பைத்தியம் பிடித்தவரிடம் அணு ஆயுதங்கள் : கிம் ஜோங்கை விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி!!

“பைத்தியம் பிடித்தவரிடம் அணுஆயுதங்கள்” என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

மேலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டெர்ட்டேவுடனான தொலைபேசி உரையாடலின்போது கிம் ஜோங் உன்னை பைத்தியம் பிடித்தவர் என தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுத பரிசோதனைக்களுக்கெதிராக உலக நாடுகள் மற்றும் ஐக்கியநாடுகள் சபை என்பன விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்த நிலையில், அமெரிக்கா தனது முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக அந்நாட்டு போர்க்கப்பல்களை கொரிய தீபகர்பத்திற்குள் அனுப்பியது.

இந்நிலையில் பதற்ற நிலை சற்று தனியவே, கிம் ஜோங் உன்னை சந்திக்கத் தயாராகவுள்ளதாகவும், அவருடனான சந்திப்பை மேன்மையானதாக கருதுவதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.

இச்சூழலில் வடகொரிய ஜனாதிபதியை பைத்தியம் பிடித்தார் என்றும், “அணுஆயுதங்களை வைத்திருக்கும் பைத்திய நிலையிலுள்ள ஒருவரால் தம் அசந்து போகாது அதைவிட பலமான ஆயுதங்களை தம் வைத்திருப்பதிகாக” பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியிடம், டிரம்ப் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணம் செய்வோருக்கு புதிய சட்டம்!!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பணிபுரியும் விமான ஊழியர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் நோக்குடன் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் புதிய பாதுகாப்பு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணம் செய்யும் பயணி ஒருவர் கைப் பையில் கொண்டுவரக்கூடிய திரவங்கள், ஸ்பிரே வகைகள், ஜெல் போன்ற பொருட்களின் அளவு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக விமான சேவைகள் நிறுவனத்தின் முகாமையாளர் எச்.எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த விதிகளுக்கு அமைவாக அணைத்து பொருட்களும் ஒரு லீற்றருக்கு அதிகமாகக் கூடாது எனவும், அனைத்து திரவ கொள்கலன்களும், 20×20 என்ற அளவிலான வௌிப்படையாக தெரியும், திறந்து மீள மூடக்கூடிய வகையிலான பொலித்தின் பைகளில் போடப்பட்டிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு பயணி ஒருவர் ஒரு பையை மாத்திரமே இவ்வாறு கொண்டு செல்லலாம் எனவும், மேலதிகமாக கொண்டு செல்லும் பைகளை விமான சீட்டுகளை பரிசோதனை செய்யும் இடத்திலிருந்து கொண்டு செல்ல முடியுமெனவும், குறித்த விதிகளுக்குள் நீர், குடி பாணங்கள், சூப், ஜேம், சோஸ் வகைகள், நீராவி திரவ வகைகள், ஜெல் வகைகள், அறை வெப்பங்களை பராமரிக்கும் திரவங்கள் உள்ளிட்ட பொருட்களும் அடங்குமென நிறுவனத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சட்ட விதிகள் யாவும் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு ஜூன் முதலாம் திகதிமுதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரயிலில் பாய்ந்து பாடசாலை மாணவி தற்கொலை!!

மன்னார் பெரிய பலத்துக்கு அருகில் பாடசாலை மாணவியொருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் பாய்ந்தே குறித்த மாணவி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

உயிரிழந்த மாணவி 16 வயதானவர் எனவும், அவரது தாய் அவரை புறக்கணிப்பதாக கடிதெமொன்றில் மாணவி குறிப்பிட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் முதியோர் விழிப்புணர்வுப் போட்டிகள்!!

 
சமூகசேவை அமைச்சின் கீழ் உள்ள முதியோர் செயலகம் அகில இலங்கை ரீதியில் முதியோர் விழிப்புணர்வுச் செயற்பாடாக பாடசாலை மாணவரிடையே கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம் மற்றும் சிறுகதைப் போட்டிகளை நடத்தவுள்ளது.

இதன் ஆரம்ப செயற்பாடாக வவுனியா விபுலானந்தாக் கல்லூரியில் பாடசாலை அதிபர் சு.அமிர்தலிங்கம் தலைமையில் இன்று (24) நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகஸ்தர் செ.ஸ்ரீநிவாஸன் மாணவர்கள் மத்தியில் சிறப்புரை நிகழ்த்தியுள்ளார்.

இதில் மாணவர்கள் மூத்தோரின் வழி நடத்தலின் அவசியம், முதியோரின் விழுமியங்கள் பற்றி கருத்து தெரிவிக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களிடையே கவிதை, கட்டுரை, கதை, ஓவியம் போன்ற போட்டிகளை நடத்தி தேசிய ரீதியிலான பரிசுகளை வழங்குதல் பற்றியும் மாணவர்களிடையே தெளிவுபடுத்தப்பட்டது.

இதேவேளை, முதியோர் தேசிய செயலகம் மூலம் அனுப்பப்பட்ட சுமார் 200 போட்டிக்கான அப்பியாசப் புத்தகங்களை மாவட்ட முதியோர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் தனுசியா பாலேந்திரன் அதிபரிடம் கையளித்துள்ளார்.

அத்துடன், போட்டிகளை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் அதிபர் மூலம் ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் மாவட்ட செயலக சமூகசேவை உத்தியோகஸ்தர் இராஜசேகர், அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கி.வசந்தரூபன், பாலேந்திரன், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், முதியோர் விழுமியங்களை மாணவர்கள் மத்தியில் விதைப்பதற்கு மிகச்சிறந்த போட்டியாக இது அமையும் என அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தமிழ் மொழி கற்பிக்கப்படாத தமிழ் மொழி மூல பாடசாலை : மாணவர்கள் குற்றச்சாட்டு!!

 
வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட தமிழ் மொழிப் பாடசாலை ஒன்றில் தமிழ் மொழி கற்பிக்கப்படுவதில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா, செட்டிகுளம், இலுப்பைக்குளம் அடைக்கல அன்னை வித்தியாலயத்திலேயே கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தமிழ் மொழி கற்பிக்கப்படவில்லை எனவும், முதலாம் தவணைப் பரீட்சையில் கூட தமிழ் மொழிக்கான புள்ளிகள் வழங்கப்படாது மாணவர்களது தேர்ச்சி அறிக்கையில் தமிழ் மொழி புள்ளி பதியுமிடம் வெட்டப்பட்டு உள்ளதாகவும் மாணவர்களும் பெற்றோரும் தெரிவிக்கின்றனர்.

தரம் 11 வரையுள்ள குறித்த பாடசாலையில் தமிழ் மொழி கற்பிக்கப்படாமையால் கல்விப் பொதுசாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர்.

குறித்த பாடசாலையில் தமிழ் ஆசிரியராக கடமையாற்றியவர் கடந்த ஜனவரி மாதம் இடமாற்றம் பெற்று சென்றதாகவும், அதன் பின்னர் புதிய ஆசிரியர் நியமிக்கப்படாமையினாலேயே இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

தற்போது பெற்றோர்களும், மாணவர்களும் தமது பாடசாலைக்கு தமிழ் ஆசிரியரை நியமித்து தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக பரிசோதனை!!

வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுவது குறித்து விசேட செவ்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.

வடக்கு மாகாணத்தில் இரண்டு மாவட்டங்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக இனங்காணப்பட்டுள்ளது. வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களே இனங்காணப்பட்டுள்ளதுடன் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவும,; செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தட்டான்குளம் பகுதியில் கூடுதலான நோயளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர் இதே போன்றதொரு நிலைமைதான் முல்லைத்தீவ மாவட்டத்திலும் காணப்படுகிறது குறிப்பாக இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. துணுக்காய் மல்லாவி பிரதேசெயலாளர் பிரிவும் மற்றும் மணலாறு பிரதேச செயலாளர் பிரிவிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளர்கள் இருக்கிறார்கள்.

இந்நோய்க்கு மக்கள் குடிநீராக பாவிக்கும் நீர் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அதனால் வடக்கு மாகாணத்தில் இரண்டு விதமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். ஒன்று சிறுநீரக நோய் வராமலிருப்பதற்கான வேலைத்திட்டமாக சுத்தமான குடிநீரை மடக்களுக்கு வழங்குவது மற்றையது ஏற்கனவே சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக வவுனியா மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரத்தம் மற்றும் சிறு நீர்ப்பரிசோதனைகளை மேற்கொண்டு அவர்கள் சிறு நீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என ஆரம்ப கட்டத்திலேயே அறிந்து அவர்களுக்குரிய சிகிச்சைகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைவாக 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் மூன்று வருடங்களுக்கு ஒரு முறையாவது சிறு நீரக மருத்துவப்பருசோதனை மேற்கொள்ள வேண்டும். அத்திட்டத்தின் அடிப்படையில் கடந்த மூன்று வருடங்களளாக வவுனியா மற்றும் முல்லைத்தீவ பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கு நடமாடும் சேவைமூலம் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தோம் அந்தவகையில் செட்டிக்குளம் பகுதியில் மூன்று வருடங்களுக்கு முன் மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையில் 9 சிறுநீரக நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.

அத்துடன் வவுனியா பொது வைத்தியசாலை மற்றும் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் சிறுநீரக நோய்க்கான தொடர் சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு நிலையம் கடந்த ஒன்றரை வருடங்களாக இயங்கி வருவதுடன் இச்சேவையானது 24 மணித்தியாலங்கள் தொடர்சியாக இயங்கி வருகின்றது. எட்டு இயந்திரங்களின் உதவியுடன் 70 சிறுநீரக நோயாளர்கள் தொடர்ச்சியாக பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

வவுனியா சிறுநீரக சிகிச்சசைப்பிரிவிற்கு மன்னார், கிளிநோச்சி,முல்லைத்தீவு, பதவியா மற்றும் மதவாச்சி பிரதேசங்களிலிருந்து சிறுநீரக நோயாளர்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள். அதன் காரணமாக இப்போது இருக்கின்ற சிறு நீரக இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்களை வைத்து நோயாளர்களை பராமரிக்க முடியாத நிலைமையும் காணப்படுகின்றது.

அதனால் செட்டிக்குளத்தில் வெகு விரைவில் 25 மில்லியன் ரூபா செலவில் சிறுநீரக நோயை ஆரம்ப நிலையில் கண்டறியும் பிரிவையும், மாமடுவில் ஒரு சிறுநீரக மருத்துவப் பிரிவையும் உருவாக்கியிருக்கிறோம் அத்துடன் வவுனியா மாவட்டத்திற்கு ஒரு வைத்தியக் குழுவும் முல்லைத்தீவ மாவட்டத்திற்கு ஒரு வைத்தியக் குழுவும் உருவாக்கி செயல்ப்பட்டு வருகிறார்கள். அத்துடன் சிறுநீரக நோய் வராமல் தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.

பொலித்தீனை உட்கொண்டு பரிதாபமாக உயிரிழந்த யானை!!

 
பொலன்னறுவை பகுதியில் இன்று காலை உயிரிழந்த நிலையில் யானையொன்று மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

30 வயது மதிக்கத்தக்க யானை ஒன்றே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அகற்றப்படுவதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த பொலித்தீன் பைகளை உட்கொண்டமையாலேயே குறித்த யானை இறந்துள்ளது என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த யானையின் வயிற்றில் இருந்து 25 கிலோகிராம் பொலித்தீன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குப்பைக் கழிவுகள் ஒழுங்கான முறையில் அகற்றப்படாத காரணத்தால், பொலித்தீன் பைகளை உட்கொண்டு இது வரையில் 11 யானைகள் உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் வல்லுநர்கள் சுட்டிக்காடியுள்ளனர்.

யாழ். புங்குடுதீவில் மகனின் புதிய மோட்டார் சைக்கிளால் தாயின் உயிர் பறிபோன சோகம்!!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தில் ஏழு பிள்ளைகளின் தாய் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். தனது மகனின் மோட்டார் சைக்கிள் மூலம் ஏற்பட்ட விபத்திலேயே குறித்த தாய் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் உறவினர் ஒருவரின் இறப்பு வீட்டுக்குச் செல்வதற்காக குறித்த தாய் காலை 8 மணியளவில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தார்.

இதன்போது குறித்த தாய் நின்ற இடத்திற்கு முன்னால் உள்ள பாதை வழியே புதிய மோட்டார் சைக்கிளின் மகன் வந்துள்ளார்.

இதன்போது பாதையின் எதிரில் வந்த முச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிளுடன் மோதி அருகில் நின்றிருந்த தாய் மீதும் மோதியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த தாய் உடனடியாக புங்குடுதீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது, அவர் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ சோதனையில் உறுதிப்படுத்தப்பபட்டது என்று இறப்பு விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நாகேஸ்வரன் ரம்பை (வயது 51) என்ற 7 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

மேலும், உயிரிழந்த தாயின் மகனையும், முச்சக்கர வண்டி சாரதியையும் ஊர்காவற்துறை பொலிஸார், கைது செய்துள்ளனர்.

பெண்கள் மற்றும் மாணவிகளை வீடியோ எடுத்த இராணுவ வீரர் கைது!!

மஹரகம பகுதியிலுள்ள பாடசாலை மாணவிகள் மற்றும் பெண்களை வீடியோ எடுத்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தப் பகுதியிலுள்ள பெண்கள் பாடசாலைகளுக்கு முன்னால் நின்று தனது கையடக்க தொலைபேசியில் பாடசாலை மாணவிகள் மற்றும் வீதியில் பயணித்த பெண்களை வீடியோ எடுத்துள்ளார்.

மாணவிகளின் பெற்றோரினால் மஹரகம பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டினை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான படையில் சேவை செய்யும் 28 வயதுடைய இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கைது செய்து அவரது தொலைபேசியை பரிசோதித்து போது, அதில் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகளின் பல வீடியோ பதிவுகள் கிடைத்துள்ளன.

அம்பலன்கொட பகுதியை சேர்ந்த குறித்த இராணுவ சிப்பாய், மஹரகம, தாப்பவத்த பிரதேசத்தில் திருமணம் செய்யாமல் பெண் ஒரு வருடம் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் இன்றைய தினம் நுகேகொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மகளை 10 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு!!

தனது மகளை தொடர்ந்து சுமார் 10 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்துவந்த தந்தைக்கு கடுமையான வேலையுடன் கூடிய 45 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மூன்று இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்த வேண்டும் எனவும், மன்றுக்கு 30 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்த வேண்டும் என்றும் குற்றவாளிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இழப்பீட்டுத் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் அவரின் சிறைத் தண்டனையை மேலும் 6 வருடங்களுக்கு நீடிக்கவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க உத்தரவிட்டுள்ளார்.

35 வயதுக்கு குறைந்தவர்கள் முச்சக்கர வண்டியை செலுத்த தடை!!

அண்மைக்காலமாக இலங்கையில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான சட்டம் தொடர்பில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் 35 வயதிற்கு அதிகமானவர்களுக்கு மாத்திரமே இனி வரும் காலங்களில் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கான சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தான் முன்வைத்த யோசனைகளை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானத்திற்கு முன் வந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் முச்சக்கர வண்டிகளினால் ஏற்படுகின்ற விபத்துகளின் அதிகரிப்பு காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் இயற்கையின் கோர தாண்டவம் : ஐந்து மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் சேதம்!!

 
வவுனியாவில் இன்று(24.05.2017) மதியம் ஏற்பட்ட மழையுடன் கூடிய மினி சூறாவளியில் மரங்கள் முறிந்து விழுந்து வாகனங்கள் பல சேதமடைந்துள்ளதுடன், பொலிஸ் நிலையத்தில் அமைந்திருந்த பொலிசார் விடுதி ஒன்றும் சேதமடைந்துள்ளது.

அத்துடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் நின்ற மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால் 5 மோட்டர் சைக்கிள்கள் சேதமடைந்ததுடன், பொலிஸ் நிலையத்தில் இருந்த விடுதி கட்டடம் ஒன்றின் பகுதியும் இடிந்து விழுந்துள்ளது.

எனினும் இதுவரையில் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியாவில் கடும்காற்றுடன் கூடிய மழை : கார் ஒன்று சேதம், முறிந்து விழுந்த மரங்கள்!!(வீடியோ)

 
வவுனியாவில் இன்று (24.05.2017) மதியம் முதல் பெய்துவரும் கடும் காற்றுடன் கூடிய மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

வவுனியா நகரம், பட்டானிச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி போன்ற வவுனியாவில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

இதன்காரணமாக மன்னார் வீதி குருமன்காட்டு சந்தியில் வீதியோரத்திலிருந்த பழமைவாய்ந்த மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மன்னார் – வவுனியா வீதிக்கான போக்குவரத்தும் தடைப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் உடனடியாக உரிய அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பினை ஏற்ப்படுத்தி சுமார் ஒருமணிநேர போராட்டத்தின் மத்தியில் மரம் வெட்டி அகற்றப்பட்டது

மற்றும் வவுனியா இலுப்பையடிசந்தியிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பாதையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த மரமொன்று கார் மீது வீழ்ந்ததில் கார் பகுதியளவில் சேதமடைந்ததுடன் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்ப்படவில்லை

இவ் கடும் காற்றுடன் கூடிய மழையின் காரணமாக வவுனியாவில் பல்வேறு இடங்களில் மின்சார கம்பிகள் அறுந்துள்ளதாகவும் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியாவில் காற்றுடன் கூடிய கடும் மழை : முறிந்த மரங்கள், அறுந்த மின்சாரக் கம்பிகள்!!

வவுனியாவில் இன்று(24.05) நண்பகல் தொடங்கி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது.

கடும் காற்றுடன் கூடிய மழை பெய்துவருவதால் வவுனியாவில் பல இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள மரங்களும் முறிந்து விழுந்துள்ளதனால் கண்டி வீதியில் போக்குவரத்தும் சிரமத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் பல இடங்களில் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. இதனால் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. மின்சார சபையினர் அறுந்த மின்சாரக் கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் கடுமையான மழை பெய்து வருவதாகவும் பல வீதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாகவும் இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பிரிட்டன் குண்டு வெடிப்பில் தொலைந்த தோழியை சேர்த்து வைத்த ட்விட்டர்!!

இங்கிலாந்து மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தொலைந்து போன பெண் ஒருவர் ட்விட்டர் சமூக வலைதளம் மூலம் தனது தோழியிடம் இணைந்துள்ளார்.

ட்விட்டர்இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியில், அமெரிக்க பாப் பாடகி அரினா கிராண்டியின் இசைக் கச்சேரியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

இதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 59 பேர் படுகாயமடைந்துள்ளனர் ஐ.எஸ் தீவிரவாதிகளால் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

இதனிடையே குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது ஹீதர் என்ற இளம்பெண் காணாமல் போயுள்ளார்.

இதையடுத்து அவரது தோழி விக்கி பேட்ஸ், ட்விட்டர் வலைதளத்தில் காணாமல் போன தோழியின் புகைப்படத்தையும் அவரது விவரங்களையும் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து குண்டு வெடிப்பின்போது அவர் காப்பாற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நேதன் என்பவர் பதிலளித்துள்ளார்.

இதன் மூலம் தோழிகள் இருவரும் இணைந்துள்ளனர்.

இதையடுத்து சமூக வலைதளத்தில் இணைந்த தோழிகளுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஹெலிகப்டரில் நுவரெலியாவுக்கு சென்ற ஜனாதிபதிக்கு ஏற்பட்ட சோதனை!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகப்டர் சீரற்ற காலநிலையினால் மீண்டும் திருப்பிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நுவரெலியாவில் நேற்று-முன்தினம் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ஹெலிகப்டரில் சென்றுள்ளார்.

ஐனாதிபதியை ஏற்றி கொண்டு நுவரெலியா நோக்கி சென்ற ஹெலிகப்டர் சீரற்ற காலநிலை காரணமாக கொத்மலையில் இருந்து மீண்டும் கொழும்புக்கு திருப்பியுள்ளது.

இதனால் ஜனாதிபதியினால் நிகழ்வில் கலந்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ச, நவீன் திஸாநாயக்க, மத்திய மாகாண பிரதான அமைச்சர் சரத் ஏக்கநாயக்க உட்பட அமைச்சர் உறுப்பினர்கள் 8 பேர் குறித்த ஹெலிகப்டரில் பயணித்துள்ளனர்.

இதனால் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டதாக ஜனாதிபதி வழங்கிய தகவலை நிதி இராஜாங்க அமைச்சரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.