வவுனியா பொது வைத்தியசாலையில் பன்றிக்காச்சல் காரணமாக கடந்த 22ம் திகதி இருவர் இனம் காணப்பட்டு அதி தீவிரசிகிச்சைப்பிரில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் மேலும் 5பேருக்கு பன்றிக்காச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது.
நேற்று இருவருக்கும் இன்று மூவருக்குமாக மொத்தம் ஏழுபேர் இனங்காணப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப்பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 22ம் திகதி இனங்காணப்பட்ட 25 வயதுடைய ஹெப்பிட்டிக்கொலவ பகுதியைச் சேர்ந்த குழந்தை கிடைத்து ஒரு கிழமையான தாயார் தொடர்ந்தும் அதி தீவிரசிகிச்சைப்பிரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் 37 வயதுடைய பூவரசம்குளம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு அதில் முன்னேற்றம் எற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த வைத்தியசாலைப் பணிப்பாளர் பன்றிக்காச்சல் ஏற்பட்டவர்களை பார்வையிடுவதற்கு கற்பிணித்தாய்மார், சிறுவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துவரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
களுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
எதிர்காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் சகல தரப்புகளுடனும் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரால் மூவரடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நீதிபதி ரூமி மர்சூக், முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் காமினி நவரத்ன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் எஸ். மெதகம ஆகியோர் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.
பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பின், இந்த விபரீதத்தை தவிர்த்திருக்க முடியும் என்பது விடயங்களை ஆராய்ந்தபோது தெரியவந்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றுக் காலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் பாதாள உலகத் தலைவர் சமயங் எனப்படும் அருண உதயஷாந்த பதிரண உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக 09 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வவுனியா சேமமடு சண்முகானந்தா வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற தேர்தல் நேற்று 27.02.2017 திங்கட்கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் பிரதம தேர்தல் அதிகாரியான அதிபர் எஸ்.சசிகுமார் தலைமையில் இடம்பெற்றது.
மாணவர்களின் உற்சாகமான வாக்களிப்பு மத்தியில் இடம்பெற்ற தேர்தலில் தெரிவு செய்யபட்ட மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்றைய தினம் 28.02.2017 இடம்பெறுகின்றது.
வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று (27.02.2017) மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், தாதிய உதவியாளர்கள் அனைவருக்கும் கையில் சைட்டத்திதை தடை செய் என்ற வசனம் எழுதப்பட்ட பட்டி அணிந்து தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இப் போராட்டத்தினை அனுராதபுரம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ளதாக வைத்தியசாலைப்பணிப்பாளர் வைத்திய கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆசிரியரும் தற்போது யாழ்ப்பாணம் ஏழாலை மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபராக கடமையாற்றி வருபவருமான சிவசுப்ரமணியம் சிவகணேசன் அவர்கள் 27.02.2017 திங்கட்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார் .
அன்னாரின் இறுதி கிரியைகள் ஏழாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நாளை 28.02.2017 செவ்வாய்கிழமை 2.00 மணியளவில் இடம்பெறும் .
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன்(27.02.2017) நான்காவது நாளாக கடும் மழைக்கு மத்தியிலும் இடம்பெற்றுவருகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவு வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவு ஏதும் எட்டப்படாத காரணத்தினால் இவர்கள் தொடர் போராட்டம் ஒன்றை சுழற்சி முறையில் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொது அமைப்புக்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவை தாங்கள் வேண்டிநிற்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்
சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் தவறான திரைப்படம் விருதுக்கு அறிவிக்கப்பட்டதால் ஒஸ்கார் விருது வழங்கும் விழா கேலிக்கூத்தாக முடிவடைந்தது.
திரைத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஒஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செலஸ் நகரில் நடைபெற்றது.
89-ஆவது ஒஸ்கார் விருது விழாவான இதில் 24 பிரிவுகளில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.
லா லா லேண்ட் என்ற திரைப்படம் 14 பிரிவுகளிலும் மூன்லைட், அரைவல் ஆகிய திரைப்படங்கள் 8 பிரிவுகளிலும் ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், ஒஸ்கார் விருதுபெறும் சிறந்த திரைப்படமாக இசைத் திரைப்படமான லா லா லேண்ட் அறிவிக்கப்பட்டது.
அந்த திரைப்படத்துடன் தொடர்புடைய நட்சத்திரங்கள் மற்றும் படைப்பு குழுவினர் தங்களின் ஏற்புரையையும் நிகழ்த்தத் தொடங்கிவிட்டனர்.
அப்போது , ஒரு தயாரிப்பாளர் குறுக்கிட்டு ´மன்லைட் திரைப்படத்துக்குத்தான் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை வெளியிட்டவரும், நடிகருமான வாரன் பெய்ட்டி வெற்றித் திரைப்படம் தொடர்பாக தன்னிடம் தவறான உறை அளிக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.
அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த, தேசிய பாதுகாப்பு சபை பணியாளரான ருமானா அகமது என்ற இஸ்லாமியப்பெண் டிரம்பின் பயணத்தடை அறிவித்த 8 நாட்களில் பணியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றவுடன், தனது நிர்வாகத்தில் அவர் பல்வேறு மாற்றங்ககளை செய்தார். அத்தோடு தேசிய பாதுகாப்பு சபைக்கு புதிய தலைவர் மற்றும் பணியாளர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பங்களாதேஷ் வம்சாவளியை சேர்ந்த ருமானா, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஒபாமா அரசாங்கத்தின் கீழ் பணிபுரிந்து வந்துள்ளார்.
மேலும் புதிய ஜனாதிபதியாக டொனால்டட் டிரம்ப் பதவி ஏற்ற பிறகு, ஈராக், ஈரான் மற்றும் சிரியா உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடையை ஏற்படுத்தியதன் மூலம் பயணத்தடையை விதித்தார். குறித்த திட்டம் அறிவிக்கப்பட்ட 8 தினங்களில் ருமானா அகமது தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.
குறித்த பணி விலகலானது வெள்ளை மாளிகையில் உணர்ந்த பாரபட்சம், மற்றும் இன ரீதியாக தாம் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தமையினாலேயே ஏற்படுத்தப்பட்டதாக ருமானா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தாயொருவர் திடீரென சுகயீனமுற்ற நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா – நெடுங்கேணி, வேலங்குளத்தை சேர்ந்த கனகரட்ணம் தவமணி (வயது 64) எனும் தாயாரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தாயின் இரண்டு பிள்ளைகளும் 12.05.2009 ஆம் ஆண்டு இரட்டைவாய்க்கால் பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த மாதம் வவுனியாவில் நான்கு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த தாய் தற்பொழுது உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈராக்கில் நாய் குட்டியின் உடலில் ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் கட்டிவிட்டுள்ள செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்ற ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையேயான போர் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
எதிராளிகளை கொல்ல ஐ.எஸ் தீவிரவாதிகள் நாய் குட்டியின் உடலில் வெடிகுண்டுகளை கட்டி சதிசெயலில் ஈடுபடுவது தற்போது தெரியவந்துள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளை எதிர்க்கும் ஈராக் நாட்டை சேர்ந்த 3 கிளர்ச்சியாளர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அதில், ஒரு நாய் குட்டியின் உடலில் மூன்று சிறிய பிளாஸ்டிக் பாட்டில்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் சிறிய அளவிலான வெடிகுண்டுகள் இருக்கிறது என அவர்கள் கூறுகின்றனர்.
அதை ரிமோட் மூலம் வெடிக்க வைக்கலாம் என கூறிய கிளர்ச்சியாளர்கள் அதை தாங்கள் செயலிழக்க செய்து விட்டோம் என கூறுகின்றனர்.
மேலும், இந்த வெடிகுண்டை பயன்படுத்தி 4 பேர் வரை கொல்லவும் அல்லது படுகாயம் அடைய வைக்கவும் முடியும் என அவர்கள் கூறியுள்ளனர்.
யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள மடத்தடியில் இரு குழுக்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மோதல் மடத்தடியிலுள்ள சுகாதார நிலையம் ஒன்றுக்கு அருகில் நேற்று மாலை வேளையில் நடந்துள்ளதாகவும், இதனால் குறித்த பகுதியில் பதற்ற நிலை தோன்றியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கத்திகள், வாள்கள், சைலன்சர் மற்றும் பல ஆயுதங்களுடன் சுமார் இருபது பேர் வரையில் குறித்த மோதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அப்பகுதியில் உள்ள முச்சக்கர வண்டியொன்று சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அந்த பகுதியிலுள்ள வீடுகளின் மேலும் கற்கள் வீசப்பட்டதாக மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
எனினும் பொலிஸார் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் குறித்த கும்பல்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வவுனியாவில் கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு தமது இருப்பிடத்தின் உரிமைக்காக மேற்கொண்டபோராட்டம் இன்று (27.02.2017) மாலை ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா, வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரத்தின மேற்கொண்ட முயற்சியைடுத்து வெற்றியளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடந்த 6 நாட்களாக இராசேந்திரகுளம் விக்ஸ்காட்டுப் பகுதியிலுள்ள மக்கள் தாம் கடந்த 6 வருடங்களாக அப்பகுதியில் இருந்து வருவதாக தெரிவித்து 47 குடும்பங்களுக்கும் அப்பகுதியிலே காணியினை பெற்று வசிப்பதற்கு ஆவணங்களைப் பெற்றுத்தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனைத் அங்கு சென்ற ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப. உதயராசா அப்பகுதி மக்களின் நிலைமைகளை கேட்டறிந்ததுடன் வன இலகா திணைக்கள அதிகாரிகளுடன் பிற்பகல் 2 மணியலிருந்து 4.30 மணிவரையும் மேற்கொண்ட நீண்ட கலந்துரையாடலையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்தினால் வன இலகா திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் விக்ஸ்காட்டுப்பகுதியில் 47 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அவர்களுக்கான காணியினை அந்த இடங்களிலே பெற்றுக் கொடுப்பதற்கு சிபாரிசு செய்யுமாறு வழங்கப்பட்ட கடித்தினை பெற்று ஜனாதிபதியியுடன் ஒரு சந்திப்பை மேறகொண்டு குறித்த கடிதத்திற்கு அனுமதி பெற்றுத்தருவதாக தொடர் போராட்டம் மேற்கொண்டவர்களிடம் வாக்குறுதியளித்தார் அதையடுத்து தொடர் போராட்டம் மேற்கொண்டவர்கள் தமது போராட்டத்தினை இன்று பிற்பகல் 4.30 மணியலிருந்து கைவிடுவதாகவும் இவ்விடயத்தில் ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா நல்ல ஒரு முடிவினை தமக்கு வழங்குவார் என்ற நம்பிக்கையில் தாம் மேற்கொண்ட போராட்டத்தினை முடித்துக் கொள்வதாகவும் தமக்கான ஆதரவினை வழங்கிய அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும், பொது அமைப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதாள குழு நபர் ஒருவர் உட்பட 7 பேர் பலியானதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
நீண்ட நாட்களாக இரு பாதாள குழுக்கள் இடையே நிலவி வந்த பகையே இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
களுத்துறை சிறைச்சாலையிலிருந்து இன்று காலை 8.30 மணியளவில் கைதிகளை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லும் போது, சிறைச்சாலையிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் வைத்து கெப்ரக வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிறைச்சாலை பஸ் மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளர்.
சம்வபத்தில் பாதாள உலக குழு நபர் அருன உதேயசாந்த பத்திரன மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளான எஸ். சன்னிகம மற்றும் எஸ்.ஆர் விஜயரத்ன ஆகியோர் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த ஏனையவர்கள் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் அருகில் இருந்த வீடுகளின் மீதும் துப்பாக்கி ரவைகள் பாயந்து வீடுகள் சேதமடைந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் விபரிக்கையில், ‘8.30 மணியளவில் நானும் எனது மகளும் வீட்டின் முன் அறையில் அமர்ந்நதிருந்த போது பட்டாசு கொளுத்து போன்று சத்தம் கேட்டது.
இப் பகுதியில் திருமண வைபவம் ஒன்றும் இல்லை. எனினும் யார் பட்டாசு கொளுத்துகின்றார்கள் என சென்று பார்த்தேன். இதன்போது சிறைச்சாலை பஸ் உள்ளே இருந்து அபாய குரல் கேட்டது.
உடனடியாக நானும் மகளும் வீட்டின் பின்புறமாக பாய்ந்து சென்றோம். இதன்போது எனது அம்மாவின் வீட்டின் கூரை மீது ஏதோ ஒன்று விழுந்து புகை கிளம்புவதை அவதானித்தேன்.
ஏதோ அசம்பவாவிதம் இடம்பெறுகின்றது என எண்ணிக்கொண்டேன். வீட்டின் சுவர் மற்றும் கூரை மீது துப்பாக்கி ரவைகள் பாய்ந்துள்ளன’ என்றார்.
சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கூறுகையில், ‘நான் எனது மகனை பாடசாலைக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமான போது மழை பெய்து கொண்டிருந்தது. நான் வீட்டிலிருந்து அவதானித்த போது வீதியில் சிறைச்சாலை பஸ் சென்றது. இதன்போது சில நிமிடங்களில் பஸ் சென்ற இடத்தில் பட்டாசு வெடிப்பது போன்று சத்தம் கேட்டது.
பட்டாசு வெடிப்பதற்கு சாத்தியம் இல்லை என அம்மாவிடம் கூறும் போதே ஒரு தோட்டா எமது வீட்டின் சுவரை துளைத்தது. உடனடியாக நான் எனது மகனை தூக்கி கொண்டு வீட்டினுள் சென்று கதவை பூட்டிக்கொண்டேன். இதன் பின்னர் யன்னல் மீதும் தோட்டா ஒன்று துளைத்தது’ என்றார்.
சம்பவம் தொடர்பில் களுத்துறை விசேட பொலிஸ் குழுகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
களுத்துறை வடக்கு சிறைச்சாலை பஸ்ஸின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.
இதற்கமைய இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த துப்பாக்கிப் பிரயோகத்தால் காயமடைந்த ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சந்தேகநபர் ஒருவரும் நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
உலகில் முதல்முறையாகப் பூனைகளை பராமரிப்பதற்கான ஐந்து நட்சத்திர விடுதி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள சம்பவம் மலேசியாவில் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு ஒரேவிதமான வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தும். அதனால் அவற்றிக்கு விடுமுறை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். எனும் தொனிப்பொருளில், கேட்ஸோனியா எனும் ஐந்து நட்சத்திர விடுதியானது பூனைகளை பராமரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
கேட்ஸோனியா விடுதியானது 35 ஆடம்பர அறைகளை கொண்டுள்ளதோடு, பூனைகள் விளையாடுவதற்கான வசதிகள், மிகச் சிறந்த பராமரிப்பு, பூனைகளுக்கான மசாஜ், குளியல், ஆரோக்கியமான உணவு, சரியான ஓய்வு போன்ற வசதிகளை கொண்ட இடமாக அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடுதியில் 3 மணித்தியாலயத்திலிருந்து 1 வருடம் வரை பூனைகளை விட்டு செல்லலாம். மேலும் ஒரு இரவுக்கான பராமரிப்பிற்கு 400 ரூபாவிலிருந்து அறைகள் வழங்கப்படுவதோடு, அதிகக் கட்டணம் கொண்ட அறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு கெமரா பொறுத்தப்பட்டுள்ளதோடு, பூனையின் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பூனைகளைக் கெமராவின் மூலம் கவனித்துக்கொள்ளுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வழுக்கைத் தலை கொண்ட ஆண்களுக்கான விளையாட்டுப் போட்டியொன்று ஜப்பானில் நடைபெற்றுள்ளது. சுரூட்டா எனும் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இப் போட்டியில் 30 ஆண்கள் கலந்துகொண்டனர்.
சுரூட்டா நகரின் வழுக்கைத் தலை கொண்ட ஆண்களின் கழகத்தினால் இப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கயிறிழுத்தல் போட்டி பாணியில் விநோதமான போட்டியொன்றில் வழுக்கைத் தலை ஆண்கள் பங்குபற்றினர். கயிறின் இரு முனைகளும் போட்டியாளர்கள் இருவரின் தலையுடன் இணைக்கப்பட்டிருந்தன. அக் கயிற்றை இழுத்து தமது எதிராளியின் தலையிலிருந்து அதை விடுபடச் செய்வது தான் இப் போட்டி.
1989 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட மேற்படி கழகத்தினால் வருடாந்தம் பெப்ரவரி 22 ஆம் திகதி இப் போட்டி நடத்தப்படுகிறது. 64 வயதான டோஷியுக்கி ஒகாசவரா இவ் வருடம் முதல் தடவையாக இப் போட்டியில் பங்குபற்றினார்.
இப் போட்டி தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், எனது வழுக்கைத் தலை தொடர்பாக இதுவரை நான் கவலையடைந்திருந்தேன். இன்று வித்தியாசமாக உணர்ந்தேன்’ என்றார்.
இக் கழகத்தின் தலைவரான டெய்ஜிரோ சுகோ (70) கூறுகையில், உலகம் முழுவதுமிருந்து ஆண்கள் இப் போட்டியில் பங்குபற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன். இதன்மூலம் வழுக்கைத் தலை ஆண்களுக்கான ஒலிம்பிக் போட் டியை நாம் ஏற்பாடு செய்யலாம்’ என்றார்.