பிறந்து பதினெட்டே மாதங்களில் 31 கிலோ : அரிய நோயால் பாதிக்கப்பட்ட யாகிஸ்!!

துருக்கியில், பிறந்து பதினெட்டே மாதங்களான குழந்தை அதிகூடிய எடையால் அவதிப்பட்டு வருகிறது. மேலும், மாதந்தோறும் ஏறக்குறைய 2 கிலோ எடை வீதம் அதிகரித்துவருவதால், அதன் பெற்றோர் கடும் நெருக்கடிக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

யாகிஸ் பெக்த்தா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் குழந்தை பிறக்கும்போதே அரிய வகை மரபணுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளது.

பிறக்கும்போது சாதாரண எடையுடனேயே பிறந்த இந்தக் குழந்தை, நாளாக நாளாக வெகு வேகமாக அதீத உடல் எடையைப் பெற்றுள்ளது.

தற்போது இந்தக் குழந்தையின் அளவுக்கு ஏற்ற தொட்டிலையோ, நடைவண்டியையோ, டயப்பர் எனப்படும் கீழாடையையோ வாங்க முடியாமல் இருக்கிறது.

குறிப்பிட்ட இந்த நோயினால் இந்தக் குழந்தை தொடர்ச்சியாக உணவு உண்டு வருகிறது. இதனாலேயே அதீத உடல் எடையை எதிர்நோக்குகிறது.

இந்த நிலையில், இந்தக் குழந்தையை குணப்படுத்த தொடர்ந்தும் உதவ முடியாது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்ததால், அரசின் உதவியை எதிர்பார்த்து நிற்கின்றனர் இந்தக் குழந்தையின் பெற்றோர்.

மாணவியைக் காப்பாற்றிய நபர் : சீன ரயில் நிலையத்தில் வீர சாகசம்!!

சீனாவில், ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற மாணவியொருவரை, நபரொருவர் பாய்ந்து தடுத்துக் காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் கடந்த புதன்கிழமை (10) சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் புட்டியான் ரயில் நிலையத்திலேயே இடம்பெற்றுள்ளது.

ரயில் நிலைய மேடையில் நின்றுகொண்டிருந்த பயணிகளுடன் பயணியாய் நின்றுகொண்டிருந்த குறித்த மாணவி, ரயில் அதிவேகமாக வந்துகொண்டிருந்தபோது ஓடிச் சென்று பாய எத்தனித்தார்.

ரயிலை நோக்கி மாணவி ஓடுவதைக் கண்ட ஒருவர், உடனடியாக நிலைமையைப் புரிந்துகொண்டு மாணவியின் பின்னால் பாய்ந்தோடிச் சென்றார். மாணவி தண்டவாளத்தில் பாய ஓரிரு நொடிகளே இருந்த நிலையில் அவரது சட்டையைப் பிடித்து இழுத்தபடி விழுந்தார் அந்நபர்.

மாணவியைக் காப்பாற்றும் முயற்சியில் அவரது தலை பலமாகத் தரையில் மோதியபோதும், அதைப் பற்றி சிந்திக்காமல் மாணவியை இழுத்து எடுத்துக் காப்பாற்றினார்.

இந்தக் காணொளிக் காட்சி தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்களுக்கு புதிய சட்ட விதிமுறை!!

முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் புதிய சட்ட விதிமுறைகளைக் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்ள எதிர்வரும் வாரம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான அதிகார சபை தெரிவித்துள்ளது.

தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் சிசிர கோதாகொட தெரிவித்தார்.

அத்துடன், முச்சக்கரவண்டிகளில் மீட்டர் பயன்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முச்சக்கரவண்டிகள் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி சபை மற்றும் பொலிஸ் நிலையத்தில் கட்டாயமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என பேராசிரியர் சிசிர கோதாகொட வலியுறுத்தினார்.

காங்கேசன்துறை கடற்பரப்பில் 9 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது!!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடற்பரப்பில் 9 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

9.3 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பதில் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் ருவன் பிரேமவீர தெரிவித்தார்.

நீர் உட்புகாத வகையில் பொலித்தீனால் பொதியிடப்பட்ட 9 பொதிகள் படகொன்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.

பொலித்தீனால் பொதியிட்டு, கடலில் மிதக்க விட்டு போதைப்பொருள் கடத்தப்படுவது, கடத்தல்காரர்களின் வழிமுறைகளில் ஒன்றென பாதுகாப்புப் பிரிவு தெரிவித்தது.

நேற்றும் இன்றும், 210 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பெறுமதி சுமார் 210 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

குஜராத் வீரர்கள் அறையில் 41 லட்சம் பறிமுதல் : சூதாட்ட முயற்சி முறியடிப்பு!!

ஐ.பி.எல். தொடரின் போது ஆட்ட நிர்ணய சதி சூதாட்டம் நடைபெறுவதை தடுப்பதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஊழல் தடுப்புக் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்தக் குழு இந்தியாவில் உள்ள பெரிய சூதாட்ட தரகர்கள் ஐ.பி.எல். தொடரில் விளையாடும் வீரர்களை தொடர்பு கொள்கிறார்களா என்று கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகிறது.

இந்தநிலையில் கான்பூரில் குஜராத் லயன்ஸ் அணி, டெல்லி அணி வீரர்கள் தங்கியிருந்த விருந்தகத்தில் அறை எடுத்து தங்கிய தொழிலதிபர் ரமேஷ் நாயன் ஷா உள்பட மூன்று பேரை உத்தர பிரதேச பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 40 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் உள்பட ஐந்து மொபைல் போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இரண்டு குஜராத் லயன்ஸ் அணி வீரர்கள் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.  இதனால் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த செய்தியை உறுதிச்செய்துள்ள பி.சி.சி.ஐ, உத்தர பிரதேச பொலிஸார் அவர்களை கைது செய்வதற்கு முன்பே, ஊழல் தடுப்புக்குழு அவர்களை கண்காணித்து வந்தது என்று தெரிவித்துள்ளது.

ரமேஷ் குமார் போட்டி நடைபெறும் மைதானத்தில் விளம்பர பேனர்கள் வைக்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளார். அவர் வீரர்கள் தங்கிய ஹோட்டலில் ரமேஷ் நயன் ஷாவிற்கு அறை எடுத்து கொடுத்துள்ளார்.

ஷாவிற்கு அஜ்மீரில் உள்ள மோசடி மன்னனுக்கு தொடர்பு இருந்துள்ளது. ஷா மூலம் கிரிக்கெட் போட்டி குறித்த தகவலை மோசடி மன்னன் பெற்றுள்ளார்.

குறித்த நேரத்தில் பொலிஸார் இந்த கும்பலை கைது செய்ததால், ஐ.பி.எல். வீரர்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட இருந்தது தவிர்க்கப்பட்டுள்ளது.

தன்னைப் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரம்யா கிருஷ்ணன்!!

ரம்யா கிருஷ்ணன் தனது மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார். அவருடைய கணவர் இயக்குனர் வம்சி ஐதராபாத்தில் இருக்கிறார். இதனால் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று வதந்தி கிளம்பியது.

இதற்கு பதில் அளித்துள்ள ரம்யா கிருஷ்ணன், “கணவர் தெலுங்கு படம் இயக்குவதால் ஐதாராபாத்தில் இருக்கிறார்.

நான் டி.வி. தொடர்களில் நடிக்க வசதியாக சென்னையில் வசிக்கிறேன். நேரம் கிடைக்கும் போது கணவர் சென்னை வருவார். அல்லது நான் அங்கு செல்வேன். ஒரே நேரத்தில் விடுமுறை கிடைத்தால் குடும்பத்துடன் சுற்றுலா செல்வோம். நாங்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம்” என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

உலகளாவிய இணையவழி தாக்குதலில் 99 அரசு அமைப்புகள் பாதிப்பு!!

உலகளாவிய மோசமானதொரு இணைய தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

பிரிட்டன், ஸ்பெய்ன், ரஷ்யா, அமெரிக்கா, தாய்வான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் இணைய சேவைகள் மீது இந்த தாக்குதல் நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

இவையெல்லாம் தனித்தனி தாக்குதல்களா அல்லது ஒன்றோடொன்று தொடர்புடையவையா என்பது தெளிவாகவில்லை.

பிரிட்டனின் தேசிய மருத்துவ சேவையின் இணைய கட்டமைப்பின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடந்துள்ளது.

பிரிட்டனின் முன்னணி மருத்துவமனைகளின் இணையகட்டமைப்பின் மீது நடந்துள்ள இந்த தாக்குதலில் நோயாளிகளுக்கான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் ransomware attack என்று அழைக்கப்படும் பிணைத்தொகை கேட்கும் மென்பொருளை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இணைய சேவைகளை மீண்டும் செயற்பட செய்யவேண்டுமானால் பணம் தரவேண்டும் என்று இந்த மென்பொருள் கேட்கும்.

பிரிட்டனின் சில மருத்துவ மையங்கள் மற்றும் மருத்துவமனைகளின் இணைய கட்டமைப்பு முழுமையாக செயலிழந்து போனதால் பல இடங்களில் நோயாளிகள் அவசரகால சிகிச்சை பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

ஸ்பெய்ன் நாட்டில் பெருமளவிலான அந்நாட்டு நிறுவனங்களின் இணைய கட்டமைப்பும் இதேபோல் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதியர் தினம் அனுஷ்டிப்பு!!

 
சர்வதேச தாதியர் தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இன்று (12.05.2017) காலை 11 மணியளவில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அகிலேந்திரன் தலைமையில் சர்வதேச தாதியர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி பசுபதிராஜா, பணிப்பாளர் வைத்திய கலாநிதி அகிலேந்திரன், பிரதிபணிப்பாளர் வைத்திய கலாநிதி தமிழினி, சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி சுரேந்திரன், தாதிய பரிபாலகர் திரு.பாலநாதன், திருமதி.குமாரசிங்கம், வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர் வைத்தியர் அனாஸ், தாதிய பயிற்சி கல்லூரி விரிவுரையாளர்கள், தாதிய கல்லூரி மாணவ மாணவிகள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

இந் நிகழ்வில் புளோரன்ஸ் நைற்றிங்கேல் அவர்களின் திருவுருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் தாதிய உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாணமும் இடம்பெற்றது.

தாதிய கல்லூரி மாணவிகளின் பரத நடன நிகழ்வு, கண்டியன் நடனம், தாதிய உத்தியோகத்தரின் பாடல் , தாதிய உத்தியோகத்தர்களின் நகைச்சுவை நாடகம் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

வவுனியாவில் போராடும் சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்க வேண்டும் : சிவசக்தி ஆனந்தன்!!

 
சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என தமிழ்த் தே சியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் கடந்த 9 நாட்களாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் சுகாதார தொண்டர்களின் போராட்ட களத்திற்கு இன்று (12.05.2017) காலை சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சுகாதார தொண்டர்களின் நிலைமைகளை கேட்டறிந்ததுடன் இது தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்கள் 9 நாட்களாக தமக்கு நிரந்தர நியமனம் வழங்கவேண்டும் என்று தெரிவித்து தொடர் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் கோரிக்கை நியாயமானது. இவர்கள் கடந்த 1994 ஆம் ஆண்டிலிருந்து எவ்வித ஊதியமும் இன்றி இந்தப்பணியினை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2009ம் ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பல ஆயிரக்கணக்கான மக்கள் வவுனியா வைத்தியசாலையை நாடி வந்துள்ளார்கள்

காயப்பட்டவர்கள் உட்பட விஷேட தேவைக்குட்பட்டவர்கள் போன்ற பலரிற்கு சுகாதார தொண்டர்கள் மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் இவர்களுடைய பணி என்பது மிகப்பெரிய ஒரு பணியாக இருக்கின்றது.

ஆகவே 10 வருடங்கள் கடந்தும் இந்த சுகாதார தொண்டர்களுக்கு இது வரையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. இவர்களைப் போன்று வடக்கு மாகாணங்களில் இருக்கக்கூடிய ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் உட்பட 800ற்கும் மேற்பட்ட சுகாதாரத் தொண்டர்களுக்கு 10 வருட காலத்திற்கு மேற்பட்ட காலப்பகுதியில் இந்தப்பணியினை ஆற்றியிருக்கின்றார்கள்.

இவர்களுக்கு வடமாகாண சுகாதார அமைச்சு மற்றும் மத்திய சகாதார அமைச்சு இணைந்து இவர்களுடைய கடந்த கால சேவைகளை மனிதாபிமான அடிப்படையில் இவர்களுடைய தேவையை எடுத்து இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் வறுமையின் கொடூரத்தில் வாழ்ந்த குடும்பத்துக்கு மஸ்தான் எம்.பி உதவி!!

 
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆண்டியா புளியங்குளம் கிராமத்தில் தனது இரண்டு கண்களின் பார்வையையும் இழந்து மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து வந்த குடும்பத்தை நேரில் சந்தித்து அவர்களுக்கான உதவிகளை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் வழங்கிவைத்தார்.

குறித்த குடும்பம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை உறுதிப்படுத்திக்கொண்ட மஸ்தான் எம்.பி அவர்களை சந்தித்து அந்த குடும்பத்தின் முக்கிய தேவைகளாக காணப்பட்ட குடிநீருக்கான கிணறு மற்றும் வீட்டின் மின்சார வசதிகள் என்பவற்றுடன் மாதாந்தம் 5000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்குதலுடன் குறித்த பிள்ளைகளின் கல்விக்கான உதவிகளையும் சுய தொழிலாக மந்தை வளர்ப்புக்கான உதவிகளையும் வழங்க நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மஸ்தான் எம்.பி கருத்து தெரிவிக்கையில், இந்த குடும்பம் கடந்த நான்கு வருடங்களாக சொல்லணாத்துயரங்களை அன்பவித்து வந்துள்ளமை வேதனை அளிக்கிறது. அத்துடன் தனது பள்ளி செல்லும் குழந்தையின் உதவியுடன் கடைகளியில் தர்மம் கேட்டு தமது காலத்தை கடத்துகின்றமை மிகவும் வேதனையான ஒரு விடயமாகும்.

இந்த சம்பவத்தை சமூக ஊடகங்களூடாகவே நான் அறிந்துகொண்டேன். எனவே சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் இவ்வாறான தேவைகளுக்கு பயன்படுத்தினால் சமூகத்திற்கும் தேவை உடையவர்களுக்கும் சேவைகள் சரியாக சென்றடையும்பொழுது அதில் உங்களுக்கும் பங்குண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்.

அத்துடன் இந்த உதவிகளை என்னுடன் இணைந்து வழங்குவதற்கு முன்வந்த நிறுவனங்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன், நாங்கள் உதவி செய்துவிட்டோம் என்பதற்காக உதவி செய்வதற்கு எண்ணியுள்ளவர்கள் நின்றுவிடாமல் தங்களாலான உதவிகளை செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் ஒன்பதாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களின் தொடர் போராட்டம்!!

 
வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த 1994ம் ஆண்டிலிருந்து கடமையாற்றி வந்த 51 சுகாதார தொண்டர்கள் கடந்த 04.05.2017 பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்து இன்று (12.05.2017) ஒன்பதாவது நாளாகவும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாம் கடமையாற்றி பல உயிர்களை காப்பாற்றிய எங்களுக்கு நியமனம் இல்லையா?, நீண்ட காலமாக சேவையாற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா?, வெயில் மழை பாராமல் ஊதியம் இல்லாமல் கடமையாற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா?, வவுனியாவில் டெங்கு நோயை கட்டுப்படுத்திய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா? என பல்வேறு பதாதைகளை தாங்கியபடி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை போராட்டத்தினை தொடரவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

வவுனியா கலைமகள் முன்பள்ளியின் விளையாட்டுப்போட்டி!!

 
வவுனியா ஓமந்தை மருதங்குளம், கலைமகள் (தந்தை செல்வா) முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டி இன்று (12.05.2017​) காலை 10​ ​மணியளவில் முன்பள்ளியில் பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கௌரவ விருந்தினராக முன்பள்ளி கல்விப் பணிப்பாளர் திரு.இராஜேஸ்வரன், சிறப்ப விருந்தினராக ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் திரு.திருஞான சம்பந்தமூர்த்தி கிராம வேவையாளர் செல்வி கி.தர்மினி, கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர், பெற்றோர்கள், அயல் கிராமத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு மாணவர்களின் செயற்திறன் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.

வவுனியாவில் 78வது நாளாக காணாமல் போனோரின் உறவினர்கள் போராட்டத்தில்!!

 
வவுனியாவில் கடந்த 78 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (12.05.2017) 78வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

தீர்வு கிடைக்கும் வரை சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மஞ்சள் கயிற்றில் தாலி கட்ட இதுதான் காரணமா?

பண்டைய காலத்தில் இருந்து தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே மணமகன், மணமகள் கழுத்தில் கட்டி வந்ததால் தாலி என்ற பெயர் வந்தது.

தாலிக்கு தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது பொருளாகும். ஒவ்வொரு இடத்தின் தட்பவெப்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றது.

திருமணத்தின் போது பெண் கழுத்தில் கட்டும் மாங்கல்ய தாலிக் கயிறானது ஒன்பது இழைகளைக் கொண்டது. அந்த ஒன்பது இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.

தாலியில் உள்ள ஒன்பது இழையின் குணங்கள் என்ன?

தெய்வீகக் குணம்
தூய்மைக் குணம்
மேன்மை குணம்
தொண்டு குணம்
தன்னடக்க குணம்
ஆற்றல்
விவேகம்
உண்மை
உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்.

இந்த ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காக ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது.

கணவன் வாழும் வரை மனைவியின் மார்பில் எப்பொழுதும் அவன் கட்டிய தாலி தவழ வேண்டும். அவனை நெஞ்சோடு தாங்கி வாழும் தன்மையை காலம் முழுவதும் அந்த பெண் எடுத்துக்காட்ட வேண்டும் என்று அர்த்தமாகும்.

பெண்ணின் மார்பில் உயிரோட்டம் உள்ள இதயத்தில் இந்த தாலி பட்டுக் கொண்டு இருக்க, அது ஒரு சீன மருத்துவ முறையில் அக்குபஞ்சர் முறை போன்று செயல்படுகின்றதாம்.

அதுமட்டுமல்லாமல் மஞ்சள் கயிறு தாலியில் கோர்த்து போட்டிருந்த போதெல்லாம் நிறைய சுகபிரசவங்கள் இருந்ததுடன், மார்பக புற்றுநோயின் பாதிப்புகளும் குறைவாக இருந்ததாம்

யானைக்கும் அடி சறுக்கும் என்பதை புரிந்து கொண்டேன் : விராத் கோஹ்லி!!

இந்த ஆண்டு நடைபெற்ற பத்தாவது ஐபிஎல் தொடரை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது பெங்களூரு அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 10வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் லீக் போட்டிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. கோஹ்லி, கெயில், டிவிலியர்ஸ், வட்சன் என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே உள்ளடக்கிய பெங்களூரு அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் பிளே ஒப் சுற்றுக்கான தகுதியை இழந்தது.

இந்நிலையில் இது குறித்து கோஹ்லி கூறுகையில், யானைக்கும் அடி சறுக்கும் என சொல்வார்கள். அது இன்று உண்மையாகிவிட்டது.

சில நேரங்களில் தோல்வியை சகித்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்போது தான் அதை தாண்டி அடுத்த போட்டிகளில் கவனம் செலுத்த முடியும். நடத்ததை பார்த்தால் சிரிப்பதை தவிர, வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை என கூறியுள்ளார்.

கனடாவில் இலங்கை தமிழருக்கு கிடைத்துள்ள கெளரவம்!!

கனடாவில் கவுன்சிலராக பதவி வகிக்கும் இலங்கை தமிழர் அதிகாரப்பூர்வ தெற்காசிய பாரம்பரிய பண்டிகை கொண்டாட்டத்தை முதல் முறையாக தொகுத்து வழங்கியுள்ளார்.

கனடாவை சேர்ந்தவர் நீதன் ஷான் (39) இலங்கை தமிழரான இவர் கடந்த 1995ல் அங்கிருந்து தனது 16வது வயதில் புலம் பெயர்ந்துள்ளார்.

கனடாவில் தனது பட்டப்படிப்புகளை முடித்த ஷான் கடந்த பிப்ரவரி 13ஆம் திகதி அங்கு நடைப்பெற்ற கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்று கவுன்சிலராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில், நேற்று டொரண்டோவின் நகர மண்டபத்தில் நடைபெற்ற தெற்காசிய பாரம்பரிய பண்டிகை விழாவை ஷான் தொகுத்து வழங்கினார்.

இதன் மூலம் இந்த நிகழ்வை தொகுத்து வழங்கிய முதல் தமிழ் கவுன்சிலர் என்ற பெருமையை ஷான் பெற்றுள்ளார். இந்த விழாவில் மேயர் ஜான் டோரி, அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டார்கள்.

இதுகுறித்து கூறியுள்ள ஷான், தெற்காசிய கனடியர்கள் டொராண்டோ நகரத்திற்குரிய கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரிய பங்களிப்பை அளிப்பதாக கூறியுள்ளார்.

மேலும், நம் இளைஞர்களை நாம் கொண்டாட வேண்டியது அவசியம் என கூறியுள்ள ஷான், நம் சமூகங்களின் வெற்றிக்கு அவர்கள் தான் உண்மையான அடையாளம் என கூறியுள்ளார்.

ஷான் ஏற்கனவே கனேடிய தமிழ் இளைஞர் அபிவிருத்தி நிலையத்தின் நிர்வாக இயக்குனர், தெற்கு ஆசியர்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் போன்ற பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.