தனது தாய் வாகனத்தில் அடிபட்டு இறந்ததை தாங்கி கொள்ள முடியாத குட்டி குரங்கு கண்ணீர் விட்டு அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பகுதியின் போக்குவரத்து பாதைகளில் யானை, மான் மற்றும் குரங்குகளின் நடமாட்டம் இருக்கும்.
மேலும் தாளவாடியில் இருந்து சாம்ராஜ்நகர் செல்லும் வழியில் எலந்தூர் என்ற இடத்தில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சியால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.
இதனால் குரங்குகள் தாளவாடி அருகே மலைப்பகுதியில் செல்லும் புளிஞ்சூர், மைசூர் தேசியநெடுஞ்சாலையோரம் உணவைத்தேடி குட்டிகளுடன் உட்கார்ந்து இருக்கின்றன.
இந்நிலையில், அந்த பகுதியில் தனது குட்டி குரங்குடன் சுற்றித்திரிந்த தாய் குரங்கு வாகனத்தில் அடிபட்டு இறந்துபோனது. ஆனால் குட்டி குரங்கோ, தனது தாயை பிரிய மனமின்றி, தலை, முகத்தை வருடியபடி அதன் அருகிலேயே அமர்ந்திருந்தது.
பயணிகள் சிலர் தாய் குரங்கிடம் இருந்து குட்டியை பிரிக்க முயன்றபோது, அது தாயை இறுக பிடித்துக்கொண்டு வரமறுத்துள்ளது.
அதன்பின்னர், அப்பகுதி பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இறந்துபோன குரங்கு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இருப்பினும் ஐந்தறிவு படைத்த குட்டிக்குரங்கின் வருத்தம், ஆறறிவு கொண்ட மனிதர்களின் மனதையும் கலங்க செய்துள்ளது.
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமிக்கு ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்தமை அம்பலமாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு வெல்லவாய நீதிவானும் மாவட்ட நீதவானுமாகிய கேசர சமரதிவாகர உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊவா மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர், சுகாதார சேவை பணிப்பாளர் மற்றும் வைத்திய சபைக்கு நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.
துஷ்பிரயோகங்களுக்கான குறித்த சிறுமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவரது இடது கையின் கரத்தின் மீது பாரிய காயம் ஒன்று காணப்பட்டுள்ளது.
காயத்தை அவதானித்த நீதவான் அது தொடர்பில் சிறுமியிடம் விளக்கம் கேட்டுள்ளார். தனக்கு குடும்ப கட்டுப்பாட்டு சத்திரசிகிச்சை ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறுமி குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து நீதவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞருக்கு பாகிஸ்தான் பழங்குடியினர் நீதிமன்றம் 7 லட்சம் அபராதம் விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத், சிந்து மாகாணத்தின் கந்த்கோட்-காஷ்மோர் மாவட்டம் தங்வானி அருகேயுள்ள பஜர் அபாத் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் எட்டு மாதங்களுக்கு முன்பு வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த காதல் திருமணத்தால் தங்களுக்கு சமுதாயத்தில் அவப்பெயர் ஏற்பட்டு விட்டதாக மணப்பெண்ணின் வீட்டார் பழங்குடியின நீதிமன்றம் என்று கூறப்படும் “ஜிர்கா’வில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஜிர்கா பழங்குடியின நீதிமன்றம், கட்டுப்பாடுகளை மீறி திருமணம் செய்து கொண்ட இளைஞர் குற்றவாளி என தீர்ப்பளித்து. அவரின் செயலால் மணப்பெண் வீட்டார் அவமானத்தை சந்திக்க நேர்ந்ததாகவும், அதற்கு அவர்களுக்கு நஷ்ட ஈடாக ரூ.17 லட்சத்தை மணமகன் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
மேலும், காதல் திருமணம் செய்து கொண்ட அந்த ஜோடியை மூன்று மாதங்களுக்கு கிராமத்தைவிட்டு விலக்கி வைக்குமாறும் தீர்ப்பளித்த்தது. இந்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழங்குடியின நீதிமன்றங்களுக்கு சட்ட அதிகாரம் அளிக்கும் வகையிலான மசோதாவுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்கும் வகையிலும், சிறிய அளவிலான குடும்பப் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வை காணும் வகையிலும் பாகிஸ்தான் அரசு இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் களுத்துறையில் சிறைச்சாலை வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணைகளில் சில திடுக்கிடும் உண்மைகள் அம்பலமாகியுள்ளன.
இந்த தாக்குதலை பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் அங்கொட லொக்கா என்பவர் வழிநடத்தியுள்ளார்.
சமயங் என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர் உள்ளிட்ட ஐந்து சந்தேக நபர்களும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளும் தாக்குதலில் உயிரிழந்திருந்தனர்.
பொலிஸ் சீருடை அணிந்து அங்கொட லொக்கா இந்த தாக்குதலை நடத்தியதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு பயன்படுத்திய வான் வண்டியில் அங்கொட லொக்காவின் கைவிரல் அடையாளங்கள் கிடைத்துள்ளன.
சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்தியன் பின்னர், அங்கொட லொக்கா பஸ் உள்ளே சென்று சமயங் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்திய பாதாள உலகக்குழுவினர் பயணித்த பஸ்ஸிற்கு, பாதுகாப்பு வழங்கும் வகையில் பொலிஸ் சீருடை அணிந்த பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் இருவர் பஸ்ஸிற்கு முன்னால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்றுள்ளனர்.
தாக்குதல் நடத்திய அனைத்து பாதாள உலகக்குழு உறுப்பினர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
வவுனியாவில் கடந்த 15 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (10.03.2017) 15ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா நெடுங்கேணியில் நேற்று (09.03.2017) இரவு வீடொன்றில் திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா நெடுங்கேணியில் நேற்று இரவுவேளை வீடொன்றின் முன்பகுதியில் இருந்த பாரஊர்தியொ ன்றின் இரு ரயர்கள் (48,000 பெருமதியான) களவாடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்களினால் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஒருவர் மனிதனாக வாழ்வதற்கு கல்வியே இன்றியமையாத ஒன்றாக காணப்படுவதோடு ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் இலட்சியமாக பல்கலைக்கழகத்தை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவரும், ஆசிரியருமாகிய எம்.எம்.ரதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் நேற்று (09.03.2017) காலை இடம்பெற்ற சமூக விஞ்ஞான மன்ற நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
இன்றைய இளைஞர்களே நாளைய நாட்டின் தலைவர்கள் இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாணவர்களும் தாம் கல்வி கற்கின்ற காலத்தில் இருந்தே இத்தகைய பண்பினை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இலங்கையில் காலத்துக்கு காலம் கொண்டு வரப்பட்ட யாப்புக்களே பாராளுமன்ற முறைக்கு அடிப்படையாக அமைந்தது. கோல்புறுக் யாப்பு, மனிங் யாப்பு, மக்கலம் யாப்பு, டொனமூர் யாப்பு, சோல்பரி யாப்பு என்பவற்றோடு காலபோக்கில் முதலாம் குடியரசு யாப்பு, இரண்டாம் குடியரசுயாப்பு என்பனவற்றின் காரணமாக கல்வியிலும் பல மாற்றங்கள் புகுத்தப்பட்டன.
ஆனால் இன்றைய மாணவர்கள் நவீன இணையத் தள சாதனங்கள் காரணமாக முகநூல் பாவனை வேறு சாதன பாவனைகள் அதிகரித்தமையால் கல்வியில் அக்கறை செலுத்தும் தன்மை குறைவடைந்துள்ளது.
ஆயினும் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி கல்வியில் என்றும் சாதனை படைகின்றமை விசேட அம்சம் ஆகும். கடந்த உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் கணித விஞ்ஞான கலைப்பிரிவுகளில் மாவட்ட நிலையில் முதலிடங்களை பெற்றவர்கள் இக்கல்லூரியில் கற்ற மாணவிகளே,
எனவே இவற்றினை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களிலும் இப்பாடசாலைகளின் மாணவர்கள் கல்வியில், ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் என என வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவரும், ஆசிரியருமாகிய எம்.எம்.ரதன் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் நுழைவாயில் நேற்று (09.03.2017) காலை 10 மணியளவில் பாடசாலை அதிபர் திருமதி ப. கமலேஸ்வரி தலைமையில் யாழ்ப்பாண இந்திய உயர்ஸ்தானிகர் ஆ.நடராஜாவினால் உத்தியோகபூர்வமாக திறந்து கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
2014ம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியினால் நடாத்தப்பட்ட பொருளியல் வினாவிடைப் போட்டியில் பாடசாலை மாணவிகள் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக கிடைத்த நிதிப்பங்களிப்புடன் நுழைவாயில் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நுழைவாயிலை திறந்து வைத்ததையடுத்து நுழைவாயிலை அலங்கரித்த சிற்பந்திகளுக்கு கௌரவிப்பு, கலை நிகழ்வுகள், இந்திய உயர்ஸ்தானிகள் பாடசாலைக்கு ஒரு தொகுதி நூல்களையும் வழங்கிவைத்தார். பாடசாலை மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் எம்.இராதாகிருஷ்ணன், வவுனியா தெற்கு வலய கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.பி.நட்ராஜ், ஓய்வு நிலை கல்விப்பணிப்பாளர் திருமதி.அன்ரன் சேமராஜா, பிரதி அதிபர், உப அதிபர், அயல்பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் நேற்று (09.03) பிற்பகல் 2.30 மணியளவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று பேரை வவுனியா உதவி மதுவரி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா சிந்தாமணி பிள்ளையார் கோவில் வீதியில் முச்சக்கரவண்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கையும் மெய்யுமாக இரண்டு பேரைக் கைது செய்துள்ளதாகவும் இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின்போது மேலும் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நிதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வவுனியா உதவி மதுவரி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இன்று (09.03.2017) காலை 6.30 மணியளவில் ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணம் மேற்கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கொழும்பிலிருந்து நேற்றைய தினம் ( 08.03.2017) யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி இன்று (09.03.2017) காலை 6.30 மணியளவில் வவுனியா ஒமந்தை பொலிஸ் நிலையத்திற்கும் ஒமந்தை பாடசாலைக்கும் இடையே காணப்படும் பாலத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் கந்தையா மாரியாயி என்ற 56 வயதுடைய பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்தள்ளதுடன் அவரின் மகளின் பிள்ளைகளான டிலானி 2வயது, டெனுசன் 7வயதுடைய இரு சிறுவர்களும் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை ஓமந்தை போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
உடலில் இருந்து சுமார் 120 கிலோ எடை குறைக்கப்பட்டதால், 25 வருடங்களுக்குப் பிறகு படுக்கையிலிருந்து சுயமாக எழும்பி அமர்ந்துள்ளார் உலகின் மிகவும் பருமனான பெண்.
எகிப்து நாட்டைச் சேர்ந்த இமான் அகமது, 2013 ஆம் ஆண்டு தனது 23 வயதில் 300 கிலோ எடையை பெற்றிருந்தார். இந்நிலையில் 2016ஆம் ஆண்டு அவரது 26 வயதில் 500 கிலோ எடையை அடைந்தார். இந்நிகழ்வின் ஊடாக உலகிலேயே அதிக எடை கொண்ட பெண் என வர்ணிக்கப்பட்டார் இமான்.
அவரது எடையை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பயனளிக்காத நிலையில், விசேடமாக ஏற்பாடுசெய்யப்பட்ட பயணத்திட்டம் மூலம், இந்தியாவின் மும்பை நகரிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் சுமார் 120 கிலோ எடை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிகிச்சையின் மூலம், சுமார் 25 வருடங்களாக அமர முடியாமல் அவதிப்பட்டு வந்த இமான், தற்போது சுயமாக எழும்பி உட்காரும் நிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமானிற்கு பிசியோ தெரபி சிகிச்சையும், லேப்ராஸ் கோபிக் அறுவை சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளதோடு, அவரின் உணவு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, சுமார் 13 பேர் கொண்ட வைத்தியர் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருவதோடு இன்னும் ஆறுமாத காலப்பகுதியில், அவரின் எடை சுமார் 200 கிலோகிராமல் குறையும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவைச் சேர்ந்த எமி குரோஸ் ரொசென்தல் எனும் இப்பெண் சிறுவர் கதை எழுத்தாளராவர். 50 வயதான இவருக்கு சூலகப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.
இன்னும் சில காலமே இவர் உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனராம். இதனால் தனது கணவருக்கு மற்றொரு துணையைத் தேடிக்கொள்வதற்காக, டேட்டிங் தளமொன்றில் கணவரின் விபரக் குறிப்பை எழுதியுள்ளார் எமி குரொஸ்.
தனது 24 ஆவது வயதில் தனது கணவர் ஜேசனை முதன்முதலில் சந்தித்தார் எமி. கடந்த 26 வருடங்களாக இணைந்து வாழும் இத் தம்பதியினருக்கு வளர்ந்த பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில், தான் புற்றுநோயால் இறந்தவுடன் கணவர் தனிமையில் வாடாமல் மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என எமி குரொஸ் விரும்புகிறார்.
தனது கணவரின் வாழ்வில் மற்றொரு காதல் கதை உருவாகுவதை தான் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் 55 வயதான பெண்ணொருவர் லொறிச் சாரதியாக பணியாற்றுகிறார். ஷமீம் அக்தர் எனும் இப் பெண், பாகிஸ்தானின் முதலாவது பெண் லொறிச் சாரதியாவார்.
சவூதி அரேபியாவில் பெண்கள் காரோட்டுவதற்கு கூட அனுமதிக்கப்படுவதில்லை. எனினும், உலகில் பல நாடுகளில் விமானங்கள், பஸ்கள், ரயில்களையும் பெண்கள் செலுத்துகின்றனர். ஆனால், லொறிச் சாரதியாக பெண்கள் பணியாற்றுவது அபூர்வம்.
இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஷமீம் அக்தர் சில வருடங்களுக்கு முன் லொறி சாரதியாக பணியாற்ற ஆரம்பித்தார். கணவரின் துணையில்லாத அவருக்கு 5 பிள்ளைகள். திருமண வயதில் 3 மகள்களும் சிறுவர்களான இரு மகன்களும் இருந்தனர்.
ராவல்பிண்டி நகரைச் சேர்ந்த ஷமீம் அக்தர், தனது குடும்பத்தை வாழ வைப்பதற்காக லொறி சாரதியாக பணியாற்றுவதற்குத் தீர்மானித்தார். அவர் ஏற்கெனவே காரோட்டுவதற்கு கற்றுக்கொண்டிருந்தார். இந்நிலையில், லொறி செலுத்துவதற்கு 8 மாத காலம் பயிற்சி பெற்ற பின்னர் அவர் கனரக வாகனங்களை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டார்.
இதன்மூலம் பாகிஸ்தானின் முதலாவது பெண் லொறி சாரதி எனும் பெருமையை அவர் பெற்றார். லொறியை செலுத்துவதுடன் லொறியில் சிறிய பழுதுபார்க்கும் வேலைகளையும் அவர் செய்துகொள்கிறார்.
இஸ்லாமாபாத் போக்குவரத்து பொலிஸாரிடமிருந்து பெற்ற பயிற்சியின் மூலம் கனரக வாகனங்களை செலுத்துவதற்கு தான் கற்றுக்கொண்டதாக ஷமீம் அக்தர் தெரிவித்துள்ளார். லொறி, சாரதியாக அவருக்கு கிடைத்த முதல் வேலை, ராவல்பிண்டியிலிருந்து பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதிக்கு 7000 செங்கற்களை கொண்டு செல்வதாகும்.
தற்போது எந்த வகையான பொருட்கள் ஏற்றப்பட்ட லொறியையும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தயக்கமின்றி செலுத்துகிறார் ஷமீம் அக்தர். அவரை தமது தாய் போன்று கருதுவதாக சக சாரதிகள் கூறுகின்றனர்.
பஸ் சாரதி அனுமதிப் பத்திரத்தையும் ஹமீம் அக்தர் பெற்றுள்ளார். தனது வேலையை தான் மிகவும் நேசிப்பதாக அவர் கூறுகிறார். ”எதையேனும் செய்வதற்கு நீங்கள் உறுதிபூண்டால் எதுவும் கடினமாகாது” என ஷமீம் அக்தர் கூறுகிறார். தனது தொழில் ஏனைய பெண்களுக்கும் ஓர் உந்துசக்தியாக இருக்கும் என்கிறார் ஷமீம் அக்தர்.
4000 இளம் பெண்களை விபசாரத்துக்காக கடத்தி 250 கோடி ரூபா சம்பாதித்த தம்பதியினரை டில்லி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளுக்கு பங்களாதேஷ் வழியாக பெண்கள் கடத்தப்படும் கொடூரம் ஓசையின்றி நடந்து வருகிறது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் கடத்தப்படுவதை உளவுத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
அந்த வகையில் பெண்களை கடத்தும் கும்பலை பிடிக்க நாடெங்கும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
அப்போது டில்லியைச் சேர்ந்த அபக் உசேன், சாய்ரா பேகம் என்ற கணவன் மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
i3இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட போது, அவர்கள் பெண்களை கடத்தி, விபசாரத்தில் ஈடுபடுத்துவதையும், விற்பனை செய்வதையும் மிகப்பெரிய தொழில் போல செய்து வருவதை கண்டுபிடித்தனர்.
இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 4,000 இளம்பெண்களை ஏமாற்றிக் கடத்தி விபசாரத்துக்காக மற்றவர்களிடம் விற்பனை செய்து இருப்பது தெரிய வந்தது.
ஒவ்வொரு பெண்ணையும் விற்கும் போதும் இலட்சக்கணக்கில் பணம் கிடைத்ததால், நாளடைவில் அவர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் புரோக்கர்கள், ஏஜெண்டுகளை நியமனம் செய்து பெண்களை கடத்தி விற்பனை செய்வதை விரிவுபடுத்தியுள்ளனர்.
பெண்களை கடத்தி விற்பனை செய்வதன் மூலம் அவர்கள் மிகக்குறுகிய காலத்தில் ரூ. 250 கோடி வரை சம்பாதித்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த பணத்தை கொண்டு அவர்கள் டில்லி உட்பட பல இடங்களில் சொகுசு பங்களாக்கள் வாங்கி உள்ளனர்.
டில்லி புறநகர் பகுதியில் பெரிய பண்ணை வீடும் வாங்கி, அங்கு வசித்து வந்தனர். இவர்கள் மீது சந்தேகம் வந்து விடக்கூடாது என் பதற்காக உசேனும், சாய்ரா பேகமும் 2 போலி நிறுவனங்களை நடத்தி வந்தனர். பெண்களை விற்பனை செய்வதற்கு அவர்களது நிறுவனங்கள் உதவியாக இருந்துள்ளன.
10 ஆண்டுகளுக்கு முன்பு வரை அபக்உசேனும், சாய்ரா பேகமும் ஏழையாக இருந்தவர்கள். இருவரும் வேலை தேடி டில்லி சென்றுள்ளனர். ஐதராபாத்தைச் சேர்ந்த அபக்உசேன், டில்லி சென்று ஒரு நிறுவனத்தில் 3,000 ரூபா மாத சம்பளத்தில் பணி புரிந்துள்ளார்.
அப்போது அவருக்கு உத்தரபிரதேச மாநிலம் மொரதாபத்தைச் சேர்ந்த சாய்ரா அறிமுகம் ஆகியுள்ளார். சாய்ரா விபசார தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவரை 1999ஆம் ஆண்டு அபக்உசேன் திருமணம்செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து பெண்களை கடத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
குறுகிய காலத்தில் ஏராளமான பெண்களின் விபசாரம் மூலம் அவர்கள் அதிகளவில் பணம் சம் பாதித்துள்ளனர்.
தற்போது கைதாகி சிறையிலுள்ள அவர்களுடன் பெண்களை கடத்திய குற்றத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அபக்உசேன் – சாய்ரா இருவரும் பெண்களை கடத்தி விற்று சம்பாதித்த பணம் மூலம் வாங்கிய 18 பங்களாக்கள், 5 கார்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதில் ஜெய்ப்பூரில் உள்ள ரூ. 35 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு, பகவன் நகரில் உள்ள ரூ.12 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாக்களும் உள்ளடங்குவதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மகளிர் தினத்தை முன்னிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் நயன்தாராவைப் புகழ்ந்து எழுதியுள்ளார்.
போராளி அழகான போராளி! அத்தனை வலிகள், தோல்விகளுக்கு மத்தியில்… இதுவரை வந்துள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள்! மெக்சிகோவில் ஏதாவது பிரச்சனை என்றால் கூட மக்கள் உங்களின் பெயரை அதில் இழுத்தாலும் கூட சிரித்துக்கொண்டே செல்கிறீர்கள்!
வலுவாக, நம்பிக்கையுடன், நல்லதையே நினைப்பது… நயன்தாராவாக இருப்பது அவ்வளவு எளிது அல்ல.
நான் சந்தித்த பெண்களில் மிகவும் வலிமையான மற்றும் அழகான பெண்ணுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்!
வடமாகாணத்தில் H1N1 வைரஸ் தொற்றின் மூலம் 384 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அதில் 64 பேருக்கு நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் 57 பேர் இனங்காணப்பட்டுள்ள போதிலும், 8 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோன்று மன்னார் மாவட்டத்தில் 8 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன், 2 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 34 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன், 6 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 244 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன், 37 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இறுதியாக யாழ்.மாவட்டத்தில் 47 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன், 11 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களுடன் மொத்தமாக 384 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன், இதில் 64 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
சிறு பிள்ளைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், அவதானத்துடன் செயற்படுமாறும், தொண்டை நோயுடன் கூடிய தடிமன் காய்ச்சல் ஏற்பட்டால், உடனடியாக வைத்தியரை நாடுமாறும், விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் வடமாகாண சுகாதார அமைச்சர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.