வரட்சியான காலநிலையால் நாடு முழுவதும் சுமார் 6 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கபப்ட்டுளளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இவர்களுக்கு |தேவையான குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதீப் கொடிபில்லலை தெரிவிததுள்ளார்.
13 மாவட்டங்களுக்கு குடிநீரை பெற்றுக்கொடுப்பதறகு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வரட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு, விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை மற்றும் மின்சார உற்பத்தியிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆகவே, குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுமாயின் உடனடியாக 117 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கத்திற்கு அறிவிக்கும் பட்சத்தில் இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிராந்திய அலுவலகங்களூடாக நீர் விநியோகம் முன்னெடுக்கப்படும் என பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயின் பாதிப்பிற்குள்ளாகியுள்ள பகுதிகளுக்கு பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் வரட்சி காரணமாக யாழ்ப்பபாணம், மன்னார், திருகோணமலை, பதுளை, மொனராகலை, கம்பஹா உள்ளிட்ட பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் 24,324 குடும்பங்களை சேர்ந்த 85,461 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் 8,200 குடும்பங்களை சேர்ந்த 31,300 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகமான பேஸ்புக் ஊடாக ஏற்படும் உறவினால் இளைய சமுதாயம் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதேபோன்று பேஸ்புக்கில் அறிமுகமாகிய உறவினால் பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பிலியன்தலை பிரதேசத்தின் பெண் ஒருவர் தொடர்பிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது. குறித்த பெண் அபிவிருத்தி அதிகாரியாக கடமை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
31 வயதுடைய அந்த பெண் 51 வயதுடைய நபருடன் இவ்வாறு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அந்த தொடர்பு நீண்ட தூரம் தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் இருவரும் சந்தித்து உரையாடியுள்ளனர். சிறிது காலம் சென்ற பினனர் இந்த நபர் அந்த பெண்ணை சந்தித்து வல்லுறவிற்கு உட்படுத்த பலவந்தப்படுத்தியுள்ளார்.
எனினும் அந்த பெண் இதற்கு விரும்பாமையினால் கூர்மையான ஆயுதம் ஒன்றை காட்டி அந்த நபர் பெண்ணை கடத்தி சென்றுள்ளார்.
இவ்வாறு கடத்தி சென்று பெண்ணின் ஆடை கிழித்து அவரது உடல் மீது தீ வைத்து அவரை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதோடு, பெண்ணின் கணவருக்கு தொலைப்பேசி அழைப்பொன்றை மேற்கொண்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
குறித்த நபர் அங்கிருந்து சென்ற சந்தர்ப்பத்தில் பெண் தனது கணவருக்கு தகவல் வழங்கியுள்ளார். பாழடைந்த வீடொன்றில் தான் தடுத்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பெண்ணின் கணவர் பிலியந்தலை பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய, சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார், கணவர் ஊடாக தொலைப்பேசி அழைப்பொன்றை மீண்டும் மேற்கொண்டுள்ளனர்.
அங்கு பெண்ணை கடத்தின நபர், தன்னை சந்திப்பதற்காக அத்துருகிரியவுக்கு வருமாறு தெரிவித்துள்ளார். அவ்வாறு சென்ற சந்தர்ப்பத்தில் பொலிஸாரினால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் பெற்றுக் கொண்ட தகவல்களுக்கமைய பெண்ணை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அந்த பெண் அத்துருகிரியவில் அமைந்துள்ள அந்த நபரின் வீட்டில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வவுனியா – நித்தியநகர் கிராமத்தில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.
நித்தியநகர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது 46) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த நபர் வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தெடர்பாக கருத்து தெரிவித்த கிராமவாசி ஒருவர்,
நித்தியநகர் கிராமத்தில் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட காலம் தொடக்கம் யானை தாக்குதல் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது.
யானை தாக்குதலின் காரணமாக கடந்த காலங்களில் விவசாய நிலங்களும் களஞ்சியப்படுத்தப்பட்ட தானியங்களும் அழிவடைந்துள்ளது.
யானை தாக்குதல் தொடர்பாக கிராம மக்கள் வனதுறையினர் அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் கவனத்திற்கு கொண்டுவந்த போதும் முறைப்பாடு செய்யப்படும் நேரங்களில் மாத்திரம் கிராமத்திற்கு வரும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் வாக்குறுதிகளை மட்டும் வழங்கி விட்டு சென்று விடுவார்கள்.
கடந்த 2015ஆம் ஆண்டு எமது கிராமத்திற்கு மின்சார வேலி அமைப்பதற்காக நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்த போதும், இன்று வரையில் பாதுகாப்பிற்காக மின்சார வேலி எமது கிராமத்திற்கு அமைக்கப்படவில்லை.
குழந்தைகளும், பெண்களும், வயதானவர்களும் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதேவேளை, கடந்த மூன்று மாதங்களின் முன் நித்திய நகர் கிராமம் சிறுத்தை புலியின் தாக்குதலுக்கு உள்ளாகி சில ஆடுகளை இழந்திருந்ததும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் மூன்று இடங்களில் வாள்வெட்டு – குழு மோதல்கள் இடம்பெற்றன. காது, மூக்கு என்பன இந்த மோதல்களில் துண்டாடப்பட்ட நிலையில் 11 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடாநாட்டில் சில வார அமைதியின் பின்னர் மீண்டும் தலைதூக்கியுள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மக்கள் அச்சமும் – பீதியும் அடைந்துள்ளனர்.
அச்சுவேலி தெற்கு கரதடி, ஏழாலை வடக்கு, அரியாலை முள்ளிப் பகுதியிலேயே இந்த மோதல்கள் – வாள்வெட்டுச் சம்பவங்கள் நடைபெற்றன.
அச்சுவேலி தெற்கு கரதடியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் நடந்த மோதலில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவுக்கும், ஆவரங்கால் மேற்கைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவுக்கும் கடந்த சனிக்கிழமை கைலகலப்பு நடைபெற்றுள்ளது.
அதன் தொடர்ச்சியாகவே நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த மோதல் சம்பவம் நடைபெற்றது என்று பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆவரங்கால் மேற்கைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், அச்சுவேலி தெற்கு கரந்தடிக்குச் சென்று மோதல்களில் ஈடுபட்டதாக முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனப் பொலிஸார் கூறினர்.
இந்த மோதல்களின்போது, வாள் வெட்டில் காது, மூக்கு, கண் என்பன துண்டாடப்பட்ட நிலையில் இளைஞர்கள் 7 பேர் அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
மேலதிக சிகிச்சைக்காக உடனடியாகவே அவர்கள் அனைவரும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அரியாலை முள்ளிப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே மோதல் நடைபெற்றது.
இதன்போது வீடுகள் மீது கல் வீச்சுத் தாக்குதலும் நடத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. வாள்வெட்டில் படுகாயமடைந்த 4 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸார் சம்பவ இடத்துக்குச் செல்வதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர் தப்பிச் சென்று விட்டனர்.
ஏழாலை வடக்கில் நேற்றுமுன்தினம் 7 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்தவர்களை, மூன்று இளைஞர்கள் மறித்துள்ளனர். அவர்களிடம் பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.
கத்தி, வாள் ஆயுதங்களைக் காண்பித்து அவர்கள் மிரட்டியும் காரில் இருந்தவர்கள் பணம் வழங்கவில்லை. இதனையடுத்து காரில் பயணம் செய்தவர்களைத் தாக்கியுள்ளனர்.
மயானத்தில் கிரியை முடித்து திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்தப் பகுதி கிராம அலுவலர் மீதும், மூவர் கொண்ட இளைஞர் குழு தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு உடனேயே தகவல் வழங்கிய போதும் இரண்டு மணி நேரத்தின் பின்னரே சம்பவ இடத்துக்கு அவர்கள் வருகை தந்ததாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சுமத்தினர்.
யாழ். குடாநாட்டில் சில வாரங்களாக வாள்வெட்டுச் சம்பவங்கள் ஓய்ந்திருந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் திடீரென மூன்று இடங்களில் வாள்வெட்டுச் சம்பவம் நடைபெற்றமை மக்களை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கேகாலை, பின்னவல யானைகள் சரணாலயத்தில் யானையொன்றுக்கு கையால் பழங்களைக் கொடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண்ணின் கையை அந்த யானை பற்றி இழுத்து முறித்ததால், கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.
குச்த ஓ கூதணிணூ எனும் 48 வயதான சுவீடன் நாட்டுப் பெண்ணே இந்த அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளார். சுவீடன் நாட்டிலிருந்து வந்த சுற்றுலா குழுவொன்று மாத்தறையிலுள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்தது.
நேற்று கண்டியிலிருந்து மாத்தறை நோக்கி வாகனமொன்றில் சென்ற இவர்கள் கேகாலை பின்னவல யானைகள் சரணாலயத்துக்கும் சென்றிருந்தனர்.
அச்சமயம் அங்கு நின்றிருந்த யானையொன்றுக்கு பழங்களைக் கொடுக்க இந்தப் பெண் முயன்றபோது திடீரென அந்த யானை அவரது வலது கையைப் பற்றி இழுத்து முறித்துள்ளது.
கேகாலை வைத்தியசாலையில் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள இந்தப் பெண்ணின் நிலை திருப்திகரமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐபோன் பட்டரி தீப்பிடித்தமையின் காரணமாக எகிப்து நாட்டுக்கு சொந்தமான MS804 என்ற விமானம் வெடித்து சிதறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விமானம் பாரிஸ் நகரில் இருந்து கெய்ரோ நோக்கி மத்திய தரைக்கடல் பகுதி வழியாக பயணித்த வேளை, வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் அந்த விமானத்தில் பயணித்த 66 பேரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம், கடந்த ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், விமானத்தில் தீப்பரவியதன் காரணமாகவே, விமானம் வெடித்து சிதறியதாக தெரியவந்துள்ளது.
விமானத்தின் கருப்பு பெட்டியை ஆய்வு செய்ததில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. விமானம் வானில் சென்று கொண்டிருந்த போது, தீப்பிடித்தமைக்கான அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விமான நிலையத்தின் பாதுகாப்பு கெமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ததில், குறித்த விமானத்தில் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்கள் கொண்டு செல்லப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த ஐபோன் பெட்டரி வெப்பமாகி தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தொடர்ந்து விமானத்தின் இயந்திரத்தில் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த தகவல் தொடர்பில் போதிய ஆதாரங்களுடன் உறுதி செய்யப்படவில்லை எனவும், கூறப்படும் நிலையில், ஆப்பிள் நிறுவனமும் இதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளது.
தமது அனைத்து உற்பத்திகளும் உரிய சோதனைக்கு பிறகே விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கனடாவில் அமைந்துள்ள ரோரன்ரோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்திற்கு ஈழத்தமிழர் ஒருவரால் இரண்டு மில்லியன் டொலர் நிதி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மூலமான கற்கை நெறிகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நிதி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரோரன்ரோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான, கலாநிதி ரவி குகதாசன் என்ற ஈழத்தமிழரே இந்த நிதி அன்பளிப்பை வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த நிதியினைக் கொண்டு தமிழ் மொழி மூலமான பாட கற்கை நெறிகளை விரிவு படுத்த முடியும் எனவும், ஈழத்தமிழர்களின் கலை, கலாச்சாரம் உள்ளிட்ட விடயங்கள் ஏனைய சமூகத்தவர்களுக்கு எடுத்து காட்ட முடியும் எனவும் அந்த பல்கலைக்கழகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
1974ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தை விட்டு வெளியேறிய கலாநிதி ரவி குகதாசன் கனடா நாட்டில் குடியேறிய பின்னர், 1978ஆம் ஆண்டில் ரோரன்ரோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்தில் இணைந்துகொண்டார்.
1982ஆம் ஆண்டில் ரோரன்ரோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்தில் Bsc பட்டம் பெற்ற அவர், 1986ஆம் ஆண்டில் ரோரன்ரோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, 51 ஆண்டுகால வரலாற்றில் பல்கலைக்கழகத்திற்கு தனி நபர் ஒருவரிடம் இருந்து கிடைக்க பெற்ற மிக பெரிய அன்பளிப்பு இதுவே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவில் கால் பதித்த கடைசி நபரான யூஜின் செர்னன் உடல்நலக் குறைவு காரணமாக தனது 82வது வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1972ம் ஆண்டு Apollo 17 விண்கலத்தின் தலைமைப் பொறுப்பில் யூஜின் செர்னன் விண்வெளி பயணம் மேற்கொண்டார்.
இது யூஜின் செர்னனின், மூன்றாவது விண்வெளிப் பயணமாகும். அத்துடன், அமெரிக்கா இறுதியாக நிலவுக்கு மனிதர்களை விண்வெளிப் பயணமும் இதுவேயாகும்.
இதேவேளை, நிலவில் கால் பதிக்கும் இறுதி மனிதனாக தாம் இருக்க கூடாது எனவும், நிலவில் தொடர்ந்தும் மனிதர்கள் கால் பதிக்க வேண்டும் எனவும் யூஜின் செர்னன் வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
எல்லாம் சுலபமாக நிறைவேறுவதாக நினைத்திருந்த சசிகலாவுக்கு முதலமைச்சர் பதவி இன்னும் கிடைக்காததும், தொடர்ச்சியான நெருக்கடிகளும் ப்ளட்பிரஷரை எகிற வைக்கின்றன என்கிறது கார்டன் வட்டாரம்.
பொதுக்குழுவின் ஒப்புதல், அதையடுத்து பொதுச்செயலாளர், உடனே முதல்வர் முழக்கம், தொண்டர்களோடு தரிசனம், முக்கிய நிர்வாகிகளோடு உரையாடல், வி.ஐ.பி.க்களை சந்தித்தல் என படு வேகம் காட்டிய சசிகலாவுக்கு திடீரென குறுக்கிட்டுள்ளது அரசியல் வேகத்தடை.
“முதல்வராக சின்னம்மா வரவேண்டும்’ என்கிற முழக்கம் அடியோடு நிறுத்தப்பட்டிருக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய மன்னார்குடி உறவுகள், கட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற நிறைய மறைமுக நடவடிக்கைகளை எடுத்தார் சசிகலா.
அதன் உச்சபட்சம், முதல்வர் ஒ.பி.எஸ்.சை தனது காலில் விழ வைத்ததும், துணைசபா நாயகர் தம்பிதுரை விதிகளுக்குப் புறம்பாக தனது லெட்டர் ஹெட்டையே பயன்படுத்த வைத்ததும்தான்.
இதனை டெல்லி ரசிக்கவில்லை. அதே சமயம், டெல்லிக்கு தலையையும் கார்ட னுக்கு வாலையும் காட் டிக்கொண்டிருந்த ஒ.பி.எஸ்., தனக்கு ஏற்படும் அவமானங்களை டெல்லிக்கு சொல்லத் தவறியதில்லை.
அதாவது, கார்ட னில் தினகரன் திட்டியது தொடங்கி, முதல்வர் பொறுப்பில் தனக்கிருக்கும் அவமானங்கள் வரை அனைத்தையும் அவ்வப்போது டெல்லிக்கு பாஸ் பண்ணியபடிதான் இருக்கிறார்.
“முதல்வர் பதவி யில் உட்கார்வதற்கான நேரத்தை சசிகலா குறித்துவிட்டார்’ என்றும், “கட்சி நிர்வாகிகளோடு நடத்தும் ஆலோசனைகளை முடித்துவிட்டு, எனது ராஜினாமா கடிதத்தை ராஜ்பவனுக்கு (கவர்னருக்கு) அனுப்பி வைப்பார் அல்லது கொடுக்க வைப்பார்’ என்றும் டெல்லிக்கு அழுத்தமாக தகவலை அனுப்பினார் ஒ.பி.எஸ்.
இதனையடுத்து, ஒ.பி.எஸ்.சை டிஸ்டர்ப் பண்ணவேண்டாமே என கார்டனுக்கு நாசூக்காகச் சொல்லிப்பார்த்தது.சசிகலா கணவர் நடராஜன் இதை பொருட்படுத்தவில்லை.
‘ கட்சியும் ஆட்சியும் சசிகலாவிடம் தான் இருக்கணும். ஆட்சிக்கு சசிகலா வந்தாலும் ஓ.பி.எஸ்.சைப் போல உங்களோடு இணக்கமாக இருப்போம்.
இதை ஏற்கலைன்னா வேறு யோசனையை நாங்க பரிசீலிப்போம்’ என நடராஜன் கறாராகச் சொல்ல… கோபமானது டெல்லி.
7 மாதங்களாகக் கிடப்பில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரப்போகிறது என ஒரு குண்டை வீச வைத்தது டெல்லி.
சசிகலா கலக்கமடைந்தார். தீர்ப்பு குறித்து முன்கூட்டியே வக்கீல்கள் அளித்த நம்பிக்கைகளையும் புறக்கணித்தார்.
முதல்வர் பதவியேற்புக்காக குறிக்கப்பட்ட தேதியை தள்ளி வைத்ததுடன் முதல்வர் கோஷத்தையும் நிறுத்தச்சொன்னார் சசிகலா என சுட்டிக் காட்டினார்கள்.
“சொத்துக்குவிப்பு வழக்கைக் காட்டி சசிகலாவை பயமுறுத்தியதோடு பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் மூலமாகவும் சசிகலாவுக்கு செக் வைக்கும் நடவடிக்கைகளை டெல்லி எடுத்துள்ளது என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.
“இப்போதைய சூழலில், கார்டன் நெருக்கடி தந்தாலும் ராஜினாமா செய்யாதீர்கள்’ என ஒ.பி.எஸ்.சுக்கு முதலில் அட்வைஸ் பண்ணியது டெல்லி. அடுத்து, “முதல்வர் நேரில் வராமல் கார்டனிலிருந்து ராஜினாமா கடிதம் வந்தால் அதனை ஏற்க வேண்டாம்’ என ராஜ்பவனுக்கு உத்தரவிடப்பட்டது” என்கிறார் பொதுத்துறை அதிகாரி ஒருவர்.
இந்த விவரம் நடராஜனுக்கும் தெரிய வந்திருக்கிறது. அவருக்கு வேண்டப்பட்டவர்களோ, “”எங்களை டெல்லி அழிக்க நெனச்சா ஒ.பி.எஸ். ஆட்சியை கவிழ்த்துட்டு தி.மு.க.-காங்கிரஸ் சப்போர்ட்டோடு நாங்க ஆட்சிக்கு வருவோம்.
70 எம்.எல்.ஏ.க்கள் எங்க வசம் இருக்காங்க” என டெல்லிவாலாக்களிடம் நடராஜன் சொல்லிருக்காரு. இதையடுத்துதான் சீரியசாக தனது வேலையை காட்டியிருக்கிறது பா.ஜ.க.! அதன் ஒரு வழிதான் கவர்னருக்கான அட்வைஸ் என விவரித்தார்கள்.
மத்திய அரசு கொடுக்கும் நெருக்கடியை தனது அரசியல் நண்பர்களோடு தொடர்ந்து விவாதிக்கிறார் நடராஜன்.
அவர்களோ, பதவியிலிருந்து ஒ.பி.எஸ். இறங்கி சசிகலா முதல்வராகும் வாய்ப்பை சட்டப்படி நாம் உருவாக்கினாலும் ஆட்சி அமைக்க அழைக்கும் பொறுப்பு கவர்னரை சார்ந்தது.
அந்தச் சூழலில், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை சொல்ல வைத்து சசிகலாவை பதவியேற்க விடாமல் தடுப்பார்கள்.
தீர்ப்பு வருவதற்கு முன்பே சசிகலா முதல்வரானாலும் தீர்ப்பு பாதகமாக வந்தால் முதல்வர் பதவி பறிபோகும். அதனால, சசிகலா முதல்வராவதை விட நீங்க முதல்வராகிவிடுங்க’ என ஐடியா தந்திருக்கிறார்கள்.
இதனை கார்டனில் நடுராத்திரியில் நடக்கும் சொந்தபந்தங்களின் ஆலோசனை நேரத்தில் சசிகலாவிடம் நடராஜன் சொல்லி மல்லுக்கட்ட, அதை ஏற்க மறுத்த சசிகலா, அக்கா (ஜெ.) உட்கார்ந்த பதவியில நான்தான் உட்காரணும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் பாருங்கன்னு கடுப்படிச்சிட்டார் என கார்டனுக்கு நெருக்கமான தரப்பில் எதிரொலிக்கிறது.
ஆனாலும் முதல்வர் பதவிக்காக கம்பு சுழற்றியபடியே இருக்கிறார் நடராஜன்.
ஆட்சியைக் கைப்பற்ற சசிகலா தரப்பினர் போடும் திட்டங்களை அனுப்புமாறு மத்திய உளவுத்துறையின் தென்மாநில ஐ.ஜி. வர்மாவுக்கு ஸ்பெஷல் அசைன்மெண்ட்டை கொடுத்திருந்தது டெல்லி.
ஜெயலலிதா இறந்ததிலிருந்தே தகவல் அனுப்பி வருகிறது மத்திய உளவுத்துறை. கடந்த சில நாட்களாக சசிகலாவிடம் நடராஜன் விவாதிப்பதையும் தினகரன், திவாகரன் உள்ளிட்ட சசியின் உறவுகளின் நடவடிக்கைகளையும் டெல்லிக்கு சொல்லி வருகிறார்கள் உளவுத்துறை அதிகாரிகள்.
இந்த தகவல்கள் கிடைத்த பிறகுதான் தினகரன் மீதிருக்கும் ஃபெரா வழக்கையும், நடராஜன் மீதான சொகுசு கார் வழக்கையும் தூசு தட்டி லைம் லைட்டுக்கு கொண்டுவந்துள்ளது மத்திய அரசு. திவாகரன் மீது வழக்கு ஏதேனும் இருக்கிறதா எனவும் ஆராய்ந் திருக்கிறது.
தினகரன் மீதான பெரா வழக்கில் 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து கார்டனில் பலத்த விவாதம் நடந்திருக்கிறது. தஞ்சையில் இருந்த திவாகரன், பொங்கல் முடிந்ததும் தான் சென்னை வர திட்டமிட்டிருந்தார்.
ஆனால், இந்த விவகாரம் அறிந்ததும் கடந்த வாரம் சென்னைக்கு வந்த திவாகரன், வழக்கு, அபராதம்னு தினகரனால நம்முடைய இமேஜ் ஸ்பாயிலாகுதுன்னு காட்டமாக சசிகலாவிடம் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.
தினகரனோ, திவாகரனையும் அவரோட பையனையும் அடங்கி இருக்கச் சொல்லுங்க. கள்ளத்துப்பாக்கி கடத்தும் கும்பலோடெல்லாம் பழக்கம் வெச்சிக்கிட்டிருப்பது பிரச்சனையாகுது என திவாகரனுக்கு எதிராக சீறிக்கொண்டிருக்கிறார்.
சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டில் தீர்ப்பு வந்த பிறகு முதல்வர் பதவியை பற்றி யோசிக்கலாம் என சொந்தபந்தங்கள் பலரும் (நடராஜன் தவிர) வலியுறுத்தியிருப்பதால் அமைதியாக இருக்கிறார் சசிகலா.
கார்டனுக்குள் புதிதாக நுழைந்திருக்கும் கேரள ஜோதிடர்கள், 12-ந் தேதி பதவியேற்கலாம்னு உங்களுக்கு தேதி குறிச்சி கொடுத்தது யாரு? அது பௌர்ணமி தினம் என்பதைத் தாண்டி உங்க ஜாதகத்துக்கு வேறு எந்த விசேசமும் இல்லை.
ஜனவரி 12ங்கிறது மார்கழி மாசம். உங்களுக்கு நடக்கும் தசாபுத்திபடி அரசாளும் யோகமிருந்தாலும் மார்கழி மாசத்தில் முயற்சித்தால் கெட்டதாகத்தான் முடியும். தை பிறக்கட்டும். நல்ல நாள் பார்க்கலாம்’ என சசிகலாவின் ஜாதகத்துக்கு சோழி உருட்டி பலன் சொல்லியிருக்கிறார்களாம்.
தை மாதத்தில் முதல் 14 நாட்கள் தேய்பிறையாக இருந் தாலும் அதைப்பத்தி கவலைப் பட தேவையில்லை. உங்களுக்கு சஞ்சலமிருந்தால் ஜனவரி 27-க்குப் பிறகு (வளர்பிறை) நல்ல காரியத்திற்கு முயற்சிக்கலாம்” என்றும் சொல்லி யிருக்கிறார்களாம் ஜோதிடர்கள்.
புது ஜோதிடர்களை நம்பும் சசிகலா, தனக்கு தவறாக ஜோதிடம் கணித்த ஜெயலலிதாவின் ஜோதிடர்கள் மூன்று பேரை கார்டனிலிருந்து விரட்டிவிட்டுட்டாராம்.
தோற்றத்திலும் செய்கையிலும் ஜெ. போலவே மாறி வரும் சசிகலா, ஜெ.வின் கார், சேர் ஆகியவற்றைப் பயன்படுத்துவது போலவே கார்டனில் உள்ள ஜெ.வின் பெட்ரூமையும் பயன்படுத்தி யிருக்கிறார்.
ஜெ. இறந்த ஒரு சில நாட்களில், அவரது அறையில் உள்ள கட்டிலில் சசிகலா படுத்திருந்த போது, நெடுநேரம் தூக்கம் வராமல் தவித்திருக்கிறார். அப்போது ஏதோ ஒரு உருவம் அசைவது போலத் தெரிய… மிரண்டு போய், அறையிலிருந்து வெளியே வந்துவிட்டார் சசிகலா என்கிறார்கள்” கார்டன் உதவியாளர்கள்.
அம்மாவின் ஆவிதான் சின்னம்மா” என்று அவர்கள் சொல்ல, எனக்கும் அப்படித்தான் தோணுது என்றாராம் சசிகலா.
அம்மா ஆவின்னா சின்னம்மா ஏன் பயந்து ஓடி வரணும்? சின்னம்மா ஞாபகத்தில் அம்மா ஆவி வந்ததா? ஏதோ ஒரு மனக்குறையால ஆத்ம திருப்தியடையாம திரும்பி வந்ததா? யாருக்கும் தெரியாமல் இருக்கும் ரகசியங்களை வெளிக்காட்ட வந்ததா?” என கார்டன் பணியாளர்கள் கிசுகிசுப்பாகப் பேசுவது, பெரிய கேட்டைத் தாண்டி கசியத் தொடங்கியுள்ளது.
ஆன்மிகம் -ஜோதிடம் பரிகார தோஷம் உள்ளிட்ட அனைத்திலும் நம்பிக்கையுள்ள சசிகலா இந்த ஆவி பீதி பற்றி ஜோதிடர்களிடமும் தெரிவித்து நள்ளிரவு பரிகார பூஜை பற்றி கேட்டதாகவும் சொல்லும் கார்டன் தரப்பினர், ஜெ.வின் அறையில் சசிகலாவால் நிம்மதியாகப் படுக்கவும் முடியவில்லை. படுக்காமல் இருக்கவும் முடியவில்லை” என்கிறார்கள்.
அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள், நிர்வாகிகள் என அனைவரையும் கண்காணிக்குமாறு மாநில உளவுத்துறையின் உயரதி காரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறதாம் கார்டன். அதன்படி கண்காணிக் கப்படுகிறார்கள். அப்படி கண்காணிக்கப்பட்டதில், கிடைத்த உளவுத்தகவல்களை துறையிலிருக்கும் அதிகாரி சமூகப் பாசத்துடன், அன்-அபிசியலாக அனுப்பி வைத்திருக்கிறார்.
அதில், உங்களை ஆதரிப்பதாக சொல்லுபவர்களில் 60 சதவீதம் பேர் நடிக்கிறார்கள். தங்களின் தொடர்புகளை வெவ்வேறு ரூட்டுகளில் விரிவுபடுத்தி வைத்திருக்கிறார்கள். அவர்களை முழுமையாக நீங்கள் நம்பமுடியாது’ என சொல்லப்பட்டுள்ளதாம்.
தீபாவுக்கு நாள்தோறும் ஆதரவு பெருகுவது நீடிக்குமா எனத் தெரி யாது. எனினும், உங்கள் மீது தொண்டர் களுக்கு அதிருப்தியும் கோபமும் உள்ள நிலையில், தீபாவுக்கு ஆதரவு கூடுவதை அனுமதிக்கக்கூடாது’ என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறதாம்.
ஒ.பி.எஸ்.ஸிடம் மாற்றம்!”முதல்வர் நாற்காலி மீதான ஆசையை தற்காலிகமாக சசிகலா ஒத்திவைத்திருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் முதல்வர் ஒ.பி.எஸ். மத்திய அரசின் சிக்னல்படி வேகமாக இயங்கு கிறார். கார்டனின் அனுமதிக்காகக் காத்திருப்பதில்லையாம்.
உதாரணமாக, கிருஷ்ணா நதி நீர் விவகாரம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க அரசு சார்பில் எடுத்த நடவடிக்கைக்கு கார்டனில் முன் அனுமதி வாங்கப்படவில்லை.
ஆந்திரா செல்வது உறுதி என முடிவெடுக் கப்பட்ட பிறகே கார்டனுக்கு தகவல் தந்திருக்கிறார் முதல்வர்’ என்கிறது கோட்டைத் தகவல்.
தமிழகத்தில் தற்போது முதல்வரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது முதல்வரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சி நன்றாக நடைபெற்று வருவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கணவர் நடராஜன் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா கணவர் நடராஜன்,
முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் தற்போது சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. சசிகலா முதல்வர் ஆவது குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
30 ஆண்டு காலமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை தோளில் சுமந்தது எனது மனைவி சசிகலா தான். எம்.ஜி.ஆர். இறந்த பிறகு ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பாக நாங்கள் தான் இருந்தோம்.
நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம், நாங்கள் மாட்டேன் எனவும் சொல்லவில்லை என்றும் நடராஜன் தெரிவித்துள்ளார்.
நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு குடும்பத்தினருடன் சென்ற சிறுவன் ஒருவன் உகந்தமலை மலையிலுள்ள சுனையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். மட்டு.கோட்டைக் கல்லாற்றைச் சேர்ந்த ரவி அபிலாஸ் என்ற 11வயது சிறுவனே உயிரிழந்தவராவார்.
இந்த மாணவன் கடந்த வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 171 புள்ளியைப்பெற்று சிறப்புச் சித்தியைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பொத்துவிலையடுத்துள்ள உகந்தமலை முருகன் ஆலயத்துக்கு தனியார் பஸ்ஸில் குடும்பத்தாருடன் உகந்தமலை சென்றுள்ளனர்.
அங்கு மலைமேலுள்ள கோவிலுக்கு நேர்த்தி செலுத்தச் சென்றபோது அருகிலுள்ள நீர்நிரம்பிய சுனைக்குள் தவறி வீழ்நதே இந்தச் சிறுவன் உயிரிழந்துள்ளான். இவரது தந்தை ஒரு பொலிஸ் அதிகாரியாவார். சடலம் பொத்துவில் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இந்தச் சிறுவன் அருகிலுள்ள பெரிய சுனையில் தவறி வீழ்ந்ததனைக் கண்ணுற்று அவரைக் காப்பாற்ற ஒரு பெண்ணும் ஆணும் சுனைக்குள் பாய்ந்தனர். சிங்களவரான ஒரு பெண் பக்தரே ஆற்றில் பாயந்துள்ளார்.
இந்த நிலையில் அவர்களும் நீருக்குள் பாய்ந்து தத்தளித்துக் கொண்டிருந்த போது அவர்களைக் காப்பாற்ற மேலும் இரு பாண்டிருப்பு இளைஞர்கள் பாய்ந்து இருவரைக் காப்பாற்றினார்.
இந்த நிலையில் சிறுவனை அவர்களால் மீட்க முடியாத நிலையில் அருகிலுள்ள கடற்படையின், இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு அவர்கள் சுழியோட்டித் தேடியபோது அரைமணி நேரத்தின் பின்னர் சிறுவன் மீட்கப்பட்டான்.
பின்னர் பாணமை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து அங்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்தனர். நேற்று திங்கட் கிழமை பிரேத பரிசோதனை நடாத்தப் பட்டு சடலம் உறவினரிடம் கையளிக் கப்பட ஏற்பாடாகியிருந்தது.
குழந்தைகள் உறங்குவதைப் பார்த்திருப்போம். அவர்களின் ஆழ்ந்த உறக்கத்தையும் கண்டிருப்போம். நாமும் குழந்தையாக இருக்கும் போது இப்படி தான் ஆழ்ந்த உறக்கத்தினை மேற்கொண்டிருப்போம். ஆனால் தற்போது மாற்றியமைத்துக் கொண்ட வாழ்க்கை நடைமுறையால் உறக்கத்தைத் தொலைத்தோம்.
ஒரு சிலர் ஆழ்ந்த தூக்கத்தைத் தொலைத்திருக்கிறார்கள். இந்நிலையில் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் அல்லது குறைவாக உறங்குபவர்கள் நாளடைவில் அவர்களின் மூளையின் ஆரோக்கியத்தைஇழந்து வருகிறார்கள் என்று கண்டறிந்திருக்கிறார்கள். அதாவது 30 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் தங்களின் பணிப்பளு, உறவு மேலாண்மை, மன அழுத்தம். புறச்சூழல் மற்றும் அகச்சூழல் காரணமாக உறக்கத்தை சரிவர மேற்கொள்வதில்லை.
இதனால் மூளையின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் செல்கள் தங்களின் வலிமையான ஆயுளை விரைவிலேயே இழக்கின்றனவாம். மூளையின் செல்கள் சுறுசுறுப்புடன் இயங்கவில்லை என்றால் எம்முடைய நாளாந்த நடவடிக்கையிலும் அவை பிரதிபலிக்கக்கூடும். எனவே தூக்கமின்மையை தவிர்த்து, அவரவர்கள் பணிக்கும், வருவாய்க்கும். இனிய உறவுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போல் தூக்கத்திற்கும் கொடுக்கவேண்டும் என்று மருத்துவ நிபுணர் வலியுறுத்துகிறார்கள்.
நல்லதொரு உறக்கம் அமைய என்ன செய்யவேண்டும் என்று கேட்பவர்களுக்கு இந்த பட்டியல் உதவும்
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழுவதையும்,உறங்குவதையும் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். தினமும் இயற்கையான சூரிய ஒளி உங்களின் உடலில் படும் அளவிற்கு ஒருநேரத்தை ஒதுக்கிக் கொள்ளவேண்டும். தினமும் இரவு உணவை உறங்கச் செல்வதற்கு 3 மணித்தியாலத்திற்கு முன்பாக முடித்துக் கொள்ளவேண்டும். மது அருந்துவதை அதிலும் உறக்கத்திற்காக மது அருந்துவதை முற்றாக தவிர்ப்பது நல்லது.
மதிய உணவிற்கு பின் பால் கலக்காதகோப்பி அருந்துவதை முற்றாக தவிர்க்கவேண்டும். படுக்கையறையில் உறங்குவதற்கு முன் எக்காரணம் கொண்டும் செல்போன்களையோ, மடிக்கனணிகளையோ அல்லது வேறு எந்த இலத்திரனியல் கருவிகளையோ பயன்படுத்திக்கூடாது. அதேபோல நீங்கள் செல்லம் கொடுத்து வளர்த்தாலும் செல்லப்பிராணிகளுடன் உறங்கவேகூடாது. அதே போல் உங்களின் படுக்கையறை துணைவி அல்லது துணைவருடன் உறங்கச் செல்லும் முன் எக்காரணம் கொண்டு எத்தகைய விவாதங்களிலும் ஈடுபடவேண்டாம்.
இந்த காரணங்களையும் மனதில் வைத்துக் கொண்டு தூக்கத்தை முறைப்படுத்திக் கொள்ளுங்கள். ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ்ந்திடுங்கள். உறக்கம் என்பதும் ஆரோக்கியத்தின் ஒரு பகுதியே.
வவுனியா சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அதிபர் திரு. செ.யேசுநேசன் தலைமையில் 2017ம் ஆண்டிற்கான தைப்பொங்கல் விழா சிறப்பாக நேற்று (16.01.2017)கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பொற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தில் தரம் ஒன்றிற்கான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று(16.01.2017) காலை 9.30 மணியளவில் ஆரம்பப் பாடசாலையிலிருந்து பிரதி அதிபர் தலைமையில் அழைத்துச் செல்லப்பட்டு ஐயாத்துரை மண்டபத்தில் நிகழ்வுகள் தமிழ் மத்திய மகாவித்தியாலய அதிபர் தா.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு வலய கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.பி. நட்ராஜ், சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு வலய ஆசிரிய ஆலோசகர் ஆரம்பப்பிரிவு செ.விஜயகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் வரவேற்று நிகழ்வுகளுடன் கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன. தரம் ஒன்றிற்கு அனுமதிபெற்ற மாணவர்களை தரம் இரண்டில் கல்வி கற்கும் மாணவர்கள் பூச்செண்டு, பலூன்கள் கொடுத்து அழைத்துச் சென்றனர்.
இன் நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா தாண்டிக்குளம் அருள் மிகு அற்புத ஐயனார் ஆலயத்தின் 15ம் நாள் திருவிழாவும் திருக்கல்யாண நிகழ்வும் நேற்றைய தினம் (15.01.2017 ) ஐயனார் விளையாட்டுக் கழகத்தின் தலைமையில் வெகு சிறப்பாக முன்னெடுத்து நடாத்தப்பட்டது.
ஆலயத்தின் மகோற்சவ பெருவிழாவானது கடந்த 01.01.2017 அன்று ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து 15ம் திருவிழாவின் விசேட பூசை நிகழ்வாக திருக்கல்யாண நிகழ்வு முக்கியத்துவம் பெறுகின்றது.
நடைபெற்ற திருக்கல்யாண விசேட மகோற்சவ பூசை நிகழ்வில் தம்பப்பூசை, வசந்த மண்டப பூசை என்பன நடைபெற்றதும் சுவாமி உள்வீதி வருகைதந்ததும், அலங்கரிக்கப்பட்ட கல்யாண பந்தலில் வைத்து அருள்மிகு அற்புத ஐயனாருக்கும் பூரணணை, பூட்கலா தேவிகளிற்கும் திருக்கல்யாண நிகழ்வு பாரம்பரிய முறையில் வெகு சிறப்பாக நடை பெற்றது
நடைபெற்ற திருக்கல்யாண பூசை நிகழ்வினைக் காண்பதற்கு ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகைதந்ததுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து ஐயனார் விளையாட்டு கழகத்தின் ஒழுங்கமைப்பில் கலை நிகழ்வுகளும் வெகு சிறப்பாக நடை பெற்றது.
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், தனது திருமணத்திற்கு ஒரு ரூபாய் மட்டுமே வரதட்சணையாக வாங்கியுள்ளது ரசிகர்களை நெகிழ்ச்சியடைச் செய்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் வெண்கலப்பதக்கம் வென்றார்.
இந்நிலையில் யோகேஷ்வர் தத்துக்கும், ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஜெய்பகவான் சிங்கின் மகள் ஷீடல் சர்மாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்காக மணப்பெண் வீட்டிலிருந்து வெறும் ஒரு ரூபாய் மட்டும் வரதட்சணையாக யோகேஷ்வர் பெற்றுள்ளார்.
இது குறித்து யோகேஷ்வர் கூறுகையில், எனக்கு இரண்டு சகோதரிகள் உள்ளார்கள். அவர்களது திருமணத்திற்காக பெற்றோர்கள் சிரமப்பட்டு வரதட்சணை அளித்தனர்.
இதனால் தனது திருமணத்திற்கு பெண் வீட்டார் சிரமப்படக்கூடாது என இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இளம் வயதிலே மல்யுத்தத்தில் சாதிப்பது மற்றும் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொள்வது என இரண்டு முடிவுகள் எடுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.