பொதுப் பேருந்துகளில் பயணம் செய்யும் 90%வீதமான பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாவதாக ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வு சுமார் 2500 தனிப்பட்டவர்களுடன் நேர்காணல் மற்றும் கேள்விக்கொத்துக்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நாளாந்தம் 12.1 வீத பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகுவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாராந்தம் 16.4 வீதப்பெண்கள் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர். மாதம் ஒன்றுக்கு 25.8வீதப்பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாலியல் தொந்தரவுகள் தொடர்பிலும் நடைமுறையில் உள்ள சட்டங்கள் தொடர்பில் 53வீதமானவர்கள் அறிந்து வைத்துள்ளனர்.
எனினும் பொதுப்போக்குவரத்தில் மேற்கொள்ளப்படும் பாலியல் தொந்தரவுகளுக்கான சட்டங்கள் குறித்து 74%வீதத்தினர் அறிந்து வைத்திருக்கவில்லை.
இதேவேளை, பொதுப்போக்குவரத்துக்களில் பாலியல் தொந்தரவுகள் காரணமாக 37%வீதப்பெண்கள் தமது பணிகளில் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், 29% வீதமான பெண்கள் தமது கல்வியில் பாதிக்கப்படுவதாகவும், 44%வீதமான பெண்கள் தமது தனிப்பட்ட வாழ்க்கையில் பாதிக்கப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.
சீனாவில், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள அரசு, இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் பெண்களின் குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்குவது பற்றி ஆராய்ந்து வருகிறது.
சீனாவின் தேசிய சுகாதார மற்றும் குடும்பத் திட்டமிடலுக்கான ஆணைக்குழுவின் பிரதியமைச்சர் வேங் பியான் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த நான்கு தசாப்தங்களாக, இதே சீனாவில்தான் குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற சட்டம் அமலில் இருந்து வந்தது. இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஒரு பெண் இரண்டாவது குழந்தையைக் கருவுற்றிருப்பது தெரியவந்தால் அவர் கட்டாய கருக்கலைப்புச் செய்துகொள்ளவேண்டும் என்ற சட்டமும் இருந்து வந்தது.
இந்த நிலையில், சீனாவில் மத்திய வயதை உடையவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகக் குறைந்துபோன நிலையில், தேசிய உற்பத்தியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற சட்டம் இரத்துச் செய்யப்பட்டு இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
எனினும், பொருளாதாரச் சிக்கல்களால் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள மக்கள் தயங்கிவருவதையடுத்தே ஊக்குவிப்புத் தொகை வழங்குவது பற்றி அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது.
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்தி விட்டுச் தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற வேன் தொடர்பான தகவல்களை பொலிஸார் திரட்டியுள்ளனர்.
களுத்துறை – சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற வெள்ளை நிற வேன் ஒன்று, ஹொரணை – மொரகஹாஹென பகுதியில் பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டது.
குறித்த வேன் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி மருதானைப் பகுதியில் வைத்து கடத்தப்பட்ட வேன் என்பதோடு குறித்த வேன் திருகோணமலையைச் சேர்ந்த நபருக்கு சொந்தமானது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை (27) காலை 8.30 மணியளவில் களுத்துறை வடக்கு சிறைச்சாலையில் இருந்து கடுவலை நீதிவான் நீதிமன்றுக்கு பாதாள உலகக் கோஷ்டி சந்தேக நபர்களை ஏற்றி வந்த சிறைச்சாலை பஸ் வண்டி மீது களுத்துறை, மல்வத்த – எத்தனமடல பகுதியில் வைத்து சரமhரியான துப்பhக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதன்போது அந்த பஸ் வண்டியில் இருந்த பிரபல பாதாள உலகக் கோஷ்டியின் தலைவனான ‘ரணாலே சமயா’ அல்லது சமயங் என அறியப்படும் எம்.பி. அருண தமித் உதயங்க பத்திரண உள்ளிட்ட 5 கைதிகளும் இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நான்கு சிறைச்சாலை அதிகாரிகள் படு காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சந்தேக நபர்கள் கெப் ரக வாகனத்தில் வந்து குறித்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு வெள்ளை நிற வேன் ஒன்றில் தப்பிச் சென்றனர்.
சம்பவ இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கெப்ரக வாகனம் கொள்ளையிடப்பட்ட வாகனம் எனவும் இதன் உரிமையாளர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் எனவும் குறித்த பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வேனும் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி மருதானை பகுதியில் வைத்து கொள்ளையிடப்பட்ட வேன் என்பதோடு திருகோணமலையைச் சேர்ந்த வேனின் உரிமையாளரிடம் தற்போது வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பாடசாலை கல்வியை இடைநிறுத்திவிட்டு தமது வீடுகளிலிருந்த நகைகளை திருடிக் கொண்டு தமது பேஸ்புக் காதலர்களுடன் தப்பிச்சென்ற உயர்தரம் கற்றுவந்த மாணவிகள் இருவர், பேலியகொடை பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில் மாஹோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேஸ்புக்கில் அறிமுகமான தமது காதலர்களுடன் இம்மாணவிகள் இருவரும் முதலில் குறுந்தகவல்களின் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வதன் ஊடாக அறிமுகமா னதையடுத்து பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திவிட்டு தொழில்புரியும் நோக்கில் பேலியகொடை பிரதேசத்தில் வீடொன்றினை வாடகைக்கு பெற்று தமது காதலர்களுடன் வசித்து வந்துள்ளனர்.
பின்னர் இம்மாணவிகள் இருவரும் தமது வீட்டிலிருந்து எடுத்துவந்த தங்க நகைகளை வெயாங்கொட பிரதேசத்திலுள்ள அடகு நிலையமொன்றில் விற்பனை செய்ததுடன் அதன்மூலம் கிடைத்த பணத்தில் தமது வீட்டுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர்.
இம்மாணவர்களின் காதலர்களில் ஒருவர் கடற்படையில் பணியாற்றி பின்னர் அதிலிருந்து விலகியவர் எனவும், மற்றைய நபர் திருமணம் புரிந்தவரெனவும் அவருக்கு பிள்ளை ஒன்றும் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மஹவ பொலிஸாருக்கு கிடைத்த இருவேறு முறைப்பாடு களுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவிகளில் ஒருவரின் முன்னாள் காதலனின் மூலமாக உளவாளி ஒருவரை ஈடுபடுத்தி மாணவிகள் உள்ள இடத்தினை கண்டுபிடித்திருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இம்மாணவிகள் இருவரும் மஹவ, நாகொல்லாகம மற்றும் மொரகொல்லாகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் சந்தேகநபர்கள் இருவரும் பமுணுகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த ஆண்டு சூரியனுக்கு விண்கலமொன்றை அனுப்ப நாசா (NASA) திட்டமிட்டுள்ளது.
விண்கலத்தை அனுப்பி சூரியனை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் அந்த நெருப்புக் கோளத்தைச் சுற்றியுள்ள மூன்று மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
சூரியனை ஆய்வு செய்ய ஏற்கனவே விண்கலங்கள் அனுப்பப்பட்டிருந்தாலும் அடுத்த ஆண்டு பயணிக்கவுள்ள விண்கலம் மிக அருகில் சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி லைவ் சைன்ஸ் இதழில் நாசா விஞ்ஞானி எரிக் கிறிஸ்டியனால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சூரியனை நோக்கிய எங்களது முதல் ஆய்வு இது. நிலவைப் போலவோ, செவ்வாய் கிரகத்தைப் போலவோ இந்த ஆய்வில் சூரியனின் மேற்பரப்பிற்கு சென்று எங்களால் ஆய்வு செய்ய முடியாது என்பது உண்மைதான். இருந்தாலும், இதுவரை இல்லாத நெருக்கத்திற்குச் சென்று, அதாவது தகிக்கும் சூரியனை எந்த அளவுக்கு தாங்க முடியுமோ, அவ்வளவு நெருங்கிச் சென்று எங்களது விண்கலம் ஆராய்ச்சி மேற்கொள்ளவிருக்கிறது.
இதன்மூலம், இதுவரை விடை காண முடியாமல் விஞ்ஞானிகள் திணறி வந்த 3 கேள்விகளுக்கு விடை கிடைக்கக் கூடும். சூரியனின் மேற்பரப்பைவிட அதன் வளிமண்டலம் எவ்வாறு பன்மடங்கு வெப்பத்துடன் காணப்படுகிறது, சூரியனின் மேற்பரப்பில் தொடர்ந்து ஏற்படும் அக்கினிப் புயலைத் தூண்டுவது எது, விண்வெளியில் மிதக்கும் விண்கலங்கள், விண்வெளி வீரர்கள் ஆகியோருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த துகள்களை சூரியன் அவ்வப்போது வெளியிடுவது எப்படி ஆகிய கேள்விகளுக்கு இதுவரை விடை தெரியாமல் இருந்து வந்தது. எங்களது ஆய்வின்மூலம், இவற்றுக்கான விடை கிடைக்கும் வாய்ப்பு முன்னெப்போதையும்விட மிக அதிகமாக உள்ளது.
என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக, 1,370 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தைத் தாங்கக்கூடிய திறனை விண்கலத்திற்குத் தரும் 11.4 சென்டிமீட்டர் தடிமன் கொண்ட கரிமக்கலப்புப் பொருளை உருவாக்கியுள்ளனர்.
மேலும், வெப்பத்தால் பாதிப்படையக்கூடிய ஆய்வுக் கருவிகளைப் பாதுகாக்கும் வகையில், புதிய குளிரூட்டிக் குழாய்களையும் தயாரித்துள்ளனர்.
நாசாவின் இந்தத் திட்டத்துக்கு “Solar Probe Plus” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
விடை தெரியாத மூன்று மர்மங்களாவன…
1. குளிர் சூரியன்
சூரியனின் வளிமண்டலத்தைவிட அதன் மேற்பரப்பு குளிர்ந்து காணப்படுவதுதான் விஞ்ஞானிகளுக்கே விந்தையாக இருந்து வருகிறது. சூரியன் மேற்பரப்பின் வெப்பநிலை 5,500 டிகிரி செல்சியஸ்தான். ஆனால் அதனைச் சுற்றிப் படர்ந்திருக்கும் வளிமண்டலத்தின் வெப்பநிலை 20 இலட்சம் டிகிரி செல்ஷியஸ். பூமியின் மேற்பரப்பை விட்டு உயரே செல்லச் செல்ல வெப்பம் குறைந்து குளிர்ச்சி அதிகரிக்கும். ஆனால் சூரியனின் மேற்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வெப்பம் அதிகரிப்பது ஏன் என்பதுதான் யாருக்கும் புரியாத புதிர்!
2. சூரியப் புயல்
சூரியனிலிருந்து சக்திவாய்ந்த துகள்பொருள்கள் அனைத்து திசைகளிலும் புயலாக வீசிக் கொண்டிருக்கிறது. இந்தப் புயலின் வேகம், மணிக்கு பல இலட்சம் கிலோ மீட்டர்கள். இவ்வளவு உக்கிரமாக வீசும் இந்தப் புயலைத் தூண்டுவது எது என்பதற்கு எந்த விஞ்ஞானியாலும் இதுவரை பதில் சொல்ல முடியவில்லை.
3. மர்மக் கதிர்வீச்சு
சூரியனிலிருந்து அவ்வப்போது ஒருவகையான சக்திவாய்ந்த கதிர் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கவனித்துள்ளனர். அந்தக் கதிர்கள் ’எக்ஸ்ரே’ போன்று ஊடுருவும் தன்மை கொண்டவை. தகுந்த பாதுகாப்பு இல்லாவிட்டால், விண்வெளியில் மிதக்கும் ஆய்வுக் கலங்களுக்கும் அவற்றின் மூலம் ஆய்வு மேற்கொள்ளும் விஞ்ஞானிகளுக்கும் அந்தக் கதிர்கள் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. இந்தக் கதிர்கள் எவ்வாறு உருவாகின்றன என்பது விஞ்ஞானிகளுக்கு விடை தெரியா கேள்வியாகவே இருந்து வருகிறது.
நடிகர் கௌதம் கார்த்திக், நடிகை பிரியா ஆனந்த் இணைந்து நடித்து வெளியாகி இருக்கும் முத்துராமலிங்கம் படத்தைத் திரையிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக், நடிகை பிரியா ஆனந்த், நடிகர் நெப்போலியன் இணைந்து நடித்து வெளியாகி இருக்கும் படம் முத்துராமலிங்கம்.
குளோபல் மீடியா வேர்க்ஸ் சார்பில் டி.விஜய் பிரகாஷ் தயாரித்து உள்ள இந்த படத்தில் நடிகர்கள் சுமன், சிங்கமுத்து, சின்னிஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் சென்னை உள்பட தமிழகத்தில் பிப்ரவரி 24 முதல் வெளியாகி ஓடி வருகிறது.
இந்த நிலையில், ’யாகூ பைனான்ஸ் கன்சல்டன்ட்´ நிறுவனத்தின் உரிமையாளர் எம்.வி.பிரகாஷ் என்பவர் முத்துராமலிங்கம் படத்தைத் மேலும் திரையிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், முத்துராமலிங்கம் படத்தின் தயாரிப்பாளருக்கு 28 லட்சத்து 55 ஆயிரம் கடனாக அளித்தேன். படம் திரையிடுவதற்கு முன்பாக, முழுத் தொகையையும் செலுத்துவதாக தயாரிப்பாளர் என்னிடம் உறுதி அளித்திருந்தார்.
ஆனால் ஒப்பந்தப்படி பணத்தைத் திருப்பித் தரவில்லை. எனவே, அவருக்கு எதிராக தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முத்துராமலிங்கம் படத்தின் தயாரிப்பாளர் டி.விஜய் பிரகாஷ், ர29 லட்சத்தைத் திருப்பிச் செலுத்த உத்தரவிட்டது.
ஆனால், அந்தத் தொகையைச் செலுத்தவில்லை. ஆகையால், படத்தை மேலும் திரையிட தடை செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், முத்துராமலிங்கம் படத்தைத் திரையிடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
யுவதி ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருமணம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்தமையின் காரணமாக, குறித்த பெண்ணின் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்த இளைஞரையே பதுளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் பதுளை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த யுவதியை திருமணம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்திருந்த போதும் யுவதி மற்றுமொரு இளைஞரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் தன்னிடம் இருந்த யுவதியின் நிர்வாணப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் இளைஞர் கைது செய்யப்பட்டு, பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விஷேட தேவையுடைய மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரை கம்புறுபிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
54 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் 13 வயதான விஷேட தேவையுடைய மாணவி ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவியை பாடசாலை நேரத்தின் பின்னர் முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு ஏனைய பிள்ளைகள் கல்வி பயிலும் பாடசாலைக்கு அருகே சென்று பாடசாலை முடியும் வரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த மாணவி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கண்டி – குண்டசாலைப் பிரதேசப் பாடசாலை ஒன்றில் சில கனிஷ்ட மாணவர்களை துஷ்பிரயோகப்படுத்திய சிரேஷ்ட மாணவர்கள் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (28) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் அவசர தொலைபேசி சேவைக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த 3 மாணவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பயிற்சி வகுப்பு ஒன்றின் போது கனிஷ்ட மாணவர்கள் சிலரை நிர்வாணமாக்கி அதனை காணொளியாக பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக வத்துகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு, மேற்படி 2 மாணவர்களை கைதுசெய்துள்ளனர்.
கைதானவர்களை தெல்தெனிய நீதவான் முன் ஆஜர்செய்யவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர்கள் தரம் 11,12 மற்றும் 13 ஆம் வகுப்புளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவுக்குப் பயணம் செய்ய இரண்டு அமெரிக்க தனி நபர்கள் கட்டணம் செலுத்தியுள்ளதாக, அமெரிக்க விண்வௌி பயண நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்திருக்கிறது.
2018 ஆம் ஆண்டு பிற்பகுதியில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள இந்த விண்வெளி பயணம் மூலம் 45 ஆண்டுகளில் முதல்முறையாக மனிதர்கள் நிலவுக்குப் பயணிக்க உள்ளனர்.
இந்தப் பயணத்திற்கு, பெயர் வெளியிடாத இரண்டு பேர் குறிப்பிடத்தக்க வைப்புத்தொகையை செலுத்திவிட்டதாகவும், அவர்கள் முழு மனித குலத்தின் நம்பிக்கைகளையும், கனவுகளையும் சுமந்து செல்வார்கள் என்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலன் முஸ்க் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வழங்கும் ஒத்துழைப்புதான், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூற்றை உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகன் என உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக நடிகர் தனுஷ் இன்று மதுரை உயர் நீதிமன்றில் ஆஜரானார். அப்போது நீதிபதி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன், எங்களுக்கு வயதாகி விட்டதால் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என மேலூர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு பொய்யானது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை நீதிமன்றம் கிளையில் நடிகர் தனுஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இரு தரப்பினரிடமும் உள்ள நடிகர் தனுஷின் பாடசாலை மாற்று சான்றிதழ்களை தாக்கல் செய்யுமாறு மதுரை உயர் நீதிமன்றம் கிளை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இருதரப்பினரும் சான்றிதழ்களை தாக்கல் செய்தனர். நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றிதழ்களில் அங்க மச்சம் அடையாளம் குறிப்பிடவில்லை என எதிர்தரப்பினர் வாதிட்டனர்.
இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்றம் கிளையில் கடந்த 24 ஆம் திகதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் தனுஷின் அங்க அடையாளம் காண இன்று ஆஜராகுமாறு நடிகர் தனுஷிற்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று காலை 9.45 மணி அளவில் நடிகர் தனுஷ் தனது வக்கீல்களுடன் மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு வந்தார். தனுஷின் பெற்றோரான கஸ்தூரிராஜா, விஜயலட்சுமி ஆகியோரும் உயர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.
பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி மேலூர் தம்பதி கூறிய தனுஷின் அங்க அடையாளங்களை சரிபார்த்து இன்று மாலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது. பதிவாளர் அறையில் தனுஷின் அங்க அடையாளங்களை சரிபார்க்கும்போது அரசு மருத்துவர் ஒருவர் உடன் இருக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை மார்ச் 2ஆம் திகதி ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.
முன்னதாக நடிகர் தனுஷ் நீதிமன்றில் ஆஜராவதையொட்டி அவரது ரசிகர்கள் நீதிமன்றத்துக்கு முன்பு திரண்டிருந்ததால் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஈழத்தின் சிறந்த புரட்சிப் பாடகரும், நாடகக் கலைஞருமான எஸ்.ஜி.சாந்தனின் இறுதிக் கிரியைகள் மக்களின் கண்ணீருக்கு மத்தியில் கிளிநொச்சியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்றது.
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சாந்தன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் உயிரிழந்திருந்தார்.
இந்த நிலையில், அவரது பூதவுடல் அஞ்சலிக்காக ஓட்டுமடம் அன்பன் இல்லத்திலும், மாங்குளத்தில் உள்ள அவரது வீட்டிலும் வைக்கப்பட்டு இறுதியாக கிளிநொச்சியிலுள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா, செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நாளை முதல் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர் க.தர்மரட்ணம் இதனை தெரிவித்துள்ளார்.
பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையால் சூழல் மாசடைவதுடன், உடல் ரீதியான கேடுகளும் ஏற்படுகின்றன.
இதனால் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒரு முன்மாதிரியான செயற்பாடாக மார்ச் முதலாம் திகதி முதல் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சூழலை பாதுகாக்கும் செயற்திட்டத்தை முன்னெடுக்க இப்பாடசாலையில் பச்சைப்படையணி என்னும் மாணவர் குழு ஒன்றும் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 5ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.
இன்று (28.02.2017) மதியம் 2.30 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நீதி வழங்குமாறு ஜனாதிபதிக்கு தபால் மூலமான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.
இப் போராட்டத்தினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆரம்பித்துவைத்தார்.
இன்று (28.02.2017) மதியம் 12 மணியளவில் அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாளாவிய ரீதியில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டமோன்று வவுனியா பொது வைத்தியசாலையிலும் தாதிய உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்ட மேலதிக நேரக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்வேண்டும், தாதிய உத்தியோகத்தர்களில் உயர்கல்வி சேவை நிறைவு செய்பவர்களை தாதிய நிர்வாக சேவைக்குள் உள்வாங்கப்படவேண்டும், 5வருடமாக இருந்த பதவி உயர்வுக்காலம் தற்போது 10 வருடங்களாக மாற்றப்பட்டுள்ளது, எனவே அதனை 6 வருடமாக மாற்றவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இன்று தமது கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.
குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் மதிய நேர இடைவேளையின்போது இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.