வவுனியா நகரசபைக்கு அருகே காணப்படும் பொங்குதமிழ் நினைவுத்தூபிக்கு அருகே தற்போது மாவிரர் தின ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
திட்டடமிட்டபடி இன்று மாலை 6.10 மணிக்கு மாவீரர்களின் நினைவு அனுஸ்டிக்கபடும் என ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
குருநாகல் பகுதியில் வைத்து உப பொலிஸ் பரிசோதகர் சுட்டு கொலை செய்த குற்றத்தின் பேரிலும் மேலும் இரு பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்கள் உதவியை கோரியுள்ளனர்.
இம்மாதம் 15 ஆம் திகதியன்று குருணாகல் மாஸ்பொத பகுதியில் வைத்து இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதெனவும் இவர்கள் மூவரையும் அறிந்திருக்கும் பட்சத்தில் அது தொடர்பிலான தகவல்களை அறியத் தருபவர்களுக்கு பணப்பரிசில் வழங்க தயாராக உள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
எனவே குறிந்த சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு அவர்களின் படங்களையும் அது தொடர்பில் அறிவதற்கான தொலை பேசி இலக்கங்களையும் பொலிஸ் ஊடகப்பிரிவினல் அறிவித்துள்ளனர்.
அதற்கமைய 011 2451633, 011 2451631,071 8592604,077 2001021 ஆகிய இலக்கங்களுக்கு அழைத்து தெரிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
07 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தினூடாக விலை குறைப்பிற்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய பயறு ஒரு கிலோகிராம் 15 ரூபாவாலும் பருப்பு ஒரு கிலோகிராம் 10 ரூபாவாலும் விலை குறைக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, உருளை கிழங்கு, மண்ணெண்ணெய் மற்றும் நெத்தலி ஆகிய பொருட்கள் 5 ரூபாவால் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், வௌ்ளைச் சீனி ஒரு கிலோகிராம் 2 ரூபாவாலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் 12.5 கிலோகிராம் நிறையுடைய சமயல் எரியாயு 25 ரூபாவால் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்துள்ளார்.
நிலவைப் போன்று சிறிய அளவிலான கோள் ஒன்று பூமியைச் சுற்றி வருவதை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
அமெரிக்க விண்வெளி மையமான நாசா விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் பூமி, சூரியனைச் சுற்றிவரும் போது அதனுடன் சேர்ந்து சிறிய அளவிலான கோளும் சுற்றி வருவது தெரியவந்தது.
இந்த சிறிய அளவிலான கோளுக்கு 2016 எச்ஓ3 (2016 HO3) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கோள், புவியின் மேற்பரப்பில் செயற்கைகோள்கள் நிலைநிறுத்தப்படும் தூரத்துக்கு அதிகமான தொலைவில் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
இதேபோன்று பூமியைச் சுற்றி வந்த 2003 ஒய்என்107 (2003 YN107), 10 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுவட்டப் பாதையை விட்டு விலகியது.
ஆனால், தற்போது கண்டுபிடுக்கப்பட்டுள்ள புதிய கோளானது அடுத்த 100 வருடங்களுக்கு பூமியைச் சுற்றி வரும் என்று தெரிவித்தார்.
கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோவின் மரணத்தை அமெரிக்காவின் மியாமி நகரில் வாழும் கியூபா மக்களில் பலர் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பிடல் காஸ்ட்ரோவின் கம்யூனிச கொள்கைகளுக்கு எதிரான பலர் அந்நாட்டை விட்டு அருகாமையில் உள்ள அமெரிக்காவின் மியாமி நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். மியாமியில் இவர்கள் வசிக்கும் பகுதி கியூபா தலைநகரின் நினைவாக லிட்டில் ஹவானா என்றழைக்கப்படுகிறது.
இந்தநிலையில் பிடல் காஸ்ட்ரோ நேற்று மரணம் அடைந்த செய்தியை அறிந்த அவரது அதிருப்தியாளர்கள் லிட்டில் ஹவானா நகரின் முக்கிய பகுதிகளில் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேளங்களை அடித்தும், கார்களின் ஹாரன்களை ஒலிக்கச் செய்தும் அவர்கள் மகிழ்ச்சியில் ஆரவார கூச்சலிட்டனர்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கியூபாவில் இருந்து வெளியேறிய பாப்லோ அரென்சிபியா என்ற ஓய்வுபெற்ற 67 வயது பள்ளி ஆசிரியை, தங்களது மகிழ்ச்சி கொண்டாட்டம் பற்றி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஒருவரின் மரணத்தை மற்றவர்கள் கொண்டாடி மகிழ்வது என்பது கவலைக்குரிய செயல்தான். இப்படிப்பட்டவர் பிறக்காமலே இருந்திருக்கலாம் என்பதுதான் இந்த கொண்டாட்டத்தின் நோக்கமாகும்’ என்றார்.
நரகத்துக்கு சென்றிருக்கும் பிடல் காஸ்ட்ரோவால் தனது வேலை பறிபோய் விடுமோ? என்று அவரைப்பற்றி இனி சாத்தான்தான் கவலைப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோவை விமான நிலையத்தில் தனது செருப்பு அறுந்ததால், ரோட்டோர செருப்பு தைக்கும் கடையில் செருப்பை தைத்துக்கொண்டார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி. தொழிலாளியிடம் 100 ரூபாயை நீட்டிய மத்திய அமைச்சர், 90 ரூபாயை டிப்ஸாக கொடுத்தார்.
கோவையில் நடைபெறும் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, இன்று மதியம் கோவை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் வரும் போது இவரது செருப்பு திடீரென அறுந்தது. இதையடுத்து ஒற்றை செருப்புடன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார் ஸ்மிருதி இராணி.
வழக்கமான செய்தியாளர்களை சந்தித்து பேசும் ஸ்மிருதி இராணி, விமான நிலையத்தில் காத்திருந்த செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து விட்டு காரில் ஏறி வெளியேறினார். ஸ்மிருதி இராணி ஒற்றை செருப்புடன் விமான நிலையத்தில் இருந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் இருந்து ஈஷா யோகா மையம் சென்ற ஸ்மிருதி இராணி, வழியில் செருப்பு தைக்கும் கடை ஒன்றில் நிறுத்தி செருப்பை தைத்துக்கொண்டார். செருப்பு தைக்க தொழிலாளி 10 ரூபாய் கேட்க, தன் உதவியாளரிடம் இருந்து 100 ரூபாயை வாங்கி கொடுத்தார். 10 ரூபாய் போதும் என தொழிலாளி சொல்ல, ‘கீப் த சேஞ்ச்’ என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்தார்.
இதற்கு ‘வேலை செய்யாம காசை வாங்குனா பாவம் பிடிச்சுக்கும். வேணும்னா செருப்ப முழுக்க திரும்பவும் தைச்சு கொடுக்கறேன். திரும்பவும் அறுந்தறாம இருக்கும்,” எனச்சொல்லி, செருப்பு அறுந்த இடம் மட்டும் அல்லாது செருப்பு முழுக்க தைத்து கொடுத்தார். இந்த நிகழ்வின் போது பி.ஜே.பி. மாநில நிர்வாகி வானதி சீனிவாசன் உடனிருந்தனர்.
இந்த நிகழ்வை, வீடியோ, புகைப்படமாக பதிவு செய்து பி.ஜே.பி. நிர்வாகிகளே பரப்பி வருகிறார்கள். நல்ல கேளுங்க வீடியோவோட 27வது வினாடியில் ‘செருப்பு தைக்கிறவங்களையும் சேர்த்து எடுங்க’னு ஒரு வாய்ஸ் வரும். அது வேற யாருடயதும் இல்லை. வானதி சீனிவாசன் குரல் தான்.
நாட்டில் இனங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக இனவாத மற்றும் மதவாத அடிப்படையில் ஆத்திரமூட்டும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் தாமதிக்காமல் சட்டத்தை கடுமையாக செயற்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்களிடையே குறுகிய இனவாத கருத்துக்களை பரப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதை வரவேற்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களின் சமூக, அரசியல் மதப் பிற்புலம் அல்லது அந்தஸ்து என்பனவற்றை கவனத்திற்கொள்ளாது சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக நாட்டில் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளை எதிர்த்து வெ ளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது எமது நாட்டில் அண்மைக் காலங்களில் காணக்கூடியதாக உள்ள நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் குரோத மொழிப் பிரயோகம் தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் கவனத்திற்குக் கொண்டவரப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக இரத்தம் சிந்தி ஏற்பட்ட அழிவுகளுக்குப் பின்னர் முழு நாடும் ஒன்றாக சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் நோக்கி மேற்கொள்ளும் பயணத்திற்கு இவ்வாறான நிகழ்வுகள் சவாலாக அமைவது கவலைக்குரிய விடயமாகும்.
தமது குறுகிய நோக்கங்களை அடைந்து கொள்ளும் நோக்குடன் குரோத செயற்பாடுகளின் மூலம் சகோதர இலங்கை பிரஜைகளை அவமானப்படுத்தி இழிவிற்கு உட்படுத்தி இன அல்லது மத அடிப்படையில் இலங்கை சமூகத்தினுள் பிளவை ஏற்படுத்துவதற்கான சூழலை உருவாக்க இடமளிக்க முடியாது.
முதன் முறையாக இந்த அரசாங்கமானது நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் மூலம் ஐக்கிய இலங்கையொன்றைக் கட்டியெழுப்பும் நோக்கத்தை வெளிப்படையாக தெளிவுபடுத்தியுள்ளது. சகல இனங்களுக்கு இடையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும்.
கடந்த 2015 ஆம் ஆண்டிற்கு முன்னரான காலத்தில் அரச ஆட்சியாளர்களினால் இனங்களுக்கிடையில் குரோதம் மற்றும் இனவாதத்தை ஏற்படுத்துவதற்கு ஆதரவு வழங்கப்பட்டது. அத்துடன் சகோதர இலங்கையர்களை துன்புறுத்தியதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இது முற்றுமுழுதாக வேறு அணுகுமுறையாகும்.
இந்நிலையில் அரசாங்கமும் நாட்டு மக்களும் ஒன்றிணைந்து நல்லாட்சியை அடிப்படையாகக் கொண்ட சமூகம் ஓன்றைத் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பாரிய முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இக் காலகட்டத்தில் சவால்கள் பலவற்றை வெற்றிகொள்ள வேண்டியுள்ளது. இதனிடையே 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் திறக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களும் சாதகமான சமூக – அரசியல் நிலைமைகளும் முற்போக்காகப் பாவிக்கப்பட வேண்டியவையாகும்.
ஒரே நாட்டவராக எங்களுக்குச் சொந்தமாக வேண்டிய அபிவிருத்தி, பொருளாதார மேம்பாடு மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை என்பவற்றை அடைந்து கொள்ளவேண்டும் எனின் நாட்டுப்பற்றுள்ள சகல இலங்கைப் பிரஜைகளும் ஒற்றுமையுடன் தலைமைத்துவத்தைப் வழங்கி சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மக்கள் சார்பான நேர்மையான ஆட்சி முறையொன்றைப் பெற்றுக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
பல்லின,பல் மதங்களைக் கொண்ட நாடாகிய இலங்கையில் எங்கள் ஒவ்வொருவருக்கும் இடையில் உள்ள வேற்றுமையை மதித்து எங்களது செழிப்பான பன்மைத்துவத்தை பேண வேண்டும். ஒவ்வொரு பிரஜையினதும் உரிமைகளை அனுபவிப்பதற்கு சந்தர்ப்பம் உள்ள இலங்கையர்களாக பெருமைப்படக் கூடிய, சம வாய்ப்புக்களை வழங்கக் கூடிய மற்றும் அந்நியோன்னிய கௌரவத்துடன் கூடிய ஒற்றுமையான எதிர்காலத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக செயற்படுகின்றோம். அதற்காக குறுகிய, மத்திய கால மற்றும் நீண்ட காலச் செயற்பாடுகள் பல தற்போது செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் உள்ளிட்ட முழு அரசாங்கமும் குரோத மொழிப் பிரயோகம் பற்றி தங்களது பலமான அதிருப்தியை தெரிவித்துள்ளனர். அதற்கான எவ்விதமான சந்தர்ப்பங்களுக்கும் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர். இனங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக இனவாத மற்றும் மதவாத அடிப்படையில் ஆத்திரமூட்டுபவர்கள் தொடர்பில் தாமதிக்காமல் சட்டத்தை கடுமையாக செயற்படுத்த வேண்டியுள்ளது.
வெறுப்பு மற்றும் குரோதச் செயற்பாடுகளுக்காக மக்களை தூண்டுகின்ற குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் சிவில் சமூகம் மற்றும் மதத் தலைவர்களினால் முன்னெடுக்கப்படும் மிகவும் முற்போக்கான செயற்பாடுகளை நாங்கள் வரவேற்கிறோம்.
மக்களிடையே குறுகிய இனவாத கருத்துக்களை பரப்புவதற்காக முயற்சிகளை மேற்கொள்ளும், வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதை வரவேற்பதோடு இவ்வாறான செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களின் சமூக, அரசியல் மதப் பிற்புலம் அல்லது அந்தஸ்து கருத்தில் கொள்ளப்படாது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்ட அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட இவ்வாறான குரோத கருத்துப் பிரயோகம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக அதிக முறைப்பாடுகள் வெவ்வேறு தரப்பினரால் சாட்சியங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கான புலனாய்வுக்காக சட்ட நடவடிக்கை எடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை கவனத்தில் கொண்டுவருவதற்கு விரும்புகிறோம். இந் நிகழ்வுகள் தொடர்பில் சட்டத்தை செயற்படுத்தும் அதிகாரிகளினால் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
நிலையான, மேம்பட்ட பல சமூகங்களைக் கொண்ட இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதை நோக்கி நாங்கள் அனைவரும் உறுதியுடன் மேற்கொள்ளும் இம் முயற்சிக்கு தடங்கல்களை ஏற்படுத்துவதற்கு யாருக்கும் இடமளிக்கமாட்டோம்.
இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க எந்த இனத்தினதும் இனவாத அல்லது தீவிரவாதக் குழுக்களுக்கும் இடமில்லை என்று ஜனாதிபதியும் பிரதமரும் மிகவும் தெளிவாகத் தெரிவித்துள்ள கூற்றுக்களை பாராட்டுகிறோம். இந் நோக்கத்தை அடைந்து கொள்வதற்கான இம் முயற்சியில் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு சகல இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.
‘கியூபா’ இந்த தேசத்தின் அடையாளமாக இருந்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ. உலக கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும், கியூபா புரட்சியின் தலைவருமான ஃபிடல் காஸ்ட்ரோ உடல்நலம் குன்றி இன்று உயிரிழந்தார். உலகில் நீண்ட நாள் சேவையாற்றிய அரசியல் தலைவர்களில் மிக முக்கியமானவரும், முதன்மையானவருமான ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு வயது 90.
இவர் கடைசியாக உரை நிகழ்த்தியது க்யூபா கம்யூனிஸ்ட் கட்சியின் 7வது மாநாட்டில். கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி அவர் நிகழ்த்திய உரை மிக முக்கியமான உரையாகப் பார்க்கப்படுகிறது. ஃபிடல் காஸ்ட்ரோ கடைசியாக பேசியதாவது.
நெருக்கடியான காலகட்டங்களின்போது எந்தவொரு பகுதி மக்களையும் அணிதிரட்டுவதும், அவர்களுக்குத் தலைமையேற்பதும் மிகக் கடுமையான காரியம். ஆனால் அப்படி மக்களை அணிதிரட்டாமல் மாற்றங்கள் சாத்தியமில்லை. நான் ஏன் ஒரு சோசலிஸ்ட் ஆனேன்?. இன்னும் சரியாக கேட்க வேண்டும் என்றால், நான் ஏன் கம்யூனிஸ்ட் ஆனேன்?
ஏழைகளைச் சுரண்டுவதை தங்களது உரிமையாக எடுத்துக் கொண்டவர்களாலும், உழைப்பு, திறமை மற்றும் ஒட்டுமொத்த மனித சக்தியால் உருவாக்கப்படும் அனைத்து பொருட்செல்வத்தையும் முற்றாக அபகரித்துக் கொள்வது தங்களது உரிமையாக எடுத்துக் கொண்டவர்களால் வரலாறு நெடுகிலும் கம்யூனிஸ்ட் என்ற வார்த்தை மிகவும் கீழ்த்தரமானதாக சித்தரிக்கப்பட்டு வந்துள்ளது. கம்யூனிச சித்தாந்தம் என்பது சிறுமைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. வரலாறு நெடுகிலும் மனிதர்கள், இந்த இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்ற மனநிலையிலேயே இருந்து வந்திருக்கிறார்கள்.
நாம் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் நான் எளிமையாகச் சொல்கிறேன். நான் ஏதும் அறியாதவனும் அல்ல, எல்லாம் தெரிந்தவனும் அல்ல; நான் பொருளாதாரம் படித்துக் கொண்டிருந்த போது நானாகவே எனது சித்தாந்தத்தைப் பெற்றுவிடவில்லை. நான் சட்டம் மற்றும் அரசியல் அறிவியல் மாணவனாக இருந்தபோது தனியாக பாடம் நடத்தும் ஆசிரியரைப் பெற்றிருக்கவில்லை. பெரும் கடல் போன்ற பாடமான அரசியல் அறிவியலுக்கு ஆசிரியரைப் பெற்றிருக்கவில்லை.
நான் 20 வயது இளைஞனாக இருந்தபோது விளையாட்டிலும், மலையேறுவதிலும் ஆர்வத்துடன் இருந்தேன். அந்த சமயத்தில் மார்க்சியம் – லெனினியம் குறித்து கற்பிக்கவும், படிக்கவும் உதவி செய்வதற்கு எந்த ஆசிரியரும் இல்லை; அந்த சமயத்தில் நான் மார்க்சிய, லெனினியக் கோட்பாடுகளைப் பற்றி லேசாக அறிந்திருந்தேன். அவ்வளவு தான். அதற்கு மேல் அதையும் நான் தெரிந்திருக்கவில்லை.
சோவியத் ஒன்றியத்தின் மீது முழுமையான நம்பிக்கை மட்டுமே என்னை உற்சாகமூட்டியது. மாமேதை லெனினின் பணிகள், சோவியத் புரட்சியின் 70 ஆண்டுகள் கழித்து மீறப்பட்டன. ரஷ்யப்புரட்சியைப் போன்று இன்னொரு புரட்சி நடப்பதற்கு 70 ஆண்டுகாலம் காத்திருக்கத் தேவைப்படாது என்று கருதுகிறேன். காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் நடைபெற்ற மிகப்பிரம்மாண்டமான போராட்டத்தின் விளைவாக எழுந்த சோவியத் புரட்சியைப் போன்றதொரு பிரம்மாண்டமான சமூகப் புரட்சியை இந்த மனித குலம் அவசியம் பார்க்க வேண்டியுள்ளது.
இன்றைக்கு பூமியின் தலைக்கு மேலே மிகமிகப்பெரிய ஆபத்து தொங்கிக் கொண்டிருக்கிறது; நவீன ஆயுதங்களின் பேரழிவு சக்தியிடமிருந்து அந்த ஆபத்து வந்துகொண்டிருக்கிறது; அந்த ஆயுதங்கள் இந்த புவிக்கோளத்தின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கக் காத்திருக்கின்றன; புவியின் மீது மனிதகுலம் வாழ்வதை சாத்தியமற்றதாக மாற்றிடக் காத்திருக்கின்றன.
டைனோசர்கள் மறைந்ததைப் போல, இன்றைய உயிரினங்களும் மறைந்துபோகும் ஆபத்து காத்திருக்கிறது. ஒன்று, மிக அறிவார்ந்த வாழ்க்கையின் புதிய வடிவங்கள் எதிர்காலத்தில் உருவாகலாம்; அல்லது சூரியனின் வெப்பம், மெல்ல மெல்ல அதிகரித்து, சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்துக் கோள்களையும் துணைக்கோள்களையும் அது உருக்கி அழித்துவிடலாம். இதை பெருவாரியான விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள்.அவர்களது கோட்பாடுகளில் சில உண்மையாக இருக்குமானால் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு அதனுடைய வீச்சு புரியாமல் கூட இருக்கலாம் அதை உணர்ந்து, இன்னும் கற்றுக்கொண்டு எதார்த்தத்திற்கு நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
புவிக்கோளத்தின் உயிரினங்கள், காலவெளியில் இன்னும் நீண்ட காலத்திற்கு உயிர்வாழுமானால், எதிர்காலச் சந்ததியினர், நாம் அறிந்துகொண்டு பங்காற்றியதைவிட இன்னும் அதிகமாக அறிந்துகொண்டு செயலாற்றுவார்கள்.ஆனால், அவர்கள் முதலில் மிகப்பெரிய பிரச்சனை ஒன்றைத் தீர்த்தாக வேண்டும்.
உண்மையில் கோடிக்கணக்கான மனிதர்களுக்கு தேவைப்படுவதைவிட, மிக மிகக் குறைவான குடிநீரும், இயற்கை வளங்களுமே உள்ளது. இந்நிலையில் தவிர்க்க முடியாத வகையில் துன்ப துயரங்களுக்குள் சிக்கியிருக்கும் மக்களுக்கு – எப்படி உணவளிப்பது என்பதைப் பற்றி அவர்கள் யோசித்தாக வேண்டும். நீங்கள் ஆச்சரியப்படலாம், எனது இந்தப் பேச்சில் அரசியல் எங்கே போனது என்று யோசிக்கலாம். நான் இதையெல்லாம் சொல்வதற்கு வருத்தப்படுகிறேன்; ஆனால் இன்றைக்கு அரசியல் என்பது நான் கூறிய இந்த வார்த்தைகளில்தான் அடங்கியிருக்கிறது.
மனிதர்கள் மேலும் மேலும் இந்த உண்மைகளைப் பற்றி கவலைப்பட வேண்டும். இன்னும் ஆதாம் – ஏவாள் காலத்திய மூடநம்பிக்கைகளில் ஆழ்ந்து கிடக்கக்கூடாது. எந்தவிதமான தொழில்நுட்பமும் சென்றடையாத, பசியோடு காத்திருக்கும் கோடிக்கணக்கான ஆப்பிரிக்க மக்களுக்கு யார் உணவளிப்பது? மழை இல்லை, அணைகள் இல்லை, நிலத்தடி நீர் இல்லை; முற்றிலும் மணலால் மூடப்பட்ட அந்தப் பிரதேசத்தின் மக்களுக்கு யார் உணவு தருவது?
இந்தப் பிரச்சனைகள் அனைத்திலும் நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி, அடித்து நொறுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த அடிப்படை அம்சங்களின் மீது இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை எனக் கருதுகிறேன். விரைவில் எனக்கு 90 வயது ஆகப்போகிறது. 90 வயது குறித்து எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த ஒரு கருத்தும் இல்லை. அதில் பெரிதாக மகிழ்ச்சியடைவதற்கும் ஒன்றும் இல்லை. நானும் விரைவில் எல்லோரையும் போலவே மரிக்கப்போகிறேன். நாம் எல்லோருமே அந்த நிலையை எட்டுவோம்.
ஆனால் கியூபக் கம்யூனிஸ்ட்டுகளின் சிந்தனைகள் என்றென்றும் ஒரு புவிக்கோளத்தின் அழியாத சின்னமாக மிளிரும்; மனிதகுலத்தின் மாண்புகளைக் காப்பதற்காக அந்தச் சிந்தனைகள் செயலாற்றிக் கொண்டே இருக்கும்; மனித குலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் பொருட்களையும், கலாச்சாரச் செல்வங்களையும் அது உற்பத்தி செய்துகொண்டே இருக்கும்; அந்த மகத்தான பொன்னுலகத்தைப் பெறுவதற்காக நாம் ஓய்வின்றி போராடுவது அவசியம்.
லத்தீன் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள எனது சகோதரர்களே, கியூப மக்களும், கியூப மக்களின் சிந்தனைகளும் மகத்தான வெற்றி பெறுவது என்பது உறுதி. இத்தகையதொரு மாநாட்டு அரங்கில் நான் உரையாற்றுவது இதுவே கடைசியாக இருக்கலாம். தொடர்ந்து முன்னேறுவோம்; அந்தப் பாதையை மிகச்சரியானதாக இருக்குமாறு செப்பனிடுவோம்; அதற்காக நாம் ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்தின் மீது அதிகபட்ச விசுவாசத்துடனும் மிக உயர்ந்த ஒன்றுபட்ட சக்தியுடனும் முன்னேறுவோம். நம்முடைய இந்தப் பயணம் எவராலும் தடுக்க முடியாதது.
இவ்வாறு ஃபிடல் காஸ்ட்ரோ பேசியிருந்தார்.
அவர் அன்று சொன்னதைப்போல இதுவே அவரது இறுதி உரையாகவும் மாறிப்போனது தான் சோகம்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயைத் தளமாகக் கொண்டு இயங்கும் விமானசேவை நிறுவனமான எமிரேட்ஸ், துபாயின் Miracle Garden உடன் இணைந்து இலட்சக்கணக்கான மலர்களால் ஆன எமிரேட்ஸ் A 380 எனும் மாதிரி விமானத்தை வடிவமைத்துள்ளது.
துபாயின் பாலைவன சோலையென வர்ணிக்கப்படும் Miracle Garden இல் மலர்களால் ஆன வாகன வடிவமைப்பு, ஆண்டுதோறும் இடம்பெற்றாலும், பிரம்மாண்ட மாதிரி விமானம் உருவாக்கப்பட்டுள்ளமை இதுவே முதல்முறையாகும்.
எமிரேட்ஸ் விமான நிறுவனத்திடமிருந்து A 380 விமானத்தின் மாதிரி வரைபடம் பெறப்பட்டு, அதனை அடிப்படையாக வைத்து 200 பணியாளர்களைக் கொண்டு, இரும்புக் கம்பிகள் மூலம் வெளிப்புற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.
முதலில் செடி கொடிகள் வளர்வதற்கு ஏற்ற சூழல் ஏற்படுத்தப்பட்டு, தாவரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன.
இந்த விமானம் முழுவதும் 7 வகையான இனங்களைக் கொண்ட 5 இலட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் இலச்சினையை மாத்திரம் உருவாக்க ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மலர்களும் தாவரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
80.27 மீற்றர் அகலத்திலான மிகப்பெரிய விமான இறக்கைகளின் அலங்கரிப்பிற்கு ஒரு இலட்சம் வரையான மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு நிஜ விமானத்தின் எடை 500 டன்களாகும். இந்த மலர் விமானம் 100 டன் எடையுள்ளதாக உருவாக்கப்பட்டுள்ளது.
180 நாட்களாக 200 பேர் இணைந்து நாளொன்றுக்கு 10 மணித்தியாலங்களைச் செலவிட்டு உருவாக்கியுள்ள இந்த கண்கவர் விமானத்தைப் பார்வையிட, இம்முறை ஆயிரக்கணக்கான மக்கள் Miracle Garden ஐ நோக்கிப் படையெடுப்பார்கள் என நம்பப்படுகிறது.
இந்த விமானத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களை மீள்சுழற்சி செய்ய முடியும் என்பது ஆறுதல் தரும் விடயமாகும். நவம்பர் 27 ஆம் திகதி முதல் இந்த விமானம் பொதுமக்கள் பார்வையிட திறந்துவைக்கப்படவுள்ளது.
அமெரிக்காவின் பிரபல தொலைகாட்சி அலைவரிசையில் 30 நிமிடங்கள் ஆபாசப்படம் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொலைகாட்சியான சி.என்.என் இல் இவ்வாறு ஒளிப்பரப்பப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் போஸ்டன் நகர மக்களுக்கான வழக்கமான நிகழ்ச்சிக்கு பதிலாக 30 நிமிடங்கள் ஆபாசப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
குறித்த ஆபாசப்படத்தினால் வழக்கமான நிகழ்ச்சி என காத்திருந்த மக்கள் பேரதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து சி.என்.என் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, போஸ்டன் நகரில் தங்களது சனலை ஒளிப்பரப்பபும் ஆர்.சி.என் கேபிள் ஒபரேட்டர் தவறுதலாக குறித்த படத்தை ஒளிப்பரப்பியுள்ளதாகவும், இதுகுறித்து அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எவ்வாறு தவறு ஏற்பட்டது என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
எனினும், குறித்த வீடியோவினால் பல குடும்பங்கள் சங்கடத்திற்கு உள்ளானதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இலங்கை யுவதியொருவரை தாய்லாந்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் இரு இலங்கை இளைஞர்களை தாய்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
20 வயதுடைய இலங்கை யுவதியை தாய்லாந்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 26 மற்றும் 34 வயதுடைய குறித்த சந்தேகநபர்களின் புகைப்படங்களை அந்நாட்டு பத்திரிக்கையொன்று வெளியிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் மீது தாய்லாந்து பொலிஸார் கடத்தல் மற்றும் பெண்களை பாலியல் தொழிலுக்கு உட்படுத்தல் போன்ற குற்றங்களை தாக்கல் செய்துள்ளனர்.
எனினும்,குறித்த பெண் தன்னுடைய மனைவியென்று கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவர் தெரிவித்துள்ள அதேவேளை,தனக்கு மத்திய கிழக்கில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி தாய்லாந்துக்கு அழைத்து வந்து இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் வங்கி வாசல் முன்பாக வரிசையில் காத்திருந்த மக்கள், பாஜக எம்பி ஹர்ஷ வர்த்தனை அடித்துத் துவைக்கும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.
கடந்த நவம்பர் 8ம் திகதி இரவு, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததிலிருந்து மக்கள் படாத பாடுபட்டு வருகின்றனர். வேலைக்குக் கூட செல்ல முடியாமல் தினமும் வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் வாசலில் காத்திருக்கின்றனர்.
ஆனால் மக்களின் இந்த சிரமத்தைத் தெரிந்தும் தெரியாத மாதிரி நடிக்கும் அதிகார வர்க்கத்தினர், ஆட்சி மேலிடம் விதவிதமான கருத்துக்கணிப்பு நடத்தி பண ஒழிப்புக்கு மக்கள் அமோக ஆதரவு தருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
அப்பாவி மக்களோ இதையெல்லாம் தெரிந்து கொள்ளும் விருப்பம் கூட இல்லாமல், வரிசைகளில் காத்திருந்து உயிரை விட்டுக் கொண்டுள்ளனர்.
நேற்று மட்டுமே பணத்துக்காக வரிசையில் காத்திருந்து மூன்று பேர் மயங்கி விழுந்து இறந்தனர். இவர்களில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலைமை நாளுக்கு நாள் சீரடையும் என்று எதிர்ப்பார்த்தால், மேலும் மேலும் மோசமடைந்து கொண்டே போகிறது. வங்கிகள் பணத்தை ஏடிஎம்களில் நிரப்புவதே இல்லை. அப்படியே நிரப்பினாலும் 100 ஏடிஎம்களுக்கு ஒன்று என்ற வீதத்தில் நிரப்புவதாகக் கூறப்படுகிறது.
வங்கிகளோ அறிவிக்கப்பட்டதைவிட மிகக் குறைவாகவே பணத்தைக் கொடுக்கின்றன. சில வங்கிகள் நோட்டுத் தட்டுப்பாடு என சில்லறை மூட்டைகளைக் கொடுத்து சுமக்க வைக்கின்றன. இத்தனை சிக்கல்களை மக்கள் எதற்காக சகித்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு இதுவரை தெளிவான பதிலில்லை. ‘பதில் சொல்ல வேண்டிய பிரதமர் பாராளுமன்றத்துக்குச் செல்வதையே தவிர்க்கிறார்.
உணர்ச்சிகரமாக பாகிஸ்தான் மீது போர், சிந்து நதிப் பிரச்சினை எனப் பேசி பிரச்சினையை திசை திருப்புவதிலேயே குறியாக இருக்கிறார்’ என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை உறுதி செய்துகொண்டுள்ளார்.
இப்படியொரு மோசமான சூழலில், நேற்று டெல்லி பாஜக எம்பியான ஹர்ஷ வர்த்தனை வங்கி வாசல் முன்பு க்யூவில் நின்ற மக்கள் அடித்துத் துவைத்துள்ளனர். போலீசார் எவ்வளவு விலக்கினாலும் அடங்காமல் அடித்து, சட்டையைக் கிழித்து, பைஜமாவை உருவி அவரை விரட்டினர்.
ஒரு வழியாக மக்களிடமிருந்து மீட்டு அவரை போலீஸ் வேனில் ஏற்றி அனுப்பிவைத்தனர் போலீசார். கையில் பணமில்லாமல், தங்கள் பணத்தை எடுக்கவே மணிக் கணக்கில் வரிசையில் காத்திருந்த மக்கள், அந்த நேரத்தில் அங்கு வந்து ஏதோ கமெண்ட் அடித்த எம்பி மீது பாய்ந்துள்ளனர்.
இந்த சம்பவத்தை வீடியோவாக சிலர் எடுத்து யுட்யூபில் பதிய, அது வைரலாக வலம் வருகிறது. ஆனால் இச்சம்பவம் குறித்து இதுவரை எந்த புகாரும் இல்லை, பாஜகவும் வாய்த் திறக்கவில்லை.
தனுஷின் நெருங்கிய வட்டத்துக்குள் வரும் நடிகைகள் எல்லாரும் விவாகரத்து வாங்கி விடுகிறார்கள் அல்லது விவாகரத்து வாங்கிய நடிகைகள் எல்லாரும் தனுஷ் நட்பு வட்டத்துக்குள் வந்துவிடுகிறார்கள். எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
அப்படி முதலில் கணவரை பிரிந்த அமலாபால் இப்போது தனுஷுடன் விஐபி2, வடசென்னை இரண்டு படங்களில் நடிக்கிறார்.
சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேர எல்லா ஹீரோயின்களுமே ஆசைப்படுவார்கள். அமலா பாலுக்கும் அந்த ஆசை உண்டு. ஆனால் கண்டிப்பாக தனுஷ் ஒப்புக்கொள்ள மாட்டார் என்பது தெரியும். எனவே சூப்பர் ஸ்டாரை சந்தித்து விடவேண்டும் என்று ஆசைப்படுகிறாராம்.
இதற்கு தனுஷ் சம்மதித்தாலும் சூப்பர் ஸ்டார் சம்மதிக்க வேண்டுமே. தனுஷிடம் சொல்லலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தவர் நேரம் பார்த்து சொல்லி விட்டாராம். இதற்கு தனுஷின் ரியாக்ஷன் என்னவென்று மட்டும் நமக்கு தெரியவில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு, அவரும் புதிய அமைச்சரவை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந் நிலையில் விஸ்கான்ஸின் மாநிலத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மிஷிகன் மற்றும் பென்சில்வேனியா மாநிலங்களிலும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலரி க்ளிண்டன் போட்டியிட்டனர். அவர்களைத் தவிர சிறிய கட்சிகளான லிபெர்டேரியன் கட்சி சார்பில் கேரி ஜான்சன் மற்றும் க்ரீன் கட்சி சார்பில் ஜில் ஸ்டேன் போட்டியிட்டனர்.
இவர்கள் இருவரும் கணிசமான வாக்குகளைப் பிரிக்கவும் செய்தனர். தற்போது க்ரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டேன் விஸ்கான்ஸின், மிஷிகன் மற்றும் பென்சில்வேனியா மாநிலங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார்.
விஸ்கான்ஸின் மாநில தேர்தல் ஆணையம் அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது. மிஷிகன் மற்றும் பென்சில்வேனியா மாநிலங்களும் விரைவில் மறு வாக்கு எண்ணிக்கை குறித்து அறிவிக்க உள்ளனர்.
ஹிலரியின் தோல்விக்கு காரணமான மூன்று மாநிலங்கள் ஐம்பது மாநிலங்களில் எதற்காக இந்த மூன்று மாநிலங்களில் மட்டும் மறு வாக்கு எண்ணிக்கைக்கு கோரிக்கை என்ற கேள்வி எழுந்துள்ளது இந்த மாநிலங்களில் ஹிலரி நிச்சயம் வெற்றி பெறுவார் என நம்பப்பட்டது. இவை ஜனநாயகக் கட்சி அதிக ஆதரவாளர்களைக் கொண்ட மாநிலங்களாகும்.
விஸ்கான்ஸின், மிஷிகன் மாநிலங்களில் பத்தாயிரத்திற்கும் சற்று அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ஹிலரி தோல்வியுற்றுள்ளார். பென்சில்வேனியாவில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசம் உள்ளது. இந்த மூன்று மா நிலங்கள் வெற்றியையும் சேர்த்து ட்ரம்புக்கும் 306 அதிபர் வாக்குகள் கிடைத்துள்ளன.
மறு எண்ணிக்கையில் விஸ்கான்ஸின் (10), மிஷிகன் (16), பென்சில்வேனியா (20) என மூன்று மாநிலங்களும் ட்ரம்ப் தோல்வியுற்றால், அவருடைய அதிபர் வாக்குகள் 260 ஆகக் குறையும் (306- 46 (20+16+10), ஹிலரி வெற்றி பெற்று விடுவார்.
நாடு தழுவிய பொது வாக்கு எண்ணிக்கையில் 1 மில்லியனுக்கும் அதிகமாக பெற்று ஹிலரி முன்னிலையில் இருக்கிறார். ஆகையால் அவருடைய ஆதரவாளார்களும் மறு எண்ணிக்கை வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
மறுவாக்கு எண்ணிக்கையில் விஸ்கான்ஸின், பென்சில்வேனியாவில் ஹிலரி வெற்றி பெற்றாலும் 60 ஆயிரத்திற்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்ற பென்சில்வேனியாவில் வெற்றி பெறுவது கடினமான ஒன்றாகும்.
மிகப்பெரிய தவறு நடந்திருந்தால் ஒழிய அங்கு ஹிலரியின் வெற்றி சாத்தியமில்லை எனவே அதிபராக பொறுப்பு ஏற்பதில் டொனால்ட் ட்ரம்புக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
வவுனியாவில் பல இடங்களில் இன்று (26.11.2016) விடுதலைப் புலிகளின் தலைவருக்கு 62வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனத் தெரிவிக்கும் சுவரொட்டிகள் பரவலாக காணப்படுகின்றன.
பத்தினியார்மகிழங்குளம் பகுதியில் மெழுகுவர்த்தியில் சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் என சுவரொட்டியில் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.