வவுனியா, புதூர் செல்லும் வீதியிலுள்ள புகையிரதக் கடவையில் இன்று (15.05) பிற்பகல் ரயிலுடன் உழவு இயந்திரம் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கொழும்பிலிருந்து இன்று பிற்பகல் 1.35 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் வவுனியா, புளியங்குளம் புதூர் ஆலயப்பகுதியிலிருந்து பிரதான கண்டி வீதிக்கு மணல் ஏற்றப்பட்ட உழவு இயந்திரம் சென்றபோது புதூர் பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையை உழவு இயந்திரம் கடக்கும்போது திடீரென வந்த ரயிலுடன் உழவு இயந்திரம் மோதியதில் உழவு இயந்திரத்தின் சாரதி, மற்றும் உதவியாளரான ஜெகநாதன் ரவீதரன் வயது 20, ரவீந்திரன் கீர்த்தீபன் 21வயது புதூர், மற்றும் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த இருவரும் உயிரிழந்துள்ளனர் .
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா நெளுக்குளத்தில் இன்று (15.05.2017) காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா நெளுக்குளம், புதையல்பிட்டியில் வசித்துவரும் ஆறு மாத கைக்குழந்தையின் தாயான சுதன் வாணி (வயது 24) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் இவரது சொந்த இடமான கிளிநொச்சிக்கு அவரது வீட்டுக்கு காலை சென்று மீண்டும் மாலை வீடு திரும்பியுள்ளார். இன்று காலை எழுந்து வீட்டு வேலைகள் எல்லாம் முடித்து மாமனாருக்கு காலை உணவைத் தயார் செய்து அவருக்கு வழங்கியுள்ளார். மாமனார் கூலி வேலைக்கு சென்றுள்ளார்.
கணவன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்று வீட்டுக்கு திரும்பி வரும் போது ஆறு மாதக் கைக்குழந்தை தொட்டிலில் இருந்து அழுதுகொண்டிருந்துள்ளது. குறித்த பெண்ணின் கணவர் குழந்தையை தூக்கி கொண்டு தாயை தேடிய போது தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இவரின் மரணத்திற்கான காரணம் என்ன என நெளுக்குள பொலிஸார் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாருடன் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இலங்கையின் வறுமைக்கு போதைப்பொருள் பாவனையே பிரதான காரணமாகும் .இந்த நிலைமையே உலக நாடுகளிலும் காணப்படுகின்றது. எனவே அனைத்து பௌத்த நாடுகளையும் உள்ளடக்கிய சர்வதேச பௌத்த வலையமைப்பு ஒன்றை கண்டி பிரகடனம் ஊடாக உருவாக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சர்வதேச வெசாக் தின இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்றன. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
பல தசாப்தங்களின் பின்னர் இலங்கை க்கு இவ்வாறானதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சுதந்திரத்திற்கு பின்னர் உலகில் 72 நாடுகள் இலங்கை வந்து பௌத்த மாநாடு ஒன்றில் கலந்துகொண்டுள்ளன. சர்வதேச வெசாக் தினத்தில் பௌத்த சிந்தனைகளை உலகிற்கு கற்றுக் கொடுக்கும் வகையில் ஒரு வாரகாலமாக நடத்திய பெளத்த மாநா ட்டின் இறுதி நாள் இன்றாகும்.
இவ்வாறானதொரு பௌத்த மாநாட்டை இலங்கையில் நடத்த கிடைத்தமை பெரும் பாக்கியமாகவே கருத முடிகின்றது. இந்திய பிரதமர் மற்றும் நேபாள ஜனாதிபதி உள்ளிட்ட 72 உலக நாடுகளின் முக்கியஸ்தர்கள் இலங்கை வந்துள்ளமை என்பது எளிதான விடயமல்ல.
நிலையான அபிவிருத்தி மற்றும் நிலை யான சமாதானம் என்பவற்றை கருப்பொருளாக கொண்டு சர்வதேச பௌத்த மாநாடு நடைபெறுகின்றது. உலக மக்களுக்கு பௌத்த தர்ம சிந்தனைகளை கற்பிக்க வேண்டிய தேவை தற்போது காணப்படுகின்றது. இதனால் தான் இங்கு வருகை தந்த 72 நாடுகளின் இணக்கப்பாட்டுடன் கண்டி பிரகடனம் அறிவிக்கப்படுகின்றது.
பௌத்த தர்மத்தின் எதிர்கால உலக நடவடிக்கைகள் தொடர்பில் பிரகடனம் ஒன்றை வெளியிட கிடைத்தமை இலங்கைக்கு முக்கியமானதாகும். உலகில் அனைத்து இடங்களிலும் மோதல்கள் காணப்படுகின்றன. இவ்வாறான மோதல்கள் குடும்பத்திலிருந்து அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன. பல்வேறு மோதல்கள் காணப்படுகின்றன. வட கொரியா மற்றும் தென் கொரியாவிற்கும் இடையில் மிகவும் தீர்க்கமான நிலைமையே ஏற்பட்டுள்ளது.
அதனால் கண்டி பிரகடனத்தின் ஊடான உலக வாழ் அனைத்து பௌத்தர்களையும் ஒன்றிணைத்து சர்வதேச வலையமைப்பை உருவாக்கி உலக சமாதானத்திற்காக செயற்பட வேண்டியுள்ளது. இது பெருமைக்குரிய விடயமாகும். வறுமை தொடர்பில் பேசும் போது அனைத்து நாடுகளுக்கும் பொதுவான பிரச்சினையே காணப்படுகின்றது. போதைப்பொருளை அதிகமாக பயன்படுத்துவது ஏழை மக்களாகும்.
இலங்கையில் வறுமை அதிகரிக்க போதைப்பொருள் பயன்பாடே பிரதான காரணம் என ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. வலய நாடுகளிலும் இந்த நிலைமையே காணப்படுகின்றது. எனவே கண்டி பிரகடனத்தின் ஊடாக பிரச்சினைகளை தீர்த்து கொள்ள வாய்ப்பு கிடைக்கின்றது. எனவே கண்டி பிரகடனத்திற்காக அனைத்து உலக பௌத்த நாடுகளும் ஒன்றிணைந்து வலையமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். இதற்கு தலைமைதாங்க இல ங்கை பங்களிப்புடன் செயற்படும்.
மியன்மார் நாட்டில் ஜனநாயகத்தை பலப்படுத்துவதே எமக்குள்ள பிரதான சவாலாகும். ஆகவே பாராளுமன்றத்தின் ஊடாக ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும். அத்துடன் இலங்கையின் கண்டி மாநகரத்தை பார்ப்பதற்கு நான் ஆவலாக உள்ளேன் என மியன்மார் நாட்டின் அரச தலைவர் ஆங் சாங் சூகி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஆங் சாங்சூகிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்தார்.
ஒரே கரையோரம் – ஒரே பாதை என்னும் தொனிப்பொருளின் கீழ் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் மாநாட்டில் கலந்து கொள்ளும் முகமாக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீனா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று மியன்மார் நாட்டின் அரச தலைவர் ஆங்சாங் சூகியை சந்தித்து பேசினார். இதன்போது மேற்கண்டவாறு கருத்துகள் பரிமாறப்பட்டன.
இந்த சந்திப்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், சரத் அமுனுகம, மலிக் சமரவிக்ரம மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவினை பலப்படுத்துவது தொடர்பில் இரு நாட்டு தலைவர்களால் அவதானம் செலுத்தப்பட்டது
இதன்போது மியன்மார் அரச தலைவர் குறிப்பிடுகையில்,மியன்மார் நாட்டில் ஜனநாயகத்தை பலப்படுத்துவதே எமக்குள்ள பிரதான சவாலாகும். ஆகவே பாராளுமன்றத்தின் ஊடாக ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும். அத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்து கண்டி மாநகரத்தை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன் என்றார்.
இந்த சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மியன்மார் நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு நாம் தயார். அத்துடன் இதற்கான இலங்கையின் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினை விரைவில் மியன்மாருக்கு அனுப்பி வைப்பதாக பிரதமர் உறு தியளித்தார். மேலும் ஆங்சாங் சூகியை இலங்கைக்கு வருகை தருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்தார்.
டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா கொடூரமான முறையில் பலாத்காரத்துக்கு உள்ளாகி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகர், நடிகைகள் கூறும்போது, குற்றவாளிகளுக்கு கொடூர தண்டனை, பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் எனப் பலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பில் நடிகை டாப்ஸி கூறும்போது,
கடைசியில், நீதி தாமதமானாலும் மறுக்கப்படவில்லை. இதுபோன்ற பலாத்கார குற்றவாளிகள் வலியை உணரும் வகையில் இன்னமும் கொடூரமான வழியில் தண்டிக்கப்பட வேண்டும்’ என குறிப்பிட்டார். நடிகை ரவீணா, ’நிர்பயாவின் தாய் விட்ட கண்ணீருக்கு நீதி கிடைத்திருக்கிறது. தாயும், மகளும் இப்போது நிம்மதி அடைவார்கள். ஒவ்வொரு தீயவர்களும் அவர்கள் செய்யும் குற்றங்களுக்கு தகுந்த விலை கொடுத்தாக வேண்டும் என்பதை உணர வேண்டும்’ என்று தெரிவித்தார். இந்தி நடிகர் ரிஷி கபூர்,’நிர்பயா தீர்ப்பின் மூலம் நீதி வென்றிருக்கிறது.
இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் பொது இடத்தில் தூக்கிலிடப்பட வேண்டும். மக்கள் சமுதாயத்தில் இது தேவையான ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் தவறு செய்பவர்களுக்கு இதுவொரு அச்சுறுத்தலுக்கான உதாரணமாக இருக்கும்’ என தெரிவித்திருக்கிறார்.
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள கணினிகளில் ரான்சம்வேர் வைரஸ் மூலம் திங்களன்று மீண்டும் இணைய தாக்குதல் நடத்தப்படலாம் என பிரித்தானிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.) உருவாக்கிய இணையவழி தாக்குதல் டூல்களை கொண்டு உலகின் சுமார் 150 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ரான்சம்வேர் வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தாக்குதலால் பிரித்தானியாவில் மருத்துவ சேவைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. குறித்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில், பிரித்தானியாவைச் சேர்ந்த மால்வேர் டெக் என்னும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் ஓரளவு இந்த வைரஸ் தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அதே நேரத்தில் இன்னுமொரு இணைய தாக்குதல் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர்.
அந்த தாக்குதல் அனேகமாக (திங்கட்கிழமை நடைபெறலாம் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே பிரித்தானிய உள்விஉவகாரத்துறை அமைச்சர் அம்பர் ரூத் இதுபற்றி குறிப்பிடுகையில், இந்தப் பிரச்சினை பெருமளவு சரிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் கணினி வைரசுக்கு எதிராக இன்னும் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
குறித்த வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு, கணினியில் கோப்புகளை திறப்பதற்கு 300 டொலர் முதல் 600 டொலர் வரை பிட்காயின்களை செலுத்துமாறு கணினி திரையில் தோன்றியதாக தகவல்கள் வெளிவந்தன.
அந்த வகையில் இதுவரை 22 ஆயிரம் பவுண்டுக்கு அதிகமாக 3 கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுவரை இப்படி ஒரு இணைய தாக்குதல் நடந்தது இல்லை என்று ஐரோப்பிய சட்ட அமலாக்கல் ஒத்துழைப்பு முகமை கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கிரேக்க நாட்டில் விரைவு ரயில் ஒன்று தடம்புரண்டு வீட்டிற்குள் புகுந்த விபத்தில் 3 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரேக்க தலைநகரான ஏதென்ஸில் இருந்து நேற்று இரவு விரைவு ரயில் ஒன்று 70 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. ஏதென்ஸ் நகருக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய நகரமான Thessaloniki என்ற நகருக்கு ரயில் பயணமாகியுள்ளது.
இந்நிலையில், நகரை அடைவதற்கு சுமார் 40 மைல்கள் தூரம் இருந்தபோது திடீரென ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டுள்ளது. ரயில் பெட்டிகள் வெளியே விழுந்து உருண்டபோது ஒரு பெட்டி அருகில் இருந்த வீட்டின் மீது பாய்ந்துள்ளது.
விபத்தை நேரடியாக பார்த்த வீட்டில் இருந்த நபர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக பால்கனியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பியுள்ளார். ஆனால், ரயிலில் பயணம் செய்த 70 பயணிகளில் 3 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளதால் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் ரயில் பொருத்தப்பட்டிருந்த 5 பெட்டிகளும் தடம்புரண்டு வெளியேறியுள்ளது. உயிரிழந்தவர்கள் பற்றி எவ்வித தகவல்களையும் பொலிசார் இதுவரை வெளியிடவில்லை.
ரயில் விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது தெரியவராத நிலையில், இதுக் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என ரயில் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
லண்டன் மாநகரில் மர்ம நபர்கள் கத்தியால் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் மாநகரின் Enfield பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியில் 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இரவு மர்ம நபர்களால் கத்தியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மட்டுமின்றி அதே நாளில் பகலில் 41 வயது நபர் ஒருவர் துப்பாக்கியல் சுடப்பட்டும் கத்தியால் தாக்கியும் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 3 வாரங்களில் தொடர்ந்து மர்ம நபர்கள் கத்தியால் தாக்கி கொலை செய்து வரும் சம்பவம் லண்டன் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுவரை 13 பேர் கத்தியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட இரு சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பொலிசார் இருவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பட்டப்பகலில் 41 வயது நபர் ஒருவர் படுகாயமடையும் மட்டும் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். கண்டிப்பாக பொதுமக்களில் சிலரேனும் இச்சம்பவத்தை நேரில் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு எனவும், அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Enfield பகுதியில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட பகுதியில் 19 மற்றும் 17 வயதுடைய இரு இளைஞர்கள் படுகாயத்துடன் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் இல்லை என்பதால் மிக விரைவில் இந்த வழக்கு தொடர்பாக அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மாநகரில் தொடரும் மர்ம கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு பொதுமக்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என லண்டன் மேயர் சாதிக் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஞாயிறுக்கிழமையன்று தாங்கள் நடத்திய புதிய பேலிஸ்டிக் ஏவுகணை சோதனை, மிக பெரிய அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் படைத்த ஒரு புதிய வகை ரொக்கெட் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.
செங்குத்தான கோணத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, 2000 கிலோ மீட்டர் உயரத்துக்கு சென்றது. கிட்டத்தட்ட, 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணித்து ஜப்பானின் மேற்கு கடல் பகுதியில் விழுந்தது.
புதிதாக பேலிஸ்டிக் ரொக்கெட்டை உருவாக்கிய தங்களின் திறமையை பறைசாற்றவே இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக வட கொரியா தெரிவித்துள்ளது.
ஐ .நா. சபை அமைப்பு விதித்த தடைகளை மீண்டும் மீறும் விதமாக அமைந்த இந்த சோதனைகள் பரவலாக கண்டனங்களை பெற்றுள்ளது.
இந்த ஆண்டு மீண்டும் மீண்டும் வட கொரியா நடத்திய பல சோதனைகள் சர்வதேச அளவில் எச்சரிக்கை ஏற்படுத்தியதோடு, அமெரிக்காவுடனான வட கொரியாவின் உறவுகளில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. வட கொரியா நடத்திய இவ்வாறான சோதனைகள் அனைத்தும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனை தொடர்பாக செவ்வாய்க்கிழமையன்று ஐ .நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஓர் அவசர கூட்டத்தை நடத்த அமெரிக்காவும், ஜப்பானும் அழைப்பு விடுத்துள்ளன.
புதிதாக உருவாக்கப்பட்ட நடுத்தர / தூர வகை மூலோபாய பேலிஸ்டிக் ரொக்கெட்டான வாஸோங்-12 திட்டப்படி செலுத்தப்பட்டதாக வடகொரிய அரசு ஊடகமான கேசிஎன்ஏ செய்தி முகமை திங்கள்கிழமையன்று தெரிவித்துள்ளது.
”எடை அதிமுள்ள மிகப் பெரிய அணு ஆயுதங்களை ஏந்திச் செல்வதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட பேலிஸ்டிக் ராக்கெட்டின் தந்திரோபாய மற்றும் தொழில்நுட்ப குறிப்புகளை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டது” என்று கேசிஎன்ஏ செய்தி முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்பொழுதும் போல் வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன்நின் மேற்பார்வையில் இந்த சோதனை நடைபெற்றதாக கேசிஎன்ஏ செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவுக்கு பிரத்தியேகமாக வடிவமைத்த செயற்கைக்கோள் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவரான ரிஃபாத் ஷாரூக் உலகின் எடை குறைந்த செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளார். 64 கிராம் எடை கொண்டுள்ள இந்த செயற்கைக்கோள் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
கலாம்சாட் என பெயரிடப்பட்டுள்ள குறித்த செயற்கைக்கோளினை யூன் 21- ஆம் திகதி விண்ணில் செலுத்தப்படவுள்ள நாசா ராக்கெட் சுமந்து செல்கிறது.
ரிஃபாத் வடிவமைத்துள்ள செயற்கைக்கோளின் திட்டப்பணிகள் 240 நிமிடங்களுக்கு நீடிக்கும் என்றும் 12 நிமிடங்களுக்கு விண்வெளியின் மைக்ரோகிராவிட்டியில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிஃபாத் தயாரித்த செயற்கைக்கோள் ‘கியூப்ஸ் இன் ஸ்பேஸ்’ எனும் போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டியின் கீழ் நான்கு அங்குல அளவில் அதிகபட்சம் 64 கிராம் எடை கொண்ட செயற்கைக்கோளை வடிவமைக்க வேண்டும்.
கியூப் செயற்கைக்கோள்கள் சார்ந்து அதிகப்படியான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதன்பின் எங்களது செயற்கைக்கோள் எடை குறைவானது என தேர்வு செய்யப்பட்டது என ரிஃபாத் தெரிவித்துள்ளார்.
‘செயற்கைக்கோள் முழுக்க கார்பன் ஃபைபர் பாலிமர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பாகங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தும், சில பாகங்களை உள்நாட்டிலேயே வாங்கி பயன்படுத்தினோம்’, என்றும் ரிஃபாத் தெரிவித்துள்ளார்.
இந்திய மாணவர் வடிவமைத்த செயற்கைக்கோளை நாசா ராக்கெட் விண்வெளிக்கு சுமந்து செல்வது இதுவே முதல் முறை ஆகும்.
இலங்கைக்கு செல்லக் கூடாது எனக் கூறி, இசையமைப்பாளர் இளையராஜா வீடு முன்பு பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
இலங்கையில் நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்துகொள்ளவுள்ளதாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ராஜசிங்கம் என்பவரும் நோர்வேயிலுள்ள கமல் என்பவரும் இணைந்து நடத்துகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்துகொள்ளக் கூடாதென தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர் என, இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான நிலங்கள் இன்னும் அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை, இன்றும் வெள்ளை வண்டியில் தமிழ் இளைஞர்கள் கடத்திக் கொள்ளப்படுகின்றார்கள், தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகின்றனர், தமிழீழ மண்ணில் சிங்களர் குடியேற்றம் விரைவுப்படுத்தப்படுகின்றது, அரசியல் கைதிகள் விடுதலைக் குறித்து ஜனாதிபதியிடம் வலியுறுத்தியும் இன்றளவிலும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை, போர் முடிந்தநிலையிலும் இரண்டு இலட்சத்திற்கும் மேலான சிங்கள படையினர் வட மாகாணத்தில் நிலைகொண்டிருப்பது மிகப்பெரிய ஒடுக்குமுறை நடவடிக்கை என்று வடமாகாண சபை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் அடக்குமுறைக்கு மத்தியில் உரிமைகளை இழந்த நிலையில் இருக்கும் இக்கால சூழலில் இசை நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அனாமதேய ஆபத்து மிகுந்த மின்னஞ்சல்கள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
WannaCry எனப்படும் கணினி பொறியை சீர்குலைக்கும் நிகழ்ச்சித்திட்டங்களில் இருந்து பாதுகாக்கும் முகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில்:
– Update Windows Patches – விண்டோஸ் பெச்சஸ்களை மேம்படுத்திக்கொள்ளவும்.
– Backup all documents to an external drive – கணினியில் உள்ள அனைத்து தரவுகளையும் பிறிதொரு பிரத்யேக ஹாட்டிரைவில் பதிந்து சேமித்து கொள்ளவும்.
– அனாமதேய சந்தேகத்திற்கிடமான உள்ளீடுகளுடன் வரும் மின்னஞ்சல்கள் திறக்க வேண்டாம் எனவும், அவதானமாக அவற்றை அகற்றிவிட வேண்டும் எனவும் இணைய பயனாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வரட்சியால் குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று, ஒட்டுசுட்டான், மாந்தைகிழக்கு ஆகிய பகுதிகளில் குடிநீர் நெருக்கடி நிலவுவதன் காரணமாக குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாகவும், குடிநீர் நெருக்கடி தொடர்பாக கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் பிரதேச சபைகள், பிரதேச செயலகங்களின் ஒழுங்குப்படுத்தல்களில் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வசந்தபுரம், பேராறு, கற்சிலைமடு, சம்மளங்குளம், கூழாமுறிப்பு, மானுருவி, கருவேலங்கண்டல் ஆகிய பகுதிகளில் குடிநீர் நெருக்கடி காணப்படுகின்றது. கரைதுறைபற்றில் மாமூலை கிராமம் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. பல கிராமங்கள் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளன. மாவட்டத்தில் வரட்சி நிலைமை அதிகரிக்குமானால் குடிநீர் நெருக்கடியும் கூடுதலாக உருவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
வடக்கில் விளக்கேற்றி முப்படையினரை அசெகளரியப்படுத்த இடமளிக்கப்படமாட்டாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அரநாயக்க பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக எமது இராணுவத்தினரை விமர்சிக்கின்றனர். அவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் இராணுவத்தினரின் சேவையை பாராட்ட வேண்டிய அளவிற்கு அவர்கள் பொறுப்புடன் செயற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிவாஜிலிங்கத்துடன் ஐந்து பேர் சுற்றி நின்று, விளக்கேற்றி இராணுவத்தினரை விமர்சிக்கின்றமை தொடர்பில் நாம் கவலையடைகின்றோம்.
ஆனால், முப்படையினர் பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தின் காரணமாகத்தான் அவரால் அவ்வாறு செயற்பட முடிகின்றது என அவருக்கு நினைவுகூர வேண்டும்.
புலம்பெயர் தமிழர்களின் பணத்தைப் பெறவே அவர் இப்படியான நாடகத்தை நடத்துகிறார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.