தெரணியகல – உடபலவத்த பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தொழிலுக்குச் சென்று மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
36 வயதான பெண் ஒருவரே இவ்வாறு தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகளுக்காக சடலம் அவிசாவளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஹட்டனிலிருந்து கொட்டகலை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியானது கொட்டகலை கொமர்சல் பிரதேசத்துக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி உள்ளிட்ட மூவர் காயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்திற்கு காரணம் அதிக வேகம் எனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதேவேளை இந்த விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண்கள் இன்றி இனி ஆண்களும் நவீன முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வின்படி பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தமது தோல் செல்கள் மூலம் குழந்தை பெறலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி ஆணின் உயிரணுவுடன் மற்றொரு ஆணின் தோல் செல்கள் அல்லது மற்ற திசுக்கள் கலக்கப்படுகிறது. அதன்மூலம் குழந்தை உருவாகிறது. ஆணுக்கு ஆண் மூலமே குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த முறை ஓரின சேர்க்கையாளர்களுக்கு மிக வசதியாக அமையும் என தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் பெண்களும் தங்கள் குழந்தைகளை பெற முடியும். புற்றுநோய் மருந்துகள் அல்லது மற்ற நோய் தாக்கத்தால் குழந்தை பெற முடியாத பெண்கள் அவர்களது உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகளில் மற்றவர்களின் தோல் செல்கள் மூலம் குழந்தை பெற முடியும்.
இதற்கு முன்னோடியாக இத்தகைய ஆய்வு சுண்டெலிகளில் மேற்கொள்ளப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. எனவே, இதை மனிதர்களுக்கும் விரைவில் பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
சூரியவெவ, மீகஹபுர பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
23 மற்றும் 31 வயதுடைய இரண்டு பேரே உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் சடலம் சூரியவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட குரோதமே இந்த மோதலுக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், கண்டி, அங்கும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் மூவர் காயமடைந்துள்ளனர். வர்த்தக நிலையமொன்றில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோதலை தடுப்பதற்காக சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அப்பிள் நிறுனம் கடந்த வாரம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பான செய்தியாளர் மாநாடு ஒன்றினை நடத்தியிருந்தது.
இதில் குறித்த கைப்பேசிகள் தொடர்பான சிறப்பியல்புகள் வெளியிடப்பட்டிருந்தன. இவற்றில் மின்கலங்களின் சிறப்பியல்புகளும் உள்ளடங்கும்.
குறித்த தகவல்களின்படி முன்னர் அறிமுகம் செய்யப்பட்டிருந்த iPhone 6S மற்றும் 6S Plus ஆகியவற்றில் தரப்பட்ட மின்கலங்களை விடவும் சற்று நீடித்து உழைக்கக்கூடிய மின்கலங்கள் இப்புதிய கைப்பேசிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதன்படி iPhone 6S கைப்பேசி மற்றும் iPhone 7 கைப்பேசிகளில் முறையே 1715 mAh, 1960 mAh மின்கலங்களும், iPhone 7, iPhone 7 Plus என்பவற்றில் முறையே 2,750 mAh, 2900 mAh மின்கலங்களும் தரப்பட்டுள்ளன.
இதன்படி iPhone 7 ஆனது 3G வலையமைப்பில் 14 மணித்தியாலங்களும், ஸ்டான்ட் பையில் 10 நாட்களும் இயங்கக்கூடியதாக இருக்கும். அதே போல iPhone Plus ஆனது 3G வலையமைப்பில் 21 மணித்தியாலங்களும், ஸ்டான்ட் பையில் 16 நாட்களும் இயங்கும்.
இன்னும் இரு தினங்களில் இவ்விரு கைப்பேசிகளும் விற்பனைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வங்க தேசத்தில் ஈகை திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குர்பானிக்காக வெட்டப்பட்ட விலங்குகளின் ரத்தம் உரிய வடிகால் அமைப்பு இல்லாததால் தெருக்களில் வெள்ளமாக ஓடியுள்ளது.
வங்க தேசத்தின் தலைநகர் டாக்காவில் ஈகை பெருநாள் விழாவின் ஒருபகுதியாக குர்பானி வழங்கப்பட்டது. இதன்பொருட்டு ஏராளமான விலங்குகள் வெட்டப்பட்டன.
இந்த நிலையில் அங்கு உரிய வடிகால் அமைப்புகள் எதுவும் இல்லாததால் வெட்டப்பட்ட விலங்குகளின் ரத்தம் செல்ல வழியில்லாமல் தெருக்களில் தங்கியுள்ளது.
இதனிடையே மழையும் கொட்டித்தீர்த்ததால் தெருக்களில் ரத்த வெள்ளமாக ஓடியுள்ளது. மட்டுமின்றி இந்த விழாவிற்காக சுமார் 100.000 விலங்குகளை பலியிட்டுள்ளனர்.
மழையால் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். அதுமட்டுமின்றி தெருக்களில் தேங்கிய ரத்தமும் இதில் கலந்ததால் டாக்காவின் முக்கிய தெருவீதிகள் ரத்த ஆறு போன்று காட்சி அளித்துள்ளன.
திருப்பதியில் 199 நாடுகளின் விவரங்களை மனப்பாடமாக கூறும் 1ம் வகுப்பு மாணவனுக்கு யுனிக் என்ற உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.
திருப்பதியை அடுத்த திருச்சானூரைச் சேர்ந்தவர் ரமேஷ் – ஹேமலதா என்ற தம்பதியரின் மகன் அனுருத் வர்ஷன். இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்நிலையில், இந்த சிறுவன் 199 நாடுகளின் பெயர்கள் ,தலைநகரம், கொடி மற்றும் முக்கிய நகரங்களின் பெயர்கள் உள்ளிட்ட பல விவரங்களை மனப்பாடமாக கூறுகிறான்.
இதைத் தொடர்ந்து, சிறுவனின் இந்த அற்புத மனப்பாட திறமைக்கு மரியாதை வழங்கும் விதத்தில் இவனுக்கு யுனிக் உலக சாதனை அறிவிக்கப்பட்டது.
இதன்படி, நேற்று விருது வழங்கும் நிகழ்ச்சி திருப்பதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், லயன்ஸ் கிளப் மண்டல இயக்குனர் சுதா ராணி விருது மற்றும் பாராட்டு சான்றுகளை வழங்கி சிறுவன் அனுருத் வர்ஷனை பாராட்டி பேசியுள்ளார்.
மேலும், உலக சாதனை படைத்த மாணவனை பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளும் பாராட்டியுள்ளனர்.
கர்நாடகாவில் தமிழக குடும்பத்தினரை உயிருடன் எரித்துக் கொல்ல முயற்சி செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த நவாஸ்பாஷா என்பவர் கடந்த 11 ஆம் திகதி,தனது தம்பி மனைவி பிரசவத்திற்காக கர்நாடகாவின் மாண்டியாவிற்கு சென்றுள்ளார்.
மறுநாள் நவாஸ்பாஷா உள்ளிட்டோர் காரில் தமிழகம் திரும்பி கொண்டிருந்தனர். மாண்டியாவின் புறநகர் பகுதியில் உள்ள நந்தினி பால் டிப்போ அருகில் வந்தபோது, கலவர கும்பல் காரில் இருந்தவர்களை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றுள்ளனர்.
இதில் பதறியடித்து வெளியேறிய நவாஸ்பாஷா மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர், காட்டுக்குள் தப்பியோடி உயிர் பிழைத்தனர்.
பின்னர் பல்வேறு சோதனைகளுக்கு இடையில் ரயில் மூலம் தப்பித்து அவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.
இந்நிலையில் தர்மபுரி ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளிடம் நவாஸ்பாஷா புகார் மனு அளித்தார். அதில் தாங்கள் இழந்த கார் மற்றும் உடமைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டி மனு அளித்துள்ளார்.
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து பெங்களூருவில் வன்முறை வெடித்தது.
இதனால் மாநில மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. கன்னட அமைப்பினர், விவசாயிகள் தீவிர போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து ஊரடங்கு உத்தரவு பெங்களூரு மற்றும் மைசூருவில் போடப்பட்டது. சகஜ நிலைக்கு திரும்பியது. கடந்த இரண்டு நாட்களாக பெங்களூரு மாநகரம் போர்களமாக மாறிவிட்டது. முழுமையாக வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது, பெட்டி கடை முதல் பெரிய வணிக நிலையங்களும் மூடப்பட்டது. சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் இயங்கவில்லை. பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை.
சில இடங்களில் பொது சொத்துக்களை நாசம் செய்தவர்கள் மீது துப்பாக்கி சூடு, கண்ணீர் புகைவீச்சி, தடியடி நடத்தப்பட்டது. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர துணை ராணுவப்படை, மத்திய தொழிற்சாலை பாது்காப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.
மேலும் வன்முறையாளர்களால் தீயிட்டு எரிக்கப்பட்ட வாகனங்களை நேற்று காலை மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.இன்னும் இரண்டொரு நாளில் மாநகரம் முழுவதும் முழு அமைதி திரும்பும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் என்.எஸ்.மெகரிக் தெரிவித்தார்.
இதனிடையில் கடந்த 3 நாட்களாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவை நேற்று மாலை 6 மணியுடன் விளக்கி கொள்வதாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் சட்டம்-ஒழுங்கை சீர்கெடுக்கும் முயற்சியால் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இதனிடையில் காவிரி பிரச்னையை வலியுறத்தி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில் சேவை தடை செய்வதாக வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஆனால் ரயில்கள் இயக்கத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பொலன்னறுவை மாவட்ட கிராமம் ஒன்றில் அரியவகை மலர் ஒன்று பூத்துள்ளது. குறித்த மலரினை பார்வையிடுவதற்கு ஏராளமான பொது மக்கள் வந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மலர் நறுமணம் வீசுவதற்கு பதிலாக துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை அதிகளவான ஈக்கள் குறித்த மலரில் மொய்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த மலரில் உள்ள கிழங்கு வகை உள்நாட்டு மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று (15.09.2016) காலை 6.30 மணியளவில் வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் பஸ்ஸை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா-ஆசிகுளம் வழி பேருந்து போக்குவரத்தானது தமது கிராமத்தினூடாக சீரான அளவில் சீரான நேரத்தில் பயணிப்பது இல்லையெனவும் அத்துடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அன்றாடம் பணிக்கு செல்வபவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாவதாகவும் ,
2.30 மணியளவில் பாடசாலை நிறைவடைந்ததுடன் பயணிகள், மாணவர்கள் ஏற்றிவரும் பேரூந்தானது வேறு பாதையில் பயணம் மேற்கொள்வதனால் அங்கிருந்து பல கிலோ மீற்றர் நடந்து செல்ல வேண்டியுள்ளது என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை 6.30 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இச் சம்பவ இடத்திற்கு தற்போது பொலிஸார் விரைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பஸ் மற்றும் ஹயஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பளை பகுதியில் இன்று காலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் இருந்து மதுகம நோக்கி பயணித்த பஸ்சுடன் கொழும்பில் இருந்து வந்த ஹயஸ் வாகனம் வழித்தடம் மாறிச் சென்று பஸ்ஸிடன் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்த 7 பேரில் 3 பேரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதனால், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்துச் சம்பவம் குறித்து பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
கடந்த மூன்று தசாப்த காலத்தில் நாட்டில் நிலவிய அசாதாரண நிலைமை மற்றும் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் இடப்பெயர்வுகள் என்பவற்றுக்கப்பால் ஆலய நிர்மாண வேலைகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிசேகம் இடம்பெறுகிறது .
A9 வீதியால் பிரயாணம் செய்யும் அனைவரது காதுகளிலும் கேட்டுபழகிய திருப்பணி நிதி சேகரிக்கும் புளியங்குளத்தை சேர்ந்த இராமநாதனின் இந்த வார்த்தைகள் அந்த ஆலயத்தை உங்கள் ஞாபகத்துக்கு கொண்டுவரும் .
சில்லறை இல்லாவிட்டால் பரவாயில்லை தாளாகவும் ஏற்றுகொள்ளப்படும்!
இந்த வார்த்தைகள் தான் புளியங்குளம் முத்துமாரியம்மன் ஆலயத்தை உங்கள் நினைவுக்கு கொண்டுவரும்.
இந்த முத்துமாரியம்மன் ஆலய திருப்பணியில் புளியங்குளம் பிரதேசத்தை சேர்ந்த அடியார்கள் மட்டுமன்றி இலங்கை மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் வடபகுதி நோக்கி பயணம் செய்யும் தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் வெள்ளையர்கள் என வேறுபாடின்றி அனைவரது பூரண ஒத்துழைப்புடனும் வாகன சாரதிகளின் தாராளமான பங்களிப்புடனும் ஆலயத்துக்குரிய திருப்பணி நிதியை இரவு பகல் பாராது தொடர்ச்சியாக தொண்டர்கள் ஒவ்வொரு பேருந்துகள் மற்றும் கண்டி வீதி வழியாக பயணம் செய்யும் அனைத்து வாகனங்களையும் மறித்து முத்துமாரி அம்பாளது விபூதி பிரசாதம் முதலியவற்றை வழங்கி பயணிகள் சாரதிகளிடம் திருப்பணி நிதியினை சேகரித்து இன்று அனைவரது பங்களிப்புடன் மிக அழகானதொரு ஆலயமாக வடிவமைக்கபட்டுள்ளது உண்மையிலே பாராட்டுதலுக்குரியது .
இலங்கையின் வரலாற்றில் முருகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அடுத்தபடியாக அனைத்து இன மத பேதமின்று அனைவரின் பங்களிப்புடன் அமைக்கபட்ட ஒரேயொரு கோவிலாக வவுனியாவின் புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் திருக்கோவில் விளங்குவது பெருமைக்குரிய விடயமாகும்.
தமிழ் நாட்டை சேர்ந்த சிற்பகலைஞர்களால் மிக அழகாக அமைக்கபட்டுள்ள இந்த ஆலயத்தை இனிவரும் காலங்களில் அனைவரும் தரிசித்து செல்லமுடியும்.
மேற்படி ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் சிவஸ்ரீ .நந்தகுமார குருக்கள் தலைமையில் இடம்பெறுகிறது.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில் தாய் மற்றும் மகள் மீது தாக்குதல் நடாத்தியவர் என்ற சந்தேகத்தின் பேரில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று புதன்கிழமை (14.09) காலை கணவன் மனைவிக்கிடையில் இடம்பெற்ற குடும்பத்தகராறு காரணமாகவே கணவன் மனைவியின் வாய்ப் பகுதியில் கத்தியால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இவர்களின் சண்டையை தடுப்பதற்காகச் சென்ற மகளின் கையில் கத்தியால் வெட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த தாயும் மகளும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கணவனைக் கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுவருவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாம்பன் அருகே குந்துகால் கடற்கரையில் சுமார் 1500 கிலோ எடையும், 17 அடி நீளமும் கொண்ட அரியவகை புள்ளிசுறா ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
இதனையடுத்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய புள்ளி சுறாவை உடல்கூறு சோதனை செய்து புதைத்தனர்.
உலகிலேயே மிக அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் வசிக்கும் பகுதி மன்னார் வளைகுடா கடற்பகுதியாகும்.
குறித்த சுறா நோய் வாய்ப்பட்டு அல்லது பெரிய அளவிளான சரக்கு கப்பலின் எஞ்சினில் அடிபட்டு இறந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.