வவுனியாவில் திடீரென பற்றியெரிந்த மோட்டார் சைக்கிள்!!

 
வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக நேற்று (27.11.2017) இரவு 8.50 மணியளவில் மோட்டார் சைக்கில் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வேப்பங்குளம் 6ம் ஒழுங்கை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக டிஸ்கவர் ரக மோட்டார் சைக்கிலை நிறுத்தி விட்டு கடைக்கு சென்று விட்டு திரும்பிய சமயத்தில் மோட்டார் சைக்கில் எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

உடனடியாக அயலவரின் உதவியுடன் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் நெளுக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி எஸ்.அத்தனாயக்க மோட்டார் சைக்கில் தீப்பற்றியமை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

வவுனியாவில் ஈரோஸ் அமைப்பின் மாவீரர் நாள் நிகழ்வு!!

 
வவுனியா கனகராயன்குளம் குறிசுட்டகுளத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுப் பூங்காவில் மாவீர் தின அஞ்சலி நிகழ்வு நேற்று (27.11.2017) நடைபெற்றது.

ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான அருளப்பு இராஜநாயகம் தலைமையில் நடைபெற்ற இன்நிகழ்வில் பொதுச்சுடரை மாவீரர் தம்பிராசா சுபாசினி (தமிழ்மொழி) மாவீரர் தம்பிராசா சத்தியகுமாரி (தமிழழகி) ஆகியோரின் தாயார் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து மாவீரருக்கான நினைவு சுடர் அவர்களின் நினைவிடத்தில் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்நிகழ்வில் மாவீரர் குடும்பத்தை சேந்தவர்கள் முன்னாள் போராளிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகாமையில் நினைவேந்தல் நிகழ்வு!!

 
வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகாமையில் மாவீரர் நாள் நினைவேந்தல் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட​ பிரஜைகள் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்களை நினைவில் சுமந்து அகவணக்கத்தினைச் செலுத்துமுகமாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குறித்த மாவீரர் துயிலுமில்லத்தில் கூடி மாவீரர்களை அஞ்சலித்தனர்.

மாவீரர்களுக்கான ஈகச்சுடரினை ஆறு மாவீரர்களின் உறவினர்கள் ஒரே நேரத்தில் ஏற்றினர். இதேவேளை மாவீரர் உறுதிமொழிப் பாடலும் குறித்த நேரத்தில் ஒலிக்கவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.‌

வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டது : தமிழ் சிங்கள மாணவர்களேடையே முறுகளின் எதிரொலி!!

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் இன்று மாலை முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக வளாக முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வளாகத்தின் விடுதியில் முதலாம் வருட மாணாவர்களால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டிருந்தது.
இந் நிலையில் குறித்த புகைப்படங்களை முகப்புத்தகத்தில் பதிவேற்றியதை தொடர்ந்து சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்கள் மீது தாக்கியதுடன் தமக்கு பாதுகாப்பு தருமாறு வளாகத்தின் முதல்வரிடம் இரவு 10.30 மணியளவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் சிங்கள மாணவர்கள் சமூக வலைத்தளத்தில் தமிழ் மாணவர்களை அச்சுறுத்தும் விதமான பதிவுகளை மேற்கொண்டமையினால் தமிழ் மாணவர்களும் வாளகத்தின் முதல்வரிடம் தமக்கான பாதுகாப்பை ஏற்படுத்துமாறு கேரிக்கை விடுத்திருந்தனர்.
இந் நிலையில் பரீட்சை ஆரம்பமாகிய இன்றைய தினம் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட முரண்பாடுகளை சமரசம் செய்வதற்கும் விசாரணைகளை நடத்துவதற்கும் ஏதுவாக வாளகத்தினை காலவரையறையின்றி மூட வளாகத்தின் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இத்தகவலை அனைத்து மாணவர்களும் அறிந்துகொள்ளும் விதமாக வாளாகத்தின் அனைத்து பீடங்களிலும் குறித்த அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் மாவீரர் நாள் அனுஸ்டிப்பு!!

 
வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வவுனியா குளக்கட்டில் மாவீரர் தின நிகழ்வு இன்று (27.11.2017) மாலை 6.05 மணிக்கு வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் அனுஸ்டிக்கப்பட்டது.

மாவீரர் லெப்டினன் நா.தயாபரனின் தாயார் நாகேந்திரன் பரமேஸ்வரி ஈகைச் சுடரேற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.

மாவீரர்களை நினைவுகூறும் இந்நாளில் வவுனியா குடியிருப்பில் நான்கு மாவீரர் குடும்பங்கள் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கையில் தீபங்களை ஏற்றியிருந்ததுடன் மாவீர்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றப்பட்டது.

தீபம் ஏற்றியதை தொடர்ந்து மாவீரர் படங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது  நிகழ்வின் இறுதியில் நான்கு மாவீரர் குடும்பங்களுக்கு தமிழ் விருட்சம் அமைப்பினரால் தென்னங்கன்று உட்பட உலர்உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியாவில் மாவீரர் தினத்தினை முன்னிட்டு இளைஞர்களினால் இரத்ததானம்!!

 
நவம்பர் மாதம் என்றதும் நினைவுக்கு வருவது மாவீரர் தினம். தமிழர்களின் இதயங்களில் மறக்க முடியாத தியாகிகளான மாவீரர்களை இன்று உலகெங்கிலும் பரந்து வாழும் ஈழத் தமிழர்கள் உணர்ச்சிபூர்வமாக அஞ்சலிக்கின்றனர்.

இம்முறை வன்னியிலுள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களில் அஞ்சலி நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அமைப்புகள், பொது மக்கள் எனப் பல்வேறு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடக்கில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் வவுனியா மாவட்ட இளைஞர்களினால் இன்று (27.11.2017) மதியம் 1 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்ததானம் வழங்கப்பட்டது.

வவுனியாவில் பொது அறிவு வினாடி வினா அரைஇறுதிப் போட்டிகள்!!

 
வவுனியா மாவட்ட சமூகசேவைத்திணைக்களம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அரச மற்றும் அரச சார்பற்ற மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே நெல்லி ஸ்ராரின் அனுசரணையுடன் பொது அறிவு வினாடி வினாப்போட்டியை 25.11.2017 (சனிக்கிழமை), 26.11.2017 (ஞாயிறு) மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் நடத்தினர்.

வவுனியா மாவட்ட செயலகம், ஓகான் நிறுவனம், சேவ் அக்ற் நிறுவனம், இணையும் கரங்கள் நிறுவனம், செட்டிகுள பிரதேச செயலகம், வவுனியா வடக்கு பிரதேச செயலகம், மாவட்ட பொது வைத்தியசாலை, விவசாய அபிவிருத்தி திணைக்களம், நைட்டா நிறுவனம், தேசிய தொழில் பயிற்சி அதிகார சபை, விவசாயக்கல்லூரி, தமிழ் விருட்சம், செவிப்புலனற்றோர் சங்கம் போன்றன போட்டிகளில் கலந்து கொண்டன.

வவுனியா பொது வைத்தியசாலை , வவுனியா வடக்கு பிரதேசசெயலகம், செட்டிகுள பிரதேச செயலகம் , வவுனியா மாவட்டச் செயலகம், விவசாயக்கல்லூரி, விவசாய அபிவிருத்தி திணைக்களம், நைட்டா நிறுவனம், சேவ் அக்ற் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் கால் இறுதிப்போட்டியில் பங்குபற்றியதுடன் இப் போட்டிகள் நேற்று (26.11.2017) காலை 9 மணிக்கு மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் நடைபெற்றது.

அரையிறுதிப் போட்டிக்கு வவுனியா மாவட்டச் செயலகம், வவுனியா வடக்கு பிரதேசசெயலகம், செட்டிகுள பிரதேச செயலகம் , விவசாய அபிவிருத்தி திணைக்களம் ஆகியன தெரிவாகின. அடுத்த கிழமை அரையிறுதிப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

போட்டிகளை மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் நடாத்தினார். அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் செல்வி தி.கலைவாணி, கே.வசந்தன, மற்றும் ஒய்வு பெற்ற இலங்கை தொலைதொடர்பு நிறுவன அதிகாரி திரு.கனேஸ் ஆகியோர் நடுவர்களாகக் கடமையாற்றினர்.

13 வயதில் குழந்தை பெற்றெடுத்த பிரித்தானிய பள்ளிச் சிறுவன் : டிஎன்ஏ சோதனையில் நடந்த திருப்பம்!!

 
பிரித்தானியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு 13 வயது சிறுவனுக்கு குழந்தை பிறந்தது, இச்சிறுவனே பிரித்தானியாவின் இளம் வயது தந்தை என கருதப்பட்டு வந்த நிலையில், அக்குழந்தைக்கு வேறு ஒரு நபர்தான் தந்தை என டிஎன்ஏ சோதனையின் மூலம் தெரியவந்தது.

மன்செஸ்டரை சேர்ந்த Alfie Patten (13) என்ற பள்ளி சிறுவனுக்கும், இவனது காதலியான Chantelle Steadman (14) என்ற சிறுமிக்கும் குழந்தை பிறந்தது. இச்சிறுவனே பிரித்தானியாவின் இளம்வயது தந்தை என கூறப்பட்டு வந்த நிலையில், இச்சிறுவனின் தாய் இதனை தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்.

ஆனால், காதலி Chantelle Steadman கூறுகையில், Alfie Patten தான் இக்குழந்தையின் தந்தை. அவன் மிகச்சிறந்த தந்தையாக இருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாங்கள் இருவரும் முறையாக எங்கள் குழந்தையை வளர்ப்போம் என கூறிவந்தார்.

இதனை முற்றிலுமாக மறுத்த சிறுவனின் தாய், நிச்சயம் இது எனது மகனின் குழந்தையாக இருக்க முடியாது, ஏனெனில் அவனே ஒரு குழந்தை, இன்றுவரை சில விடயங்களுக்காக அவன் பலரை சார்ந்து தான் இருக்கிறான்.

இக்குழந்தை எனது மகனுக்கு பிறந்ததாக இருக்காது என்பதை நிரூபிக்க, டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என கூறியதையடுத்து டிஎன்ஏ பரிசோதனை செய்தததையடுத்து, அக்குழந்தை Tyler Barker(15) என்ற 15 வயது சிறுவனின் குழந்தை என தெரியவந்தது.

இச்சிறுவனும், Chantelle வும் காதலர்களாக இருந்துள்ளனர், குடிபோதையில் இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்ததன் விளைவாக Chantelle கர்ப்பமடைந்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து Alfie Patten தனது தாயுடன் சென்றுவிட்டான், இருப்பினும் இச்செய்தி பல செய்திதாள்களில் வெளியானதால் தனக்கு அவமானமாக இருந்தது என்றும் பள்ளிப்படிப்பினை என்னால் தொடரமுடியவில்லை என Alfie Patten கூறியுள்ளான்.

மேலும் வேலை தேடி சென்றால் கூட எனக்கு வேலை கொடுக்க மறுத்தார்கள் என வேதனையுற்றுள்ளான்.

குழந்தையை ஆற்றில் வீசி கொன்ற இளம் தாய் : தண்டனை வழங்காமல் விடுவித்த நீதிமன்றம்!!

 
குழந்தையின் உடலில் ஆவி இருப்பதாக நினைத்து ஆற்றில் வீசி கொலை செய்த தாயின் மனநிலையை கருதி நீதிமன்றம் சிறை தண்டனையிலிருந்து விடுவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் சோபினா நிகட் (24). இவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தனது 15 மாத பெண் குழந்தை சனயாவின் உடலில் ஆவி புகுந்துள்ளதாக நினைத்து வீட்டின் அருகில் இருக்கும் ஆற்றில் தூக்கி வீசி கொன்றுள்ளார்.

இது குறித்து பொலிசார் சோபினாவிடம் விசாரித்த போது தனது குழந்தையை ஆபிரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் கடத்தி சென்றுவிட்டதாக கூறியுள்ளார். பின்னர் விசாரணையில் அவர் தான் மகளை கொன்றார் என தெரியவந்தது. பயத்தின் காரணமாக பொய் சொல்லிவிட்டதாக சோபினார் பொலிசாரிடம் கூறினார்.

இதையடுத்து சோபினாவை பொலிசார் கைது செய்த நிலையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது.

அவரின் கணவர் முன்னரே பிரிந்து சென்றதும் உறுதியானது. சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. சமுதாய திருத்தம் சட்ட அடிப்படையில் 12 மாத தண்டனை அவருக்கு கொடுக்கப்பட்ட போதும் ஏற்கனவே 529 நாட்கள் பொலிஸ் காவலில் சோபியா இருந்ததால் அதை கணக்கில் கொண்டு தற்காலிகமாக தற்போது விடுவிக்கபட்டுள்ளார்.

சோபியா மனநிலை சரியில்லாதவர் என்பதால் அவர் சிகிச்சை பெறவே இத்தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

20 ஆண்டுகள் சிறைவாசம் : பிணையில் வந்த ஆயுள் தண்டனை கைதியை திருமணம் செய்த பெண்!!

 
கோவை மாவட்டத்தில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் பிணையில் வெளிவந்தபோது அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பழனிபாபா என்பவர் கடந்த 1997ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையைத் தொடந்து, கோவையில் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் கிருஷ்ணசாமி என்ற ஆசிரியர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் கைதான ரிஸ்வான் பாஷா என்பவர் உள்ளிட்ட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை சாய்பாபா கொலனி பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தமில்லை என்று, அவரது குடும்பத்தினரும், இஸ்லாமிய அமைப்புகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

44 வயதான ரிஸ்வான், பல முறை பிணை கேட்டு விண்ணபித்த போதும் அவரை சிறைத்துறை நிர்வாகம் சிறையில் இருந்து விடுவிக்கவில்லை.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அவர் 28 நாள்கள் பிணை பெற்று வெளியே வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, பிணையில் வந்த ரிஸ்வானுக்கு, சமீரா பானு என்ற பெண்ணுடன் இன்று திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து ரிஸ்வானின் தந்தை கூறியதாவது, எங்கள் குடும்பத்திற்கு ரிஸ்வான் ஒரே வாரிசு. அவனுக்கு திருமணம் செய்து வைத்து, அவனுக்காக கட்டிவைத்திருந்த வீட்டினை அவனிடம் எப்படியாவது ஒப்படைத்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனது மகன் விரைவில் வெளிவரவேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.

மகளுக்கு நிச்சயதார்த்தம் ஆன நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் திருத்துறைப்பூண்டியை அடுத்த அம்மலூர் கிராமத்தில் கணேசன் என்பவர் மனைவி ராசாத்தி மகள் கீதா மற்றும் மகன் ஹரிஹரசுதனுடன் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கீதாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஜனவரி மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்றிரவு மணமகன் வீட்டார் கணேசனிடன் தொலைபேசியில் பேசியுள்ளனர். பின்னர் மகன் ஹரிஹரசுதனை, தனது வீட்டிற்கு எதிரே உள்ள மற்றொரு வீட்டில் படுக்க வைத்த கணேசன், மனைவி, மகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

காலையில் ஹரிஹரசுதன் வீட்டுக்கு வந்து பார்த்த போது மூவரும் சடலமாக கிடந்துள்ளனர். தகவலறிந்து சென்ற பொலிசார் மூவரின் சடலத்தையும் கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

பணம் இல்லாததால் மகளின் திருமண வரவேற்பை மாடு வதைக் கூடத்தில் நடத்திய கூலித் தொழிலாளி!!

நீலகிரி மாவட்டத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் போதிய பணம் இல்லாத காரணத்தால் தனது மகளின் திருமணத்தை மாடுகள் வதை கூடத்தில் நடத்தியுள்ளார்.

பொன்னுசாமி என்பவரின் மகள் மீனாவுக்கும், சுகுமார் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

பொன்னுசாமியின் வீடு அருகே உள்ள குசுமகிரி முருகன் கோவிலில் சுகுமாருக்கும், மீனாவுக்கும் திருமணம் நடந்தது.

இதன்பின்னர், திருமண வரவேற்பை நடத்துவதற்கு தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் தான் வேலைபார்த்து வரும் கூடலூர் துப்புகுட்டி பேட்டையில் நகராட்சிக்கு சொந்தமான மாடுகளை வதை செய்யும் கூடத்தில் நடத்தி திட்டமிட்டு, அதனை மண்டபாக மாற்றியுள்ளார்.

அதன்படியே, மாடுகள் வதை கூடத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பில் உற்றார் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

சூரியனில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஓட்டைக் காரணமாக பூமிக்கு பாதிப்பு : நாசா தகவல்!!(வீடியோ)

சூரியனில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஓட்டையிலிருந்து வெளியேறும் சூரிய காற்று பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது.

சூரியனின் மேற்பரப்பில் மிகப்பெரிய ஓட்டை விழுந்திருப்பதையும், அதன் வழியாக அதிவேகத்தில் வெளியேறும் சூரிய காற்று, பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் மற்றும் சூரிய மின்சக்தி கருவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என நாசா தெரிவித்துள்ளது.

நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வு மையம், சூரியனின் மேற்பரப்பை கடந்த 8 ஆம் திகதி படம் பிடித்து ஆய்வு மேற்கொண்டது.

அந்த புறஊதா படத்தில், சூரியனின் மேற்பரப்பில் கருப்பாக மிகப்பெரிய ஓட்டை ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதன் வழியாக சூரிய வெப்பக் காற்று அதிவேகமாக வெளியேறி வருகிறது.

சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெப்பக் காற்று வெளியேறுவது அடிக்கடி நிகழும் சாதாரண நிகழ்வுதான் என்றாலும், இந்த ஓட்டை வழியாக அதிவேகத்தில் சூரியக்காற்று வெளியேறி வருகிறது.

சூரியனில் ஏற்படும் அகலமான ஓட்டை ‘கரோனா’ என அழைக்கப்படுகிறது.

சூரியனின் காந்தபுல இயக்கம் காரணமாக இந்த ஓட்டைகள் ஏற்படுகிறது. அதில் இருந்து வெளிப்படும் சூரிய பிழம்புகள், கரோனா பகுதிக்குள் தற்காலிக ஓட்டைகளை ஏற்படுத்தும்.

சூரியனை சுற்றியுள்ள மற்ற பகுதியைவிட, இது அடர்வு குறைவான பகுதியாக உள்ளது. வழக்கமான சூரியகாற்றை விட, இந்த ஓட்டையிலிருந்து வெளியேறும் சூரிய ஒளிக்கற்றை துகள்கள் அதிவேகமாக வெளியேறுகிறது என விண்வெளி வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகிறது.

இந்த அதிவேக ஒளிக்கற்றை, பூமியின் காந்த மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் செயற்கைகோள்களும், சூரிய மின்சக்தி கருவிகளும் பாதிப்படைகின்றன.

சூரிய சுழற்சி காரணமாக இன்னும் பல கரோனா ஓட்டைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என விண்வெளி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மரக்கறி விலைகள் அதிகரிப்பு!!

மரக்கறி விலை 15 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. கொழும்பு மெனிங் சந்தையில் தற்போது மரக்கறி விலை துரிதமாக அதிகரித்து செல்வதாக அதன் செயலாளர் காமினி ஹதுந்கே தெரிவித்துள்ளார்.

இதேவேளை தம்புளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நுவரெலியாவிலிருந்து வருகின்ற மரக்கறியின் விலை 30 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

தற்போது நிலவுகின்ற மழையுடனான வானிலை காரணமாக இவ்வாறு மரக்கறியின் விலை உயர்வடைந்துள்ளது.

அந்தவகையில் தம்புள்ளை பொருளாதார மத்தியநிலயைத்தில் போஞ்சி ஒரு கிலோகிராம் 100 ரூபாவாகவும் தக்காளி ஒரு கிலோ 45 ரூபாவாகவும் கறிமிளகாய் ஒரு கிலோவின் விலை 280 தொடக்கம் 300 ரூபாவரையும் பச்சைமிளகாய் ஒரு கிலோ 650 தொடக்கம் 700 ரூபா வரையும் புடலங்களாய் 120 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

மேலும் நுவரெலியா மறக்கிறியின் விலை லீக்ஸ் ஒரு, கிலோகிராம் 160 தொடக்கம் 170 ரூபா வரையும் கரட் ஒரு கிலோ 160 தொடக்கம் 180 ரூபா வரை காணப்படுவதுடன் கோவா ஒரு கிலோ 110 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் காதலால் இரட்டை சோக சம்பவம் : இரு உயிர்கள் பலி!!

பேஸ்புக் சமூக வலைத்தளத்தினூடாக காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட பெண் ஒருவருக்கும் ஆண் ஒருவருக்கும் உலகத்தை விட்டு பிரிந்து செல்ல வேண்டிய துயரமிகு சம்பவங்கள் இரண்டு வரக்காபொல பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

பேஸ்புக் மூலம் அறிமுகமான தனது காதலியை பார்ப்பதற்காக பூகொடையிலிருந்கு கண்டிக்கு மோட்டார் சைக்கிலில் சென்று கொண்டிருந்த 30 வயதுடைய இளைஞன் வரக்காபொல மாஹேன பகுதியில் வைத்து பஸ் ஒன்றுடன் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் பூபொட மண்டாவல பிரதேசத்தில் வசித்து வரும் உதய கமல் மாலதெனிய என்ற இளைஞனாவார்.

குறித்த இளைஞன் கடந்த சில மாதங்களுக்கு முன் நாவலப்பிட்டி பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுடன் பேஸ்புக் மூலம் காதல் தொடர்பை வளர்த்துக் கொண்டுள்ளார்.

தனது பேஸ்புக் காதலியை சந்திப்பதற்காக கண்டி தலதா மாளிகைக்கு அருகில் வருமாறு கூறி காதலிக்கு நிறைய பரிசுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு செல்லும் போதே வரக்காபொல பகுதியில் வைத்து பஸ் ஒன்றுடன் மோதி உயிரிழந்துள்ளார்.

பேஸ்புக் காதலால் மற்றுமொரு சோக சம்பவமும் வரக்காபொலயில் அரங்கேறியுள்ளது.

பேஸ்புக் மூலம் அறிமுகமான காதலன் தன்னை ஏமாற்றி விட்டதால் விரக்தியடைந்த நிலையில் வரகாபொல தொலங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட குறித்த பெண் பேஸ்புக் மூலமாக இரண்டு வருடத்திற்கும் மேலாக நபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இரண்டு வருடத்தில் பேஸ்புக் காதலனை ஒரு தடைவ கூட நேரில் சந்தித்ததில்லை இதனால் விரக்தியடைந்த குறித்த பெண் 14 பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த இரு சம்பவங்கள் குறித்தும் வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

அமெரிக்கா ரஷ்யா மோதல் : இரகசியங்களை அம்பலப்படுத்தும் பேஸ்புக்!!

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தை வெளிநாடுகளில் இருந்து இயக்கிய போலி செய்தி பக்கங்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம் வெளியிட உள்ளது.

இதன்மூலம் தாங்கள் பின்பற்றிய பேஸ்புக் பக்கம் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டதா என்பதை அமெரிக்க மக்கள் தெரிந்துகொள்ள முடியும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஷ்யாவில் இருந்து செயல்பட்ட ரஷ்ய அரசுக்காக பதிவேற்றப்பட்ட செய்திகளை, 12.6 கோடி அமெரிக்கர்கள் பார்த்திருக்கக்கூடும் என ஏற்கனவே அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

ரஷ்யாவை சார்ந்த இணைய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்டு தற்போது நீக்கப்பட்டுள்ள பக்கங்களை பின்பற்றி இருக்கிறார்களா என்பதை மக்கள் தெரிந்துகொள்ள பிரத்யேக வசதி ஒன்றையும் அந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த வசதி வரும் டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படும்.

நூற்றுக்கணக்கான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு பின்னாலிருந்து செயல்பட்ட அந்த இணைய ஆராய்ச்சி நிறுவனம், அதிலிருந்து ஆயிரக்கணக்கான அரசியல் சார்ந்த செய்திகளை வெளியிட்டிருந்தது.

ஹார்ட் ஆஃப் டெக்சாஸ், பீயங் பேட்ரியாடிக், மற்றும் செக்யூர்ட் பார்டர்ஸ் போன்ற பேஸ்புக் பக்கங்களை, அமெரிக்கர்கள் தயாரித்தது போன்ற பிம்பத்தில் அவர்கள் வடிவமைத்திருந்தனர்.

சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பி, அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த நினைத்தது அபத்தமான செயல் என்று கடந்த 2006ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் தெரிவித்திருந்தார்.

அப்போதிருந்து, ரஷ்யாவை சேர்ந்த செயற்பாட்டாளர்களால் பதியப்பட்ட ஆயிரக்கணக்கான பதிவுகள் மற்றும் பணம் கொடுத்து செலுத்தப்பட்ட விளம்பரங்களை அந்நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது.

பிரசாரங்கள் மற்றும் போலி செய்திகளை பரப்ப அனுமதியளித்ததாகவும், இது குறித்த பிரச்சனைக்கான தீர்வு காண நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதாகவும் பேஸ்புக் நிறுவனம் விமர்சிக்கப்பட்டது.

டொனால்டு டிரம்ப் வெற்றிப் பெற்ற கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தாக்கம் ஏற்படுத்தியதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வந்தது.

“2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும், அதன் பின்னரும், பேஸ்புக்கை பயன்படுத்தி வெளிநாட்டவர்கள் நம்மை பிளவுப்படுத்த முயற்சி செய்ததை மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்” என பேஸ்புக் தனது வலைதளப் பதிவில் தெரிவித்திருந்தது.

அதனால்தான், தாங்கள் கண்டுபிடித்த தகவல்களை பொதுமக்களுக்கு பகிரங்கமாக தெரிவிப்பதோடு, விசாரணை அதிகாரிகளுக்கும் அதனை வழங்கியுள்ளதாக அந்நிறுவனம் கூறியிருக்கிறது.