அமெரிக்க அரசு ஆண்டு தோறும் வழங்கிவரும் ‘க்றீன் கார்ட் லொட்டரி’ திட்டத்தை இரத்துச் செய்யப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் நேற்று (1) தாக்குதல் நடத்திய தீவிரவாதி, மேற்படி லொட்டரி திட்டம் மூலமே அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருந்தார். இதைச் சுட்டிக்காட்டியே இத்திட்டத்தை இரத்துச் செய்யப்போவதாக ட்ரம்ப் தெரிவித்தார்.
“எமது நாட்டு மக்களின் பாதுகாப்பே எனது முதலும், முக்கியமானதுமான நோக்கம். அதை உறுதிப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் தவறில்லை என்பதே எனது எண்ணம். அதன்படி, க்றீன் கார்ட் லொட்டரி திட்டத்தை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கிறேன். வெகு விரைவில் இத்திட்டம் இரத்துச் செய்யப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
1990ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட க்றீன் கார்ட் லொட்டரி திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் ஐம்பதாயிரம் பேர் அமெரிக்கக் குடியுரிமை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் ஒரு கோடியே நாற்பது இலட்சம் பேர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தனர்.
இத்திட்டத்தை இரத்துச் செய்வதன் மூலம், அமெரிக்காவில் ஆண்டுதோறும் குடியுரிமை பெறுபவர்களின் விகிதாசாரம் 50%ஆல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு ஆண்டில் க்றீன் கார்ட் திட்டத்தின் கீழ் எதிர்வரும் 7ஆம் திகதி வரை பதிவுசெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ட்ரம்பின் அறிவிப்பையடுத்து இவ்வாண்டு பதிவு செய்பவர்களின் விண்ணப்பங்கள் இரத்தாகலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துச் செல்லும் போராட்டத்திற்கு உதவியையும் ஆதரவையும் வழங்க வேண்டிய பெரும் பொறுப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள பொது அமைப்புகள் அரசியல் கட்சிகள் மற்றும் கல்விசார் சமூகத்தினர் மற்றும் அனைவருக்கும் நிச்சயம் உண்டு. என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் -தெரிவித்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைகோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்து வந்த போராட்டத்தின் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை கல்விச் செயற்பாடுகளுக்கு தடை விதித்ததுடன் விடுதிகளில் இருந்தும் வெளியேறுமாறு உத்தரவிட்டது. இது தொடர்பில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தமது ஆதரவினைத் தெரிவித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற உடனடிக் கோரிக்கையையும், அவ்வாறு மாற்றப்பட்டதன் பின்பு, தமது வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிவு காண வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து, அநுராதபுரம் சிறையில் சாகும் வரை உணவுத் துறப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியற் கைதிகள் மூவரின் கோரிக்கைகளை இழுத்தடிப்பின்றி உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்திய கோரிக்கையானது யாழிலுள்ள பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள், மற்றும் மக்கள் அமைப்புகளால் விடுக்கப்பட்டது. இவர்களுடன் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டார்கள்.
தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் அப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போது அவர்களுக்கு உதவியையும் ஆதரவையும் வழங்க வேண்டிய பெரும் பொறுப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள பொது அமைப்புகள் அரசியல் கட்சிகள் மற்றும் கல்விசார் சமூகத்தினர் மற்றும் அனைவருக்கும் நிச்சயம் உண்டு.
எனவே மாணவர்களோடு நாமும் இணைந்து போராட வேண்டியது அவசியம். அவ்வாறு இணைந்து போராடாவிட்டாலும் குறைந்தபட்சம் போராடும் மாணவர்களினது நலன்களைப் பேணும் நடவடிக்கைகளிலாவது ஈடுபடல் அவசியம். அதனை விடுத்து மாணவர்களிற்கு அநாவசியமான அச்சுறுத்தல்களையோ இடைஞ்சல்களையோ ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது.
மாணவர்களின் போராட்டம், அவர்களது கோரிக்கை நியாயம் என ஏற்றுக்கொண்டால் அதனை ஆதரிக்க வேண்டும் மாறாக எவராவது அல்லது எந்த அமைப்புகளாவது அவர்களது கோரிக்கையோ, போராட்டமோ நியாயமற்றது என்றோ அரசியல் கைதிகளின் விடயத்தில் தாங்கள் மாறான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக கருதினாலோ அவர்கள் தங்களது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படையாக வெளிப்படுத்துதல் வேண்டும். எவரும் ஒருபோதும் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிக்க முடியாது.
அந்த வகையில் பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது ஏற்கனவே பொது அமைப்புகளுடன் இணைந்து இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர்கள், போராடியவர்கள் என்ற அடிப்படையிலும் பல்கலைக்கழக சமூகத்தின் ஓர் அங்கம் என்ற வகையிலும் மாணவர்களின் போராட்டம், அவர்களது கோரிக்கை நியாயம் என ஏற்றுக்கொண்டு அவர்களின் போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதோடு அவர்களுடன் கரம் கோர்க்கின்றோம். இதுவே பல்க-லைக்கழக ஊழியர் சங்கத்தின் நிலைப்-பா-டும் -என குறிப்பிடப்பட்டுள்ளது.
வவுனியா செட்டிகுளம் முதலியார்குளம் பகுதியில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயம் உடைப்பு வவுனியா செட்டிகுளம் முதலியார்குளம் பகுதியில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பிள்ளையார் சிலைகள் விஷமிகளால் உடைக்கப்பட்டு வீதியில் வீசப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்ற உள்ளதாக அறியப்படுகிறது இது சம்பந்தமாக ஆலய பரிபாலன சபையினர் இன்று காலை 6மணியளவில் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் கடந்த சில காலமாக வவுனியாவில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..!
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்காதிருக்க, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவுடனான நாளைய சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு, அக் கட்சி சார்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்தநிலையில், நேற்றையதினம், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடி, இது பற்றி கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்காதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று இந்த விடயம் தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு எழுத்துமூலம் தெரியப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் நேற்று (01.11.2017) காலை 11 மணியளவில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சியிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி இ.போ.சபையில் 3கிலோ 610கிராம் கேரள கஞ்சாவினை பயணப்பொதியில் வைத்து கடத்திச்சென்ற கிளிநொச்சியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் ராஜ்மோகன் என்பரை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா மேல் நீதிமன்றத்தில் நேற்று மூவருக்கு மரண தண்டனை வழங்கி வவுனியா மேல் நிதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டு வவுனியா செட்டிகுளம் கப்பாச்சி பகுதியில் புத்தளம் பகுதியைச் சேர்ந்த மொஹமட் மிஹால்துவன் ஏக்கீன் என்பவருக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டிற்காக செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த வீரையா ரவீந்திர ஜோதி, நேசராசா மறுபெயர் ராஜி, குமார் ஆகிய மூவருமே இவ்வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டனர்.
2016ஆம் ஆண்டு 6ஆம் மாதம் 2ஆம் திகதி இவர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றத்தில் மூன்று எதிரிகளுக்கு எதிராகவும் குற்றப்பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கானது 2ஆம் மற்றும் 3ஆம் எதிரிகள் இன்றிய விளக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த 2ஆம் மற்றும் 3ஆம் எதிரிகளுக்கு ஏற்கனவே வவுனியா மேல் நிதிமன்றத்ததால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று இவ்வழக்கு தீர்ப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதையடுத்து 1ஆம் எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளமையால் அவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது
வுழக்கு தொடுநர் தரப்பில் வழக்கை அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் நெறிப்படுத்தியிருந்தார்.
வவுனியா 2ஆம் குறுக்கு தெரு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன கும்பாபிசேகத்தை முன்னிட்டு 02.11.2017 வியாழக்கிழமை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணிவரை எண்ணெய் காப்பு இடம்பெறுகின்றது .
நாளை 03.11.2017 வெள்ளிகிழமை 7.00 மணிமுதல் இடம்பெற உள்ளது .
வவுனியா பூவரசங்குளம் குருக்களூர் பகுதியில் வைத்து விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட அதிரடிப்படையினர் நேற்றைய தினம் (30.10.2017) 3 அடி தொடக்கம் 5 அடி வரையிலான மூன்று யானை தந்தங்களை மீட்டுள்ளதுடன் குருக்கள் புதுகுளத்தை சேர்ந்த வேலன் சிவலிங்கம், வெளிக்குளம் பகுதியை சேர்ந்த ராஜசாமி சிவராசா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்
கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களும் கைது செய்யப்பட்ட நபர்களும் நேற்றைய தினம் இரவு 10.30 மணியளவில் வவுனியா பொலிஸாரிடம் விசேட அதிரைப்படையினர் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கண்மாய் தூர்வாரும் பணிக்காக தாங்கள் சேமித்து வைத்திருந்த உண்டியல் தொகையினை பள்ளிச் சிறுமிகள் கொடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள கண்மாய் கடந்த 40 ஆண்டுகள் தூர்வாரப்படாமல் இருந்ததால், அந்த கண்மாயில் இறைச்சி கழிவுகள் மற்றும் சீமைக்கருவேல மரங்கள் என மோசமான நிலையில் காட்சி அளித்தது.
இதனால் கண்மாயை சீரமைக்க பல முறை மனு அளித்தும் பலன் அளிக்காததால், தன்னார்வ அமைப்பினர் பொதுப்பணித்துறையிடம் அனுமதி கோரினர்.
இதற்கான அனுமதி கடந்த ஆண்டே கிடைத்ததால், கண்மாய் இரண்டே மாதங்களில் தூர்வாரப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்ததால் இரண்டாவது முறையாக கண்மாயை தூர்வாரும் பணி துவங்கப்பட்டது.
இவர்களுக்கு லயன்ஸ் கிளப் ஜே.சி.பி இயந்திரம் கொடுத்து உதவியது. கோட்டாச்சியர் சுகன்யா இந்த பணியைத் துவக்கி வைத்தார்.
7 நாட்களாக நடந்துவரும் இப்பணிக்கு, பள்ளிக் குழந்தைகள் தியாகேஷ், இளமதி, தர்ணிஸ்ரீ ஆகியோர் தங்களின் சிறுசேமிப்புத் தொகையான 40 ரூபாயை உண்டியலுடன் வழங்கினர்.
இதே போன்று தியானேஷ் என்ற 10-ஆம் வகுப்பு மாணவரும் தனது சிறுசேமிப்பு தொகையான 2,000 ரூபாய் பணத்தை கண்மாய் தூர்வாரும் பணிகளுக்காக அளித்துள்ளார். இந்த இளம் தலைமுறையினரின் செயல் அப்பகுதி மக்களை நெகிழவைத்துள்ளது.
நூறு சதவீதம் பொருந்தியும் மகனுக்காக சிறுநீரகத்தை தானமாக வழங்கிய முடியாமல் பரிதவிக்கிறார் அவரது தந்தை.
அமெரிக்காவை சேர்ந்த தம்பதி Anthony Dickerson- Carmellia Burges, இவர்களது குழந்தை AJ Dickerson. தற்போது இரண்டு வயதாகும் AJ Dickerson-க்கு பிறந்ததில் இருந்தே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தான்.
அதாவது குறைபிரசவத்தில் பிறந்த AJ Dickerson-னின் சிறுநீரகம் வேலை செய்வதில்லை. இவரது தந்தையான Anthony-னின் சிறுநீரகம் அவரது மகனுக்கு நூறு சதவீதம் பொருந்தியுள்ளது.
எனவே கடந்த 3ம் திகதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய Emory Hospital மருத்துவர்கள் முடிவெடுத்தனர். ஆனால் கடைசி நேரத்தில் Anthony மீது ஆயுதத்தை வைத்திருந்ததற்காக குற்றம் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
எனவே அறுவை சிகிச்சை ரத்தானதுடன் அடுத்தாண்டு ஜனவரியில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த மாதமே தன்னுடைய குழந்தைக்கு பக்கவாதம் ஏற்படும் சூழல் இருந்த நிலையில், அறுவை சிகிச்சையும் தாமதம் ஆவதால் பெற்றோர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
மெர்சல் திரைப்படத்தில் வரும் ஆளப்போறான் தமிழன் பாடலைக் கேட்டாலே சிலருக்கு என் முகம் தான் ஞாபகத்திற்கு வரும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வள்ளியூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசியுள்ளார்.
அந்த வீடியோ காட்சிகள் தற்போது நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கூடங்குளம் அணுஉலை மட்டுமல்ல தமிழகத்தில் எங்குமே அணுஉலை கூடாது என்று தான் தமிழ் ஆர்வலர்கள் போராடி வருவதாத் தெரிவித்தார்.
கூடங்குளம் அணுஉலை கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கவில்லை என்றும் மக்கள் நலனைப் பற்றி அக்கறைப்படாத அரசுகளே தமிழகத்தை ஆள்வதாகவும் சீமான் பேசினார்.
சுவாரஸ்ய பேச்சு அண்மையில் பெரும் சர்ச்சைக்குள்ளான மெர்சல் திரைப்படத்திற்கு பெரிய அளவில் ஆதரவு கொடுத்தார் சீமான். கர்நாடகாவில் மெர்சல் படத்தை வைத்து இனப்பிரச்னையை தூண்டுவதற்கு அவர் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது வள்ளியூர் கண்டனப் பொதுக்கூட்டத்தில் மெர்சல் திரைப்படப் பாடலை சுட்டிக்காட்டி சுவாரஸ்யமாக பேசியுள்ளார்.
8 ஆண்டுகளாக சொல்லி வருகிறேன் எட்டு ஆண்டுகளாக நான் இதைத் தான் சொல்லி வருகிறேன் தமிழன் தான் தமிழகத்தை ஆள வேண்டும். ஆனால் தமிழர்களுக்கு தரையில் சொல்வதை விட திரையில் சொன்னால் தான் புரியும். ஆளப்போறான் தமிழன்னு பாட்டு வந்ததுமே கொண்டாடுறாங்க.
எல்லோருமே சொல்றாங்களே தமிழன் தான் தமிழகத்தை ஆளவேண்டும் என்று நான் சொன்ன போது எல்லோரும் கேலி செய்தார்கள். ஆனால் இந்தப் பாடல் வந்த பிறகு எல்லோரும் தமிழன் தான் ஆளப்போறான் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். தமிழர்களின் தேவைகளை திரைப்படங்கள் தான் முடிவு செய்கின்றன.
எங்களிடம் ஆட்சியை கொடுத்துப் பாருங்கள் மெர்சல் திரைப்படத்தில் வரும் ஆளப்போறான் தமிழன் என்ற பாடலைக் கேட்டாலே எதிர்த்தவர்களுக்கு என்னுடைய முகம் தான் நியாபத்திற்கு வரும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு எங்களிடம் ஆட்சியை கொடுத்துப் பாருங்கள் மக்களுக்குத் தேவையானதை நாங்கள் செய்து காட்டுகிறோம் என்றார்.
நாட்டில் இன்றைய தினமும் கடுமையான மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டை அண்டிய பகுதியில் அமைந்துள்ள வளிமண்டலத்தில் தாழமுக்க நீடித்து வருவதனால் இன்றைய தினமும் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. நாட்டின் அநேக பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் அறிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டிலும், சப்ரகமுவ, ஊவா, மேல், வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யக் கூடும் எனவும், 150 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யக் கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிக அடிப்படையில் கடுமையான காற்று வீசும் எனவும், இடி மின்னல் தாக்குதல்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் மக்கள் இருக்க வேண்டுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வவுனியா மாவட்டத்தின் சில இடங்களில் இன்று மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வவுனியா மாவட்டத்தின் பட்டானிசூரிலிருந்து நெளுக்குளம் ஊடாக இராஜேந்திர குளம் வரை, ஒமேகா லைன், அரசன் அரிசி ஆலை, சியாம் அரிசி ஆலை, ஸ்ரீரங்கம் அரிசி ஆலை, தெய்வேந்திரம் அரிசி ஆலை, கயன் அரிசி ஆலை, அஸ்வி அரிசி ஆலை, ஜீவன் அரிசி ஆலை ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டிருந்த தமிழ் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
88 வயதுடைய யோகேஸ்வரி யோகலிங்கம் என்ற பெண் நேற்று முன்தினம் காலை 6 மணியில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவித்திருந்த பொலிஸார் இது குறித்து பொதுமக்களிடம் உதவியினைக் கோரியிருந்தனர்.
குறித்த மூதாட்டி Leslie தெரு மற்றும் St. John’s Sideroad பகுதியில் நடை பயிற்சியில் ஈடுபடுவதற்காக சென்றிருந்த நிலையில் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
வசிப்பிட பகுதியில் நேற்று முன் தினம் வரை அவரை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு நேற்று காலை வரையிலும் தொடர்ந்துள்ளது.
அங்கு உள்ளவர்களின் வீடுகளில் அவரை தேடி பார்க்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளதோடு விசாரணைகளுக்கு உதவக்கூடிய தகவல் ஏதாவது இருந்தால் பொலிஸாரை தொடர்பு கொள்ளும்படி பொது மக்களிடம் கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.