சுமார் 150 ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழவுள்ள Blue Moon சந்திர கிரகணம்!!

 

2018 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இம்மாதம் 31ஆம் திகதி நிகழும் என சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையங்கள் எதிர்பார்ப்பு வௌியிட்டுள்ளன.

சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிதான முழு சந்திர கிரகணம் இதுவாகும். இந்த சந்திர கிரகணம் நீல நிலா (Blue Moon) என அழைக்கப்படுகிறது.

ஜனவரி 31 ஆம் திகதி நள்ளிரவில் இந்த முழு சந்திர கிரகணம் ஏற்படுவதால் பசுபிக் பெருங்கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த சந்திர கிரகணம் மாலை வேளையில் முழு நிறைவாகத் தெரியும்.

அலாஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா ஆகிய நாடுகளில் இந்த சந்திர கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை தெரியும். மற்ற வட மற்றும் மத்திய அமெரிக்காவில் சந்திரன் மறையும் நேரம் குறுக்கிடும்.

மொத்தமாக இந்த முழு சந்திர கிரகணம் 77 நிமிடங்கள் நிகழும் என space.com தெரிவித்துள்ளது.

முழு கிரகணம் பிடிக்கும் நேரத்தில் சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகத் தெரியும். மேல் விளிம்பு இருளாக இருக்கும்.

இந்த முழு சந்திர கிரகணத்தை விட்டால் அடுத்த முழு சந்திர கிரகணம் டிசம்பர் 31, 2028 இல் நிகழும். பிறகு ஜனவரி 31, 2037 இல் நிகழும். இந்த இரண்டுமே முழுமுற்றான சந்திர கிரகணங்களாகும்.

Blue Moon முழு சந்திர கிரகணம் கடைசியாக நிகழ்ந்தது மார்ச் 31, 1866 ஆம் ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

காட்டேரியிலிருந்து விலகிய ஹன்சிகா!!

வைபவ் நடிப்பில் டீகே இயக்கத்தில் உருவாகவிருக்கும் காட்டேரி என்ற படத்திலிருந்து நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த முன்னணி நடிகை ஹன்சிகா விலகியிருக்கிறார்.

இது குறித்து படக்குழுவினரிடம் விசாரித்தபோது,‘காட்டேரி படத்தின் திரைக்கதைக்கு ஹன்சிகாவின் பங்களிப்பு நன்றாக இருக்கும். ஆனால் படத்தின் பட்ஜட் போதுமான அளவிற்கு இருப்பதால் ஹன்சிகாவிற்கு பதிலாக வேறு முன்னணி நடிகைகளிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறோம். அனேகமாக தமன்னா அல்லது காஜல் அகர்வால் நடிக்கக்கூடும்’ என்று தெரிவித்தனர்.

ஆனால் திரையுலகில் விசாரித்தபோது, இயக்குநர் டீகே படத்தின் திரைக்கதையில் ஆபாச நெடியையும், இரட்டை அர்த்த வசனம் மற்றும் காட்சி அதிகமாக இருப்பதால் முன்னணி நடிகைகள் நடிக்க மறுக்கிறார்கள் என்றும், முன்னணி நடிகை நிக்கி கல்ராணி இது போல் நடித்ததால் அவருக்கு தற்போது வாய்ப்பு குறைந்துள்ளதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆணின் சடலம் மீட்பு : பொலிஸார் தீவிர விசாரணை!!

 
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய் கரையோரப் பிரதேச காட்டுப்பகுதி நீரோடையொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிிவித்துள்ளனர்.

தமக்கு கிடைத்த தகவலை அடுத்தே அந்த சடலத்தை நேற்று மாலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருக்கிறார்கள்.

இதேவேளை, மீட்கப்பட்ட சடலம் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. எனினும் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மனித சஞ்சாரமற்ற பகுதியிலுள்ள புதர்கள் அடர்ந்த நீரோடையொன்றில் இச்சடலம் துர்வாடை வீசிய நிலையில் சிதைவடைந்து காணப்பட்டுள்ளது.

இது கொலையா அல்லது நீரோடையில் தவறிவிழுந்ததனால் ஏற்பட்ட உயிரிழப்பா? என்பதை ஊகிக்க முடியாதுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தப்பிச் சென்றிருந்த பாலியல் துஷ்பிரயோக குற்றவாளி மூன்றாண்டுகளின் பின் சிக்கினார்!!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2014 ஆம் ஆண்டு குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் 3 ஆண்டுகளின் பின் கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவருக்கான தண்டனைத் தீர்ப்பு வரும் 9ம் திகதி வழங்கப்படும் எனவும் அன்றுவரை குற்றவாளியை யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்குமாறும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்று உத்தரவிட்டார்.

சாவகச்சேரியில் கடந்த 2007ம் ஆண்டு 16 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் முறைப்பாட்டையடுத்து சந்தேகநபரும் அவருக்கு உதவிய ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்று சந்தேகநபர்கள் இருவருக்கு எதிராகவும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைகளின் நிறைவில் 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது.

சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்துக்கு முதலாவது எதிரிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் அவருக்கு உதவிய குற்றத்துக்கு இரண்டாவது எதிரிக்கு 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையையும் வழங்கி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் அப்போதைய நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார்.

இரண்டாவது எதிரி தலைமறைவாகியதால் அவரைக் கைது செய்ய பொலிஸாருக்கு மேல் நீதிமன்று கட்டளை வழங்கியது.

இந்த நிலையில் 3 ஆண்டுகளின் பின் இரண்டாவது எதிரி கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரை நேற்று (04) வரை விளக்கமறியலில் வைத்திருந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில் குற்றவாளி நேற்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவருக்கு தண்டனைத் தீர்ப்பு வாசித்துக் காண்பிக்கப்பட வேண்டும். அதன் பின்னரே தண்டனைக் காலம் ஆரம்பிக்கப்படும்.

தற்போது மேல் நீதிமன்ற பருவகால விடுமுறை நடைமுறையில் உள்ளதால் குற்றவாளியை வரும் 9ஆம் திகதி மன்றில் முற்படுத்துமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

யாழில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன் : பொலிசார் தீவிர விசாரணை!!

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளளனர்.

சங்குவேலி வயல் கிணற்றுக்குள் இருந்து நேற்று சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலிகாமம் மேற்கு சண்டிலிப்பாயிலுள்ள சீரனி அம்மன் கோயிலுக்கு அருகில் வாழும் இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட இளைஞன் 21 – 22 வயதிற்குட்பட்டவர் என தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இளைஞனின் சடலத்தில் பலத்த காயங்கள் காணப்படுவதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் பதற்றம் : மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் இ.போ.ச பேரூந்துகள்?

 
இன்று வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட வட மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் பொது முகாமையாளர் வல்லிபுரநாதன் பத்மநாதன், வடமாகாண சபை அமைச்சின் பிரதம கணக்காளர் ஜெயராஐா, முதலமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் ஜெயலோரன்ஸ் மற்றும் இலங்கை போக்குவரத்து தலைமையக உத்தியோகத்தர்கள், வவுனியா மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கத்தினர், வவுனியா இ.போ.ச ஊழியர்களுக்கிடையே இடம்பெற்ற சந்திப்பின் போது புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இரு தரப்பினரும் சேவையாற்ற சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மாலை 4 மணியளவில் வெளிமாவட்டத்தினைச் சேர்ந்த இ.போ.ச பேரூந்து புதிய பேரூந்து நிலையத்திற்கு சென்ற சமயத்தில் இ.போ.ச ஊழியர்களுக்கும் தனியார் பேரூந்து ஊழியர்களுக்குமிடையே முறுகல்நிலை ஏற்பட்டது .

அதனையடுத்து 119 அவசர இலக்கத்திற்கு அழைத்து தனியார் போக்குவரத்து ஊழியர்கள் முறையிட்டமையினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இரு தரப்பினரையும்
சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட சமயத்தில் இ.போ.ச பேருந்து சாரதி ஒருவர் மீது பொலிசார் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்து குறித்த இ.போ.ச சாரதியான ஏ.எம்.இர்ஸாட் (வயது 30) என்பவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து தமது ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனத் தெரிவித்து புதிய பேருந்து நிலையத்தில் சேவை மேற்கொண்ட அனைத்து இலங்கை போக்குவத்துச் சபை பேருந்துகளும் வவுனியா சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலை ஊழியர்கள் தமக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து அரச, தனியார் பேரூந்துகள் சேவையில் : மீண்டும் முறுகல்நிலை!!

வவுனியா பேரூந்து நிலைய சர்ச்சை முடிவுக்கு வந்தது : 3 மணி முதல் அரச பேரூந்துகள் சேவையில்!!

வவுனியாவில் 4வது நாளாகவும் தொடர்ந்து இ.போ.ச பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து அரச, தனியார் பேரூந்துகள் சேவையில் : மீண்டும் முறுகல்நிலை!!

 
வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு செல்ல மறுப்பு தெரிவித்து இ.போ.ச சபையினர் இன்று (04.01.2017) நான்காவது நாளாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் இன்று வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட வட மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் பொது முகாமையாளர் வல்லிபுரநாதன் பத்மநாதன், வடமாகாண சபை அமைச்சின் பிரதம கணக்காளர் ஜெயராஐா, முதலமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் ஜெயலோரன்ஸ் மற்றும் இலங்கை போக்குவரத்து தலைமையக உத்தியோகத்தர்கள், வவுனியா மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கத்தினர், வவுனியா இ.போ.ச ஊழியர்களுக்கிடையே இடம்பெற்ற சந்திப்பின் போது புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இரு தரப்பினரும் சேவையாற்ற சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வட மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் பொது முகாமையாளர் வல்லிபுரநாதன் பத்மநாதன்,

நேற்று வட முதலமைச்சருடன் இடம்பெற்ற கூட்டத்திற்கு அமைய இன்று இரு தரப்பினரும் புதிய பேரூந்து நிலையத்திற்கு அழைக்கப்பட்டு ஒர் தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.

புதிய பேரூந்து நிலையத்தில் உள்ளுர் சேவைகள், வெளியூர் சேவைகள் என இரு கட்டிடங்கள் உள்ளன. அவற்றில் வெளியூர் சேவைகள் கட்டிடத்திலிருந்து இ.போ.ச பேரூந்துகளும் உள்ளுர் சேவைகள் கட்டிடத்திலிருந்து தனியார் சேவைகளும் என பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இன்றிலிருந்து ஒரு மாதத்திற்கு இந்நடைமுறை செயற்படுத்தப்படுவதுடன் அதன் பின்னர் இரு தரப்பினரும் இணைந்து வெளியூர் சேவைகள் கட்டிடத்திலிருந்து வெளியூர் சேவைகளும் உள்ளுர் சேவைகள் கட்டிடத்திலிருந்து உள்ளுர் சேவைகளும் இடம்பெறுமென தெரிவித்தார்.

இதன் போது இ.போ.ச சபையினருக்கும் வட மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் பொது முகாமையாளர் வல்லிபுரநாதன் பத்மநாதனுக்கும் இடையே பேரூந்து நிலையத்தினை இரண்டாக பிரிப்பதில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டன

பின்னர் வவுனியா இ.போ.ச சபையினர் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து சேவையாற்ற சம்மதம் தெரிவித்து இன்று பிற்பகல் 3 மணியிலிருந்து தங்களது சேவையினை தொடர்ந்துள்ளனர்.

மாலை 4 மணியளவில் வெளிமாவட்டத்தினைச் சேர்ந்த இ.போ.ச பேரூந்து புதிய பேரூந்து நிலையத்திற்கு சென்ற சமயத்தில் இ.போ.ச ஊழியர்களுக்கும் தனியார் ஊழியர்களுக்கிடையே சிறு வாய்த்தகராறு ஏற்பட்டது .

அதனையடுத்து 119 அவசர இலக்கத்திற்கு அழைத்து தனியார் போக்குவரத்து ஊழியர்கள் முறையிட்டமையினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்களது வர்த்தகமும் பாதிக்கப்படும் என தெரிவித்து பழைய பேரூந்து நிலைய கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள 130க்கும் மேற்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கடந்த மூன்று நாட்களாக வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்பு கொடிகளை பறக்க விட்டு கடையடைப்பு செய்து தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந் நிலையில் இன்றைய தினம் வர்த்தக நிலையங்களை திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருடத்தில் அறிமுகமாகும் iPhone X Plus!!

அப்பிள் நிறுவனம் கடந்த வருடம் iPhone X எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது. இக் கைப்பேசிக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளமையை அடுத்து இவ் வருடத்தில் இதன் அடுத்த பதிப்பான iPhone X Plus கைப்பேசியினை அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.

இதில் இரு வகையான கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. ஒன்று LCD திரையினைக் கொண்டதாகவும், மற்றையது OLED திரையினைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்படவுள்ளது.

மேலும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி இத் திரைகளை LG நிறுவனமே அப்பிளிற்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைகளின் அளவானது 6.5 அங்குல அளவுடையதாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.

இலங்கை அணியின் புதிய அணித்தலைவர் யார்?

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக தினேஷ் சண்டிமால் அல்லது அஞ்சலோ மத்யூஸ் தெரிவு செய்யப்படுவர் என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இதற்காக இலங்கை அணிக்கான புதிய அணித்தலைவரை இலங்கை கிரிக்கெட் சபை வரும் 9ஆம் திகதி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணிக்கு எதிரான தொடரில், திசரா பெரேரா தலைமையிலான இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் தோல்வியுற்றது. இதன் காரணமாக எழுந்த விமர்சனத்தினால், அணித்தலைவரை மாற்ற வேண்டிய சூழல் உருவானது.

இந்நிலையில் தினேஷ் சண்டிமால் மற்றும் மத்யூஸின் பெயர்கள், அணித் தலைவருக்கான பரிசீலணையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அணியின் புதிய பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்ட ஹதுருசிங்கவின் தெரிவு, கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சண்டிமலாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

எனினும் தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்திலிருந்து உடல்நலம் தேறி வரும் மத்யூஸின் பெயரும், அணித்தலைவருக்கான பட்டியலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

களவு போன உலகின் மிக விலை உயர்ந்த மது போத்தல் : விலை என்ன தெரியுமா?

டென்மார்க்கில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் இருந்து உலகின் மிக விலை உயர்ந்த ஓட்கா மது போத்தல் ஒன்று களவு போயுள்ளது.

டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் அமைந்துள்ள கஃபே 33 என்ற பிரபல மதுபான விடுதியில் ஓட்கா மது போத்தல்களின் சிறப்பு கண்காட்சி நடைபெற்றுள்ளது.

இதில் பங்குபெற்ற உலகின் மிக விலை உயர்ந்த ஓட்கா மது போத்தல் ஒன்று விஷமிகளால் திருடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

களவு போன மது போத்தலின் மதிப்பு சுமார் 1.3 மில்லியன் டொலர் என கூறப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளியால் இழைக்கப்பட்ட குறித்த மது போத்தலை ரஷ்யாவில் இருந்து வரவழைத்திருந்ததாக அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

டென்மார்க்கில் உள்ள சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் குறித்த மது போத்தல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. குறித்த மது போத்தலுக்கு காப்பீடு எதுவும் செய்யப்படாத நிலையில், மர்ம நபர் திட்டமிட்டே கொள்ளை இட்டு சென்றுள்ளதாக மதுபான விடுதி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

களவு போன போத்தல் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவினால் உரிய சன்மானம் வழங்கப்படும் என கஃபே 33 உரிமையாளர் Brian Engberg தெரிவித்துள்ளார்.

கனடாவில் இரண்டு மகள்களை கொலை செய்த தந்தை கைது!!

கனடாவில் இரண்டு மகள்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் பிரிட்டீஸ் கொலம்பியா மாகாணத்தின் ஓக் பே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 25 ஆம் திகதி Chloe (6) மற்றும் Aubrey (4) ஆகிய இரண்டு சகோதரிகள் பொலிசாரால் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

அங்கு ஆண் ஒருவர் காயத்துடன் இருந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது காயமடைந்த நபரின் பெயர் அண்ட்ரூ ரொபர்ட் (43) எனவும் அவர் இரண்டு சகோதரிகளின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது.

அண்ட்ரூ மருத்துவமனையில் இருந்து சென்றுள்ள நிலையில் இருவரையும் கொலை செய்ததாக அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிசார் அண்ட்ரூவிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் வேறு தகவலை தர பொலிசார் மறுத்துவிட்டனர்.

அண்ட்ரூவும் அவர் மனைவி சாரா காட்டனும் கடந்த 2013ஆம் ஆண்டு பிரிந்துவிட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவு படி Chloe (6) மற்றும் Aubrey ஆகிய இருவரும் சிறிது காலம் தாய் மற்றும் சிறிது காலம் தந்தையுடன் வசித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

15 பொலிசாரின் காலணிகளை நாவால் சுத்தம் செய்த நபர் : கேள்வி கேட்டதால் நேர்ந்த கொடூரம்!!

குஜராத் தலித் ஒருவரை பொலிசாரின் காலணிகளை நாவால் சுத்தம் செய்ய வைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
குஜராத் மாநிலம் அம்ராய்வாடியைச் சேர்ந்தவர் ஹர்ஷத் ஜாதவ், 40 வயதான இவர் சாய்பாபா நகரில் டிவி பழுதுபார்க்கும் வேலையை செய்து வருகிறார்.
கடந்த டிசம்பர் 29ஆம் திகதி சாய்பாபா கோவிலில் கூட்டம் மற்றும் பதட்டமான நிலை இருந்து உள்ளது. அதனைக் கண்ட ஜாதவ், என்ன காரணம் என தெரிந்து கொள்வதற்காக அங்கு சென்றுள்ளார்.
அங்குள்ள நபர் ஒருவரிடம் என்ன விடயம் நடக்கிறது என கேட்டுள்ளார். ஆனால், அவர் கேள்வி கேட்ட நபர் வினோத்பாய் எனும் பொலிஸ் என்பது பின்னர் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, வினோத்பாய் எந்த காரணமும் இன்றி ஜாதவ்வை திட்டி அடித்துள்ளார், தடுக்க வந்த ஜாதவின் மனைவி, தாயாரையும் தடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மூவரையும் பொலிசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களின் சாதியை கேட்டுள்ளனர்.
அங்கிருந்த 15 பேருடைய காலணியையும் ஜாதவை நாவால் சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதுடன் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த விடயம் தற்போது வெளியே தெரியவந்ததால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவலர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜாவத்திற்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காதலியை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை : ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
கனடாவில் பிரபல நடிகை Ellan Page தனது காதலியான Emma Portner-ஐ திருமணம் செய்து கொண்டதாக இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்துள்ளார்.

கனடாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் Ellan Page (வயது 30), இவருக்கும் 23 வயது நடனக் கலைஞரான Emma Portner என்னும் பெண்ணுக்கும் காதல் இருந்ததாக கிசுகிசுக்கள் எழுந்தன.

அதன்பின் வெளிப்படையாகவே இருவரும் டேட்டிங் செல்வது உள்ளிட்ட செயல்களின் மூலம் தாங்கள் காதலித்து வருவதை உலகிற்கு தெரியப்படுத்தினர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் Ellan Page அறிவித்துள்ளார்.

அவரைப் பின்தொடர்பவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து
வரும் நிலையில் சில ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருவதாகவும் தெரிகிறது.

மேலும், “இப்படியொரு அழகான பெண் Emma, என் வாழ்க்கைத் துணையாக கிடைத்ததை நம்ப கூட முடியவில்லை” என மகிழ்ச்சி அடைந்துள்ளார் Ellan Page.

இதற்கு முன்பு சமந்தா தோமஸ் என்னும் நடிகையுடன் 18 மாதங்கள் காதலில் இருந்து பின்னர் பிரிந்தவர் Emma என்பது குறிப்பிடத்தக்கது.

பாடசாலையில் பரீட்சை எழுதும் போது குழந்தை பெற்றெடுத்த சவுதி மாணவி!!

சவுதியில் பாடசாலையில் பரீட்சை எழுதி கொண்டிருந்த மாணவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் அங்கேயே பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

மேற்கு சவுதி அரேபியாவில் வசிக்கும் மாணவி பகுதி நேர படிப்பு படித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான அவர் தனது ஆங்கிலப் பரீட்சையை எழுத அங்குள்ள உயர் நிலை பள்ளிக்கூடத்துக்கு சென்றுள்ளார்.

பரீட்சை எழுத தொடங்கிய நிலையில் மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவர் வலியால் துடித்த நிலையில் அது குறித்து பள்ளி நிர்வாகிகள் அம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் மாணவிக்கு பாடசாலையில் இருந்த இரண்டு பெண் ஊழியர்கள் பிரசவம் பார்த்துள்ளார்.

பிரவத்தில் மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது, பின்னர் தாயும், சேயும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பாடசாலை தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

குழந்தைக்கு ஜைனாப் என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்பாராத நிலையில் தனக்கு ஏற்பட்ட பிரசவத்துக்கு உதவிய பள்ளி ஊழியர்களுக்கு மாணவி நன்றி தெரிவித்துள்ளார்.

மொடல் காதலியின் தலையை இரண்டாக துண்டித்த காதலன் : அதிர்ச்சிக் காரணம்!!

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் மொடல் காதலியின் நடத்தையில் சந்தேகப்பட்ட காதலன், கொடூர ஆயுதத்தால் அவரது கழுத்தை இரண்டாக துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை கைது செய்துள்ள பொலிசார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ஜோதி சிங் மும்பையில் செயல்பட்டுவரும் மதுபான விடுதிகளில் நடனக் கலைஞராகவும், மொடலாகும் இருந்து வருகிறார்.

ஜோதி சிங் பணிபுரிந்து வந்த நடன பார்களில் வாடிக்கையாளராக இருந்த பிரதேஷ் பட்டேல் ஏற்கனவே திருமணமான நிலையிலும் இவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். நாளடைவில் இது காதலாக மாறவே இருவரும் அடிக்கடி பட்டேலின் குடியிருப்பு ஒன்றில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி பட்டேலின் பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு திம்பா பகுதியில் அமைந்துள்ள அவரது குடியிருப்புக்கு ஜோதி சிங் சென்றுள்ளார்.

அங்கிருந்து இருவரும் புத்தாண்டை மும்பையில் கொண்டாடும் பொருட்டு சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் திம்பா திரும்பியுள்ளனர்.

இதனிடையே 2 ஆம் திகதி தமது வாகன ஓட்டுனர் மற்றும் அவரது மனைவியுடன் ஜோதி சிங் பட்டேலின் குடியிருப்புக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு இருவருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்படவும், நடத்தையில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி திட்டியுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த பட்டேல் அங்கிருந்த கொடூர ஆயுதத்தால் ஜோதியின் கழுத்தை வெட்டி இரண்டாக துண்டித்துள்ளார்.

இச்சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற ஜோதியின் வாகன ஓட்டுனரும் அவரது மனைவியும் உடனடியாக பொலிசாரிடம் நடந்தவற்றை கூறி புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் தற்போது பட்டேலை கைது செய்துள்ளனர்.

பேரூந்து ஓட்டுநர் 40 கோடிக்கு அதிபதியான கதை : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!!

 
தமிழகத்தில் பள்ளி பேருந்துக்கு ஓட்டுநராக இருந்தவர் தற்போது 40 கோடிக்கு அதிபராக சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெங்கடரமணன், இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர், இவரது மனைவி அரசுப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். தனியார் பள்ளிக்கு வாகன ஓட்டுநரான வெங்கடரமணன் அதற்கிடையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார்.

இதில் வருமானம் அதிகம் வருவதைக் கண்ட அவர், ஓட்டுனர் வேலையை உதறி தள்ளிவிட்டு முழுநேரம் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார்.

அதன்பின் சென்னையில் ஒரு அலுவலகம் சொகுசு கார் என பந்தாவாக இருந்துள்ளார், அந்த நேரத்தில் பிரதீப்குமார் என்பவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 35 ஏக்கர் நிலம் வாங்கித்தரும்படி வெங்கடரமணனை அணுகியுள்ளார். இதில் வெங்கடரமணன் 1.70 கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டதாக கூறி, பிரதீப் குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து பொலிசார் வெங்கடரமணனை பிடிக்க தனிப்படை அமைத்தனர்.

அதற்குள் சென்னையைச் சேர்ந்த மற்றொரு நபரும் அவர் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார். தொடர்ந்து அவர் மீது மோசடி புகார்கள் வந்ததால், பொலிசார் அவரை கூடிய விரைவில் பிடிப்பதற்கு துரிதமாக செயல்பட்டனர்.

இதை அறிந்த வெங்கடரமணன் வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுள்ளார். இதனால் மூன்று வருடமாக வடமாநிலத்தில் அவர் தலைமறைவாக இருந்துள்ளார்.

தொடர்ந்து பொலிசார் அவரை தேடிவந்த வேளையில், அவர் மஹாராஷ்டிராவில் இருக்கும் தகவல் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக அங்கு விரைந்த பொலிசார் அவர் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, அங்கு நிறுவனம் ஒன்று நடத்தி வருவதை கண்டுபிடித்துள்ளனர்.

நிறுவனத்திற்கு சென்ற பொலிசார் அவரின் புகைப்படத்தை காண்பித்து கேட்ட போது, அவர்கள் வெங்கடரமணா இருக்கும் இடத்தை கூறியுள்ளனர். குறித்த இடத்திற்கு சென்ற பொலிசார் அவரை பொறி வைத்து மடக்கி பிடித்து சென்னைக்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், இவர் மீது 40 கோடி ரூபாய்க்கு மோசடி புகார்கள் வந்துள்ளன. சென்னையில் ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தியபோது மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் பணியாற்றியுள்ளார்.

தமிழகத்தில் பொலிசார் இவரை தேடுகின்றனர் என்று தெரிந்தவுடன் அப்பெண் உதவியுடன் மஹாராஷ்டிராவிற்கு சென்றுள்ளார், அங்கு ஒரு கம்பெனியை நடத்தி வந்ததுடன், மும்பையில் இந்திரா ஏர் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஹெலிகாப்டரை வாடகைக்கு விட்டுள்ளார்.

இதற்காக 6 கோடி ரூபாய்க்கு ஹெலிகாப்டர் வாங்கியுள்ளார். பொலிசார் தொடர்ந்து தேடி வந்ததால் மும்பை, மஹாராஷ்டிரா என தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி பொலிசாரிடம் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக செயற்கை போனை அவர் பயன்படுத்தியுள்ளார். உடனடியாக அவர் குறித்து தகவல் வந்ததால், அவரை அங்கு சென்று கைது செய்தோம்.

கைது செய்யப்பட்ட அவர் என் மீது புகார் கொடுத்த அனைவருக்கும் நான் கொடுக்க வேண்டிய பணங்களை கொடுத்து விடுகிறேன், எனக்கு கோடிக் கணக்கில் சொத்து இருக்கிறது என்னை விட்டு விடுங்கள் என்று கூறினார்.

இருந்த போதிலும் அவரது சொத்து விவரங்கள் குறித்து தொடர்ந்து விவரங்களை சேகரித்து வருவதாக கூறியுள்ளனர்.