பாகுபலி வில்லன் ராணா டகுபதிக்கு வலது கண்ணில் பார்வை இல்லை!!

பாகுபலி வில்லன் ராணா டகுபதிக்கு வலது கண்ணில் பார்வை இல்லை என்பதைக் கேட்டு பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாகுபலிக்காக பிரபாஸைப் போன்றே உடம்பை ஏற்றி முரட்டுத்தனமாகக் காட்சியளித்தார் ராணா. தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராணா, தனக்கு வலது கண்ணில் பார்வை இல்லை என்ற விடயத்தை வெளிப்படுத்தினார்.

தனக்கு பிறவியிலேயே கருவிழியில் குறைபாடு இருந்ததாகவும் 10 ஆண்டுகளுக்கு முன்பு கண் தானம் பெற்று அறுவை சிகிச்சை நடந்த போதும் தனக்கு பார்வை கிடைக்கவில்லை என்றும் ராணா கூறியுள்ளார்.

வலது கண் மூலம் நிறங்களை மட்டுமே பார்க்க முடியும், மற்றபடி எதுவும் தெரியாது எனவும் ராணா குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ”எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, நான் நலமாகவே உள்ளேன் என்பதையும் தயவு செய்து எழுதுங்கள்” என கூறியுள்ளார் ராணா.

இலங்கை அணியுடன் இணைந்து செயற்படக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது : அலன் டொனால்ட்!!

இலங்கை அணியுடன் இணைந்து செயற்படக் கிடைத்தமை மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சு ஆலோசகரான தென்னாபிரிக்காவின் அலன் டொனால்ட் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நேற்று (02.05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்ட தென் ஆபிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான அலன் டொனால்ட் தனது பொறுப்பை உத்தியோகப்பூர்வமாக ஏற்றார்.

மதுவை மணந்த மணமகன் : கடைசி நிமிடத்தில் குழம்பிய திருமணம்!!

தனது திருமணத்துக்கு போதையில் வந்த மணமகனை, கடைசி நிமிடத்தில் மணமகள் ஏற்க மறுத்த சம்பவம் பீஹாரில் இடம்பெற்றுள்ளது.

பித்து பாண்டே (24) என்பவர் தனது திருமணத்தன்று மது அருந்துவிட்டு வந்திருந்தார். மணமேடையில் அமர்ந்திருந்த அவர், மந்திரங்களைச் சொல்லும்போது நாக்குழறியதையும், எழுந்து நிற்கும்போது தள்ளாடியதையும், அவரிடமிருந்து மது வாசனை வீசியதையும் உணர்ந்த மணமகள் ராணி குமாரி, கடைசி நிமிடத்தில் அவரைத் திருமணம் செய்துகொள்ள மறுத்தார்.

ஏற்கனவே மதுவைத் திருமணம் செய்துகொண்டவரைத் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று ராணி குமாரி தெரிவித்துள்ளார்.

ஒரு தலைக்குப் பதிலாக ஐம்பது தலைகள் வேண்டும் : கொல்லப்பட்ட வீரரின் மகள் ஆவேசம்!!

தனது தந்தையின் தலைக்குப் பதிலாக பாகிஸ்தான் இராணுவத்தின் ஐம்பது தலைகள் வெட்டியெறியப்படவேண்டும் என, பாகிஸ்தானால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படைவீரரின் மகள் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் இராணுவத்தினரால் கடந்த திங்களன்று எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பிரேம் சாகர் மற்றும் பரம்ஜீத் சிங் ஆகிய இரண்டு வீரர்களும் தலை துண்டிக்கப்பட்டு, உடல் சிதைக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்தக் குரூரக் கொலையால், கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

எனது தந்தையின் தியாகத்துக்கு ஈடாக பாகிஸ்தானிய இராணுவத்தினர் ஐம்பது பேரின் தலைகளை இந்தியப் படை வெட்டியெறிய வேண்டும் என்று பிரேம் சாகரின் மகளான சரோஜ் என்பவர் கூறியுள்ளார்.

அதேவேளை இதுபோன்ற விடயங்களில் அரசு மெத்தனமாகச் செயற்படுவதாகவும், மனிதாபிமானமற்ற இந்த விடயங்களில் இந்தியாவும் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் எனவும், பொம்மைகள் போல் பார்த்துக்கொண்டிருந்தால் இதுபோன்ற பாதகச் செயல்களை பாகிஸ்தான் தொடர்ந்தும் நடத்திக்கொண்டேயிருக்கும் என்றும் சரோஜ் கூறியுள்ளார்.

5ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டம்!!

சயிட்டம் நிறுவனம் தொடர்பான பிரச்சினையை முன்னிலைப்படுத்தி எதிர்வரும் 5ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கையில் சுகாதார, கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளிலுள்ள தொழிற்சங்கங்களும் இணைந்துகொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மதுபோதையில் வரும் கணவர்களை அடிப்பதற்காக மணமகள்களுக்கு துடுப்புகளை வழங்கிய அமைச்சர்!!

இந்­தி­யாவின் அமைச்சர் ஒருவர் மது­போ­தையில் வீடு திரும்பும் கண­வர்­களை அடித்து துவைப்­ப­தற்­தற்­காக மண­ம­கள்­க­ளுக்கு பல­கை­யி­லான துடுப்­பு­களை வழங்­கி­யுள்ளார்.

மத்­திய பிர­தேச மாநி­லத்தின் சாகர் நகரில் அ­க் ஷய திரி­தி­யையை முன்­னிட்டு கடந்த சனிக்­கி­ழமை 700 ஜோடி­க­ளுக்கு ஒரே இடத்தில் திரு­மணம் நடை­பெற்­றது.

விம­ரி­சை­யாக நடை­பெற்ற இத்­ தி­ரு­ம­ணத்தில் ஆயி­ரக்­க­ணக்­கானோர் கலந்து கொண்­டனர். இத்­தி­ரு­ம­ணங்­களை மாநில கிரா­மப்­புற வளர்ச்சி அமைச்சர் கோபால் பார்­கவா நடத்தி வைத்தார்.

அப்­போது மண­ம­கள்கள் அனை­வ­ருக்கும் பல­கை­யி­லான பலகைத் துடுப்­பு­களை அமைச்சர் கோபால் பார்­கவா வழங்­கினார். பொது­வாக சலவை செய்­யப்­படும் ஆடை­களை அடித்துத் துவைப்­ப­தற்­காக பயன்­ப­டுத்­தப்­படும் துடுப்பு இது.

“குடித்­து­விட்டு வரும் கண­வனை இதனால் அடி­யுங்கள்” என அத்­து­டுப்பில் எழு­தப்­பட்டும் இருந்­தது. “கணவன் குடித்­து­விட்டு வந்தால் மர­ பேட்டால் அடிக்க வேண்டும் எனவும், இது­கு­றித்து காவல்­துறை வழக்குப் பதிவு செய்ய மாட்­டாது” எனவும் அமைச்சர் கோபால் பார்­கவா தெரி­வித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

மது­போ­தையில் வரும் கண­வர்­களை மண­ம­கள்கள் முதலில் பேசி திருத்த முயற்­சிக்க வேண்­டும்.

அதற்கு அவர்கள் செவி­ம­டுக்­கா­விட்டால் துடுப்­புகள் பேசட்டும். தமது கண­வர்கள் குடித்­து­விட்டு வந்தால் வன்­மு­றை­யாக நடந்­து­கொள்­கி­றார்கள் எனவும், தான் சேமித்த பணத்­தை­யெல்லாம் எடுத்­துக்­கொள்­கி­றார்கள் எனவும் பெண்கள் கூறு­கின்­றனர்.

பெண்­களை வன்­மு­றையில் ஈடு­படத் தூண்டும் நோக்கம் எனக்­கில்லை. வன்­மு­றை­களை தடுப்­ப­தற்­கா­கவே இத்­து­டுப்­புகள் வழங்­கப்­ப­டு­கின்­றன” என அமைச்சர் கோபால் பார்கவா தெரிவித்தார்.

புதிதாக திருமண மாகும் பெண்களுக்கு வழங்குவதற்காக சுமார் 10,000 துடுப்புகளுக்கு அவர் கட்டளை கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓய்வு இல்லா உழைப்பால் மரணிக்கும் ஜப்பானியர்கள்!!

ஓய்வில்லாமல் உழைக்கும் ஜப்பானின் மற்றொரு பக்கமாக, சில ஜப்பானியர்களின் மரணத்திற்கு காரணமே அவர்கள் அதிகமாக உழைப்பதுதான் என்று தெரியவந்துள்ளது.

வேலைப்பளு காரணமாக அதிகரிக்கும் மரணங்களை குறைப்பதற்கு, பணிநேரத்தை தாண்டி, ஒரு ஊழியர் அதிகபட்சம் ஒரு மாதத்தில் 100 மணிநேரம் மட்டுமே வேலைசெய்யலாம் என ஜப்பான் அரசாங்கம் சமீபத்தில் ஒரு திட்டத்தை வகுத்துள்ளது.

அதாவது, ஒரு மாதத்தில் மொத்த 720 மணிநேரத்தில், அலுவலக வேலை நேரம் 240 மணிநேரமாக இருந்தாலும் (30 நாட்கள் X 8 மணி நேரம்), அதிக நேர வேலையை சேர்த்து அதிகபட்சம் 340 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஓய்வில்லாமல் வேலை செய்து இறந்துபோனால் அந்த மரணங்களை ´கரோஷி´ (karoshi)என்று குறிப்பிடும் சொல்லாடல் ஜப்பானில் உள்ளது என்பது அந்த மரணங்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை விளக்குகிறது.

உலகின் அதிக ஆயுட்காலம் கொண்டவர்களாக உள்ள ஜப்பானியர்களில் சிலர் அதிக நேரம் வேலை செய்து இறந்துபோவதற்கான காரணங்கள், மற்றும் அங்கு வாழும் தமிழர்களின் நிலை குறித்து ஜப்பானில் வசிக்கும் தமிழர்களிடம் பிபிசி தமிழ் கேட்டறிந்தது.

கடந்த 14 ஆண்டுகளாக ஜப்பானில் வசித்துவரும் வேலூரை சேர்ந்த சதீஷ் டோக்கியோவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வர்த்தக நடவடிக்கைக்கான மேலாளராக பணிபுரிகிறார்.

பிபிசி தமிழிடம் வேலைச்சுமை பற்றி பேசிய சதீஷ், ´´ஜப்பானியர்களுக்கு அதிக நேரம் வேலை செய்வது மிகவும் சாதாரணமான விஷயம். அலுவலகத்தில் அதிக நேரம் இருப்பது, கடைசி ரயிலில் வீடு வந்து சேர்வது போன்றவை வாடிக்கையான ஒன்றுதான். ஜப்பானியர்களோடு சமமாக வேலைசெய்வதற்கு தமிழர்கள் படும்பாடு சொல்லமுடியாதது,´´ என்கிறார்.

´´என்னை போன்ற பெயர் பெற்ற நிறுவனங்களில் மேலிட பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு பிரச்சனை குறைவு. ஒப்பந்த முறையில் ஜப்பானுக்கு வரும் நம் நாட்டினர் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஜப்பானியர்கள் கடும் உழைப்பாளிகளாக இருப்பதால், வீடு திரும்பாமல் மூன்று நாள் தொடர்ந்து வேலை செய்யும் நிலைகூட உண்டு என்கிறார்.

தனிப்பட்ட முறையில் பொறுப்புகள், வேலை திட்டங்கள் என்பது குறைவு. பெரும்பாலும், எல்லா நிறுவனங்களிலும் வேலை என்பது குழு வேலையாகத்தான் இருக்கும். சிறு மற்றும் பெரு நிறுவனங்களில் குழுக்களை கண்காணிக்க குழு மேலாளர் இருப்பார். அதிக வேலை காரணமாக எந்தக் குழு அல்லது குழு உறுப்பினர் சிரமப்படுகிறாரோ, அவரை எவ்வாறு சரிபடுத்துவது என்று திட்டம் வகுப்பார் என்றார்.

குழு மேலாளர்கள் மன அழுத்தத்தில் இருந்து பணியாளர்களை விடுவிப்பது தொடர்பான பயிற்சியை பெற்றவராகவும் தொடர் பயிற்சிகளையும் அவர் மேற்கொள்வர் என்கிறார் சதீஷ்.

அலுவலகக் கேளிக்கை விருந்துகள் அடிக்கடி ஏற்பாடு செய்யப்படும். இந்த விருந்துகளில் எவ்வாறு வேலைதிட்டங்களை விரைவில் முடிப்பது போன்றவை விவாதிக்கப்படும், என்கிறார் அவர்.

சமீபத்தில், ஜப்பானில் அதிக வேலை நேரம் காரணமாக ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றது என சர்வதேச தொழிலாளர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவித்துள்ளது.

அதே அறிக்கையில் சமீபத்தில் இறந்துபோன ஒருவரின் நிலையை விளக்கியது. 2015ல் உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 34 வயதான நபர் ஒருவர், மாரடைப்பு காரணமாக இறந்தார். அவர் ஒரு வாரத்தில் உள்ள 168 மணிநேரத்தில், 110 மணி நேரம் வேலை செய்திருக்கிறார், அதனால் அவர் இறந்துபோனார் என்று செய்திகள் வெளியாகின. இவரது மரணத்தை ஜப்பானின் தொழிலாளர் துறையும் வேலை காரணமாக மரணம் என்று அங்கீகரித்துள்ளது.

அதே சமயம், ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானில் சுமார் 2,000 நபர்கள் தற்கொலைகள் செய்துகொள்வதற்கு அவர்கள் செய்யும் வேலைதான் காரணம் என்று ஜப்பான் அரசின் சுகாதாரம் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சகம் வெளியிட்ட வெள்ளை அறிக்கை கண்டறிந்துள்ளது (2015) குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர் சட்டப்படி, இந்தியாவில் உள்ளது போல எல்லா நிறுவனங்களிலும் வேலை நேரம் என்பது 8 மணி நேரம்தான். இதைத் தாண்டி அதிக நேரம் வேலை செய்வதற்கு எவ்வாறு ஊழியர்கள் பணிக்கப்படுகிறார்கள் என்று ஜப்பானில் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை செய்யும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சிவானந்தத்திடம் கேட்டோம்.

பெரும்பாலும் இங்கு வேலைக்கு அமர்த்துவதற்கு முன்பே, பணிக்கான இலக்குகள் தீர்மானிக்கப்படும். தகவல் தொழில்நுட்ப துறையில் சிலசமயம் வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப, அவர்களின் தேவையை பொறுத்து ப்ராஜெக்ட் உடனடியாக செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்,´´ என அதிக நேரம் வேலை செய்வதற்கான காரணங்களை கூறுகிறார் சிவானந்தம்.

இந்தியாவில் இருந்து ஜப்பானிற்கு வேலைக்கு வந்த சில தகவல் தொழில்நுட்ப துறை ஊழியர்கள், இரண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து வேலை பார்த்ததால், உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டு, தங்களது மேலாளர்களிடம் பேசி மீண்டும் இந்தியாவுக்கே திரும்பி சென்ற சம்பவங்கள் நடந்துள்ளன என்றார் சிவானந்தம்.

ஜப்பானில் குடும்பத்துடன் வசிக்கும் நபர்கள் அவர்களின் நிர்வாகத்திடம் பேசி,தங்களது சம்பளத்தை பெற்று வேலையை விட்டு நின்றுவிட்ட கதைகளும் உண்டு என்கிறார் அவர்.

இதற்கிடையில், அதிக வேலை நேரத்தால், மனம் மற்றும் உடல் சோர்வை குறைக்க, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எல்லா அலுவலகங்களிலும் வேலைநேரத்திற்கு முன்னதாகவே கிளம்ப அனுமதிக்கப்படும். சில அலுவலகங்களில் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகள் என இரண்டு நாட்கள் அளிக்கப்படுகின்றன என்கிறார் சிவானந்தம்.

களைப்பைக் குறைக்க தமிழர்களுக்கு இருப்பது அரசு அங்கீகரிக்கப்பட்ட தமிழ்ச் சங்கத்தின் மூலம் நடத்தப்படும் பொங்கல் விழா, உணவு மற்றும் தமிழர் பாரம்பரிய விளையாட்டு விழா போன்றவை என்கிறார் ஜப்பானிய தமிழர்கள்.

தமிழர்கள் ஒன்று கூடி பேசி, சிரித்து பேசி, குழந்தைகள் விளையாடுவது, பெண்களின் வில்லுப்பாட்டு என கலாசார நிகழ்வுகள் ஊருக்கு போனது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக இர

கூகுள் தலைமை செயல் அதிகாரியின் வருமானம் 1304 கோடி!!

கூகுள் இணையதள நிறுவனத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வருபவர் சுந்தர் பிச்சை (வயது 44). தமிழரான இவர் கடந்த 2015ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு உயர்ந்தார்.

இவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சம்பளம், 6½ லட்சம் டாலர் (சுமார் ரூ.4 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம்). ஆனால் இழப்பீடு என்ற வகையில் இவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகை கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,300 கோடி). 2015-ம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட தொகையை விட இது இரு மடங்கு ஆகும். மேலும் நாள் ஒன்றிற்கு இந்திய மதிப்பில் ரூ.3.52 கோடி ஊதியமாக அவர் பெற்றுள்ளார்.

கூகிளில் தலைமை பொறுப்புக்கு வந்த பின்னர் சுந்தர் பிச்சை, அந்த நிறுவனத்தின் வருமானத்தை பெருக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன. விளம்பர வருவாயும் அதிகளவு குவிந்துள்ளது.
கடந்த ஆண்டு சுந்தர் பிச்சை தலைமையின்கீழ் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன் உள்ளிட்டவை லாபத்தை வாரி வழங்கி உள்ளன. பிற வருமானங்களும் அதிகரித்துள்ளனவாம்.

உலகிலேயே வயதான 146 வயது முதியவர் மரணம்!!

உலகிலேயே இதுவரை வாழ்ந்தவர்களில் மிகவும் அதிக வயதானவராக கருதப்பட்ட 146 வயது சோடிமெட்ஜோ மத்திய ஜாவாவில் உள்ள தனது கிராமத்தில் மரணமடைந்தார்.

சோடிமெட்ஜோ என்ற பெயர் கொண்ட, ம்பா கோட்டோ (தாத்தா கோட்டோ) 1870 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தவர் என்று ஆவணங்கள் சான்றளிக்கின்றன.
ஆனால், இந்தோனேசியாவில் 1900ஆம் ஆண்டில்தான் பிறப்புப் பதிவு நடைமுறை தொடங்கப்பட்டதால், அதற்கு முந்தைய ஆவணங்களில் தவறுகளும் இருக்கலாம்.

இருந்தபோதிலும், சோடிமெட்ஜோ அளித்த ஆவணங்களின் அடிப்படையில் அவரது வயது 146 என்பது உண்மை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த முதியவரிடம் எடுத்த பேட்டியின்போது அவர் கூறிய தகவல்களின் அடிப்படையிலும் அவரது வயது 146 என்பது நம்பக்கூடியதுதான்.

உடல்நிலை கோளாறினால், ஏப்ரல் 12ஆம் திகதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோடிமெட்ஜோ, ஆறு நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு அனுப்பச் சொல்லி வற்புறுத்தினாராம்.

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய பிறகு, சில ஸ்பூன்கள் கஞ்சியையும், சிறிதளவு பானங்களையுமே அவர் குடித்ததாக சோடிமெட்ஜோவின் பேரன் சுயாண்டோ தெரிவித்தார்.

அதுவும் சில நாட்கள் வரையில் தான் நீடித்தது, பிறகு அவர் சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும் மறுத்துவிட்டார், இறுதியில் அவரது மூச்சுவிடுவதையும் நிறுத்திவிட்டார்.

கடந்த ஆண்டு அவர் அளித்த பேட்டியின்போது, அவரது நீண்ட ஆயுளின் ரகசியம் குறித்த கேள்விக்கு அவரது பதில் என்ன தெரியுமா? பொறுமைதான் அனைத்திற்கும் காரணம் என்று கூறிய தாத்தா கோட்டோ , “என் மீது அன்பு செலுத்தவும், என்னைப் பார்த்துக் கொள்ளவும் அன்பானவர்கள் என்னுடன் இருந்தார்கள்” என்று சொன்னார்.

தனது இறுதிக்காலம் வரை தொடர்ந்து புகைபிடிப்பவராக இருந்த 146 வயது சோடிமெட்ஜோவுக்கு பத்து உடன்பிறப்புக்கள். நான்கு மனைவிகள், பல குழந்தைகள் என பெரிய குடும்பியாகவே அவர் வாழ்ந்திருக்கிறார்.

கிராமத்தில் உள்ளூர் கதாநாயகராக போற்றப்பட்ட சோடிமெட்ஜோ, ஜப்பான் மற்றும் டச்சு குடியேற்றத்திற்கு எதிரான போர் குறித்த சுவராசியமான கதைகளை சொல்வாராம்.

தனக்காக பல ஆண்டுகளுக்கு முன்பே உள்ளூர் மயானத்தில் அவரே வாங்கி வைத்திருந்த இடத்தில் திங்கட்கிழமை காலை அவர் புதைக்கப்பட்டதாக, முதியவரின் பேரன் சுயாண்டோ தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக தன்னுடைய வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு கல்லில் அமர்வதை பழக்கமாக கொண்டிருந்த சோடிமெட்ஜோவின் கல்லறை மேல், இப்போது அந்தக் கல் அமர்ந்திருக்கிறது.

பக்கசார்பற்ற முறையில் சரிபார்க்கப்பட்டால், சதம் அடித்து 122 வயதில் இறந்த பிரான்சு நாட்டின் ஜீன் கால்மெண்ட்டைக் காட்டிலும், தாத்தா கோட்டோ முதியவர் என்று உறுதியாகும்.
பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் உலகில் நீண்ட காலம் வாழ்ந்த மனிதனாக இதுவரை பிரான்சின் ஜீன் கால்மெண்ட்தான் கருதப்படுகிறார்.

180 நாடுகளில் இலங்கை 141 வது இடத்தில்!!

ஊழலுக்கு எதிராக குரல் எழுப்புவதில் முன்னிற்கும் ஊடகவியலாளர்கள் உலகம் பூராகவும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் தடைகளையும் எதிர்கொள்வதாக ட்ரான்ஸ்பெரன்சி இணடர்நெசனல் அமைப்பு கூறியுள்ளது.

இந்நிலையில் உலக ஊடக சுதந்திரத்தின் அடிப்படையில் இலங்கையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவுன், 180 நாடுகளில் இலங்கை 141 வது இடத்தில் உள்ளதாகவும் அந்த அமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று(03) உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு ட்ரான்ஸ்பெரன்சி இணடர்நெசனல் ஶ்ரீலங்கா இந்த அறிக்கையை வௌியிட்டுள்ளது.

ஒவ்வொரு நாடுகளிலும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு, சட்ட அமைப்பு மற்றும் ஊடக சுதந்திரம் என்பவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியாவில் அரிசி ஆலையில் 160 நெல் மூட்டைகள் மாயம் : சந்தேகத்தில் இருவர் கைது!!

வவுனியாவிலுள்ள அரிசி ஆலை ஒன்றில் 160 நெல் மூட்டைகள் திருட்டு போயுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியிலுள்ள அரிசி ஆலை ஒன்றில் கடந்த மாதம் 23 திகதியிலிருந்து 30ஆம் திகதிக்குட்பட்ட காலப்பகுதியில் 160 நெல் மூட்டைகளும் 6 குறுணல் மூட்டைகளும் திருட்டுப் போயுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர் நேற்று (02.05) வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டார்.

இதையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் அரிசி ஆலையில் கடமையாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தரைக் கைது செய்து மேற்கொண்ட விசாரணைகளினபோது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து குறிப்பிட்ட சில நெல் மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை கடற்பரப்பில் பாரியளவிலான திமிங்கலம் மீட்பு!!

 
மாத்தறை – மணல்கிராமம் (வெலிகம), கம்புருகமுவ கடல் பகுதியில் பாரிய அளவினைக் கொண்ட திமிங்கலம் ஒன்றின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

சுமார் 50 அடி அளவு நீளமான இந்த திமிங்கலம் நேற்று இரவு கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திமிங்கலத்தின் உடலில் பல இடங்களில் பெரிய அளவிலான வெட்டுக்காயங்கள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பெரிய படகு ஒன்றுடன் மோதுண்டமையினால் காயமடைந்து இந்த திமிங்கலம் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

மிரிஸ்ஸ வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் குறித்த திமிங்கலத்தை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஆற்றில் மூழ்கி இளைஞர் ஒருவர் பலி!!

 
திம்புள்ள பத்ததனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் சவுத் மடக்கும்புர ஆற்றில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று(01) மதியம் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர். திம்புள்ள மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதான தியாகராஜா வினோதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் தனது 3 நண்பர்களுடன் குளிக்கச் சென்றிருந்த போது சுழியொன்றில் அகப்பட்டு நீரில் மூழ்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இளைஞரை நண்பர்கள் காப்பாற்ற முயற்சித்த போதும் அது பயனளிக்காத நிலையில் மேற்படி இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, இன்று காலை பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடத்தி இளைஞனின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இதேவேளை, மரண விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மின்சாரத்தை சேமிப்போருக்கு விசேட சலுகைகள்!!

மின்சாரத்தை சேமிப்போருக்கு விசேட சலுகைகளை வழங்குவதற்கு தேவையான திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டிருப்பதாக மின்சக்தி மற்றும் நிலைபேறான எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும், காற்று சீராக்கி இயந்திரத்தை பயன்படுத்துவதற்கான புதிய சுற்றுநிரூபம் கொண்டுவரப்படும். மின்சாரத்தை சேமிக்கும் மூலோபாயமாக இந்த புதிய விதிகள் கொண்டுவரப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, சூரிய எரி சக்தி பெற்றுக்கொடுப்பதற்கான புதிய சுற்றுநிரூபமும் கொண்டுவரப்படவுள்ளது.

சூரிய எரிசக்தியை பெற்றுக்கொள்வதற்கு 40 சுற்றளவு அடிக்கு மேற்பட்ட கூரையைக்கொண்ட வீடொன்றே தேவையென்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் 68வது நாளாக இடம்பெறும் போராட்டம்!!

 
வவுனியாவில் கடந்த 68 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (02.05.2017) 68வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

தீர்வு கிடைக்கும் வரை சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்கள் மூன்றாவது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தில்!!

 
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய புதிய அதிபருக்கு எதிராக மூன்றாவது நாளாக இன்று மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 4 வருடங்களுக்கு மேலாக செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய அதிபர் செ.தர்மரணட்னத்தின் காலத்தில் பாடசாலை கல்வி மற்றும் பௌதீக ரீதியில் அபிவிருத்தி அடைந்துள்ள நிலையில், புதிய அதிபராக நித்தியானந்தம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஏற்கனவே பதவி வகித்த பாடசாலைகளில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் அதனால் இவ் அதிபர் நியமனத்தை எதிர்ப்பதாகவும் தெரிவித்து மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பாடசாலைக்கு தரம் 1 அதிபர் நியமிக்கப்படவேண்டும் எனவும் அதற்கான தகுதி தனக்குள்ள போதிலும் நியமனம் வழங்கப்படவில்லை என தெரிவித்து செட்டிகுளம் பிரதேசத்தினை சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார். அதன் அடிப்படையிலேயே குறித்த அதிபர் நியமனம் தற்போது இடம்பெற்றுள்ளது.

இருப்பினும், இரண்டாம் தவணை ஆரம்பித்த நாளில் இருந்து மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாது பாடசாலை முன்பாக பெற்றோர், பழைய மாணவர்களுடன் இணைந்து பேராடி வருகின்றனர். தமக்கு பழைய அதிபர் அல்லது வேறு ஒரு அதிபரை நியமிக்குமாறும் தற்போது நியமிக்கப்பட்டவர் தமக்கு வேண்டாம் எனத் தெரிவித்தே குறித்த போராட்டத்தில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவாக இன்று காலை 11 மணிவரை செட்டிகுளம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் பலவும் பூட்டப்பட்டு தமது ஆதரவை வழங்கியிருந்தன.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா ஆகியோர் நேரில் சென்று சந்தித்ததுடன், இது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் போராட்டத்தை கைவிட்டு மாணவர்களை கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுமாறும் கோரினர். ஆனால் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.