உலகளவில் சாதனை படைத்த இலங்கைத் தமிழ் இளைஞனுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு!!

சர்வதேச விருதைப் பெற்ற இலங்கைத் தமிழரான சோமசுந்தரம் வினோஜ்குமார் தேசிய மட்டத்திலும் தமது கண்டுபிடிப்புகளுக்காக தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று குறித்த இளைஞனுக்கு விருது வழங்கல் விழா நடைபெற்றுள்ளது.

விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் வினோஜ்குமாரின் 14 கண்டுபிடிப்புகள் போட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இவற்றில் இரண்டு கண்டுபிடிப்புகள் தேசியரீதியில் தங்கப்பதக்கத்தையும் வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டன. தங்கப்பதக்கத்துடன் ரூபா 1 இலட்ச பணப்பரிசும், வெண்கலப் பதக்கத்துடன் 30ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டன.

இவ்விருதுகள் இளம்விஞ்ஞானி வினோஜ்குமாரின் தேசிய ரீதியிலான 30ஆவதும் 31ஆவதுமான விருதுகளாகும்.

இதேவேளை சர்வதேச விருதொன்றையும் இதே விழாவில் வினோஜ்குமார் பெற்றுள்ளார். சுவிற்ஸர்லாந்தைச் சேர்ந்த உலக கண்டுபிடிப்பு அறிவியல் புலமைச்சொத்து ஸ்தாபனம் (World Invention Intellectual Property Associations(Switzerland) இந்த விருதை வழங்கியிருக்கிறது.

உலகில் 97 நாடுகளை அங்கத்துவமாகக்கொண்ட குறித்த ஸ்தாபனம் நடத்திய போட்டியில் இளம் விஞ்ஞானி வினோஜ்குமார் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.

சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தைச் சேர்ந்த வினோஜ்குமார், கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்திலும் சம்மாந்துறை முஸ்லிம் தேசிய கல்லூரியிலும் பயின்று தற்போது யாழ்.பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

உலக விருது கிடைத்த அவருக்கு எதிர்வரும் 2018ஆம் ஆண்டில் ஒக்டோபர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச புத்தாக்குனர் அறிவியல் கண்காட்சியில் கலந்துகொள்ளும் வாயப்பு கிடைத்துள்ளது. அதற்கான அழைப்பு தற்போது அவருக்கு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தை உலுக்கிய தற்கொலை : நால்வரின் உயிர் போவதற்கான காரணம் வெளியானது!!

 
யாழ்ப்பாணம், அரியாலை பகுதியிலுள்ள வீடொன்றில் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

தாய், மகள் மற்றும் இரு மகன்மாரின் சடலங்கள் இன்று பிற்பகல் அவர்களது வீட்டிலிருந்து மீக்கப்பட்டன.

28 வயதான இளம் தாயும் 4 வயது பெண் பிள்ளையும், 2 மற்றும் 1 வயது ஆண் குழந்தைகளுமே இன்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த கோர சம்பவம் யாழ் குடாநாட்டை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்று காலை 11 மணியளவில் ஐஸ்கிரிம் கொள்வனவு செய்த தாயார் அதற்குள் விஷம் கலந்து பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் உட்கொண்டுள்ளார். பின்னர் பாயில் உறங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளார்.

ஏனைய நாட்களில் அந்த வீட்டில் கேட்கும் சத்தம் இன்றைய தினம் கேட்காதமையினால் அந்த வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் வீட்டை சோதனையிட்டுள்ளனர். இதன்போது நால்வரின் மூக்கு மற்றும் வாயில் இருந்து இரத்தம் வருவதனை அவதானித்தவர்கள் யாழ். பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரும் போது அவர்கள் உயிரிழந்திருந்ததாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குறித்த பிள்ளைகளின் தந்தை வேலை செய்யும் தங்க விற்பனை நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தங்கத்திற்கு பயன்படுத்தப்படும் பொட்டாசியம் வகை திரவம் ஒன்றை குடித்து தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாயாரும் அதே திரவத்தை ஐஸ்கிரிமில் கலந்து பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டு தானும் அருந்தி தற்கொலை செய்துள்ளதாக தாயாரின் சகோதரர் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

காசு கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முறைகேடு காரணமாக இந்த தற்காலை இடம்பெற்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தற்கொலை செய்த கொண்ட பெண்ணின் சித்தி மற்றும் தாயார் ஆகியோர் கருத்து வெளியிடுகையில், தற்கொலை செய்த பெண்ணின் கணவர் நம்பிக்கை அடிப்படையில், ஒரு கோடியே 11 இலட்சம் ரூபாவை தனது நண்பருக்கு கொடுத்தார்.

ஆறு மாதத்தில் பணத்தை திருப்பித் தருவதாக கூறி கடன் பெற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் பணம் திருப்பி கொடுக்கவில்லை. கேட்கப்போனால் ஏமாற்றுக் கதைகள் கதைத்து கடைசிவரை காசு கொடுக்கவில்லை.

காசு கடனாகக் கொடுக்கும்போது நண்பணின் மனைவி, அண்ணன் மற்றும் அண்ணி ஆகிய மூன்று பேரின் முன்னிலையில் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆறு மாதத்துக்குப் பிறகு காசு குறித்துக் கேட்டபோது காசோலையிலிருந்து காசு திரும்பி விட்டது. அவர் காசு போடவில்லை. இது குறித்து விசாரித்தபோது பணத்தை கடனாக பெற்றவர் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசு வாங்கியவரின் மனைவியிடம் சென்று, பணம் கேட்டபோது, பணம் கொடுத்தமைக்கு என்ன ஆதாரம் உள்ளது என்று கேட்டுள்ளார்.

இதனால் மனமுடைந்தவர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதில் கணவர் மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் பிள்ளைகளையும் தாயையும் மிகவும் கவனமாகப் பார்க்குமாறு வைத்தியசாலையில் எங்களிடம் மிகவும் வற்புறுத்திக் கூறி அனுப்பினார்கள். அப்படித்தான் இவ்வளவு நாளும் இவர்களைக் கவனமாகப் பார்த்துப் பார்த்துவந்து இன்றைக்கு நான் வேலைக்கு போன பிறகு இது நடந்திருக்கிறது.

தற்கொலை செய்து கொண்ட பெண், தனது அம்மாவைப் படுக்குமாறு கூறிவிட்டே இந்த விபரீத முடிவினை எடுத்துள்ளார். இது அவர்களின் வீடுதான், நாங்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்று கண்ணீரோடு கூறினார்.

யாழில் மரணிக்கும் முன் நீதிபதி இளஞ்செழியனுக்கு உருக்கமான கடிதம் எழுதிய 3 பிள்ளைகளின் தாய்!!

 
யாழ். அரியாலையில் மூன்று குழந்தைகளுக்கும் நஞ்சு கொடுத்து விட்டு தானும் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட பெண் நீதிபதி இளஞ்செழியனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கும், தமது குடும்பத்தாருக்கும் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

யாழ். அரியாலை பகுதியில் உள்ள 28 வயதுடைய இளம் தாய் ஒருவர் தனது 4 வயது பெண் குழந்தை, 2 மற்றும் 1 வயது ஆண் குழந்தைகளுக்கு நஞ்சு கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், குறித்த கடிதத்தை வாசிக்கும் போது அனைவரும் கவலையடைந்ததை காணக்கூடியதாக உள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸாருக்கே குறித்த பெண் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.

இதில் தான் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணத்தை குறிப்பிட்டதுடன், குடும்பத்தாருக்கு ஆருதல் கூறியும் கடிதம் எழுதியுள்ளார்.

இவர் நீதிபதி இளஞ்செழியனுக்கு எழுதிய கடிதத்தில் “எங்கள் சாவுக்கு சிறுசங்கர் மனைவி சுகன்யா, சிறிதரன் ஆகியோரே காரணம், தவறு செய்பவனை விட தவறு செய்ய தூண்டுபவனே குற்றவாளி” என அந்த கடிதத்தில் ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா மதவுவைத்தகுளத்தில் மோட்டார் சைக்கில் விபத்து : மூவர் வைத்தியசாலையில்!!

 
வவுனியா மதவுவைத்தகுளத்தில் இன்று (27.10.2017) காலை 10 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில்- கார் விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து கண்டி வீதியூடாக மதவாச்சி நோக்கி பயணித்த மோட்டர் சைக்கிலின் பின்புறமாக அதே பாதையில் பயணித்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் மோட்டர் சைக்கிலில் பயணித்த சிறுமி உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியா ஓமந்தையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயம்!!

 
வவுனியா ஓமந்தை பன்றிக்கொய்தகுளத்தில் இன்று (27.10.2017) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு வான் வீதியிலிருந்த மாட்டுடன் மோதியதுடன் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிலுடனும் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணம் மேற்கொண்ட 25வயதுடைய சிந்துஜன் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மேலும் 3 பேர் கைது!!

வவுனியா – பண்டாரிகுளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில், நேற்று(26.10) கைது செய்யப்பட்ட மூவரும் இன்றைய தினம் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.

வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு இளைஞர்கள் சிலர் மோட்டர் சைக்கிள் இலக்கத்தகடுகளை துணியால் மறைத்து கட்டிவிட்டு வீதியில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், வியாபார நிலையம் ஒன்றையும் சேதப்படுத்தியிருந்தனர். இதில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஆறுபேரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பொலிஸார் தேடி வந்த நிலையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டு அவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியலாயம்  கிரிக்கெட் போட்டியில் 214 ஓட்டங்களால் அபார வெற்றி!!

 
இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கு இடையே நடைபெறும் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்காக கடினப்பந்து கிரிக்கெட் போட்டியில் நேற்று 26 வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தை எதிர்த்து ஆடிய வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயம் இன்னிங்ஸ் மற்றும் 214 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்கள் இருவர் சதம் பெற்று அணியைப் பலப்படுதினர்.

முதல் இனிங்ஸில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயம் 49 -10 ஓட்டங்களை பெற்றிருந்தது. அ. ஜசித்தகன் 3 இலக்குகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயம் முதல் இன்னிங்ஸில் 314 – 3 ஓட்டங்களை பெற்றிருந்தது. பெ ச. சுலைக்சன் 111 ( ஆட்டமிழக்காது) ச. அலைக்சன் 107, இரண்டாவது இன்னிங்ஸ் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயம் 50 – 10 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்திருந்தது. அ . ஜசித்தகஜன் 4 இலக்குகள், வி. அபிநயன் 3 இலக்குகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2

வவுனியா வடக்கில் பாடசாலை மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு!!

நோர்வேயில் புலம்பெயர்ந்து வாழும் பிரேம்குமார் இராஜேஸ்வரியின் நிதியுதவியுடன் சின்னடம்பன் கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட கரப்புக்குத்தி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் அரவிந்தன் தார்மேகன் என்பவருக்கு நேற்று முன்தினம் (25.10.2017) வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமனால் துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் நெடுங்கேணி மகா வித்தியாலய அதிபர் செ.பவேந்திரன் , சமுர்த்தி புளியங்குளம் வங்கி முகாமையாளர் நாகேந்திரா , கிராம அலுவலர்களான ம .சுரேந்தர் , சி.கரன் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

வவுனியாவில் 22 வேலைத்திட்டங்களுக்கு 3.3 மில்லியன் நிதி ஒதுக்கீடு : ஸ்ரீகரன் கேசவன்!!

 
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து இளைஞர் பாராளுமன்றத்திற்கு ஒதுக்குகின்ற நிதியின் கீழ் Youth with Talent மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டம் நாடாளாவிய ரீதியில் இளைஞர் கழகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

வவுனியா மாவட்டத்தில் 22 அபிவிவிருத்தி திட்டங்களுக்கு 3.3 மில்லியன் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் 1500 வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வெற்றியடைந்திருந்த காரணத்தினால் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ் வருடம் 3000 வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கியிருந்தார்.

ஒவ்வொரு வேலைத்திட்டத்திற்கும் கடந்த வருடம் 75000 ரூபா நிதி ஒதுக்கப்பட்டது. இவ் வருடம் 150000 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேலைத்திட்டமும் குறைந்தது 300 000 ரூபாய் பெறுமதியாக அமைய வேண்டும்.

செயற்றிடத்திற்கு உரிய மீதமான நிதியினை மக்கள் பிரதிநிதிகளினுடைய நிதி ஒதுக்கீடு, தொழிலதிபர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பொது மக்கள் பங்களிப்பின் ஊடக நிதி பெறப்பட்டு இளைஞர் கழகங்கள் இவ் வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்வார்கள்.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் Youth With Talent மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட காரியாலயத்தின் அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர், பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர்கள், இளைஞர் சேவை அதிகாரிகள் உடைய நேரடி கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படும்.

இவ் வேலைத்திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்த இளைஞர் கழகங்களுக்கு 4 பிரதேச செயலகங்களிலும் பிரதேச செயலாளர்கள் தலைமையில் நேர்முகத்தேர்வு நடைபெற்று கழகங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவில் வேலைத்திட்டத்தின் எண்ணிக்கை பகிர்ந்தளிக்கப்படுள்ளது.

அந்த வகையில் வவுனியா பிரதேச செயலக பிரிவில் 08 வேலைத்திட்டங்களும் , வவவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 05 வேலைத்திட்டங்களும், செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 05 வேலைத்திட்டங்களும் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 04 வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் முதன் முதலாக ஆதிவாசிகளின் அணி கலந்து கொள்ளும் துடுப்பாட்ட சுற்றுபோட்டி!!

வவுனியாவில் இலங்கையின் ஆதிவாசிகளின் தூப்பாட்ட அணி முதன் முதலாக நாளை (28.10.2017) வவுனியா நகரசபை மைதானத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாக உள்ள துடுப்பாட்ட சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளது.

சமாதானமும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும் என்ற தொனிப்பொருளில் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரைக்கிணங்க வவுனியா தலமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வோராச்சி தலைமையில் குறித்த சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளது.

இச்சுற்றுப் போட்டியில் இலங்கை ஆதிவாசிகளின் அணி, வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அணி, வவுனியா பொலிஸ் அணியினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

வவுனியா நகரப்பிரதேச முன்பள்ளி கட்டமைப்பின் ஆசிரியர் தின விழா 2017!!

 
வவுனியா நகரப்பிரதேச முன்பள்ளி கட்டமைப்பின் ஆசிரியர் தின விழா மதவு வைத்தகுளம் சென் சுலான் முன்பள்ளியில் கட்டமைப்பின் தலைவர் நா.ஸ்ரீதரன் தலைமையில் கடந்த 24.10.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதமவிருந்தினராக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் , சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீரெலோ அமைப்பின் இளைஞர் அணித்தலைவர் கார்த்திக் , முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் கோ.தர்மபாலன், கௌரவ விருந்தினர்களாக முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர் சி.அருள்வேல்நாயகி, சென்சுலான் முன்பள்ளி இயக்குனர் பியரத்தினா தேரோ, ஞானம் முன்பள்ளி முகாமைத்துவ குழுத்தலைவர் அன்ரனி ரெக்ஷன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது முன்பள்ளி ஆசிரியர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னங்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

வவுனியாவில் கிணற்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!!

 
வவுனியா – உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீட்டுக் கிணற்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று (27.10.2017) மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த இளைஞர் 26 வயதுடைய தியாகலிங்கம் ரகுவரன் என தெரியவந்துள்ளது.

உக்கிளாங்குளம் இரண்டாம் ஒழுங்கையில் வசிக்கும் வர்த்தகரான இளைஞர் ஒருவர் கடந்த புதன்கிழமை முதல் காணாமல் போயிருந்ததாக இளைஞனின் தாயாரால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த இளைஞனின் தாயார் தமது வீட்டுக் கிணற்றடியில் அவர் அணியும் செருப்பு இருந்ததை அவதானித்து கிணற்றை பார்த்த போது, இளைஞனின் சடலம் காணப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பண்டாரிக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலில் இடம்பெற்ற திருக்கல்யாணம்(படங்கள்)

வவுனியா ஸ்ரீ  கந்தசாமி கோவிலில்  கந்த சஷ்டி  உற்சவத்தின்  ஏழாவது  நாளான  நேற்று  26.10.2017  வியாழகிழமை    மாலையில் திருக்கல்யாண  வைபவம் இடம்பெற்றது .

மேற்படி திருக்கல்யாண வைபவத்தில் நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டனர்.

வவுனியா புளியங்குளம் ஸ்ரீ கந்தசாமி கோவிலில் முதல் முறையாக இடம்பெற்ற சூரசம்காரம்!(படங்கள்)

வவுனியா புளியங்குளம் ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்த சஷ்டி  உற்சவத்தின்  ஆறாவது நாளான  நேற்று முன்தினம்  25.10.2017  புதன்கிழமை  சூரசம்காரம் எனப்படும்   சூரன் போர் இடம்பெற்றது.

இவ் ஆலயத்தில் சூரன் போர் முதல் முறையாக இடம்பெறுகின்றமை  குறிப்பிடத்தக்கது .மேற்படி சூரசம்கார நிகழ்வில்  நூற்றுக்கணக்கான  முருகனின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற சூரசம்காரம்!(படங்கள்)

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி  அம்பாள் ஆலயத்தின்  கந்த சஷ்டி  உற்சவத்தின்  ஆறாவது நாளான  நேற்று முன்தினம்  25.10.2017  புதன்கிழமை  சூரசம்காரம் எனப்படும்   சூரன் போர் இடம்பெற்றது.

மேற்படி சூரசம்கார நிகழ்வில்  நூற்றுக்கணக்கான  முருகனின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சூரசம்காரம்!(படங்கள்)

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தின்  கந்த சஷ்டி  உற்சவத்தின்  ஆறாவது நாளான  நேற்று முன்தினம்  25.10.2017  புதன்கிழமை  சூரசம்காரம் எனப்படும்   சூரன் போர் இடம்பெற்றது.

மேற்படி சூரசம்கார நிகழ்வில்  நூற்றுக்கணக்கான  முருகனின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.