ரஜினியின் 2.0 திரைப்படம் 350 கோடிக்கு காப்பீடு!!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘2.0’. இதில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் நடிக்கிறார்.

லைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை 400 கோடி ரூபா செலவில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இது இந்தியாவில் அதிக செலவில் தயாராகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்தப் படத்தை 350 கோடிக்கு (இந்திய ரூபா) தயாரிப்பு நிறுவனம் காப்பீடு செய்துள்ளது.

படப்பிடிப்பின் போது ஏற்படும் விபத்துக்கள், உயிரிழப்பு, பொருட்சேதங்கள் போன்றவற்றுக்கு இந்த காப்பீடு மூலம் இழப்பீடு பெற முடியும்.

சமீபத்தில் வேறு சில படங்களுக்காக நடந்த படப்பிடிப்பின் போது தீவிபத்து, உயிரிழப்பு போன்றவை ஏற்பட்டுள்ளன.

இது போன்ற பிரச்சினைகளால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டவே இந்த படம் காப்பீடு செய்யப்பட்டு இருப்பதாக தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.

30 வரு­டங்­க­ளாக தினமும் செல்பீ படம்­பி­டித்த மனிதர்!!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ஒருவர் கடந்த 30 வரு­டங்­க­ளாக செல்பீ படம்­பி­டித்து வந்­துள்ளார்.

கார்ல் பெடேன் எனும் இவர், செல்பீ எனும் வார்த்தை பயன்பாட்டுக்கு வரு­வ­தற்கு வெகு காலத்­துக்கு முன்­னரே தன்னைத் தானே படம்­பி­டிக்க ஆரம்­பித்­தாராம்.

போஸ்டன் கல்­லூ­ரியில் பேரா­சி­ரி­யாகப் பணி­யாற்றும் இவர், 1987 ஆம் ஆண்­டி­லி­ருந்து தினமும் ஒரு செல்பீ பட­மா­வது பிடித்­துக்­கொண்­டாராம்.

பல்­வேறு இடங்­களில் ஏறத்­தாழ ஒரே பின்­னணி. ஒளி­ய­மைப்­புடன் இவர் செல்பீ படம் பிடித்து வந்தார். இது­வரை சுமார் 11,000 செல்பீ படங்­களைப் பிடித்­துக் ­கொண்­டுள்ளார்.

தனது இத்­திட்­டத்­துக்கு எவ்­ரிடே செல்பீ ப்ரஜெக்ட் என இவர் பெய­ரிட்­டுள்ளார்.

நேற்­றுடன் இந்த செல்பீ திட்­டத்­துக்கு 30 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின. இனியும் இந்நடவடிக்கையை தொடரவுள்ளதாக கார்ல் பெடேன் கூறுகிறார்.

வேலை செய்யும் பெண்களின் கவனத்திற்கு!!

எம்முடைய பல குடும்பங்களில் தற்போது குடும்பத்தலைவர் மற்றும் இல்லத்தரசி என இருவரும் அலுவலகத்திற்கு சென்று பணி செய்து பொருள் ஈட்டுகிறார்கள். ஒரு சில குடும்பங்களில் இதுவே போதாமல் இருக்கிறது என்பது வேறு விடயம். தற்போது இவ்வாறு பணிக்கு செல்லும் பெண்கள் தாங்கள் பணி செய்யுமிடங்களில் சந்திக்கும் பணி சார்ந்த சவால்களால் அவர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிறது என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

வேலைக்கு செல்லும் பெண்களில் 40 சதவீதத்தினர், பணியிட சூழல் காரணமாக அதிக மன அழுத்தம், மன உளைச்சல் மற்றும் மனம் சார்ந்த சிக்கலுக்கு ஆளாகிறார்கள். இதனால் அவர்களின் இதயம் பாதிக்கப்படுகிறது. பக்கவாத பாதிப்பும் ஏற்படுகிறது என்று கண்டறிந்திருக்கிறது அண்மைய ஆய்வு. அதிலும் பணியிடங்களில் ஆண்களுக்கு நிகராக முடிவு எடுக்கும் இடங்களில் இருக்கும் பெண்கள், எப்போதும் விழிப்புணர்வுடன் பணியாற்றவேண்டியதிருப்பதால் இவர்களால் மனதை இயல்பாக வைத்து கொள்ள முடிவதில்லை.

அத்துடன் மனதை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளவும் முடிவதில்லை. இதனால் முதலில் தூக்கமின்மைக்கு ஆளாகிறார்கள். அதனைத் தொடர்ந்து சத்தான சரிவிகித உணவையும் இவர்களால் எடுத்துக் கொள்ள முடிவதில்லை. மனதை இயல்பாகவைத்துக் கொள்ள உதவும் யோகா, தியானம் போன்றவற்றில் முழுமையாகவும், தொடர்ச்சியாகவும் இவர்களால் ஈடுபட முடிவதில்லை. அதிலும் திருமணத்திற்கு முன்னர் பணி செய்துவிட்டு வேறு சில காரணங்களால் பணியிலிருந்து விலகியிருப்பார்கள்.

இவர்கள் மீண்டும் சவாலான பணியில் சேரவேண்டிய சூழல் வந்தால் மனதளவில் சோர்ந்து போகிறார்கள். அதே போல் சவாலான பணியில் இருக்கும் பெண்கள், பணியிலிருந்து விலகிவிட்டால் அவர்களின் உடல் எடை அதிகரித்துவிடுகிறது. அவர்களின் இதயத்தில் இருக்கும் இரத்த குழாய்களில் படியும் கொழுப்புகளின் அளவும் அதிகரித்துவிடுகிறது. இவையனைத்தும் பெண்கள் மனம் சோர்வாக இருக்கும் போது அவை எதிர்ப்பதற்கு உற்பத்தியாகும் ஹோர்மோன்களின் எதிர்விளைவு என்றும் கண்டறிந்திருக்கிறார்கள்.

இதனால் மருத்துவர்கள் பெண்களுக்கு அவர்களின் மனதைக் கட்டுக்குள் வைத்திருக்க ஒரு சில விடயங்களைப் பற்றி அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

உங்களுடைய வாழ்க்கையில் பணி நிமித்தமான காரியங்களின் ஊடுருவலை ஒரு எல்லைக்குள் வரையறுத்துக் கொள்ளவேண்டும். relaxation techniques என்றழைக்கப்படும் தியானம் மற்றும் ஆழ்ந்து சுவாசித்தலில் தொடர்ச்சியாக பயிற்சி எடுக்கவேண்டும். வீட்டில் இருக்கும் போது அலுவலக பணிகள் செய்யவேண்டிய சூழல் உருவானால், முதலில் அதற்கான நேரத்தை திட்டமிட்டு, அதன் படி செயல்படவேண்டும். கடந்து போன விடயங்களைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்திக் கொண்டு, உங்களின் நாளாந்த உடற்பயிற்சிகளை எக்காரணம் கொண்டு இடைநிறுத்தம் இல்லாமல் தொடரவேண்டும். இது போன்ற சில விடயங்களை கவனத்தில் கொண்டால் உங்களுக்கு ஆரோக்கிய இழப்பு ஏற்படாது. அத்துடன் சாதிக்கவும் முடியும்.

வவுனியா பிரதேச செயலகத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள்!!

 
வவுனியா பிரதேச செயலகம் வருடாந்தம் நடாத்தும் கழகங்களுக்கடையிலான விளையாட்டு நிகழ்வுகள் இன்று (26.02.2017) பிற்பகல் 2 மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களாக ம.தியாகராசா, இ.இந்திரராசா, செந்தில்நாதன் மயூரன், ஜெயதிலக ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர்.

வவுனியாவின் முன்னணி விளையாட்டுக்கழகங்களான யங்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் அல்ஹிஜ்றா விளையாட்டுக்கழகங்கள் கலந்து கொள்ளும் உதைபந்தாட்டப் போட்டியும் இடம்பெற்றது.

வவுனியாவிலுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டுக்கழகத்திற்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர், கலாச்சார உத்தியோகத்தர், அலுவலக உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் இடம்பெறும் போராட்டத்திற்கு தென்னிலங்கை முஸ்ஸிம், சிங்கள மக்கள் ஆதரவு!!

 
வவுனியா – கந்தசாமி ஆலயத்தில் இருந்து (24.02.2017) காலை 11.30மணியளவில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் மூன்றாவது நாளாக தொடர்கின்றது.

இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தென்னிலங்கையிலிருந்து முஸ்ஸிம், சிங்கள மக்கள் இப் போராட்டத்தில் இணைந்துள்ளதுடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் அவர்களின் துக்கத்தினையும் கேட்டறிந்தனர்.

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த அணிதிரள்வோம் : சிவசக்தி ஆனந்தன்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும் என்பது வன்னிவாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கை. இதுகுறித்து நாம் பாராளுமன்றத்திலும் தொடர்ந்து உரையாற்றி வந்துள்ளோம்.

கடந்த 22.09.2016 அன்று பாராளுமன்றத்தில் பல்கலைக்கழக திருத்தச்சட்ட மூல விவாதத்தில் வன்னி பல்கலைக்கழமாக தரமுயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து உரையாற்றியபோது, உயர்கல்வி அமைச்சர் அதற்கான சம்மதத்தை தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணி நடத்தப்படவுள்ளது.

வன்னிக்கென்று தனியான பல்கலைக்கழகம் அமைய வேண்டுமென்பதில் நாம் அனைவரும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளோம் என்பதை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. எமது எதிர்கால சந்ததிகள் எமது பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்று உலகிற்கு எடுத்துக்காட்டாகத் திகழவேண்டும் என்பதே நம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகவும் வேண்டுதலாகவும் இருக்கின்றது.

ஆகவ 28.02.2017 அன்று காலை 10 மணிக்கு வவுனியா குருமன்காட்டிலிருந்து ஆரம்பமாகும் கோரிக்கை பேரணியில் வன்னியைச் சேர்ந்த கல்விச் சமூகத்தினர், பல்கலைக்கழக ஆசிரியர் மாணவர்கள், பொது அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பினர் என்று அனைவரையும் அடைகடலென அணிதிரளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

எமது இளைய சமுதாயத்தினருக்காக நாம் நடத்தும் வேள்வியில் அனைவரும் அர்ப்பணிப்புடன் அணிதிரள்வோம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

வவுனியா பூந்தோட்டம் முகாம் மக்களின் அவல நிலையை கேட்டறிந்த தென்பகுதி இளைஞர்கள்!!

 
வவுனியா பூந்தோட்டம் முகாமில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் தங்கியுள்ள 110 குடும்பங்களையும் தென்பகுதி இளைஞர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்தனர்.

அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் வலையமைப்பின் ஏற்பாட்டில் தெற்கின் மாத்தறை, மொனறாகலை ஆகிய பகுதிகளில் இருந்து வருகை தந்த சிங்கள மற்றும் தமிழ் இளைஞர், யுவதிகள் சுமார் 20 பேர் நேற்றைய தினம் (சனிக்கிழமை) இவ் விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது அம் மக்களின் அடிப்படை வசதிகள், மாணவர்களின் கல்வி நிலை போன்றவை தொடர்பில் ஆராய்ந்த இளைஞர்கள், தமது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

யுத்தம் முடிவடைந்து 8 வருடங்களின் பின்னரும் ஒழுங்கான வீடு, மலசல கூடம், மின்சாரம், குடிநீர் என எந்த அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் இம் மக்கள் வாழ்வது பற்றி தென்பகுதிகளில் வாழும் தம்மைப் போன்ற பலருக்கும் தெரியாதென இவ் இளைஞர்கள் தெரிவித்தனர்.

இங்குள்ள மக்களின் நிலைமை மற்றும் வடக்கின் உண்மை நிலை தொடர்பில் தெற்கில் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தி, தெற்கு மக்கள் மத்தியில் உள்ள சில தவறான எண்ணங்களை நீக்க முயற்சிப்பதாகவும் இங்குள்ள மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு தம்மாலான உதவிகளை வழங்குவதாகவும் குறிப்பிட்டனர்.

இதேவேளை, குறித்த இளைஞர், யுவதிகள் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று காணி விடுவிப்பு கோரி போராடும் மக்களுக்கும் தமது ஆதரவை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 3வது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்!!

 
வவுனியா – கந்தசாமி ஆலயத்தில் இருந்து (24.02.2017) காலை 11.30 மணியளவில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் மூன்றாவது நாளாக தொடர்கின்றது.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் மூன்றாவது நாளாக இடம்பெற்றுவருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவு வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவு ஏதும் எட்டப்படாத காரணத்தினால் இவர்கள் தொடர் போராட்டம் ஒன்றை சுழற்சி முறையில் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொது அமைப்புக்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவை தாங்கள் வேண்டிநிற்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

வன்னிப் பல்கலைகழக கோரிக்கை ஆதரவு பேரணிக்கு அணிதிரளுமாறு வடக்கு சுகாதார அமைச்சர் அழைப்பு!!

வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்த கோரி எதிர்வரும் 28ம் திகதி வவுனியாவில் நடபெறவுள்ள மாபெரும் பேரணிக்கு அனைவரையும் அணிதிரளுமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பான அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 1992 ல் இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் பல்கலைகழக கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. 25 வருடங்கள் கடந்துள்ள நிலையில் நாட்டின் ஏனைய மாகாணங்களிpன்; பல்கலைகழக கல்லூரிகள் பல்கலைகழகங்களாக தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா பல்கலைகழக கல்லூரியானது தொடர்ந்தும் யாழ்ப்பாண பல்கலைகழக நிர்வாகத்தின்கீழ் வவனியா வளாகமாக இயங்கி வருகின்றது.

காலத்தின் தேவைகருதி வவுனியா வளாகமானது பல்கலைகழகமாக தரமுயர்த்தப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரும் வவுனியா மாவட்ட புத்திஜீவிகளுடன் இணைந்து வளாகத்தினை பல்கலைகழகமாக தரமுயர்ந்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தேன். அதேபோன்று எமது மாவட்டத்தைசேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் பலமுயற்சிகளை எடுத்திருந்தனர். எனினும் இந்த முயற்சி இதுவரை கைகூடவில்லை.

வன்னி பிரதேசமானது கடல்வளம், விவசாயம், இயற்கையான காடுகள் மற்றும் பல்வகையான நீர் வளங்களை கொண்ட பிரதேசமாக காணப்படுகின்றது. இந்த பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்திக்கு துறைசார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவேண்டிய தேவையுள்ளது. அத்துடன் வன்னிப்பிரதேசத்திற்கென தனியான பாரம்பரியம், வரலாறுகள் உள்ளன.

இவற்றையெல்லாம் ஆராய்ச்சி செய்ய நமது பிரதேசத்துக்கென தனியான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படுவது மிகவும் முக்கியமானதாகும். இவ்வாறு பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படும் சந்தர்ப்பத்தில் வன்னிப்பிரதேசத்திற்கு பொருத்தமான புதிய பீடங்களையும் இங்கே ஆரம்பிக்கமுடியும்.

மூன்று இனங்கள் வாழுகின்ற இந்த பிரதேசத்தின் அபிவிருத்தியை இலக்காக கொண்டு வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைகழகமாக தரமுயர்த்த அரசாங்கத்தை வலியுறுத்தி நடைபெறவள்ள இந்த பேரணிக்கு தனிப்பட்ட வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தனிப்பட்ட அரசியல் வேறுபாடுகளினால் நாம் பிரிந்துநின்று எமது மாவட்டத்திற்கு வந்த பாரிய அபிவிருத்திட்டங்களை கோட்டை விட்ட அண்மைய கசப்பான அனுபவங்கள் எமக்குள்ளது. இந்த விடயத்திலும் அவ்வாறான துரதிஸ்ரவசமான நிகழ்வுகள் நடைபெறுவதை அனுமதிக்கமுடியாது. எனவே எதிர்வரும் 28ம் திகதி காலை 10 மணிக்கு குருமண்காட்டில் அமைந்துள்ள வவனியா வளாகத்தின் பௌதீகவிஞ்ஞான பீடத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்படவுள்ள பேரணியில் கலந்துகொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மக்களின் காணி மீட்புப் போராட்டம் 5வது நாளாக தொடர்கின்றது!!

 
வவுனியா – இராசேந்திர குளம் மக்கள் தங்களது நிலங்களை பெற்றுதருமாறு கோரி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று (26.02.2017) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

தாம் வாழும் காணிகளையே தமக்கு வழங்க வேண்டும் எனக் கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றுடன் ஐந்தாவது நாளாக போராட்டம் தொடர்கின்றது.

இத் தொடர் போராட்டத்தில் சிறுவர்கள், முதியவர்கள் எனப்பலரும் இணைந்து இரவிரவாக பனியின் மத்தியிலும் தொடர்கின்றனர்.

தற்போது ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் இனங்காணப்பட்ட பகுதியில் 47 குடும்பங்களுக்கும் காணி பகிர்ந்தளிக்கப்பட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும், மூன்று மாத கால அவகாசத்தின் பின்னர் அக்காணியினை வன இலகா திணைக்களமிடமிருந்து பெற்றுத் தருவதாகவும் அது வரையில் குறித்த ஒதுக்கப்பட்ட பகுதியில் குடியிருக்குமாறும் வன இலகா அதிகாரிகளால் எவ்வித இடையூறும் எற்படாது என்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாக்குறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பொலிஸாரால் மாணவிக்கு மூக்குக் கண்ணாடி!!

 
வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சமூதாய பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் நேற்று (25.02.2017) வவுனியா பாரதிபுரத்தை சேர்ந்த வறுமைக்கோட்டுக்குற்பட்ட குடும்பத்தை சேர்ந்த செல்வி ரவீந்திரன் சரண்யா என்ற மாணவிக்கு வவுனியா பொலிஸ் உறுப்பினர்கள் மற்றும் சமுதாய பொலிஸ் குழு உறுப்பினர்கள் இணைந்து இலவச மூக்கு கண்ணாடியினை வழங்கினர்.

இன் நிகழ்வில் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.அத்தனாயக்க , சமுதாய பொலிஸ் குழு பொறுப்பதிகாரி உ.நிரோசன், நெளுக்குளம் பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா பிரமண்டு வித்தியாலயத்தில் சாரணியத்தின் தந்தையின் 160 வது பிறந்த தினம்!!

 
வவுனியா பிரமண்டு வித்தியாலயத்தில் சாரணியத்தின் தந்தை ராபர்ட் பேடன் பவல் பிரபுவின் 160 வது பிறந்ததினம் கடந்த 23.02.2017 காலை 8.30 மணிக்கு பாடசாலையின் அதிபர் எம்.ஏ.மோகன் தலமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக எம்.எஸ்.பத்மநாதன் (மாவட்ட ஆணையாளர்), அதிதிகளாக வ.பீரதிபன் (விபுலானந்த கல்லூரி உதவி சாரணிய தலைவர் ) அ.அனந்தன் ( தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயம்) , பி.கெர்கோன் , ஜெயந்தி (பிரமண்டு வித்தியாலய ஆசிரியர்), மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சாரணியத்தின் தந்தை ராபர்ட் பேடன் பவல் பிரபுவின் படத்திற்கு மாலை அணிவித்ததுடன் சாரணியத்தின் தந்தை பேடன் பவல் பிரபு பற்றிய சில விடயங்கள் மாணவர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்த தயாராகும் இலங்கைப் பெண்!!

பிரித்தானியாவில் 8 வருடங்களாக வாழ்ந்த ஈழப் பெண் சிரோமினி சற்குணராஜா நாடு கடத்தப்படவுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிரோமினி கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாளை மறுதினம் அவர் நாடு கடத்தப்படவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த ஈழப் பெண் இந்த வருடம் தன் மின் பொறியியல் பட்டப் படிப்பினை நிறைவு செய்யவுள்ளார். 2009 ஆம் ஆண்டு லண்டனுக்கு சென்ற சிரோமினி அவரது தந்தையின் மாணவர் விசாவை வைத்தே தங்கியுள்ளார். இருப்பினும் குறித்த யுவதியின் தந்தை 2011 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.

பின்னர் சிரோமினியின் இரண்டாம் நிலை கல்வி நிறைவடைந்து பல்கலைக்கழக பட்டப் படிப்பு தொடங்கிய வேளையில் அவரது தாயாரையும் அவரும் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் 21ம் திகதி அந்த பெண்ணின் புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

எனவே, விண்ணப்பம் குறித்து மறுபரிசீலனை செய்வதற்கு உள்துறை செயலாளர் ஒருவருக்கு மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 28 ஆம் திகதி நாடு கடத்துவதற்கு எதிராக தனக்கு ஆதரவு அளிக்குமாறு குறித்த பெண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது நாடு கடத்தலை நிறுத்துமாறு அங்குள்ள 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தனது மகளின் பட்டப்படிப்பு இடையிலேயே நின்று விடுமோ என சிரோமினியின் தாய் கவலை வெளியிட்டுள்ளார்.

291 கோடி ரூபா லொத்தர் பரிசை நெருங்கிய நண்பியுடன் பகிர்ந்து கொண்ட பெண்!!

பிரிட்டனைச் சேர்ந்த நெருங்கிய நண்பிகள் இருவர் லொத்தர் சீட்டிழுப்பில் தமக்குக் கிடைத்த சுமார் ஒன்றைரைக் கோடி ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 291 கோடி ரூபா) பரிசுப் பணத்தை இருவரும் சமமாக பகிர்ந்து கொண்டுள்ளனர்.

லொரின் ஸ்மித் (54) எனும் பெண் தான் இந்த லொத்தர் சீட்டை வாங்கினார். இந்த லொத்தர் சீட்டுக்கு கிடைத்த 15,342,900 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பரிசு பணத்தை தனது நண்பி பௌலா பராகுளோவுடன் (45) பரிசை பகிர்ந்துகொள்ள முன்வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் நீண்ட கால நண்பிகள். முன்னர் ஒரு தடவை லொத்தரில் கிடைத்த 25 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (4,750 ரூபா) பரிசை இவர்கள் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

தற்போது பெருந்தொகை பரிசு கிடைத்த நிலையிலும் அப் பணத்தை இருவரும் பகிர்ந்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.

இந்த லொத்தர் பரிசினால் தமது நட்பு மாறப் போவதில்லை என்கின்றனர் லொரினும் பௌலாவும்.

திருமணத்தை நிறுத்திய வைக்கம் விஜயலட்சுமி : கட்டளைகள் பிடிக்கவில்லையாம்!!

பிரபல மலையாள பாடகி வைக்கம் விஜயலட்சுமி, மணமகனின் பல்வேறு உத்தரவுகளால் தன் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

கேரளாவை சேர்ந்த வைக்கம் விஜயலட்சுமி கண்கள் இல்லாத மாற்றுத் திறனாளி. இவர்க்கு இயற்கையிலேயே இருந்த இனிமையான குரலால், பல்வேறு சவால்களை கடந்து தற்போது திரைப்படங்களில் பல பாடல்களை பாடி வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 13ம் தேதி சந்தோஷ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் மார்ச் 29ல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது

இந்நிலையில் வைக்கம் விஜயலட்சுமி தன் திருமணத்த நிறுத்தியுள்ளார். நேற்று இதுகுறித்து விஜயலட்சுமி பேட்டியளித்தார்.

அதில், நான் என் திருமணம் குறித்து பல கனவுகள் கண்டிருந்தேன். என் கண்ணாக என் கணவர் அமைவார் என்று பேசியிருந்தேன். ஆனால் தற்போது இந்த திருமணத்தை நிறுத்துவது சரியான முடிவாக இருக்கும் என தோன்றுகிறது.

என்னை திருமணம் செய்ய இருந்த சந்தோஷ் என்பவரின் குடும்பத்தினர் வைத்த சில கட்டளைகள் தான் இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது.

திருமணத்திற்கு பின் என்னை சினிமாவில் பாடக்கூடாது என கூறினர். வீட்டிலேயே பாடலாம் என்றும் வீட்டில் குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிதரலாம் என கூறினர். மேலும் சில உத்தரவுகள் இட்டனர். அதை என் மனம் ஏற்காததால், இப்போது இந்த திருமணத்தை நிறுத்துவது தான் சரியானதாக இருக்கும் என்ற முடிவை நான் எடுத்துள்ளேன் என பேசியுள்ளார்.

ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாவில் உருவாகும் கடவுளைக் கண்டுபிடிக்கப்போகும் தொலைகாட்டி!!

பூமியில் இருந்து சுமார் பதினாறு இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் நிலைநிறுத்தப்படவுள்ள, உலகின் விலையுயர்ந்த தொலைகாட்டி ஏறக்குறைய பூர்த்தி நிலையை எட்டியுள்ளது.

ஏறக்குறைய எட்டு பில்லியன் டொலர் (ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபா) செலவில் உருவாகிவரும் ‘ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொலைகாட்டியை கடந்த இரண்டு வருடங்களாக உருவாக்கி வருகிறது நாஸா!

கண்ணாடிகளுக்குப் பதில், தங்கத்தாலான பதினெட்டு அறுங்கோணங்கள் ஒன்றாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதன் விட்டம் மட்டும் 6.5 மீற்றர். இதன்மூலம், விண் கதிர்கள் ஊடுருவ மாட்டா. இந்தப் பாரிய தங்கப் பரப்பின் மூலம், சூரியனில் இருந்து நட்சத்திரங்கள் பெறும் ஒளியைவிட ஏழு மடங்கு அதிகமான ஒளியைப் பெற்றுக்கொள்ளும். அகச்சிவப்புக் கதிர்கள் மூலமே தான் சேகரிக்கும் தகவல்களைப் பரிமாறவிருப்பதனால், கடும் குளிரான சூழலில் இது இயங்கத் தேவையான முறையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறித்த தொலைவில் இந்தத் தொலைகாட்டி நிலைநிறுத்தப்பட்டால், ‘பிக் பாங் தியரி’ என்று சொல்லப்படும் அண்டத்தின் முதல் வெடிப்புக்கான காரணத்தை ஆராய முடியும் என்று நாஸா நம்புகிறது. அதாவது, இந்தப் பேரண்டம் உருவாவதற்குக் காரணமாக இருந்த முதல் ஒளியைக் கண்டுபிடிக்க முடியும். இந்த ஒளியே கோள்கள், நட்சத்திரங்கள் அடங்கிய விண்மீன் திரள்கள் உருவாகக் காரணம்.

அந்த ஒளியை இந்தத் தொலைகாட்டி மூலம் கண்டுபிடிக்க முடியும் என்றும், இதன்மூலம் பிரபஞ்சத்தின் உருவாக்கம் பற்றிய பல நம்ப முடியாத, ஆச்சரியம் தரும் தகவல்களைப் பெற முடியும் என்றும் விண்மீன் திரள்களின் நடுவே காணப்படும் ‘பிளாக் ஹோல்’ எனப்படும் கருந்துளையை ஆராய முடியும் என்றும் நாஸா உறுதியாக நம்புகிறது.

என்றாலும், இந்தத் தொலைகாட்டியை அவ்வளவு எளிதாக விண்ணில் செலுத்தி விட முடியாது என்றும் நாஸா தெரிவித்துள்ளது.

தற்போது அமெரிக்காவின் மேரிலேண்டில், க்றீன்பெல்ட்டில் மிக மிகப் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டிருக்கும் இந்தத் தொலைகாட்டி முழுமைபெற்றதும் இதை, காலநிலைப் பண்புகளால் தாக்கப்படமுடியாத ஒரு கொள்கலனுக்குள் வைக்கப்படவேண்டும். பின்னர் இதை ஏவுவதற்காக அன்ட்ரூஸ் நகருக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும். இது மிக மிகச் சவால்கள் நிறைந்தது.

ஒரு ட்ரக் மூலம் மிக மிக மெதுவாகவும், மென்மையாகவும் இரவு நேரத்தில் இடம் மாற்றப்பட வேண்டும். வீதிகளில் மேடு, பள்ளம், குழிகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக சில வாகனங்கள் இந்த ட்ரக்கின் முன்புறம் செல்லும். இதற்காக இந்த இரண்டு நகரங்களினதும் பிரதான வீதிகளை மூட வேண்டியிருக்கும். இவ்வாறு மிகக் கவனமாக எடுத்துச் செல்லப்படும் தொலைகாட்டி, இராணுவத்துக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் சி-5சி என்ற விசேட ரக விமானத்தில் மிகக் கவனமாகப் பொருத்தப்படும்.

இந்த விமானத்தின் மூலமாக ஹூஸ்டன் ஏவுதளத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு விண்வெளியைப் போன்ற புறச்சூழல் கொண்ட – அதாவது ஈர்ப்புவிசை அற்ற – ஒரு அறையில் மிதக்கவிடப்பட்டு பரிசோதிக்கப்படும்.

பின்னர் அங்கிருந்து லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கே, சூரிய ஒளியில் இருந்து தப்புவதற்கான பாதுகாப்புக் கவசங்கள் மற்றும் திசையறை தொழில்நுட்பங்கள் என அனைத்தும் பொருத்தப்படும். பின்னர், வட அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவுக்கு, பனாமா கால்வாய் வாயிலாக கவசப் படகு ஒன்றில் எடுத்து வரப்படும். அங்கிருந்தே இந்தத் தொலைகாட்டி விண்ணில் ஏவப்படும்.

விஞ்ஞானிகளின் தற்போதைய கணிப்பின்படி அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்தத் தொலைகாட்டி விண்ணுக்கு ஏவப்படும் என்று தெரியவருகிறது. எனினும், 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமளவிலேயே இது விண்ணில் நிலைநிறுத்தப்படும் எனத் தெரியவருகிறது.

பூமியில் இருந்து மிக மிக அதிக தொலைவில் நிலைநிறுத்தப்படும் என்பதால், இதில் ஏதும் பழுதுகள் ஏற்பட்டால் அங்கு போய் அதைச் சரிசெய்வது முடியாத காரியம். எனவே, தற்போது இந்தத் தொலைகாட்டியை விஞ்ஞானிகள் மிகக் கவனமாக உருவாக்கி வருகிறார்கள்.