போக்குவரத்து சட்டங்களை மீறும் சாரதிகளை அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. அவ்வாறு இனம் காணப்பட்டவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
எதிர்வரும் வாரங்கள் முழுவதும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன் கீழ் சிவில் ஆடையில் பொலிஸ் அதிகாரிகள் சாதாரண வாகனங்களில் கொழும்பு நகரம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
இதன்போது போக்குவரத்து சட்டத்தை மீறும் சாரதிகள் அடையாளம் காணப்படுவார்கள். அவர்களால் சீருடையில் கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிடம் இது தொடர்பில் அறிவிக்கப்படும். அதற்கமைய குறித்த சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட திணைக்களங்களில் பணியாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் தொடர்பான முறைப்பாடுகளை வவுனியா பிரதேச செயலகத்திலோ அல்லது தொலைபேசியூடாகவோ தெரிவிக்க முடியுமேன வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர், வவுனியாவில் வெளிக்கள உத்தியோகத்தர்களாக பணியாற்றும் அரச ஊழியர்கள் தமக்கு வழங்கப்பட்ட பணிகளை மேற்கொள்ளாது வெளிக்களப்பணிகள் என அதிகாரிகளிடம் தெரிவித்து வேறு தொழில்கள் புரிந்து வருவதாக பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
எனவே பொதுமக்களுக்கு சேவைபுரிவதற்கே வெளிக்களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் வெளிக்களப்பணியில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் கிராமங்களில் தமது பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவில்லை என எமக்கு பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் குறித்த வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு தயார்.
முறைப்பாடுகள் தொடர்பாக எனது அலுவலக தொலைபேசி இலக்கமான 024 2222202 அல்லது மேலதிக பிரதேச செயலாளர் இலக்கமான 024 2222236 தயக்கமின்றி முறைப்பாடு மேற்கொள்வதுடன் பிரதேச செயலகத்தில் வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டு பெட்டியில் தங்களது முறைப்பாடுகளை எழுத்து மூலமாக எழுதி போட முடியுமென பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அலுவலகம் நேற்று (22.09.2017) மாலை 5 மணியளவில் துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் வை.றதீபனால் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் செயலாளர் வி.மிதுலன், பாடசாலை துடுப்பாட்ட அபிவிருத்தி குழு தலைவர் சுந்தராங்கன் , நடுவர்சங்க உபதலைவர் சுதாகரன் , துடுப்பாட்ட சங்க உறுப்பினர் கழக உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்
இந் நிகழ்வில் உரையாற்றி வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர், எமது மாவட்டத்தின் துடுப்பாட்ட துறையை பாடசாலை மட்டத்திலும் மற்றும் கழக மட்டத்திலும் விருத்தி செய்து தேசிய மட்டத்திற்கு வீரர்களை கொண்டுசெல்லும் நோக்கோடு இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. வடமாகாணத்தில் தனியொரு விளையாட்டுத்துறைக்கு அலுவலகம் திறப்பது இதுவே முதற்தடவை என தெரிவித்தார்.
அண்மைக்காலமாக பிரபல உணவகங்களில் மனித பாவனைக்கு உதவாத உணவுகள் வழங்கப்படுகின்றமை மக்கள் மத்தியில் அதிருப்தி நிலையை ஏற்படுத்தியுள்ளது.
வத்தளையில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட சாப்பாட்டில் புழு ஒன்று இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த உணவகத்தில் உணவு பெற்றுக் கொள்ள பெருந்தொகை பணம் செலுத்த வேண்டும். எனினும் அங்கு சுத்தம் மற்றும் சுகாதார தன்மை தொடர்பில் பாரிய சிக்கில் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வத்தளை பொது மக்கள் சுகாதார அதிகாரிகளினால் இலஞ்சம் பெற்றுக் கொண்டு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளமையினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த உணவகத்தில் உணவு பெற்றுக் கொள்ளும் போது, அவதானமாக செயற்படுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.
இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர், புழுவுடன் கூடிய உணவின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் கொழுப்பிலுள்ள பிரபல உணவகத்திலும் இவ்வாறு மனித பாவனைக்கு பொருத்தமற்று உணவு வழங்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
அதேவேளை யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளும் இவ்வாறு புழுக்களுடன் கூடிய உணவுகள் வழங்கிய சம்பவம் பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் பெருமளவானோர் கடைகளில் உணவு பெற்றுக்கொள்ளும் நிலையில், இவ்வாறான சம்பவங்கள் பெரும் அதிருப்தி நிலையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டமைப்பினால் (International Youth Alliance for Peace) தேசிய இளைஞர் சமாதான செயலமர்வு நாடாளாவிய ரீதியால் 20 மாவட்டங்களில் சர்வதேச சமாதான தினமான செப்டெம்பர் மாதம் 21ம் வியாழக்கிழமை அன்று பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், உயர்கல்வி நிறுவன மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது.
இளைஞர் சமாதானத்தை கட்டியெழுப்பல் என்ற கருப்பொருளில் நடைபெற்ற தேசிய இளைஞர் சமாதான செயலமர்வு வவுனியா மாவட்டத்தில் தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயம், திருஞானசம்பந்தர் வித்தியாலயம், பூந்தோட்டம் மகா வித்தியாலயம், இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை, கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலயம் ஆகிய 05 பாடசாலைகளை சேர்ந்த 391 மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது.
சர்வதேச சமாதான தினத்தை கொண்டாடுவதுடன் மட்டுமன்றி பல்வேறுபட்ட சமூக பின்னணியைக் கொண்ட இளைஞர்களிடையே சமாதானம் குறித்த அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்தக்கூடியதொரு சிறந்த தளத்தை உருவாக்கும் நோக்குடன் நடாத்தப்பட்ட தேசிய இளைஞர் சமாதான செயலமர்வு வவுனியா மாவட்டத்தில் ஜனாதிபதி சாரணர் மன்றம், வவுனியா மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், றொட்றிக் கழகம் , தமிழ் தேசிய இளைஞர் கழகம் ஆகிய இளைஞர் அமைப்புக்களின் ஆதரவுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
கண்டி, கன்னோருவ பிரதேசத்தில் நேற்று கின்னஸ் சாதனைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்வு சர்ச்சையில் முடிந்துள்ளது.
இது தொடர்பில் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி – கொழும்பு வீதியில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை சீருடையில், மணமகளின் ஒசரி புடவையை பிடித்து கொண்டு வெயிலில் நின்றமையே இந்த சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
அந்த சந்தர்ப்பத்தில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க கலந்து கொண்டிருந்தார். அவர் தனது பெயரில் ஆரம்பித்த அலவத்துகொட ஆரம்ப பாடசாலையின் மாணவர்களுடனே இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்த திருமணத்தின் காரணமாக வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அதனை கட்டுப்படுவதற்காக பேராதனை பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
மணமகள் 3,200 மீற்றர் நீளமான ஒசரி புடவையை இதற்காக அணிந்துள்ள நிலையில் அது இன்னமும் உத்தியோகபூர்வமாக கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென்கிழக்கு டில்லியின் ஜாமியா நகர் பகுதியில், விடாமல் அழுத குழந்தையை அடித்து துன்புறுத்தி கழிவுநீரோடையில் வீசி கொலை செய்ததாக அதன் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பொலிசார் தெரிவித்தபோது..
ரஷீத் ஜமால் (40) என்ற அந்த நபருக்கு மோஃபிதா பேகம் (32) என்ற மனைவியும், 11 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
குப்பைகள் சேகரிக்கும் தொழிலில் இந்தத் தம்பதியினர் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், மோஃபிதா பேகம் கடந்த 19ம் திகதி நள்ளிரவில் காவல் நிலையத்துக்கு வந்து புகார் ஒன்றை தெரிவித்தார். அதன்படி ரஷீத் மது அருந்திய நிலையில் பேகத்தை அடித்துள்ளார். பின்னர் தனது இரு மகன்களையும் அடித்துள்ளார். அப்போது, உடல் நலக்குறைவுடன் இருந்த பெண் குழந்தை தொடர்ந்து அழுதுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ரஷீத் அக் குழந்தையின் தலையை தரையில் மோதியுள்ளார். பேகம் தடுத்தும் ரஷீத் கேட்காததை அடுத்து, அண்டை வாசிகளிடம் உதவி கேட்க பேகம் சென்றார். அப்போது ரஷீத் அந்தப் பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
இதையடுத்து பேகம் அளித்த தகவலின்பேரில், ரஷீத் கண்டுப்பிடிக்கப்பட்டார். குழந்தை குறித்து கேட்டதற்கு, அருகில் உள்ள கழிவு நீரோடை அருகே குழந்தையை விட்டுவிட்டதாக கூறியுள்ளார். பின்னர், குழந்தையை கடத்தியதாக ரஷீத் கைது செய்யப்பட்டார்.
டில்லி தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்புப் படையினர், நீச்சல் வீரர்கள் உதவியுடன் கழிவுநீரோடைப் பகுதியில் குழந்தை தேடப்பட்டது. அங்கு தேடி கிடைக்காத நிலையில், ரஷீதிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, வேறு ஒரு கழிவு நீரோடையில் குழந்தையை வீசியதாக வியாழக்கிழமை காலையில் ரஷீத் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட இடத்தில் தேடியபோது, கழிவுநீரோடையில் இருந்து அந்தக் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. இதையடுத்து ரஷீத் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று பொலிசார் தெரிவித்தனர்.
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் கையொப்பமிடப்பட்ட புதிய 5,000 ரூபா நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.
பணத்தாள் அச்சிடும் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மார்ட்டின் சதர்லேண்ட் மூலம் குறித்த பணத்தாள் நிதி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு திறைசேரியில் நேற்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து நிதி அமைச்சர் “எனது கையொப்பத்துடனான முதல் 5,000 ரூபா நாணயத்தாள்” தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் பெண்ணுக்கு கைத்தொலைபேசியில் குறுந்தகவல் அனுப்பிய இளைஞர் அடித்துகொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவைகுண்டத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மனைவி மகேஸ்வரிக்கு அவரது உறவினரான சக்திவேல் என்ற இளைஞன் கைத்தொலைபேசியில் தகாத முறையில் குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை சக்திவேல் மகேஸ்வரியைப் பார்க்க திருவைகுண்டத்துக்கு நேரில் வந்துள்ளார். அப்போது, செல்பேசியில் குறுந்தகவல் அனுப்பியது தொடர்பாக மாடசாமி விளக்கம் கேட்டுள்ளார்.
இதில் வாக்குவாதம் முற்றவே மாடசாமியும் அவரது உறவினர் ரமேஷ் என்பவரும் இணைந்து இரும்புக் கம்பியால் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே சக்திவேல் உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்த காவல்துறையினர் மாடசாமியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய மாடசாமியின் உறவினர் ரமேஷை தேடிவருகின்றனர்.
வட மாகாணத்தை சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன், தேசிய ரீதியாக ஏற்படுத்திய தனது சாதனையை மீண்டும் புதுப்பித்துள்ளார். பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் சாதனை படைத்துவரும் அனித்தா இன்று மீண்டும் மற்றுமொரு சாதனையை படைத்துள்ளார்.
அனித்தா கோலூன்றிப் பாய்தல் போட்டியில் ஸ்ரீலங்கா சாதனையை மீண்டும் புதுப்பித்த நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.
மாத்தறை – கொடவில மைதானத்தில் இன்று ஆரம்பமாகிய 43வது தேசிய விளையாட்டு விழாவில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
அதற்கமைய அனிதா 3.48 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனையை நிலைநாட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு எதிராக மன்னார் தோட்ட வெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று முன்தினம் (20.09.2017) காலை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த கடல் உணவு பொருட்களை கொள்வனவு செய்து வியாபாராத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகரான வெற்றிவேல் தயானந்தன் (வயது 40) என்ற குடும்பஸ்தரே வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்து தான் வசித்து வருவதாகவும், கடல் உணவு பொருட்களை கொள்வனவு செய்து வியாபாராத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தொடர்ச்சியாக தனது சுய கௌரவத்தை உதாசீனம் செய்யும் வகையில் பாதுகாப்பு தரப்பினர் செயற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி (17.09.2017)ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்த மன்னார் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சுமார் 10 இற்கும் மேற்பட்ட பொலிஸார் மோப்ப நாய் ஒன்றை கொண்டு வந்து எனது வீட்டை முழுமையாக சேதனையிட்டனர்.எனது வீட்டில் சட்ட விரோதமான பொருட்கள் உள்ளதாக கூறியே குறித்த சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் ஒரு மணித்தியாலம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் எனது குடும்பத்திற்கு ஆதரவாக அருட்தந்தை ஒருவர் வீட்டிற்கு வந்து இறுதி நேரம் வரை காத்திருந்தார்.
எனினும் மோப்ப நாயின் உதவியுடன் சோதனைகளை மேற்கொண்ட பொலிஸார் எவ்விதமான சந்தேக பொருட்களையும் கைப்பற்றவில்லை.
இறுதியாக தவறான தகவல் என கூறிய மன்னார் பொலிஸார் நடந்தவற்றை வாக்கு மூலமாக பதிவு செய்து விட்டுச் சென்றனர். குறித்த சம்பவத்தினால் எனது குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
குறித்த கிராமத்தில் மக்கள் மத்தியில் கௌரவமாக வாழ்ந்து வரும் எனது குடும்பத்தின் கௌரவத்தை சீர் குழைக்கும் வகையில் பொலிஸாரின் செயற்பாடு அமைந்துள்ளது.
இதே போன்று கடந்த 27.03.2012 அன்று காலை 7.35 மணியளவில் எனது வீட்டிற்கு வந்த சுமார் நூற்றிற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் எனது வீட்டை சுற்றி வளைத்து தேடுதல்களை மேற்கொண்டு விட்டு தவறான தகவல் என கூறிச் சென்றுள்ளனர்.
தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்ற இவ் சம்பவங்கள் எனது நற்பெயருக்கும் சுய கௌரவத்திற்கும் கலங்கத்தை ஏற்படுத்துவதோடு,எனது கிராம மக்கள் மத்தியில் சந்தேக பார்வையையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே கடந்த 17 ஆம் திகதி (17.09.2017) ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் எனது வீட்டிற்கு வந்து சோதனைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விளக்கத்தினை வழங்க வேண்டும் எனவும், தவறான இரகசியத்தகவலினை வழங்கிய குறித்த நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிர்வரும் காலங்களில் இவ்வாறான இரகசிய தகவல் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறித்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா சிவபுரம் பகுதியில் நேற்று (21.09.2017) காலை 9 மணியளவில் கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் திரு.குணபாலன் தலைமையில் பொது நூல் நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் திரு. கா.உதயராஜா, வவுனியா தெற்கு வலய கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு எம்.பி.நடராசா , முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், செக்கட்டிப்புலவு கிராம சேவையாளர் ஜே.அமலதாஸ், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக கே.கே.மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், ஆகியோரின் இணைப்பாளர்கள், அமைச்சர் ரிஷாட் பதியூதினின் இணைப்பாளர், சமுர்த்தி உத்தியோகத்தர், பாடசாலை அதிபர், மாணவர்கள், ஆசிரியர்கள், மகளிர் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் வரவேற்பு நடனம், கவிதை வாசித்தல் , மாணவர்களுக்கு வாசிப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன
பொது நூலகத்தின் ஞாபகார்த்த மரக்கன்று ஒன்றினையும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் நாட்டி வைத்தனர்.
வன்னி பிராந்திய சமுதாய பொலிஸ் பிரிவினரும், ஈஷி மிஷன் பூரண சுவிஷேச சபையினரும் இணைந்து ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம் நேற்று முன்தினம் (20.09.2017) பிற்பகல் 2 மணியளவில் வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் 3ம் பகுதியிலுள்ள கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்தித்தில் இடம்பெற்றது.
வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்களின் பூரண ஆதரவுடன் இடம்பெற்ற மருத்துவ முகாமில் 50க்கு மேற்பட்ட பொதுமக்கள் இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
இந் நிகழ்வில் வன்னி பிராந்திய சமுதாய பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், சிதம்பரபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, ஈஷி மிஷன் பூரண சுவிஷேச சபையின் பிஷப் , கற்குளம் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் , மாதர் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பரந்தன் இரண்டாம் கட்டைச் சந்தியில் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிறுத்தி வைக்கப்பட்ட இரு டிப்பர்கள் மீது மற்றுமொரு டிப்பர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதுடன். இவ் விபத்தில் ஒரு டிப்பரின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன் டிப்பர் வாகனங்களும் கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியில் வசிக்கும் லாரன், வில் பவர்ஸ் தம்பதியர் வளர்க்கும் பூனைகள் இரண்டு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியிருக்கின்றன.
இவர்களின் பூனைகளில் ஒன்றான சிக்னஸின் வால் மிக நீளமானது. உலகிலேயே மிக நீளமான வாலுடைய வீட்டுப் பூனை இது தான். இதன் வாலின் நீளம் 18.4 அங்குலம்.
சிக்னஸுக்கு 2 வயதாகிவிட்டது. பிறந்ததிலிருந்தே இயல்பான பூனைகளைவிட இதன் வால் மிக நீளமாக இருந்தது. இந்தப் பூனையின் சகோதரனுக்கு வால் சாதாரணமாகத்தான் இருக்கிறது. காரணம் தெரியவில்லை.
ஒரு கட்டத்தில் பூனையின் வால் அளவுக்கு அதிகமாக வளர ஆரம்பித்தது. அதற்குப் பிறகே சிக்னஸின் வாலைப் பாதுகாக்க ஆரம்பித்தோம். கதவு பின்னால் ஒளிந்து கொள்ளும்போது வால் கதவில் சிக்கிவிடும். உயரமான இடத்திலிருந்து குதிக்கும்போது வாலுக்கு என்ன ஆகுமோ என்ற பயம் வந்துவிடும்.
இவனைக் கண்காணிப்பதே ஒரு பெரும் வேலையாக மாறிவிட்டது. சென்ற வருடம் ஜூன் மாதம் கின்னஸ் நிறுவனத்திலிருந்து வந்து சிக்னஸின் வாலை அளந்தனர். 17.58 அங்குல நீளம் இருந்தது. தற்போது 18.4 அங்குலமாக வளர்ந்துவிட்டது. மாதந்தோறும் வளர்ச்சி தெரிகிறது.
என லாரன் தெரிவித்துள்ளார்.
சிக்னஸின் சகோதரன் ஆர்க்ட்ரஸும் ஒரு கின்னஸ் சாதனையை நிகழ்த்திவிட்டது. உலகின் மிக உயரமான வீட்டுப் பூனை என்ற பட்டத்தை அது பெற்றிருக்கிறது. இதன் உயரம் 19.5 அங்குலம்.
ஒரே வீட்டில், ஒரே நேரத்தில் இரண்டு கின்னஸ் சாதனைகள் நிகழ்ந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைகின்றார்கள் லாரன், வில் பவர்ஸ் தம்பதியர்.
அப்பிள் நிறுவனம் அண்மையில் தனது கையடக்கத்தொலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு புதிய இயங்குதள பதிப்பினை அறிமுகம் செய்திருந்தது.
பல புதிய அம்சங்களுடன் அறிமுகமாகிய இப் பதிப்பு தொடர்பில் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை பயன்படுத்துபவர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.எனினும் ஐ.ஓ.எஸ் 11 எனப்படும் இப் புதிய பதிப்பினால் எதிர்நோக்கப்படும் பிரச்சினை தொடர்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஐ.ஓ.எஸ் 11 ஆனது 64 Bit இயங்குதளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, எனவே 64 Bit செயலிகள் மட்டுமே இதில் நிறுவி பயன்படுத்த முடியும்.ஆனால் முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட 32 Bit செயலிகள் பயன்படுத்த முடியாது.
இதன் காரணமாக ஐ.ஓ.எஸ் 11 இயங்குதள பதிப்பினை பதிவிறக்கம் செய்தவர்கள் பல செயலிகளை பயன்படுத்த முடியாது தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.