வவுனியாவில் வெசாக் அலங்கார வடிவமைப்புக்களை பார்வையிட திரண்ட மக்கள்!!

 
A9 வீதியில் மூன்று முறிப்பு சந்தியிலிருந்து வவுனியா மாவட்ட செயலகம் வரையான பகுதியில் 100க்கு மேற்ப்பட்ட வெசாக் கூடுகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அத்துடன் வவுனியா போதி தக்ஸினாராம விகாரைக்கு முன்பாக பல வெசாக் கூடுகளை பொலிஸார் வடிவமைத்து பொதுமக்களின் பார்வைகளுக்காக வைத்துள்ளனர்.

இதனை பார்வையிடுவதற்காக மூன்றுமுறிப்பு பகுதியிலிருந்து வவுனியா நகரம் வரை ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

வவுனியா நகரின் பல இடங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வெசாக் அலங்கார வெளிச்சக் கூடுகளை பார்வையிட வரும் பொதுமக்களுடைய பாதுகாப்பு கருதி இரவு முழுவதும் நகரில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி சோமரத்ன விஜயமுனி தலைமையில் பொதுமக்களுக்கு கடலை தானமாக வழங்கப்ட்டது.

வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபர் காரியலாயத்தில் கலை நிகழ்வுகள், தாக சாந்தி நிலையங்கள், குளிர்பானங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வெசாக் தினத்தினை முன்னிட்டு மாவட்ட செயலகத்தினால் வாழ்வாதார உதவிகள்!!

 
வவுனியா மாவட்ட செயகத்தினால் நேற்று (10.05.2017) மாலை 5.30 மணியளவில் வெசாக் தின நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் அரசாங்க அதிபர் எம் பி.றோஹன புஸ்பகுமராவினால் தெரிவு செய்யப்பட கணவனை இழந்து பிள்ளைகளுடன் வறுமையில் வசிக்கும் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கென பசு மாடு (40,000 ரூபா பெறுமதியான) வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகத்தின் பணியாளர்களின் நிதிப்பங்களிப்புடன் பயனாளர் ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வ.பிரதீபன், திட்டப்பணிப்பாளர், அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அரசாங்க அதிபர் எம் பி.றோஹன புஸ்பகுமராவினால் வெசாக் தின ஆரம்ப நிகழ்வான தானம் வழங்கப்பட்டதுடன் அலங்கார தீபத்தை ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.

வவுனியா விநாயகபுரத்தில் மாட்டுடன் மோதுண்ட மோட்டார் சைக்கில் : ஒருவர் காயம்!!

 
வவுனியா விநாயகபுரத்தில் இன்று (10.05.2017) மாலை 6.15 மணியளவில் மாட்டுடன் மோதுண்டு மோட்டார் சைக்கில் விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

நெளுக்குளத்திலிருந்து செட்டிக்குளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் பாரதிபுரம் விநாயகபுரம் பகுதியில் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மாடு உயிரிழந்ததுடன் ஒரு மாடு காயமடைந்துள்ளது. மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேஸ்புக் பயன்படுத்தும் அனைத்து பெண்களுக்கும் எச்சரிக்கை!!

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் ஊடாக பல பெண்களின் அந்தரங்க விடயங்களை வெளியிடப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் அனைவரினாலும் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக பேஸ்புக் மாறியுள்ளது. இந்நிலையில் இதனை இலக்கு வைத்து பல்வேறு வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது இலங்கையில் “பெண்கள் விற்பனைக்கு உண்டு” என பேஸ்புக் பக்கம் ஒன்று செயற்படுத்தப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பக்கத்தில் அனுமதியின்றி பெண்களின் புகைபடங்கள் பகிரப்பட்டு பலர் ஏமாற்றப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேஸ்புக் மற்றும் தனிப்பட்ட ரீதியில் பெற்றுக் கொள்ளப்பட்ட பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் இந்த பக்கத்தில் பகிரப்படுகிறது. அத்துடன் அவர்களை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் பெண்களாக அடையாளப்படுத்தப்படுவதுடன், அவர்களின் தொலைப்பேசி இலக்கங்களும் பகிரப்படுகின்றன.

பல்வேறு நபர்கள் இந்த தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துவதால் குறித்த பெண்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பேஸ்புக் பக்கம் தொடரில் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எட்டு வயதுச் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை : சோகத்தில் மூழ்கிய கிராமம்!!

அம்பாறையில் சிறுவன் ஒருவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்மாந்துறை பிரதேசத்தில் கூரையில் கட்டப்பட்டிருந்த துணி ஒன்றில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எட்டு வயதுடைய சிறுவனே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் சம்மாந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் மரணம் காரணமாக அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வடிவமைக்கப்பட்ட பிரமாண்டமான மணல் புத்தர்!!

 
உலகிலேயே மிகவும் நீளமான மணல் புத்தர் கொழும்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறித்த புத்தர் சிலையை வடிவமைப்பதற்காக இந்தியாவில் இருந்து வருகை தந்த சுதர்சன் பட்நாயக் இதனை நிறைவு செய்துள்ளார்.

14ஆவது சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டே குறித்த புத்தர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் இந்த நீண்ட புத்தரை உருவாக்கியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 14 வது சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அழைப்பின் பேரில்,பட்நாயக் இலங்கை வந்திருந்தார்.

இந்த நிலையிலேயே, பாராளுமன்ற கட்டடத் தொதிக்கு அருகில் உலகின் மிக நீண்ட மணல் 40 அடி நீளம் கொண்ட மணல் புத்ததரை வடிவமைத்துள்ளார்.

வடிவமைக்கப்பட்ட மணல் புத்தரின் படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட கலைஞர் சுதர்சன் பட்நாயக், சமீபத்தில் 10ஆவது மாஸ்கோ சாண்ட் கலை சாம்பியன்ஷிப் போட்டியில்தங்க பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இன்று(10.05) பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று மதியம் 2 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சடலமாக மீட்கப்பட்ட பெண் குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!!

புதுக்குடியிருப்பு தொழிற்சாலையொன்றில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை ஊடகவியலாளர்களின் உதவியுடன் வவுனியா பொலிஸார் இன்று(10) மடக்கிப்பிடித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு தொழிற்சாலையொன்றில் பணியாற்றி வந்த நபரொருவர் தொழிற்சாலையில் எவரும் இல்லாத நிலையில் அங்கிருந்த அலுவலத்தில் பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டியை உடைத்து திருடியுள்ளார்.

இந்த நிலையில் தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவு செய்யப்பட்டிருந்த குறித்த நபர் பணம் திருடும் வீடியோ சில இணையத்தளங்களில் வெளியாகியிருந்தது.

இதனையடுத்து குறித்த சந்தேக நபர் வவுனியா நகரப்பகுதியில் நடமாடுவதை அவதானித்த ஊடகவியலாளர்கள் சிலர் குறித்த தொழிற்சாலையின் உரிமையாளருடன் தொடர்பு கொண்டு சந்தேக நபர் தொடர்பான மேலதிக விபரங்களை கோரியிருந்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர் குறித்த நபரே என அறிந்துகொண்ட பின்னர் வவுனியா பொலிஸாருக்கு ஊடகவியலாளர்கள் தகவல் வழங்கியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த பொலிஸார் ஊடகவியலாளர்களின் உதவியுடன் சந்தேக நபரை மடக்கிப்பிடித்துள்ளனர்.

இந் நிலையில் வவுனியா முதலாம் குறுக்குத்தெருவில் விடுதியொன்றில் மறைந்திருந்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

-தமிழ்வின்-

திடீரென மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு!!

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.

நற்பிட்டிமுனை பிள்ளையார் கோவில் வீதியைச்சேர்ந்த புவனேந்திரன் கீர்த்தனா (16 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் க.பொ.த சாதாரண தரத்தில் (தரம் – 11) கல்வி பயிலும் குறித்த மாணவி, இம்முறை பரீட்சைக்கு தோற்றவிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பிரத்தியோக மேலதிக வகுப்புக்கள் பாடசாலையில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மேலதிக வகுப்பு இடம்பெற்ற நிலையில், இவ்வகுப்பு முடிவடைந்து 2.20 மணியளவில் மாணவர்கள் வீடு செல்வதற்காக வந்துள்ளனர்.

இதன் போது குறித்த மாணவி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து குறித்த மாணவி கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து குறித்த மாணவி மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்றைய தினம் குறித்த மாணவி உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் இளங்கோ அடிகளாரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

 
தமிழ் விருட்சம் அமைப்பு, கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், நகர வரியிப்பாளர்கள் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த இளங்கோ அடிகளாரின் நினைவு தினம் இன்று (10.05.2017) காலை 8.30 மணியளவில் கோவிற்குளம் சிவன் கோவிலுக்கு முன்பாக அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச்சிலையடியில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள் நகர பிதா சந்திரகுலசிங்கம், மாவட்ட காலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தம், பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் வ.பிரதீபன், மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன்,

அரச உத்தியோகத்த்கள், சமூக ஆர்வலர்கள், சிவன் கோவில் அன்பக சிறுவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அன்னாரின் திருவுருவசிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன் தமிழ்மணி அகளங்கனின் உரையும் இடம்பெற்றது.

வவுனியாவில் 76ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்!!

 
வவுனியாவில் கடந்த 76 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (10.05.2017) 76வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

தீர்வு கிடைக்கும் வரை சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் ஏழாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களின் தொடர் போராட்டம்!!

 
வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த 1994ம் ஆண்டிலிருந்து கடமையாற்றி வந்த 51 சுகாதார தொண்டர்கள் கடந்த 04.05.2017 பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்து இன்று (10.05.2017) ஏழாவது நாளாகவும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றனர்.

யுத்த்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாம் கடமையாற்றி பல உயிர்களை காப்பாற்றிய எங்களுக்கு நியமனம் இல்லையா?, நீண்ட காலமாக சேவையாற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா?, வெயில் மழை பாராமல் ஊதியம் இல்லாமல் கடமையாற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா?, வவுனியாவில் டெங்கு நோயை கட்டுப்படுத்திய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா? என பல்வேறு பதாதைகளை தாங்கியபடி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை போராட்டத்தினை தொடரவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

வவுனியாவில் சிறப்பிக்கப்பட்ட முழுநிலா கருத்தரங்கு!!

 
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் வவுனியா ஆங்கிலச் சங்கத்தடன் இணைந்து நடாத்தும் மாதாந்த முழுநிலாக் கருத்தாடல் நிகழ்வு இன்று (10.05.2017) காலை 10 மணியளவில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் கலை இலக்கிய நண்பர்கள் வட்டத் தலைவர் திரு தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்றது.

அமரர் சு.சிவபாலன் (முன்னாள் ஆங்கில சங்க இணைச் செயலாளர்) அவரின் இரண்டாவது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டதுடன் கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் (சிரேஸ்ட விரிவுரையாளர்- யாழ் பல்கலைக்கழகம்) தலைமையில் ஆங்கில சங்கத்தின் வெளியீடான பாலைவனச்சோலை OASIS 3வது இதழ் இவருடைய ஞாபகர்த்த இதழாக வெளிட்டுவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஒரு அங்கமாக இலங்கையை சைக்கிலில் சுற்றி வந்த தர்மலிங்கம் பிரதாபனை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளை வவுனியா மத்திய மகாவித்தியாலய மாணவர்களும் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவிகளும், மாற்றுவலுவுள்ளோருக்கான வலுவூட்டல் அமையம் வன்னி (VAROD) நிறுவனம், மாற்றாற்றல் உடைய மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் புத்திஜீவிகள், அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 பேர் விடுதலை!!

 
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 கைதிகள் இன்று (10.05.2017) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் பாரதூரமான குற்றங்கள் அல்லாத சிறிய தவறுகளை செய்தவர்கள் மற்றும் அபராதப் பணத்தை செலுத்த முடியாமல் சிறையில் இருந்த 12 ஆண்கள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக வவுனியா சிறைச்சாலையின் அதிகாரி தெரிவித்துள்ளார்​.

வவுனியா உக்குளாங்குளத்தில் பிரதேசமட்ட விளையாட்டுப் போட்டி!!

 
வவுனியா உக்குளாங்குளம் சீர்திருத்தம் விளையாட்டு மைதானத்தில் நேற்று (09.05.217) மாலை 3 மணியளவில் முன்பள்ளி கட்டமைப்பு நகரம் 01 இன் பிரதேச மட்ட விளையாட்டு போட்டிகள் கட்டமைப்பின் தலைவர் நா.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

இந் விளையாட்டு நிகழ்வின் பிரதம விருந்தினராக ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அமைப்பாளர் திரு.சந்திரகுமார், கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண சுதேச சுகாதார அமைச்சின் இணைப்பு செயலாளர் பா.சிந்துஜன், முன்கல்வி உதவிப் பணிப்பாளர் கோ.தர்மபாலன், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா மாவட்ட முன்பள்ளி இணைப்பாளர் திருமதி அருள்வேல் நாயகி, உக்குளாங்குளம் சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு , திருக்கன்னியர்மட அருட்சகோதரி , கனரா முன்பள்ளி நிர்வாக தலைவர் ஆகியோரும் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவவர்கள் பெற்றோர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

விளையாட்டுபோட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் வீதியில் விபத்து : பொலிஸ் பொறுப்பதிகாரி அதிஸ்டவசமாக உயிர் தப்பினார்!!

 
மன்னார்- மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் 11 ஆம் கட்டை பகுதியில் இன்று புதன் கிழமை காலை 11.45 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் அடம்பன் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அதிஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதவாச்சி வீதியூடாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பொலிஸ் நிலையத்தை நோக்கி காரில் பயணித்துக்கொண்டிருந்த போதே முருங்கன் கட்டுக்கரைக்குளம் 11 ஆம் கட்டை பகுதியில் குறித்த கார் விபத்திற்குள்ளாகியுள்ளது.

அதி வேகமாக பயணித்த குறித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி முருங்கன் கட்டுக்கரைக்குளம் 11 ஆம் கட்டை பகுதியில் வீதிக்கு அருகில் நின்ற மரம் ஒன்றுடன் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இதன் போது குறித்த காரை செலுத்தி வந்த அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிறு காயங்களுடன் அதிஸ்டவசமாக உயிர் தப்பினார். எனினும் குறித்த கார் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

எனினும் சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் பொலிஸார் மற்றும் அடம்பன் பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.