செய்த தவறுக்காக 20 வருடங்களாக கல்லறையில் வாழும் நபர்!!

குருணாகல் மாவட்டத்தில் கடந்த 20 வருடங்களாக கல்லறையில் வாழும் நபர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. 75 வயதான ரணவிர ஆராச்சி தொன் டேவிட் என்ற நபரே இவ்வாறு கல்லறையில் வாழ்ந்து வருகிறார்.

கல்லேவெல, கலாவெவ பிரதான வீதியின் பெலியகந்த பிரதேசத்தின் பொது கல்லறையில் அவர் வாழ்ந்து வருகிறார்.

குறித்த நபர் பொது சுகாதார பரிசோதகராக இலங்கையின் பல பகுதிகளில் சேவை செய்துள்ளார். அநுராதபுரம் அலுவலகத்தில் மாட்டிறைச்சி கடை உரிமையாளரிடம் 300 ரூபாய் இலஞ்சமாக பெற்றதாகவும், அந்த சந்தர்ப்பத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் தன்னை கைது செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் இரண்டு சிறை தண்டனையும் அவர் அனுபவித்துள்ளார். சிறை தண்டனையின் பின்னர் அவர் தனது தொழிலையும் இழந்துள்ளார்.

தொழிலை இழந்த குறித்த நபர் நாட்டின் பல பகுதிகளில் ஆங்கில ஆசிரியராக மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்தியுள்ளார்.

செய்த தவறுக்காக தண்டனையாக கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் குறித்த கல்லறையில் குடியேறியவர், அந்த பகுதி மக்கள் வழங்கும் உணவில் உயிரிழக்கும் வரை அந்த இடத்தில் வாழ்ந்து வருகின்றார்.

செய்யும் தவறுக்கு முன்னர் அதன் பின்னரான விளைவுகள் குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் செய்துக் கொள்ளாத நபர் தனது உறவினர்களை மறந்த கல்லறையில் மரணத்தை எதிர்பார்த்து வாழ்ந்து வருகின்றார்.

வன்னி மாவட்ட முன்னாள் எம்.பி ஹுனைஸ் பாரூக் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு!!

முற்று முழுதாக அபிவிருத்தியை நோக்காகக் கொண்டும் வன்னி மக்களின் அடிப்படைப் பிரச்சினையான நீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டுமே, தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டதாக, ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார்.

இதுவரை காலமும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த ஹுனைஸ் பாரூக், தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் சகிதம், முசலிப் பிரதேச சபைக்குற்பட்ட சிலாபத்துறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கொண்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தமை குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கும் போது,

வன்னி மக்களுக்கான நீர்ப் பிரச்சினை, மீள் குடியேறியுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள், கல்வி, கலாசாரம், பாதை அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு என்பவற்றை மேம்படுத்துவது குறித்த தனது எதிர்கால நடவடிக்கைகள் அமையும் என தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்ச்சியில், நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் கீழ் நடை முறைப்படுத்தப்படவுள்ள ‘வன்னிக்கு ஒளி’ என்ற வேலைத்திட்டமும் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யுத்தம் காரணமாக வன்னி மாவட்டத்திலிருந்து இடம் பெயர்ந்த மக்களுக்கான மீள்குடியேற்றத்துக்கு வழிவகை செய்வதும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளையும், பொருளாதார மேம்பாட்டுக்காகச் செய்வதும் இவ் வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஆரம்ப கட்டமாக 300 மில்லியன் ரூபாய் பொறுமதியான வேலைத்திட்டம் நிறைவு செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், வன்னியிலிருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியேற்றம் செய்வது, அடிப்படை வசதிகளை வழங்கி, அவர்களுக்கான வாழ்வாதாரத்துக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கான, முதற்புள்ளியாக இது இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், சுகாதாரப் பிரதியமைச்சர் பைஸால் காசிம், வட மாகாண மற்றும் வட மேல் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் பரிதாபமாகப் பலி!!

 
வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இன்று(06.02.2017) மாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் பலியாகியுள்ளார்.

பெரியமடுவை சேர்ந்த 33 வயதுடைய யோகேஸ்வரன் ஜெனனி என்ற பெண் பன்றிக்கெய்தகுளம் பாடசாலையில் இருந்து அயல் வீட்டில் வசிக்கும் உறவினரின் பிள்ளையை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்தபோதே எதிரில் வந்த பிக்கப் வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் அவர் பலியாகியுள்ளார்.

இவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவருடைய உறவினரான 22 வயதுடைய பெண்ணும் அவருடைய 8 மகனும் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா கருங்காலிக்குளம் அ.த.க பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி!!

 
வவுனியா கருங்காலிக்குளம் அ.த.க பாடசாலையில் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நிகழ்வு இன்று (06.02.2017) மதியம் 2 மணியளவில் பாடசாலை அதிபர் பு.கிருபராசா தலமையில் இடம்பெற்றது.

12வயது ஆண்,பெண்களின் 100மீற்றர் ஓட்டப்போட்டி, இடைவேளை நிகழ்வு , 6வயது ஆண் பெண்களின் கோபுரம் அமைத்தல், விநோதஉடை, அஞ்சல் ஓட்டம் என பல்வேறு விளையாட்டுக்கள் இடம்பெற்றது

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சின் இணைப்பாளர் பாலச்சந்திரன் சிந்துஜன், சிறப்பு விருந்தினராக மாலதி முகுந்தன் ( பிரதிக் கல்விப் பணிப்பாளர் -வவுனியா வடக்கு), கௌரவ விருந்தினராக ஆர்.மங்களகுமார் (உதவிக்கல்விப்பணிப்பாளர்- வவுனியா வடக்கு) மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

திருமணம் பற்றி கேட்டால் கோபம் வருகிறது : காஜல் அகர்வால்!!

திருமணம் பற்றி கேட்டாலே கோபம் வருவதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

காஜல் அகர்வால் தற்போது விஜய், அஜித் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில் திருமணம் எப்போது என்று அடிக்கடி பத்திரிகையாளர்கள் கேட்பது குறித்து காஜல் அளித்த பதில்…

“பொதுவாக நடிகைகளுக்கு 30 வயது ஆகிவிட்டால் உங்களுக்கு திருமணம் எப்போது என்று கேட்டு போகிற இடமெல்லாம் நச்சரிக்கிறார்கள். என்னிடமும் இதே கேள்வியை கேட்கிறார்கள். இது சுத்தமாக எனக்கு பிடிக்கவில்லை. கோபமாக வருகிறது.

திருமணத்துக்குப்பிறகு நடிகைகளுக்கு நாயகி வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்கள். அக்கா, அம்மா வேடம் தான் கொடுக்கிறார்கள்.

நடிப்பையும் திருமணத்தையும் முடிச்சு போட்டு பார்க்க கூடாது. நடிப்பும் ஒரு வேலை தான். திருமணம் ஆன பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். நடிகைகளும் அது போல் தான். திருமணத்துப்பிறகும் சினிமாவில் தகுந்த வாய்ப்பு வழங்க வேண்டும்”.

அதிசயம் நடந்து விட்டது : மகனுடன் இணைந்த தாயின் கண்ணீர் வரிகள்!!

பாகிஸ்தானில் வசிக்கும் தாயுடன் 11 மாதங்களுக்கு பின்னர் சிறுவன் இணைந்துள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர் ரோகினா கியானி, இவருக்கும் காஷ்மீரை சேர்ந்த நபருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இருவருக்கும் ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது, ஆனால் கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் பிரிந்தனர்.

5 வயது சிறுவனான இப்திகார் அகமது தாயுடன் வசிந்து வந்தார், இதற்கிடையே கடந்தாண்டு துபாயில் நடைபெறும் திருமணத்துக்கு அழைத்து சொல்வதாக கூறி இப்திகார் அகமதை, அவனது தந்தை இந்தியாவுக்கு அழைத்து வந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ரோகினா கியானி தன்னுடைய மகனை மீட்டு தரக்கோரி பாகிஸ்தான் அரசின் உதவியுடன் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இப்திகார் அகமதை தாயிடம் ஒப்படைக்குமாறு கூறினர், இதற்கிடையே சமீபகாலமாக இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடித்து வந்ததால் சுமார் 11 மாதங்களுக்கு பின்னர் தாயிடம் ஒப்படைக்கப்பட்டான்.

இதுகுறித்து அவர் கூறுகையில், என் மகனுடன் நான் மறுபடியும் சேர்வேன் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டேன், ஆனால் அதிசயம் நடந்து விட்டது என தெரிவித்துள்ளார்.

கனடா வாழ் ஈழத் தமிழருக்கு கிடைத்த விருது!!

கனடாவைச் சேர்ந்த இலங்கை தமிழ் கவிஞர் மற்றும் அறிஞரான வைத்தியர் சேரன் ருத்ரமூர்த்தி சர்வதேச கவிஞர் விருதுக்கு தெரிவாகியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த சேரன் ருத்ரமூர்த்தி, கனடாவின் வின்ட்சர் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.

இதேவேளை ONV அறக்கட்டளை மூலமே சேரன் ருத்ரமூர்த்தி கவிஞர் விருதுக்கு தெரிவாகியுள்ளார்.

இந்திய தூதரகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் பெப்ரவரி 17 ஆம் திகதி இந்த விருது வழங்கிவைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Harithamanasam என்ற தலைப்பின் கீழே குறித்த நிகழ்வு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தை : தாய் என்ன செய்தார் தெரியுமா?

சீனா நாட்டில் உள்ள தண்டவாளம் ஒன்றில் குழந்தை தவறி விழுந்ததை தொடர்ந்து ரயில் புறப்படுவதற்கு முன்னதாக தாயார் காப்பாற்றியுள்ள காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள Qinghai மாகாணத்தில் Xining நகர ரயில் நிலையத்தில் தான் இந்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் தாயார் ஒருவர் தனது 3-வது குழந்தையை அழைத்துக்கொண்டு ரயில் நடைமேடையில் நடந்துச் சென்றுள்ளார். அப்போது விரைவு ரயில் ஒன்று வந்து நின்றவுடன் புறப்படுவதற்கு தயாராக இருந்துள்ளது.

இந்நிலையில், நடைமேடையில் தாயாருடன் நடந்து வந்த அந்த குழந்தை திடீரென ரயிலை நோக்கி ஓடுகிறாள். பின்னர், ரயிலின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைய அதனை தாவி பிடிக்க முயன்றபோது கை தவறி ரயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளாள்.

மகள் ரயிலுக்கு அடியில் விழுந்துவிட்டதை கண்ட தாயார் அலறிக்கொண்டு மகளை தூக்க முயன்றுள்ளார். ஆனால், சில நிமிடங்களாக போராட்டம் முடியவில்லை.

இக்காட்சியை கண்ட சக பயணிகளும் குழந்தையை தூக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சம்பவம் அறிந்த ரயில் நிலைய பொலிசார் உடனடியாக விரைந்துச் சென்று ரயில் புறப்படுவதை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார்.

ஆனால், ரயில் புறப்படுவதற்கு சில வினாடிகளுக்கு முன்னர் குழந்தையை பயணிகள் பத்திரமாக மீட்டு தாயாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் பதவான இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சொந்த தோலை விற்ற நபர் : அருங்காட்சியகப் பொருளாக மாறிய விசித்திரம்!!

 
தனது தோலில் குத்தப்பட்டுள்ள பச்சைகளை காட்சிப்படுத்துவதற்காக, தோலை ஒரு அருங்காட்சியக ஏற்பாட்டாளருக்கு விற்பனை செய்துள்ள நிகழ்வு சுவிற்சர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

சுவிற்சர்லாந்தின் ஷுரிச்நகரில் வசித்து வரும் 40 வயதான டிம்ஸ்டெய்னர் என்பவர், தனது தோலில் அதிக பச்சை குத்திக் கொள்வதில் ஈடுபாடுடையவராவார் .

இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு, ஜெர்மனியில் அருங்காட்சியக ஏற்பாட்டாளராகவுள்ள, ரிக் ரெயின்கிங்கி என்பவரிடம் தனது பச்சை குத்திய தோலை விற்பனை செய்துள்ளார்.

இந்நிலையில் ரிக் ரெயின்கிங்கியின் ஏற்பாட்டில் அருங்காட்சியகம் எங்கு நடந்தாலும், அங்கு டிம் ஸ்டெய்னரின் பச்சை குத்திய தோலானது காட்சி பொருளாக காண்பிக்கப்படுகிறது.

மேலும் தற்போது தற்காலிக காட்சி பொருளாக இருக்கும் அவரது தோல், அவர் இறந்த பிறகு நிரந்தரமாக ரிக் ரெயின்கிங்கியின் காட்சிக்கூடத்திற்கு கொடுக்கப்படுவதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளார். அத்தோடு உலகில் அழியா புகழை பெறுவதற்காகவே தான் இதை செய்ததாக அவர் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டிரம்பின் தொப்பி அணிந்த சிறுவனுக்கு அடி உதை!!

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கும் டொனால்டு டிரம்ப் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் அவருக்கு அமெரிக்க மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே அவருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவரது உத்தரவுகளுக்கு எதிராக நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.

இந்த நிலையில் டிரம்ப் தொப்பி அணிந்திருந்த 12 வயது கவின் என்ற சிறுவன் சக மாணவர்களால் தாக்கப்பட்டான். அவன் மிஸ்ஸோரியில் உள்ள பார்க்வே பாடசாலையில் கல்வி கற்கிறான்.

அவன் தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் கையெழுத்திட்டு அமெரிக்காவை மீண்டும் பெரிய அளவில் உயர்த்திடுவோம் என்று எழுதப்பட்ட தொப்பியை அணிந்து பாடசாலை பேருந்தில் பயணித்துள்ளான்.

அதன்போது உடன் இருந்த சக மாணவர்கள் அந்த தொப்பிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதை கழற்றும்படி கூறினர். அதற்கு மறுக்கவே அவனை அடித்து உதைத்தனர்.

அது குறித்து வீடியோ வெளியானது. அதில் சிறுவன் கவினிடம், சுவர் கட்டுவதை நீ விரும்புகிறாயா?’ என ஒரு மாணவன் கேட்கும் காட்சி பதிவாகி உள்ளது.

தீவிரவாதத்திற்காக கடத்தப்படும் அப்பாவி குழந்தைகள் : ஐ.எஸ் தீவிரவாதிகளின் வெறிச்செயல்!!

 
அகதிகள் முகாமிலிருக்கும் குழந்தைகளை கடத்தி, தங்கள் இயக்கத்திற்கு சார்பானவர்களாக மற்றும் நடவடிக்கைகளை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த தீவிரவாத அமைப்பினரை அளிப்பதில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், தங்கள் இயக்கத்தை பலப்படுத்த அகதிகள் முகாம்களில் இருக்கும் குழந்தைகள் கடத்திவந்து, பலவந்தமாக ஐ.எஸ் அமைப்பிற்குள் சேர்க்கின்றனர் என சர்வதேச ஊடகமொன்று தகவல் பகிர்ந்துள்ளது.

குறித்த சிறுவர்கள் லெபனான் மற்றும் ஜோர்டான் அகதிகள் முகாமிலிருந்து, தனி கடத்தல் படையினரால் கடத்தி வரப்படுவதாகவும், அவர்களுக்கான பாரிய நிதியை ஐ.எஸ் அமைப்பினர் கொடுப்பதாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான அமைப்பான குக் வில்லியம் ஆய்வு குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐரோப்பாவிலிருந்து இதுவரை 88,300 குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு அமைப்பான யூரோபால் குறிப்பிட்டுள்ளது.

முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு உதவி செய்பவர்களை போல், ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் கடத்தல் பிரிவினர் முகாமிற்குள்ளிருக்கும் குழந்தைகளை கடத்துவதாக குறித்த ஆய்வமைப்பினர் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரணத்தில் முடிந்த ஐஸ்கிரீம் வியாபாரம் : ஹட்டனில் சம்பவம்!!(படங்கள்)

 
ஹட்டனில் இரண்டு ஜஸ்கிரீம் விற்பனையாளர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனில் உள்ள கலாசார மண்டபம் ஒன்றுக்கு அருகிலேயே குறித்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் குறித்த கலாசார மண்டபத்தில் திருமண நிகழ்வென்று இடம்பெற்ற நிலையில், அவ்விடத்தில் ஐஸ்கிரீம் வியாபாரியொருவர் ஐஸ்கிரீம் விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளார். இதன்போது அவ்விடத்திற்கு வருகைதந்த மற்றுமொறு ஐஸ்கிரீம் வியாபாரியும் விற்பனைியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் இருவருக்குமிடையில் சண்டை மூண்டுள்ள நிலையில், ஒருவர் மண்டபத்தின் படியிலிருந்து கீழே விழுந்தவாறு உயிரிழந்துள்ளார்.

ஹட்டன் – சமலனகம பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய எஸ்.தங்காராஜா என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை மற்றைய ஐஸ்கிரீம் வியாபாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெறுவதுடன், சடலம் ஹட்டன் மாவட்ட நீதவான் பார்வையிட்ட பின் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி!!

வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கு குறைந்த பட்ச மாத சம்பளமாக 450 அமெரிக்க டொலர்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இது வரையிலும் வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கைப் பணியாளர்களின் குறைந்த பட்ச அடிப்படை மாதாந்த சம்பளம் 350 அமெரிக்க டொலர்களாகவே காணப்பட்டுள்ளது.

எனினும் அதனை 450 டொலர்களாக உயர்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன் படி இனி வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு 450 டொலர்களுக்கு அதிகமான மாதாந்த சம்பளம் கிடைக்கப்பெறுமாக இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு திட்டம் ஒன்றை முன்மொழிவதற்கான சட்ட வரைவுகளை உருவாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பணியாளர்களால் நாட்டின் அந்நிய செலாவணி அதிகரித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் 261 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வருமானமாக கிடைத்துள்ளன.

இதனால் இவர்களின் பாதுகாப்பை உறுதி படுத்துவதற்காக ஓய்வுதிய திட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.

குடிபோதையால் நிகழ்ந்த கோர விபத்து : 16 பேர் பலி!!

 
குடிபோதையில் வந்த சாரதியால், 14 பாடசாலை மாணவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்றுராஸில் இடம்பெற்றுள்து.

ஒன்றுராஸ் நாட்டின் தலைநகரான டெக்குசிகல்பாவிலுள்ள, அதிவேக நெடுஞ்சாலையில் குடிபேதையுடன் வேமாக வந்த லொறி சாரதி, பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த பஸ் மீது மோதியுள்ளார்.

குறித்த விபத்து நிகழ்ந்தப்போது பஸ்ஸில் மொத்தமாக 60 பேர் பயணித்துள்ளார்கள். விபத்து நடந்தவுடன் 14 பேர் இறந்துள்ளதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 34 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழங்களை ஏற்றிய நிலையில் மிகவும் வேகமாக வந்துள்ள குறித்த லொறியின் சாரதி, ஒரு வகை போதை பானத்தை அருந்தியிருந்ததால், லொறி கட்டுப்பாட்டை இழந்து, பாடசாலை பஸ்மீது மோதியுள்ளது.

மேலும் குறித்த விபத்தினால் 23 வயதான பஸ் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தப்பிச் செல்ல முயன்ற லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டள்ளார்.

விபத்து நிகழ்ந்தப்போது குறித்த சாரதியிடமிருந்து ஒரு வகை போதை பானத்தின் மனம் வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவதானம் : ஈஷி கேஸ் ஊடாக பணம் பறிக்கும் கும்பல்!!

போலியன குறுஞ்செய்தி போட்டிகளில் வெற்றிபெற்றதாக கூறி, ஈஷி கேஸ் ஊடாக பொது மக்களிடம் பணம் பறித்து வந்த திட்டமிட்ட குற்றக் குழுவொன்றினை கல்கிஸை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுச் செய்துள்ளனர்.

பெண் ஒருவரையும் மேலும் இருவரையுமே இவ்வாறு கைது செய்ததாகவும் இவ்வாறான நிதி மோசடிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் குழுக்களிடம் ஏமாற்றமடைய வேண்டாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொலைத் தொடர்பு நிறுவனங்களினால் நடத்தப்படுகின்ற போட்டியில் வெற்றி பெற்றிருப்பதாக தெரிவித்து போலியான குறுஞ்செய்தி மற்றும் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி நிதி மோசடியில் ஈடுபடுவது தொடர்பான முறைப்பாடுகள் பல, கடந்த தினங்களில் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.

கல்கிஸை விஷேட குற்ற விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த இதுபோன்ற முறைப்பாட்டு காரணமாக, பெண்ணொருவர் உட்பட 3 பேர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொலைத்தொடர்பு நிறுவனங்களினால் நடத்தப்படுகின்ற போட்டியில் வெற்றி பெற்றிருப்பதாக தெரிவித்து பல்வேறு நபர்களிடம் 11 இலட்சத்து 76,000 ரூபா நிதி மோசடியில், இவர்கள் ஈடுபட்டிருப்பதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள் வெல்லம்பிட்டி, கொலன்னாவ மற்றும் மாவனல்லை பிரதேசங்களை சேர்ந்த 43, 37, 50 வயதுகளை உடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் கல்கிஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், கல்கிஸை விஷேட குற்ற விசாரணைப் பிரிவினால் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பனிச்சரிவில் சிக்கி 100 பேர் பலி!!

ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதில் மிகவும் பின்தங்கிய பகுதியான நூரிஸ்தான் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கு தொடர்ந்து பனிச்சரிவுகள் ஏற்படுகின்றன. அதன் இடிபாடுகள் வீடுகளின் மீது சரிந்து வீ்ழ்கின்றன. இதனால் வீடுகள் பனிக்கட்டிக்குள் மூழ்கி கிடக்கின்றன. வீதிகள் மூடப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள பர்க்மடல் மாவட்டத்தில் கிராமங்கள் முழுவதும் பனிக்கட்டிக்குள் மூழ்கி கிடக்கின்றன. இவை தவிர வடக்கு மற்றும் மத்திய ஆப்கானிஸ்தான் மாகாணங்கள் பனிச் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளன.

பனிச்சரிவில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அவர்களில் 50 பேர் நூரிஸ்தான் மாகாணம் பர்க்மால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள்.

வடகிழக்கில் உள்ள படாக்ஷான் மாகாணத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 3 பெண்கள், 2 குழந்தைகள் உள்ளடங்குகின்றனர்.

இவர்களது வீடு பனிக்கட்டிக்குள் சிக்கி அழிந்துவிட்டது. இன்னும் ஏராளமானோர் பனிக்கட்டிக்குள் சிக்கி தவிக்கின்றனர். எனவே, மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.