மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்னும் சிறிது நேரத்தில் சென்னை மெரீனா எம்ஜிஆர் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
ராஜாஜி ஹோலில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடலுக்கு காலை முதல் லட்சக்கணக்கானோர் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் மோடி மற்றும் பல மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மாலை 4 மணியுடன் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது நிறுத்தப்பட்டு சவப்பெட்டியில் ஜெயலலிதாவின் உடலை மூடும் நடைமுறைகள் முடிவடைந்தன.
இதைத் தொடர்ந்து பீரங்கி வண்டியில் ஜெயலலிதாவின் பூத உடல் ஏற்றப்பட்டு அண்ணாசாலை, வாலஜா சாலை வழியாக மெரீனா எம்ஜிஆர் நினைவிடத்துக்கு கொண்டு சென்று நல்லடக்கம் செய்யப்படும்.
இறுதி ஊர்வலம் தற்போது தொடங்கியுள்ளது. உடல் செல்லும் வழியின் இரு புறமும் மக்கள் நின்று கொண்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்கள்.
அண்ணா சாலை அண்ணா சிலை மற்றும் வாலாஜா சாலை வழியாக இறுதி ஊர்வலம் சென்று கொண்டுள்ளது. முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அணிவகுத்து நடந்து செல்கின்றனர்.
ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் அண்ணசாலையெங்கும் குவிந்துள்ளனர்.
ஹெலிகொப்டர்கள் மூலமாகவும் இறுதி ஊர்வலம் கண்காணிக்கப்படுகிறது. சுமார் 3,000 துணை ராணுவப் படையினர் இறுதி ஊர்வலப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தரம் ஐந்து பரீட்சை பெறுபேறுகளுக்கான வெட்டுப் புள்ளிகள் இந்த வாரம் வெளியிடப்பட உள்ளது.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தகுதி பெற்றுக் கொண்ட மாணவ, மாணவியரை பிரபல பாடசாலைகளில் சேர்ப்பதற்காக குறைந்தபட்ச புள்ளிகள் வெளியிடப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மாணவ, மாணவியரின் புள்ளிகளை கணனி மயப்படுத்தும் நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப் புள்ளி விபரங்கள் இந்த வாரத்தில் வெளியிடப்பட உள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள காலக்கட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அண்ட்ரொய்ட் போன்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அண்ட்ரொய்ட் போன்களைத் தாக்கி அதிலுள்ள தகவல்களைத் திருடும் கூலிகன் எனும் வைரஸ் உலா வருவதாக அமெரிக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த வைரசால் இதுவரை உலகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அண்ட்ரொய்ட் போன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த மால்வேரால் சராசரியாக தினந்தோறும் 13,000 அண்ட்ரொய்ட் கருவிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
பாதிப்பு யாருக்கு?
அண்ட்ரொய்ட் இயங்குதளத்தின் மூலம் இயங்கும் கருவிகளை மட்டுமே இந்த கூலிகன் மால்வேர் தாக்குகிறது. அதனாலேயே கூலிகன் என பெயர் பெற்றது.
அதிலும் குறிப்பாக ஜிமெயில், கூகுள் பிளஸ், கூகுள் போட்டோஸ், கூகுள் டாக்ஸ், கூகுள் ட்ரைவ் உள்ளிட்ட கூகுள் கணக்குகளின் தகவல்களையும் தாக்குகிறது.
இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் கூகுள் கணக்குகள் முடங்கும் அபாயமும் உண்டு. கூகுளின் அண்ட்ரொய்ட் இயங்குதளங்களான ஜெல்லி பீன், கிட் கட் மற்றும் லொலி பப் ஆகிய இயங்குதளம் மூலமாக இயங்கும் கருவிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றன.
கூலிகனால் பாதிக்கப்பட்ட மொத்த கருவிகளில் 57 சதவீத கருவிகள் ஆசியாவில் உள்ளன, அதேநேரம் 9 சதவீத கருவிகள் ஐரோப்பாவில் உள்ளன.
தாக்குதல் குறித்து எப்படி அறியலாம்?
https://gooligan.checkpoint.com/ என்ற இணையதளத்துக்குச் சென்று உங்களது அண்ட்ரொய்ட் கருவியுடன் தொடர்புடைய கூகுள் இ-மெயில் முகவரியை அளித்து உங்களது கருவி பாதிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம்.
பாதிப்பிலிருந்து மீள்வது எப்படி?
உங்களது அண்ட்ரொய்ட் கருவி கூலிகன் தாக்குதலுக்கு உள்ளானதை அறிந்தால், பிளாசிங் (Flashing) எனப்படும் இயங்குதளத்தை சுத்தம் செய்யும் நடைமுறையை உடனடியாக செய்யுங்கள். அதன்பின்னர் உங்கள் கூகுள் கணக்குகளின் கடவுச் சொல்லை உடனடியாக மாற்றுங்கள். அதுவே சிறந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
Google Play Store-ல் இலவசமாகக் கிடைக்கும் மொபைல் அப்ளிகேஷன்கள் மூலமே கூலிகன் உங்கள் மொபைலைத் தாக்கும் என்று அமெரிக்க நிறுவனமான செக் பாயிண்ட் தெரிவித்துள்ளது. இதனால் பாதுகாப்பில்லாத மொபைல் அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்வதை தயவு செய்து தவிர்க்கும் படி கூறியுள்ளது.
நம்பகத்தன்மையான அண்டிவைரஸ் மென்பொருட்கள் மூலமாக உங்களது அண்ட்ரொய்ட் கருவிகளைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்க்கையை தொடங்கியது ஒரு நடிகையாக என்றாலும், பல உச்சங்களை தொட்டது அரசியல் பயணத்தில் தான்.
உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனில்லாமல் மரணமடைந்தார். இவரது இழப்பு தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
அதுமட்டுமல்லாது இவரது மறைவு இந்திய அரசியல் வரலாற்றிலும் மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கி உள்ளது.
அரசியல் பயணத்தில் இவர் பலவற்றை சாதித்திருந்தாலும், இந்த 5 வெற்றிகள் மூலம் இவர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும் அறியலாம்.
ஜெயலலிதாவின் மிகப்பெரிய அரசியல் வெற்றி என்றால் அது 1989ம் ஆண்டு தான். ஜெயலலிதாவின் அரசியல் வழிகாட்டியான எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் கட்சியானது இரு பிரிவுகளாக உடைந்தது. அப்போது 27 இடங்களை பெற்று வெற்றி பெற்ற ஜெயலலிதா முதல் பெண் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரானார்.
இரண்டாவது மிகப்பெரிய வெற்றியானது 1991ம் ஆண்டு ராஜீவ்காந்தியின் படுகொலைக்கு பிறகு காங்கிரஸூடனான கூட்டணியில் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் 2வது பெண் முதல்வர், குறைந்த வயது முதல்வர் என்ற பல வரலாறு படைத்தார்.
2001ல் ஜெயலலிதா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இரு முக்கிய வழக்குகளிலும் சிக்க வைக்கப்பட்டார். ஆனால் மக்கள் அவர் மீது கொண்ட நம்பிக்கையால் 234 தொகுதிகளில் 196 இடங்களில் அபார வெற்றி பெற்றார்.
2011ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதாவின் மீதான வழக்குகளால் தனக்கு தான் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருந்தது திமுக. ஆனால் அந்த நம்பிக்கையை தவிடுபொடியாக்கி ஆட்சியை பிடித்தார் ஜெயலலிதா.
இதன் பின்னர் 2016ம் ஆண்டும் இதே நிலைமைதான் ஏற்பட்டது. மக்களின் அனுதாபங்களை பெற்ற ஜெயலலிதா தொடர்ச்சியாக 2வது முறையாக முதல்வராகி சாதனை படைத்தார். இவரின் இந்த வெற்றி எதிர்கட்சியான திமுகவை அதிர்ச்சிக்குள்ளாகியது.
இந்நிலையில் 4 முறை முதல்வராக இருந்த சிறந்த பெண் தலைவர் என்ற சாதனையோடு விடைபெற்றுவிட்டார் ஜெயலலிதா.
திருகோணமலை – மொறவெவ பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட பகுதியில் 38 வயதுடைய ஊமைப் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கு நேற்று விசாணைக்கு வந்துள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3 இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் நீதிமன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் சந்தேகநபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.பிரேமசங்கர் நேற்று(05.12) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் திருகோணமலை அத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த சுஜித் பிரேமரத்ன(30வயது) என்பவரே குற்றவாளி என தெரிவிக்கப்படுகின்றது.
கொத்மலை நீரேந்தில் முழ்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 26 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான யோகேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் அவருடன் நீராடிய மற்றோருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்ற போதிலும் நேற்றைய தினம் சடலம் சுழியோடிகளால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீதி ஒழுங்குகளை மீறும் வாகன சாரதிகளுக்கான அதேஇடத்தில் அபராதம் விதிப்புக்கான புதியபட்டியல் விநியோகிக்கப்படவுள்ளது.
போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர இந்த உறுதியை அளித்துள்ளதாகமாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ்சேவை சம்மேளன தலைவர் சரத் விஜிதகுமாரதெரிவித்துள்ளார்.
நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னரே இந்த அறிவித்தல்விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் அகில இலங்கை பஸ் நிறுவன சம்மேளனம், தென்மாகாண பஸ் உரிமையாளர்சம்மேளனம், முச்சக்கர வண்டி சாரதிகள் சம்மேளனம் என்பவற்றின் பிரதிநிதிகள்பங்கேற்றனர்.
இதன்போது அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட 25,000 ரூபா அபராதத் தொகைக்குஆட்சேபனை வெளியிடப்பட்டது.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலைமை குறித்து சென்னை அப்பலோ மருத்துவமனை நேற்றுப் பிற்பகல் வெளியிட்ட அறிக்கை உண்மையிலேயே அதிர்ச்சி தந்தது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 78 நாட்கள் கடந்து விட்ட போதிலும், இவ்வாறானதொரு அறிக்கையை அப்பலோ மருத்துவமனை இதுவரை வெளியிட்டது கிடையாது.
முதலமைச்சர் உடல் நிலை தேறி வருவதாகவே அவ்வப்போது அப்பலோ அறிக்கையை வெளியிட்டு வந்தது.
சில தினங்களுக்கு முன்னர் அப்பலோ வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதா உடல்நிலை தேறி விட்டதாகவும் எவ்வேளையிலும் அவர் வீடு திரும்பலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
லண்டன் மருத்துவர்கள், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் வழங்கிய சிகிச்சை காரணமாக ஜெயலலிதாவின் உடல்நிலை நன்கு தேறி விட்டதாகவே அப்பலோவிலிருந்து முன்னர் அறிக்கைகள் வந்து கொண்டிருந்தன.
அ.தி.மு.க தொண்டர்களும் ஜெயலலிதா மரணப் பிடியிலிருந்து மீண்டு விட்டதாகவே மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தனர். ஆனால் அப்பலோ வெளியிட்ட நேற்றைய அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது.
ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அப்பலோ நேற்று அறிவித்தது. நேற்று முன்தினம் மாலை திடீர் மாரடைப்பொன்று ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக நேற்று அதிகாலை 3 மணியளவில் சிறிய இருதய சத்திரசிகிச்சையொன்று (ஆஞ்சியோ) அவருக்கு மேற்கொள்ளப்பட்டதாகவும் அப்பலோ அறிக்கை கூறியது.
இச்சத்திரசிகிச்சையின் பின்னர் ஜெயலலிதா மீண்டும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவே வைத்தியசாலை வட்டாரங்கள் மாத்திரமன்றி அ.தி.மு.க. முக்கியஸ்தர்களும் நேற்றுத் தெரிவித்தனர்.
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக கடந்த ஒக்டோபர் 28ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, 78 தினங்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
ஜெயலலிதாவின் நேற்றைய உடல்நலை அறிக்கையானது அவரது அபிமானிகளை பெரும் அதிர்ச்சியிலும கவலையிலும் ஆழ்த்தியிருந்தது. ‘கேமோ’ கருவி மூலம் அவர் சிகிச்சை பெற்று வருவதாக நேற்றைய அறிக்கை கூறியது.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இருதய சத்திரசிகிச்சையின் எதிர்விளைவைப் பொறுத்தே ஜெயலலிதாவுக்கு அடுத்தகட்ட சிகிச்சை மேற்கொள்ளப்படுமென்று அப்பலோ வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.
ஜெயலலிதாவின் உடல்நலையை அறிந்ததும் அ.தி.மு.க. தொண்டர்களும் அபிமானிகளும் நேற்று அப்பலோ மருத்துவமனைக்கு திரண்டு வந்தபடியிருந்தனர். நிலைமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர தீவிர பொலிஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜெயலலிதா தனது சினிமா வரலாற்றிலும் அரசியல் வரலாற்றிலும் பெரும் தடைக் கற்களைத் தாண்டி வந்த ஒரு சாதனையாளர். அவரது கடந்தகாலம் மிகவும் போராட்டம் நிறைந்தது.
advertisement
இவ்வேளையில் ஜெயலலிதாவின் சினிமா மற்றும் அரசியல் அனுபவங்கள் குறித்து இவ்விடத்தில் ஆராய்வது மிகப் பொருத்தமாகும்.
ஜெயலலிதா தனது அரசியல் வாழ்க்கையில் சந்திக்காத சிக்கல்களும், கஷ்டங்களும் இல்லை. ஆனாலும் அவற்றையெல்லாம் கடந்து தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலியில் ஐந்தாவது முறையாக அமர்ந்தார்.
அவர் மீது ஏராளமான விமர்சனங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, அது அவரது கையில் இல்லை. அவரது வாழ்க்கையை இதுவரை மூன்று கால கட்டங்களாகப் பிரித்தால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவர் என மூன்று பேர் அவரது வாழ்க்கை முழுக்க ஆளுமை செய்திருக்கின்றனர்.
ஜெயராமன், சந்தியா தம்பதிக்கு மகளாகப் பிறந்த ஜெயலலிதாவுக்கு கோமளவள்ளி என்றுதான் பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் அம்மா அவரை ‘அம்மு’ என்றுதான் செல்லமாக அழைத்து வந்தார். தாய் சந்தியா அம்முவை கவனமாக வளர்த்து வந்தார். அவருடைய அனுமதி இல்லாமல் அம்மு எதையும் செய்ய முடியாது. அம்மு தனக்கு என்று தனியே எந்த முடிவையும் எடுக்க முடியாது. முழுக்க முழுக்க தாய் சந்தியாதான் அம்முவின் வாழ்க்கையில் இருந்தார்.
படப்பிடிப்புக்கு சந்தியா செல்லும் போதும், அவர் அருகில் இல்லாவிட்டாலும் அவருடைய கட்டுப்பாட்டில்தான் அம்மு வளர்ந்தார். சட்டம் படிக்க விரும்பிய அம்மு, நடிக்க வந்ததும் தாய் சந்தியாவின் நிர்ப்பந்தத்தினால்தான். குடும்ப சூழ்நிலையும் அதற்கு ஒரு காரணம். எந்தப் படத்தில் நடிக்க வேண்டும், எவ்வளவு சம்பளம் என அனைத்தையும் தாய் சந்தியாதான் கவனித்து வந்தார்.சந்தியா இறந்த பிறகு ஜெயலலிதாவின் அரசியல் குருவான எம்.ஜி.ஆர் அவரது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார்.
ஜெயலலிதாவின் துணிச்சலும், அவரது திறமையும் எந்தக் காரியத்தையும் முடித்துக் காட்டும் தன்மையும் எம்.ஜி.ஆரைக் கவர்ந்திருந்தது. சொல்லப் போனால் ஜெயலலிதா எந்தப் படத்தில் நடிக்க வேண்டும், எதில் நடிக்கக் கூடாது, எங்கு போக வேண்டும் என்பதையெல்லாம் முடிவு செய்யும் அளவுக்கு எம்.ஜி.ஆர் ஜெயலலிதா மீது மிகவும் செல்வாக்குக் கொண்டிருந்தார்.
ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் கொடுத்த பொறுப்புகள் காரணமாக நாளடைவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்தெல்லாம் கூட ஜெயலலிதா நீக்கப்பட்டார். அதையும் மீறி எம்.ஜி.ஆரின் தவிர்க்க முடியாத அரசியல் வாரிசாக ஜெயலலிதா உருவெடுத்தார்.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் பிளவுபட்டிருந்த அ.தி.மு.க-வை ஒன்றிணைத்து வெற்றியின் பாதையை நோக்கித் தனி ஆளாக வளர்த்தெடுத்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்கு இரத்த உறவுகள் இருந்தாலும் கூட அவர்கள் யாரையும் பெரிதாக தனக்கு அருகில் சேர்த்துக் கொள்ளவில்லை.
வீடியோ லைப்ரரி வைத்திருந்த சசிகலா, வீடியோ நாடாக்கள் கொடுக்க வந்த போது ஜெயலலிதாவுடன் பழகினார். நாளடைவில் ஜெயலலிதாவின் அரசியல் முடிவுகளில் சசிகலாவும் ஆளுமை செய்தார்.சசிகலாவால் ஜெயலலிதாவுக்கு எவ்வளவோ சிக்கல்களும், துன்பங்களும் வந்தன. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி தனது உடன்பிறவா சகோதரி என்று ஜெயலலிதாவே குறிப்பிடும் அளவுக்கு சசிகலாவின் செல்வாக்கு உயர்ந்தது. ஜெயலலிதா நம்பும் ஒரே நெருங்கிய நபராக சசிகலா மட்டுமே கடைசி வரை இருக்கிறார்.
சந்தியா, எம்.ஜி.ஆர், சசிகலா மூவரும்தான் தனது நலம் விரும்பிகள் என்று பரிபூரணமாக நம்பினார். அது உண்மையும்கூட. ஜெயலலிதாவின் சுக துக்கங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள மூவர்தான் அவர் அருகில் இருந்தனர்.
சிறு வயதில் தன் மீது செலுத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிர்வினை ஆற்றத் தெரியாமல், தனியே அறைக்குள் சென்று அழுத அம்முவில் இருந்து, இன்று அப்போலோவில் யாரையும் தன் அருகே அனுமதிக்காத அம்மா வரையான ஜெயலலிதா இறுக்கமான ஒரு நபராகவும், யாரும் நெருங்க முடியாத ஒரு நபராகவும் இருப்பதற்கு இவர்கள் மூவரும் கூட ஒரு காரணம்.
இந்த உலகத்தின், மிகவும் கடினமான வேலை எனக்குப் பணிக்கப்பட்டாலும், நான் அதற்கு என்னைத் தயார் செய்து கொள்வேன்.” -இது நடிகையாக புகழ் பெற்ற பின் ஜெயலலிதா சொன்னது. ஆனால், தொடக்கத்திலிருந்தே அவர் அப்படியான மனநிலையில்தான் இருந்திருக்கிறார்.
நடிக்க விருப்பமில்லை. ஒரு கட்டாயத்தின் பேரில்தான் நடிக்கத் தொடங்கினார். ஆனால், அதை அம்மு விளையாட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. படிப்பில், நாட்டியத்தில் எப்படித் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, உச்சங்களைத் தொட்டாரோ அது போலத்தான் நடிப்பையும் கையாண்டார்.
விடுமுறை நாட்களில் தனக்குப் பிடித்த வேலையைச் செய்ய முடியவில்லையே என்ற எந்த ஆயாசமும் அவருக்கு இல்லை. தன் ஆன்மாவிலிருந்து சிறந்ததை எடுத்து வழங்கினார். அதனால்தான் என்னவோ… அவர் வேண்டாம் வேண்டாம் என்றாலும் அவருக்கு வாய்ப்பு வந்து கொண்டே இருந்தது.
ஆம், ‘எபிசில்’ ஆவணப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, அவருக்கு அடுத்த வாய்ப்பு வந்தது. வாய்ப்புகள் யாருக்காகவும் காத்திருக்காது. அது, வரும் போது இறுகத் தழுவிக் கொள்ள வேண்டும் என்பார்கள். ஆனால், அவருக்காக வாய்ப்புக் காத்திருந்தது. நாட்கள் கணக்கில் அல்ல, மாதக்கணக்கில்.அமெரிக்க நகைச்சுவை நடிகர் மில்டன், “வாய்ப்புகள் கதவைத் தட்டவில்லை என்றால், கதவுகளை நீங்களே உருவாக்குங்கள்…” என்றார்.
அம்முவுக்கு ஏறத்தாழ ஒன்பது மாத காலம், வாய்ப்பு கதவைத் தட்டி விட்டு, அவர் திறப்பார் என்று வாசலிலேயே காத்துக் கிடந்தது.
சந்தியா அப்போது, ‘நன்ன கர்த்தவ்யா’ என்ற கன்னடப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதில், அவருக்கு மாமியார் வேடம். படத்தின் நாயகி, ஒரு பால்ய விதவை. அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கச் சரியான நபர் கிடைக்கவில்லை.படத்தின் இயக்குநர் ராகவய்யா இதற்காக ஒரு நெடிய தேடுதல் வேட்டையையே நடத்தி விட்டார். ஆனால், பொருத்தமான நபர்தான் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் சலிப்படைந்து, அந்தக் கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட காட்சிகளை விட்டு வைத்து விட்டு, மற்ற காட்சிகளை எடுக்கத் தொடங்கி விட்டார்கள்.
அந்தச் சமயத்தில்தான் மீண்டும் காலம், தன் விளையாட்டைத் தொடங்கியது.ஆம், ஒருநாள் வேறொரு வேலையாக சந்தியாவின் வீட்டுக்கு வந்த தயாரிப்பாளர்கள், அம்முவைப் பார்க்கிறார்கள். திரைப்படத்தில் ஒரு முக்கியமான காட்சியின் அதிர்வை பார்வையாளனுக்குக் கடத்த அலை, பறவைகள் எல்லாம் சில நொடிகளுக்கு உறைந்து நிற்குமே…. அதுபோல நின்றதா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், நிச்சயம் அந்தத் தயாரிப்பாளர்கள்இருவரும் திகைத்துத்தான் போய் விட்டார்கள்.
அதில், ஒருவர் வாய்விட்டே கூறி விட்டார். “நாங்கள் தேடிய முகப் பொலிவுள்ள கதாநாயகி இதோ இங்கேயே இருக்கிறாரே… உங்கள் பெண்ணையே எங்கள் கதாநாயகியாகப் போடப் போகிறோம்” என்றார், ஒரு வாய்ப்பை வழங்கிய மனநிலையில். ஆனால், அதற்கு சந்தியா சம்மதிக்கவில்லை.“முடியாது. அவளுக்கு அதில் விருப்பம் இல்லை. எனக்கும் கூடத்தான்… அவள் படிக்க விரும்புகிறாள். தயவு செய்து வேறொரு நபரை தேடிக் கொள்ளுங்கள்” என்றார் மென்மையான மொழியில்.
வந்தவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அரை மனதுடன் கிளம்புகிறார்கள்.ஆறு மாதங்கள் உருண்டோடி விட்டன. முக்கிய கதாபாத்திரம் இல்லாததால், நத்தை வேகத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது.அந்தச் சமயத்தில் மீண்டும் அந்தத் தயாரிப்பாளர்கள் சந்தியாவைச் சந்தித்து, “இன்னும் எங்கள் படத்துக்குக் கதாநாயகி அமையவில்லை. உங்கள் பெண்ணையே தயவு செய்து நடிக்க அனுமதியுங்கள்’’ என்கிறார்கள்.
மீண்டும்… மீண்டும் கேட்கிறார்கள். இவர்களை உதாசீனப்படுத்தவும் முடியாது. அதே சமயத்தில், அம்முவை நடிக்க அனுப்பவும் முடியாது. சரி… இன்னும் கொஞ்சம் காலத்தைக் கடத்திப் பார்ப்போம்.ஒருவேளை,அதற்குள் இவர்கள் வேறொரு நாயகியைக் கண்டடையலாம் என்று சமயோசிதமாக யோசித்து இப்படியாகச் சொல்கிறார். “அம்முவின் படிப்புக் கெடக் கூடாது. அவளுக்குக் கோடை விடுமுறை வரும்வரை காத்திருப்பீர்களா?’’ என்று ஒப்புக்குக் கேட்கிறார்.
முடியாது என்று சொல்லிவிட்டால் சந்தோஷம்… காத்திருக்கிறோம் என்று சொன்னாலும் பிழை இல்லை. இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன. இதுதான் அப்போதைக்கு சந்தியாவின் எண்ணம்.“சரி காத்திருக்கிறோம்…” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அந்த வாய்ப்பு மூன்று மாத காலம், காதலிக்கு காத்திருக்கும் காதலன் போல, அம்முவின் வீட்டு வாசலிலேயே காத்திருக்கிறது.
கோடை விடுமுறை வருகிறது. அந்தத் தயாரிப்பாளர்களும் வருகிறார்கள். ‘‘தொடர்ந்து நடிக்கச் செய்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி… உங்கள் மகளை இந்த முறை மட்டும் நடிக்க அனுமதியுங்கள்’’ என்று கேட்கிறார்கள். சந்தியாவுக்கு பலமான யோசனை.நிலைமை கையை மீறிப் போய்விட்டது. இனி எதுவும் செய்ய முடியாது. அம்முவை நடிக்க அனுமதித்து விட வேண்டியதுதானா… என்ற எண்ணம் எழுகிறது.
சரி, அம்முவிடமே கேட்டு விடுவோம் என்ற முடிவுக்கு வருகிறார்.அம்முவிடம் நடந்த எல்லாவற்றையும் சொல்கிறார். “என்ன சொல்கிறாய் அம்மு…? எனக்கும் விருப்பம் இல்லைதான். தொடர்ந்து கேட்கிறார்கள், புறந்தள்ள முடியவில்லை… என்ன செய்யலாம்” என்று கேட்கிறார். அம்மு இதற்கு ஒப்புக் கொள்ளவே மாட்டார் என்பதுதான் சந்தியாவின் எண்ணமாக இருந்தது. ஆனால், அன்று அம்மு என்ன மனநிலையில் இருந்தார் என்று தெரியவில்லை, “நான் திறமையாக நடிப்பேன் என்று உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் எனக்கு ஆட்சேபனை இல்லை’’ என்கிறார்.
வாசலில் ஒன்பது மாத காலமாகக் காத்திருந்த வாய்ப்பு, அம்முவை உற்சாகமாகத் தழுவிக் கொள்கிறது.இவ்வாறுதான் அவரது சினிமா பிரவேசம் அமைந்தது.
ஜெயலலிதா குறித்து எல்லோரும் வியக்கும் விஷயம் அவரின் மொழி ஆளுமை. தமிழ் தவிர்த்து, அவரால் எந்த தடுமாற்றமும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேச முடியும்.
2007-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் மிக சரளமாக இந்தி பேசிய போது, அந்த மேடையில் இருந்த முலாயம் சிங்கே வியந்துதான் போனார்.
அதுபோல ஒரு முறை, ஆந்திராவில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் ஆங்கிலத்தில் உரையாற்றத் தொடங்கினார். பெரும் எண்ணிக்கையில் கூடி இருந்த பாமர மக்களுக்கு ஆங்கிலம் புரியவில்லை என்பதை உணர்ந்த அவர், சட்டென்று தெலுங்கில் உரையாற்றத் துவங்கி விட்டார்.
சிறுவயதில் மெட்ரிக் பள்ளியில் படித்ததால் அவருக்கு ஆங்கிலம் சுலபமாக வந்தது. இன்னும் சொல்லப் போனால் சேர்ச் பார்க் பள்ளியில் படித்த காலத்தில் தமிழில் பேசத்தான் தடுமாறினாரே தவிர, ஆங்கிலத்தில் சரளமாக பேசினார்.
பிறகு கன்னடம்… தான் பால்ய வயதை மைசூர் மற்றும் பெங்களூரில் கழித்ததால் அவருக்கு அந்த மொழியும் இயல்பாக வந்தது.
தமிழ், ஆங்கிலம், கன்னடம் ஆகிய மூன்று மொழிகளைத் தவிர மற்ற மொழிகளை எல்லாம், அவர் திரை உலகுக்கு வந்த பிறகு தனது தேவையின் கருதி கற்றவை. அதே நேரத்தில் மற்ற மொழிகள் மீதிருந்த விருப்பத்தினாலும் கூட!தாம் மொழிகள் கற்ற பின்னணியை அவரே முன்பொருமுறை அளித்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
அவரது வார்த்தைகளிலிருந்தே – “தமிழ் எனது தாய் மொழி. மைசூரில் சிறு வயதில் சில காலங்கள் வரை இருந்ததால் அங்கு வீட்டில் வேலையாட்களுடனும், அக்கம் பக்கத்தில் உள்ள சிறுமிகளுடனும் பேசிப் பேசி கன்னடத்தைக் கற்றுக் கொண்டேன்.
அதே நேரம் அவர் தெலுங்கு கற்ற கதை மிக சுவாரஸ்யமானது. அதையும் அவரே சொல்கிறார்.“ நான் ‘மனசுலலு மமதலு’ என்ற தெலுங்குப் படத்துக்கு ஒப்பந்தமானேன். அப்போது தயாரிப்பாளர்களிடம், ‘எனக்குத் தெலுங்கு தெரியாதே!’ என்றேன். அவர்கள் உடனடியாக தெலுங்கு ஆசிரியரை எனக்கு மொழி கற்பிக்க பணியமர்த்தி விட்டார்கள்.
தினமும் காலை சரியாக ஆறு மணிக்கு அந்த தெலுங்கு ஆசிரியர் வருவார்.நான் அந்த சமயத்தில் தான், நல்ல தூக்கத்தில் இருப்பேன். என்னை வீட்டில் எழுப்புவார்கள். தூக்கக் கலக்கத்தில்தான் வகுப்புக்குச் செல்வேன்.
அது மட்டுமல்லாமல், அப்போதெல்லாம் நான் மிகவும் சங்கோஜி. யாராவது நாலு வார்த்தை பேசினால், நான் ஒரு வார்த்தை தான் பதில் பேசுவேன்.தெலுங்கு பண்டிட் ஏதாவது எனக்கு கோபம் வரும்படி சொல்லிச் சீண்டி விடுவார். நானும் அதற்குப் பலமாக பதில் அளிப்பேன். தெலுங்கில் அதற்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி, மேலும் சீண்டுவார்.
நான் கத்த, அவர் கத்த, பெரிய ரகளையாகி விடும். நான் இப்படிக் கத்தி கத்திக் கற்றுக் கொண்டதுதான் தெலுங்கு.இதனால் இரண்டு மாதத்தில் கற்க வேண்டிய தெலுங்கை சுமார் நாற்பது நாட்களிலேயே கற்றுக் கொண்டேன்” என்று தான் தெலுங்கு கற்ற அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.
பிற்காலத்தில் வேண்டுமானால் ஜெயலலிதா தன்னை மிகவும் இறுக்கமானவராக காட்டிக் கொள்ளலாம்.இயல்பான தன் விருப்பங்களை தனக்குள்ளேயே வைத்து பூட்டிக் கொள்ளலாம். ஆனால், தன் பதின்ம வயதில், அந்த வயதுக்கே உரிய அபிலாஷைகளுடன்தான் ஜெயலலிதா இருந்தார்.
ஜெயலலிதாவுக்கு தன் சிறு வயதிலேயே தன்னை அலங்கரித்துக் கொள்வதில் அலாதி விருப்பம் இருந்திருக்கிறது.சிறு வயதில் சந்தியாவுக்கு தெரியாமல், அவரின் மேக்கப் பெட்டியைத் திறந்து தன்னை அலங்கரித்து இருக்கிறார். இதற்காக, சந்தியாவிடம் அடியும் வாங்கி இருக்கிறார்.
ஜெயலலிதாவே ஒரு முறை தன் அழகு குறிப்பை பகிர்ந்திருக்கிறார். அந்த அழகுக் குறிப்புக்கு அவர் ‘கிளியோபாத்ரா ஸ்டைல்’ என்று பெயரும் வைத்தார்.அது மட்டுமல்ல… அவர் அப்போது இன்னொரு அழகுக் குறிப்பையும் பகிர்ந்திருக்கிறார். அது மிகவும் எளிமையான அழகுக் குறிப்பு தான்.ஆண், பெண் என எந்த பேதங்களும் இல்லாமல் அனைவரும் பின்பற்ற வேண்டியதும் கூட… அந்த அழகுக் குறிப்பு இதுதான், “மனதை அழுக்கில்லாமல், குழப்பமில்லாமல்… தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.. நிச்சயம் உங்கள் முகம் மிளிரும்.
அவருக்குள்ளும் ஆயிரம் சின்னச் சின்ன ஆசைகள் இருந்திருக்கின்றன!ஜெயலலிதா ஆரம்பகாலங்களில் தனது கலை மற்றும் அரசியல் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களிலும் அச்சு ஊடகத்தினருடன் மனம் திறந்த நட்பு பாராட்டியவராகவே இருந்திருக்கிறார்.
எப்போதிருந்து அவர் பத்திரிகையாளர்களைப் புறக்கணிக்கத் தொடங்கினார் எனில், அது சட்டசபையில் நடந்த புடவை இழுப்பு சம்பவங்களின் பின்னானதாகவோ, வளர்ப்பு மகன் திருமண விவகாரங்களின் பின்னதாகவோ இருக்கலாம் என்றே அனுமானமாகிறது. அதுவரையிலான ஜெயலலிதா ஒரு மனம் திறந்த பேச்சாளராகவே இருந்திருக்கிறார்.
ஒரு முறை கைத்தறிப் புடவைகளை உடுத்தும் பழக்கத்தை மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கில் பிரபலங்களை வைத்து புடவை விற்பனை செய்யும் வகையில் சிறப்புக் கட்டுரை ஒன்றுக்கு தயார் செய்து விட்டு, புடவை விற்கும் பிரபலமாக அப்போதைய அண்ணா திராவிட முன்னேற்றக் கட்சியின் புதுக் கொள்கை பரப்புச் செயலாளரான ஜெயலலிதாவை அணுகி இருக்கிறார்கள்.
தன்னை அணுகிய நிருபரின் வேண்டுகோளுக்கு முதலில் சற்றுத் தயக்கம் காட்டி விசயத்தை முழுவதுமாக கேட்டறிந்த ஜெயலலிதா பின்பு அதன் பின்னிருக்கும் நல்ல நோக்கம் அறிந்ததும் தயங்காமல் நிருபர் குழாமுடன் வந்து புடவை விற்றுக் காட்டியிருக்கிறார்.சும்மா அல்ல ஒவ்வொரு கைத்தறிப் புடவை பற்றியும் மிகத் துல்லியமாக விவரம் அறிந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு புடவைகளைப் பற்றி தெளிவாக எடுத்துக் கூறி புடவை விற்றுக் காட்டியிருக்கிறார்.
அப்போதெல்லாம் ஜெயலலிதா வெளிப்படைத் தன்மை நிறைந்த நபராகவுமே இருந்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.இது மட்டுமல்ல தெலுங்கு நடிகர் ஷோபன் பாபுவுடனான தனது ‘லிவிங் டுகெதர்’ உறவாகட்டும், குமுதம் இதழில் அவர் எழுதத் தொடங்கி பாதியில் நிறுத்திய சுயசரிதையாகட்டும் அனைத்திலுமே ஒரு வெளிப்படைத் தன்மை மட்டுமல்ல,பத்திரிகையாளர்களுடனான அவரது நட்பு கலந்த உறவும் வெளிப்படும் வண்ணமாகத் தான் இருந்திருக்கிறது
அவரது ஆரம்ப கால வாழ்க்கை.இவையெல்லாம் தாண்டி தான் நினைத்தே பார்த்திராத வகையில் தனது வாழ்வைத் தீர்மானித்த இரண்டு மிகப்பெரும் சக்திகளாக ஜெயலலிதா குறிப்பிட்டது இருவரை தான். முதலாமவர் அவரது தாய் வேதவள்ளி என்கிற சந்தியா. இரண்டாமவர் எம்.ஜி.ஆர்.
சென்னையில் நடந்த 2.0 படப்பிடிப்பின் போது, நடிகர் ரஜினிகாந்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
கபாலி திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம், 2.0. இந்த படத்தை ஷங்கர் இயக்குகின்றார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இந்தி நடிகர் அக்ஷய்குமார், நடிகை எமி ஜக்சன் ஆகியோர் நடித்து உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
ரஜினிகாந்த்-ஷங்கர் கூட்டணியின் முந்தைய படைப்பான ‘எந்திரன்’ படத்தின் 2ம் பாகமாக இந்த படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. அடுத்தாண்டில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருக்கிறது.
கடந்த சில நாட்களாக ‘2.0’ படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. நேற்று பிற்பகலில் இருந்து படப்பிடிப்பு சென்னை அருகே மேலகோட்டையூர் பகுதியில் உள்ள கல்வி நிறுவனம் அருகே நடந்து கொண்டிருந்தது. ரஜினிகாந்த் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன.
அப்போது எதிர்பாராதவிதமாக ரஜினிகாந்த் கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் உடனடியாக கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை முடிந்த சில நிமிடங்களிலேயே அவர் வீடு திரும்பினார். நடிகர் ரஜினிகாந்த் காலில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் மீண்டும் படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம் 3வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார்.
1951ம் ஆண்டு பிறந்த ஓட்டக்காரத் தேவர் பன்னீர் செல்வம் என்று அழைக்கப்படும் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் முழுமையான விசுவாசி ஆவார்.
தற்போது நிதியமைச்சராக, பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள பன்னீர் செல்வம். முன்பு வருவாய்த்துறை உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
டான்சி நில பேர ஊழல் வழக்கில் சிக்கியதால் முதல்வராக இருந்த ஜெயலலிதா 2001ஆம் ஆண்டு பதவி விலக நேரிட்டது. அப்போது அதாவது 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.
முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் பதவியில் அமர்ந்தது அதுவே முதல் முறை என்பதால் முக்குலத்தோரின் அன்பையும், ஆதரவையும் பெற்றார் ஜெயலலிதா. அதன் பின்னர் டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலையானார். இதனால் 2002ம் ஆண்டு மார்ச் 1ம் திகதி அன்று அதாவது 7 மாதங்களுக்குப் பின்னர் பன்னீர்செல்வம் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதே போல கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் திகதி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் முதல்வர் பதவியை இழந்தார். செப்டம்பர் 29ஆம் திகதி, மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றார் பன்னீர்செல்வம். அந்த வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்தார் கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி.
எனவே 2015 மே 22ம் திகதி அன்று அதாவது 8 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம். தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி இரண்டு முறை முதல்வர் பதவியை கட்சித் தலைமைக்காக ஏற்று பின் ராஜினாமா செய்த சரித்திரம் ஓ.பி.எஸ்.க்கே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 3வது முறையாக முதல்வராகியுள்ளார் பன்னீர்செல்வம். ஆளுநர் மாளிகையில் இன்று அதிகாலை 1 மணியளவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பன்னீர்செல்வம் பதவியேற்றார்.
தமிழ்த்திரை உலகில் புகழ்பெற்ற நட்சத்திரமாக திகழ்ந்த சந்தியா-ஜெயராமன் தம்பதிகளின் இரண்டாவது குழந்தையாக 1948 பிப்ரவரி 24ம் திகதி மகம் நட்சத்திரத்தில் ஜெயலலிதா பிறந்தார். ஜெயலலிதா பிறந்தது மைசூரு நகரில் என்றாலும் அவருடைய முன்னோர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர்கள்.
ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் தகப்பனார் பெயர் ரங்காச்சாரி. இவர் மைசூரு மகாராஜாவின் குடும்ப வைத்தியர். ஜெயலலிதாவுக்கு 1 1/2 வயது ஆனபோது, தந்தை காலமானார். முதலில் பெங்களூரு பிஷப் கார்டன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்த ஜெயலலிதா, பின்னர் சென்னையில் சேர்ச் பார்க் கொன்வென்டில் படிப்பை தொடர்ந்தார். படிப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தார். படிக்கும்போதே முறைப்படி பரத நாட்டியம் பயின்றார். 12வது வயதில் அவருடைய நடன அரங்கேற்றம் நடந்தது.
பிரபல வித்வான்களிடம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தை கற்றுக்கொண்ட ஜெயலலிதா, இசை கருவிகளை மீட்டவும் இனிமையாக பாடவும் தேர்ச்சி பெற்றார்.
1964ம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேறிய ஜெயலலிதா தாய் மொழி தமிழை போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாக பேச கற்றுக்கொண்டார்.
மேல் படிப்புக்கு ஜெயலலிதா முயற்சி செய்யும்போது, அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டு திரை உலக பிரவேசம் நடந்தது. ஜெயலலிதாவின் சித்தி(தாய் சந்தியாவின் தங்கை) வித்யாவதி ஏற்கனவே சினிமாவில் நடித்து வந்தார். அடுத்து சந்தியாவும் சினிமா நட்சத்திரமானார்.
ஜெயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பமில்லை என்றாலும், குடும்ப நிலை காரணமாக திரை உலகில் புகுந்தார்.
தொடக்கத்தில் சில கன்னடப்படங்களில் நடித்தாலும் அவர் கதாநாயகியாக நடித்து 1965ல் வெளிவந்த டைரக்டர் ஸ்ரீதரின் “வெண்ணிற ஆடை” தான் அவரது முதல் தமிழ்ப்படம்.
வெண்ணிற ஆடை படம் வெளிவருவதற்கு முன் ஜனாதிபதி வி.வி.கிரியின் மகன் சங்கர் கிரி தயாரித்த ‘எபிசில்’ (லிகிதம்) என்ற ஆங்கிலப்படத்தில் ஜெயலலிதா நடித்தார். அந்த படத்தை பார்த்தவர்கள் இதில் ஜெயலலிதா பேசுவதுதான் இங்கிலீஷ்! மற்றவர்கள் பேசுவது பட்லர் இங்கிலீஷ்! என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்கள்.
முதல் படத்திலேயே கதாநாயகி ஆகி புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளிலும் நடித்தார். சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று முன்னணி கதாநாயகர்கள் எல்லோருடனும் நடித்தார். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா 1971-ம் ஆண்டு காலமானார். தாயாரின் நினைவாக தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய ஜெயலலிதா அந்த வீட்டிற்கு “வேதா நிலையம்” என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். (சந்தியாவின் இயற்பெயர் ‘வேதா’)
ஜெயலலிதாவின் 100-வது படமான “திருமாங்கல்யம்” 1977-ல் வெளிவந்தது. அதன்பின் படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்து கொண்டார். 1980-ல் வெளிவந்த “நதியைத்தேடி வந்த கடல்” என்ற சினிமாதான் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம். சுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்து முடித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையிலுள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சமாதி அமைந்துள்ள வளாகத்தில் அடக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு ஜெயலலிதா டிசம்பர் 5ம் திகதி நேற்று இரவு 11.30 மணிக்கு மரணமடைந்தார். அவரது உடல் இன்று அதிகாலை 3 மணியளவில் போயஸ் இல்லம் சென்று சேர்ந்தது. அங்கு அவரது குடும்ப வழக்கப்படி இறுதி சடங்குகள் நடைபெறும்.
ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகளைத் தொடர்ந்து, அதிகாலை 4.30 மணிக்கு ராஜாஜி ஹோலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன்பிறகு மாலை 4.30 மணியளவில், மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில், ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
மெரினா கடற்கரை பகுதியில், புதிய கட்டிடங்கள் கட்ட விதிமுறை கிடையாது என்பதால், எம்.ஜி.ஆர் நினைவிடம் அமைந்துள்ள வளாகத்திலேயே ஜெயலலிதாவுக்கு சமாதி அமைக்கப்படும் என்று தெரிகிறது.
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதாக நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, பல்கேரியாவில் படப்பிடிப்பில் உள்ள நடிகர் அஜித் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை..
மாண்புமிகு புரட்சித் தலைவி டாக்டர் அம்மா அவர்களின் மறைவால் வாடும் என் சக தமிழ் நாட்டு மக்களுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல்வேறு இன்னல்களைக் கடந்து சாதனைப் புரிந்து உயர்ந்த தலைவர் அவர். அவர் மீண்டும் ஆரோக்கியத்துடன் வர வேண்டும் என நாம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர் மறைந்துவிட்டார் என்னும் செய்தி என்னைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரது பிரிவால் வாடும் எனக்கும், எண்ணற்ற என் சக தமிழ் மக்களுக்கும் இந்தப் பிரிவைத் தாங்கும் வல்லமைைத் தர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீராங்கனை. டெல்லி பொலிஸ் சிறப்பு கமிஷனர் எம்.கே. மீனாவை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார்.
அதில் டெல்லியில் நடந்த தனது பிறந்தநாள் விழா விருந்தில் தனது முன்னாள் பயிற்சியாளர் கலந்து கொண்டார். அப்போது அவர் குளிர்பானத்தில் தனக்கு மது கலந்து குடிக்க வைத்தார். மயக்கத்தில் இருந்த போது அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக டெல்லி பொலிசார் முன்னாள் பயிற்சியாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகார் கொடுத்த துப்பாக்கி சுடும் வீராங்கனையின் பெயரையும், அவரது முன்னாள் பயிற்சியாளர் பெயரையும் பொலிசார் வெளியிடவில்லை.
அந்த வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டவர் என்றும் பயிற்சியாளர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர் அர்ஜூனா விருது பெற்றவர் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.
இதுபற்றி சிறப்பு கமிஷனர் எம்.கே. மீனா கூறுகையில் புகார் தொடர்பாக பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.