஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

நபா சிறையிலிருந்து தப்பிய வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த விக்கி அம்மாநில பொலிஸாருக்கு பெரும் தலைவலியாக விளங்கினார்.

நேற்று நடந்த என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விக்கி, அம்மாநிலத்தில் எந்த ஒரு குற்ற சம்பவம் நடந்தாலும் அதற்கு காரணமாக சந்தேகிக்கப்படும் நபராக விளங்கி வந்தார்.

விக்கி கௌண்டர் தனது அனுபவங்கள் மற்றும் பல விடயங்களை பேஸ்புக்கில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

விக்கி பஞ்சாபிலேயே தங்கியிருந்தாலும் கூட அம்மாநில பொலிஸாரால் கண்டறியப்பட முடியாத நிலையே நிலவி வந்தது.

இந்நிலையில், நேற்று மாலை ஆறு மணியளவில் ராஜஸ்தான்-பஞ்சாப் மாநில எல்லையிலுள்ள சுக்சைன் என்ற கிராமத்தில் தேடுதல் வேட்டையை தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் விக்கியும் அவரது கூட்டாளியும் உயிரிழந்தனர்.

பஞ்சாப் பொலிஸாலரின் இந்த நடவடிக்கையை விமர்சித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் தெரிவித்த கருத்தொன்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. “தேடப்பட்டு வந்த குற்றவாளியான விக்கி கௌண்டர் மற்றும் அவரது கூட்டாளியை கொன்ற பஞ்சாப் பொலிஸாருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தொடங்கும் அந்த ட்விட்டர் பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் தங்களது கருத்துக்களை சமூக இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பஞ்சாப் முதல்வரின் ட்வீட்டுக்கு மறுமொழியாக, “எப்போதிலிருந்து நாம் இறப்புகளை கொண்டாட ஆரம்பித்தோம்” என்றும் “ஒரு பஞ்சாபி மரணமடைந்ததற்காக மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக, அந்தப் பாதைக்கு அவரை இட்டுச் சென்ற விடயத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்” என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இது சுயநலமல்ல பொதுநலம் : ரஜினிகாந்த்!!

நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி ரசிகர்கள் நடத்திய கூட்டத்தில் வீடியோவில் பேசினார். அதில் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவது தன் நோக்கம் என அவர் கூறியுள்ளார்.

“அரசியல் என்பது சுயநலமல்ல பொதுநலம். மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே நமது நோக்கம். ஆண்டவன் அளித்துள்ள வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக, ஒழுக்கமாக இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டுவருவோம். குடும்பத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வரவேண்டும் என நான் சொல்லவில்லை” என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

50 இலட்சம் இந்திய ரூபாவுக்கு விலைபோன இலங்கை வீரர்!!

ஐபிஎல் போட்டிகளுக்காக இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

50 இலட்சம் இந்திய ரூபா பெறுமதிக்காக அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

யாழில் அடித்துக் கொலை செய்யப்பட்ட பெண் : 21 வயது இளைஞனின் வாக்குமூலம்!!

யாழில் பெண்ணொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இளைஞன் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆணைக்கோட்டை ஆறுகால்மடம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெகநாதன் சத்தியபாமா என்ற 72 வயது பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் பொலிஸார் தெரிவித்ததாவது,

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது கொலை இடம்பெற்ற பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த இரகசிய கமராவில் பதிவாகிய காட்சிகள் மூலம் சந்தேகநபரான 21 வயது இளைஞர் அடையாளம் காணப்பட்டார்.

அத்துடன் குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என தெரியவந்த நிலையில் அவரை கடந்த 24ஆம் திகதி மடக்கிப் பிடித்தோம். இதனையடுத்து சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் தனது வாக்குமூலத்தில்,

நான் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவன் என்பதால் யாழிலுள்ள மருந்தகம் ஒன்றில் போதை மாத்திரைகளை வாங்கி அடிக்கடி பயன்படுத்துவேன். இந்த நிலையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட தினத்தன்று நான் போதைப்பொருளை பயன்படுத்தியிருந்த போதும் எனக்கு மேலும் போதைப்பொருள் தேவைப்பட்டது. எனினும் என்னிடம் போதைப்பொருளை வாங்குவதற்கான பணம் இருக்கவில்லை. அந்த மூதாட்டியின் வீட்டிற்கு அருகிலேயே எங்களது வீடு உள்ளது. அந்த மூதாட்டி வசித்து வந்த வீட்டிற்கு சென்று நுழைந்த போது அவர் அறைக்குள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து அருகிலிருந்த ஸ்டூலின் மூலம் அவரை நான் அடித்துக் கொன்றேன். அதன்பின்னர் அவர் அணிந்திருந்த இரு மோதிரங்கள் மற்றும் காப்பு என்பவற்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டேன். அந்த நகைகளை சண்டிலிப்பாய் – கோணாவளை பகுதியிலுள்ள நண்பனிடம் கொடுத்து 15000 ரூபா தருமாறு கேட்டேன். இருப்பினும் அவர் 5000 ரூபாவை தந்து மீதி பணத்தை மறுநாள் தருவதாக தெரிவித்தார் என குறிப்பிட்டார்.

அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட சிறுவன்? விசாரணைகளில் வெளிவந்த தகவல்!!

ஹட்டன் – எபோட்சிலி பகுதியில் பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்யதமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

பாடசாலையில் களவாடிய சம்பவம் ஒன்றில் ஈடுப்பட்டதாக கூறப்படும் மாணவர்கள் தொடர்பாக அப்பிரதேசத்தில் அரசியல் பிரதிநிதி ஒருவரால் ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட ஹட்டன் பொலிஸார், தற்கொலை செய்துகொண்ட குறித்த மாணவனிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது குறித்த மாணவன் மேலும் சில சகாக்களை பொலிஸாரிடம் காட்டிக் கொடுத்துள்ளார். இவ்வாறு குறித்த மாணவனால் காட்டிக்கொடுக்கப்பட்ட சகாக்களின் வீடுகளுக்கு சென்று பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையடுத்து காட்டிக்கொடுத்த மாணவன் மீது அவ்வீட்டார்கள் சொற்பிரயோகங்களை மேற்கொண்டதால் அவமானம் தாங்க முடியாத அம்மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலையில் களவாடிய சம்பவம் தொடர்பாக குறித்த மாணவனை சகாக்களின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த சிலர் தகாத வார்த்தையில் பேசியமைக்காக வீட்டில் தனிமையில் இருந்த போதே குறித்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை தற்கொலை செய்து கொண்ட மாணவர் பிரசாந்தகுமார்(14) எழுதி வைத்த கடிதம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இப்படியொரு அதிசயம் : வியப்பில் மக்கள்!!

 
தம்புள்ளையில் வித்தியாசமான முறையில் தேங்காய் ஒன்றில் பனைமரக்கன்று ஒன்று வளர்ந்து வியப்பினை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியை சேர்ந்த ஜீ.ஜீ.கருணாரத்ன என்பவரின் தோட்டத்திலேயே இந்த விநோத சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பனைமர விதை ஒன்று நிலத்தில் வளர்ந்துள்ளது. அதன் ஆணி வேர் நிலத்தில் இருந்த தேங்காயுடன் இணைந்து வளர்ந்துள்ளது. இந்நிலையில் பனைமர விதை பெரிதாகியவுடன் தேங்காயின் மேற்பரப்பின் ஊடாக பனைமரக்கன்று வெளியே வந்துள்ளது.

பனைமரக்கன்று ஒரு பகுதியிலும் மறு பகுதியில் தென்னங் கன்றும் உள்ளமை விசேட தன்மைகளில் ஒன்றாகும். இந்த தென்னம் விதையை நாட்டினால், அதிலிருந்து பனை மரமே வளர்ந்து வரும் என தோட்ட உரிமையாளர் கருணாரத்ன தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான அரிய மாற்றங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு என கருணாரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!!

அம்பலந்தோட்டையில் பேருந்திலிருந்து கீழே இறங்க முற்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் மாணவியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பட்டபொல, எட்டம்பகஹா பகுதியில் இன்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர் 18 வயதான எட்டம்பகஹா பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

வவுனியாவில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது!!

வவுனியா இராசேந்திரன்குளம் பகுதியில் கஞ்சாப் பொதியுடன் நபர் ஒருவரை நேற்று(25.01) மாலை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை வவுனியா இராசேந்திரன்குளம் பகுதியில் வீதியால் சென்ற நபர் ஒருவரிடம் சந்தேகத்தில் சோதனை மேற்கொண்ட பொலிசார் அவரிடமிருந்து கஞ்சாப் பொதி ஒன்றினை மீட்டுள்ளனர். சூடுவெந்தபிலவு பகுதியைச் சேர்ந்த 52வயதான நபர் ஒருவரையே பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவரிடம் எவ்வாறு கஞ்சா கிடைக்கப்பெற்றுள்ளது போன்ற ஏனைய விசாரணைகளை நெளுக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் இன்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் நெளுக்குளம் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கற்பகபுரத்தில் 21 வயதுப் பெண் வீட்டின் சமையலறையிலிருந்து சடலமாக மீட்பு!!

வவுனியா கற்பகபுரத்தில் இன்று (26.01.2018) மதியம் 1.30 மணியளவில் 21 வயதுப் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா கற்பகபுரம் 5ம் ஒழுங்கையில் வசித்து வரும் அர்ச்சுனன் கோகிலவதனி ( வயது 21) என்பவர் வீட்டார் சிதம்பரபுரம் சென்ற சமயத்தில் அவரது சகோதரனுடன் வீட்டில் இருந்துள்ளார். சகோதரனும் வெளியே சென்ற சமயத்தில் வீட்டின் சமையலறையில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக காணப்பட்டுள்ளார்.

சில மணி நேரம் கழித்து சகோதரன் வீடு திரும்பிய சமயத்தில் சகோதரி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காப்பீட்டுத் தொகையாக £500,000 வென்றெடுத்த பூனை : சுவாரஸ்ய சம்பவம்!!

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வளர்ப்பு பூனையின் புகைப்படத்தை பயன்படுத்திய நிறுவனத்திடமிருந்து 500,000 பவுண்ட்ஸ் பெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த Tabatha Bundesen என்ற பெண்ணின் வளர்ப்பு பூனையின் புகைப்படத்தை ஒரு நிறுவனம் விளம்பரத்திற்காக பயன்படுத்தியது.

இந்த பூனை கடந்த 2012ம் ஆண்டு இணையதளங்களில் வெளியிடப்பட்ட புகைப்படம் மூலம் மிகவும் பிரபலமானது. கோபத்துடன் இருக்கும் பூனையின் முகத்தை அனைவரும் பார்த்து ரசித்தனர்.

இதனையடுத்து பூனையின் உரிமையாளர் ஒரு நிறுவனத்தை துவங்கி, அதில் பூனையின் புகைப்படத்தை வணிக ரீதியாக பயன்படுத்த தம்மை அணுக வேண்டும் என விளம்பரம் செய்தார்.

இந்நிலையில், கிரனேட் பிவரேஜ் என்ற நிறுவனம் பூனையின் புகைப்படத்தை குளிர்பானம் விளம்பரத்திற்கு பயன்படுத்தப் போவதாக உரிமையாளர் Bundesen இடம் அனுமதி பெற்றது.

ஆனால் அனுமதி இல்லாமல் பல பொருட்களின் விளம்பரத்திற்கு பயன்படுத்தியதால் அந்நிறுவனம் மீது மூன்று ஆண்டுகளுக்கு முன் காப்புரிமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி Tabatha Bundesen என்பவருக்கு 500,000 பவுண்ட்ஸ் தொகை அபராதமாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். தனது வளர்ப்பு பூனையின் மூலம் பெண் ஒருவர் 500,000 பவுண்ட்ஸ் சம்பாதித்த சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பெண்ணின் தாலியை பறித்த இளைஞர் : சொன்ன காரணம் என்ன தெரியுமா?

தமிழகத்தில் பெண்ணின் தாலி சங்கலியை பறித்து பிரேம் போட்டு மாட்டி வைத்திருந்த நபர் கூறிய காரணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை சைதாப்பேடையில் வசித்து வரும் பார் உரிமையாளர் செல்வகணேஷ் என்பவரின் மனைவி குணசுந்தரி கடந்த 21ஆம் திகதி வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபரால் தாக்கப்பட்டார்.

அவரை தாக்கிவிட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கலியை நபர் ஒருவர் பறித்து செல்லும் காட்சிகள் அப்பகுதியின் சிசிடிவி கமெரா ஒன்றில் பதிவாகியிருந்தது.

அதன் உதவியுடன் தேடுதல் வேட்டையை தொடங்கிய பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ஜோன்சன் என்னும் நபரை கைது செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

திருடிய நகை எங்கே என கேட்ட பொலிசார் திகைக்கும் வகையில், நகையை பிரேம் போட்டு மட்டியுள்ளதை காட்டியுள்ளார் ஜோன்சன். திருடிய நகையை விற்றுவிடுவது தான் திருடர்களின் வழக்கம், நீ என்னடா பிரேம் போட்டு மாட்டி வச்ச்சிருக்க ? என பொலிசார் கேட்க, அதற்கு “சார், திருடுனன்னு சொல்லாதிங்க. அது என் முன்னாள் காதலியோட தாலி!” என கூறியுள்ளார்.

ஜோன்சன் கூறியதை கேட்டு திகைத்த பொலிசார், காதலியின் பெயரை கேட்டபோது ஜோன்சன் தவறாக கூறியுள்ளார். குணசுந்தரியின் போட்டோவை காட்டியதும் யார் இவர் என ஜோன்சன் கேட்டதால் தவரு நடந்திருப்பதை பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், ஜோன்சன் சைதாப்பேட்டையில் வசித்தபோது அவருக்கு ஒரு பெண்ணுடன் காதல் இருந்துள்ளது. அந்த பெண்ணுக்கு தற்போது வேறு நபருடன் திருமணம் ஆகியதால் குடி போதையில் அந்த பெண் தான் இந்த பெண் என ஜோன்சன் தவறாக நினைத்து குணசுந்தரியின் சங்கிலியை பறித்து சென்றுள்ளார் என கூறியுள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் ஜோன்சனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.