சோதனையில் முடிந்த திருமண தம்பதியின் சாதனை : கின்னஸ் உலக சாதனை அமைப்பு எச்சரிக்கை!!

 
உள்ளூர் சட்டங்கள் மீறப்பட்ட எந்தவொரு சாதனையை தாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என கின்னஸ் உலக சாதனை பதிவுகளின் மூத்த PR முகாமையாளர் Doug Male உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த விடயங்களை நாங்கள் முக்கியமாக கருத்திற்கொள்வோம் என அவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி கண்டி நகரில் ருவன் புஷ்பகுமார மற்றும் சஜினி பிரியங்கிகா சுரவீரவின் திருமணத்தின் போது உலக சாதனை நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

நீண்ட ஒசரி சேலையை அணியும் கின்னஸ் உலக சாதனையை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதும் உலகளாவிய ரீதியில் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றுள்ளனர்.

புதிய உலக சாதனையை ஏற்படுத்தும் முயற்சிக்கு 250 பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருமண நாளன்று அதிகாலையிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை கட்டாயப்படுத்தி, கன்னொறுவ – கண்டி சாலையில் 3.5 கீலோ மீற்றர் தூரம், குறித்த மாணவர் நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாங்கள் ஒரு விண்ணப்பத்தை பெற்றுள்ளோம், எனினும் விண்ணப்பத்தை பற்றிய விபரங்களை இன்னும் விவாதிக்க முடியாமல் உள்ளதென Doug Male தெரிவித்துள்ளார்.

அது சாதனையாக இருந்தாலும், மாணவர்களை தவறான முறையில் ஈடுபடுத்தப்பட்டமை தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகள் தொடர்பில் கின்னஸ் உலக சாதனை பதிவு முகாமையாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த சாதனையை உறுதி செய்வதென்றால், சுயாதீனமான சாட்சி அறிக்கைகள் உட்பட ஒரு மிக விரிவான மற்றும் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஆதாரங்கள் அவசியமாகும்.

சான்றுகளின் பின்னர் நிபுணர்கள் ஒரு குழு மதிப்பாய்வு செய்ததனை தொடர்ந்து இறுதி முடிவு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

65 பெண்களை ஏமாற்றிவிட்டு, சுதந்திரமாக சுற்றித்திரிந்த நபர் பொலிஸில் சிக்கினார்!!

நாட்டின் பல பகுதிகளிலும் 65 பெண்கள் உட்பட பலரை ஏமாற்றி 10 கோடி ரூபாவுக்கும் மேல் மோசடி செய்த நபர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

குறித்த நபருக்கு முன்னதாகவே பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நலையில், கம்பஹா யக்கலமுல்ல பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், வர்த்தகர்கள் மற்றும் பல பகுதிகளைச் சேர்ந்த முக்கிய நபர்களுடன் நெருக்கமாக பழகி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு மிகவும் தந்திரமான முறையில் பல வருடங்களாக இந்த நபர் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

காலி – ஹினிதும, நெவசிமுல்ல பிரதேசத்தை சேர்ந்த கார்தி ஹேவகே அருணகுமார என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது தெரியவந்துள்ள சம்பவங்களின் அடிப்படையில் சந்தேகநபர் 65 பெண்களை பல வழிகளில் ஏமாற்றி பணத்தை மோசடி செய்துள்ளார்.

இந்த பெண்களில் திருமணமானவர் மற்றும் திருமணமாகாத பெண்களும் அடங்குகின்றனர். இவர்களில் 40 பெண்களிடம் இந்த சந்தேகநபர் பாலியல் ரீதியான தொடர்புகளை கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ருதி ஹாசன் இடத்தைப் பிடித்த திஷா பதானி!!

ஸ்ருதி ஹாசன் நடிக்கவிருந்த கதாப்பாத்திரத்தில் எம்.எஸ்.தோனி படத்தின் நாயகி திஷா பதானி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சுந்தர்.சி இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவாகவிருக்கும் படம் சங்கமித்ரா. இதில் ஜெயம் ரவி, ஆர்யா கதாநாயகர்களாகவும், ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக தெரிவு செய்யப்பட்டார்.

கான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, ஸ்ருதி ஹாசன் இப்படத்திலிருந்து விலகினார்.

ஸ்ருதி ஹாசன் நடிக்கவிருந்த முக்கிய கதாப்பாத்திரத்தில் பல்வேறு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தற்போது ‘எம்.எஸ்.தோனி’ படத்தில் நடித்த திஷா பதானி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு அநுராதபுரத்திற்கு மாற்றம்!!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்திற்கு நேற்று மாற்றப்பட்டது.

அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்ட இந்த வழக்கு இன்று விசேட மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

எனினும் இன்றைய வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராகியிருக்கவில்லை.

பிரதிவாதிகள் தனிப்பட்ட ரீதியில் சட்டத்தரணிகளை முற்படுத்தவுள்ளனரா அல்லது அரச சட்டத்தரணியின் உதவியைக் கோருகின்றனரா என்பது தொடர்பில் மன்றுக்கு அறிவிக்குமாறு விசேட மேல் நீதிமன்ற நீதிபதி மகேஸ் வீரமன் உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதிக்கு நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார். சந்தேகநபர்களின் விளக்கமறியலும் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கை ஏனைய நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டாம் என தெரிவித்து தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு 100 வீத வரி அறவிடுமாறு ஜனாதிபதி ஆலோசனை!!

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு 100 வீத வரி அறவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிதி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

உள்நாட்டு விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினை குறித்து ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதியால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக்கு அமைய, எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு முழுமையாக வரி அறவிடப்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் உள்நாட்டு விவசாயிகளுக்கு நியாயமான விலையில் பெரிய வெங்காயத்தை விற்பனை செய்ய முடியும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் அதிகூடிய எடையுடைய பெண் பலி!!

 
உலகில் அதிகூடிய எடை கொண்ட பெண் உயிரிழந்துள்ளார். மும்பையில் உடல் எடைகுறைப்பு சிகிச்சை மேற்கொண்ட எமான் அகமது என்ற 37 வயதுடைய பெண்ணே டுபாயிலுள்ள வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

எமான் அகமது(வயது 37) என்ற வெளிநாட்டு பெண் உலகின் மிகவும் பருமனான பெண்ணாக கருதப்படுபவர்.

கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி உடல் எடைகுறைப்பு சிகிச்சைக்காக மும்பைக்கு தனிவிமானம் மூலம் கொண்டுவரப்பட்டார்.

அச்சிகிச்சையில் 504 கிலோவில் இருந்து 242 கிலோவிற்கு அவரது எடை குறைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

கடந்த மே மாதம் 4 ஆம் திகதி அவர் மும்பையில் இருந்து எமிரெட்ஸ் சென்று சிகிச்சைப் பெற்றார். சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வெள்ளை மாளிகை அருகே சிறுநீர் கழிக்கச்சென்று வம்பில் மாட்டிய நபர்!!

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே சிறுநீர் கழிக்கச் சென்ற ஒருவரது காரில் அதிகளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவியது.

அமெரிக்கா அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை வாஷிங்டன் நகரில் உள்ளது. இந்த நிலையில், உள்ளூர் நேரப்படி நேற்று காலை வெள்ளை மாளிகையின் அருகே இருக்கும் பென்சில்வேனியா அவென்யூவில் உள்ள ஒரு கழிப்பிடத்தில் மர்மநபர் ஒருவர் சென்றுள்ளார்.

அவரது நடவடிக்கையை பார்த்து சந்தேகமடைந்த ரகசிய பிரிவு பொலிசார், அந்த நபரை தனியே அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது, அவருடைய காரை சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

ஒன்பது கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ரைபில், கத்திகள் மற்றும் சிறிய அளவிலான ஆயுதங்கள் என ஒரு சிறிய ஆயுத கிடங்கே அந்த காரில் செயல்பட்டு வந்துள்ளது.

உடனடியாக, அந்நபரை கைது செய்த அதிகாரிகள் மனநல சோதனைக்காக அவரை கொண்டு சென்றனர்.

கைது செய்யப்பட்ட நபரின் அடையாளத்தை பொலிசார் வெளியிட மறுத்துவிட்டனர்.

15 ரூபாய் சம்பளம் வாங்கினேன் : பல குரல் நடிகனின் கதை!!

விஜய் நடித்த நாளை தீர்ப்பு படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் தாமு. அதனாலோ என்னவோ அவர் விஜய்யுடன் நேருக்கு நேர், பத்ரி, துள்ளாத மனமும், துள்ளும், கில்லி, போக்கிரி, வில்லு என படங்களில் நடித்துள்ளார்.

இவர் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது தினமும் ஒவ்வொரு குரலில் கத்துவாராம். அவரின் டீச்சர் ஆடு, மாடு தான் கத்துகிறது என நினைத்து கொண்டேயிருந்தாராம். ஒரு நாள் தலைமையாசிரியர் என்னை அழைத்து, உமது டீச்சர் இந்த நோட்டை கொடுத்தார். நீ இந்த நாளில் இந்த மாதிரி குரல் கொடுத்தாயாமே.

நாளைக்கு சுதந்திர தினம் உன்னுடைய திறமைகளை மேடையில் வெளிப்படுத்த உன்னுடைய ஆசிரியர் 15 நிமிடம் உனக்கு கொடுக்க சொல்லியிருக்கிறார். நீ திறமைகளை காட்டு என சொன்னாராம்.

நிகழ்ச்சி முடிந்ததும் எனக்கு டீச்சர் 15 ரூபாய் பரிசாக கொடுத்தார். அது தான் என் முதல் சம்பளம். இன்று ஒரு நிகழ்ச்சி செய்தால் ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்குகிறேன் என சமீபத்திய நிகழ்ச்சியில் நடிகர் தாமு கூறினார்.

இவர் சூர்யா, அஜித், பிரபு தேவா, பிரசாந்த் என பல நடிகர்களின் படங்களில் பணியாற்றியுள்ளார்.

ஆட்டோ விபத்து : வீடு சேதம் : சாரதி தப்பியோட்டம்!!

நிறுத்தி வைத்திருந்த லொறியில் மோதிய முச்சக்கரவண்டி ஒன்று, 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில், அப் பகுதியில் இருந்த வீடொன்று சேதமடைந்துள்ளது.ஹட்டன் – காமினிபுர பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, முச்சக்கரவண்டியை செலுத்தியவரும் அதில் பயணித்தவரும் தப்பி ஓடியுள்ளனர். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணையை ஹட்டன் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் LP சமையல் எரிவாயுவின் விலை 110 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கான நுகர்வோர் அதிகார சபையின் அனுமதிக் கடிதம், காஸ் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சிந்தக லொக்கு ஹெட்டி தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நவராத்திரி விழா!!

 
வவுனியா மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டின் நேற்று ( 25.09.2017) திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட காரியாலய மண்டபத்தில் நவராத்திரி விழா நடைபெற்றது.

இந் நிகழ்வில் உதவிப் பணிப்பாளர் சுனில் ஜெயமஹே , இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன், வட மாகாண சுகாதார அமைச்சின் இணைப்பாளர் அ.நாகராஜன், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஐ.சுகானி, முன்னாள் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் தே.அமுதராஜ், கூட்டுறவு உத்தியோகத்தர் அமித் பண்டார, இளைஞர் கழக பிரதேச சம்மேளன பொருளாளர் சிம்சுபன், இளைஞர்கள், யுவதிகள், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பயிற்சி நிலைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் தானியங்கி ரீதியான இலவச மருத்துவ சேவை!!

 
வவுனியா தம்பா விடுதியின் அனுசரணையுடன் லண்டனிலிருந்து வருகை தந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்தோரினால் தானியங்கி ரீதியான (reflexology) முறையிலான இலவச வைத்திய சிகிச்சை இடம்பெறுகின்றது.

கடந்த 22.09.2017 தொடக்கம் 30.09.2017 ம் திகதி வரை வவுனியா கோவிற்குளம் பகுதியில் அமைந்துள்ள தம்பா விடுதியில் தினசரி காலை 9 மணி தொடக்கம் மாலை 6 வரை இச் சிகிச்சை இடம்பெறவுள்ளது.

தூக்கமின்னை, தலை முடி கொட்டுதல் , மூட்டு வலி , அஸ்மா, கண் பார்வை குறைவு என பல நோய்களுக்கு (reflexology) முறையில் சிகிச்சை வழங்கப்படவுள்ளது.

வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தானுடன் சுகாதார தொண்டர்கள் சந்திப்பு!!

 
வவுனியாவில் கடந்த 118 நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வந்த வடமாகாண சுகாதார தொண்டர்கள் அவர்களின் நிரந்தர நியமனம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வன்னி மாவட்ட இணைப்பாளருமான கே. காதர் மஸ்தானின் மக்கள் சந்திப்பு அலுவலகத்தில் நேற்று ( 25.09.2017) காலை 10 மணியளவில் சந்திப்போன்றை மேற்கொண்டனர்.

இச் சந்திப்பின் போது நிரந்தர நியமனம் தொடர்பாகவும் தம்மால் 118நாட்கள் தொடர் போராட்டம் மேற்கொண்டு வந்த விடயங்கள் அதன் பின்னர் வடமாகாண சுகாதார அமைச்சரில் ஏற்பட்ட மாற்றங்கள் தற்போது புதிய சுகாதார அமைச்சரின் வருகையினையடுத்து போராட்டகளத்திற்குச் சென்ற சுகாதார அமைச்சர் சுகாதாரத் தொண்டர்களின் நியமனம் தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் எடுத்த நடவடிக்கையிலிருந்து தானும் அவ்விடயத்தினை நகர்த்திச் செல்வதாக வாக்குறுதியிளிக்கப்பட்டதையடுத்து சுகாதாரத் தொண்டர்கள் தமது தொடர் போராட்டத்தினை கைவிட்டிருந்தனர்.

எனினும் தமது நிரந்தர நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தினையடுத்து நியமனம் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இவ்விடத்தில் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினர்.

சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் உடனடியாக சுகாதார அமைச்சின் செயலாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பினை ஏற்படுத்தி தற்போது சுகாதார தொண்டர்கள் நிரந்தர நியமனம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் கேட்டறிந்ததுடன் நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் டெங்கு ஒழிப்பு செயற்றிடத்திற்கு இவர்களை இணைத்து கொள்ள முடியுமான என கலந்துரையாடினார்

இன்று (26.09.2017) இடம்பெறவுள்ள நாடாளுமன்றக்கூட்டத் தொடரில் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருவதுடன் நிதி அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கும் கொண்டு சென்று துரித கதியில் வடமாகாண சுகாதாரத் தொண்டர்களின் நிரந்தர நியமனத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாக சுகாதார தொண்டர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் வாக்குறுதியிளித்துள்ளார்.

பழம்பெரும் நடிகர் பீலிசிவம் காலமானார்!!

பழம்பெரும் நடிகர் பீலிசிவம் உடல்நலக் குறைவால் காலமானார், அவருக்கு வயது 79 பி.எல்.சின்னப்பன் என்ற நடிகர் பீலி சிவம் 1938ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி பிறந்தார்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையிலும் சின்னத்திரையிலும் நடித்து வந்தார். 1995ஆம் ஆண்டு தமிழக அரசு நாடகத்துறையில் இவருக்கு சிறந்த நடிகருக்கான கலைமாமணி விருது வழங்கியுள்ளது.

குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த இவர் இன்று மதுரையில் காலமானார். அவருக்கு திரை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான பிரம்மோற்சவம்-2017!!

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா நாளை  (26.09.2017)   செவ்வாய்கிழமை பகல் 11.00மணிக்குசிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில்  கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகிறது.

மேலும் சப்பர திருவிழா -03.10.2017   செவ்வாய்கிழமை  இரவு 8.00 மணிக்கும்
தேர் திருவிழா -04.10.2017  புதன்கிழமை  காலை 10.30 மணிக்கும்
தீர்தோற்சவம் – 05.10.2017  வியாழக்கிழமை  11.00 மணிக்கும்
திருக்கல்யாணம் – 06.10.2017   வெள்ளிக்கிழமை  மாலை 6.00 மணிக்கும்
ஆஞ்சநேயர் உற்சவம் 07.10.2017   சனிக்கிழமை  காலை 10.30 மணிக்கும் இடம்பெற இருக்கிறது.

பக்த அடியார்கள் வருகை தந்து அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அருளை பெற்று கொள்ளும் வண்ணம் வேண்டப்படுகின்றனர்.

 

தென் கொரியாவில் மர்மமான முறையில் காணாமல் போன இலங்கை இளைஞன்!!

தென் கொரியாவின் – யேசூ பிரதேசத்தில் தொழில் புரிந்து வந்த மாத்தறை ஹந்துகல பெலியத்தகும்புர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இளைஞனுக்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை என அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.

நுவன் சத்துரங்க என்ற இந்த இளைஞனின் தாயாரான எம்.குமுது ஜானகி புற்று நோயாள் பாதிக்கப்பட்டவர். இளைஞனின் தந்தையான கே.எல்.குணபூஜித சுவாச நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இளைஞனின் ஒரே சகோதரரான சம்பத் சந்தருவான் பாடசாலையில் கல்வி கற்று வருகிறார்.

இதனால் வீட்டின் பொருளாதார பொறுப்பை சுமக்க வேண்டிய குடும்பத்தின் மூத்த பிள்ளையான நுவன் சத்துரங்க கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி தொழிலுக்காக தென் கொரியாவுக்கு சென்றுள்ளார்.

தென் கொரியாவின் – யேசூ பிரதேசத்தில் மீன்பிடி தொழிலில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். தினமும் பெற்றோர் மற்றும் சகோதரருடன் தொலைபேசியில் உரையாடி அவர்களின் நலன் விசாரிப்பது நுவன் சத்துரங்கவின் வழக்கம் என பெற்றோர் கூறுகின்றனர்.

கடந்த 6ஆம் திகதி பெற்றோரை தொலைபேசியில் தொடர்புக்கொண்ட நுவன் அதற்கு பிறகு தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. இதன் காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிகத்திடம் விசாரித்த போது இன்னுமொருவருடன் படகில் சென்றுக்கொண்டிருந்த போது கடலில் விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்கள் படகில் புறப்பட்டுச் செல்வது கடற்கரையில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளது.

நுவன் சத்துரங்கவுடன் படகில் சென்ற நபர் குருணாகல் பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. பெற்றோர் அவரை தொடர்புக்கொண்டு விசாரித்த போது படகை ஓட்டிய நுவன் சத்துரங்க இரவு 10 மணியளவில் படகில் இருந்து தூக்கி எறியப்பட்ட கடலில் விழுந்ததாகவும், கயிற்றின் உதவியுடன் அவரை காப்பாற்ற முயற்சித்த போது அது தோல்வியடைந்தாகவும் நுவனின் பெற்றோரிடம் குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த நபர் கூறியுள்ளார்.

சம்பவம் நடந்து இரண்டு வாரத்தின் பின்னர், தமது மகனுக்கு ஏற்பட்ட நிலைமை தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், மகனுக்கு ஏற்பட்ட நிலைமை சம்பந்தமாக நியாயத்தை நிறைவேற்றுமாறு பெற்றோர் உட்பட நெருக்கமானவார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்