இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியர்களை கலங்கடிக்கும் இந்த ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்தியுள்ளது. இதில் அதிக வெப்பநிலை, குறைந்த மழை அளவு போன்ற தட்ப வெப்பநிலை மாற்றங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியாவின் தெற்குப் பகுதியில் இந்த தற்கொலைகளும், காலநிலை மாற்றமும் நடந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும், இந்த ஆய்வில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் காலநிலை மாற்றத்தால் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் விவசாய உற்பத்தி அதிகளவில் நடக்கும் காலங்களில் வெப்பநிலை அதிகரிப்பு, மழை இல்லாமல் போனதால் ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் உயிரிழப்புகளும் அதிகரிக்கும் என இந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா மீது பொருளாதார தடைவிதிக்கும் பிரேரணைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் கிளாரி கிளிண்டனை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இந்தத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு அதிகம் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கிளாரி கிளிண்டனை தோற்கடிக்க ரஷ்ய உளவுத் துறை செயல்பட்டனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அமெரிக்காவின் செனட் சபை கமிட்டி நடத்திய விசாரணையில் உறுதியானது.
இந்நிலையில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கும் பிரேரணை அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த பிரேரணைக்கு ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார்.
பெண்களினால் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் சுற்றி வளைக்கப்பட்டு ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்புள்ள கல்கிரியாகம பிரதேசத்தில் இவ்வாறு குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாரியளவில் இந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் நடத்தப்பட்டு வந்துள்ளது.
ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் பொலிஸார் குறித்த உற்பத்திச்சாலையை சுற்றி வளைத்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கோடா 62 பெரல் சீனி எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட பல பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சட்டவிரோத மதுபான உற்பத்திச்சாலையை நடத்திச் சென்ற பெண் ஜாஎல பிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய வர்த்தகர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பெண்ணை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கல்கிரியாகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹபரத்தலாவ விவசாய கிராமத்தில் பாரிய காணி ஒன்றை மாதாந்த வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டு இந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உற்பத்திச் சாலைக்குள் கிராம மக்கள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
மதுபானத்தை உற்பத்திச் செய்யும் பணிகளுக்காக ஹட்டன் லிந்துல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை பிரஜைகளுக்கு இலத்திரனியல் வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றினை அறிமுகம் செய்வது தொடர்பிலான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்கீழ் அனைத்து வகை தகவல்களையும் உள்ளடக்கிய சிம் அட்டை வடிவிலான இலத்திரனியல் மாதிரி ஒன்று வெளியிடப்படவுள்ளது.
அதனடிப்படையில் இலத்திரனியல் வெளிநாட்டு பயண கடவுச்சீட்டினை அறிமுகப்படுத்தல் மற்றும் வெளியிடல் வேலைத்திட்டத்தினை முறையான ஆய்வின் பின்னர் அரச மற்றும் தனியார் இணைப்பின் கீழ் செயற்படுத்துவது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன மற்றும் தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் அமைச்சர் ஹரின் பிரனாந்து ஆகியோர் இணைந்து குறித்த யோசனையை முன்வைத்துள்ளனர்.
மேலும், இந்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுண்ணாகத்தின் மத்தியில் நேற்று வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சுண்ணாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் இனந்தெரியாத குழுக்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவரும் 21 வயது மதிக்கத்தக்க இருவரும் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா கூமாங்குளம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 29.07.2017 கொடிஏற்றதுடன் ஆரம்பமானது.மேற்படி ஆலயத்தின் உற்சவம் எதிர்வரும் 08.08.2017 செவ்வாய்கிழமை வரை இடம்பெறுகிறது.
இவ்வாலயத்தின் பூசகர் உருக்கொண்டு சலங்கை கட்டி வாள் மீது ஏறிநின்று ஆடி அம்பாளுக்கு பூஜை செய்வது விசேடமாகும்…
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறி கடும் வறட்சியின் காரணமாக வறுமையில் வாழ்ந்துவரும் மக்களுக்கு சற்று ஆறுதலாக இருப்பது இலங்கை அரசின் வறுமை ஒழிப்பு திட்டமான சமுர்த்தி திட்டமே.
இத் திட்டத்தை அமுல்ப்படுத்துவதில் பல குளறுபடிகள் ஏற்ப்பட்டுள்ள நிலையில் இன்று (02.08) சமுர்த்தி முத்திரைக்கான பணமெடுக்க வந்த வேலங்குளம் கிராமசேவகர் பிரிவிட்குட்பட்ட மக்களுக்கு வேப்பங்குள சமுர்த்தி வங்கியில் பாரிய ஏமாற்றம் ஏற்ப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வழமை போன்று இன்று மாதாந்த முத்திரைக்கான பணமெடுக்க வந்த குறித்த மக்களிடம் முன்னறிவித்தல் எதுவுமின்றி அவர்களது முத்திரைப் பணத்திலிருந்து 2500 ரூபாவை அங்கிருந்த உத்தியோகத்தர்கள் வெட்டி எடுத்துவிட்டு பலரை வெறுங்கையோடு அனுப்பிய சம்பவம் மக்களை பெரும் அதிர்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மக்கள் அவர்களிடம் ஏன் பணத்தை வெட்டி எடுக்கின்றீர்கள் என வினவியபோது கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் (2015) அனைத்து சமுர்த்திப் பயனாளிகளுக்கும் தலா 2500 ரூபா வழங்கப்பட்டதாகவும் அதனையே வெட்டுவதாகவும் கூறியுள்ளனர்.
பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் கைக்குழந்தைகளுக்கு பால்மா வாங்குவதற்காகவும், அரிசி உள்ளிட்ட வீட்டுப்பாவனைப் பொருட்களை வாங்குவதற்கும் தயாராக வந்த மக்கள் திரும்பிச் செல்வதற்குக்கூட பேருந்துக்கு பணமில்லாமல் தத்தளித்துக்கொண்டு நிற்கின்றனர்.
அந்த மக்களிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது தேர்தல் காலத்தில் பணம் தந்தது உண்மையெனவும், ஆனால் அது கடனடிப்படையிலோ அல்லது திரும்பப் பெறப்படும் எனவோ கூறி அந்தப்பணம் வழங்கப்படவில்லை எனவும் தம்மிடம் அந்த பணத்தை திருப்பித்தருமாறு பலமாதங்களாக கேட்டு வந்ததாகவும் வறுமை காரணமாக அந்தப்பணத்தை மீள வழங்க முடியவில்லை எனவும், அதை தற்போது ஒரேயடியாக வெட்டி எடுப்பது என்ன நியாயம்? எனவும் அப்படி வெட்டுவதாக இருந்தால் மாதாந்தம் 500 ரூபா வீதம் வெட்டி எடுக்கலாமே எனவும், ஆதங்கப்படுகின்றனர்.
அதுமட்டுமின்றி கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பலருக்கு பல சலுகைகளை அரசாங்கம் வழங்கியதாகவும் அரச உத்தியோகத்தர்களுக்கு உந்துருளிகளையும் வழங்கியதாகவும் அவற்றினை மீளப்பெறாமல் ஏழை மக்களுக்கு வழங்கிய இந்த சொற்ப பணத்தினை மட்டும் ஏன் மீள பெறுகின்றார்கள்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி அந்தப்பணத்தை வெட்டி எடுப்பதற்கு பற்றுச் சீட்டுக்கள் வழங்கப்படவில்லை எனவும் புத்தகத்திலும் அதை பதிவிடவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் வேப்பங்குள சமுர்த்தி வங்கி முகாமையாளரிடம் வினவியபோது அப்போதைய அரசாங்கம் சமுர்த்திப் பயனாளிகளுக்கு தலா 2500 ரூபா வழங்கச் சொன்னதாகவும் தாங்கள் தங்களது வங்கிப் பணத்திலிருந்து அதை வழங்கியதாகவும் அரசாங்கம் அந்தப்பணத்தை வங்கிக்கு வழங்காத காரணத்தினால் தாம் அதை மக்களின் முத்திரையில் வெட்டுவதாகவும் குறிப்பிட்டார்,
எது எப்படியிருப்பினும் தேர்தலின்போது மக்களின் வங்கிப் பணத்திலிருந்து பணம் வழங்கியது முதல் ஒரேதடவையில் பணத்தை வெட்டி எடுப்பதுவரை சமூர்த்தி நிர்வாகம் மேற்கொள்ளுகின்ற நடவடிக்கைகள் முரண்பட்டதாகவே உள்ளதுடன் தற்போது கடும் வரட்சியில் மக்கள் அல்லாடும் நேரத்தில் அவர்களின் பணத்தை அப்படியே வெட்டி எடுப்பது அவர்களை மேலும் துன்பத்திற்குள்ளாக்கும் நடவடிக்கையாகும்.
எனவே பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இது தொடர்பில் சரியான தீர்மானத்தை மேற்கொண்டு மக்கள் பாதிக்கப்படாத வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்வதையே மக்கள் எதிர்பார்கின்றனர்.
வவுனியாவில் நேற்று (01.08.2017) இரவு 10.30 மணியளவில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அபகரித்துக்கொண்டு தாயாரின் கையை வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிலில் தப்பி சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
வவுனியா கண்டி வீதி, மூன்றுமுறிப்பு பகுதியில் நேற்று (01.08.2017) இரவு 10.30 மணியளவில் தமது வீட்டில் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்த போது வீட்டு வாசலில் உறவினர்கள் அழைத்தது போல் யாரோ அழைத்துள்ளார்.
அங்கே சென்ற பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்த சந்தர்பத்தில் அப் பெண் கூக்குரலிட்ட வேளை அப் பெண்ணின் தாய் அவ்விடத்திற்கு ஓடி வர தாயின் கையை வெட்டி விட்டு மகளின் ஒரு பவுண் தங்க சங்கிலியை அறுத்து கொண்டு இரு இளைஞர்கள் தப்பித்து சென்றுள்ளார்கள்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களும் தங்களை இனங்காட்டிக் கொள்ளாத வகையில் முகத்தை மறைத்து கறுப்பு துணியால் கட்டியிருந்ததாகவும் பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்டிருந்தார்.
பாதிக்கப்பட்ட பெண் தற்போது விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை வங்கியின் 78வது ஆண்டு நிறைவையொட்டி வவுனியா மேற்தரக்கிளையில் மாபெரும் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.
இலங்கை வங்கியின் முகாமையாளர் கே.சிவஞானசுந்தரத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊழியர்கள், மற்றும் வாடிக்கையாளர்கள் உதிரம் கொடுத்து உதவிடுவொம் என்றதன் அடிப்படையில் தங்கள் குருதியினை வழங்கியிருந்தனர்.
வவுனியா புகையிரதநிலைய வீதியில் அமைந்துள்ள மேற்தரக் கிளையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, மற்றும் வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஸ்மார்ட் கைப்பேசிகளின் வரவு மற்றும் சமூக வலைத்தளங்களின் வரவு என்பன ஒன்றாக இணைந்து வயது வேறுபாடு இன்றி அனைவரினதும் நேரத்தினை விழுங்கிவருகின்றது.
இதற்கு மேலாக தூக்கத்திற்கு செல்லும் நேரத்திலும் இவற்றின் பாவனையானது தூக்கத்தை கலைத்து பல்வேறு நோய்களுக்கும் காரணமாக அமைந்துவிடுகின்றது.
இது தொடர்பில் பல்வேறு ஆராய்ச்சிகள் இடம்பெற்று வரும் நிலையில் தீர்வு தரக்கூடிய ஒரு முடிவு கிடைத்துள்ளது.
அதாவது இரவு நேரத்தில் ஸ்மார்ட் கைப்பேசி பாவிப்பவர்கள் மற்றும் தொலைக்காட்சி பாவிப்பவர்கள் அணியக்கூடிய விசேட கண்ணாடி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இக் கண்ணாடியானது கைப்பேசிகள், தொலைக்காட்சிகளில் இருந்து வெளியேறும் நீல நிற ஒளியை உறுஞ்சக்கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறு குறித்த ஒளி உறுஞ்சப்படுவதனால் குறித்த நேரத்தின் பின்னர் தானாகவே தூக்கம் தூண்டப்படுகின்றது.
இதனால் விரைவாக நித்திரை செய்யக்கூடியதாக இருப்பதுடன், ஆரோக்கியமான தூக்கத்தினையும் தரக்கூடியதாக காணப்படுகின்றது. அதாவது தூக்கமானது 58 சதவீதத்தினால் உந்தப்படுகின்றது.
இக் கண்ணாடியானது Houston பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், யாரை துவக்க வீரராக இறக்குவது என்பதில் கோஹ்லிக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கொழும்பில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்கிறது.
அதே நேரத்தில் சொந்த மண்ணில் தொடரை இழந்துவிடக் கூடாது என்பதில் இலங்கை அணி கவனமாக இருக்கின்றது.
இந்நிலையில் இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு யாரை துவக்க வீரராக இறக்குவது என்பதில் கோஹ்லிக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில், தவான் 190 ஓட்டங்கள் எடுத்தார். அதேபோல இரண்டாவது இன்னிங்சில் அபினவ் முகுந்த அரைசதம் அடித்து கைகொடுத்தார். தற்போது காய்ச்சலில் இருந்து குணமடைந்துள்ள ராகுல், மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளார்.
இதனால் இந்திய அணியில் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் துவக்க வீரர்களாக யாரை தேர்வு செய்வது என பெரும் குழப்பத்தில் உள்ளார் கோஹ்லி.
ஆனால் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ராகுலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் மசூதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை 29 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேற்கு ஹீரட்டில் சிறுபான்மையினரான ஷியா பிரிவின் ஜவாடியா மசூதியலே இத்தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.
மக்கள் மசூதிக்குள் வழிபட்டுக்கொண்டிருந்த போது இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் சிக்கி உயிரிழந்ததாக இதுவரை 29 பேரின் உடல்கள் ஹீரட் நகர மருத்துவமனைக்கு வந்துள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினரான ஷியா பிரிவை சேர்ந்தவர்களை, நாட்டின் கிழக்கில் செயல்படும் ஐஎஸ்யுடன் இணைப்பில் உள்ள குழு தொடரந்து அச்சுறுத்தி வருவது நினைவுக் கூறதக்கது.
ஹீரட், ஜவாடியா மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உடனடியாக எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.
அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட வாத்துகளை அதன் உரிமையாளர்கள் மீட்டுள்ளார்.
கடந்த யூலை மாத தொடக்கத்தில் பென்சில்வேனியா பகுதியில் சுற்றி திரிந்த நான்கு வாத்துகள், வீட்டிற்கு அருகே உள்ள எரிவாயு நிலையத்திற்குள் நுழைந்துள்ளது.
இதைக்கண்ட எரிவாயு நிலைய ஊழியர்கள் பொலிசாருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் நான்கு வாத்துகளையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று காவலில் வைத்துள்ளனர்.
பின்னர், வாத்துகளின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க முடியாத பொலிசார், பேஸ்புக் வாத்துகளின் கைது குறித்து தகவலை பதிவிட்டுள்ளனர்.
குறித்த பதிவு இணையத்தில் வைரலாக வாத்துகள் தேசியளவில் பிரபலமடைந்தது. தகவலறிந்து குறித்த காவல் நிலையத்திற்கு விரைந்த வாத்தின் உரிமையாளர் நான்கு வாத்துகளை மீட்டு அழைத்துச் சென்றுள்ளார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த மொடல் அழகி தனது கணவருடன் வீடியோ அழைப்பில் இருக்கும் போதே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் சிட்டகொங் பகுதியைச் சேர்ந்தவர் ரிசிலா பின்டே வாசர்(22). இவர் 2012 ஆம் ஆண்டிலிருந்தே மொடலாக இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 3 வயதில் குழந்தை உள்ளது. அதுமட்டுமின்றி இவர் பலகழைக்கழகத்தில் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் தனது கணவருடன் கடந்த திங்கட்கிழமை வட்ஸ் ஆப் மூலம் வீடியோ அழைப்பில் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் என்ன வாக்குவாதம் நடந்த்து என்பதைப் பற்றி தெரியவில்லை.
ஆனால் ரிசிலா வீடியோ அழைப்பில் இருக்கும் போதே, அவர் கணவர் கண் முன்னே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உடனடியாக அவர் டாக்காவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
ரிசிலாவின் திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இருந்தே கசந்துள்ளதாகவும், அதன் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்திருக்க கூடும் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் ஆண்கள் மட்டும் ஒன்று சேர்ந்து 145 ஆடுகளை வெட்டி படையல் வைத்து திருவிழா கொண்டாடியுள்ளனர்.
நாமகிரி பேட்டையில், 250 ஆண்டுகளுக்கு முன் பொங்களாயி என்ற பெண்ணுக்கு, பெண்கள் யாரும் உதவி செய்யாததால், இரட்டை குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால், அந்த பெண் விட்ட சாபத்தால், இப்பகுதியில் பஞ்சம், பட்டினி ஏற்பட்டது. இப்பகுதியை சேர்ந்த ஆண்கள் மட்டும், தவறுக்கு மன்னிப்பு கேட்டதுடன், அனைத்து சமுதாயத்தையும் சேர்ந்த ஆண்கள் மட்டும் விழா எடுப்பதாக கேட்டுக்கொண்டதால், விழா கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி18க்கு முன்பாக கிடா வெட்டி பூஜை நடக்கும். இந்த விழாவில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்வார்கள்.
அதே போன்று இந்த ஆண்டும் ஆடு, கோழி, பன்றி ஆகியவை பலியிட்டு முப்பூஜை செய்யப்பட்டது.