வவுனியாவில் பட்டப்பகலில் சங்கிலி அபகரிப்பு!!

வவுனியா செட்டிகுளத்தில் நேற்று முன்தினம் (07.03.2017) வீதியில் இரு பெண்கள் நடந்து சென்று கொண்டிருந்த சமயத்தில் வேகமாக மோட்டார் சைக்கிலில் வந்த இருவர் அவர்களின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியினை ( ஒருபவுண்) அபகரித்துச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் தொழிநுட்பக் கல்லூரிக்குச் சென்ற பெண்ணை காணவில்லை!!

வவுனியாவில் நேற்று (07.03.2017) தொழிநுட்பக் கல்லூரிக்கு சென்ற மாணவியை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா வேப்பங்குளத்திலிருந்து நேற்று (07.03.2017) காலை 8.30 மணிக்கு தொழிநூட்ப கல்லூரிக்கு சென்ற 20வயதுடைய பெண் மாலை 5.30 மணி ஆகியும் வீடு திரும்பாததையடுத்து அவரது பெற்றோரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியாவில் தேவாலயத்தில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு!!

 
வவுனியா ஓமந்தை பிரதான வீதியிலுள்ள வேளாங்கன்னி தேவாலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தேவாலயத்தின் உண்டியல் ஏற்கனவே இரண்டு தடவைகள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் 13வது நாளாக காணாமல்போனோரின் உறவுகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

 
வவுனியாவில் கடந்த 13 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (08.03.2017) 13ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமையை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு!!

 
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் இன்று (08.03.2017) காலை 9 மணியளவில் தமது பொருளாதார மேம்பாட்டிற்காக தினமும் உழைக்கும் இரு பெண்மணிகளை பாராட்டும் வைபவம் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்துடன் இணைந்து தமிழ் விருட்சம் அமைப்பு இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

மாவட்ட சமூக சேவை அலுவலகர் இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாஸன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் கண்ணன் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் கலாசார உத்தியோகத்தர் பண்டிதர் பிரதீபன், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜே.கென்னடி தமிழ் விருட்சம் அமைப்பின் செயலாளர் மாணிக்கம் ஜெகன், ஆகியோரும் சிறகுகள் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் .

இந்நிகழ்வில் வவுனியா மாவட்டத்தில் மிக நீண்ட காலமாக ஸ்ரேசன் வீதி வவுனியாவில் அதிர்ஸ்டலாப சீட்டு விற்பனையில் ஈடுபட்டு தனது பொருளாதார தேவைகளை நிறைவேற்றி வரும் இரண்டு கால்களும் நடக்க முடியாத மாற்றுத்திறனாளிப் பெண்ணான செல்வி செல்லையா சந்திரிகா அவர்களும் இளம்பிள்ளை வாததத்தால் இரண்டு கால்களும் நடக்கமுடியாத மாற்றுத்திறனாளிப் பெண்ணான நீண்டகாலமாக வவுனியா நகர சந்தையில் தயிர் சட்டிகள் விற்றுவரும் சங்கர் சாரதா என்பவரும் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப் பத்திரங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பெண்கள் தமது பொருளாதார வளர்ச்சிக்கும் குடும்பச் செலவுகளுக்கும் தமது சொந்தக்காலில் நின்று உழைத்து வருகின்றனர் என்பதற்கு இந்த இரண்டு பெண்களும் சிறந்த உதாரணமாக விளங்குகின்றனர் . இலங்கைப்பெண்கள் வளர்ந்த நாட்டுப்பெண்கள் போன்று அதிக உரிமைகள் சலுகைகளை அனுபவித்து வருகின்றனர் .

எனினும் வடகிழக்கில் பெண்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர் . அதில் பொருளாதார பிரச்சனை பிரதானமானது. அவற்றைத்தீர்க்க சுயதொழில்கள் நல்ல பலனைப்பெற்றுத் தரும் . என்பதற்கு இந்த இரண்டு பெண்களும் நல்ல உதாரணம் என மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் தனது உரையில் குறிப்பிட்டார் .

வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் பிள்ளையார் சிலை திறந்துவைப்பு!!

 
வவுனியாவில் வன்னி மாவட்டங்களுக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் பனிமனை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சமாதான விகாரைக்கு அருகாமையில் இன்று (08.03.2017) பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டது.

இந்நிகழ்வானது இன்று காலை வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் நடைபெற்றது.
சிவசிறி நித்தியானந்த தேவராஜ குருக்களால் பிள்ளையார் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சோமரத்தன விஜியமுனி, வடக்கு மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கடந்த (06.03.2017) அன்று புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சமாதான விகாரை பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜெயசுந்தர தலைமையில் திறந்து வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வவுனியா மக்கள் வங்கியில் மகளிர் தின நிகழ்வுகள்!!

 
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் வங்கியினால் நடாத்தப்பட்ட பெண்களுக்குரிய வனிதா வாசனா ஆரம்ப விழா மக்கள் வங்கி வவுனியா கிளை முகாமையாளர் தலைமையில் இன்று (08.03.2017) நடைபெற்றது.

இந் நிகழ்வில் மக்கள் வங்கி வன்னி பிராந்திய முகாமையாளர் , சட்டத்தரணிகள், கால்நடை வைத்தியர், C.T.B கணக்காளர், பிரதேச செயலக (Sinhala division) கணக்காளர், வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள், வவுனியா SLT உத்தியோகத்தர்கள் , மக்கள் வங்கி உத்தியோகத்தர்கள் மற்றும் மக்கள் வங்கி வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வவுனியாவில் பெண்கள் தினத்தில் ஒப்பாரிப் போராட்டம் : மூவர் மயங்கி வீழ்ந்தனர்!!

 
வவுனியாவில் கடந்த 13 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (08.03.2017) 13ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இந் நிலையில் மகளிர்தினமான இன்று அனாதைகளாக்கப்பட்டு வீதியில் தள்ளப்பட்டுள்ள அவர்கள் தமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்துவிதமாக போராட்டம் நடைபெறும் இடத்தில் இன்று (08.03.2017) மதியம் 12.00 மணிமுதல் 12.30 மணிவரை சுமார் 30 நிமிடங்கள் தங்களது உள்ளத்தில் இருக்கும் வேதனைகள், துன்பங்களை வெளிப்படுத்தும் ஒருவடிவமாக இந்த ஒருமித்த அழுகுரல்களாவது அனைவரின் காதுகளையும் எட்டி அவர்களது மனச்சாட்சியைத் தூண்டட்டும் எனத் தெரிவித்து ஒப்பாரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஒப்பாரிப்போராட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று தாய்மார் மயங்கி கீழே வீழ்ந்தனர். எனினும் வைத்தியசாலைக்கு செல்லாமல் தொடர்ந்தும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்து குழந்தை பலி!!

 
வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியில் இன்று (08.03.2017 மதியம் 12.30 மணியளவில் பாதுகாப்பற்ற கிணற்றினுள் வீழ்ந்து ரவீந்திரன் பிரவீனன் என்ற ஒன்றரை வயது குழந்தை இறந்துள்ளது. மேலும் இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் ,

இவரது தந்தையார் கொழும்பில் பணிபுரிந்து வருகின்றார். தாயார் வவுனியாவிற்கு சென்றிருந்து வேளை குறித்த குழந்தை தாத்தாவின் அரவணைப்பில் இருந்துள்ளார்.

தாத்தா குறித்த குழந்தையினை வீட்டினுள் விட்டுவிட்டு வீட்டுக்கு அருகே காணப்படும் காணியில் ஆட்டினை கட்டி விட்டு வருவதற்காக சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் தாத்தாவை தேடிச் சென்ற குறித்த குழந்தை (ரவீந்திரன் பிரவீனன்) வீட்டிக்கு அருகே காணப்படும் பாதுகாப்பற்ற கிணற்றினுள் வீழ்ந்துள்ளார்.

ஆட்டினை கட்டி விட்டு வீடு திரும்பிய தாத்தா குழந்தையினை தேடிய போது குழந்தை கிடைக்கவில்லை . குறித்த குழந்தையின் சகோதரன் ( வயது 3) கிணற்றிற்கு அருகே சென்ற பொழுது கிணற்றினுள் குழந்தை இருந்ததை அறிந்து உடனே தாத்தாவிற்கு தெரிவித்துள்ளார்.

கிணற்றினுள் குதித்து தாத்தா குழந்தையினை மீட்டெடுத்து வவுனியா பொது வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில் அனுமதித்துள்ளார்.

தற்போது சடலம் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

மனதை நெகிழ வைத்த இலங்கை வைத்தியரின் மனிதாபிமானம் : ஜேர்மன் மருத்துவர்!!

இலங்கை வைத்தியர் ஒருவரின் மனிதாபிமானம் தொடர்பில் சாமுவேல் ஹனெமான் என்ற ஜேர்மன் நாட்டு வைத்தியர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.மஹரக அபேக்ஷா வைத்தியசாலையின் மருத்துவர் ரந்தில் பிரமோத் டீ அல்விஸ்ஸின் மனிதாபிமானம் தொடர்பிலேயே ஜேர்மன் வைத்தியர் கருத்து வெளியிட்டுள்ளார்.

குறித்த வைத்தியர் கடந்த 3ஆம் திகதி குருநாகல் சென்றுக் கொண்டிருக்கும் போது அவரது காரில் மாடு ஒன்று மோதுண்டுள்ளது.இதனால் அவரது கார் சேதமாகியது,காரின் சேதத்தை பொருட்படுத்தாமல் குறித்த மாட்டிற்கு சிகிச்சை அளிப்பதற்காக குறித்த மருத்துவர் முயற்சித்துள்ளார்.

மாட்டின் கால் பகுதி காரில் நன்றாக மோதியதால், கொழும்பு தேசிய மருத்துவமனையின் தொழில்நுட்பவியலாளர் ஒருவரின் உதவியுடன் மாட்டிற்கு குறித்த வைத்தியர் சிகிச்சையளித்துள்ளார்.இந்த சம்பவம் குறித்த பகுதியில் உள்ள மக்களின் இதயத்தில் ஆழமாக பதிவாகியுள்ளது. குறித்த வைத்தியரின் மனிதாபிமானம் தொடர்பிலான காணொளி தற்போது சமூக வலைத்தளங்கலில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய தொழிலதிபரிடம் பண மோசடி செய்த இலங்கை நடிகை!!

இந்திய தொழிலதிபர் ஒருவரின் பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை நடிகை அக்ஷா சுதாரியிற்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கொழும்பு மேலதிக நீதவான், ஜெயராம் ட்ரொட்ஸ்கி இந்த உத்தரவை நேற்றைய தினம் பிறப்பித்துள்ளார்.இந்த வழக்கு மீண்டும் ஜூன் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இந்திய தொழிலதிபர் கடந்த 2015 ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமரின் சொத்து விபரம் கோரி மேன்முறையீடு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சொத்து மதிப்பு தகவலை பெற மீளவும் மேன்முறையீடு செய்யவுள்ளதாக ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு தெரிவித்துள்ளது.இலங்கையில் தற்போது புதிதாக கொண்டுவரப்பட்ட தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் மூலம் குறித்த அமைப்பானது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சொத்து விபரத்தினை கோரியிருந்தது.

இந்த நிலையில் அவர்களின் சொத்து பொறுப்பு விபரங்களை பெற்றுக்கொள்ள முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை என அந்த அமைப்பு கூறியுள்ளது.மேலும், தகவல் அறிந்துகொள்ளும் சட்டத்தின் அடிப்படையில் இந்த விபரங்களை பெற்றுக்கொள்ள உரிமை உண்டு என கூறிய அந்த அமைப்பு, இந்த செயற்பாடு காரணமாக அந்த உரிமைக்கு மதிப்பு தற்போது இழக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.இருப்பினும் இவர்களின் தகவல்களை பெற்றுக்கொள்ள மீளவும் மேன்முறையீடு செய்ய உள்ளதாக அந்த அமைப்பின் முகாமையாளர் சங்கீதா குணரட்ன தெரிவித்துள்ளார்.

நயினாதீவு மேற்கு கடற்கரை பிரதேசத்தில் கேரளா கஞ்சா பொதிகள் மீட்பு.(படங்கள்)

நயினாதீவு மேற்கு கடற்கரை பிரதேசத்தில்
கேரளா கஞ்சா பொதிகள் மீட்பு.

நயினாதீவு மேற்கு கடற்கரை பகுதியில்
இன்று அதிகாலை பொதுமகன் ஒருவர்
வழங்கிய தகவலில் .கிராம அலுவலர்கள்
J/34’J/35’J/36 ) இவர்களுடன் நிர்வாக
கிராம அலுவலர்.திரு. அம்பிகைபாகன் அவர்களும் .
மற்றும் பொலிசாரும் இணைந்து கேரளா கஞ்சா பொதியினை மீட்டுள்ளனர்.சுமார் 51 கிலோ அடங்கிய 10 பொதிகள் கைப்பற்றப்பட்டு .பொலிஸாரினால்
ஊர்காவற்றுறை பொஸிஸ் நிலையத்திற்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 

வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் ஊடகமாநாடு!!

 
வவுனியா மாவட்ட தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தில் 2017ம் ஆண்டிற்கான ஊடகமாநாடு உதவிப்பணிப்பாளர் சுனில்ஜெயகமா தலைமையில் மாவட்ட காரியலாயத்தின் கேட்போர் கூடத்தில் இன்று(07.03.2017) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது.

இம் மாநாட்டில் கடந்த வருடத்திற்கான செயற்பாடுகளும் இந்த வருடத்திற்கான செயற்பாட்டு ஊடகமாநாடாக இடம்பெற்றது.

விஷேட நிகழ்வாக வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான நிகழ்வுகளில் தேசிய இளைஞர்கள் சேவை மன்றம் 2017ஆம் ஆண்டிற்கு நடைமுறைப்படுத்த தீர்மானித்த வேலைத்திட்டங்கள், இளைஞர் யுவதிகளின்பொருளாதார சக்தி விருத்தி செய்தல், 13-29 வயதிற்குட்பட்ட இளைஞர் யுவதிகளின் அங்கத்துவம், இவ்வயதுக்கு உட்பட்ட 35 வயதுக்குள் சேவை வழங்கல், பிரதேச செயலாளர் பிரதேச மட்டத்தில் நிஸ்கோ செயற்குழு உருவாக்குதல் போன்ற விபரங்கள் தெளிவுபடுத்தப்பட்டதுடன் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலும் வழங்கப்பட்டது.

இவ் ஊடக மாநாட்டில் மாவட்ட இளைஞர்கள் சேவை அதிகாரி டி.எம்.கே.அபேசிங்க, மாவட்ட இளைஞர் சேவைகள் அலுவலக நிர்வாக பொறுப்பாளர் ஜ.சுகானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் 12வது நாளாகத் தொடரும் காணாமற்போன உறவுகளின் போராட்டம்!!

 
வவுனியாவில் தொடர் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று (07.03.2017) 12வது நாளாகத் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இப் போராட்டத்திற்கு இன்று காலை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள் தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.

மேலும் ஜனாதிபதிக்கு தபால் அனுப்பும்போராட்டம் இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

கையளிக்கப்பட்டு கடத்தப்பட்ட தமது உறவுகளை ஒப்படைக்குமாறும் அவசர காலச்சட்டத்தினை நீக்குமாறும், சிறையிலுள்ள அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறும் தெரிவித்து தமது போராட்டத்தினை இன்று 12ஆவது நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மோடி!!

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 8 நாடகளேயான பச்சிளம் குழந்தையை சரியான நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்க பிரதமர் நரேந்திர மோடி உதவியாதால் குழந்தை உயிர் தப்பியுள்ளது.

அசாமைச் சேர்ந்த கலிதா-ஹிமாக்‌ஷி தம்பதியினருக்கு எட்டு நாட்களுக்கு முன்னர் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

ஆனால் குழந்தையின் உடலிலிருந்து முதன்முறையாக வெளியாகும் மலமானது, அதன் நுரையீரலில் சேர்ந்துவிட்டது. இதன் காரணமாக அந்த குழந்தை மூச்சு விட கடுமையாக திணறியுள்ளது.

கடந்த சில நாட்களாக சிகிச்சை அளித்து வந்த அசாம் மருத்துவர்கள், குழந்தையின் உடல் நிலை மோசமடைந்ததால் உடனடியாக டெல்லியில் உள்ள வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்கு குழந்தையை அனுமதிக்க அறிவுறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் ஹெலிகொப்டர் மூலமாக அந்த எட்டு நாள் குழந்தை அசாமிலிருந்து டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது.

ஆனால் தலைநகரில் உள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக குழந்தையை குறிப்பிட்ட நேரத்தில் டெல்லி வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியுமா? என மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எனவே இந்த பிரச்சினை குறித்து முன்னதாகவே பிரதமர் மோடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நிலைமையை புரிந்து கொண்டு இந்த விவகாரத்தில் தலையிட்ட மோடி, குழந்தை விரைவாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வகையில் எம்பியுலன்ஸ் செல்லும் வீதியில் போக்குவரத்தை முற்றாக நிறுத்த உத்தரவிட்டார்.

இதன் காரணமாக டெல்லி விமான நிலையம் வந்ததும், சரியான நேரத்தில் வீதி வழியாக டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் நேற்று அந்த குழந்தை ஆபத்துக் கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தங்கள் குழந்தையை காப்பாற்றிய தெய்வம் மோடி என அந்த பெற்றோர்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.