வவுனியா சிதம்பரபுரம் மக்கள் வீடு கோரி ஆர்ப்பாட்டம்!!

 
வவுனியாவில் இன்று (07.01.2017) காலை 9.30 மணியளவில் சிதம்பரபுரம் பகுதியிலுள்ள மீள் குடியேறியுள்ள கிராம மக்கள் ஒன்றிணைந்து தமக்கான வீட்டினைப் பெற்றுத் தருமாறு கோரி வவுனியா சிதம்பரபுரம் பிரதான வீதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவ்விடத்திற்குச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளருமான கே.கே.மஸ்தான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடி வீட்டினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் வடமாகாணத்திற்கு கிடைக்கவுள்ள 65ஆயிரம் வீடுகளில் பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதியளித்ததுடன் வவுனியா பிரதேச செயலாளரிடம் ஒரு சிலரை அழைத்துக்கொண்டு சென்று கலந்துரையாடினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெயிலில் காய்ந்து மழையில் நனைகின்றோம், காட்டாதே காட்டாதே பாரபட்சம் காட்டாதே, போன்ற வாசகங்களைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 193 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இப்பகுதிக்குச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, செ.மயூரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதாராலிங்கம் ஆகியோரும் இப்பகுதிமக்களைச்சந்தித்து தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதாகத் தெரிவித்திருந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் கணித, விஞ்ஞான, கலைப்பிரிவுகளில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் முதலிடம்!!

வவுனியா மவாட்டத்தில் கணிதம், விஞ்ஞானம், கலைப்பிரிவுகளில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்றுள்ளனர்.

கணிதப்பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்று சிவதுர்க்கா சத்தியநாதன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் (இம் மாணவி விபத்தில் பலியாகிவிட்டார்), துவாரகா பகீரதன் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடத்தினையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை விஞ்ஞானப் பிரிவில் மதுரா தனபாலசிங்கம் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பவதாரனி சிவபாலராசா 3 ஏ சித்திகளைப் பெற்று இரண்டாமிடத்தினையுமும் பெற்றுள்ளார்.

வர்த்தகப் பிரிவில் (ஆங்கில மொழி) தேவகி பிரபுராம் மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தினையுமும் கலைப்பிரிவில் ஆரதி தசாவதாரன் சர்மா  3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பெற்றுள்ளார்.

இதேவேளை வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தினைச் சேர்ந்த ரங்கநாதன் ஜதுகுலன் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் வர்த்தகப் பிரிவில் முதலாமிடத்தினையும் கணிதப் பிரிவில் செல்வதேவன் கனிசியன் 2ஏ பி சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 4ம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.

தந்தைக்காக 13 வயது மகன் நடத்திய கடத்தல் நாடகம் : இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

சீனாவில் தன்னுடன் அதிக நேரம் செலவிடாத தந்தைக்காக மகன் நடத்திய கடத்தல் நாடகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Shilin கிராமத்தைச் சேர்ந்தவர் Xiao Zheng (13). இவர் தன்னுடைய தந்தைக்கு கைப்பேசியில் தன்னை சிலர் கடத்திவிட்டதாகவும், விரைவில் வந்து தன்னை காப்பாற்றும் படி கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் தந்தை நீ எங்கு இருக்கிறாய், இடத்தை பற்றி கூறு என்று கேள்வி எழுப்பியுள்ளார் . அதன் பின்னர் சிறுவன் தான் தம்முடைய ஊரில் இருப்பதாகவும், ஒரு பழைய வீட்டில் தன்னுடைய கையை கட்டி போட்டு உள்ளார்கள் என்று கூறியுள்ளார்.

இதனால் பதற்றமடைந்த அவர், தன் மகனை எதாவது செய்துவிடுவார்கள் என்று பயந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசாருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு சிறுவன் மட்டும் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளான். அருகில் சென்று பொலிசார் பார்த்த போது அவன் கைப்பேசியை தன் கால்களுக்கு மத்தியில் வைத்துள்ளான்.

அதைத் தொடர்ந்து பொலிசார் அச்சிறுவனிடம் விசாரணை நடத்தும் போது சில ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்துள்ளன. அதவாது இச்சிறுவனின் தந்தை பல்வேறு காரணங்களுக்காக தன் மகனுடன் அதிக நேரம் செலவிடாமல் இருந்துள்ளார்.

அதுமட்டுமின்றி சிறுவனை அவர்களுடைய தாத்தா, பாட்டி வீட்டில் விட்டு விட்டு சென்றுள்ளார். அவ்வப்போது தன் மகனை பார்த்துச் செல்லும் அவர் குறைந்தது ஒரு மணி நேரம் கூட அவரிடம் இருப்பதில்லையாம். சமீபத்தில் இவர் Xiao Zheng வை பார்க்க வந்துள்ளார்.

அப்போது சிறுவன் அப்பா தன்னிடம் இருங்கள் என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவரோ காதில் கேட்காதது போல் வெளியில் சென்றுள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த சிறுவன், தந்தையிடம் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காகவே இந்த கடத்தல் நாடகத்தை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் பொலிசார் சிறுவனின் தந்தைக்கு அறிவுரை செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்ற மாணவி திடீர் மரணம்!!

தூத்துக்குடியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான குத்து சண்டை விளையாட்டு போட்டியில் பங்கேற்ற மாணவி திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்திய திட்டத்தின்கீழ் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் தெரிவு போட்டிகள் நடைபெற்றன.

இதில் தூத்துக்குடி சோரீஸ்புரம் பள்ளி 9ம் வகுப்பு மாணவி மாரீஸ்வரி குத்துசண்டை போட்டியில் சக போட்டியாளருடன் மோதிய போது திடீரென மயங்கிய நிலைக்கு சென்றுள்ளார்.

உடனே மாரீஸ்வரியை மைதானத்தில் அமர வைத்து முதலுதவி அளித்து, தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக மாரீஸ்வரியை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்த போது அங்கு சிகிக்சை பலனின்றி மாணவி மாரீஸ்வரி மரணமடைந்தார்.

மாணவி மாரீஸ்வரியின் மரணம் குறித்து தூத்துக்குடி உதவி ஆட்சியர் மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

நாயிடம் பால் குடிக்கும் சிறுவன் : வினோத வீடியோ!!

இந்தியாவில் சிறுவன் ஒருவன் கடந்த 6 ஆண்டுகளாக நாயிடம் பால் குடித்து வரும் வினோத சம்பவம் வீடியோவாக வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட மாநிலம் தன்பாத் நகரில் வசிக்கும் 10 வயது மோஹித் குமார் என்ற சிறுவனே இச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மோஹ்த்தின் தாய் கூறுகையில், மோஹித்திற்கு 4 வயது இருக்கும் போது தற்செயலாக நாயிடம் பால்குடித்தான். அதனைதொடர்ந்து சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நாயிடம் பால் குடிக்க தொடங்கினான்.

ஒருமுறை பால் குடிக்கும் போது நாய் கடித்துவிட்டது. மருத்துவமனைக்கு சென்று நோய் தொற்று ஏற்படாமல் இருக்க சிகிச்சை அளித்தோம். நாங்கள் எவ்வளவு முயற்சி செய்தும் அவன் நாய்ப்பால் குடிக்கும் பழக்கத்தை விடவில்லை என கூறியுள்ளார்.

இதுகுறித்த மருத்துவர்கள் கூறியதாவது, நாய்ப்பால் மனித உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தது. ஆனால், நாய்க்கு ஏதேனும் நோய் இருந்தால் பால் மூலம் நோய் தொற்று ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு இரவு பாலியல் தொல்லைக்கு ஆளானேன் : பிரபல நடிகை!!

புத்தாண்டு இரவு பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பேஸ்புக் நேரலையில் நடிகை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் நேரலையின் போது தவறாக கருத்து தெரிவித்த இளைஞருக்கு தக்க பதிலடி கொடுத்து பிரபலமான Shraavya Reddy இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இதுகுறித்து பேஸ்புக் நேரலையில் அவர் கூறியதாவது, புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக நண்பர்களுடன் கோவா சென்றிருந்தோம்.

புத்தாண்டு இரவு கடற்கரைக்கு சென்றுகொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் என்னை தவறாக தொட முயன்றான். முன்னதாகவே சுதாரித்துக்கொண்ட நான் அவன் கையை பிடித்து எச்சரித்தேன்.

ஆனால் அவன் தெரியாமல் நடந்துவிட்டதாக கூறி மன்னிப்புக்கேட்டான். புத்தாண்டு காரணமாக இச்சம்பவத்தை பெரிது படுத்தாமல் மன்னித்து விட்டேன்.

அருகிலிருந்த இளைஞனின் நண்பர்கள் சம்பவம் குறித்து என்னிடம் கேட்டறிந்து மன்னிப்பு கேட்டனர் என தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு இரவு பெங்களூரில் பெண்கள் பலர் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவுக் கூரதக்கது.

முதலமைச்சராவது எனது 10 வருட கனவு : அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா!!

அதிமுக சார்பில் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என்பது தமது நீண்ட 10 வருட கனவு என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு ஜெயலலிதாவின் தோழியான சசிகலா அந்த கட்சி நிர்வாகிகளால் தெரிவு செய்யப்பட்டார்.

ஆனால் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் சசிகலா மீது கடுமையான எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்த எதிர்ப்பை சமாளிக்கும் நோக்கில் சமீபத்தில் மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் ஒன்றை நடத்த சசிகலா முடிவு செய்து தொடர்ந்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் போயஸ் கார்டனில் ஒன்று கூடிய சசிகலா உறவினர்கள் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசித்துள்ளனர். அப்போது, முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீது அதிருப்தியையும் சந்தேகத்தையும் சசிகலா வெளிப்படுத்தியிருக்கிறார்.

பொதுச்செயலாளர் பதவிக்கும் பன்னீர் செல்வம் ஆசைப்பட்டார். அவர் காட்டுறது பணிவல்ல, நடிப்பு. மத்திய அரசோடு நாம இணக்கமா நடந்துக்கிறதுன்னு வாக்குறுதி தந்திருக்கோம். ஆனாலும் அவங்க, பன்னீரை முழு கண்ட்ரோலில் வச்சு நமக்கு குடைச்சல் கொடுப்பாங்க.

எனக்கு எதிரா எதிர்ப்புகளும் விமர்சனங்களும் அதிகரிச்சுகிட்டு வருது. இதைக் கட்டுப்படுத்த உங்களால முடியல’ என சசிகலா கூறியிருக்கிறார்.

அவர் அதிருப்தியா இப்படிச் சொல்லவும், கூட இருந்த உறவினர்களும் நடராஜனும் பன்னீரை நாங்க கவனிச்சுகிட்டுதான் இருக்கோம்னு சொல்ல,

முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்வதில் சசிகலா உறுதியாக இருப்பதாக அப்போது தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, இது என்னோட பத்து வருடக் கனவு எனவும் சசிகலா உறுதிபட தெரிவித்ததும் உறவினர்கள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாகம் எடுக்கும் போது குளிர்ந்த நீரை அருந்தலாமா?

எம்மில் பலரும் அலுவலகத்தில் பணியாற்றும் போதும் சரி அல்லது வீட்டில் இருக்கும் போது சரி தாகம் எடுத்தால் உடனே ப்ரிட்ஜிலிருந்து ஜில்லென்று இருக்கும் குளிர்ந்த நீரை அருந்துவோம். ஆனால் இப்படி தாகம் எடுக்கும் போது குளிர்ந்த நீரை அருந்தக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

அதற்கு முன் தாகம் எப்போது ஏற்படுகிறது, ஏன் ஏற்படுகிறது என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியானது வெப்பம், குளிர்ச்சி என வித்தியாசமான பருவ நிலைகளை எதிர்கொள்கிறது. அதிலும் கோடைக் காலங்களில் அதிகமாக வெப்பமடைவதால், எமக்கு அதிகமாக தாகம் எடுக்கின்றது. அதன் காரணமாக அதிகமான தண்ணீரைப் பருகுகிறோம்.

அதே சமயத்தில் எம்முடைய உடலானது புறச்சூழலில் நிலவும் பருவநிலைச் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாது உடல் வெப்பநிலையை உடல் உள்உறுப்புகள் சீராகவே வைத்திருக்கின்றன.இதன் காரணமாகவே கோடைக்காலத்தில் அதிகப்படியான வெப்பம் தோலின் மீது விழும் போது, அதன் மூலமாக அதிகப்படியான நீர் வியர்வையாக வெளியேற்றப்படுகின்றன.

உடலில் இருக்கும் நீரின் அளவு ஒரே மாதிரியாய் இருந்தால் எமக்கு தண்ணீரின் நினைவே இருக்காது. நீரின் அளவு 2.5 சதவீதம் குறைந்தால், உடனே உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருப்பதற்காக மூளை நரம்பு செல்களுக்குக் கொடுக்கும் உணர்வு (செய்தி) தான் ‘தாகம்’.

அதே போல், தாகம் எடுக்கின்ற போது குளிர்ந்த நீர், குளிர்ந்த பானங்களைப் பருகக்கூடாது. ஏனெனில் குளிர்ந்த பானங்களில் இரசாயனப்பொருட்கள் கலந்து இருப்பதால் உடலுக்கு நல்லதல்ல. அறை வெப்பநிலையில் நீரின் மூலக்கூறுகள் இயல்பான நிலையில் இருக்கும். ஆனால் இயல்பான நிலையில் இருக்கும் நீரை குளிர்விக்கின்றபோது நீரின் மூலக்கூறுகள் மிக நெருக்கம் அடைந்து தன்னுடைய ஆற்றலை வெளியேற்றிவிடுகின்றன.

இப்படி ஆற்றல் குறைந்த குளிர்ச்சியான நீரை பருகுகின்றபோது உடல் உள்ளுறுப்புகள் தன் அதிகப்படியான அளவில் ஆற்றலை செலவழித்து அந்தக் குளிர்ந்த நீரை இயல்பான நிலைக்குக் கொண்டுவருகின்றன. இப்படி உள்ளுறுப்புகள் இயங்கும் போது தாகம் எடுப்பது குறைந்துவிடும். இதனால் மனிதனின் உடல் வெப்பநிலை சீராக இல்லாமல் போகக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டு சளி, காய்ச்சல் போன்ற தொல்லைகள் உருவாகின்றன.

எனவே தாகம் எடுப்பது மனித உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. ஆகவே, எப்போதெல்லாம் தாகம் எடுக்கிறதோ தண்ணீரைப் பருகுங்கள். ஆனால் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் குளிர்ந்த நீரையும், குளிர் பானங்களையும் உறுதியாக தவிர்த்திடுங்கள்.

உலகில் 8500 அடியிற்க்கு மேலிருக்கும் மலசல கூடம்!!

உலகிலே வெப்பநிலை குறைந்த பகுதிகளில் ஒன்றான சைபீரியா மலை படுக்கைகளின் கடல் மட்டத்திலிருந்து 8500 அடி உயரத்தில்ஒரு மலசல கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்தப்பகுதியில் பகுதியில் வானிலை ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. அதில் 4 வானிலை ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் தேவைக்காக அங்கு மலசலக்குடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த மலசலகூடத்திற்கான காகிதங்கள் ஹெலிகொப்டர் மூலம் கொண்டு வரப்படுகிறது. மேலும் இது உலகின் மிகவும் பயங்கரமான மலசலக்கூடம் என அழைக்கப்படுகிறது.

போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத இவ் ஆய்வுமையத்திற்குள் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான உணவு, நீர் மற்றும் மலசலகூடத்திற்கு தேவையான காகிதங்கள் ஹெலிகொப்டர் மூலம் கொண்டு செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

உடையப்போகும் இராட்சச பனிப்பாறை : உலகுக்கு அச்சுறுத்தல்?

அன்டார்ட்டிக்காவில் உள்ள உலகின் மிகப் பெரிய பத்து பனிப்பாறைகளுள் ஒன்று விரைவில் இரண்டாகப் பிளக்கப்போவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

‘லார்சன் சி’ என்று குறிப்பிடப்படும் இந்தப் பனிப்பாறையின் கனவளவு சுமார் 350 மீற்றர் ஆகும். இதில் கடந்த ஓரிரு தசாப்தங்களாகவே வெடிப்பு தோன்றியிருந்தது என்றபோதிலும் இந்த வெடிப்பு, கடந்த டிசம்பர் மாதம் சடுதியாக நீளத் தொடங்கியது.

தற்போது விரிசல் விழுந்து தொங்கும் நிலையில் உள்ள 5 ஆயிரம் சதுர கிலோமீற்றர்கள் பரப்பளவு கொண்ட இந்தப் பனிப்பாறைத் துண்டு இன்னும் 20 கிலோ மீற்றர்கள் நீண்டால் இரண்டாகப் பிளந்துவிடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மொத்த பனிப்பாறையின் கால் பகுதியளவே பிளந்து செல்லவிருக்கிறது என்றாலும், இதனால் எதிர்காலத்தில் எஞ்சியுள்ள பகுதியும் பகுதி பகுதியாகப் பிரிந்து விடலாம் என அவர்கள் அஞ்சுகின்றனர்.

இந்தப் பிளவு இயற்கையானதே தவிர, உலக வெப்பமயமாதலால் உண்டானதல்ல என்று கூறும் விஞ்ஞானிகள், லார்சன் சி பனிப்பாறை முழுவதுமாகச் சிதைந்து கடலில் கரையும் பட்சத்தில், உலக கடற்பரப்பின் உயரம் சுமார் 10 சென்றிமீற்றர் அளவு உயரலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

கின்னஸ் சாதனை நத்தார் மரம் அகற்றப்பட்டது!!

துறைமுக அதிகார சபையின் தலைமையில் காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்ட நத்தார் மரம் இரண்டு வாரங்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டதன் பின்னர் நேற்று(06.01) கழற்றி அகற்றப்பட்டது.

கப்பல் மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் சமூகப் பணியின் ஒரு அங்கமாக நிர்மாணிக்கப்பட்ட உலகின் உயரமானதாக கருதப்படும் இந்த நத்தார் மரமானது, கிரேன் உதவியுடன் கழற்றியகற்றப்பட்டது.

இந்த நத்தார் மரத்தின் உருவாக்கத்துக்காக சுமார் 1 கோடியே இருபது இலட்சம் ரூபா வரை செலவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளியான உயர்தரப் பரீட்சையில் அதி சித்தி பெற்றவர்கள் விபரம்!!

2016ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் வர்த்தக பிரிவில் நாடளாவிய ரீதியாக முதலாம் இடத்தை பெற்றிருப்பவர் கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தின் அகலங்க ராஜபக்ஸ என்ற மாணவராவார்.

புனித ஜோசப் வித்தியாலயத்தின் விந்துல பெரேரா அந்த பிரிவில் இரண்டாம் இடத்தையும், ஹிங்குராக்கொட ஆனந்த மகளீர் கல்லூரியின் நிபுனி ரூபசிங்க என்ற மாணவி மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அதேவேளை உயர் தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் கிண்ணியா மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ரொஸானி அக்தார் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். மூன்றாம் இடத்தை கல்முனை பாஃத்திமா வித்தியாலயத்தைச் சேர்ந்த கெலரின் டீலுஜன் என்ற மாணவர் பெற்றுள்ளார்.

நாடளாவிய ரீதியில் கலைப்பிரிவு முதலாம் இடத்தை கண்டி மகளீர் உயர் பாடசாலையின் இந்தீவரி கவரம்மன பெற்றுள்ளார். அப் பிரிவில் இரண்டாம் இடத்தை மானிப்பாய் இந்து கல்லூரியின் பீ.குருபரேஸன் பெற்றுக்கொண்டுள்ளார். மூன்றாம் இடத்தை கிரிபத்கொடை விஹாரமகாதேவி பாடசாலையின் ஏ.பாரமி என்ற மாணவி பெற்றுள்ளார்.

இதுதவிர உயர்தர பொறியியல் பிரிவில் சுன்னாகம் ஸ்கந்தவரோதய வித்தியாலயத்தின் மாணவன் ஜே.கனகசுந்தரம் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தை மாத்தளை விஞ்ஞான கல்லூரியைச் சேர்ந்த நிஸல் கொப்பேகடுவை அடைந்துள்ளார். அந்தபிரிவில் மூன்றாம் இடத்தை கம்பஹா ரத்னாவலி மகளீர் கல்லூரியைச் சேர்ந்த ஏ.ரனதுங்க என்பவர் பெற்றுள்ளார்.

வவுனியாவில் விபத்தில் பலியான மாணவி உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலாமிடம்!!

2016ம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்நிலையில், வவுனியா மாவட்டத்தில் கணிதப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்றவர் அண்மையில் மாகோ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த சிவதுர்க்கா சத்தியநாதன் என தெரிவிக்கப்படுகிறது.

கல்வியில் சிறந்து விளங்கிய வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவியான சிவதுர்க்கா, மிகச்சிறந்த பெறுபேற்றை பெறக்கூடிய மாணவி என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது.

அனைவரதும் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றி, கணிதப் பிரிவில் 3A சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினை சிவதுர்க்கா பெற்றுள்ள போதிலும், அவர் இவ்வுலகைவிட்டு பிரிந்துச் சென்றுள்ளமை அனைவரையும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

வவுனியா பிரபல பெண் வைத்திய அதிகாரியான கௌரி மனோகரி நந்தகுமார் மற்றும் அவரது பெறாமகளான சிவதுர்க்கா சத்தியநாதன் ஆகியோர் கடந்த ஒக்டோபர் மாதம் கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது மாகோ பிரதேசத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலய கட்டிடம் சுகாதார அமைச்சரினால் திறந்து வைப்பு!!

 
வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் பிரதான மண்டபம் இன்று (06.01.2017) மதியம் 2 மணியளவில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் திருமதி. கி.நந்தபாலன் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் கே.ராதாகிருஸ்ணன், வவுனியா கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.பி.நடராசா, மற்றும் அசிரியர் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பாடசாலை வரவேற்பு நடன இறுவட்டு வடக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கட்டுநாயக்க விமானநிலையத்தின் திருத்தப்பணிகளை பார்க்க வேண்டுமா : இதோ புகைப்படங்கள்!!

 
கடுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை திருத்தப்பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா மற்றும் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தலைமையில் குறித்த திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த திருத்தப்பணிகளை காலை 08.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை சீன நிறுவனம் ஒன்று மேற்கொள்கின்றது. இதற்காக 720 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த திருத்தப்பணிகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை காணலாம்..

மனைவியை கொன்று, உடலை குளிர்பதனப் பெட்டியில் வைத்தவருக்கு ஆயுள் சிறை!!

தன்னுடைய பிரெஞ்சு மனைவியை கொன்று, துண்டித்த அவருடைய உடலை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்த இந்தியருக்கு ஆயுள் காலம் முழுவதற்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வயதான மகன், இந்த சம்பவம் நடைபெற்றபோது, பொடேவின் (வலது) பெற்றோரிடம் இருந்துள்ளான் 2013 ஆம் ஆண்டு நடந்த இந்த கொலை குற்றத்திற்கான தண்டனையை மும்பையின் புறநகரிலுள்ள தானே நீதிமன்றம் புதன்கிழமை வழங்கியது.

கிரிஷ் பொடே என்பவர் தன்னுடைய மனைவி மதுவந்தி பாதக்கை கொன்று, உடலை துண்டித்து வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழங்கறிஞர்கள் வாதிட்டனர். இந்த குற்றத்தை உறவினர்களிடம் தொலைபேசி மூலம் பொடே தெரிவிக்க, அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததால், இந்த சம்பவம் வெளியே தெரிய வந்தது.

ஆயுள் தண்டனை என்பது இந்தியாவில் 14 ஆண்டு சிறை தண்டனையோடு முடிந்து விடுகிறது. ஆனால், இந்த குற்றத்தின் கொடூரத்தை கவனத்தில் கொண்டு, தானே மாவட்ட நீதிமன்ற நீதிபதி மிர்துலா பாத்தியா, பொடே உயிர் இருக்கும் வரை, வாழ்க்கை முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டுமென தீர்ப்பளித்திருக்கிறார். தன்னுடைய தாய் பிரெஞ்சு குடிமகள் என்பதால் பாதக் பிரெஞ்ச் பாஸ்போட் வைத்திருந்தார்.

2006 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, மும்பையின் பயேன்டர் பகுதியில் வாழ்ந்தது. அவர்களுக்கு இருந்த இரண்டு வயதான மகன், இந்த சம்பவம் நடைபெற்றபோது, பொடேவின் பெற்றோரிடம் இருந்துள்ளான். கத்தியால் பொடே தன்னுடைய மனைவியை தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

பணத்திற்காகவும், பதாக் பிரான்ஸூக்கு திரும்ப வேண்டும் என்பதற்கும் இந்த ஜோடி அடிக்கடி மோதிக் கொண்டதாக காவல்துறை கூறியுள்ளது.