நோயாளிகளை விமானம் மூலம் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
திடீர் விபத்துக்களில் சிக்குவோருக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஹெலிகொப்படர்களை பயன்படுத்தலாம் எனவும் கூறியுள்ளார்.
கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் காணப்படும் இந்த முறைமை இலங்கையிலும் அமுல்படுத்துவது குறித்து பிரதமரிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதிக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை போன்ற வாகன நெரிசல் அதிகம் காணப்படும் நாட்டில் இந்த திட்டம் பொருத்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் சிக்குவோருக்கு முதல் ஒரு மணித்தியாலத்தில் அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் மிகவும் முக்கியமானவை எனவும் உரிய நேரத்தில் வைத்தியசாலைகளில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதன் மூலம் உயிர்களை காப்பாற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச வைத்தியசாலைகளில் 28 அவசர சிகிச்சை பிரிவுகள் புதிதாக உருவாக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வீதிப் போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகை அதிகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளின் ஊடாக திடீர் விபத்துக்களின் எண்ணிக்கையை 30 வீதத்தினால் குறைக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் மதுபோதையில் பேரூந்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி ஒருவர்நேற்று இரவு 7 மணியவில் வவுனியா போக்குவரத்து பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
வவுனியாவில் இருந்து கலாபோபஸ்வேவ பகுதி நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து ஒன்றுஹொரவப்பொத்தானை வீதியில் பயணித்த போது உமாமகேஸ்வரன் சந்தியில் பயணித்த இளைஞர்ஒருவருடன் மோதியது. இருப்பினும் குறித்த இளைஞன் சுதாகரித்து கொண்டதால் காயங்கள் இன்றி தப்பித்துக்கொண்டார்.
இதனையடுத்து அப்பகுதியில் கூடியஇளைஞர்கள் குறித்த பேரூந்தினை மறித்து மது போதையில் அப் பேரூந்தின் சாரதிஇருப்பதாக தெரிவித்து சாரதியை கைது செய்யுமாறு வலியுறுத்தினர்.
சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிசார் இது தொடர்பானவிசாரணைகளை மேற்கொண்டதுடன் பேரூந்தினை வவுனியா பொலிஸ்சுக்கு கொண்டுவர முயற்சித்த போது இளைஞர்கள் அதற்கு இடமளிக்காது பெரும்பான்மையினத்தைச்சேர்ந்த குறித்த சாரதியை கைது செய்யுமாறு வலியுறுத்தினர்.
இதனால்பொலிசாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் அப்பகுதியில் முரண்பாடு ஏற்பட்டது.
சாரதியை கைது செய்வதாகவும், பேரூந்தை வவுனியா பொலிஸ்சுக்கு கொண்டு செல்வதாகபொலிசார் உறுதியளித்ததையடுத்து இளைஞர்கள் அதற்கு அனுமதியளித்தனர்.
அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிசார் அங்கு குழப்பம் ஏற்படாத வகையில் இவ் இளைஞர்களை வீதியில் இருந்துவிரட்டியடித்தனர்.
இதனையடுத்து வவுனியா பொலிஸ்சில் பேரூந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
இலங்கையின் தென்கிழக்கு திசையில் திருகோணமலையிலிருந்து சுமார் 1100 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள ‘வர்தா’ புயல் மேலும் வலுவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை அவதான நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கையின் வட மேல் மாகாண பகுதியை நோக்கி நகர்வதாகவும் புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, பொத்துவில் வரை கடல் பகுதியில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தற்போது காற்றின் வேகம் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசுவதுடன் மேலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
இதேவேளை, வங்க கடலில் உருவாகியுள்ள வார்தா புயல் குறித்து தகவல் வெளியிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம்,
தென்கிழக்கு வங்க கடலில் பகுதியில் நிலை கொண்டிருந்த வர்தா புயல் இன்று காலை விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 990 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளதாகவும் இது கடந்த 2 நாட்களாக மணிக்கு 2 கி.மீ. தூரத்தில் மட்டுமே மெதுவாக நகர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த புயல் வடமேற்கு திசையில் நாளை 10ஆம் திகதி மற்றும் 11ஆம் திகதிகளில் நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயல் 12ஆம் திகதி மாலை கர்நாடகத்தின் நெல்லூருக்கும் காக்கி நாடாவிற்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரையை கடக்கும் முன் இந்த புயல் சற்று வலுவிழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என அந்த மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் நடைபெறும் குதிரை ஓட்டப் போட்டியின் போது நத்தார் தாத்தா சிறுவர்களுக்கு இனிப்புப் பண்டங்களுடன் பரிசுகளை வழங்கவுள்ளமை விடேச அம்சமாகும்.
முதல் தடவையாக பெண் குதிரையோட்டி ஒருவர் பங்குபற்றவுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த என்.ரூபா என்ற பெண் குதிரையோட்டி ஆண்களுக்கு இணையாக குதிரையோட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ளார்.
ஆண்களுடன் பெண்களும் ஈடுகொடுத்து குதிரையோட்டத்தில் பங்குபற்ற முடியும் என்பதை இதன் மூலம் றோயல் டேர்வ் க்ளப் நிரூபிக்கவுள்ளதென பதில் நிறைவேற்கு அதிகாரியும் குதிரையோட்டி (ஜொக்கி) பயிற்றுநருமான சின்கிளயார் மார்ஷல் தெரிவித்தார்.
டிசம்பர் மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ள குதிரையோட்டப் போட்டிகளின்போது பெறப்படும் வசூல் அனைத்தையும் புற்றுநோய் பராமரிப்பு அறக்கட்டளைக்கு எட்வர்ட்ஸ் தம்பதியினர் அன்பளிப்பு செய்வர் என்பதை றோயல் டேர்வ் கிளப் பிரதிநிதி உறுதி செய்தார்.
இதேவேளை இந்த அன்பளிப்பை புற்றுநோய் பராமரிப்பு அறக்கட்டளை பொறுப்பாளர் டாக்டர் சமதி பெற்றுக்கொள்வார். இதனைவிட தீபிகா ஜயக்கொடி தனது பரிசுப்பணத்தில் 50 வீதத்தை நுவரெலியா போனிக் குதிரை சங்கத்துக்கு நன்கொடையாக வழங்க இணங்கியுள்ளார்.
கவர்ச்சிகரமான தொப்பி, மிகச் சிறப்பாக ஆடையணிந்த பெண், சிறந்த தம்பதிகள், மிகச் சிறப்பாக ஆடையணிந்த சீமான் ஆகியோருக்கு 10 இலட்சம் ரூபா பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
குதிரையோட்டப் போட்டிகளை கொண்டாட்டம் மிகுந்த விழாவாக நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி அடைந்துள்ளதாக றோயல் டேர்வ் கிளப் தலைவர் சுரஞ்சித் பிரேமதாச தெரிவித்தார். அடுத்த வருட குதிரையோட்டப் போட்டிகள் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகி மார்ச், ஏப்ரல் மாதங்கள் வரை தொடரும்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான, பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன.
சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கு வெவ்வேறாக வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன.
இவ் வகையில் வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தின் வெட்டுப்புள்ளி 162 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் அருகே காதலி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், சணடைந்த காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகள் சோனியா (23). பிளஸ் 2 முடித்துவிட்டு, தாம்பரத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது வீட்டு அருகே வசித்து வருபவர் சிகாமணி என்பவரின் மகன் பிரசாந்த் (24). இவர், டிப்ளமோ முடித்து விட்டு ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் கார் கம்பெனியில் வேலை செய்தார்.
இருவரது வீடும் அருகருகே உள்ளதால், சிறு வயதில் இருந்தே நண்பர்களாக பழகி வந்துள்ளனர். தினமும் காலை பிரசாந்த் வேலைக்கு செல்லும் போது சோனியாவை தனது பைக்கில் அழைத்து சென்று வந்துள்ளார்.
இது நாளடையில் காதலாக மாறி உள்ளது. இருவரும் பல இடங்களுக்கு சென்றுள்ளனர். இதை அறிந்த பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் காதலி சோனியாவின் கழுத்தை கத்தியால் பிரசாந்த் அறுத்தார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் பீர்க்கன்காரணை பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.
பொலிசார் வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சோனியாவை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த வைத்தியர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையில், அங்கிருந்து தப்பி ஓடிய பிரசாந்த் பீர்க்கன்காரணை காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. விசாரணையில், பிரசாந்த் அளித்த வாக்குமூலம் பற்றி பொலிசார் கூறியதாவது:
சோனியாவும், பிரசாந்தும் ஒரே தெருவில் வசித்து வந்தனர். பிளஸ் 2 படிக்கும் போதில் இருந்தே சோனியாவை பிரசாந்த் காதலித்து வந்துள்ளார். கடந்த 2 மாதமாக சோனியா பிரசாந்திடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். பிரசாந்த் போன் செய்தால் சோனியா எடுப்பதில்லை. இரவு நேரத்தில் எந்நேரமும் போன் வெயிட்டிங்கிலேயே இருந்துள்ளது.
இதனால் பிரசாந்துக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் இதுபற்றி சோனியாவிடம் பிரசாந்த் கேட்டுள்ளார். அதற்கு சோனியா இப்போதே என் மீது சந்தேகப்படுகிறாயே திருமணம் செய்தால் என்னுடன் எப்படி குடும்பம் நடத்துவாய் என்று கேட்டு கடும் வாக்குவாதம் செய்துள்ளார். இதன்பிறகு பிரசாந்த் போன் செய்தால் முற்றிலுமாக சோனியா தவிர்த்து வந்துள்ளார். இதனால் சோனியா வேலை பார்த்த கடைக்கு பிரசாந்த் சென்றுள்ளார்.
அப்போது, கடை அருகே ஒரு இளைஞனுடன் சோனியா பேசிக் கொண்டிருந்தார். அதை பார்த்ததும் பிரசாந்த் விரக்தி அடைந்தார். இதுகுறித்து சோனியாவிடம் அவர் கேட்டுள்ளார். ‘‘உன்னை எனக்கு பிடிக்கவில்லை, இதேபோல் என்னை தொந்தரவு செய்தால் பொலிசில் புகார் கொடுப்பேன்’’ என சோனியா தெரிவித்துள்ளார்.
இதனால் விரக்தியுடன் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி உள்ளார் பிரசாந்த். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6.45 மணிக்கு பிரசாந்த் பைக்குடன் சோனியாவை அழைத்து செல்ல பெருங்களத்தூர் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது சோனியா, வேறு ஒரு இளைஞனுடன் பஸ்சில் வந்து இறங்கி உள்ளார்.
உடனே பிரசாந்த் வழக்கம் போல் சோனியாவிடம் சென்று, ‘‘உன்னிடம் பேசணும் பைக்கில் செல்லலாம் வா’’ என்று அழைத்துள்ளார். இதற்கு சோனியா வர மறுத்து, உன்னிடம் பேச பிடிக்கவில்லை, நீ எனக்கு வேண்டாம். இனிமேல் என்னிடம் பேசாதே என கூறியுள்ளார். எனவே, ஆத்திரமடைந்த பிரசாந்த் ‘‘இவ்வளவு நாள் என்னை காதலித்துவிட்டு இப்போ ஏன் பிடிக்கவில்லை’’ என கேட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ‘‘எனக்கு கிடைக்காத நீ, யாருக்கும் கிடைக்க கூடாது’’ என கூறி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சோனியாவின் கழுத்தை அறுத்து பிரசாந்த் கொலை செய்துள்ளார். இவ்வாறு பிரசாந்த் வாக்குமூலத்தில் கூறியதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, பிரசாந்தை கைது செய்த பொலிசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பிச்சம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகள் வினிதா(17). கடந்த 2014ல் பிளஸ் 2 தேர்வு எழுதி முடித்ததும் இவர், கல்லூரியில் சேர விண்ணப்பித்து இருந்தார்.
அதுவரை கோடை விடுமுறையில் வீரராக்கியம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்தார். கடந்த 2014ம் ஆண்டு, ஜூன் 23ம் திகதி வேலைக்கு சென்று விட்டு இரவு 7மணியளவில் வினிதா சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். ஆனால் அவர் வீடு வந்து சேரவில்லை.
வெற்றிலை கொடிக்கால் வழியாக வந்தபோது அவரை மர்ம நபர் ஒருவர் தூக்கிச்சென்று பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டார். அவர் அணிந்திருந்த தோட்டையும் திருடிச்சென்று விட்டார். இது குறித்து மாயனூர் பொலிசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கு சம்பந்தமாக குளித்தலை அருகேயுள்ள நங்கவரம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (32)என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ராமச்சந்திரன்தான் வினிதாவை வழிமறித்து, தோட்டை பறித்து, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரிய வந்தது.
ராமச்சந்திரன் மீது, கரூர், திண்டுக்கல், திருச்சி, ஈரோடு, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நீதிபதி குணசேகரன் தீர்ப்பளித்தார். இதில் கடத்தல் குற்றத்திற்காக ராமச்சந்திரனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம், நகையை கொள்ளையடித்ததற்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம், பாலியல் பலாத்கார குற்றத்திற்காக, வாழ்நாளில் மீதமுள்ள காலம் வரை ஆயுட்கால சிறைத் தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம், கொலை குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, இவையனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
பாலியல் பலாத்கார குற்றத்திற்காக வாழ்நாள் முழுவதுமான சிறைத் தண்டனை விதித்து அளிக்கப்பட்ட தீர்ப்பானது தமிழ்நாட்டில் முதன் முறையாக ராமச்சந்திரனுக்கு தான் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் பெற்றோர் தின விழா .! (படங்கள் இணைப்பு)
வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் பெற்றோர் தின விழா முன்பள்ளியின் ஆசிரியர் திருமதி . மீரா குணசீலன் தலைமையில் 08/12/2016 (வியாழக்கிழமை) திருநாவற்குளம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் திரு.கந்தையா சிவநேசன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம் மற்றும் முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர் திருமதி. அருள்வேல்நாயகி , தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர் திரு முத்தையா கண்ணதாசன், வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திரு.சி.ரவீந்திரன், குருமன்காடு பொலிஸ் அதிகாரி திரு.இலங்கேஸ்வரன் ,முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், திருநாவற்குளம் இளைஞர் கழக உறுப்பினர்கள் ,கிராம முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடன் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் , விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது.
வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடை பெறும் ஜயப்பன் குருபூஜை மற்றும் குருசாமிகள் கௌரவிப்பு நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை (09.12.2016) காலை 11.00 மணி அளவில் பாபு குருசாமி தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.
அகில இலங்கை பாரத ஜயப்ப சேவா சங்க ஒன்றியத்தலைவர் குருநாதர் (ரவிகுருசாமி) அவர்களுக்கும் வவுனியா மாவட்ட குருசாமி மற்றும் ஏனைய மாவட்ட குருசாமிகளும் கௌரவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து அன்னதானமும் நடை பெற்றது.
வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய திருமண மண்டபத்தில் எதிர்வரும் 11.12.2016 ஞாயிற்றுக்கிழமை கிழமை காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை வரை இலங்கையில் இருந்து இதுவரைகாலமும் 5100 க்கும் மேற்பட்ட சாமிகளை மலைக்கு அழைத்து சென்ற இந்துமத குருபீடாதிபதி சபரிமலை குருமுதல்வர் ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாச சாம்பசிவ சிவாசாரியார் அவர்களின் தலைமையிலான மலையாள பூஜை இடம்பெறுகிறது.
அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர்.
இந்த வருடம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 73 வயதான பெண்மணி ஒருவர் தோற்றியுள்ளார்.
மாத்தறை நாதுகல பிரதேசத்தை சேர்ந்த என்.என்.எஸ். கல்யாணி என்ற 73 வயதான பெண்மணி சாதார தரப்பரீட்சையில் தகவல் தொழிற்நுட்ப பாடத்திற்கான பரீட்சையில் தோற்றினார்.
மாத்தறை இல்மா கல்லூரியின் பரீட்சை மண்டபத்தில் அவர் பரீட்சைக்கு தோற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூட்டு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள கல்யாணி, காலத்திற்கு ஏற்ப புதிய தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொள்வது தனது நோக்கம் எனக் கூறியுள்ளார்.
அடுத்த வருட சாதாரண தரப் பரீட்சையில் இலத்திரனியல் மற்றும் இந்தி மொழி ஆகிய பாடங்களுக்கான பரீட்சையில் தோற்ற உள்ளதாக கல்யாணி குறிப்பிட்டுள்ளார். தொழிலுக்கான தான் பரீட்சை எழுதவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
திருமணம் முடிந்த கையோடு சென்னையில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்து தம்பதியினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மறைந்த ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தினந்தோறும் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள், ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த ஓட்டுநர் கார்த்திக் என்பவருக்கு இன்று திருமணம் நடந்துள்ளது.
திருமணம் முடிந்த கையோடு மாலையுடன் தனது மனைவியை, மெரினாவுக்கு அழைத்துச் சென்ற கார்த்தி, அங்குள்ள ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.
“நான் ஜெயலலிதா மீது தீராத பற்று கொண்டவன். அவரது இறப்பு என்னை மிகவும் பாதித்துவிட்டது. திருமணம் முடிந்த கையோடு அவரது சமாதிக்கு வந்து மனைவியுடன் அஞ்சலி செலுத்தினேன்” என்று குறித்த நபர் கூறியுள்ளார்.
இலங்கையில் இணையத்தள பாவணையாளர்கள் 30 சதவீதமாகும். இதனை அதிகரிக்க வேண்டியுள்ளது. மேலும் உலகில் இணையத்தள வேக தரவரிசையில் சீனா, இந்தியாவை விடவும் முன்னிலை வகித்து 62 ஆவது இடத்தில் உள்ளோம் என தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வரவு–செலவு திட்டத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் அமைச்சின் செலவின தலைப்பிலான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை எழுந்திருப்பதை அடுத்து நடிகை கெளதமி பிரதமர் நரேந்திர மோடிக்கு இணைய தளம் வழியாக கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
நான் இந்திய நாட்டின் சாதாரண குடிமகள் என்ற முறையில் நான் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். நான் ஒரு குடும்ப பெண், ஒரு தாய், ஒரு பணிபுரியும் பெண். எனது குடும்பம், எனது வாழ்க்கை பற்றி கவலைப்படும் நான், இதேபோல் மற்றவர்களின் வாழ்க்கையும் நன்றாக இருக்க வேண்டும் என்று கருதுபவள்.
முதலமைச்சர் ஜெயலலிதா திடீரென மறைந்த அதிர்ச்சியில் கோடானு கோடி மக்கள் இருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவராக இருக்கிறேன். ஜெயலலிதா இந்திய அரசியலில் மிக உயர்ந்த நிலையை அடைந்தவர், மிகுந்த ஆளுமை திறன் கொண்டவர். அனைத்து துறைகளிலும் உள்ள பெண்களுக்கு உத்வேகமாக அமைந்தவர். தமிழ்நாடு அவரது தலைமையின் கீழ் பல்வேறு முன்னேற்றங்களையும், வளர்ச்சிகளையும் பெற்றது. அவர் ஒரு மறக்க முடியாத வலிமையான சக்தி கொண்டவர்.
எல்லா பிரச்சினைகளையும் விடா முயற்சியுடன் உறுதியாக இருந்து தீர்த்து வைத்தவர். அவர் எல்லா மக்களுக்கும் ஊக்க சக்தியாக திகழ்ந்தவர். அவருடைய திடீர் மறைவு எல்லோருக்கும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் அவர் சில மாதங்களாக வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெற்றது தொடர்பாக பல மர்மங்கள், பதில் அளிக்க முடியாத கேள்விகள் இருக்கின்றன.
அவர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டது, சிகிச்சை அளித்தது, பின்னர் அவர் நலம் பெற்று விட்டதாக அறிவித்தது. திடீரென இறந்து விட்டதாக அறிவித்தது இவை எல்லாவற்றிலுமே சரியான தகவல்கள் வெளியே வரவில்லை. எல்லாமே வெற்றிடமாக இருக்கிறது. அவர் சிகிச்சை பெற்ற போது, அவரை பார்க்க சென்ற தலைவர்கள், பிரபலங்கள் ஒருவரைகூட அவரை பார்க்க அனுமதிக்கவில்லை. அவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை கூட நேரில் சென்று தெரிவிக்க முடியவில்லை. ஏன் இந்த ரகசியம்? எதற்காக அவரை இப்படி தனிமைப்படுத்தினார்கள்? அவர் மிகப்பெரிய மக்கள் தலைவர். தமிழ்நாடு அரசின் தலைவர்.
அப்படி இருந்தும் ஏன் இவ்வளவு ரகசியம் காக்கப்பட்டது. என்ன காரணத்துக்காக இப்படி செய்யப்பட்டது? முதலமைச்சரை பார்க்க கூடாது என இவ்வளவு கட்டுப்பாடுகளை விதிக்க யாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது? ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரை கவனித்து கொள்ளும் உரிமை, அவரது உடல்நலம் பற்றிய விவரங்கள் போன்றவற்றுக்கு யார் பொறுப்பு என்று முடிவு எடுத்தது யார்? இது சம்பந்தமாக மக்களுக்கு யார் பதில் சொல்வது? இதுபோன்ற கேள்விகள் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவர்களுடைய கேள்விகளை உங்களுடைய கவனத்துக்கு நான் கொண்டு வருகிறேன்.
இந்த விவகாரம் இன்றைக்கு விவாத பொருளாக மாறி இருக்கிறது. நாட்டில் ஜனநாயக முறையில் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவரின் உடல் நிலை குறித்து அறிந்து கொள்ள அனைத்து மக்களுக்கும் உரிமை இருக்கிறது. அதுவும் இவர் மாபெரும் மக்கள் தலைவர். அவருடைய உடல்நிலை தொடர்பாக சந்தேக கேள்விகள் எழுந்திருப்பது ஒரு அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவின் அனைத்து குடிமகன்களுக்கும் தங்களது உரிமையை கேட்டு போராட உரிமை உள்ளது. அதேபோல் இந்த ரகசியங்களையும் அறிய அவனுக்கு உரிமை இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இது சம்பந்தமான விவரங்கள் வெளிவர தேவையானவற்றை செய்வீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் மிகச்சிறந்த தலைவர் என்பதை பல வழிகளில் ஏற்கனவே நிரூபித்து இருக்கிறீர்கள். நாட்டு மக்களின் எண்ணங்களை கவனத்தில் கொள்வீர்கள் என்பதை நான் நம்புகிறேன்.’ என்று அந்த கடிதத்தில் நடிகை கௌதமி குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா புதிய நகரசபை மண்டபத்தில் இன்று (09.12.2016) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
“ஏனையோரின் உரிமைகளுக்காக இன்றே எழுவோம், குரல் கொடுப்போரின் ஒர் அனுபவப்பகிர்வு” எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இன் நிகழ்வில் எம்.ஆர்.பிரியதர்சன (பிராந்திய இணைப்பாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, வவுனியா), பீ.என்.சிங்கம் ( மாற்றம் பவுன்டேஷன், வவுனியா), முகமட் மஜீத் ஜென்சிலா (சங்கமி பெண்கள் ஒன்றியம், முல்லைத்தீவு), கே.எம்.குணதிலக (தவிசாளர் இணக்கசபை, வவுனியா தெற்கு), வன்னிமாவட்ட இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இன் நிகழ்வில் விருந்தினர் வரவேற்பு, மங்கள விளக்கேற்றல், கலை நிகழ்ச்சிகள், மனித உரிமைகள் தொடர்பான ஆலோசனைகள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
வவுனியா பிரதேச செயலகத்தில் பொதுமக்கள் முறைப்பாட்டுப்பெட்டி பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய பிரதேச செயலகத்தின் பிரதான வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் உட்பட உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள், வவுனியா பிரதேசத்தின் குறைகள் தொடர்பாக பொதுமக்கள் முறையிடுவதற்கு வசதியாகவே முறைப்பாட்டுப்பெட்டி பிரதான வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.