தாதியின் உயிரைக் காப்பாற்றிய பாகுபலி!!

தயாரிப்பு, இயக்கம், கலை, விறுவிறுப்பு, வசூல் என்று சகல அம்சங்களிலும் உச்சம் தொட்ட பாகுபலி, மற்றுமொரு வித்தியாசமான சாதனையைப் படைத்துள்ளது. அதாவது, ஒரு தாதியின் உயிரையே இந்தப் படம் காப்பாற்றியுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்தவர் வினயா குமாரி (43) என்ற தாதி. இவருக்கு மூளையில் கட்டி வளர்ந்திருந்ததால் அடிக்கடி வலிப்பு, மயக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகினார். இவருக்கு, ஒரு சத்திர சிகிச்சை செய்து காப்பாற்ற மருத்துவர் குழுவொன்று முடிவுசெய்தது.

பிரச்சினை என்னவென்றால், சிகிச்சை முடியும்வரை நோயாளி விழித்திருக்க வேண்டும் என்பதே!

அவரை எப்படி விழித்திருக்க வைக்கலாம் என்று யோசித்த தலைமை மருத்துவருக்கு சட்டென்று பாகுபலி நினைவுக்கு வந்திருக்கிறது.

உடனே வினயாவை சிகிச்சைக்குத் தயார் செய்த அவர், சிகிச்சையின்போது மடிக்கணினி ஒன்றில் பாகுபலி 2ஆம் பாகத்தை ஒளிபரப்புச் செய்தார்.

ஒருபுறம், நோயாளி பாகுபலியில் லயித்திருக்க, மறுபுறம் மருத்துவர் குழு சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது.

உண்மையில் பாகுபலி படத்துக்கு நன்றி கூற வேண்டும். சிகிச்சை முடியும் வரை நோயாளி விழித்திருந்ததுடன், படத்தின் பாடல்களையும் மெல்லிய குரலில் பாடிக்கொண்டே இருந்தார். இது முற்றிலும் புதுமையான அனுபவத்தை எமக்குத் தந்தது என்று, தலைமை மருத்துவர் ஸ்ரீனிவாஸ் கூறினார்.

இச்சம்பவத்தையடுத்து, குறித்த சிகிச்சைக்கு ‘பாகுபலி பிரெய்ன் சேர்ஜரி’ என்று செல்லப் பெயரிட்டு அழைக்கத் தொடங்கியுள்ளனர் மருத்துவர்கள்.

நீரிழிவு நோயாளிகள் சொக்லேட் சாப்பிடலாமா?

நீரிழிவு நோயாளிகள் எப்போதும் தங்களின் சாப்பாட்டு ஆசையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். பலர் பலவகையினதான இனிப்புகள், சொக்லேட்டுகள் சாப்பிட்டாலும் இவர்கள் அவர்களை ஒரு முறை ஏக்கத்துடன் பார்ப்பார்களேத் தவிர அதனை தொடக்கூட மாட்டார்கள்.

ஆனால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் நீரிழிவு நோயாளிகள் மட்டுமல்ல இதய பாதிப்புள்ள  நோயாளிகளும் சொக்லெட்டை சாப்பிடலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த சொக்லேட் பால் கலக்காத டார்க் சொக்லேட் வகையினதாக இருக்கவேண்டும்.

அது என்ன டார்க் சொக்லேட் என்று கேட்கிறீர்களா..? பால் கலக்காத சொக்லேட்டுகளை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு கிடையாது. இவ்வகையினதான சொக்லேட்டுகளில் 70 சதவீத அளவிற்கு கோகோ என்ற பொருள் இருப்பதால் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்காது. அதற்காக தினமும் அதிகளவிலான டார்க் சொக்லேட்டுகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் அமிர்தமேயானால் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சாகிவிடும் அல்லவா.?

டார்க் சொக்லேட் சாப்பிடுவதால் தோலில் எங்கேனும் வீக்கங்கள் இருந்தால் அதனை குறைய உதவுகிறது. புற்றுநோய் மற்றும் டிமென்ஸியா எனப்படும் நோயை வராமல் பாதுகாக்கிறது. மன அழுத்தத்தையும், இதய பாதிப்பையும் தடுத்து ஆரோக்கியமாக இயங்க உதவுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகள் இதனை சுவைக்கலாம்.

உடலில் உள்ள கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. அத்துடன் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது.  அதனால் இனிமேல் சொக்லேட் சாப்பிட ஆசை ஏற்பட்டால், பால் கலக்காத டார்க் சொக்லேட்டை சுவைக்கலாம்.

மெர்சல் படத்திற்கு தடை நீட்டிப்பு!!

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மெர்சல்’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்துள்ளார்கள். மேலும், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களையும், அதிக லைக்குகளையும் பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ‘மெர்சல்’ படத்தை விளம்பரம் செய்ய இடைக்கால தடை விதித்தது.

2014ம் ஆண்டு தயாரிப்பாளர் ராஜேந்திரன் ‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பை படத்திற்கு வைத்திருக்கிறார். இந்த தலைப்பை தற்போது விஜய் நடித்துள்ள படத்திற்கு ‘மெர்சல்’ தலைப்பு வைத்திருக்கிறார்கள். மேலும் இந்த தலைப்புக்கு தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வர்த்தககுறியீடு (டிரெட் மார்க்) பெற்றுள்ளது. இதனால், மெர்சலாயிட்டேன் படத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், அக்டோபர் 3ம் திகதி வரை மெர்சல் தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது.

தற்போது விசாரணை முடிந்துள்ள நிலையில், வழக்கு தீர்ப்பை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்துள்ளது உயர்நீதிமன்றம். மேலும் மெர்சல் பட பெயரை பயன்படுத்த, விளம்பரப்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

தனுஷ்க குணதிலகவிற்கு போட்டித் தடையும் அபராதமும்!!

இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்கவிற்கு 6 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறிய காரணத்தால் சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்தத் தடையை விதித்துள்ளது.

இந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடர் நடைபெற்ற காலப் பகுதியில் தனுஷ்க குணதிலக இலங்கை கிரிக்கெட் நிறுவன யாப்பின் விதிகளையும், கிரிக்கெட் நிறுவனத்துடனான வருடாந்த ஒப்பந்தத்தையும் மீறி செயற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தனுஷ்க குணதிலகவுக்கு 6 சர்வதேச போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டதுடன் வருடாந்த ஒப்பந்தத்தில் 20 வீத அபராதத்தை அறவிட இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்தப் போட்டித் தடை 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் திகதி முதல் அமுலுக்குவந்துள்ளது

வறுமையிலும் சாதனை படைத்த மாணவி : குவியும் பாராட்டுக்கள்!!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியிருந்தன. வெளியான முடிவுகளின்படி பின்தங்கிய பிரதேசங்கள் பலவற்றிலும் பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அதன்படி பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட திக்கோடை கணேச மகாவித்தியாலய மாணவி கதிரவன் விபுணா 186 புள்ளிளைப்பெற்று போரதீவுக் கல்விக்கோட்டத்தில் முதலாம் இடத்திலும் மாவட்டத்தில் ஒன்பதாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மிகவும் பின்தங்கிய கிராமத்தில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணவி விபுணாவின் தந்தை கதிரவன் விவசாயத்தொழிலில் ஈடுபட்டுவருகின்றார்.

வறுமையை பொருட்படுத்தாமல் சாதனை படைத்த மாணவியை பலரும் தமது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த மாணவிக்கு ஆசிரியை சாந்தநிதி அற்புதராஜா கற்பித்தல் செயற்பாடுகளில் வழிகாட்டியாக முன்னின்று செயற்பட்டுள்ளார்.

சாதனை படைப்பதற்கு வறுமை ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ள இம் மாணவி பல மாணவர்களுக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார்.

கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்த தந்தை : சாதனை படைத்த மகன்!!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியிருந்தன. வெளியான பெறுபேறுகளின்படி மட்டக்களப்பு – கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட முறாவோடை தமிழ் சக்தி வித்தியாலய மாணவன் கல்குடா வலயத்திலேயே முதல் இடத்தை பெற்றுள்ளார்.

இவர் கல்குடா வலயத்தில் 182 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். முறாவோடை தமிழ் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் பிரதீபன் நிதுர்ஜன் எனும் மாணவனே இவ்வாறு கல்குடா வலயத்தில் முதலிடம் பெற்று சித்தியடைந்துள்ளார்.

இது தொடர்பில் மாணவனின் தந்தையான பிரதீபன் கருத்து தெரிவிக்கையில், “நான் மிகவும் கஷ்டப்பட்டு, கூலிக்கு பால் இழுத்து, எனது மகனை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று நினைத்து படிக்க வைத்தேன்.

மேலும் எனது மகனுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும், அதிபர் சா.சுதாகரன் அவர்களுக்கும் இறைவனுக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்” என்று உணர்ச்சி பொங்க தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

தூக்கிட்டு தற்கொலை செய்த புதுப்பெண் : காதல் மனைவியின் உடலை கூட பார்க்காத கணவர்!!

 புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கதிர்வேல்- அருணாதேவி தம்பதியின் மகள் கங்கா (19). இவருக்கும் அவரின் உறவினர் பாலுவுக்கும் (21) காதல் இருந்து வந்த நிலையில் கடந்த யூன் மாதம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த 20 நாட்களுக்கு முன்னர் தனது மனைவி கங்காவை, பாலு அவர் தாய் வீட்டில் விட்டு சென்றார். இந்நிலையில், நேற்று முன் தினம் கங்கா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் விசாரித்து வந்த நிலையில், கங்காவின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பரிசோதனை நடந்த மருத்துவமனை வாசலில் குவிந்த கங்காவின் உறவினர்கள், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறுகையில், கங்கா இறந்தது குறித்து பாலுவுக்கு தகவல் கொடுத்தும் அவர் கங்காவின் உடலை பார்க்கவரவில்லை. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் உறுதியளித்ததையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.

வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் 29 மாணவர்கள் சித்தி!!

புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் (04.10.2017) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் 29 மாணவர்கள் சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த தரம் 5 புலமைப்பரீட்சையில் 129 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இவர்களில் 29 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு

சி.டசிகா 180
த.ஹேசிகா 178
கு.சுஜிந்தன் 177
கே.டிலக்ஷதன் 176
சௌ.ஓவியா 175 ,
ச.அட்சயன் 174
அ.லதுஷா 173
த.மிதுர்ஷிகா 172
பா.அபிசாளினி 171
சி.வாணுசன் 171
ந.நஜிந்தவி 170
சு.ஜக்கியா 168
ம.சொவ்யா 176
க.கலைமதி 167
கா.அடிக்ஷனா 166
க.ருஸ்மிகா 166
நே.டிலுக்சன் 165
சி.அஜானி 165
ஆ.சன்சிகா 163
சி.கரிஷன் 163
வி.மிதுஷாயினி 161
செ.நியந்திரி 160
இ.லிவாஸ் 160
சு.மதுமிலன் 159
கி.விவிதகோபிகா 157
இ.டினோஷன் 156
செ.டிந்துஜா 156 ,
சி.துளசி 154

ஒரே நேரத்தில் தாயும் மகளும் குழந்தையை பெற்றெடுத்த அதிசயம்!!

 
துருக்கியில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் சிரியாவைச் சேர்ந்த தாயும் மகளும் பிள்ளை பெற்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய துருகியின், கோனியா பகுதியில் வசித்துவரும் 42 வயதான பாதிமா பீரீன்ஜி, அவரது மகள் 21 வயதான காதா பீரீன்ஜி. இவர்கள் இருவரும் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் ஒரே நாளில், ஒரே நிமிடத்தில், ஆளுக்கொரு ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.

இதுபோன்ற அபூர்வ நிகழ்வு உலகிலேயே இது தான் முதன்முறை என்று அந்த மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் துருக்கியின் ஜனாதிபதி மீதுள்ள அளவற்ற அன்பு காரணமாக, தாயின் பிள்ளைக்கு Recep என்றும், மகளின் குழந்தைக்கு Tayyip என்றும் பெயர்களைச் சூட்டியுள்ளனர்.

குறித்த தாயாரும் மகளும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் சிரியா உள்நாட்டுப் போர் காரணமாக துருக்கியில் தஞ்சமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்களை நோயிலிருந்து பாதுகாப்பதே எனது கடமை : வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவி!!

அனைவரையும் நோயில் இருந்து பாதுகாப்பதே எனது கடமை, அதனால் எதிர்காலத்தில் வைத்தியராக வர வேண்டும் என்பதே எனது ஆசை என வவுனியா மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 190 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி உதயராசா அவிர்சாஜினி தெரிவித்துள்ளார். தனது பெறுபேறு குறித்து எமது செய்திப்பிரிவிற்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

190 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றமை எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இந்த நிலையை அடைந்தமைக்கு முதலில் இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன். என்னை வழிநடத்திய எனது பாடசாலை அதிபர், ஆசிரியர், அப்பா, அம்மா மற்றும் எனது குடும்பத்தார் ஆகியோருக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

என்னுடைய அம்மா நான் படிப்பதற்கு அரும்பாடுபட்டார். நான் தினமும் காலை 4 மணிக்கு எழுந்து படித்து வந்தேன். அப்பா நல்ல புத்தகங்களை வாங்கித் தந்தார். அவற்றையும் நான் படித்தேன். எதிர்காலத்தில் வைத்தியராக வருவதே எனது ஆசை. இதன் மூலம் அனைவரையும் நோயில் இருந்து காப்பேன்.

ஏனைய மாணவர்களும் பெற்றோரினதும், அதிபரினதும், ஆசிரியர்களினதும் சொற்கேட்டு நடந்து, எதிர்காலத்திலும் எமது மாவட்டத்திற்கும், பாடசாலைக்கும் பெருமைத் தேடித் தரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கருகிப் போன உடல் : தாங்க முடியாத சித்ரவதையால் சிறுமி எடுத்த முடிவு!!

அரியானா மாநிலத்தில் 13 வயது சிறுமி ஒருவர் இரண்டு வருடங்களாக உடல் ரீதியான சித்ரவதை தாங்க முடியாத காரணத்தால் 11 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

பீகாரை சேர்ந்த இச்சிறுமியை 22 வயது பெண் ஒருவர் தனது வீட்டில் அடைத்து வைத்துள்ளார். அச்சிறுமியின் உடல் முழுவதும் தீயால் சுடப்பட்டு, ஆங்காங்கே கருகிய நிலையில் இருந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக சிறுமிக்கு இதே நிலைதான்.

இதனால், 2 முறை தற்கொலைக்கு முயற்சித்தும் அதிலிருந்து தப்பியுள்ளார். தற்போது, 3வது முறையாக தற்கொலைக்கு முயன்ற இச்சிறுமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிறுமியின் உடல் முழுவதும் பார்க்க முடியாத அளவு காயம் காணப்படுகிறது. மிகவும் பயந்து சிறுமி காணப்படுகிறாள் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த குடியிருப்பின் அருகில் வசித்தவர்கள் கூறியதாவது, அவ்வப்போது சிறுமியின் அழுகை சத்தம் கேட்கும். நாங்கள் ஏதேனும் விசாரித்தால் உங்கள் வேலையை பாருங்கள் என கூறுவார் என தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக 11 வது மாடியில் குடியிருக்கும் 23 வயது பெண்ணிற்கு எதிராக போலீஸ் வழக்குப்பதிவு செய்து உள்ளது, சிறுமியை தன்னுடைய கட்டுப்பாட்டில் அடைத்து வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யபப்ட்டு உள்ளது.

வவுனியா அல் இக்பால் ம.வி அகில இலங்கை கரம் சுற்றுப் போட்டியில் சாதனை!!

 
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 33வது தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வில் 20 வயதின் கீழ் பெண்களுக்கான கரம் சுற்றுப் போட்டி கடந்த (03.10.2017) தொடக்கம் (05.10.2017) வரை கொழும்பு நுகேகொட சமுத்திராதேவி பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.

மேற்படி கரம் சுற்றுப் போட்டியில் வட மாகாணத்தின் வவுனியா தெற்கு வலய பாடசாலையான வவுனியா அல் இக்பால் மகா வித்தியாலய அணி மூன்றாம் இடத்தினை (வெண்கல பதக்கத்தை) பெற்று வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

அரையிறுதி ஆட்டத்தில் கொழும்பு நுகேகொட சமுத்திராதேவி பெண்கள் கல்லூரியிடம் தனது தோல்வியை சந்தித்ததுடன் 3ம் நிலைக்கான போட்டியில் யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரியுடன் மோதி வவுனியா அல் இக்பால் மகா வித்தியாலயம் வெற்றியை தனதாக்கியது.

மேற்படி கரம் சுற்றுப் போட்டியில் தங்க பதக்கத்தினை கொழும்பு மஹமாஜா பெண்கள் கல்லூரி தனதாக்கியதுடன் , வெள்ளிப் பதக்கத்தை கொழும்பு நுகேகொட சமுத்திராதேவி பெண்கள் கல்லூரி பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்களினால் வழிகாட்டல் கருத்தரங்கு!!

 
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்களினால் வருடந்தோறும் நடாத்தப்படும் கா.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கணித விஞ்ஞான பாடத்திற்கான வழிகாட்டல் கருத்தரங்கு வவுனியா மாவட்டத்தில் நேற்று (05.10) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்மடு மகா வித்தியாலயத்தில் ஆரம்ப நிகழ்வு கருத்தரங்கு தொடரின் தலைவர் பா.நிரூஜன் தலைமையில் நடைபெற்றது.

வழிகாட்டல் கருத்தரங்கிற்கு இணை அனுசரணை வழங்கிய வவுனியாவில் இயங்கும் ஆடைத்தொழிற்சாலையான ஒமேகா லைன் தனியார் நிறுவனத்தின் திட்டமிடல் திணைக்கள தலைவரும் பல்கலைக்கழக பழைய மாணவருமான மௌளிதாசன் மற்றும் மனித வள முகாமையாளர் அன்ரன், பாடசாலை ஆசிரியர் பிரசாந்த், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனுசரணை வழங்கிய ஒமேகா லைன் தனியார் நிறுவனத்திற்கு நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன் கருத்தரங்கு நடைபெற்றது.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்களினால் தொடர்ச்சியாக 07 வருடங்களாக 14 மாவட்டங்களில் 10,000 பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது​.

வவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் போராட்டம்!!

 
வவுனியாவில் எதிர்வரும் திங்கட்கிழமை (09.10.2017) காலை 10 மணிக்கு வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையற்ற முறையில் உடன் விடுதலை செய்யுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்தில் இன்று (05.10.2017) மாலை 3.30 மணியளவில் அரசியல் கைதிகள் தொடர்பான கலந்துரையாடல் பொது அமைப்புக்களின் பங்கு பற்றலுடன் இடம்பெற்றது.

இதன் போது பல்வேறு வாதபிரதிவாதங்கள் இடம்பெற்றன. இறுதியில் இதை தொடர் போராட்டமாக வலியுறுத்தி மேற்கொள்வதற்கும் தனியான ஒரு அமைப்பினரை உருவாக்கி சிறைச்சாலைகளில் விசாரணைகள் இன்றியும் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே நிபந்தனையற்ற முறையில் விடுதலை செய்வதற்கு மத்திய அரசை வலிறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை எதிர்வரும் திங்கட்கிழமை நடாத்துவதற்கும் அதனைத் தொடர்ந்து அடுத்து வரும் வாரங்களில் தொடர் போராட்டங்களை மேற்கொள்வதற்கும் கலந்துரையாடலில் முடிவுகள் எடுக்கப்பட்டன.

இப்போராட்டத்திற்கு கட்சி பேதமின்றி அரசியல் கைதிகளின் நலனில் அக்கறையுள்ள அனைத்து தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறும் கோரிக்கை விடப்பட்டுள்ளதுடன் வடகிழக்கு மாகாணங்களிருந்தும் ஆதரவினை வேண்டி நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இன்றைய கலந்துரையாடலின்போது வவுனியா மாவட்டத்திலுள்ள பொது அமைப்புக்கள், வர்த்தகர் சங்கம், சமூக அமைப்புக்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், மகளிர் அமைப்புக்கள், கிராம அமைப்புக்கள் என 20ற்கும் மேற்பட்ட அமைப்புக்கள் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பலத்த காற்றுடன் கூடிய மழை : போக்குவரத்து தடை!!

 
வவுனியாவில் இன்று (05.10.2017) மாலை 4 மணியளவில் பெய்த காற்றுடன் கூடிய மழையினால் தாலிக்குளம் பகுதியில் பழமை வாய்ந்த மரமொ ன்று முறிந்து வீழ்ந்ததில் வவுனியா – மன்னார் வீதிக்கான போக்குவரத்து தடைப்பட்டது.

இது வரை முறிந்து வீழ்ந்த மரத்தின் கிளைகள் அகற்றப்படாமையினால் வாகனங்கள் வீதியில் கீழே இறங்கி மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலே செல்ல வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.

பலமுறை வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு அறிவித்தும் இதுவரை எவரும் சமூகமளிக்கவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

வவுனியாவில் புதையல் தோண்டிய இருவர் கைது!!

 
வவுனியா சிதம்பரபுரம் பழைய கற்குளம் பகுதியில் நேற்று (04.10.2017) மாலை 3.15 மணியளவில் புதையல் தோண்டிய இருவரை கைது செய்ததுடன் புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் வவுனியா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வவுனியா சிதம்புரம் பொலிஸ் பிரவுக்குட்பட்ட பழைய கற்குளம் காட்டுப்பகுதியில் புதையல் தோண்டுவதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வராட்சி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலமையில் பொலிஸ் துணை இன்ஸ்பெக்டர் சுபசிங்க , அசோகவின் வழிகாட்டலில் பொலிஸ் கோஸ்தபர்களான அஜித் (45423) , கபில (51613) , திலக் (46176) , நிஷங்க (75089) ஆகியோரினால் நேற்றை தினம் (04.10.2017) மாலை 3.15 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட திடீர்சோதனை நடவடிக்கையின் போது,

பழைய கற்குளம் காட்டுப்பகுதியில் சிறு கோவில் அமைத்து பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அதே கிராமத்தினை சேர்ந்த கந்தவேல் சுதர்சன் (வயது 39) , வடிவேல் சின்னத்தம்பி (வயது 32) ஆகியோரை பொலிஸார் கைது செய்ததுடன் புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட உயர் அழுத்த கருவி, தண்ணீர் இறைக்கும் மோட்டர் , மின்பிறப்பாக்கி , கல் உடைக்கும் இயந்திரம், பூஜைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களை வவுனியா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவர்களினால் அப்பகுதியில் 30அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டுள்ளதாவும் அதனுள் 15 அடி ஆழத்தில் நீர் காணப்படுவதாவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.