பாலியல் கொடுமைகள் காரணமாக, அச்சம் அடைந்து கேரள முதல்வருக்கு கண்ணீர் கடிதம் எழுதிய சிறுமி!!

கேரளாவில் அதிகரித்து வரும் பாலியல் கொடுமைகள் காரணமாக, அச்சம் அடைந்த பன்னிரெண்டு வயது பள்ளிச் சிறுமி ஒருவர், அம்மாநில முதல்வருக்குப் பாதுகாப்பு கோரி கடிதம் எழுதி இருக்கிறார்.

மிகவும் உருக்கமும் அச்சமும் நிறைந்த வரிகளில் எழுதப்பட்ட அந்தக் கடிதம், தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும் கேரளாவில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு இறுதியில், கேன்சரால் பாதிக்கப்பட்ட 90 வயது பெண்மணியைப் பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் கொடுமை செய்தது அதிர்வு அலையை உண்டாக்கியது.

கடந்த மாதம், திரைப்பட நடிகை பாவனாவை காரில் கடத்திச் சென்ற ஒரு கும்பல், பாலியல் தொந்தரவு செய்தது.

ராபின் வடக்கஞ்சேரி என்கிற பாதிரியார், பதினேழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, ஒரு குழந்தைக்கு தாயாக்கிவிட்டார். அவரை போலீஸார் பிப்ரவரி இறுதியில் கைது செய்தனர்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கொல்லம் மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவர், வீட்டில் தூக்கில் தொங்கினார்.

அடுத்த சில வாரங்களில் அதே இடத்தில் அவரது ஒன்பது வயது சகோதரியும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் கேரள சட்டமன்றத்தில் எதிரொலித்தது.

எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைக் கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து, முதல்வர் பினராயி விஜயன், குற்றப் புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட்டார்.

அதில், சகோதரிகள் இருவருமே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதத்தில், கொல்லம் மாவட்டம் குண்டாரா என்ற இடத்தில் பத்து வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டார்.

‘எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. வாழப் பிடிக்காததால் சாகிறேன்’ எனக் கடிதம் எழுதப்பட்டு இருந்தது. இதனால், அந்த வழக்கைத் தற்கொலை என போலீஸார் முடித்துவிட்டனர்.

ஆனால், அந்தச் சிறுமியின் உடலை ஆய்வுசெய்த மருத்துவர்கள், உடலில் இருபது காயங்கள் இருந்ததையும், சிறுமி இறப்பதற்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதையும் கண்டுபிடித்தனர்.

இந்த விவகாரம் கேரளாவில் சர்ச்சையைக் கிளப்பியது. உயர் அதிகாரிகள் தலையிட்டு விசாரித்தபோது, அந்த தற்கொலைக் கடிதம், சிறுமியின் பள்ளி நோட்டுப் புத்தகத்தில் இருந்த கையெழுத்துடன் ஒத்துப்போகவில்லை.

அதனால், இந்த விவகாரத்தில் கவனக்குறைவுடன் செயல்பட்டதற்காக சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, எஸ்.பி தலைமையில் தீவிர விசாரணை நடந்தது.

அதில், அந்தச் சிறுமியின் தாத்தாவே பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து நடந்த விசாரணையில், அந்தப் பகுதியில் உள்ள பல குழந்தைகளை பாலியல் கொடுமை செய்தது வெளியாகி அதிரவைத்தது.

அந்தக் கிழட்டு மிருகத்தையும் அவருக்குத் துணையாக இருந்த மனைவியையும் கைது செய்தனர்.

இப்படி நாள்தோறும் நடக்கும் சம்பவங்கள், கேரளாவில் பெண்களிடமும் சிறுமிகளிடமும் பீதியைக் கிளப்பி உள்ளது.

பள்ளி, கல்லூரிக்குச் சென்று வீடு திரும்பும் வரை பெண்ணைப் பெற்றவர்கள் பதைபதைத்துக் கிடக்கிறார்கள்.

பொது இடங்களுக்குச் செல்லவே சிறுமிகள் அஞ்சுகிறார்கள். இந்த நிலையில்தான் ஏழாம் வகுப்புப் படிக்கும் மாணவியான அனந்தரா, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுது உள்ளார்.

உணர்ச்சிக் கொந்தளிப்புடன் எழுதப்பட்ட அந்தக் கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்தக் கடிதத்தில்…

‘கேரளாவில் தற்போது நடக்கும் சம்பவங்கள் எனக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

என்னைச் சுற்றிலும் ஏதேதோ நடக்கிறது. அவை பீதியையும் வேதனையும் ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.

என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. என்னைச் சுற்றிலும் இருக்கும் சமூகத்தில் நான் பய உணர்வுடனேயே வாழவேண்டிய நிலையில் இருக்கிறேன்.

எனது வயதுடைய சிறுமிகளுடன் நிம்மதியாக விளையாட முடியவில்லை. நான் வழக்கமாக விரும்பிச் செல்லும் இடங்களுக்குச் செல்ல முடியவில்லை.

பள்ளிக்குச் செல்வதிலும் நிம்மதி இருக்கவில்லை. பயத்துடனேயே செல்லும் மனநிலையில் இருக்கிறேன்.

இப்போது நிலவும் சூழல் காரணமாக, எனது குழந்தைமையை இந்தச் சமூகம் திருடிக்கொள்வதாகவே நான் நினைக்கிறேன்.

பல இரவுகளில் என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. எப்போதும் மன அழுத்தத்துடனேயே வாழவேண்டிய நிலையில் இருக்கிறேன். எனது சுதந்திரம் முழுமையாகப் பறிபோய்விட்டதாகவே நினைக்கிறேன்.

கொல்லம் மாவட்டம், வாலையாறு பகுதியில் கீர்த்திகா, சரண்யா என்ற சகோதரிகள் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டனர். அதில் மூத்தவளான கீர்த்திகாவுக்கு எனது வயதுதான்.

என் வயதில் உள்ள ஒரு சிறுமிக்கு நேர்ந்த அவலத்தை நினைத்துப் பல இரவுகள் வேதனையில் தனிமையில் அழுது இருக்கிறேன்.

இப்படியான சோகத்துக்கு மத்தியில் என்னால் எப்படி நிம்மதியாகத் தூங்க முடியும்?

சம வயது உள்ள ஒரு சிறுமிக்கு நேர்ந்த கொடூரம், எனக்கும் நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது? குண்டாராவில் ஒரு சிறுமிக்கு நேர்ந்த கொடுமை உங்களுக்குத் தெரியும்தானே?

ஒரு தாத்தாவால் தனது பேத்திக்கு இதுபோன்ற கொடுமையைச் செய்ய எப்படி மனம் வருகிறது? இப்படி ஒரு செய்தியைக் கேள்விப்பட்டதும் நம்பவே முடியவில்லை.

இப்படி எல்லாம்கூடவா நடக்கும் முதல்வர் அவர்களே? இந்தச் சமூகம் அந்த அளவுக்குக் கொடூரமானதாகவா மாறிவிட்டதா?

நான் உங்களிடம் வேண்டி விரும்பிக் கேட்பதெல்லாம், எனக்குச் சுதந்திரமாக இருக்கும் உரிமையைப் பெற்றுக்கொடுங்கள் என்பதுதான்.

நான் எப்போதும் போல சாதாரணமாக வாழ வேண்டும். பயந்துகொண்டே இருக்கக் கூடாது.

சக சிறுமிகளுடன் மகிழ்ச்சியாக விளையாடி, ஓய்வான நேரத்தைப் பிறருடன் சேர்ந்து சந்தோசமாக செலவிடும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

எனது வயதில் எனக்குக் கிடைக்க வேண்டிய சந்தோஷத்தை யாருக்காகவும் எதற்காகவும் இழக்கக் கூடாது.

அதற்கான உத்திரவாதம் கிடைக்க வேண்டுமானால், குழந்தைகளிடம் வரம்பு மீறிச் செயல்படுபவர்களுக்கு நீங்கள் மிகக் கடுமையான தண்டனைக் கொடுக்க வேண்டும்.

அதற்கு ஏற்ற வகையில் சட்டம் இயற்றுங்கள். அப்படிச் செய்தால் மட்டுமே, என்னைப் போன்ற சிறுமிகள் சுதந்திரத்துடன் எங்களின் வயதுக்கான மகிழ்ச்சியைப் பெறமுடியும்.

எங்களின் கனவுகள் நினைவாக்க முதல்வராகிய உங்களால் மட்டுமே முடியும்.

எங்கள் நலனைப் பாதுகாக்க நீங்கள் மனதுவைப்பீர்களா முதல்வர் சார்?’ என உருக்கமாகக் கடிதத்தை முடித்துள்ளார், சிறுமி அனந்தரா.

இது கேரளாவுக்கு மட்டுமல்ல,ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எழுதப்பட்ட கடிதம் என்பதில் சந்தேகமில்லை.

-விகடன்-

செந்திலின் பிறந்தநாளை வாழைப்பழ கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழுவினர்!!

தானா சேர்ந்த கூட்டம் படப்பிடிப்பின் போது, நகைச்சுவை நடிகர் செந்திலின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் படக்குழுவினர்.

சிங்கம் 3 படத்தைத் தொடர்ந்து சூர்யா தற்போது விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் உருவாகும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆகின்றார். நேற்று (23) செந்திலின் 66 ஆவது பிறந்தநாள்.

இதனைக் கொண்டாட படக்குழுவினர், செந்திலின் பிரபல வாழைப்பழக் காமடியை நினைவுகூரும் விதமாக இரண்டு வாழைப்பழங்கள் இருப்பதைப்போன்று கேக் ஒன்றை வரவழைத்திருந்தனர்.

செந்தில் தனது பிறந்தநாளை வாழைப்பழ கேக் வெட்டிக் கொண்டாடினார்.

சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் : பாஹுபலிக்கு தடை?

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பாஹுபலி 2 திரைப்படத்தை வெளியிடத் தடை கோரி கர்னாடக இயக்கம் ஒன்று போராட்டத்தில் இறங்கியுள்ளது.

படத்தில் கட்டப்பா என்ற வேடமேற்றிருக்கும் சத்யராஜ், கன்னடர்களை இழிவாகப் பேசியற்கு மன்னிப்புக் கோரி கடிதம் கொடுத்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவதாகவும் கர்னாடக ரக்ஷன வேதிகே என்ற அந்த அமைப்பு கூறியுள்ளது.

பாஹுபலி 2வின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. இதை, கர்னாடகாவில் உள்ள திரையரங்கு ஒன்றும் வெளியிட முயற்சித்தது. அப்போது அங்கு வந்த மேற்படி அமைப்பின் உறுப்பினர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

காவிரிப் பிரச்சினையில் கன்னடாவை கன்னாபின்னாவென்று திட்டிய சத்யராஜ் நடித்திருக்கும் திரைப்படத்தை கர்னாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். தம்மைத் தரக் குறைவாகப் பேசிய சத்யராஜ், தனது செயலுக்கு மன்னிப்புக் கோரி கடிதம் எழுதித் தந்தாலன்றி படத்தை வெளியிடவே முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அந்த இடத்துக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டபோதும், போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் பொலிஸாரால் எதுவும் செய்ய முடியாமல் போனது. இதையடுத்து பாஹுபலி 2 முன்னோட்டத்தைத் திரையிடுவதை குறித்த திரையரங்க உரிமையாளர் ஒத்திவைத்தார். இதையடுத்து கர்நாடகாவில் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட மறுத்த கர்நாடகத்தை கண்டித்து தமிழ் சினிமாத் துறையினர் ஒன்றுகூடி ஒரு நாள் போராட்டம் நடத்தினர். இதில், சத்யராஜ் கர்னாடகா பற்றி கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்திருந்தார். எனினும், இச்சம்பவம் இடம்பெற்றது 2008ஆம் ஆண்டு.

பாஹுபலி முதலாவது பாகம் 2015ஆம் ஆண்டு வெளியானபோது சத்யராஜ் குறித்த சர்ச்சை எதுவும் எழுந்திருக்கவில்லை. இந்நிலையில், அரசியல் லாபம் தேட முயலும் சிலரே இப்போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், கர்னாடகாவில் பாஹுபலி 2 படத்தை எளிதாக வெளியிட்டுவிடுவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாகவே தெரியவருகிறது.

பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!!

நடுவானில் பறவை மோதியதால், நிலை தடுமாறிய விமானம் விபத்திலிருந்து தப்புவதற்காக அவசரமாக தரை இறக்கப்பட்ட சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், அகமதாபாத்திலிருந்து அமெரிக்கா பயணித்துள்ள நிலையில், நடுவானில் பறவை மோதியதால், அவசரமாக லண்டன் ஹத்ரோவ் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

மேலும் குறித்த விமானமானது 230 பயணிகளுடன் லண்டன் வழியாகச் பயணித்துள்ள நிலையில், நடுவானில் விமானத்தின் முன்பகுதியில் பறவை தாக்கியதால், விமானத்தின் ராடார் செயலிழக்கவே, விமானம் விபத்துக்கள் எதுவுமின்றி பாதுகாப்பாக லண்டன் ஹத்ரோவ் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரலாறு காணாத வெப்பம் : எச்சரிக்கைவிடுத்துள்ள உலக வானிலை!!

வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு தீவிர தட்பவெப்ப நிலை நீடிக்கும் என்று உலக வானிலை ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளது.

கடல் நீர்மட்டம் இதுவரையில்லாத அளவு அதிகரித்துள்ளது, கடல் பனிப்பாறை 40 இலட்சம் சதுர கி.மீ பரப்பளவுக்கு உருகிக்கரைந்துள்ளது.

மேலும், 2017 இல் வலுவான எல் நினோ விளைவு இல்லை என்றாலும் உலகில் ஏற்படும் மாற்றங்கள் வானிலை அமைப்பின் செயல்பாடுகள் புரிந்து கொள்வதற்கு சவாலாக உள்ளது.

இது பற்றிய ஆய்வை கூட செய்ய முடியாத ஒரு நிலையில் உள்ளோம், விளைவுகளை கணிக்க முடியாத பிரதேசத்தில் இருக்கிறோம் என வெப்ப நிலை குறித்து உலக வானிலை எச்சரித்துள்ளது.

அண்மையில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் இவ்வருடம் 50 சதவீதத்தால் அதிகரிக்குமென, அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

எல்நினோ எனப்படும் காலநிலை மாற்றத்தால், மழை காலத்தில் அளவுக்கு அதிகமான மழை பொழிவதுடன், கோடை காலத்தில் அதிகளவான வெப்ப தாக்கம் இருக்குமெனவும், அதனால் அளவுகடந்த வறட்சி, மழை வெள்ளம் ஏற்படுவதற்கு சாதகமாக அமையுமென அவுஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தண்டவாளத்தில் தலையை வைத்து நபரொருவர் தற்கொலை!!

மருதானையிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்ற ரயிலுக்கு முன்னால் தலையை வைத்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

குறித்த நபரை் கல்கிசை ரயில் நிலையத்துக்கு அருகிலேயே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இதேவேளை தற்கொலை செய்துக்கொண்டவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லையெனவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எச்சில் துப்பினால் 5000 அபராதம்!!

பொது இடங்களில் எச்சில் துப்பியோ அல்லது குப்பைகள் கொட்டியோ அசுத்தம் செய்தால் ரூ.5000 அபதாரம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என உத்திரகாண்ட் அரசாங்கம் எச்சரித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் உத்திரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. மாநில முதல்வராக திரிவேந்திரசிங் ரவாத் பதவியேற்றுள்ளார்.

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் வகையில் தலைநகர் டேராடூனில் பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்களுக்கு அபதாரமாக ரூ 5000 அல்லது 6 மாதம் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, சுகாதார ஆய்வாளர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டே இருப்பார்கள்.

யாராவது அசுத்தம் செய்பவர்கள் தென்பட்டால் அவர்களிடம் இருந்து அந்த இடத்திலேயே ரூ 5000 வரை வசூலிக்கப்படும் அல்லது சிறை தண்டனை வழங்கப்படும்.

தொடர்ந்து அசுத்தம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொலைக்காட்சி விவாதத்தில் கடுப்பாகிய தீபா : பாதியில் வௌியேறினார்!!

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆர்கே நகர் தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்று நடத்திய நேர்பட பேசு என்ற விவாத நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார். இதில் அதிமுக அம்மா அணியை சேர்ந்த செல்லூர் ராஜூவும் கலந்து கொண்டார்.

இந்த விவாதத்தில் கலந்து கொண்ட தீபா செல்லூர் ராஜூவின் தனிநபர் தாக்குதல் விமர்சனத்தால் பாதியிலேயே கோபித்துக்கொண்டு வெளியேறினார். ஜெ.தீபா தனது தி.நகர் வீட்டிலிருந்து நேரலையில் கலந்துகொண்டார்.

இந்த விவாதத்தின் போது தீபாவின் கணவர் மாதவன் அவருக்கு எதிராக திடீரென பேட்டியளித்து தனிக்கட்சி தொடங்கப்போவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த தீபா, தனது கணவர் மாதவனை சசிகலா அணியினர் பின்னால் இருந்து, அவரது மனதை மாற்றி இயக்குவதாக தெரிவித்தார்.

இதனை அதிமுக அம்மா அணியை சேர்ந்த செல்லூர் ராஜூ மறுத்தார். மேலும் தீபாவை தங்கச்சி முதல்ல வீட்டுக்காரரை திருத்திட்டுவாம்மா என கூறியதும் ஆவேசமடைந்த தீபா, தேவையில்லாத விமர்சனங்கள், வார்த்தைகள் வருவதால் நான் இத்துடன் விலகுகிறேன் என கோபித்துக்கொண்டு விவாதத்தில் இருந்து வெளியேறினார்.

நிகழ்ச்சியில் தீபா பேச ஆரம்பித்த தொடக்கத்தில் இருந்தே செல்லூர் ராஜூ அவரை பேசவிடாமல் குறுக்கீடு செய்து கொண்டே இருந்தார். நிகழ்ச்சி தொகுப்பாளர் குறுக்கீடு செய்ய வேண்டாம், அவரை பேச அனுமதிக்க வேண்டும், பின்னர் உங்கள் மறுப்பை தெரிவியுங்கள் என செல்லூர் ராஜுவை பலமுறை அறிவுறுத்தியும் அவர் தொடர்ந்து தீபாவை பேச விடாமல் குறுக்கீடு செய்துகொண்டே இருந்தார்.

வவுனியாவில் 29வது நாளாக தொடரும் போராட்டம் : தீர்வு எப்போது?

 
வவுனியாவில் கடந்த 29 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே இன்று (24.03.2017) 29வது நாளாக தமது சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் காசநோய்க்கு எதிரான வழிப்புணர்வுப் பேரணி!!

 
வவுனியாவில் இன்று (24.03.2017) உலக காசநோய் தினத்தை முன்னிட்டு வழிப்புணர்வுப் பேரணி ஒன்று வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் காசநோய் தடுப்பு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய செயற்த்திட்டத்தின் ஒழுங்குபடுத்தலில் ‘ ஒன்றுபடுவோம் காசநோயை இல்லாதொழிப்போம்’ எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வானது வவுனியா பொது வைத்தியசாலை காசநோய் பிரிவில் தாதியர் மற்றும் ஊழியர்களுக்கு விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டதன் பின் காசநோய் விழிப்புணர்வு பேரணி ஆரம்பிக்கப்பட்டது.

இப் பேரணியானது வவுனியா பொது வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டு குருமன்காட்டு சந்தியை வந்தடைந்து அங்கிருந்து வவுனியா மணிக்கூட்டு சந்தியை சென்றடைந்து மீண்டும் வவுனியா பொது வைத்தியசாலையை சென்றடைந்தது.

33 வருடங்களின் பின் கிடைத்த தாய் : வெளிநாட்டு மகனுக்கு இன்ப அதிர்ச்சி!!

33 வருடங்களின் பின்னர் வெளிநாட்டு இளைஞர் ஒருவர் தனது சொந்த தாயை தேடி இலங்கை வந்துள்ளார். புலத்சிங்கள பகுதியை சேர்ந்த குணவத்தி லியனகே என்ற தாயை தேடி, சுவீடன் நாட்டிலிருந்து அவரது மகன் வந்துள்ளார்.

தனது தாயை தேடி கண்டுபிடிப்பதற்காக புலத்சிங்கள பொலிஸாரின் உதவியை குறித்த இளைஞன் நாடியுள்ளார். பொலிஸார் அந்த இளைஞனுக்கு தனது பெற்றோரை சந்திப்பதற்கு நடவடிக்கை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

இலங்கையினுள் வாழும் போது நிஹால் லியனகே என அழைக்கப்பட்ட அவர் தற்போது நிக்லஸ் பீட்டர்ஸன் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார்.

வறுமையான குடும்பத்தில் பிறந்த ஒன்றரை வயதான நிஹால், சுவீடன் தம்பதியான போ மற்றும் ப்ரிட் மரி தத்து கொடுக்கப்பட்டதாக, இளைஞரின் தாயாரான குணவத்தி லியனகே தெரிவித்துள்ளார்.

தந்தையின் கவனயீனம் காரணமாக அவரது தாயாருக்கு ஏற்பட்ட அழுத்தங்களுக்கு மத்தியில், கணவரை கைவிட்டு புலத்சிங்கள பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளார்.

தன்னால் பார்த்துக் கொள்ள முடியாத மகனை சுவீடன் நாட்டு தம்பதியினருக்கு சட்டரீதியாக வழங்கியுள்ளார். இன்று இந்த இளைஞர் சுவீடனில் பொறியியலாளராக செயற்பட்டு வருகிறார்.

இந்நிலையில் குறித்த இளைஞன் உண்மையான பெற்றோரின் விபரங்களை சுவீடன் தம்பதியினர் வழங்கியுள்ளனர். இலங்கையில் இருந்து செல்வதற்கு முன்னர் தாயாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் குறித்த இளைஞர் இலங்கை வந்துள்ளார்.

புலத்சிங்கள சென்ற இனைஞன் பொலிஸ் நிலையத்தில் தகவல் அறிவித்தார். உடனடியாக செயற்பட்ட பொலிஸார் இது தொடர்பில் தகவல் ஆராய்ந்து அந்த இளைஞர் மற்றும் தாயாரை சந்திப்பதற்கு உதவியுள்ளனர்.

33 வருடங்களுக்கு முன்னர் இழந்த தனது தாயின் அன்பை மீண்டும் குறித்த இளைஞர் பெற்ற சந்தர்ப்பத்தில் அனைவரின் கண்களும் கண்ணீர் வடிந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை 32 வருடங்களுக்கு பின்னர் தனது சொந்த பெற்றோரை தேடி சுவீடனிலிருந்து பெண்ணொருவர் இலங்கை வந்திருந்தார். எனினும் அவரி்ன் பெற்றோரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படத்தோடு நிறுத்திக்கொள்ளட்டும் – இலங்கைக்கு செல்ல வேண்டாம் : ரஜினிக்கு எச்சரிக்கை!!

இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினிகாந்த், இலங்கைக்குச் செல்ல வேண்டாம்” என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.0 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தை 350 கோடி ரூபா செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், லைக்கா நிறுவனம் 22 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள 150 வீடுகளை, தமிழ் மக்களுக்கு வழங்கவுள்ளது. இந்த நிகழ்வில் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவுள்ளார்.

வவுனியாவின் சின்ன அடம்பன் கிராமம், புளியங்குளம் ஆகிய பகுதிகளில் இந்த வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாக, ஞானம் அறக்கட்டளை அமைத்துக் கொடுக்கிறது.

குறித்த வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சி, எதிர்வரும் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு வீடுகளை வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த நிகழ்வில் ரஜினிகாந்த் கலந்துகொள்வதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து தொல். திருமாவளவன் கருத்து தெரிவிக்கையில், “இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினி, இலங்கைக்குச் செல்லவேண்டாம்.

லைக்காவுடனான தனது நட்பை திரைப்படத்துடன் நிறுத்திக்கொள்ளட்டும். இன அரசியல் சர்ச்சையில் ரஜினி சிக்கிக்கொள்ள வேண்டாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, நடிகர் ரஜினியை வைத்து லைக்கா நிறுவனம், இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் திறப்பது ஏமாற்று வேலை தொல். திருமாவளவன் மேலும் தெரிவித்துள்ளார்.

20 மாதத்தில் 83 கிலோ எடையைக் குறைத்த பெண்!!

Anastasia Chiarello என்பவர் தனது 25 வயதில் 165 கிலோ எடை இருந்ததால் பார்ப்பதற்கு அதிக எடைகொண்ட பெண்மணி போன்று காணப்பட்டுள்ளார்.

இதனால் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்ட இவர், தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, 20 மாதத்தில் 83 கிலோ உடல் எடையை குறைத்துள்ளேன். இது ஒன்றும் சுலபமான விடயம் அல்ல. இதற்காக நான் கடினமாக உடற்பயிற்சி செய்தேன்.

மேலும், உணவு விடயத்தில், Tuna Salad அன்றாடம் சாப்பிட்டு வந்தேன். இது புரோட்டின் அதிகம் உள்ள உணவு மட்டுமல்லாது கொலஸ்ட்ராலும் கிடையாது.

வேர்க்கடலை எண்ணெய், வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடுவேன். உணவு மட்டுமல்லாது, உடற்பயிற்சி மையத்திற்கும் தவறாமல் செல்ல வேண்டும். இப்படி, மேற்கொண்டதால் தான் 20 மாதத்தில் 83 கிலோ குறைத்துள்ளேன் என கூறியுள்ளார்.

பாடசாலை மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞன் கைது!!

15 வயதான பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக 16 வயதான இளைஞனை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மஸ்கெலியாவில் உள்ள தோட்டம் ஒன்றில் வசித்து வரும் பாடசாலை மாணவியை பல முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனடிப்படையிலேயே இளைஞனை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் மாணவி மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞன் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்தேக்கத்தில் ஆணின் சடலம் ஒன்று மீட்பு!!

 
காசல்ரீ நீர்தேக்கத்தில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன்பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமர்வில் பகுதியின் நீர்தேக்க கரையோரத்திலே இன்று காலை 11 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நீர்தேக்கத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், சடலமொன்று மிதப்பதைக்கண்டவர்கள் ஹட்டன் பொலிஸருக்கு அறிவித்துள்ளனர்.

சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்றும், சுமார் 35-40 வயது மதிக்கதக்கவர் எனவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையின் பின் சடலம் பிரேத பரிசோதணைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்குஅனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இளைஞராக போனவர் திருநங்கையாக திரும்பினார் : அதிர்ச்சி சம்பவம்!!

தமிழ்நாட்டில் இளைஞராக இரு வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன இளைஞர் திருநங்கையாக பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தாமரை செல்வன், இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அவரின் இளைய மகன் முத்துகுமார் (20), அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2015 மார்ச் மாதத்தில் முத்துகுமார் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட பொலிசார் அவரை தேடி வந்தனர்.

தற்போது இரண்டு வருடங்கள் கழித்து முத்துகுமார் சென்னையில் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

சென்னைக்கு சென்று பொலிசார் முத்துகுமாரை பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். காரணம் அவர் ஆப்ரேஷன் செய்து முழு திருநங்கையாக மாறியிருந்தார்.

தன் பெயருடன் கீர்த்தனா என மாற்றியுள்ளார். பின்னர் ஊருக்கு அழைத்து செல்லப்பட்ட அவரை கண்டு அவர் பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் முத்துகுமார் நீதிமன்றத்தில், நான் திருநங்கையாக சென்னையில் வாழவே விரும்புகிறேன்.

அவ்வபோது பெற்றோரை வந்து திருப்பூரில் பார்த்து செல்கிறேன் என கூறியுள்ளார். அவர் விருப்பத்துக்கு நீதிமன்றம் சம்மதித்துள்ளது.