மொடல் காதலியின் தலையை இரண்டாக துண்டித்த காதலன் : அதிர்ச்சிக் காரணம்!!

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் மொடல் காதலியின் நடத்தையில் சந்தேகப்பட்ட காதலன், கொடூர ஆயுதத்தால் அவரது கழுத்தை இரண்டாக துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை கைது செய்துள்ள பொலிசார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ஜோதி சிங் மும்பையில் செயல்பட்டுவரும் மதுபான விடுதிகளில் நடனக் கலைஞராகவும், மொடலாகும் இருந்து வருகிறார்.

ஜோதி சிங் பணிபுரிந்து வந்த நடன பார்களில் வாடிக்கையாளராக இருந்த பிரதேஷ் பட்டேல் ஏற்கனவே திருமணமான நிலையிலும் இவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். நாளடைவில் இது காதலாக மாறவே இருவரும் அடிக்கடி பட்டேலின் குடியிருப்பு ஒன்றில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி பட்டேலின் பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு திம்பா பகுதியில் அமைந்துள்ள அவரது குடியிருப்புக்கு ஜோதி சிங் சென்றுள்ளார்.

அங்கிருந்து இருவரும் புத்தாண்டை மும்பையில் கொண்டாடும் பொருட்டு சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் திம்பா திரும்பியுள்ளனர்.

இதனிடையே 2 ஆம் திகதி தமது வாகன ஓட்டுனர் மற்றும் அவரது மனைவியுடன் ஜோதி சிங் பட்டேலின் குடியிருப்புக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு இருவருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்படவும், நடத்தையில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி திட்டியுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த பட்டேல் அங்கிருந்த கொடூர ஆயுதத்தால் ஜோதியின் கழுத்தை வெட்டி இரண்டாக துண்டித்துள்ளார்.

இச்சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற ஜோதியின் வாகன ஓட்டுனரும் அவரது மனைவியும் உடனடியாக பொலிசாரிடம் நடந்தவற்றை கூறி புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் தற்போது பட்டேலை கைது செய்துள்ளனர்.

பேரூந்து ஓட்டுநர் 40 கோடிக்கு அதிபதியான கதை : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!!

 
தமிழகத்தில் பள்ளி பேருந்துக்கு ஓட்டுநராக இருந்தவர் தற்போது 40 கோடிக்கு அதிபராக சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெங்கடரமணன், இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர், இவரது மனைவி அரசுப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். தனியார் பள்ளிக்கு வாகன ஓட்டுநரான வெங்கடரமணன் அதற்கிடையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார்.

இதில் வருமானம் அதிகம் வருவதைக் கண்ட அவர், ஓட்டுனர் வேலையை உதறி தள்ளிவிட்டு முழுநேரம் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார்.

அதன்பின் சென்னையில் ஒரு அலுவலகம் சொகுசு கார் என பந்தாவாக இருந்துள்ளார், அந்த நேரத்தில் பிரதீப்குமார் என்பவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 35 ஏக்கர் நிலம் வாங்கித்தரும்படி வெங்கடரமணனை அணுகியுள்ளார். இதில் வெங்கடரமணன் 1.70 கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டதாக கூறி, பிரதீப் குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து பொலிசார் வெங்கடரமணனை பிடிக்க தனிப்படை அமைத்தனர்.

அதற்குள் சென்னையைச் சேர்ந்த மற்றொரு நபரும் அவர் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார். தொடர்ந்து அவர் மீது மோசடி புகார்கள் வந்ததால், பொலிசார் அவரை கூடிய விரைவில் பிடிப்பதற்கு துரிதமாக செயல்பட்டனர்.

இதை அறிந்த வெங்கடரமணன் வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுள்ளார். இதனால் மூன்று வருடமாக வடமாநிலத்தில் அவர் தலைமறைவாக இருந்துள்ளார்.

தொடர்ந்து பொலிசார் அவரை தேடிவந்த வேளையில், அவர் மஹாராஷ்டிராவில் இருக்கும் தகவல் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக அங்கு விரைந்த பொலிசார் அவர் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, அங்கு நிறுவனம் ஒன்று நடத்தி வருவதை கண்டுபிடித்துள்ளனர்.

நிறுவனத்திற்கு சென்ற பொலிசார் அவரின் புகைப்படத்தை காண்பித்து கேட்ட போது, அவர்கள் வெங்கடரமணா இருக்கும் இடத்தை கூறியுள்ளனர். குறித்த இடத்திற்கு சென்ற பொலிசார் அவரை பொறி வைத்து மடக்கி பிடித்து சென்னைக்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், இவர் மீது 40 கோடி ரூபாய்க்கு மோசடி புகார்கள் வந்துள்ளன. சென்னையில் ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தியபோது மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் பணியாற்றியுள்ளார்.

தமிழகத்தில் பொலிசார் இவரை தேடுகின்றனர் என்று தெரிந்தவுடன் அப்பெண் உதவியுடன் மஹாராஷ்டிராவிற்கு சென்றுள்ளார், அங்கு ஒரு கம்பெனியை நடத்தி வந்ததுடன், மும்பையில் இந்திரா ஏர் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஹெலிகாப்டரை வாடகைக்கு விட்டுள்ளார்.

இதற்காக 6 கோடி ரூபாய்க்கு ஹெலிகாப்டர் வாங்கியுள்ளார். பொலிசார் தொடர்ந்து தேடி வந்ததால் மும்பை, மஹாராஷ்டிரா என தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி பொலிசாரிடம் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக செயற்கை போனை அவர் பயன்படுத்தியுள்ளார். உடனடியாக அவர் குறித்து தகவல் வந்ததால், அவரை அங்கு சென்று கைது செய்தோம்.

கைது செய்யப்பட்ட அவர் என் மீது புகார் கொடுத்த அனைவருக்கும் நான் கொடுக்க வேண்டிய பணங்களை கொடுத்து விடுகிறேன், எனக்கு கோடிக் கணக்கில் சொத்து இருக்கிறது என்னை விட்டு விடுங்கள் என்று கூறினார்.

இருந்த போதிலும் அவரது சொத்து விவரங்கள் குறித்து தொடர்ந்து விவரங்களை சேகரித்து வருவதாக கூறியுள்ளனர்.

அழுது புரண்டு கதறிய இளைஞர் : மிரட்டி நடத்தி வைக்கப்பட்ட திருமணம்!!

 
இந்தியாவில் இளைஞர் ஒருவர் கடத்தி வரப்பட்டு விருப்பத்துக்கு மாறாக அவருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. வினோத் யாதவ் என்ற இளைஞர் அங்குள்ள இரும்பு ஆலையில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். வேறு இடத்துக்கு பணியிடை மாற்றம் வேண்டும் என வினோத் விண்ணப்பித்திருந்த நிலையில் ஒரு கும்பல் அவரிடம் வந்து தங்களுக்கு அமைச்சரை தெரியும் என கூறியுள்ளனர்.

அமைச்சரிடம் சென்று பணியிடை மாற்றம் குறித்து கோரிக்கை வைத்தால் உடனடியாக நடக்கும் என ஆசை வார்த்தை கூறி அவரை மொகமா நகருக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஒரு இடத்தில் வினோத்தை அடைத்து வைத்த அவர்கள் அங்கிருந்த பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளனர். இதற்கு வினோத் மறுக்கவே தங்களிடம் இருந்த ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர். இதோடு சம்பவ இடத்தில் இருந்த பெண்களும் வினோத்துக்கு எதிராக செயல்பட்டு அவரை திருமணம் செய்ய வற்புறுத்தினார்கள்.

வினோத் கதறி அழுது கெஞ்சியும் அதை காதில் வாங்கி கொள்ளாத கும்பல் அவரை பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார்கள்.

சம்பவத்தை அங்கிருந்தவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட அது வைரலானது. இதையடுத்து பொலிசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

பீகாரில் இது போன்ற கட்டாய திருமணங்கள் அதிகளவில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரு வாக்கிற்கு 20 ஆயிரம் கொடுத்து வென்றார் டிடிவி தினகரன் : கமல்ஹாசன் விளாசல்!!

ஆர்கே நகரில் ஓட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அபார வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை நடந்து 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனியார் வார இதழில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் 20 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்ததாகவும், ஆர்கே நகர் மக்கள் 20 ரூபாய் டோக்கன்களுக்கு விலை போய்விட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

அதே போல ஆளும் கட்சி சார்பில் ஆர்கே நகர் வாக்காளர்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பணம் பெற்று வாக்களிப்பது என்பது பிச்சை பெறுவது போன்றது என்றும், அதுவும் திருடனிடம் பிச்சை எடுப்பது போன்ற ஒரு கேவலம் எங்கேயாவது உண்டா என்றும் விமர்சித்துள்ளார்.

குமார் சங்ககாரவுக்கு சிறப்பு விருந்து : உணவின் பெறுமதி 38 இலட்சம்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரவுக்கு வழங்கப்பட்ட விருந்துபசாரம் குறித்து தற்போது பரபரப்பாக பேசப்படுகின்றது.
இதில் குமார் சங்ககாரவுக்கு வழங்கப்பட்ட உணவின் விலை 38 இலட்சம் ரூபாய் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
நுவரெலியாவில் உள்ள நட்சத்திர உணவகம் ஒன்றிலேயே குமார் சங்ககாரவுக்கு அண்மையில் சிறப்பு விருந்துபசாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் குமார் சங்ககாரவின் மனைவியும் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது அந்த நட்சத்திர உணவகத்தில் மாஸ்டர் ஷெஃப் விராஜ் ஜயரட்னவினால் தயாரிக்கப்பட்ட 38 இலட்சம் ரூபாய் பெறுமதியான இனிப்பு உணவு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தாமரைக் கோபுரம் ஒன்றுடன் அமைக்கப்பட்ட குறித்த இனிப்பு வகையை, நால்வர் பல்லக்கில் வைத்து சுமந்து வந்துள்ளனர்.
உணவகத்தின் வளாகத்தில் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் குமார் சங்ககாரவுக்கும், அவரது மனைவிக்கும் 38 இலட்சம் ரூபாய் பெறுமதியான உணவு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன்!!

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளளனர்.

சங்குவேலியில் வயல் கிணற்றுக்குள் இருந்த சற்று முன்னர் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் மேற்கு சண்டிலிப்பாயிலுள்ள சீரடி அம்மன் கோயிலுக்கு அருகில் வாழும் இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட இளைஞன் 22 – 23 வயதிற்குட்பட்டவர் என தெரியவந்துள்ளது. குறித்த இளைஞன் கடந்து மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் இன்று சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இளைஞனின் சடலத்தில் பலத்த காயங்கள் காணப்படுவதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா பேரூந்து நிலைய சர்ச்சை முடிவுக்கு வந்தது : 3 மணி முதல் அரச பேரூந்துகள் சேவையில்!!

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஒரு பகுதி வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று இன்று பிற்பகல் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒதுக்கப்பட்ட பகுதி போக்குவரத்துச் சபையினரிடம் வழங்கப்பட்டது.

வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பு போராட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நிறைவுக்கு வந்தது என ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் அ.அருள்பிரகாசம் தெரிவித்தார்.

தமது கோரிக்கை நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே போராட்டம் கைவிடப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். இ.போ. ச பேருந்து சேவைகள் வடக்கு முழுவதும் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

போக்குவரத்து அதிகாரசபையின் பொதுமுகாமையாளர் வல்லிபுரநாதன் பத்மநாதன், வடமாகாண சபை அமைச்சின் பிரதம கணக்காளர் ப.ஜெயராஐா, முதலமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் ஜெயலோரன்ஸ் மற்றும் இலங்கை போக்குவரத்து தலமையக உத்தியோகத்தர்கள், வவுனியா மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கத்தினர், வவுனியா இ.போ.ச ஊழியர்களுக்கிடையே இடம்பெற்ற சந்திப்பின் போது புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இரு தரப்பினரும் சேவையாற்ற சம்மதம் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் சட்டவிரோமாக விற்பனை செய்யப்பட்ட 14 லட்சம் பெறுமதியான புகையிலைப் பொருட்கள் மீட்பு!!

 
வவுனியா நகரத்தில் அமைந்துள்ள இரு வர்த்தக நிலையங்களில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக வவுனியா மதுவரி திணைக்களத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (04.01.2018) காலை குறித்த இரு வர்த்தக நிலையத்திலிலும் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது இரு வர்த்தக நிலையங்களிலும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 14லட்சம் பெறுமதியான புகையினை கைப்பற்றியுள்ளதாகவும் குறித்த உற்பத்தி பொருளை விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வவுனியா மதுவரி திணைக்கள் அத்தியட்சகர் எஸ்.செந்தூர்செல்வன் தெரிவித்தார்.

புகையினையினை உற்பத்தி செய்யும் நபர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவ் உற்பத்தி பொருட்கள் இலங்கையில் பிரபல புகையிலை தயாரிப்பு நிறுவனத்தில் சின்னங்கள், பெயரைப் பயன்படுத்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

வவுனியா ஓமந்தை பொற்கோவிலில் இடம்பெற்ற புதுவருட சிறப்பு பூஜை நிகழ்வு !

வவுனியா ஓமந்தை  அரசர்பதி  ஸ்ரீ கண்ணகை அம்பாள்  ஆலயத்தில்  ஆங்கில புதுவருட  பிறப்பை  முன்னிட்டு 01.01.2018  திங்கட்கிழமை  சிறப்பு பூஜை  நிகழ்வுகள்  இடம்பெற்றது.

 

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் வைத்தியசாலையில்!!

 
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இன்று (04.01.2018) காலை 9.30 மணியளவில் இழுவை இயந்திரமும் மோட்டார் சைக்கிலும் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

பட்டானிச்சூர் வயல்வெளிக்கு அருகாமையில் அமைந்துள்ள வர்த்த நிலையத்தில் பொருட்களை ஏற்றிக் கொண்டு மன்னார் வீதியூடாக பயணித்த இழுவை இயந்திரம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மன்னார் வீதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் 4வது நாளாகவும் தொடர்ந்து இ.போ.ச பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்!!

 
வட மாகாண முதலமைச்சரினால் பழைய பேரூந்து நிலையம் கடந்த (01.01.2018) அதிகாலையுடன் மூடப்பட்டு புதிய பேரூந்து நிலையத்திற்கு இ.போ.சபையினரை செல்லுமாறு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

புதிய பேரூந்து நிலையத்திற்கு செல்ல மறுப்பு தெரிவித்து இ.போ.ச சபையினர் நான்காவது நாளாக இன்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் தங்களது வர்த்தகமும் பாதிக்கப்படும் என தெரிவித்து பழைய பேரூந்து நிலைய கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள 130க்கும் மேற்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கடந்த மூன்று நாட்களாக வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்பு கொடிகளை பறக்க விட்டு கடையடைப்பு செய்து தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். இந் நிலையில் இன்றைய தினம் வர்த்தக நிலையங்களை திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியாவில் 195 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையத்திலிருந்து தனியார் பேரூந்துகள் கடந்த வாரம் முதல் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து தமது சேவையினை முன்னெடுத்து வருகின்றனர்.

வடமாகாண முதலமைச்சர், கொழும்பில் இருந்து சென்ற குழுவினர் மற்றும் வடமாகாண இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் இடையில் நேற்று (03.01.2018) முதலமைச்சரின் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது 40:60 என்ற பங்கீட்டு முறையில் சேவையை முன்னெடுப்பதற்கு வடமாகாண இலங்கை போக்குவரத்து சபை சம்மதித்தமை குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து நேற்று (03.01.2018) மாலை வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட வட மாகாண முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் ரூபினி வரதலிங்கம், சிரேஸ்ட செயலாளர் வியஜலட்சுமி கேதீஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்துரையாடியதுடன் இன்றையதினம் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து தங்களது சேவையினை மேற்கொள்ள இரு தரப்பினர்களும் சம்மதம் தெரிவித்ததாக தெரிவித்தனர்.

புதிய பேரூந்து நிலையத்தினை தனியார் , இ.போ.ச என இரண்டாக பிரித்து தரும் படசத்தில் நாங்கள் செல்ல தயார் என இ.போ.ச வவுனியா சாலை ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.

இ.போ.ச ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றையதினமும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றார்கள். அத்துடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் பருவகால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

விஜயுடன் மீண்டும் இணையும் கீர்த்தி சுரேஷ்!!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 62 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நாயகி யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மெர்சல் படத்தையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாகத் தயாரிக்கும் இந்த படத்தில் விஜயின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பரதன் இயக்கிய பைரவா படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்தப் படத்தில் யோகி பாபு முன்னணி காமடியனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, படத்தொகுப்பு பணிகளை தேசிய விருது வென்ற ஸ்ரீகர் பிரசாத்தும், கலைப் பணிகளை சந்தானமும் கவனிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெர்சல் படத்தை தொடர்ந்து தளபதி 62 படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படம் தீபாவளிக்கு வௌியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளில் சொக்லேட் அழிந்து விடும் அபாயம்!!

பருவநிலை மாற்றங்களால் அடுத்த 30 ஆண்டுகளில் சொக்லேட் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சொக்லேட்டில் இயற்கையாகவே இனிப்பு சுவை கிடையாது. கொக்கோ மரங்களிலிருந்து கிடைக்கும் கொக்கோ பீன்ஸ் சொக்லேட்டின் மூலப்பொருளாகும். கசப்பு சுவை கொண்ட இதனுடன் இனிப்பு சேர்க்கப்பட்டு சொக்லேட் தயாரிக்கப்படுகிறது.

கொக்கோ மரங்கள் ஆபிரிக்க நாடுகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. உலகில் 50 சதவீதம் சொக்லேட் இங்கிருந்து தான் பெறப்படுகிறது. ஐவரி கோஸ்ட் மற்றும் கானா ஆகிய இரு ஆபிரிக்க நாடுகளில் கொக்கோ மரங்கள் அதிக அளவில் உள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அடுத்த 30 ஆண்டுகளில் 2.1 செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

இதனால் சொக்லேட் உற்பத்தி அதிக அளவு பாதிக்கப்படும். கொக்கோ மரங்கள் வளர்வதற்கு அதிகப்படியான மழை தேவை. மழையின்மையால் கொக்கோ பயிரிடல் பெரியளவில் பாதிக்கப்படும் என தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏனைய மரங்களைப் போல கொக்கோ மரங்களை புதிய தொழில்நுட்பங்களின் மூலம் உருவாக்க முடியாது. 90 சதவீத கொக்கோ மரங்கள் சிறிய அளவிலான பண்ணைகள் மூலமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. மழையின் அளவு குறைவதால் கொக்கோ மரங்களின் வளர்ச்சி குறைந்து கொண்டே செல்கிறது. இதனால் ஆண்டிற்கு 1 இலட்சம் தொன் சொக்லேட் பற்றாக்குறை ஏற்படுகின்ற வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர் டங் ஹாகிங்ஸ் தெரிவித்துள்ளார்.

பருவநிலை மாற்றங்களினால் பல்வேறு மரங்கள் அழிந்துவிட்டன. அந்த வரிசையில் கொக்கோ மரங்களும் இணைந்துகொள்ளும் அவல நிலை தோன்றியுள்ளது.

சமூக வலைத்தளத்தில் இப்படி செயற்பட்டால் ஆபத்து : இலங்கை பொலிசார் எச்சரிக்கை!!

சமூகவலைத்தளங்களில் தனிநபருக்கு எதிராகவோ அல்லது நிறுவனங்களுக்கு எதிராக செயற்படுவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக காவல்துறை தலைமையகம் எச்சரித்துள்ளது.
அண்மைக்காலமாக முகப்புத்தகம் உள்ளிட்ட அனைத்து சமூகவலைத்தளங்களிலும் ஒருவருக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு அநாகரீகமான இடுகைகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
குறிப்பாக ஆபாச நடிகர் நடிகைகளின் உடலையும், பழிவாங்க நினைப்பவரின் தலைப்பகுதியையும் இணைத்து பதிவேற்றம் செய்யும் கலாசாரம் இலங்கையில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் யாரேனும் பாதிக்கப்பட்டால் உடனடியாக அறியத்தருமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுகொண்டுள்ளது.
இதன்படி, 0112 320 141/ 0112 320 142/ 0112 320 143/ 0112 320 144/ 0112 320 145 அல்லது 0112 326 979 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு சைபர் பிரிவிற்கு அறிவிக்க முடியும், பதிவேற்றப்பட்ட இடுகைகளை அகற்றி கொள்வதற்காக report@cert.gov.lk நிறுவனத்திற்கு 0112 691 692 என்ற இலக்கத்திற்கு அறிவிக்க முடியும்.
சமூகவலைத்தளங்களில் ஆபாச புகைப்படங்கள் காணொளிகளை பதிவேற்றம் செய்தல், தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்தல், மத ரீதியான கருத்துக்களை தவறான வழியில் பயன்படுத்துதல், விபசாரத்திற்கான விளம்பரங்களை மேற்கொள்ளுதல் என்பன தண்டனைக்குரிய குற்றமாகும்.
அதேபோன்று, போதைப்பொருள் விற்பனைக்கான தொடர்புகளை அறிவித்தல், தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான எழுத்துரு அல்லது காணொளி பதிவேற்றங்கள் மேற்கொள்ளல் உள்ளிட்ட முதன்மை குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று  பொலிஸ் தெரிவித்திருக்கிறது.
இதேவேளை, சட்டவிரோத ஈடுபடுவர்கள் தொடர்பிலும் அவர்களின் குடும்ப பின்னணி தொடர்பிலும் ஊடகங்களில் பகிரங்கமாக பொது விளம்பரம் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பை ஆக்கிரமிக்கப் போகும் சீனாவின் புதிய திட்டம்!!

கொழும்பில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரில் 60 மாடிகளைக் கொண்ட மூன்று கட்டிடங்களை அமைக்கும் மாபெரும் திட்டத்துக்கு சீனா முதலீடு செய்யவுள்ளது.

இந்த 60 மாடிகளைக் கொண்ட மூன்று கட்டிடங்களையும், வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சீன துறைமுக நிறுவனம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் இந்த மூன்று கட்டிடங்களையும் அமைக்கும் என பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க கொழும்பில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த மாபெரும் திட்டமானது, இலங்கையின் பிரதான துறைமுகமான கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனூடாக இந்து சமுத்திரத்தில் தமது செல்வாக்கை அதிகரிப்பதே சீனாவின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பேரூந்து நிலைய விவகாரத்தில் மீண்டும் குழப்பம் : இ.போ.ச ஊழியர்கள் உண்ணாவிரதத்தில்!!

இ.போ.சபை வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் இ.போ.சபையின் வட பிராந்திய தொழிற்சங்க ஊழியர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அந்த வகையில் குறித்த உணவுத்தவிர்ப்புப் போராட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இ.போ.சபையின் வட பிராந்திய இணைந்த தொழிற்சங்க செயலாளர் அருளானந்தம் அருள்பிரகாஸ் தெரிவித்துள்ளார்.
வட மாகாண முதலமைச்சர், கொழும்பில் இருந்து சென்ற குழுவினர் மற்றும் வட மாகாண இ.போ.சபையினருக்கு இடையில் நேற்று வட மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது புதிய பேருந்து நிலையத்தில் இ.போ.சபையினருக்கு ஒரு பகுதி தருவதாகவும், தூர இடத்திற்கு செல்லும் பேருந்துகளும், வெளி மாகாணங்களில் இருந்து வரும் பேருந்துகளும் நேராக செல்ல வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் இணைந்த நேர அட்டவணையில் இ.போ.சபையினருக்கு 40 வீதமும், தனியாருக்கு 60 வீதமும் கொடுத்து புதிய நேர அட்டவணை தயாரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே போராட்டத்தை கைவிடுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி.சந்ரசிறி அறிவித்திருந்தார்.
இருப்பினும் இந்த தீர்மானத்திற்கு தம்மால் உடன்பட முடியாது என தெரிவித்து இ.போ.சபையின் வட பிராந்திய இணைந்த தொழிற்சங்க ஊழியர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
ஏற்கனவே இ.போ.சபையின் பணிப்புறக்கணிப்பினால் பாதிப்பினை எதிர்நோக்கியிருந்த நிலையில், இ.போ.சபையின் வட பிராந்திய இணைந்த தொழிற்சங்க ஊழியர்களின் தீர்மானத்தினால் மீண்டும் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வியை மக்கள் எழுப்பியுள்ளனர்.
-தமிழ்வின்-