பாகுபலி இரண்டு பாகங்களிலும் ரம்யாகிருஷ்ணன் நடித்த சிவகாமி வேடம் பெரிதாக பேசப்பட்டது. அவரது நடிப்புத் திறமைக்கு தீனி போடும் அளவுக்கு நல்ல வாய்ப்பாக இது அமைந்தது.
தற்போது, தமிழில் கமலுடன் சபாஷ்நாயுடு, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படங்களில் நடித்து வருகிறார். இதுவும் பேசப்படும் வேடங்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதே போல் தெலுங்கிலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்து வருகிறது. தெலுங்கில் நாராரோஹித், ரெஜினா நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் ரம்யாகிருஷ்ணன் அரசியல்வாதியாக அழுத்தமான வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் கதை முழுவதும் நாயகன் நாராரோஹித், ரம்யாகிருஷ்ணன் ஆகியோரை சுற்றியே வருகிறது என்று கூறப்படுகிறது.
இது ரம்யாகிருஷ்ணன் நடிப்புத் திறமைக்கு மற்றொரு அங்கீகாரமாக அமையும் என்று தெலுங்கு பட வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
யாழ் மானிப்பாய் சுதுமலை அம்மன் ஆலயத்தில் வழிபாட்டின் பின்னர் தனது புகுந்த வீட்டையும் பார்வையிட்டார் தமது குடும்பத்துடன் நடிகை திருமதி ரம்பா இந்திரன் .
இவர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துடன் சுதுமலை அம்மன் ஆலய பிரதம குருக்களுடன் சந்திப்பிலும் இவர்கள் கலந்து கொண்டனர். இது தான் திருமணம் செய்த பின்னர் முதற்தடவையான வருகையாக இருக்கின்றது.
இலங்கை தழிழரான இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்து வந்தனர் இவர்களுக்கு லாவண்யா, ஷாசா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
1993ஆம் ஆண்டு திரைக்கு அறிமுகமாகி பல ரசிகர்களின் கனவுக்கன்னியான ரம்பா ரஜினி,அஜித், விஜய் உட்பட பல பிரபல்ய நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Bedfont பகுதியைச் சேர்ந்த தம்பதி Chris Gard(32)-Connie Yates(31). இவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை(charlie) பிறக்கும் போதே மரபணு குறைபாட்டுடன் பிறந்துள்ளது. அதுமட்டுமின்றி மூளை சேதமும் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து குழந்தைக்கு லண்டனில் உள்ள Great Ormond Street மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் குழந்தையின் விடயத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். ஆனால் மருத்துவமனை சார்பில் லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதில் குழந்தைகளின் பெற்றோரான Chris Gard-Connie Yates ஆகியோர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் Experimental nucleoside therapy மேற்கொள்ளவுள்ளனர்.
ஆனால் அந்த சிகிச்சையின் பயனாய் குழந்தைக்கு எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில், இறுதியாக நீதிபதிகள் பெற்றோருக்கு எதிராக தீர்ப்பு வழங்கினர். இதனால் அவர்கள் லண்டனில் உள்ள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இது தொடர்பான வழக்கு கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்திற்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்னும் இரண்டு நாட்களில் அமெரிக்காவில் குழந்தைக்கு மேற்கொள்ளவிருக்கும் Experimental nucleoside therapy பற்றி தொடர்பான புதிய ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சமர்பிக்கப்படும் ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருந்தால், இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஜோயிதா மோதோக்தி. இவர் திருநங்கை என்பதால் சக மாணவ, மாணவிகள் கல்லூரியில் கேலி செய்துள்ளனர். இதனால் இவர் தனது கல்லூரி படிப்பை பாதியிலே நிறுத்திக் கொண்டார்.
திருநங்கை என்று தெரிந்தவுடன் பெற்றோரும் அவரை வீட்டை விட்டு துரத்திவிட்டனர். அதன் பின் கால் செண்டரில் வேலை செய்தார். அங்கும் இவர் கேலிக்கு உள்ளானதால், அங்கிருந்தும் வெளியேறினார்.
அதன் பின் பல்வேறு இடங்களுக்கு சென்று வேலை கேட்ட போதும் திருநங்கை என்பதால், வேலை மறுக்கப்பட்டது. கடைசியில் தெருவில் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு ஆளானார்.
இவர் தினாஜ்பூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு அருகே உள்ள பேருந்து நிலையத்தில் தங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்.
இதைத் தொடர்ந்து சமூக சேவகராக மாறினார். அதன் பின் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட திருநங்கைகளுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.
அதுமட்டுமின்றி எல்.ஜி.பி.டி. எனப்படும் மாற்றுப் பாலின சுதந்திரத்தைக் கொண்டவர்களுக்காக அமைப்பு ஒன்றை துவங்கினார்.
இந்த அமைப்பின் மூலம் அரசாங்கத்திலிருந்து மாற்றுப்பாலினத்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய தேவைகளை நிறைவேற்றினார்.
பாலியல் தொழிலாளிகளாக இருந்து தற்போது எந்தவித ஆதரவும் இல்லாதவர்களுக்கான முதியோர் இல்லத்தையும் உருவாக்கினார்.
அவருடைய இந்த சமூக பணிகளுக்காக தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள லோக் அதாலத் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கை ஒருவர் இப்பணியில் அமர்த்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.
வவுனியாவில் இளைஞர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து 4 பேர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் 4 மணியளவில் வவுனியா செட்கட்டிபிலவு பகுதியில் இளைஞர்கள் மீது வேறு பகுதிகளிலிருந்து வந்த இளைஞர்கள் சிலர் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இறுதியில் மோதலாக மாறியுள்ளது.
இதில் புதிய கோவில்குளத்தைச் சேர்ந்த அ.மயூரன்(28), பி. சுவிதரன்(27), கே.இந்திரன்(27), கேதங்கீதன்(24) ஆகியோர் மீது கம்பி, தடிகள் கொண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும் தாக்குதலில் குறித்த நால்வர் காயமடைந்ததையடுத்து, தாக்குதல் நடாத்தியவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டதாகவும் காயமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இத்தாக்குதல் தொடர்பாக நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அனந்தபுளியங்குளத்தைச்சேர்ந்த கடந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இன்று வரை உடல் உள நலம் பாதிக்கப்பட்டுள்ள ஞானமனோகரன் என்பவரின் மகள் சப்திகாவுக்கு நேற்று மாவட்ட சமூக சேவை அலுவலகம் மூலம் துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டது.
அனந்த புளியங்குளம் சின்னப்பூவரசங்குளம் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் கல்விகற்கும் மாணவி சப்திகா. இவர் சுமார் 5 கிலோ மீற்றர் தூரம் நடந்து வந்து கல்வி கற்று வருபவர். இதனால் பாடசாலைக்கு தினமும் காலதாமதமாகி வருவதுடன் பாதையால் வருகின்ற வழியில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்.
இதனைக் கருத்தில் கொண்டு இவருக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி உதவுமாறு வவுனியா பொது வைத்தியசாலையின் உளநலப்பிரிவினர் மாவட்ட சமூகசேவை அலுவலகத்திடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து லண்டன் V3 அமைப்பைச்சேர்ந்த பி.என்.யோகநாதன் என்ற சமூக ஆர்வலர் தனது பிறந்த தினத்தைமுன்னிட்டு இந்த உதவியை வழங்கிவைத்தார் .
நேற்று (13.07.2017) வியாழக்கிழமை காலை 8 மணியளவில் அனந்த புளியங்குளம் சின்னப்பூவரசங்குளம் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் க.செல்வதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா பொது வைத்தியசாலையின் உளநல வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி எஸ்.சிவதாஸ் பிரதம விருந்தினராகக்கலந்து கொண்டா ர்.
மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாஸன், பாடசாலை உப அதிபர் திருமதி வி.வக்சலா, மாவட்ட சமூகசேவை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.எஸ்.வஸந்தன், உளநல வைத்தியப்பிரிவு சமூக ஆதரவுப்பணியாளர் விஜிதரன் V3 அமைப்பைச் சேர்ந்த கி.உதயகுமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் புருசோத்தமன், குகதாஸன் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கையில் நிலவிய போரினால் வடக்கு மற்றும் கிழக்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு வகையில் பாதிப்புகளுக்கு உள்ளாகினர்.
அவ்வாறு அம்பாறையில் பாதிக்கப்பட்ட மணி அம்மா என்பவரின் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
தினமும் காலையில் எழுந்தவுடன் முதலில் மணி அம்மா, காணாமல் போன தனது மகனின் புகைப்படம் பதியப்பட்டுள்ள அடையாள அட்டையை எடுத்து கையில் வைத்துக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிள்ளைகளின் பாதுகாப்பினுள் வாழ வேண்டிய மணி அம்மா மற்றும் அவரது கணவருக்கு யுத்தம் அந்த அதிர்ஷ்டத்தை இல்லாமல் செய்துவிட்டது.
யுத்தம் காரணமாக தனது மகளின் கணவரும் காணாமல் போயுள்ளார். இதனால் மகளின் பிள்ளைகளை பார்த்து கொள்ளும் பொறுப்பையும் மணி அம்மா மற்றும் அவரது கணவரால் ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
“எனது மகளின் கணவரும் காணாமல் போயிருந்தார். பின்னர் அவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டார். எனினும் இன்று வரையில் அவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை.
எனது கணவரின் தொழில் கிடைக்கும் பணத்திலேயே மகளின் பிள்ளைகளை பார்த்துக் கொள்கின்றோம்.”.. என மணி அம்மா தெரிவித்துள்ளார்.
தனது கண் முன்னால் மகன் உயிரிழக்கவில்லை என்பதனால் மகன் வரும் வரை இந்த தாய் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலனறுவை – மெதிரிகிரிய கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஒரு பாடசாலையில் 41 மாணவ, மாணவிகள் தமது கைகளை வெட்டிக் கொண்டிருந்த நிலையில் பொலிஸார் பொறுப்பேற்று பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
போதைப்பொருள் ஒன்றை பயன்படுத்திய மாணவர்கள் அதன் தாக்கத்தால், தமது கைகளில் பிளேட்டால் வெட்டிக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 10ம் மற்றும் 11ம் ஆண்டு மாணவர்களே இவ்வாறு பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 7 பேர் மாணவிகள். பாடசாலையின் உப அதிபர் மாணவர்களின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவர்களை பரிசோதித்த போது கைகளில் வெட்டுக்காயம் ஏற்படுத்திக் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்ட மாணவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் மாணவர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த போதைப்பொருள் எப்படி பாடசாலைக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கனடாவில் விபத்தை ஏற்படுத்தி தமிழ் பெண் ஒருவரின் மரணத்திற்கு காரணமாக இருந்த நபருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்தில் தமிழ் பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய 43 வயதுடைய நபருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் Vicente Arbis என்ற நபருக்கு எதிரான ஆறு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக இணங்கானப்பட்டுள்ளார்.
2013ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 13ஆம் திகதி அன்று டொரொன்டோவின் வடமுனையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 11 மணியளவில் ட்ரக் வண்டி ஒன்றை ஓட்டிச் சென்ற Arbis என்பவர், அருகில் நிறுத்தி வைக்கபப்பட்டிருந்த பஸ் மீது மோதியமையினால் விபத்து நிகழ்ந்துள்ளது.
இதன்போது ரஞ்சனா கணகசபாபதி என்ற 52 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர்.
ரஞ்சனா கணகசபாபதி என்ற பெண் கோவிலுக்கு சென்ற போது இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது அவரது குடும்ப உறுப்பினர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபர் தொலைபேசியை பேசியவாறு தவறான வழியில் வாகனத்தை ஓட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 10 ஆண்டுகளுக்கு சாரதியாக செயற்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
புளொட் அமைப்பின் 28வது வீர மக்கள் தின நிகழ்வுகள் இன்று (13.06.2017) காலை வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும் முன்னாள் உப நகர பிதாவுமாகிய க.சந்திரகுலசிங்கம் (மோகன்) தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நினைவில்லத்தில் உள்ள கழகத்தின் கொடி கட்சியின் உப தலைவர் க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
நிகழ்வுகளுக்கு வருகை தந்திருந்த அதிதிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கத்தின் உருவப்படத்திற்கு மலர் மாலைகள் அணிவித்தனர். அத்துடன் நிகழ்வுகளுக்கு வருகை தந்திருந்த கழக உறுப்பினர்கள் ஆதரவாளர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் இறைபணிச் செம்மல் செ.வை.தேவராசா (கண்ணகி), சுத்தானந்த இந்து இளைஞர் மன்றத் தலைவர் நா.சேனாதிராசா, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினரும் வட மாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வை.பாலச்சந்திரன்,
மாவட்ட செயற்குழு நிதி பொறுப்பாளர் நிசாந்தன், மாவட்ட குழு உறுப்பினர் ஆட்டோ சங்கத் தலைவர் ரவி, சிவன் கோவில் தலைவர் நவரத்தினம், முன்னாள் ஒய்வு பெற்ற அதிபர் சோதி மாஸ்ரர், சமூக ஆர்வலர் திருமங்கலம், மற்றும் இளைஞரணியின் செயலாளருடன், இளைஞரணியின் மாவட்ட செயலாளரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கேசவன், இளைஞரணியின் மாவட்ட உப தலைவர்களான நிகேதன், கெர்சோன், மாவட்ட இளைஞரணியின் அமைப்பாளர் பிரதீபன், மாவட்ட இளைஞரணியின் நிர்வாக உறுப்பினர் கயூரன், கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா மாவட்டத்தில் 195 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையமானது, இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் தனியார் போக்குவரத்து துறையினருக்கும் இடையிலான முறுகல்நிலை காரணமாக அவ்விடத்திலிருந்து பேருந்து சேவைகளை வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்திய வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண பயணிகள் வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் மூலம் போக்குவரத்து தொடர்பான ஒழுங்குவிதிகளை தயாரித்து வர்த்தமானி மூலமாகவும் அறிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக வடமாகணத்தில் இணைந்தநேர அட்டவணையினை அமுல்ப்படுத்தல் மற்றும் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தினை செயற்ப்படுத்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடலானது அமைச்சர், அனைத்து வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கும் அழைப்புவிடுத்து கடந்த 11.07.2017 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் வவுனியா மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடாத்தப்பட்டது.
அக்கூட்டத்தில் போக்குவரத்து ஒழுங்குவிதிகள் மற்றும் இணைந்தநேர அட்டவணை தொடர்பாக அறிவுறுத்தப்பட்டதுடன், சேவை வழங்குனர்களான இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆகிய இருவருக்கும் ஒருவாரகால அவகாசம் கொடுக்கப்பட்டு இவைதொடர்பான ஏதேனும் ஏற்பாடுகள் இருப்பின் அவற்றினை அதிகாரசபைக்கு தெரியப்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுள்ளது.
மீண்டும் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவிருக்கும் கூட்டத்தில் சேவை வழங்குனர்களினால் கொடுக்கப்பட்ட பரிந்துரைகளையும் கருத்தில்கொண்டு இறுதித்தீர்மானம் எடுக்கப்படுமெனவும், அதனைத்தொடந்து மூன்று நாட்கள் கால அவகாசத்தில் புதிய மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இணைந்தநேர அட்டவணைப்படி சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அறியமுடிகின்றது.
குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.மயூரன் ஆகிய மக்கள் பிரதிநிதிகளும் வவுனியா மாவட்ட செயலாளர், வடமாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளர், இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், வடமாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொலிஸ் அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபையின் உயர்மட்ட அதிகாரிகள், வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களின் சம்மேளனத்தலைவர், உறுப்பினர்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியாவில் இன்று (13.07.2017) காலை முதல் நகரின் மத்திய பகுதிகளான சந்தைப்பகுதி அதனை அண்டிய குளப்பகுதிகளில் வவுனியா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி தலைமையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நகரசபை பொது சுகாதார பரிசோதகர்கள், நகரசபை ஊழியர்கள் பொலிசாருடன் இணைந்து டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தை முன்னெடுத்தனர். சந்தை கட்டிட உரிமையாளர்கள் ஒத்துழைப்புடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வவுனியா கணேசபுரம் கிழக்கு கிராமத்தில் அறநெறிப் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (13.07.2017) காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.
அமைச்சரின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் வவுனியா கனேசபுரம் கிழக்கு கிராமத்தில் அமைக்கப்பட்ட அறநெறிப் பாடசாலைக்கான அடிக்கல்லினை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் நாட்டி வைத்தார்.
இந் நிகழ்வில் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் ப.பிரதீபன், கணேசபுரம் விநாயக வித்தியாலய அதிபர், பாடசாலை ஆசிரியர், மாணவர்கள், கிராம சேவையாளர், பொதுமக்கள், என பலரும் கலந்து கொண்டனர்.
5 லட்சம் ரூபா செலவில் இவ் அறநெறிப் பாடசாலை அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவர் விடுதி திறப்பு விழா இன்று (13.07.2017) காலை 9.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் தா.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
பாடசாலையின் 2017ம் ஆண்டு பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோயில் தர்மகரத்தா சாஸ்ரீ தேசமானிய வேலுப்பிள்ளை குணரட்னம் அவர்களினால் பாடசாலை மாணவர் விடுதி புனரமைக்கப்பட்டு இன்று பாடசாலை சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வவுனியா மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோன், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் தெ.கெங்காதரன், பழைய மாணவர் சங்க செயலாளர் எஸ்.சுஜேன், மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலை மாணவர்களின் நடனம், விவாத மேடை, பாடசாலை கீதம் இறுவட்டு வெளியீடு என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தில் நேற்று (12.07) மாலை 6.30 மணியளவில் கஞ்சாவுடன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு பேருந்தில் பயணித்த பயணி ஒருவரின் பயணப் பொதியினை வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் பொலிசார் சோதனை மேற்கொண்டபோது கிளிநொச்சியைச் சேர்ந்த செல்வரட்ணம் ஐங்கரன் (வயது 35) என்பவர் 4 கிலோ 300 கிராம் கஞ்சாவினை சட்டவிரோதமாக கொண்டு செல்லமுற்பட்டபோது கஞ்சா கடத்தும் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.
கஞ்சாவுடன் குறித்த நபரையும் கைது செய்து பொலிசார் நீதிமன்றத்தில் முன்நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்
கனகராயன்குளத்தில் உள்ள பளைய கண்டிவீதி பலவருடகாலமாக திருத்தம் செய்யப்படாமல் இருந்தபோது வடமாகாணசபை உறுப்பினர்களான மயில்வாகனம் தியாகராசா மற்றும் இ.இந்திரராசா ஆகிய இருவரின் வேண்டுதலுக்கமைவாக வடமாகாண மீன்பிடி போக்குவரத்து வர்தக வாணிப கிராமிய அபிவிருத்தி வீதி அபிவிருத்தி மோட்டார் போக்குவரத்து அமைச்சரான பா.டெனீஸ்வரனால் மேற்படி வீதியை அமைச்சு நிதிமூலம் திருத்தம் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டது.
மேற்படி வீதிக்கான திருத்தவேலையின் ஆரம்பநாளான 11.07.2017ம் திகதி அன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பா.டெனீஸ்வரன் திருத்தத்திற்கான கல்லுவைத்து ஆரம்பித்து வைத்தார்.
இன்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாவின் செயலாளரான த.சிவஞானம், வீதி அபிவிருத்தித் திணைக்கள பொறியியலாளர்கள் மற்றும் வீதி திருத்த வேலையைசெய்யும் ஒப்பந்தகாரர் மற்றும் பொதுஅமைப்புக்களைச் சேர்ந்தபிரதிநிதிகளும் கலந்துகொண்டு வீதி திருத்தவேலையினை ஆரம்பித்து வைத்தார்கள்.