வவுனியாவில் 4 வயதுச் சிறுவனை கொடுமைபடுத்திய நபரை தேடி பொலிசார் வலைவீச்சு!!

வவுனியாவில் நேற்றைய தினம் (22.08.2017) நான்கு வயது பச்சிளம் பாலகனை கொடூரமாக சித்திரவதை செய்த வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் சுந்தரபுரம் படிவம்-1 பகுதியில் வாழ்ந்துவரும் சிறிய தந்தை வேலாயுதம் கஜரூபன் (வயது 24) தலைமறைவாகியுள்ளதால் இவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
​​
இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில் சிறுவனை வவுனியா மாவட்ட சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் பொறுப்பேற்றுள்ளனர்.

சிறுவனின் சிகிச்சை முடிந்ததும் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் சிறுவனை முன்னிலைப்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை வவுனியா வைத்தியசாலையில் குறித்த சிறுவன் தனது மழலை குணத்தால் அனைவரது மனங்களிலும் இடம்பிடித்துள்ளதுடன், இவனது குறும்புச் செயல்களை அங்கிருப்பவர்கள் மகிழ்வுடன் கண்டுகளிப்பதை காணக்கூடியதாக உள்ளது.

வவுனியாவில் வெடிக்காத நிலையில் கைக்குண்டுகள் மீட்பு!!

 
வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியிலுள்ள வயல் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் கைக்குண்டுகளை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியிலுள்ள வயல் காணியை நேற்றைய தினம் (22.08) மாலை பண்படுத்தும் போது அப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டுகள் இருப்பதனை அவதானித்த உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பொலிசாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் அப்பகுதியில் கைக்குண்டுகள்-06 , பரா- 01 மேலும் அப்பகுதியில் தேடுதல் மேற்கொண்டபோது குண்டுகள் இருப்பதாகவும் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று அப்பகுதியை மேலும் அகழ்வு பணியை மேற்கொள்ளவிருப்பதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

25000 ரூபாய் தருகின்றேன் மோடியின் புகைப்படத்தை காட்டுங்கள் : பிரபல நடிகை!!

25000 ரூபாய் தருகின்றோம், வெள்ளம் பாதித்த இடங்களில் மோடியின் புகைப்படத்தை காட்ட இயலுமா என நடிகை ரம்யா தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நடிகை ரம்யா அவ்வப்போது பாஜக கட்சியை விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், அசாம், குஜராத் அல்லது பீகாரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட எந்த இடத்திலாவது மோடி இருப்பதுபோல புகைப்படங்களை காண்பியுங்கள் பார்ப்போம், அதுவும் போட்டோஷொப் இல்லாமல் காட்டுங்கள் என கூறியுள்ளார்.

இதற்கு பாஜக ஆதரவாளர்கள், காங்கிரஸ் கட்சி இருளில் மூழ்கி கிடக்கிறது. கடந்த 70 வருடங்களாக காங்கிரஸ் என்ன செய்திருக்கிறது என விமர்சித்து வருகின்றனர்.

அணு ஆயுத பரிசோதனையை நிறுத்த முடியாது : ஐ.நா சபைக்கு வட கொரியா பதிலடி!!

அமெரிக்காவும் தென் கொரியாவும் ராணுவ பயிற்சியினை நிறுத்தும் வரை வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத பரிசோதனையை செய்து வரும் என அந்நாட்டின் தூதர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

தென் கொரியாவில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ பயிற்சியை நிறுத்த வேண்டும் என வட கொரியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இரு நாடுகளும் இணைந்து ராணுவ பயிற்சியில் ஈடுப்பட்டு வருவதால் கொரியா தீபகற்பத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது என வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரில் ஐ.நா சபை கூட்டம் இன்று நடந்துள்ளது. இக்கூட்டத்தில் வட கொரியா சார்பாக தூதரான Ju Yong-сhol பங்கேற்றுள்ளார்.

அப்போது, ‘அணு ஆயுத பரிசோதனையில் இருந்து வட கொரியா ஒருபோதும் பின் வாங்காது. அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளின் ராணுவ பயிற்சியானது ஏற்கனவே உள்ள போர் பதற்றத்தை அதிகரிக்கும்.

மேலும், இரு நாடுகளும் இணைந்து வட கொரியாவிற்கு எதிராக ரகசிய போர் திட்டம் தீட்டி வருகின்றன.

இரு நாடுகளின் அத்துமீறலால் கொரியா தீபகற்பத்தில் அணு ஆயுத போர் எந்த நேரத்திலும் நிகழும் அபாயம் உள்ளது’ என Ju Yong-сhol எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுவிஸ் மாணவியை வல்லுறவுக்குட்படுத்திய ஆட்டோ சாரதியின் பிணை மனு நிராகரிப்பு!!

சுவிஸ் மாணவியொருவரை வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆட்டோ சாரதியின் பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அநுராதபுரம் பிரதேசத்தின் தொன்மைச் சிறப்புகள் குறித்த ஆய்வொன்றுக்காக சுவிஸ் மாணவிகள் குழுவொன்று இலங்கை வந்திருந்தனர்.

அவர்களில் ஒரு மாணவி கடந்த ஜூலை மாதம் 26ம் திகதி அநுராதபுரத்தில் அமைந்துள்ள பௌத்த விகாரையொன்றுக்குச் சென்றிருந்த நேரத்தில் முச்சக்கர வண்டி சாரதியொருவரினால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

குறித்த ஆட்டோ சாரதி சுவிஸ் மாணவியை இரண்டு நாட்கள் வரை பலவந்தமாக தடுத்து வைத்து வல்லுறவுக்குட்படுத்திய பின் நகரத்தில் கொண்டு வந்து ,இறக்கி விட்டுச் சென்றிருந்தார்.

எனினும் பொலிசார் கண்காணிப்புக் கமெராக்களின் உதவியுடன் முச்சக்கர வண்டிச் சாரதியைக் கண்டுபிடித்துக் கைது செய்திருந்தனர்.

தற்போதைக்கு வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட மாணவி சுவிஸ் திரும்பிச் சென்று மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முச்சக்கர வண்டிச் சாரதி தனக்கு பிணை வழங்குமாறு கோரி முன்வைத்த மனுவை அநுராதபுரம் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

மேலும் சந்தேக நபரின் மரபணு மாதிரியை கொழும்பு பொரளையில் அமைந்துள்ள ஜீன்டெக் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அமெரிக்க ஏவுகணை போர் கப்பல் மீது தீவிரவாதத் தாக்குதல்?

 
அமெரிக்காவுக்கு சொந்தமான John S. McCain என்ற அதிநவீன ஏவுகணை போர்க்கப்பல் சிங்கப்பூர் கடலுக்கும் மலாக்கா தீவுக்கும் இடையே லிபிய நாட்டிற்கு சொந்தமான சரக்கு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளாகியிருந்தது.

எனினும், இது விபத்து அல்ல எனவும் மாறாக சைபர் அல்லது நாசகார தாக்குதலாக இருக்கலாம் என சந்தேககம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க கடற்படைத் தளபதி அட்மிரல் ஜான் ரிச்சர்ட்சன் அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளார்.

மோதல் இடையூறுகள், சைபர் ஊடுருவல்கள் அல்லது நாசவேலை ஆகியவற்றின் விளைவாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்பது தொடர்பில் இதுவரை எவ்வித அறிகுறியும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

எனினும், இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணையின் போது குறித்த விடயங்கள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்படும் என அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களில் பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட இரண்டாவது ஆபத்தான விபத்தாக இது பார்க்கப்படுகின்றது.
எனவே ஒரு கடற்படைத் திட்டத்தை அறிவித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த விபத்தின் போது 10 அமெரிக்க படை வீரர்கள் காணாமல் போயுள்ளதாகவும், நான்கு பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி Fitzgerald என்ற அமெரிக்க போர் கப்பல் ஒன்று பிலிப்பைன் கன்டெய்னர் கப்பல் ஒன்றுடன் ஜப்பான் கடற்பரப்பில் வைத்து மோதி விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் ரசிகர்களையும் மகிழ்விக்க வரும் விவேகம்!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் – காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் நாளை (24.08) வௌியாகவுள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நாளை மறுநாள் படம் வெளியாக இருப்பதால், படத்திற்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் விவேகம் வௌியீட்டை அஜித் ரசிகர்கள் பல்வேறு விதமாகக் கொண்டாடி வருகின்றனர். விவேகம் படத்திற்கான ரசிகர்கள் காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் `வேலைக்காரன்’ படத்தின் டீசரும் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை `வேலைக்காரன்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

எனவே, எதிர்வரும் 24-ஆம் திகதி அஜித் ரசிகர்களுக்கான விருந்து மட்டுமின்றி, சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கான விருந்தாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

சச்சினின் சாதனையை முறியடிப்பாரா அலஸ்டெயார் குக்?

சச்சின் டென்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 200 போட்டிகளில் விளையாடி 51 சதங்களுடன் 15,921 ஓட்டங்களைக் குவித்துள்ளமை வாரலாற்று சாதனையாகவுள்ளது.

சச்சின் காலத்தில் விளையாடிய ரிக்கி பொண்டிங் 13,378 ஓட்டங்களையும் கல்லீஸ் 13,289 ஓட்டங்களையும் டிராவிட் 13,288 ஓட்டங்களையும் சங்கக்கார 12,400 ஓட்டங்களையும் லாரா 11,953 ஓட்டங்களையும் சந்தர்பால் 11,867 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 11,814 ஓட்டங்களையும் குவித்துள்ளனர்.

T20 கிரிக்கெட் போட்டி தலைதூக்கியதால், டெஸ்ட் போட்டிகளில் இனிமேல் வரும் வீரர்கள் 200 போட்டிகளுக்கு மேல் விளையாடுவது கடினம்.
அவ்வாறு விளையாடினாலும் சச்சின் அடித்துள்ள 15,921 ஓட்டங்களை சேர்ப்பது மிகமிகக் கடினம் என்று சொல்லப்பட்டு வருகிறது.

இதனால் சச்சின் டென்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாதனையாளராகத் திகழ்வார் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவரின் சாதனைக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் அலஸ்டெயார் குக் அச்சுறுத்தலாக இருந்து வருகிறார்.

இங்கிலாந்து அணியில் மிகவும் இளம் வயதில் அறிமுகமான அலஸ்டெயார் குக், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

அவர் 145 போட்டிகளில் விளையாடி 31 சதங்களுடன் 11,568 ஓட்டங்களைக் குவித்துள்ளார். சச்சினை விட 4353 ஓட்டங்கள் மட்டுமே பின்தங்கியுள்ளார்.

தற்போது அவருக்கு 32 வயதுதான் ஆகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக குக் சிறப்பான வகையில் ஆடவில்லை. இதனால் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறலாம் அல்லது அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற செய்தி வந்து கொண்டிருந்தது.

ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இரட்டைச்சதம் அடித்து மீண்டும் திறமையை வௌிப்படுத்தியுள்ளார் குக்.

இப்படியே விளையாடினால் குக் இன்னும் 4 வருடத்திற்கு அணியில் நீடித்து, 4353 ஓட்டங்களை எடுக்க வாய்ப்புள்ளது. பின்தங்கிய நிலையில் இருந்தாலும், சாதனைக்காக குக்கை இங்கிலாந்து அணி தொடர்ந்து வலியுறுத்தும்.

இதனால் குக், சச்சின் டென்டுல்கரின் சாதனைக்கு அச்சுறுத்தலாகவே உள்ளார்.

வெள்ளப் பாதிப்பிலிருந்து மீளாத உத்தரப்பிரேதசம் : 86 பேர் பலி!!

உத்தரப்பிரேதசம் மாநிலத்தில் வெள்ளத்தால் இதுவரை 86 பேர் பலியாகினர். மேலும் பல லட்சம் மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 2 ஆயிரம் கிராமங்கள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கின. இதுவரை வெள்ளத்தால் 86 பேர் இறந்துள்ளனர்.
2.2 மில்லியனுக்கு அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய விமானப் படை, ராணுவம், துணை ராணுவம் மற்றும் பொலிஸ் படைகள் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளன.

50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நேபாளம் நாட்டின் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீராலும் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சென்ற வாரம் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும் விரைவில் மீட்பு பணிகளை தொடங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஹஜ் பெருநாள் செப்டம்பர் 2 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது!!

நாட்டின் எந்தப் பகுதியிலும் துல் ஹஜ் மாத தலைபிறை தென்படாமையினால் துல் கஃதா மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்வதற்கு கொழும்பு பெரிய பள்ளிவாசல் தீர்மானித்துள்ளது.

அதன்படி, செப்டம்பர் 2 ஆம் திகதி சனிக்கிழமை ஹஜ் பெருநாளை இலங்கைவாழ் முஸ்லிம் மக்கள் கொண்டாடவுள்ளனர்.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற பிறைக்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

வட பகுதி உட்பட 9 மாவட்டங்களில் இன்று அடைமழை!!

நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று மற்றும் நாளையும் அடை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வவுனியா, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமாக மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஏனைய பகுதிகளின் வானம் மேக மூட்டத்தினால் நிறைந்து காணப்படும் எனவும், சப்ரகமுவ, மேல், தெற்கு மத்திய மற்றும் வடமேல் மாகாணத்திலும் மழை பெய்ய கூடும் எனவும் திணைக்களம் வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூராக மாறப்போகும் இலங்கை!!

எதிர்வரும் 15 ஆண்டுகளுக்குள் இலங்கையை சிங்கப்பூராக தரமுயர்த்துவதற்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என சீனா அறிவித்துள்ளது.

தங்காலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “சீனாவின் மிகச் சிறந்த நண்பன் இலங்கை. இரு நாடுகளுக்கும் இடையில் 70 ஆண்டுகளாக நட்பு தொடர்கின்றது.

கடந்த சில ஆண்டுகளாக சீனா தனது அனைத்துலக உதவியில் அதிகளவு பங்கை இலங்கைக்கு வழங்கி வருகிறது. குறிப்பாக உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் சீனா மிகவும் கவனம் செலுத்தியுள்ளது.

இந்நிலையில், நாட்டை அபிவிருத்தி செய்ய அரசாங்கத்திற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். தென்னிலங்கையில், தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க சீனா உதவும்.

இலங்கை, சீனா நட்புறவு சங்கத்தின் மூலம், 1300 இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வாய்ப்புகளை சீனா வழங்குகின்றது. இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் 2000 ஆக அதிகரிக்கப்படும்.

இதேவேளை, ஷங்காய் நகரத்தைப் போன்று இலங்கையின் தென்பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு, சீனா தொடர்ந்தும் உதவிகளை செய்யும்.

எவ்வாறாயினும், எதிர்வரும் 15 ஆண்டுகளில் இலங்கையை சிங்கப்பூரின் நிலைக்கு தரமுயர்த்துவதற்காக சீனா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

கனடாவில் திருடனை மடக்கிப் பிடித்த தமிழர்கள்!!

 
கனடாவில் தமிழ் பெண்ணை தள்ளி விழுத்திவிட்டு சங்கிலி அறுக்க முயற்சித்த திருடனை வீதியால் சென்ற தமிழ் மக்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கனடா ஸ்கார்பிறோச்(Scarborough) நகர் பகுதியில் இரவு 8 மணியளவில் (21.08) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஸ்கார்பிறோச்(Scarborough ) நகர் பகுதியில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக குறித்த தமிழ் பெண் வந்திருந்த நிலையில் வீதியால் சென்ற கறுப்பினத்தை சேர்ந்த ஒருவர் குறித்த பெண் அணிந்திருந்த சங்கிலியை அறுக்க முயன்றுள்ளார்.

எனினும் குறித்த தமிழ் பெண் தனது சங்கிலியை கையால் இறுகப் பற்றிய நிலையில் அப்பெண்ணை வீதியில் தள்ளி விழுத்தி விட்டு திருடன் தப்பி சென்றுள்ளார்.

குறித்த பெண் கீழே விழுந்ததை அவதானித்த அந்த வீதியால் சென்ற ஏனைய தமிழ் உறவுகள் தப்பி ஓடிய திருடனை பிடிப்பதற்காக பின்தொடா்ந்தனா்.

இந்நிலையில் குறித்த திருடன் அகப்பட்ட போது திருடனுடன் ஏனைய மூன்று கறுப்பினத்தவா்களும் ஒன்று சோ்ந்து குறித்த தமிழ் இளைஞா்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடா்பில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு உடனடியாக திருடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பிரான்ஸ் பொலிஸ் அதிகாரி!!

தனது மகனுக்கு பரிசு வழங்குவதற்காக எருமை மாட்டின் மண்டை ஓடு மற்றும் கொம்புகளையும் சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயற்சித்த பிரானஸ் நாட்டவர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 56 வயதான பிரான்ஸ் நாட்டவர், யு.எல் 225 என்ற விமானத்தில் டுபாய் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த போது விமான நிலைய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் பயண பை ஸ்கேன் இயந்திரம் ஊடாக பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நபர் விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பிரான்ஸ் நாட்டில் பிரதான உயர் பொலிஸ் அதிகாரியாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகனின் கோரிக்கைக்கமைய இவற்றினை கொண்டு செல்ல முயற்சித்துள்ளதாகவும், கொழும்பில் இருந்து நெருக்கமானவர் ஊடாக இவற்றினை கொள்வனவு செய்துள்ளதாகவும் விசாரணை தெரியவந்துள்ளதாக சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 

கோஹ்லி, அனுஷ்காவைத் தொடர்ந்து இலங்கையில் தோனியின் செயல்!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனி இலங்கையில் மாமரம் ஒன்றை நட்டு வைத்துள்ளார்.

விராட் கோஹ்லி தலைமையிலான கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் விராட் கோஹ்லி மற்றும் அவரது காதலி அனுஷ்கா சர்மா ஆகியோர் இணைந்து கண்டி நகரில் மரக்கன்றுகளை நட்டு வைத்திருந்தனர்.

அந்த வகையில் தற்போது தோனியும் கண்டியில் மாமரம் ஒன்றை நட்டு வைத்துள்ளார்.

இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 4 வயதுச் சிறுவனை அடித்து துன்புறுத்திய சிறிய தந்தை!!

 
வவுனியா குருமன்காடு பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் 4 வயது சிறுவனை அச்சிறுவனின் சிறிய தந்தையார் அடித்து துன்புறுத்திய நிலையில் சிறுவன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ச்சியாக குறித்த சிறுவனை அடித்து துன்புறுத்தி வந்த நிலையில் நேற்று மாலையே குறித்த சிறுவன் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளான். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் குடும்பம் ஒன்று தங்கியிருந்தது. இவ் வீட்டில் வசிக்கும் பெண்ணின் கணவன் வேறு திருமணம் செய்த நிலையில் தற்போது அப்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார்.

முன்னைய திருமணத்தின் போது குறித்த பெண்ணுக்கு 4 வயது சிறுவன் ஒருவர் உள்ளான். குறித்த சிறுவனை தற்போது திருமணம் செய்த இளைஞன் (சிறிய தந்தை) அடித்து துன்புறுத்தியுள்ளார்.

அச் சிறுவனை பார்க்கும் போது முன்னைய கணவரின் ஞாபகம் வருவதாக கூறியே சிறுவனை அடித்து துன்புறுத்துவதாக தெரியவருகிறது. இதனால் சிறுவனின் கன்னம், முதுகு, கண் ஆகிய பகுதிகளில் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் வேலைக்குச் சென்ற ஒருவர் இதனை அவதானித்து குறித்த சிறுவனை மீட்டு தனது நண்பர்களின் உதவியுடன் வவுனியா பொலிசில் ஒப்படைந்துள்ளார்.

இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த வவுனியா பொலிசார் சிறுவனை வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சிறுவனை தாக்கிய சிறிய தந்தையாரை பொலிசார் கைது செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.