வவுனியாவில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளுக்கு 14 நாட்கள் சிறை!!

வவுனியாவில் நேற்று (23.08.2017) மதியம் 11 மணியளவில் லஞ்சம் வாங்கிய வனவள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரை லஞ்ச,ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள வனவள பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் இரு உத்தியோகத்தர்கள் நேற்று மதியம் 11 மணியளவில் அலுவலகத்தில் வைத்து லஞ்சம் வாங்கிய சமயத்தில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டனர்.

பொதுமக்களினால் வழங்கப்பட்ட ரகசிய முறைப்பாட்டிற்கு அமைவாகவே இத் திடிர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு உத்தியோகத்தர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இரு உத்தியோகத்தர்களும் நேற்று மாலை வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சமயத்தில் இருவருக்கு 14நாட்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிவான் தீர்ப்பளித்தார்.

வவுனியாவில் புகையிரத கடவை ஊழியரை பொலிசார் அச்சுறுத்துவதாக முறைப்பாடு!!

 
வவுனியாவில் புகையிரதக்கடவையில் பணியாற்றும் ஊழியரை வேலையை ராஜினாமா செய்யுமாறு கூறி பொலிசார் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று நேற்று (23.08.2017) பதிவு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பறையனாலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்பாம் பாடசாலை விதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவை வீதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றிவரும் பரமசிவம் குவேந்திரன் (வயது 25) என்பவருக்கே பொலிசார் நேற்று முன்தினம் (22.08.2017) உயிர் அச்சுறுத்தல் விடுத்தள்ளதாக வவுனியாவிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஜே.றொகான் ராஜ்குமார் முறைப்பாடு அளித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தபின்னர் கருத்து தெரிவித்த எஸ்.ஜே.றொகான் ராஜ்குமார்,

மன்னார் மதவாச்சியை இணைக்கும் புகையிரதச் சாலையில் பணியாற்றிவரும் எமது ஊழியருக்கு எதிராக பொலிசார் பொய் குற்றச்சாட்டை சுமத்தியதுடன் ஊழியரின் தாயாரிடம் உமது மகனை வேலைக்கு அனுப்பவேண்டாம் அவ்வாறு அனுப்பினால் பிணமாகவே எடுத்துச்செல்ல வேண்டியிருக்கும் என நேரடியாகவே அச்சுறுத்தல் விடுத்ததுடன் வேலையை ராஜினாமா செய்து கடிதத்தை பறையனாலங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என பொலிசாரினால் அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட ஊழியருக்கு நீதி கிடைக்கும்வரை இன்று (24.08) இரவு 12 மணியிலிருந்து வடக்கில் அனைத்து புகையிரதகடவை காப்பாளர்களும் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.

வவுனியாவில் கிராம அலுவலருக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள் : காரணம் என்ன?

 
தமக்கு வறட்சி நிவாரணம் ஏன் வழங்கப்படவில்லை என வவுனியா, பூவரசன்குளம் கிராம அலுவலர் பிரிவு மக்கள் கிராம அலுவலரின் அலுவலகத்திற்கு கேட்கச்சென்றபோது அவர்களை அநாகரிகமாக பேசியதாகத் தெரிவித்து கிராம அலுவலருக்கு எதிராக நேற்று காலை பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பூவரசன்குளம் கிராம அலுவலர் பிரிவில் 600 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் வெறும் நூற்றுக்கும் குறைவான குடும்பங்களுக்கே வறட்சி நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

அதற்காக தெரிவு செய்யப்பட்ட மக்களை நிவாரண வேலைக்காக கிராம அலுவலர் அழைத்திருந்திருந்தார். வறட்சி நிவாரணத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் தம்மை ஏன் புறக்கணித்ததாகவும், தாமும் அப்பகுதியில் தானே வசிக்கின்றோம் எனவும், தமக்கும் வறட்சி தானே என கிராம அலுவலரின் அலுவலகத்திற்கு சென்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதி கிராம அலுவலர் அம்மக்களை பார்த்து தாம் பெயர் விபரங்களை பதிவு செய்யும் போது எங்கு இருந்தீர்கள், வீட்டில் படுத்தா இருந்தீர்கள், எங்கேயாவது படுத்திட்டு இங்கு வந்து கேள்வி கேட்டக்க் கூடாது என வயது வேறுபாடின்றி பலரையும் மிகவும் அவதூறாக தம்மை பேசி அனுப்பியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டமையால் பூவரசன்குளம் பொலிசாரை அழைத்து மக்களை தனது அலுவலகத்தில் இருந்து வெளியேற்ற முற்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் குறித்த கிராம அலுவலர் அலுவலகம் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்,

வறட்சி நிவாரணம் எமக்கும் வேண்டும், வறட்சி நிவாரணம் எவ்வாறு பதியப்பட்டது, அரசே விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே, கிராம அலுவலரை இடம்மாற்றுக்கள், அநாகரிகமாக பேசும் கிராம அலுவலர் வேண்டாம், அதிகாரிகளே அநாகரிகமாக நடக்கலாமா என கோசம் எழுப்பியதுடன் தமக்கும் வறட்சி நிவாரணம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கணவனைக் காப்பாற்ற மனைவி செய்த காரியம்!!

பொலிஸாரிடமிருந்து தப்பித்துக் கொள்ள அலுமாரிக்குள் ஒழிந்திருந்த நபரை திக்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீதிமன்றில் முன்னிலையாகத் தவறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய அவரது வீட்டுக்குப் பொலிஸார் சென்றுள்ளனர்.

பொலிஸார் கைது செய்வதனை தடுக்கும் நோக்கில் சந்தேக நபர் வீட்டின் அலுமாரி ஒன்றில் மறைந்து கொண்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வீட்டின் அலுமாரியில் மறைந்திருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாரிய வாகன விபத்து ஒன்று மற்றும் மேலும் மூன்று மோட்டார் போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் மாத்தறை நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள சில வழக்குகளின் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னர் முன்னிலையாகாத காரணத்தினால் பொலிஸார் வீட்டுக்கு சென்று சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது கணவர் நீண்ட காலமாக வீட்டுக்கு வரவில்லை என அவரது மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் தேடுதல் நடத்திய போது குறித்த சந்தேக நபர் அலுமாரி ஒன்றிற்குள் மறைந்திருப்பது பொலிஸாரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சீனாவில் சாதனையை நிலைநாட்டிய சுவிற்சர்லாந்து ஈழத்தமிழ் இளையோர்கள்!!

 
சீனாவின் ஷங்காய் மா நகரில் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை இடம்பெறும் இதோசுரியூ உலகக் கராத்தேச் சுற்றுப் போட்டியில் முதற்தடவையாக சுவிஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி எமது ஈழத்து இளந்தலைமுறையினர் அறுவர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு வெற்றியீட்டியுள்ளனர்.

குறித்த போட்டிகடந்த 18, 19,20 ஆகிய தினங்களில் இடம்பெற்றுள்ளதுடன், ஏறத்தாழ 25 நாடுகள் கலந்து கொண்டன. உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேசப் போட்டிகளில் எங்கள் பதிவுகளை அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டும்.

அந்த வகையில், சுவிஸ் நாட்டிலிருந்து சுவிஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி எமது ஈழத்து இளந்தலைமுறையினர் அறுவர் கொண்ட குழுவினர் முதற்தடவையாக இப்போட்டிகளில் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக விளையாடி பதக்கங்களைப் பெற்று வெற்றியீட்டியுள்ளனர்.

அத்துடன், உலக நாடுகளின் சர்வதேச‌ கராத்தேப் பயிற்சிப் பட்டறையிலும் பங்குபற்றி சிறப்புப் பயிற்சிகளும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும் சென்செய் வி.கெளரிதாசன் அவர்களுக்கு ஜப்பான் நாட்டிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட உயர் கறுப்புப்பட்டி ஐந்தாவது நிலைச் சான்றிதழும் கொண்டு வரப்பட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த போட்டில் கலந்து கொண்டோர்கள் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

விபுலாந்தன் கெளரிதாசன் – தலைமைப் பயிற்சி ஆசிரியர்

கெளரிதாசன் ஸப்தேஷ்ணா – சூரிச்

ஸ்ரீபாலன் நிஷாலினி – லுட்சேர்ன்

தெய்வேந்திரம் பகீரதன் – சூரிச்

கெளரிதாஸன் ஷ்வப்தேஷ் – சூரிச்

வாமதேவன் விதுன் – சூரிச்

பாஸ்கரன் மெளனிஷன் – ஷப்கவுசன்.

வெற்றியீட்டி சாதனை படைத்தோர்:

கெளரிதாசன் ஸப்தேஷ்ணா – (18 – 20 பெண்கள் பிரிவு) – இரு வெண்கலப் பதக்கங்கள் – காட்டா / குமிற்றே

ஸ்ரீபாலன் நிஷாலினி – (11 – 12 பெண்கள் பிரிவு) – வெண்கலப் பதக்கம் – காட்டா

கெளரிதாஸன் ஷ்வப்தேஷ் – (17 வயது ஆண்கள் பிரிவு) – சிறந்த எட்டு – காட்டா

வாமதேவன் விதுன் – (18 – 20 ஆண்கள்) – சிறந்த எட்டு – காட்டா

இதேவேளை, லுற்றன் தமிழ் மன்ற தலைவர் தர்மபால மற்றும் லுற்றன் தமிழ் மன்றத்தின் கல்விக்கு பொறுப்பான ஆசிரியர் நா.ரஞ்சன், நிர்வாகத்தினர் சூரிச் விமான‌ நிலையத்தில் வெற்றியீட்டி நாடு திரும்பிய கராத்தே வீரர்களுக்கு பூங்கொத்து வழங்கி கோலாகல வரவேற்பு வழங்கப்பட்டது.

2021 இல் டென்மார்க் நாட்டில் இடம்பெற இருக்கும் இதோசுரியூ உலகக் கராத்தேச் சுற்றுப் போட்டிகளில் இன்னும் அதிகமான‌ போட்டியாளர்கள் சுவிஸ் நாட்டில் இருந்து பங்குபற்றுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ள அதிசயக் குழந்தை!!

முழு சூரிய கிரகணத்தின் போது பிறந்த தமது குழந்தைக்கு வித்தியாசமாக பெயரிட்டு பெற்றோர்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.

அமெரிக்காவின் 14 மாகாணங்களில் 99 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முன்தினம் நடைபெற்ற முழு சூரிய கிரகணத்தை அனைவரும் பார்த்து களிப்படைந்தனர்.

இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கிரீன்வில்லே மருத்துவமனையில் ப்ரீடம் யுபங்ஸ் என்பவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சூரிய கிரகணம் நடைபெற்ற நேரத்தில் அவர் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

சூரிய கிரகணத்தின் போது பிறந்த குழந்தை என்பதால், கிரகணத்தை ஆங்கிலத்தில் குறிக்கும் ‘எக்லிப்ஸ்’ என்ற வார்த்தையையே குழந்தைக்கு பெயராக வைத்து பெற்றோர்கள் ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

குழந்தைக்கு நிறத்தை குறிக்கும் வார்த்தையான வயலட் என்ற பெயரை வைக்கவே முடிவெடுத்திருந்ததாவும், சூரிய கிரகணத்தின் போது பிறந்ததால் பெயரை மாற்ற நினைத்ததாகவும் ப்ரீடம் யுபங்ஸ் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

சூரிய கிரகணத்தின் போது பிறந்து அதே வார்த்தையை பெயராக பெற்றுள்ளதால், செல்லக் குழந்தை எக்லிப்ஸ்சுக்கு மருத்துவமனை நிர்வாகம் சிறப்பு உடை ஒன்றை பரிசாக அளித்து உற்சாகப்படுத்தியுள்ளது என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிளிநொச்சி தமிழ் பெண்ணுக்கு உயிர்கொடுத்த சிங்கள இளைஞன்!!

சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் பெண்ணொருவருக்கு சிங்கள இளைஞர் ஒருவரின் சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது.

விபத்தொன்றில் சிக்கி மூளைச் சாவு நிலையிலிருந்த 19 வயதான சிங்கள இளைஞர் ஒருவரின் சிறுநீரகம் குறித்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சியை சேர்ந்த 46 வயதான தமிழ்ப் பெண்ணுக்கு சிறுநீரகம் மாற்றீடு செய்யப்பட்ட சம்பவமொன்று கண்டி வைத்தியசாலையில் கடந்த திங்கட்கிழமை நடந்துள்ளது.

பதுளை, மஹியங்கனை வீதியைச் சேர்ந்த வை.கே.லக்சன் புரமோத்யா எனும் இந்த இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வீதி விபத்தொன்றில் சிக்கிக்கொண்டார். அவர் மூளைச் சாவு நிலையிலுள்ளார்.

இந்த நிலையில், அவரது பெற்றோரின் சம்மதத்துடன் அகற்றப்பட்ட சிறுநீரகங்களில் ஒன்று தமிழ்ப் பெண்ணுக்கும் மற்றைய சிறுநீரகம் குருநாகல் மல்சிரிபுர பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயது ஆணுக்கும் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.

உலகின் மிக அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலை வௌியிட்டது ஃபோர்ப்ஸ்!!

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் மிக அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலில் ஹாலிவுட் நடிகர் மார்க் வால்பெர்க் 408 கோடி ரூபா வருமானத்துடன் முதலிடம் பிடித்துள்ளார்.

பொலிவுட் நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான், அக்க்ஷய்குமார் ஆகியோர் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளனர்.

திரைப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிச்தொகுப்பு ஆகியவற்றிற்காக நடிகர்கள் பெறும் மொத்த வருமானத்தின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதில் பொலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் 228 கோடி ரூபா வருமானத்துடன் எட்டாவது இடத்திலும், சல்மான் கான் 222 கோடி ரூபா வருமானத்துடன் ஒன்பதாவது இடத்திலும் அக்க்ஷய் குமார் 213 கோடி ரூபா வருமானத்துடன் 10 வது இடத்திலும் உள்ளனர்.

பிரபல மல்யுத்த வீரர் டலஸ் மெக்கார்வர் 26 வயதில் உயிரிழப்பு!!

 
சம்பியன் பட்டம் வென்ற பிரபல பொடிபில்டர் டலஸ் மெக்கார்வர் 26 வயதில் உயிரிழந்தார். உணவுக்குழாயில் உணவு அடைந்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் கடந்த திங்கட்கிழமை (21) அவர் உயிரிழந்துள்ளார்.

டலஸ் மெக்கார்வர் பிரபல WWE நட்சத்திரமான டானா புரூக் என்பவரின் காதலன் ஆவார். கடைசியாக டானாவிடம் தொலைபேசியில் பேசிய போது, தான் உணவு சமைக்க போவதாகக் கூறியுள்ளார் டலஸ்.

இதனால், அவரது உணவுக்குழாயில் உணவு அடைத்து அவர் இறந்திருக்கலாம் என்றும் வேறு எந்தவித அசம்பாவிதமும் இல்லை என்றும் டானா கூறியுள்ளார். 26 வயதான டலஸ் மெக்கார்வர் அவரது ரசிகர்களால் பிக் கண்ட்ரி என்று அழைக்கப்படுபவர்.

இவர் கடந்த மார்ச் மாதத்தில் பாடி பில்டிங் போட்டியின் போது, மேடையிலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சந்திரனில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை : குழப்பத்தில் விஞ்ஞானிகள்!!

பூமியின் துணைக்கிரகமான சந்திரனில் நீர் இருப்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், 1972 ஆம் ஆண்டிற்கு பின்னர் மீண்டும் தற்போது விஞ்ஞானிகள் இதுபற்றி பகுப்பாய்வு செய்துள்ளனர்.

செயற்கைக்கோளிலிருந்து பெறப்பட்ட புகைப்படங்களை வைத்துப் பார்க்கும் போது அங்கு நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் தென்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஜேம்ஸ் டே என்பவரது தலைமையிலான புவியியலாளர் குழு ஒன்றே இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

இதன்போது, அப்பல்லோ16லிருந்து பெறப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் மீண்டும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், 66,095 அல்லது ருஸ்டி ராக் என அறியப்படும் கற்பாறை தொடர்பிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பாறையானது அப்பல்லோ 16 திட்டத்தின் போது தரையிறங்கிய பகுதி ஆகும்.

சந்திரனின் மேற்பரப்பானது நாம் எண்ணியதைப் போல் அல்லாது வறட்சியாகக் காணப்படுவது 45 வருடங்கள் கழித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராட்சத சமோசா : தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை!!

 
லண்டனில் உள்ள முஸ்லிம் தொண்டு நிறுவனம் ஒன்று 153.1 கிலோ எடையுள்ள மிகப்பெரிய சமோசாவை செய்து உலக சாதனை படைத்துள்ளது.

நேற்று முன்தினம் லண்டனில் உள்ள ஒரு மசூதியில் பலர் இணைந்து உலகின் மிகப்பெரிய சமோசாவைத் தயாரித்துள்ளனர். இந்த சமோசாவை கின்னஸ் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அனைத்தும் சரியாக இருப்பதை உறுதிப்படுத்திய பின்னர், உலகின் மிகப்பெரிய சமோசா என்ற சான்றிதழை வழங்கினர். இந்த ராட்சத சமோசாவை செய்ய 15 மணி நேரம் ஆனது.

சோதனைக்கு பின்னர் சமோசாவை ஆதரவற்றவர்களுக்கு வழங்கியதாக தொண்டு நிறுவனத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இரு காரணங்களுக்காக கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கும் சட்டம்!!

இலங்கையில் இரு காரணங்களுக்காக கருக்கலைப்புக்கு அனுமதியளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக சிறப்பு சமூக மருத்துவ நிபுணரான டாக்டர் கபில ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள சுகாதார கல்வி பணியகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் இதனை அவர் தெரிவித்தார்.

பாலியல் வன்முறையால் உருவாகும் மற்றும் மரபணு பிறழ்வுக்குள்ளான கருக்களை கலைப்பதற்கு சட்ட ரீதியாக அனுமதியளிக்கும் வகையில் இச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக அவர் கூறினார்.

உத்தேச சட்ட மூலத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது என்றும் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெற வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“குறிப்பிட்ட சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் கருவை கலைப்பதா? அல்லது சுமப்பதா? என்ற தீர்மானத்தை தாய் தான் எடுக்க வேண்டும். அரசு வைத்தியசாலையொன்றில் கருக்கலைப்புக்கான சிபாரிசுகளை உரிய இரு மருத்துவ நிபுணர்கள் செய்ய வேண்டும்” என்றும் டாக்டர் கபில ஜயரட்ன கூறுகிறார்.

“தாயொருவர் கர்ப்பம் தரித்து 20வது வாரத்தில் சிசுவின் மரபணு பிறழ்வு பற்றி வைத்தியர்களினால் இனம் காண முடியும். பிறப்பு குறைபாடுடைய பிரசவத்தினால் தாய்மார்கள் பல்வேறு துன்பங்களை வாழ் நாள் முழுவதும் அனுபவிக்கின்றார்கள்.

அந்த பிள்ளையும் உயிர் வாழ துன்பப்படுகிறது. உத்தேச சட்டத்தின் மூலம் தாயின் வலியையும் தாய் சேய் படும் துன்பங்களையும் தடுக்க முடியும்” என்று அவர் சுட்டிக் காட்டுகிறார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட பெண்ணியல் நோய் மருத்துவ நிபுணரான டாக்டர் யு.டி.பி. ரத்னசிறி “இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த ஏற்கனவே அரசியல் , மதம் மற்றும் சமூகம் சார்ந்த காரணங்கள் தடையாக உள்ள போதிலும் பல தாய்மார்களின் துன்பங்களைப் போக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட வேண்டியது அவசியம் ஆகும்.

சகல தாய்மார்களுக்கும் தங்கள் வலி மற்றும் துன்பங்களை போக்கிக்கொள்ள உரிமை உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

-பிபிசி-

ஓதுக்கி வைத்த மக்கள் : காட்டில் குழந்தை பெற்ற கர்ப்பிணிப் பெண்!!

ஒடிசா மாநிலத்தில் கிராம மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் காட்டில் குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் மல்கன்கிரி என்ற கிராமத்தை சேர்ந்த திரிலோச்சன் என்பவரது குடும்பத்தை ஒரு சில காரணங்களுக்காக கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்தனர்.

இந்நிலையில், கர்ப்பிணியான திரிலோச்சனின் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது, ஆனால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த காரணத்தால் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.
இதனைத் தொடர்ந்து அவசரஊர்தி வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் காட்டுப்பகுதியில் வைத்து அப்பெண்ணிற்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அம்புலன்ஸை ஓட்டி வந்த ஓட்டுனர் மற்றும் பெண்ணின் கணவர் இருவரும் பிரசவம் பார்த்துள்ளனர்.

சிம் அட்டை விநியோகம் தொடர்பில் புதிய கட்டுப்பாடு!!

கையடக்க தொலைபேசி சிம் அட்டைகளை விநியோகிக்கும் போது புதிய நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.

சிம் அட்டைகளை பெற்றுக் கொள்ளும் போது அதன் உரிமையாளரின் சரியான தகவல்கள் வழங்கப்படாத அதிகளவான இலக்கங்கள் காணப்படுவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

சிம் அட்டைகளில் தேசிய பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் சமாதானத்தை பாதுகாப்பதற்காகவும், அடையாளத்தை உறுதி செய்யக் கூடிய தகவல்களுடன் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பல்வேறு குற்றங்கள் மற்றும் மோசடி செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய உரிய முறையில் முழுமைப்படுத்தப்பட்ட விண்ணப்பம் மற்றும் சிம் அட்டையை பயன்படுத்தும் நபரின் தேசிய அடையாள அட்டையின் பிரதி உட்பட அவசியமான தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.

இந்த நடைமுறையை பின்பற்றுமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த யோசனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

 

பாடசாலை மாணவியை மனிதக்கழிவு அள்ள வைத்த நபர்!!

இந்தியாவில் பள்ளி மாணவி ஒருவர் தனது கைகளால் மனிதக்கழிவை அள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேசத்தின் சாத்பூரில் உள்ள பள்ளியில் போதிய கழிப்பிடம் வசதி இல்லாததால் அப்பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தியுள்ளார்.

இதனால் கோபமடைந்த தபாங்க் பாப்பு சிங் என்பவர் அந்த மாணவியையே மலக்கழிவை அள்ளும் படி கூறியுள்ளார்.
அந்த மாணவியும் அள்ளியுள்ளதால், அது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில், தபாங்க் பாப்பு சிங் மீது பொலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை இளைஞனின் வித்தியாசமான கண்டுபிடிப்பு!!

இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார். தீக் குச்சிகளின் உதவியின்றி வாணவேடிக்கையை வான் நோக்கி அனுப்பும் முயற்சியிலேயே அவர் ஈடுபட்டுள்ளார். மலிந்த விஜேசேன என்ற இளைஞரே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.

பழைய பொருட்களின் உதவியுடன் சிறிய கருவிகளை உருவாக்கிய இந்த இளைஞர் கையடக்க தொலைபேசியின் உதவியுடன் இந்த வெடிகளை வான் நோக்கி அனுப்பியுள்ளார்.

இந்த முயற்சியை காணொளியாக பதிவு செய்த இளைஞர் அதனை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு பலரின் மத்தியில் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.