வவுனியாவில் விஷேட தேவைக்குட்பட்டோரின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள்!!

 
வவுனியா சீட்(SEED) நிறுவனத்தின் வலுவூட்டல் வளாகம் விஷேட பாடசாலை ஒன்றினை நடாத்தி வருகின்றது.

இப் பாடசாலையில் விஷேட தேவைக்குட்பட்ட மாணவர்களின் வளர்ச்சியினை மேம்படுத்துவதோடு சாதாரண மக்களைப் போன்று சமூகத்தில் இணைந்து செயற்படவைப்பதை இலக்காக கொண்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு விஷேட நிகழ்வாக வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியின் திறனாய்வு போட்டிகள் இன்று (28.02.2017) காலை இடம்பெற்றது.

இன் நிகழ்வில் நுற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதேவேளை இறுதி நிகழ்வு மார்ச் மாதம் (11.03.2017) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா புளியங்குளம் பொலிஸாரால் 31 கிலோ கஞ்சா மீட்பு!!

 
வவுனியா புளியங்குளம் பொலிஸாரால் நேற்று (27.02.2017) கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா பரசங்குளம் பகுதியில் வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் கஞ்சா உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் புளிங்குளம் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் 31 கிலோ 600 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ள பொலிஸார் அவர்களை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் 5வது நாளாக காணாமல்போனோரின் உறவுகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

 
வவுனியாவில் இன்று (28.02.2017) 5ஆவது நாளாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த மாதம் மேற்கொண்ட சாகும் வரையான உணவு தவிர்ப்புப் போராட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து கைவிடப்பட்டதுடன் கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று தெரிவித்து தமது போராட்டத்தினை சுழற்றி முறையில் தற்போது 5வது நாளாக மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா அரசடிக்குளம் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வுகள்!!

 
செட்டிகுளம், அரசடிக்குளம், பாவற்குளம் படிவம் – 03 கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லனர் திறனாய்வு போட்டி நேற்று திங்கட்கிழமை (27.02.2017) பாடசாலை அதிபர் எஸ்.ஜனந்தன் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் Dr.பத்மநாதன் சத்தியலிங்கம் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக செட்டிகுளம் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.யேசுதாசன், கிராம சேவையாளர் திரு.இளஞ்செழியன் மற்றும் சுகாதார அமைச்சரின் இணைப்புச்செயலாளர் பாலச்சந்திரன் சிந்துஜன், அயற்பாடசாலை அதிபர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம மக்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.

100M ஓட்டம், 200M ஓட்டம், 400M ஓட்டம், அஞ்சல் ஓட்டம், இடைவேளை நிகழ்வுகள், விநோத உடைப்போட்டி, கயிறு இழுத்தல், பெற்றோர் நிகழ்வுகள், பழைய மாணவர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கிண்ணங்களும், பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டதுடன் பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் Dr.ப.சத்தியலிங்கம், தனது 2016 இற்கான நிதியினூடாக இப்பாடசாலைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றினை வழங்கி வைத்ததாகவும், 2017ம் ஆண்டுக்கான நிதியினூடாக இப்பாடசாலைக்கு சமையல் அறை ஒன்றினை அமைப்பதற்கான நிதியினை ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வவுனியாவில் வன்னிப் பல்கலைக்கழக கோரிக்கையை முன்வைத்து மாபெரும் பேரணி!!

 
வவுனியா வளாகத்தினை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயற்றுமாறு கோரி இன்று(28.02.2017) காலை 10 மணியளவில் வவுனியாவில் மாபெரும் பேரணி ஒன்று இடம்பெற்றது.

ஒன்று திரண்ட பல்கலைக்கழக மாணவர் சமூகம் குருமன்காடு விஞ்ஞான வளாகத்திலிருந்து பேரணியாக குருமன்காடு,
மன்னார் விதி, பூங்காவீதி, வழியாக புகையிரத நிலையம் ஊடாக, கண்டிவீதி, மத்திய பேரூந்து நிலையம், மணிக்கூட்டுக்கோபுரம் வழியாக பசார் வீதி, இலுப்பையடி ஊடாக மாவட்ட செயலகத்தினைச் சென்றடைந்து அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர். இறுதியில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இவ் மாபெரும் பேரணி நிறைவுற்றது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக செல்வம் அடைக்கலநதான், சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, கே.கே.மஸ்தான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகாதலிகம், வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர்ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செந்தில்நாதன் மயூரன், ம.தியாகராசா , இ.இந்திராசா, முன்னாள் நகரசபை உப பிதா சந்திரகுலசிங்கம், வவுனியா தெற்கு கல்வி வலய கோட்டக்கல்விப்பணிப்பாளர்,

வவுனியா மாவட்ட வரையறுக்கப்பட்ட முச்சக்கரவண்டிச்சாரதிகள், ஆசிரியர்கள், இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியலாயம், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, தமிழ் மத்திய மகாவித்தியலாயம், இலங்கை திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலை, பூந்தோட்டம் மகாவித்தியலாயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வவுனியா வளாகத்தினை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து பேரணியில் கலந்து கொண்டனர்.

  

புத்தம் புதிய வடிவமைப்பிலான Nokia 3310 மீண்டும் அறிமுகம்!!

ஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையினைத் தொடர்ந்து இந்நிறுவனம் சரிவைக் காண மைக்ரோசொப்ட் நிறுவனம் நோக்கியா நிறுவனத்தை வாங்கியிருந்தது.

எனினும் மீண்டும் பிரிந்த நோக்கியா நிறுவனம் நான் தான் கைப்பேசி உலகின் அரசன் என்பதை மீண்டும் நிரூபிக்க அன்ரோயிட் கைப்பேசிகளை அறிமுகம் செய்ய தயாராகியுள்ளது.

இந்நிலையில் ஆரம்ப காலங்களில் அறிமுகம் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்றிருந்து Nokia 3310 கைப்பேசியினை புதிய வடிவமைப்புடன் மீண்டும் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அறிவித்திருந்தது.

அறிவிப்புக்கு ஏற்ப தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் Mobile World Congress நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இக்கைப்பேசி 2G வலையமைப்பில் தொழில்படக்கூடியதாக இருப்பதுடன் குரல் வழி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகளை பரிமாறுதல் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

எனினும் இணையத்தளம் மற்றும் ஈ-மெயில் வசதிகள் தரப்படவில்லை.

2.4 அங்குல வளைந்த திரையினைக் கொண்டுள்ள இக் கைப்பேசியில் 16GB சேமிப்பு நினைவகம் தரப்பட்டுள்ளதுடன், microSD கார்ட்டின் உதவியுடன் 32GB வரை அதிகரிக்கக்கூடிய வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் 48 யூரோக்கள் மட்டுமே பெறுமதியினைக் கொண்டுள்ள இக் கைப்பேசியானது Grey, Dark Blue, Warm Red மற்றும் Yellow ஆகிய வர்ணங்களில் கிடைக்கின்றது.

பிரித்தானியாவிலிருந்து ஐரோப்பியர்கள் வெளியேற்றம் : தெரசா மே அதிரடி!!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து பிரத்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கான இலவச இயக்கத்தை, பிரதமர் தெரசா மே அடுத்த மாதம் முடிவுக் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் சட்டப் பிரிவு 50 அமல்படுத்தப்பட்ட பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் நிரந்தரமாக பிரித்தானியாவில் இருக்க முடியாது என அறிவிக்கப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானிய வெளியேறி பின் புதிய குடியேறிகளுக்கு, புதிய விசா உட்பட இடம்பெயர்வு தடை உட்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

குறிப்பிட்ட திகதிக்கு முன் பிரித்தானியாவில் குடியேறிய ஐரோப்பிய ஒன்றிய குடியேறிகளின் உரிமை பாதுகாக்கப்படும் என தெரசா மே உறுதியளிப்பார்.

அதேசமயம் ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் பிரித்தானிய குடிமக்களின் உரிமையும் பாதுகாக்கப்படும் என உறுதியளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திடீர் நெஞ்சுவலியால் கருணாஸ் மனைவி மருத்துவமனையில் அனுமதி!!

திருவாடனை தொகுதி எம்எல்ஏவும் நடிகருமான கருணாஸின் மனைவி திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் கருணாஸ் காதலித்து திருமணம் செய்துகொண்டவர் இவருடைய மனைவி கிரேஸ், திரையுலகத்தை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி ஆவர்.

சமீபத்தில் நடந்த தமிழக அரசியல் பிரச்சனையில் கருணாஸ் சசிகலா தரப்பிற்கு ஆதரவளித்ததால் மக்களின் அதிருப்திக்கு உள்ளாகினார். பலர் சமூகவலைதளங்களிலும், போனிலும் அவரை விமர்சித்தனர். சிலர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியும், தொகுதிக்கு வந்த அவரை கல், செருப்புகளை வீசியும் தாக்கினர்.

கருணாஸின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை இணையத்திலும் வெளியிட்டனர். வாட்ஸ் அப்பில் வேகமாக பரவிய கருணாஸின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்த அவரது மனைவிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிச்சை எடுத்துவருவதாக கூறப்படுகிறது. இதற்கு முழுக்க முழுக்க கருணாஸ் மற்றும் அவரது செயல்களுமே காரணம் என்று கூறப்படுகிறது.

தானியங்கி காரை உருவாக்கி அசத்திய கல்லூரி மாணவன்!!

கார் தொழில்நுட்பத்தில் அடுத்த கட்டமாக தானியங்கி கார்களை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஈடுபட்டு வருகின்றன.

இவற்றுள் சில நிறுவனங்கள் தமது திட்டத்தினை இடைநடுவில் கைவிட்டுள்ள அதேவேளை வேறு சில நிறுவனங்கள் பரீட்சிப்பு கட்டம் வரைக்கும் கொண்டுவந்துள்ளன.

இவ்வாறான தருணத்தில் கல்லூரி மாணவன் ஒருவன் தனது Honda Civic மொடெல் காரினை தானியங்கி காராக மாற்றியமைத்து அசத்தியுள்ளான்.

அமெரிக்காவின் ஒமாகா பகுதியில் உள்ள Nebraska பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவனே இச் சாதனையைப் புரிந்துள்ளான்.

இவ்வாறு தனது காரினை தானியங்கி காராக மாற்றுவதற்கு வெறும் 700 அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலவானதாக குறிப்பிட்டுள்ளான்.

Brevan Jorgenson எனும் குறித்த மாணவன் இதற்கான மூலங்ளை இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொண்டு தனது தனி முயற்சியிலேயே சாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் கணவனை சுத்தியலால் அடித்துக் கொன்ற இலங்கைப் பெண் நன்னடத்தையால் விடுதலை?

கணவனைக் கொன்ற குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவப் பெண் சாமரி லியனகே, இந்த வாரம் விடுதலை செய்யப்படவுள்ளார் என அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த இலங்கைப் பெண்ணின், நன்னடத்தை காரணமாகவே அவர் விடுதலை செய்யப்படவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த இலங்கை மருத்துவப் பெண், தனது கணவனை கடந்த 2014ம் ஆண்டு ஜுன் மாதம் அவர்களது இல்லத்தில் வைத்து சுத்தியலால் அடித்துக் கொலை செய்தார்.

இந்த குற்றச்சாட்டு காரணமாக குறித்த பெண்ணுக்கு கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 4வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

குறித்த பெண் மருத்துவரின் கணவர், சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் துன்புறுத்தல்கள் உட்பட பல்வேறு வழிகளில் சித்திரவதை செய்தமையாலேயே இலங்கைப் பெண் தன் கணவரை சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இதேவேளை, சிறைத் தண்டனை நிறைவடைந்த பின்னர்,சாமரி லியனகேவை நாடு கடத்துமாறு அந்நாட்டு அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இருப்பினும், தன்னை நாடு கடத்த வேண்டாம் என அந்நாட்டு குடிவரவு அமைச்சரிடம் சாமரி லியனகே கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை ரத்துச் செய்யப்பட்டிருந்த சாமரி லியனகேயின் விசாவை மீள புதுப்பித்து தருவதாக அந்நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், மீளாய்வு மேற்கொண்டு சாமரி லியனகேவுக்கு அவுஸ்திரெலியாவில் தங்குவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

27 வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பெண்!!

27 வருடங்கள் பிரித்தானியாவில் வாழ்ந்த பெண் ஒருவர் சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

பிரித்தானிய நாட்டவரை திருமணம் செய்து அவருடன் 27 வருடங்கள் அங்கு வாழ்ந்த நிலையில் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரிலில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்ற ஐரின் க்லேனல் என்ற பெண் இரண்டு மகன்கள் மற்றும் மருமகளுடன் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் வட கிழக்கு பிரித்தானியாவிலுள்ள தனது வீட்டில் வைத்து அவரை, அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்து, முகாமில் தடுத்து வைத்துள்ளனர்.

பிரித்தானிய நாட்டவருடன் திருமணமாகியதன் பின்னர் ஐரின் க்லேனலுக்கு பிரித்தானியாவில் நிரந்தரமாக வாழ அனுமதி கிடைத்துள்ளது. எனினும் அவர் தனது வயோதிப பெற்றோரை பார்ப்பதற்காக அடிக்கடி சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அங்கு அவர் நீண்ட காலம் தங்கியிருந்ததன் காரணமாக அவரது குடியிருப்பு விசா இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவினுள் தொடர்ந்து தங்கியிருப்பதற்கு அனுமதி கோரி விண்ணப்பிப்பதற்கு பல முறை முயற்சித்ததாக ஐரின் க்லேனல் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் குடியுரிமை கோரும் ஒவ்வொருவரினதும் விண்ணப்பமும் தற்போது தனித்தனியாக ஆராய்வதாக பிரித்தானிய உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

யாருக்கும் சட்டரீதியாக நாட்டில் தங்கியிருப்பதற்கு அனுமதியில்லை என்றால் அவர்களை வெளியேற வேண்டும் என்பது தங்கள் எதிர்ப்பார்பென அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் பெருமளவு இலங்கையர்கள் வாழ்ந்து வரும் நிலையில், தங்கள் உறவுகளை பார்ப்பதற்காக நாட்டுக்கு சென்று வருகின்றனர். இது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

15 வயதுச் சிறு­வனை துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு அழைத்துச் சென்ற குடும்பப் பெண் கைது!!

திரு­ம­ண­மான 22 வயது பெண் ஒருவர் 15 வய­தான சிறு­வனை ஏமாற்றி பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­து­வ­தற்­காக கடு­வெல பிர­தே­சத்­தி­லுள்ள விடுதி ஒன்­றுக்கு அழைத்துச் சென்ற போது நவ­க­முவ பொலி­ஸாரால் கைது செய்யப்­பட்­டுள்ளார்.

இவர்கள் இரு­வ­ருக்­கு­மி­டையில் ஏற்­க­னவே காதல் தொடர்பு இருந்­த­தா­கவும் அதை நிறுத்­தும்­படி சிறு­வனின் பெற்றோர் இரு­வ­ரையும் எச்­ச­ரித்­துள்­ள­தா­கவும் தெரி­ய­வந்­துள்­ளது.

இந்த நிலையில் இந்தப் பெண் சிறு­வனை கடு­வெல நக­ருக்கு வரும்­படி தொலை­பேசி மூலம் தெரி­வித்து சிறுவன் கடு­வெல நக­ருக்கு வந்­ததும் முச்­சக்­கர வண்­டியில் விடு­திக்கு அழைத்துச் சென்­றுள்ளார்.

சிறுவன் திடீ­ரென வீட்­டி­லி­ருந்து வெளி­யேறி செல்­வது குறித்து சந்­தேகம் கொண்ட பெற்றோர் சிறு­வனை பின்­தொ­டர்ந்து தக­வல்­களைச் சேக­ரித்த பின்னர் நவ­க­முவ பொலிஸார் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

இதன்­படி நவ­க­முவ பொலிஸார் சிறு­வனின் பெற்­றோ­ருடன் சென்று இரு­வ­ரையும் கைது செய்துள்ளனர். கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

டுவிட்டரில் கோரிக்கை விடுத்த பெண்ணுக்கு பிரதமர் மோடி கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

தமி­ழ­கத்தின் கோவை ஈஷா மையத்தில் அண்­மையில் நடை­பெற்ற நிகழ்வில் இந்­திய பிர­தமர் மோடி அணிந்­திருந்த சால்­வையை தருமாறு டுவிட்­டரில் பெண்­ணொ­ருவர் கோரிக்கை விடுத்­ததன் பேரில் பிர­தமர் அவ­ருக்கு பரி­சாக அளித்­துள்ளார்.

கோவை வெள்­ளி­யங்­கிரி மலைப்­ப­கு­தியில் ‌அமைக்­கப்­ப‌ட்­டுள்ள 112 அடி உயர ஆதி­யோகி சிவன் சிலையை பிர­தமர் மோடி நரேந்திர மோடி கடந்த 24 ஆம் திகதி திறந்து வைத்­துள்ளார்.

அதன் பின்னர் ஈஷா யோகா மையத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு அவர் பேசி­யுள்ளார். குறித்த விழாவில் கலந்­து­கொண்ட பிர­தமர் மோடிக்கு ஆதி­யோகி படம் இடம்­பெற்ற சால்வை ஒன்­றினை ஈஷா யோகா மையத்தின் நிறு­வுனர் ஜக்கி வாசுதேவ் அளித்­துள்ளார்.

விழா முழு­வதும் பிர­தமர் மோடி அந்த சால்­வையை அணிந்­தி­ருந்தார். அந்த சால்­வையை தனக்கு தரு­மாறு பிர­தமர் மோடி­யிடம், டுவிட்டர் மூலம் டில்­லியைச் சேர்ந்த ஷில்பி திவாரி என்ற பெண்­ணொ­ருவர் கேட்­டி­ருந்தார். இதை­ய­றிந்த பிர­தமர் மோடி, சால்­வை­யுடன், தனது கையெ­ழுத்­திட்ட கடி­தத்­தி­னையும் ஷில்பி திவா­ரிக்கு அனுப்­பி­யுள்ளார்.

இந்­நி­லையில் பிர­தமர் அனுப்­பிய சால்வை மற்றும் கடி­தத்தின் புகைப்­ப­டங்­களை ஷில்பி திவாரி தனது டுவிட்­டரில் பதி­விட்­டுள்­ள­துடன், தமது கோரிக்­கைக்கு செவி­சாய்த்து பிர­தமர் மோடி, சால்வையை பரிசாக வழங்கியது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பறவைகளை தொடர்ந்து பார்த்தால் மன அழுத்தம் குறையும் : ஆய்வில் தகவல்!!

பறவைகளைத் தொடர்ந்து பார்த்தால் மன அழுத்தம் குறையும் என, ஆய்வொன்றில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதிகரித்து வரும் செல்போன் டவர்கள், மரங்களை அழிப்பது ஆகிய காரணங்களால் பறவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்நிலையில், பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து உற்சாகம் பிறக்கும் என இங்கிலாந்தை சேர்ந்த எக்ஸீடர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவை குறைவாக இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுதவிர வசிக்கும் வீட்டைச் சுற்றி புதர்கள், மரங்கள் ஆகியவை இருப்பதும் மனிதர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கிறதாம்.

இதுகுறித்து எக்ஸீடர் பல்கலைக்கழக பேராசிரியர் டேனியல் காக்ஸ் “நகரத்தில் வசிப்பவர்களை விட இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களே அதிக மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்” என கருத்துத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் தலைவராக ஹேரத் : முதல் முறையாக அணியில் மலிந்த புஷ்பகுமார!!

பங்களாதேஷ் அணிக்கெதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இறுதியாக இவர் சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு தலைமை பொறுப்பேற்று, குறித்த தொடரை இலங்கைக்கு வென்றுக்கொடுத்தார். இந்நிலையில் மீண்டும் இவர் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை இடதுகை சுழற்பந்துவீச்சாளரான மலிந்த புஷ்பகுமார முதல் தடைவையாக இலங்கை தேசிய டெஸ்ட் அணிக்குழாமுக்குள் அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஏ அணிக்காக விளையாடிவரும் புஷ்பகுமார இங்கிலாந்து ஏ அணியுடனான தொடரில் விளையாடி வருகின்றார்.

இந்த தொடரில் புஷ்பகுமார முதல் டெஸ்ட் போட்டியில் 14 விக்கட்டுகளையும், இரண்டாவது போட்டியில் 8 விக்கட்டுகளையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தந்தையின் உயிருக்கு எமனாகிய மகன் : பரிதாபச் சம்பவம்!!

 
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை 5.40 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பணியை முடித்துக்கொண்டு பஸ்ஸை தனது வீட்டில் நிறுத்துவதற்காக செல்லும் போது பஸ்ஸை பின்நோக்கி செலுத்திய போது, வீதி ஓரத்தில் நின்றுக்கொண்டிருந்த 86 வயதுடைய முதியவர் பஸ்ஸின் பின்பகுதி சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பஸ்ஸை செலுத்திய சாரதியின் தந்தை என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் ஆறுமுகம் மாரியப்பன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் அக்கரப்பத்தனை வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பஸ் சாரதியை கைது செய்துள்ளதாகவும், குறித்த பஸ்ஸையும் பொலிஸ் பொறுப்பேற்றுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.