வீதியில் விழுந்த காரின் நிழல் : அபராதம் விதித்த பொலிசார்!!

Car

ரஷ்யாவில் சாலையில் சென்று கொண்டிருந்த காரின் நிழல் குறிப்பிட்ட எல்லைக் கோட்டை தாண்டி விழுந்ததால் அந்த ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் ஓட்டுனர் ஒருவர் தமது காருடன் பயணம் செய்துள்ளார்.

அப்போது அவரது வாகனமானது சாலையின் நெடுகே போடப்பட்டிருந்த கோட்டின் அருகே சென்றுள்ளது. ஆனால் அந்த கோட்டை வாகனம் தாண்டவில்லை.

இருப்பினும் அவரது வாகனத்தின் நிழல் குறிப்பிட்ட கோட்டினை தாண்டியதால் அங்கு பொருத்தப்பட்டிருந்த கமெரா அதை படம் பிடித்து விதி மீறல் என்று அபராதம் விதிக்கும் படி கட்டளை அனுப்பியுள்ளது.

வாகனத்தின் நிழல் தாண்டினாலே அபராதம் விதிக்கப்படும் உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று, பாதிக்கப்பட்ட அந்த நபர் சமூகவலைதளத்தில் பதிந்துள்ளார்.

மட்டுமின்றி அபராத தொகையை செலுத்த வலியுறுத்தி இவருக்கு அனுப்பியுள்ள புகைப்படத்தையும் அத்துடன் இணைத்து பதிவேற்றியுள்ளார்.

இந்நிலையில் சாலை பாதுகாப்பு பொலிசாருக்கு புகார் மனு ஒன்றை அந்த நபர் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட பொலிசார், அபராத தொகையை ஆண்டு இறுதியில் மொத்தமாக வசூலிப்பதாகவும், தற்போது நேர்ந்தவை இயந்திர பழுதால் ஏற்பட்டவை எனவும் கூறியுள்ளனர்.

இதேப்பொன்ற சம்பவம் ஒன்று இன்னொரு ஓட்டுனருக்கும் நேர்ந்துள்ளது. அவரது வாகனத்தின் முகப்பு வெளிச்சமானது எல்லைக் கோட்டினை சில முறை தாண்டியுள்ளதாம்.

இச்சம்பவம் தொடர்பாக மேல்முறையீடு மேற்கொண்ட அவரது புகார் மனுவை பொலிசார் பரிசீத்து வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவருக்கு பொலிசார் உறுதி அளித்துள்ளனர்.

இறந்த மனைவியை தோளில் சுமந்து சென்றவரின் குடும்பத்திற்கு நிதியுதவி!!

Dead Body

ஒடிசாவில் இறந்த மனைவியின் உடலை தோளில் சுமந்து 10 கி.மீ. தூரம் நடந்து சென்றவரின் குடும்பத்திற்கு சுலப் இண்டர்நேஷனல் தொண்டு நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில், நபர் ஒருவர் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் இறந்த தனது மனைவியை தோளில் சுமந்து கொண்டு 10 கிலோ மீட்டர் தூரம் சாலையில் சென்ற சம்பவம் நாடும் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், ஆம்புலன்ஸ் கிடைக்காமலும், வாடகை வாகனத்தை ஏற்பாடு செய்ய வசதியில்லாமலும் இறந்த தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்ற தனா மஜி என்பவரின் குடும்பத்திற்கு சுலப் இண்டர்நேஷ்னல் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் நிதியுதவி வழங்க முன்வந்தார்.

அந்த தொண்டு நிறுவனத்தை சேர்ந்த வினோத் சர்மா என்பவர், மெல்கார் கிராமத்தில் உள்ள தனா மஜியின் வீட்டிற்கு சென்று உடனடி செலவுக்கு ரூபாய் 10 ஆயிரம் மற்றும் ரூ.5 லட்சம் வைப்பு நிதிக்கான பத்திரத்தையும் வழங்கினார்.

இதுதவிர, தனா மஜியின் மகள்களின் கல்வி செலவுக்காக மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய் வழங்கவும் சுலாப் நிறுவனம் முன்வந்துள்ளது.

வங்கி கணக்கில் தனா மஜியின் பெயரில் செலுத்தப்பட்ட 5 லட்சம் ரூபாய், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு வட்டியுடன் சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஆக முதிர்வு பெறும் என கூறப்படுகிறது.

முன்னதாக இச்சம்பவம் குறித்து கேள்வியுற்ற பஹ்ரைன் அரசர், தனா மஜிக்கு உதவி செய்ய முன்வந்து இந்திய தூதரகத்தை அணுகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலியல் துஷ்பிரயோகத்தால் சீரழியும் சிறுவர்கள் : அதிர்ச்சித் தகவல்!!

Abuse

டெல்லியில் சிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அங்கு நாளுக்கு 3 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இரையாவதாகவும் தேசிய குற்ற ஆவண அலுவலகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவண அலுவலகத்தின் தரவுகள் அடிப்படையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மட்டும் 927 சம்பவங்கள் சிறுவர்களுக்கு எதிராக நடந்துள்ளதாக கூறப்படுகிறது. சராசரியாக தினசரி 3 சிறுவர்கள் வீதம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இரையாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் தேசிய குற்ற ஆவண அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்குகளை விடவும் பலமடங்கு அதிகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என பொலிஸ் மற்றும் சிறுவர்கள் நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிப்புக்கு உள்ளான சிறுவர்களில் 585 பேர் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் எனவும், இதில் 95% பேருக்கு தங்களை துஷ்பிரயோகம் செய்தவர்கள் எவர் என அடையாளம் தெரியும் என கூறப்படுகிறது.

மட்டுமின்றி கடந்த ஓராண்டில் மட்டும் 7,730 ஆள்கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளதாக டெல்லி பொலிசார் வழக்கு பதிந்துள்ளனர். இதில் 60% சிறுவர்கள் என கூறப்படுகிறது. கடத்தப்படும் சிறுவர்களில் பெருவாரியானவர்கள் பாலியல் துஷ்பியோகத்திற்கு உள்ளாகியிருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

முதன்முறையாக எய்ட்ஸ் வைரசை கண்டுபிடித்த தமிழச்சி!!

AIDS

30 வருடங்களுக்கு முன்பே, எய்ட்ஸ் நோயின் ஹெச்.ஐ.வி. பொஸிட்டிவ் வைரஸ் கிருமி ரத்தத்தில் இருப்பதை ஒரு இளம் மருத்துவ மாணவிதான் இந்தியாவில் முதன்முதலாக கண்டுபிடித்தார்.

இது நடந்தது 1986 ல். அப்போது எய்ட்ஸ் நோய் பரவல் பற்றி, பயம் கலந்த ஒரு விழிப்புணர்வு அலை உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருந்தது.

அந்த சமயம், தமிழ்நாட்டில் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் 6 செக்ஸ் தொழிலாளர்களின் ரத்தத்தில் ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ் இருந்தது முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. அதை பரிசோதித்தவர் நிர்மலா செல்லப்பா என்ற மருத்துவக் கல்லூரி மாணவிதான்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிரியல் (Micro Biology) அறிவியலாளர் மாணவியாக இருந்த அவருடைய இந்த கண்டுபிடிப்பு இந்தியாவில் முதல்முறை. அது இந்தியாவிலும் எய்ட்ஸ் பரவியிருப்பதை உறுதிசெய்திருந்ததால் இந்தியா முழுவதுமாக பரபரப்புடன் பரவியது.

1985 ம் ஆண்டின் இறுதியில், நிர்மலா ஆராய்ச்சிக்கான தலைப்பு தேடும்போது, அவருடைய பேராசிரியரும் வழிகாட்டியுமான டாக்டர் சுனிதி சாலமன் ஹெச்.ஐ.வி. வைரஸ் பற்றிய தலைப்பிலே ஆராய்ச்சி மேற்கொள்வது புதிய முயற்சி, ஒரு சவாலாகவும் எதிர்காலத்தில் புகழாகவும் இருக்கும் என்று நிர்மலாவை வலியுறுத்தினார்.

ஆனாலும், அப்போது 32 வயதுடையவராக இருந்த நிர்மலா ஹெச்.ஐ.வி. ஆராய்ச்சியில் முழுதாக மூழ்குவதற்கு தயக்கம் காட்டினார்.

கணவன் பட்ட கடன் தொல்லை தாங்காமல் மனைவி தற்கொலை!!

Sucide

தன் கணவன் பட்ட கடனை வசூலிக்க வரும் நபர்களின் தொல்லை தாங்காமல் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கம்பஹா மாவட்டம், வேயாங்கொடை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை நடைபெற்றுள்ளது.

கணவன் பெற்ற கடனை வசூலிக்க வரும் நபர்கள் அடாவடியாக நடந்து கொள்வதாகவும், தனது கணவனுக்கு இந்தளவு கடன் இருக்கும் என்று தான் நினைத்திருக்கவில்லை என்றும் குறித்த பெண் தற்கொலைக்கான கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடன் தொல்லை தாங்காமலேயே தான் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்து விட்டு வீட்டின் கூரையில் தூக்குப் போட்டு குறித்த பெண் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இது தொடர்பான மரண விசாரணைகள் நேற்று அத்தனகல்ல மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடைபெற்றது.

சம்பவம் தொடர்பில் வேயாங்கொடை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதியின் இணையத்தளத்திற்குள் பிரவேசித்தரின் மற்றுமொரு சைபர் தாக்குதல் : விசாரணைகளில் அம்பலம்!!

President

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதலை மேற்கொண்ட பாடசாலை மாணவர், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஹெக் செய்தமை குறித்த விசாரணைகளின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னதாக இந்த மாணவர் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கும் வகையில் ஓர் இலச்சினையை இணையத்தளத்தில் போடுவதற்கு முயற்சித்துள்ளார்.

எனினும், அந்த இலச்சினை இணையத்தளத்தில் காட்சியாகியிருக்கவில்லை. அதன் பின்னர் அவர் இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கவில்லை என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

ஜனாதிபதியின் இணையத்தளத்திற்குள் ஊடுருவியமை தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே பொலிஸ் இணையத்தளத்திற்குள் ஊடுருவியமை பற்றியும் கண்டறியப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஹெக் செய்தமைக்காக கைது செய்யப்பட்ட மாணவர் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த மாணவருடன் கைதான மற்றுமொரு நபரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு!!

Airport

நாட்டுக்குள் பிரவேசிக்கும் அனைத்து பயணிகளும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சோதனைக்கு உட்படுத்தபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் சிகா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கும், அதனை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஆபிரிக்கா மற்றும் ஆசிய நாடுகள் சிலவற்றில் சிகா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், குறித்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தால் நோய் அறிகுறிகள் மற்றும் நோய் தொற்று பற்றிய சுயமதிப்பீடு செய்துகொள்ளும் வகையில் துண்டு பிரசுரமும் விநியோகம் செய்யப்படவுள்ளன.

இந்நிலையில், சிகா நோய்குரிய அறிகுறிகள் காணப்பட்டால் அங்கொடையில் உள்ள தொற்று நோய் பிரிவுக்கு அழைத்து செல்லுதல் அவசியம் என சுகாதார சேவை தகவல்கள் கூறியுள்ளன.

இதேவேளை, சிகா வைரஸ் தொற்று பரவியுள்ள நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளவுள்ள கர்ப்பிணித் தாய்மாரை பிரசவ காலம் முடியும் வரையில் அவ்வாறான பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சிகா நோய் தொற்று அற்ற நாடாக இலங்கை காணப்படுகின்றது. இந்நிலையினை தொடர்ந்தும் தக்க வைத்துகொள்வது அவசியம் என சுகாதார சேவைகள் தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

hiv

இலங்கையில் எச்ஐவி நோய்த் தொற்று உண்டா என சோதனை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்தாண்டில் எச்ஐவி நோய்த் தொற்று உண்டா என சோதனை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பால் நோய் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்புப் பிரிவினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதியில் சுமார் எட்டு லட்சம் பேர் தமக்கு எயிட்ஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதனை பரிசோதனை செய்து கொண்டுள்ளனர் என நோய்த் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஆண்களுக்கு இடையிலான பாலுறவு அதிகரித்துள்ள காரணத்தினால் எயிட்ஸ் நோய் அதிகளவில் பரவி வருவதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கையில் அண்மை காலமாக எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு பதிவாகியுள்ளது.

பாதுகாப்பற்ற பாலுறவு மற்றும் மரபு நெறிகளை மீறிய பாலியல் தொடர்பு போன்ற காரணிகளினால் இலங்கையில் எச்ஐவி நோய்த் தொற்று அதிகளவில் பரவி வருவதாக தெரிவிக்கபடுகிறது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை 4-1 எனக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி!!

CARDIFF, ENGLAND - SEPTEMBER 04: England captain Eoin Morgan lifts the series trophy after their 4-1 victory after the 5th One Day International between England and Pakistan at Swalec Stadium on September 4, 2016 in Cardiff, Wales. (Photo by Stu Forster/Getty Images)

பாகிஸ்தான் -இங்கிலாந்து 5வது ஒருநாள் போட்டி. ஆறுதல் வெற்றி பெற்றது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 வதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் போட்டி இங்கிலாந்தில் நேற்று நிறைவுக்கு வந்துள்ளது.

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக பாகிஸ்தான் அணி,ஒருநாள் தொடரில் ஆறுதல் வெற்றியை தனதாக்கியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் மோர்கன் முதலில் துடுப்பாடும் விருப்பை வெளியிட்டார். அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்களை பெற்றனர்.

பதிலுக்கு ஆடிய பாகிஸ்தான் அணி சொயிப் மாலிக், சர்ப்ராஸ் அஹமட் ஆகியோரின் சிறந்த இணைப்பாட்டத்துடன் 48.2 ஓவர்களில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் ஆசியாவுக்கு வெளியே 300 கடந்து பாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டிகளில் வெற்றிப்பெற்ற முதல் சந்தர்ப்பமாகவும் இந்த சந்தர்ப்பம் அமையப்பெற்றது.

முதல் 4 ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4-1 என்று தொடரி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக பாகிஸ்தான் அணியின் சர்ப்ராஸ் அஹமட்டும் ,தொடர் நாயகனாக இங்கிலாந்தின் ஜோ ரூட்டும் தேர்வாகினர்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையில் ஒரேயொரு T20 போட்டி இடம்பெறவுள்ளது.

இணையத்தைக் கலக்கும் இளைய தளபதி விஜய்யின் பைரவா போஸ்டர்!!

Vijay 60 Bhairava Movie Title First Look Poster

 

இளைய தளபதி விஜய் நடிக்கும் பைரவா படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

விஜய்யின் 60 ஆவது திரைப்படமான பைரவாவை பரதன் இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ஜெகதீஷ் பாபு, வை.ஜீ. மகேந்திரா, டானியல் பாலாஜி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

நேற்று வெளியிடப்பட்ட பைரவா பெர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் ரசிகர்களால் இணையத்தை கலக்கி வருகிறது.

இலகைக்கு எதிரான தொடரை 4-1 எனக் கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணி!!

Aus

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ள இலங்கை அணி, 4-1 என தொடரையும் இழந்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி, முன்னதாக இடம்பெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது. இதன்படி டெஸ்ட் தொடரை 3-0 என இலங்கை கைப்பற்றியுள்ளது.

அத்துடன், ஐந்து ஒருநாள் போட்டிகளில் முன்னதாக இடம்பெற்ற நான்கு ஆட்டங்களிலும் மூன்றில் அவுஸ்திரேலியாவும் ஒன்றில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையிலான 5வதும் இறுதியுமான போட்டி கண்டி – பல்லேகல மைதானத்தில் இடம்பெற்றது.
இதில், முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்த அணியின் ஆரம்ப வீரரான தனஞ்சய டி சில்வா 34 ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக்க 39 ஓட்டங்களையும், மென்டிஸ் 33 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.

ஏனைய வீரர்கள் எவரும் அவ்வளவாக பிரகாசிக்கவில்லை.

குறிப்பாக கடந்த போட்டிகளில் இலங்கைக்கு கை கொடுத்த தினேஷ் சந்திமால் ஒற்றை ஓட்டத்துடன் வௌியேறி ஏமாற்றமளித்தார்.

பின்னர் 40.2 ஓவர்கள் நிறைவில், இலங்கை அணி 195 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

இதன்படி 196 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸதிரேலிய அணி 43.0 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு 5 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்களை விளாசி வெற்றி வாகை சூடியுள்ளது.

அந்த அணி சார்பில் டேவிட் வோனர் சிறப்பாக ஆடி 106 ஓட்டங்களையும் ஜோர்ச் பெய்லி 44 ஓட்டங்களையும், பெற்றுக் கொடுத்தனர்.

எனவே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலிய அணி, 4-1 என வெற்றி கொண்டு தொடரை கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்தப் போட்டியில், ஆட்ட நாயகனான டேவிட் வோனரும், தொடர் நாயகனாக ஜோர்ச் பெய்லியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தண்ணீரில் மணிக்கு 500 கிலோ மீட்டர் ஓடும் மோட்டார் சைக்கிள்!!

Motor Cycle

பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவர், ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக் கூடிய மோட்டார் சைக்கிளை உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார்.

பிரேசிலின் சாவோ பாலோ நகரைச் சேர்ந்த ரிக்கேர்டே ஆஸேவெடே அந்த நபர் தனது மோட்டார் சைக்கிள் குறித்துக் கூறும்போது,

“எனது மோட்டார் சைக்கிளுக்கு ‘டி பவர் எச்20’ என்று பெயர் சூட்டியுள்ளேன். இந்த மோட்டார் சைக்கிளில் அமைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான பட்டரியில் இருந்து கொள்கலத்தில் ஊற்றப்பட்ட தண்ணீரில் பாய்ச்சப்படும் மின்சாரமானது, அந்த தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளில் பொதிந்திருக்கும் ஹைட்ரஜனின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.

இதன் மூலம் கிடைக்கும் உந்துசக்தியால் எனது மோட்டார் சைக்கிள் காற்றை கிழித்துக்கொண்டு ஓடும். இந்த மோட்டார் சைக்கிள் ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் 500 கிலோ மீட்டர் வரைசெல்லும் என்பதையும் நிரூபித்திருக்கிறேன்” என்கிறார்.

பிரேசில்காரர் சொல்வது நிஜமானால், எரிபொருள் பற்றாக்குறைக்கு தீர்வு ஏற்படும் என்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் மிகுந்த நன்மை ஏற்படும்.

வவுனியாவில் 150வது வருட பொலிஸ் பூர்த்தி நிகழ்வு!!

 
“சட்டமும் ஒழுங்கும் தாய்நாட்டின் உயிர் மூச்சு’ எனும் தொனிப்பொருளில் இலங்கை பொலிஸ் திணைக்களகத்தின் 150 வது பொலிஸ் தினம் நேற்று (03-09-2016) சனிக்கிழமை வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், தலைமையில் பொலிஸ் திணைக்களகத்தின் கொடி ஏற்றப்பட்டு பொலிஸ் திணைக்களகத்தின் கீதம் இசைக்கப்பட்டது.

நிகழ்வில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.திசரகுமார, உதவிபொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெனாந்து, மற்றம் குற்றத்தடுப்பு அதிகாரிகள், போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

1 IMG_7838 IMG_7848 IMG_7851 IMG_7853 IMG_7855 IMG_7856 IMG_7860 IMG_7865 IMG_7871 IMG_7876 IMG_7879 s ss sss

சினிமா பாணியில் போதை மருந்து கடத்திய இலங்கைப் பெண் : அதிர்ந்து போன அதிகாரிகள்!!

Chennai

கொழும்பில் இருந்து சென்னைக்கு 2½ கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை நூதன முறையில் கடத்தி வந்த இலங்கை பெண்ணை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கொழும்பில் இருந்து சென்னை வந்து செல்லும் விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்பட இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் இலங்கையைச் சேர்ந்த சந்திரிகா ரூக்லாந்தி (வயது 28) என்ற பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர்.

அவரது உடமைகளில் ஏதும் கிடைக்காத நிலையில், அவர் போதை மருந்து சாப்பிட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது அவரது வயிற்றில் போதைமருந்து மாத்திரைகள் அதிகமாக இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவரிடம் விசாரித்தபோது போதைப்பொருளை மாத்திரை வடிவில் விழுங்கி கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து மருத்துவர்கள் உதவியுடன் வயிற்றில் உள்ள மாத்திரைகளை வெளியே எடுத்தனர். அந்த பெண்ணின் வயிற்றில் 2½ கோடி மதிப்புள்ள 1 கிலோ ஹெராயின் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பஸ் விபத்தில் 38 பேர் சம்பவம் இடத்தில் பலி!!

1

ஆப்கானிஸ்தானில் கொள்கலன் லொறியுடன் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கந்தஹார் நகரில் இருந்து காபுல் நோக்கி இன்று காலை பயணிகளுடன் சென்ற பஸ் சாபுல் மாகாணம் வழியாக சென்றபோது எதிர்திசையில் வேகமாக வந்த பெற்றோல் கொள்கலன் லொறியுடன் மோதுண்டது.

இந்த கோர விபத்தில் 38 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்த 28 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2

செய்ய வேண்டியதை முன்னரே செய்திருந்தால் இந்த அழிவு ஏற்பட்டிருக்காது!!

maithiri

நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க காலஅவகாசம் வழங்க வேண்டும் என, தான் விடுத்த கோரிக்கையை, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65வது ஆண்டு விழா இன்று, குருநாகலில் இடம்பெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இங்கு ஜனாதிபதி மேலும் கூறுகையில், எதிர்வரும் வருடத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சின்னமான கைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த, இக் கட்சியுடன் இணைந்துள்ள, இணையப் போகின்ற அனைத்து கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன், நாம் எவ்வளவோ தோல்விகளைச் சந்தித்துள்ளோம், வெற்றிகளைப் போலவே தோல்வி பற்றியும் சிந்திக்க வேண்டும், கட்சி செய்ய வேண்டியது என்ன, தலைவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம் என்பது போலவே, கட்சித் மற்றும் கட்சித் தலைவர்கள் செய்யக் கூடாதது எது என்பது பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம் என, அவர் கூறியுள்ளார்.

பண்டா – செல்வா ஒப்பந்தம் மற்றும் டட்லி – செல்வா ஒப்பந்தங்களுக்கு சிலர் இடமளிக்கவில்லை, இதன் பலனாக பாரிய யுத்தம், இந்திய இராணுவத்தினரின் வருகை, 13வது திருத்தச் சட்டம் என்பன நாட்டுக்குள் வந்தன. நாம் முதலில் செய்ய வேண்டியதை முன்னரே செய்திருந்தால் இந்த பாரிய பேரழிவு நடந்திருக்காது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை நாம் இப்போது செய்யவுள்ளதையும் சிலர் விமர்சனம் செய்கின்றனர் என குறிப்பிட்ட ஜனாதிபதி, தர்மபால அன்று சிங்களவர்களாக எழுவோம் என்றார், இன்று நான் நாட்டு மக்களின் சேவகனாக சொல்கிறேன் இலங்கையர்களாக எழுவோம் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தான் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றது மீண்டும் சுதந்திரக் கட்சிய தலைமையிலான ஆட்சியை உருவாக்கவே எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இன்றைய நிகழ்வு அதன் முதல் படி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.