முச்சக்கர வண்டி விபத்து : பெண் பலி : இரு சிறுவர்கள் காணாமல்போன அவலம்!!

மஹியங்கனையில் ஓட்டோ ஒன்று கால்வாய் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலியானதுடன், 3 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன், சிறுவன் ஒருவரும் குழந்தையொன்றும் காணாமல்போயுள்ளனர்.

மஹியங்கனை பதுளை பிரதான வீதிப் பகுதியில் நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஓட்டோ விபத்துக்குள்ளானபோது, அதில் சாரதியுடன் சேர்த்து 6 பேர் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் 21 வயது பெண் ஒருவரே பலியானார்.

மேலும், 7 வயது சிறுவன் மற்றும் 2வயது பெண் குழந்தை ஆகியோர் காணாமல்போயுள்ளனர். அவர்கள் கால்வாய் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கால்வாய் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போன இரண்டு குழந்தைகளையும் மீட்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

பலம்வாந்த இந்திய அணியை பந்தாடிய இலங்கை அணி அபார வெற்றி!!

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் தொடரின் 8ஆவது போட்டி லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில், இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற நிலையில் இலங்கை அணி அபாரமாக துடுப்பெடுத்தாடி 7 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இந்நிலையில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகளை இழந்து 321 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷிகார் தவான் சிறப்பாக விளையாடி 125 ஓட்டங்களும், ரோஹித் சர்மா 78 ஓட்டங்களும், டோனி 63 ஓட்டங்களும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் லசித் மலிங்க 70 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கட்டுகளும், சுரங்க லக்மால் 72 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டும் பெற்று மந்தமான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தாலும், 3 ஓவர்கள் மட்டுமே வீசிய அசேல குணரத்ன 7 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 1 விக்கட்டை வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் 322 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த டிக்கவெல்ல 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்கவே, தொடர்ந்து வந்த குஷால் மெண்டிஸ் 89 ஓட்டங்களும், குணதிலக 76 ஓட்டங்களும் பெற, குஷால் பெரேரா 47 ஓட்டங்கள் பெற்ற நிலையில் உபாதை காரணமாக வெளியேறினார்.

களத்திலிருந்த அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் உபாதையிலிருந்து மீண்டு வந்து அரைசதம் கடக்கவே, மறுமுனையில் அசேல குணரத்ன 34 ஓட்டங்களை பெறவே இலங்கை அணி 48.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 7 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்திய பந்துவீச்சில் புவனேஸ்வர்குமார் மாத்திரம் 54 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டை வீழ்த்த, ஏனைய இரு வீரர்களும் ரன் அவுட் முறையில் வெளியேறினார்கள்.

போட்டியில் 93 பந்துகளை எதிர்கொண்டு 89 ஓட்டங்கள் பெற்ற குஷால் மெண்டிஸ் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி தென்னாபிரிக்க அணியுடனான தோல்வியை தொடர்ந்து, இந்தியாவை வீழ்த்தியதால் 2 புள்ளிகளை பெற்றுள்ளது.

அத்தோடு இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டிற்கு பிறகு (324), இலங்கை அணி அடைந்த இரண்டாவது பெரிய இலக்கு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சுதந்திர பூங்கா திறந்து வைப்பு!!

 
வவுனியா A9 வீதி இரட்டைப்பெரிகுளம் பகுதியில் சுதந்திர பூங்கா இன்று (08.06.2017) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பூங்கா வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான செந்தில்நாதன் மயூரன், ஜெயதிலக்க, முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜா, வவுனியா மன்னார் பிரதி பொலிஸ் மாஅதிபர் தென்னகோன் மற்றும் ஐனாதிபதி காரியாலய அலுவலகர்கள், பொலிஸ் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் இ.போ.ச ஊழியர் மீது தாக்குதல் : தனியார் பேரூந்தின் ஊழியர் கைது!!

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (08.06.2017) காலை 10.15 மணியளவில் இ.போ.ச நேரக்கணிப்பாளர் மீது தனியார் பேரூந்தின் ஊழியர் தாக்கியதில் இ.போ.சபையின் நேரக்கணிப்பாளர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பில் தனியார் பேரூந்தின் ஊழியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளைய தினம் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் புதியதாக அமைக்கப்பட்ட மத்திய பேரூந்து நிலையம் மூடப்படுவதற்கும் இவ்வாறான தனியார் மற்றும் இ.போ.ச ஊழியர்களுக்கிடையே அடிக்கடி ஏற்படும் கைகலப்பே காரணமாகும்.

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர்த் திருவிழா!!(வீடியோ)

 
வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர்த் திருவிழா இன்று (08.06.2017) வியாழக்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.

அதிகாலையில் கிரியைகள் ஆரம்பமாகி சிறப்புப் பூஜைகள் இடம்பெற்று காலை எட்டு மணிளவில் ஸ்ரீ காளியம்மனின் ரதோற்சவம் இடம்பெற்றது.

இன்றைய தேர்த்திருவிழாவின் போது அடியார்கள் காவடிகள், அங்கபிரதட்சணம், அடியடித்தால் மற்றும் கற்பூரசட்டி ஏந்தி தமது நேர்த்திகடன்களை நிறைவு செய்தனர்.

இத் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

விசித்திர நோயின் பாதிப்பு : மனம் தளராத பெண்ணின் சாதனை!!

அமெரிக்காவை சேர்ந்த மெலனி கேடோஸ் எனும் 29 வயதான இளம் பெண்மணி, பிறக்கும் போதே Ectodermal Dysplasia எனும் மரபணுக் கோளாறு பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்.

இந்த நோயின் பாதிப்பினால் இவரின் நகம், எலும்பு, பற்கள், துளைகள் போன்றவை வளர்ச்சி அடையாமல் உள்ளது.

ஆனால் இந்நிலையிலும் கூட மனம் தளர்ந்து போகாமல், தன்னுடைய தனித்திறமையின் மூலம் ஃபேஷன் உலகை மிரள வைத்துக் கொண்டிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

ஃபேஷன் உலகை அசத்திக் கொண்டிருக்கும் அந்த சாதனை பெண்ணின் புகைப்படங்கள்..

உதவி செய்ய மறுத்ததால் அரசு அதிகாரிகளை விநோதமாக பழிவாங்கிய நபர்!!

அரசு அலுவலகத்தில் மனுவை ஏற்க மறுத்ததால், மனுதாரர், அலுவலத்தில் மூட்டை பூச்சிகளை அவிழ்த்துவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா அகஸ்டா மாகணத்தைச் சேர்ந்தவர் வில்லியம்ஸ். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் இருக்கும் குடியிருப்பில் மூட்டை பூச்சிகள் தொல்லை காரணமாக அந்த குடியிருப்பின் மேலாளரிடம் புகார் அளித்துள்ளார்.

ஆனால் அந்த புகாருக்கு தக்க நடவடிக்கையை எடுக்காமல் புகார் அளித்த வில்லியம்சை அந்த குடியிருப்பில் இருந்து காலி செய்யும் படி கூறியுள்ளனர்.

இதனால் வீட்டை காலி செய்ய உதவும்படி கோரி அரசு அலுவலகத்தை நாடினார். அவருடைய மனுவை பரிசோதனை செய்த அதிகாரிகள் வில்லியம்சுக்கு உதவ மறுத்துவிட்டனர்.

தன் நிலையை கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகளுக்கு பாடம் புகட்டும் வகையில், ஒரு பாட்டிலில் மூட்டை பூச்சிகளை கொண்டு வந்து அரசு அலுவலகத்திற்குள் அவிழ்த்துவிட்டுள்ளார். இந்த செயலின் மூலம் மூட்டை பூச்சிகளை அகற்றுவதற்காக அரசு அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

அரசு அலுவலகத்திற்குள் மூட்டை பூச்சிகளை விட்டதால் வில்லியம்ஸை அகஸ்டா மாகாண பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெடித்துச் சிதறிய பட்டாசு தொழிற்சாலை : உடல் சிதறி பலியான 25 பேர்!!

இந்தியாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் உடல் சிதறி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகத் மாவட்டத்தில் முறைகேடாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில், நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

வெடிமருந்து அறையில் ஏற்பட்ட தீயால், விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இந்த விபத்தில் உடல் சிதறி 25 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்ச வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அனுமதி இல்லாமல் ஆலை இயங்கியது, தீவிபத்திற்கான காரணம் உள்ளிட்டவை குறித்து, பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கத்தில் ஜொலித்த எம்எல்ஏ மகள் : கழுத்து முதல் கால் வரை கிலோ கணக்கில் தங்கம்!!

குருவாயூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கம்யூனிஸ் கட்சியைச் சேர்ந்தவரும் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நட்டிக்காரா தொகுதி எம்.எல்.ஏ-வுமான பெண் எம்.எல்.ஏ கீதா கோபியின் மகள் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தை நடத்தும் பொறுப்பு, ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்திடம் வழங்கப்பட்டிருந்தது. திருமணத்திற்காக பணம் வாரி இறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு வந்திருந்த கேரள முதலமைச்சர் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன், பிரமாண்டமாகவும் ஆடம்பரமாகவும் நடந்த திருமணத்தைப் பார்த்து வியந்துபோனார்.

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் செனிதாலா ஆகியோரும்கூட திருமணத்தில் பங்கேற்றனர்.

திருமணத்தில் மணமகள் கழுத்து முதல் கால் வரை கிலோக்கணக்கில் தங்கம், வைர நகைகள் தொங்கிக்கொண்டிருந்தன. திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

கம்யூனிஸ்ட், கட்சியினர் எளிமையானவர்கள், வீட்டு விஷேசங்களை எளிமையாக நடத்திவைப்பவர்கள் என்ற பிம்பத்தை உடைக்கும் வகையில், கீதா கோபி செயல்பட்டதாக எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து, கருத்து வெளியிட்டிருந்தனர்.

இதனால் கேரள மாநில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை எம்.எல்.ஏ கீதா கோபியிடம் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

39 வயதில் 38 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!!

 

உகாண்டா நாட்டில் 39 வயது பெண்மணி ஒருவர் 38 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

உகாண்டாவை சேர்ந்தவர் மரியம்(39), இவருக்கு 13 வயதில் திருமணமாகியுள்ளது. இவர் Hyper Ovulation பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதாவது இவரது கருப்பைகள் ஒவ்வொரு சுழற்சிகளிலும் ஒரு முட்டைக்கு மேல் வெளியேற்றுகின்றன, இதனால் இவர் ஒரு பிரவசத்தின் போது இரட்டை குழந்தைகள், மூன்று குழந்தைகள் மற்றும் நான்கு குழந்தைகளையே பிரசவித்துள்ளார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் வெளியேறிய காரணத்தினாலேயே இவருக்கு அதிக குழந்தைகள் பிறந்துள்ளது.

மரியம் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை முயற்சித்துள்ளார். ஊசிகளின் வாயிலாக மருந்துகளை பயன்படுத்தியும் குழந்தை பிறப்பை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளார், ஆனால் அவை அனைத்தும் யோனி வளையத்தில் எதிர்மறையாக நடந்துகொண்டது.

மொத்தம், இவருக்கு 44 குழந்தைகள் பிறந்துள்ளன, அதில் 6 குழந்தைகள் இறந்துவிட்டதால் தற்போது 38 குழந்தைகள் உயிருடன் உள்ளன.

இவரது கணவர் இல்லாவிட்டாலும், அன்றாட சவால்களுடன் தனது குழந்தைகளை இவரே வளர்த்து வருகிறார்.

எனக்கு கிடைத்துள்ள குழந்தைகள் ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்று என்றும், சுமை கிடையாது எனவும் கூறியுள்ளார்.

லண்டன் தாக்குதல் : தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளிய பொலிசாரின் சிசிடிவி காட்சிகள் வெளியானது!!

லண்டனின் மையப் பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகளை பொலிசார் சுட்டு தள்ளியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

பிரித்தானியா தலைநகர் லண்டனின் மையப்பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் தீவிரவாதிகள் வேனை வைத்து அங்கிருந்த பொதுமக்கள் மீது மோதினர்.

அதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், வேனில் இருந்து இறங்கி அருகே இருந்த Borough மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த பொதுமக்கள் மீது தாங்கள் வைத்திருந்த கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கினர்.

இச்சம்பவத்தால் தற்போது வரை 8-பேர் பலியாகியுள்ளனர். 48-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களில் சிலர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அவர்கள் ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் மற்றொருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், மேலும் இறந்தவர்கள் தொடர்பான விவரங்களை பொலிசார் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று தீவிரவாதிகளை பொலிசார் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதில் லண்டன் பாலத்தில் தாக்குதலை ஏற்படுத்திய தீவிரவாதிகள் அங்கிருந்து, மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

உடனடியாக அங்கு விரையும் பொலிசார் மூன்று தீவிரவாதிகளையும் காரில் விரட்டுகின்றனர். அவர்கள் அருகில் சென்றவுடன் பொலிசார் ஒருவர் காரில் இருந்து குதித்து குறித்த தீவிரவாதிகளை தாக்குகிறார்.

அதன் பின்னர் சுற்றி வளைத்த மற்ற பொலிசார் மூவரையும் சம்பவ இடத்திலே சுட்டு தள்ளி கொலை செய்கின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்ட மூவர் தொடர்பான தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பொலிசார் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டனர்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும் பிரித்தானியாவில் கடந்த மூன்று மாதங்களில் மூன்று முறை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதக்கத்தை 25 கோடிக்கு விற்பனை செய்யவுள்ள சுசந்திக்கா!!

தனது ஒலிம்பிக் பதக்கத்தை கொள்வனவு செய்ய வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான கோரிக்கை கிடைத்துள்ளதாக ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திக்கா ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

தனது பதக்கத்தை 25 கோடி ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்ய முடியும் என சுசந்திக்கா நம்பிக்கை கொண்டுள்ளார்.

இந்த பதக்கத்தின் பெறுமதியை உலகம் அறிந்து கொண்டுள்ள போதிலும் இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் அறிந்து கொள்ளாமை குறித்து வருத்தமடைவதாக தெரிவித்தவர்.

இந்த பதக்கம் இந்த அளவு பெறுமதியானதென தான் அறிந்து கொள்ள முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாக அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய இந்த பதக்கத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தில் விளையாட்டு துறை அமைச்சரின் எதிர்கால தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியும்.

அத்துடன் இலங்கையின் விளையாட்டு துறையை வளர்ப்பதற்கு கூட தன்னால் நிதி வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களை படுகொலை செய்த பொலிஸாருக்கு மரண தண்டனை : 20 வருடங்களின் பின் அதிரடி தீர்ப்பு!!

அம்பாறை மாவட்டத்தின் சென்ட்ரல் கேம்ப் பிரதேசத்தில் ஐந்து பொதுமக்களைப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண மட்ட மேல்நீதிமன்றம் நேற்று இத்தண்டனையை விதித்துள்ளது.

கடந்த 1997ம் ஆண்டு சென்ட்ரல் கேம்ப் பிரதேசத்தில் ஐந்து பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் உயிரிழந்திருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மூன்று பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த பொலிசாருக்கு எதிராக மனிதப் படுகொலை உள்ளிட்ட 43 கடும் குற்றப் பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

எனினும் தமிழ் பேசும் நீதிமன்றமொன்றில் வழக்கு நடைபெறுவதற்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனையைத் தொடர்ந்து வழக்கு அம்பாறையில் உள்ள மாகாண மட்ட மேல்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒருபொலிஸ் உத்தியோகத்தர் இடைப்பட்ட காலத்தில் உயிரிழந்திருந்தார்.

எஞ்சிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இரண்டு பொதுமக்களின் படுகொலை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் மட்டுமே குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த மேல்நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமச்சந்திர, குற்றவாளிகள் இருவருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.

தொடர்ந்து மெசேஜ் செய்பவர்களை தாக்கும் புதிய நோய் : மருத்துவர்கள் எச்சரிக்கை!!

இன்றைய இளைஞர்கள் கைகளில் வலம்வரும் ஸ்மார்ட்போன் பல செயல்களை செய்கிறது. குறிப்பாக, எந்த நேரமும் யாருக்காவது வெட்டியாக மெசெஜ் செய்வது, அரட்டை அடிப்பது என விரலுக்கு வீக்கத்தை கொடுக்கும் ஸ்மார்ட்போன், நோயையும் அள்ளிக் கொடுக்கிறது.

தொடர்ந்து டெக்ஸ்ட் செய்துகொண்டே இருக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு ‘ஸ்மார்ட்போன் தம்ப்’ எனப்படும் நோய் தாக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இதனால் கட்டை விரல்கள் பலவீனமடைந்து அழற்சிகள் ஏற்படும் எனவும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன, தொடர்ந்து கட்டைவிரல் இயக்கப்படும் வேளையில் கீல்வாத நிலைக்கு தள்ளப்பட்டு வலியையும் ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்மார்ட்போன் எந்த அளவு நன்மைகளை தருகிறதோ அதை விட பல மடங்கு தீமைகளையும் கக்குகின்றன. ‘ஸ்மார்ட்போன் தம்ப்’ கட்டைவிரலை வளைக்கும் தசைநூலில் வீக்கத்தை ஏற்படுத்தி மூட்டுகளை தளர்வானதாக்குறது என மயோ கிளினிக்கின் உயிரியல்மருத்துவ பொறியியலாளர் குழு தெரிவித்துள்ளது.

கைகள் மற்றும் மணிக்கட்டுக்கு கொடுக்கும் அழுத்தத்தை குறைப்பதன் மூலம் ‘ஸ்மார்ட்போன் தம்ப்’- ஐ கட்டுப்படுத்த முடியும். அதற்கு ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.

பல ஸ்மார்ட்போன்கள் ஆட்டோகரெக்ட் தன்னியக்க அம்சத்தை உள்ளடக்கிய கீபோர்ட்களைக் கொண்டிருக்கின்றன, இதைப் பயன்படுத்தி தட்டச்சு செய்வதை குறைத்துக்கொள்வதன் மூலம் தசைநாண் அழற்சிகள் ஏற்படுவதை தடுக்கலாம்.

ஒரே கையில் ஸ்மார்ட்போனை பிடித்துக்கொண்டும் அதே கையில் உள்ள கட்டைவிரலை பயன்படுத்தி டைப் செய்யும் போது கட்டைவிரலுக்கு அழுத்தம் ஏற்படுகிறது.

ஸ்மார்ட்போன் பயன்பாடு விளைவால் விரல்களில் வீக்கம் ஏற்பட்டால் மருத்துவரை உடனே அணுகும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வட்ஸ்அப்பில் செய்தியை மாற்றி அனுப்பிவிட்டீர்களா : இனி கவலை வேண்டாம்!!

வட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பும்போது தவறுதலாக வேறொருவருக்கு அனுப்பிவிட்டால் அதை திரும்ப பெற்றுக்கொள்ளும் வசதியை வட்ஸ்அப் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

சமூக வலைதளங்களில் ஒன்றான வட்ஸ்அப் அன்றாட வாழ்கையில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தக்கூடிய ஒன்று. வட்ஸ்அப் நிறுவனம் பயனாளர்களுக்கு அவ்வப்போது புதிதுபுதிதாக அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. வட்ஸ்அப் சட் செய்துக்கொண்டிருக்கும் போது தவறுதலாக வேறொரு நபருக்கு செய்தியை அனுப்பி விட்டால் அதை திரும்ப பெற முடியாது. இதனால் பல சிக்கல்கள் ஏற்படும்.

தற்போது வட்ஸ்அப் அதன் புதிய அப்டேட்டில் இதற்கு தீர்வு அளித்துள்ளது. தவறுதலாக அனுப்பிய செய்தி, படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை 5 நிமிடத்திற்குள் திரும்ப பெற்றுக்கொள்ளும் ‘Recall’ என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி கொண்ட அப்டேட் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உள்ள வட்ஸ்அப் பதிப்பு 2.17.190. அடுத்து 2.17.210 என்ற பதிப்பு வெளிவரும். அதன் பிறகு 2.17.213 என்ற பதிப்பு வெளிவரும். இவை இரண்டு பதிப்பும் வெளிவந்த பின்தான் இந்த ‘Recall’ வசதிக்கொண்ட பதிப்பு அதாவது 2.17.30 அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

வடமாகாண விளையாட்டுப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 2 ஆம் இடம்!!

2017 ஆம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டுப்போட்டிகளில் 175 புள்ளிகளை பெற்று கிளிநொச்சி மாவட்டம் 2 ஆம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளது.

ஆண்டுதோறும் வடமாகணத்திலுள்ள மாவட்டங்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. அந்தவகையில் 11 ஆவது வடமாகாண விளையாட்டுப் போட்டி அண்மையில் இடம்பெற்றது.

இதில் நடைபெற்ற 43 விளையாட்டுகளில் தைகொண்டோ (பெண்கள்), ஜூடோ (பெண்கள்), கரப்பந்தாட்டம்(பெண்கள்), கடற்கரை கரப்பந்தாட்டம்(பெண்கள்), கடற்கரை கரப்பந்தாட்டம்(ஆண்கள்), துடுப்பாட்டம்(ஆண்கள்) போன்ற விளையாட்டுகளில் முதலாம் இடங்களையும், 10 விளையாட்டுகளில் இடண்டாம் இடங்களையும், 9 விளையாட்டுகளில் மூன்றாம் இடங்களையும் கிளிநொச்சி மாவட்டம் பெற்றுக்கொண்டது.

இப்போட்டிகளில் கிளிநொச்சி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட வீர வீரங்கனைகளுக்கு கிளிநொச்சி மாவட்டம் சார்பாக அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

மேலும் அடுத்த 2018 ஆம் ஆண்டுக்கான மாகாண விளையாட்டுப் போட்டிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்துவதற்கான ஆரம்பநிகழ்வாக மாகாண விளையாட்டுக் கொடி மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் இ.குருபரனினால் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஆர் மோகனதாஸிடம் சம்பிரதாய பூர்வமாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.